RSS

“உயிர்” ஆயுதம்.

31 மே

இன்னொரு சுற்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

அடங்க மாட்டேன் என்று வீராப்புடன் இருக்கும் இலங்கையை அடிபணிய வைத்தே ஆகுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் மேற்குலகின் “மனிதாபிமானப்” போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

துரதிஷ்டவசமாக மீண்டும் இது “தமிழர்களின் பிணங்கள்” மீது சாய்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கப் போகிறது.

இந்தத் தடவை மீண்டும் இங்கிலாந்து பத்திரிகை (டைம்ஸ்) ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.

இறுதிக்கட்ட போருக்கு முன்பதாக ஐ.நா 6500 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்ற தம் கணிப்பைக் கூறியிருந்தது.

எனினும், இறுதிக்கட்டத்தில் எத்தனையாயிரம் என்பது பற்றி ஐ.நா வாலும் வாய் திறக்க முடியா அளவு சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்திருந்ததால், தற்போது புகைப்படங்கள், மனித சாட்சியங்கள், வேறும் வழிகளில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகள் தொடக்கம் அத்தனை விடயங்களையும் சாட்சியங்களாகப் பாவித்து, எவ்வாறாயினும் ஒரு மனித அவலத்தை விசாரணை செய்ய வேண்டும் எனும் ஒரு விடயத்தினை மேற்குலக ஊடகங்கள் பிரதானப்படுத்தத் துணிந்துள்ளது.

இப்பயான ஒரு விசாரணை உண்மையாக அமைய வேண்டும் என்பதை விட மேற்குலகு சாராத இலங்கையை “அச்சுறுத்த” எத்தனிக்கும் முயற்சிகளாகவே இவற்றை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இது முழுக்க முழுக்க மேற்குலக வர்க்க நலன் சார்ந்த கண்மூடித்தனமாக “அச்சுறுத்தலாகவே” இறுதியில் முடியப்போகிறது.

மிக இலகுவாக இதனைப் பார்ப்பது என்றால், ஐ.நா வோ அல்லது இந்த மனித நேய அபிமானிகளோ இலங்கை மீது வைக்கப்போகும் குற்றச்சாட்டு என்ன? இலங்கை அரசு அப்பாவி மக்கள் வகை தொகையாகக் கூடியிருந்த இடங்களில் அல்லது, அவர்களாகவே “பாதுகாப்பு வலயங்கள்” என்று பிரகடனப்படுத்திய இடங்களில் அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள் என்பதாகும்.

கல்லறைகள்

இதன் அடிப்படையையே தகர்த்தெறிவதற்கு இலங்கைக்கு இரண்டு மிக வலுவாக காரணங்கள் இருக்கின்றன.

1. பாதுகாப்பு வலயம் பொது மக்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது, ஆனால் அதற்குள் புலிகள் புகுந்து கொண்டார்கள், தம் கன ரக ஆயுத நிலைகளை அங்கே வலுப்படுத்திக்கொண்டார்கள்.

2. புலிகள் அமைப்பு ஒரு கட்டத்தின் பின் சீருடையில் போரிடவில்லை, மாறாக சிவிலியன்கள் போன்றே ஆயுதங்களை வெடிக்க வைத்ததற்கான ஆதாரங்களும் இருக்கின்றன, எனவே இந்த மேற்குலகம் சொல்லும் “mass graves” அதாவது அங்கே பெருந்திரளில் காணப்படும் கல்லறைகளைத் தோண்டினாலும், அந்தக் கல்லறையில் இருப்பது பொதுமகனா இல்லை புலியா என்பதை நிரூபிக்க முடியாது.

ஏனெனில் புலிகளின் நெற்றியில் அவர்கள் புலிகள் என்று எழுதப்பட்டிருக்கப் போவதும் இல்லை, சிவிலியன்கள் போன்று தான் புலிகள் போரிட்டார்கள் என்பதை மறுதலித்து விட்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் சாத்தியம் மேற்குலகுக்கும் இல்லை.

கல்லறைகளில் உறங்கும் அப்பாவி உடலங்களும் சில வேளை குண்டடி பட்ட உடலங்களாகவே இருக்கலாம், அந்த துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த உடல் எல்லாம் புலி தான் என்று அரசு வாதாடும் போது அதை இல்லை என மறுத்துரைக்கும் நிலையிலும் இந்த மேற்குலகம் இருக்கப்போவதில்லை.

மனித சாட்சியங்கள்

இதற்கடுத்ததாக தம் மனித நேய அபிமானத்தைக் காட்டுவதற்கு, தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும், “தப்பி வந்த” மக்களை மேற்குலகப் பிரதிநிதிகள் பயன்படுத்த முனைவார்கள்.

சில வேளைகளில் ஏலவே இப்படியான சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்திருக்கவும் கூடும்.

இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்கும் நோக்கில், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அந்தப் பக்கமே செல்லக்கூடாது என்று இலங்கை அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டது.

அதையும் மீறிச் சென்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற சானல் 4 நிறுவனத்தின் ஊழியர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவும் இலங்கை அரசு தயங்கவில்லை.

இந்த ஒரு அடிப்படை விடயம்தான் “சந்தேகத்தின்” பிரதான காரணி என்று மேற்குலகம் வாதாட முனைந்தால், இதற்கு முன்னர் அரச சார்பற்ற சேவை அமைப்புகள் எனும் பெயரில் அப்பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தப்பட்டதும், அவர்களுக்கான உபகரண உதவிகள் மற்றும் அவர்களின் “ஆயுத அபிவிருத்தி” உதவிகளிலும் பங்கெடுத்த பல மேற்கு நாடுகள் பற்றிய விபரங்களும் அரசிடம் இருக்கிறது, அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார்கள் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர்,தமிழினி மற்றும் பலர்.

பொட்டம்மானையும் வைத்திருப்பதாகச் சொல்லும் அரசின் ஊகமும் உண்மையாகுமானால் இந்த மனித நேய அபிமானிகளின் முகங்கள் வெகு விமர்சையாக கிழிக்கப்படும் அபாயத்தை அரசாங்கம் அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக முன்வைக்கும்.

அப்படித்தான் பொட்டம்மானைக் கொன்று போட்டாலும், அல்லது இந்தியாவின் “என்கவுன்டர்” முறையில் போட்டுத்தள்ளினாலும், அவர் தொடர்பான சாட்சியங்கள் ஒளிப்பதிவாகவாவது நிச்சயம் அரசாங்கம் வைத்திருக்கும்.

எனவே,” witness accounts” என்று மேற்குலகம் கொண்டுவரப்போகும் சாட்சியங்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிரான எதிர் சாட்சியங்களாக முன்னாள் புலிகளின் உறுப்பினர்களும், மக்களும் கூட அணி திரட்டப்படுவார்கள்.

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்ததும் சுடச்சுட தம் உறவுகளை புலிகள் கொன்றுவிடுகிறார்கள், தப்பித்து வருபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்று ஊடகங்களில், அந்தப் பதட்டத்திலும் “செவ்விகள்” வழங்கிய பல பேரின் அதே வகையான மனித சாட்சியங்கள் அரசிடமும் இருக்கும்.

எனவே, இரண்டையும் நேர் கோட்டில் வைத்து இலங்கை அரசை முழுமையாக குற்றவாளிகளாக்க முடியாமல் போகும்.

அதைத் தடுக்கும் அதற்கடுத்த காரணிதான், மேற்குலகம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட அடுத்த விடயம்.

அதாவது மக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருந்ததன் மூலம் மறைமுகமாவது இந்த மனித அவலத்திற்கு அவர்களும் பொறுப்பாளிகள் என்பதே அது.

புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்ற கூற்று யுத்த காலத்திலேயே சர்வதேசத்தினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

இதன் அடிப்படையிலேயே பெரும்பாலான வெளிநாடு வாழ் தமிழர்களின் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராக எதற்கும் பிரயோசனமற்றுப் போனது.

அந்நேரங்களில் ஒருவேளை தம் நலன் சார்ந்து இலங்கை அரசை மாற்றிக்கொள்ளவும் முடியும் எனும் நிலையில் ஏறத்தாழ இந்த விடயத்தை முழு உலகமும் ஏற்றுக்கொண்டது.

எனவே, அவ்விடயம் இங்கு மீண்டும் பிரதானப்படுத்தப்படும் போது, இந்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் உலக அரங்கில் வலுவாக எழுவற்கு ஏதுவாக தற்போது இந்த ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சி சொல்லப்போகின்றது.

அதாவது, தமது “நடு நிலை” யை வெளிக்காட்டி தாங்கள் சுத்தமான மனித நேய அபிமானிகள் என்று காட்டும் நோக்கில், மக்கள் பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது மோட்டார் மற்றும் ஆட்டிலறி நிலைகைளையும் வைத்திருந்தார்கள் என்னும் ஆதாரங்களையும் சேர்த்தே தான் வெளியிட்டிருக்கிறார்கள்.

கனரகம் சிறு ரகம்

இப்பொது இந்த ஒவ்வொரு நிலையையும் தாண்டிச்செல்லும் இந்த மனிதப் பேரவல வாதம் பாதுகாப்பு வலயத்திற்குள் இப்படி தொகை தொகையாக மக்கள் இருந்த போது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவித்தது எனும் குற்றச்சாட்டிலாவது வந்து நிற்கும்.

அதையும் நியாயப்படுத்தும் விதமாக இரு தரப்பும் aerial photo, அதாவது உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை சாட்சியங்களாக முன்வைக்கும்.

மேற்குலகிடம், விசேடமாக டைம்ஸ் பத்திரிகையின் புது ஆதாரமாக் கிளம்பியிருக்கும் aerial புகைப்படங்களில், முன்னாள் பாதுகாப்பு வலயத்தில் (புலிகளின்) பெருந்தொகையான கல்லறைகள் காணப்படுகின்றன.

இவை புலிகளின் டிரேட் மார்க் மாவீரர் கல்லறைகளாக இருந்தாலும், ஒரு வேளை அவையனைத்தும் சிவில் உடைகளில் புதைக்கப்பட்டிருக்கும் போராளிகளாகவும் இருக்கலாம்.

இப்படி பல தரப்பட்ட நொண்டிச் சாட்டுகளுடன் மீண்டும் கிளம்பியிருக்கும் இந்த மனிதநேயப் பூதங்கள் இலங்கை அரசை அச்சுறுத்தும் பணியில் மீண்டும் இறந்து போன அப்பாவி மக்களின் பிணங்கள் மீது “அரசியல்” நடத்தப்போகிறது.

புலிகளின் ஊடகங்களுக்கும், பிரச்சாரர்களுக்கும் அவர்கள் இறந்தும் மீண்டும் கரும்புலிகளாக, உயிர் ஆயுதங்களாக மாறுவார்கள்.

ஆசிய வல்லரசுகளின் மேற்குலகுக்கு எதிராண ஒரு “புதிய” கூட்டணி இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இருந்து உதயமாகியிருக்கிறது.

மேற்குலகை மையப்படுத்திய பொருளாதார உலகு அடைந்திருக்கும் நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புதியதோர் அத்தியாயம் எழுதத் தனித்தெழும் ஆசிய சக்திகள் கூட்டணி அமைத்திருப்பது மேற்குலகுக்கு மிகப் பெரும் தலையிடியாகும்.

அதிலும் பூகோள ரீதியாகப் பல முரண்பாட்டுடன் உள்ள பல சக்திகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைந்திருப்பதானது 2020ற்குப் பின் பாரிய வீழ்ச்சியைக் காணப்போகும் அமெரிக்காவின் மேலாதிக்கக் கொள்கைக்குக் கிடைத்த மிகப்பெரும் அடியாகும்.

ஜோர்ஜியா விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தம் பிராந்திய நலனுக்குள்ளும், போலந்தில் ஏவுகணை எதிர்பபு நிலையங்கள் எனும் பெயரில் முழு ஆசியப்பிராந்தியத்துக்குமான தமது மேலாதிக்கத்தை விஸ்தரிக்க எதிர்பார்த்திருக்கும் அமெரிக்காவுடன் வர்த்தக நலன் சார்ந்த கூட்டணியில் அதே நேரம் தொழிநுட்பத்தில் நன்கு முன்னேறியிருக்கும் ஐரோப்பிய யூனியன் கை கோர்த்துச் சென்றாலும், ரஷ்யா,சீனா மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப்பெரும் பிராந்திய சவாலாகும்.

இதற்கான கூட்டணி அமெரிக்க எதிர்ப்பு என்பதிலிருந்து ஆரம்பித்தாலும் இதன் பின்ணனியில் எதிர்கால வர்த்தக நலன்களே முழுக்க முழுக்க அடக்கப்பட்டிருக்கிறது.

கூட்டுப் பொருளாதார யுக்தியொன்று ஆசியப் பிராந்தியத்தில் மிக அவசியமானதொன்றாக இருப்பதை பிராந்திய வல்லரசுகள் நன்கு உணர்ந்திருக்கின்றன.

அவுஸ்திரேலியா தவிர்ந்த அனைத்து நாடுகளும் இதில் ஒனறு சேரும், அத்தோடு நிற்காமல் உலகின் மேற்குப் பகுதியில் இருக்கும் சிறு நாடுகள் மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபடத் துடிக்கும் மத்திய கிழக்கு நாடுகள், வளரத் துடிக்கும் ஆபிரிக்க நாடுகள் என்று இந்தக் கூட்டணி வெளித்தெரியாத ஆனால் பலமான கூட்டணியாக இருக்கும்.

பல வல்லரசுகளின் கூட்டு என்பதால் ஒரு சிறு காலத்திற்காகவது ஒரு பெரும் தலையின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கலாம்.

இதன் அடிப்படையில் ஒரு திறந்த பொருளாதார முன்னேற்றத்தில் உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இப்படி இலங்கையின் அரசியலுக்கு வெளியால் இருக்கும் காரணிகளுக்காக “தோண்டப்படும்” இலங்கைப் புதை குழிகள் தமது நோக்கத்தை நிறைவேற்றாமல், புலி ஆதரவாளர்களுக்குத் தற்காலிக சந்தோசத்தையும் மேற்குலகின் தற்காலிக திருப்தியாகவும் இருக்குமே தவிர, இதனை வைத்துத் தோலுரிக்கப்பட்ட ஒரு இலங்கை அரசினை வெளிக்காட்ட முடியாது.

அப்படியானால் அங்கு மனிதப் பேரவலம் என்று ஒன்று நடக்கவே இல்லையா? எனும் கேள்வி இங்கே எழப்போகிறது.

யுத்தத்தை முன்னெடுத்து எதிரியின் கடைசி அங்குல நிலம் வரை முன்னேறிச்சென்ற இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளில், விமானப்படையின் விமானத் தாக்குதல்களில், கடற்படையின் கடற் பீரங்கிகளில், மோட்டர்களில், ஷெல் வீச்சில் என்று பல்லாயிரம் மக்கள் அப்பாவியாக உயிரிழந்து போனது மிகக் கசப்பான, கொடூரமான உண்மையாகும்.

ஆனால் அவையனைத்தையும் சமப்படுத்தி வைத்த புலிகளின் சித்தார்ந்தம், மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்றொரு வாதத்தை முன்வைத்ததும், மக்களை அவர்கள் தான் கேடயமாகப் பாவித்தார்கள் எனும் கள நிலை எதார்த்தமும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதப் போரை நியாயப்படுத்தும்.

மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வாதங்கள் இலங்கை அரசு பொறுப்பான முறையில் போரிட்டிருக்க வேண்டும் எனும் சர்வதேச நலன் கலந்த வாதகமாக முடியும்.

ஆனால், விடுதலைப் புலிகள் போன்ற ஒரு மிகப் பயங்கரமான அமைப்பின் பிடியிலிருந்து 275000 த்திற்கும் அதிகமான மக்கள் எவ்வாறு தப்பிவர முடிந்தது? என்று இலங்கை அரசு கேட்கப்போகும் கேள்விக்கு, அவர்கள் நிலைகள் ஊடறுக்கப்பட்டு தாக்கப்படாமல் இது சாத்தியமற்றது எனும் பதில்தான் இருக்கும் என்பது மேற்குலகத்திற்கும் அது இயக்கும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கூட தெரியாத விடயமில்லை.

எனினும், போர்க்குற்றம் எனும் பெயரில் இவர்கள் செய்யப்போகும் இந்த “அரசியலுக்குப்” பின்னால், தம் மேற்குலக வர்க்க நலன் சார்ந்த “அச்சுறுத்தல்” ஆயுதத்தை அவர்கள் பாவித்துப் பார்க்கத் துணிந்துவிட்டார்கள்.

இவற்றையெல்லாம் நன்கு எதிர்பார்த்து, ஏலவே திட்டமிட்டிருக்கும் உலகின் புதிய அரசியல் கூட்டணி, நிச்சயமாக இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறும்.

ஆனாலும், யார் வென்றாலும் அதில் வெல்லப்போவது அவர்கள் வர்க்க நலனே அன்றி அப்பாவி மக்களின் உரிமைகள் அல்ல.

இவ்வாறான ஒரு பதட்ட நிலை தோன்றுவது இன்னொரு வகையில் அல்லல் படும் மக்களுக்கும் பாரிய அளவில் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு வகையில் நன்மைகளைத் தரும்.

இவர்கள் மீது திடீரெனக் கரிசணைக் காட்டத் துணியப்போகும் முன்னாள் புலிப் பிரமுகர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காணாமல் போன தம் தமிழர் புணர்வாழ்வு நிலையங்களை மீண்டும் தூசு தட்டலாம்.

மக்களுக்காகத்தான் தாம் போராடினோம் என்று நியாயப்படுத்த இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் தம் அழைப்புக்கும் செவிமடுத்து ஒன்று சேரும் மக்களை ஒன்று கூட்டி, அவர்கள் வரலாற்றி முதன் முறையாக உண்மையான மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்கலாம்.

சர்வதேச அவதானிப்புகளும், நெருக்கடியும் அதிகரிப்பதனால் முகாம்களில் வாடும் மக்களின் வாழ்க்கையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வரும் அழுத்தம் இலங்கை அரசின் மீதும் அதிகரிக்கப்படலாம்.

இது அவர்கள் பெறும் நன்மைகளாக இருந்தாலும், மறு பக்கத்தில் விரைவாள மீள் குடியேற்றம் எனும் பேரில் சமூகப் பிளவுகளும் மிக விரைவாகத் திட்டமிடப்படும்.

ஒன்று சேர்ந்தாலும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய மக்களை மிக விரைவாகப் பிரித்தாளும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவர்களின் உதவியோடு சத்தமே இல்லாமல் பல தீவிரவாதிகள் காணாமல் போகலாம்.

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இந்த “சமூக நலன்” மீது அக்கறை கொண்ட உண்மையான சக்திகளைக் கண்டறியும் காலம் அண்மையில் காண்பதற்கில்லை. அது மிகவும் தொலைவிலேயே இருக்கிறது.

மேற்கு,கிழக்கு என்று “இலங்கையை” மத்தியாக வைத்து பின்னப்படும் இந்த அரசியலுக்குப் பின்னாலும் வர்த்தக வர்க்க நலனும், பிராந்திய ஆதிக்க நலனுமே மறைமுகமாக முட்டிக்கொள்ளும்.

புலி ஏற்படுத்தித்தந்த இந்த அவல நிலையின் விளைவாக இனி வரும் காலத்தில் தமக்குக் கிடைக்கும் வளங்களைக் கொண்டு வாழ்க்கையை வாழப் பழகும் ஒரு சமுதாயம் உருவாகுமே தவிர வேறு விடயங்களில் அந்த மக்களின் கவனங்களும் இருக்கப் போவதில்லை.

இந்த முரண்பாட்டையும், மக்கள் வீழ்ச்சியையும் பயன்படுத்திக்கொள்ளப் போகும் இலங்கையின் அரசியல், தம் நாட்டு வளத்தை பங்கு போட்டு அதன் மூலம் நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டு செல்வதை மக்களுக்குப் பரிசாகவும், அதன் மூலம் நிரந்தரமாகச் சில காலங்களுக்கு தாம் அடையக்கூடிய வர்த்தக நலன்களையும் நோக்கிப் பயணிக்கும்.

இதில் பல பிரிவுகள் இருக்கப் போவதால், உயர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் இருப்பவர்களது “சிந்தனை” அரசியல் எப்போதும் மக்களைக் கவரும், அதன் பின்ணனியில் வர்க்க ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

இப்படி எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் மனித அவலம் என்பது இன்றைய இலங்கை சார்ந்த அரசியல் முன்னெடுப்பில் வெறும் கேலிக்கூத்தாக மாறி, இறந்த பின்னும் அவர்கள் உயிர்கள் ஆயுதங்களாகப் பாவிக்கப்பட்ட வரலாறே மிஞ்சும்.

போகிற போக்கில் “போரா.. அது எங்கே நடந்தது?” என்று கேள்வி கேட்கும் வரலாறு வந்தாலும் வரும் அன்று பிரபாகரன் கொல்லப்பட்ட அன்றே நாம் கேள்வியெழுப்பியிருந்தோம்.

இதுதான் இன்றைய எதார்த்த உலகின் அரசியல் சூழ்நிலை.

இவற்றிலிருந்து இருக்கும் உயிர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு பிரிவினை வாதமோ, முற்போக்கு வாதமோ எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

மாறாக, சமூக மேம்பாடுகளுக்கான திட்டமிடல், உண்மையாக அவர்கள் மீது நமக்கும் அக்கறை இருந்தால் நம்மால் முடிந்த அளவு அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகள்,ஆலோலனைகளை வழங்கல் மற்றும் மனமுடைந்து போய் தம் அடிப்படை உரிமைகளைக் கூட பேசிப் பெற தயங்கப் போகும் அந்த அப்பாவி மக்களுக்கான உளவியல் துணை என்பனவே இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான தேவை “தமிழர்கள்” மீது அக்கறைப்படும் “தமிழர்களுக்கு” இருக்க வேண்டும்.

இந்த முதற்கட்டத்தைத் தாண்டாமல் மேற்குலகம் போடும் கோசத்தில் சுய இன்பம் கண்டு கொண்டு அந்த மக்களின் தனிப்பட்ட மேம்பாட்டை மறந்து போனால் இந்தக் குற்றத்தை புலி ஆதரவு, புலி எதிர்ப்பு மற்றும் அனைத்து நடுநிலை,நடா நிலையினும் வாழும் அத்தனை “தமிழர்களும்” தம் வரலாற்றில் பதிந்து கொள்ளும் நிலை வரும்.

மீண்டும் மீண்டும் அவர்கள் உயிர்களை ஆயுதமாக வைத்து அரசியல் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றால், முதலில் அவர்களை இந்த முதற்கட்ட நிலையிலிருந்து விடுவிக்க வேண்டும், அதற்கடுத்ததாக அவர்களின் உழைப்பாதிக்கத்தையும், வாழ்வாதார அபிவிருத்தியும் சார்ந்த நல்ல திட்டங்களை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் சொந்தக் கைகளைக் கொண்டு அவர்கள் வரலாற்றை மீள எழுதிக்கொள்ள அவர்களுக்கே அனுமதியையும் வழங்க வேண்டும்.

அதற்கான சக்தி இன்று வெளிநாடு வாழ் தமிழர்களின் ஒற்றுமையில் தங்கியிருக்கிறது, ஆனால் அது சரியாகப் பயன்படுத்தப்படுமா? அல்லது பயன்படுத்தத்தான் முடியுமா?என்பது அடுத்து எழுந்து நிற்கும் மிகப் பெரும் கேள்வியாகும்.

அவரவர் சுய விமர்சனமே இதற்கு சிறந்த விடையைத் தரும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to ““உயிர்” ஆயுதம்.

 1. brown flore

  மே31, 2009 at 3:52 பிப

  Please donot use the word uirautham it sis aword invented by tigers to dente suicude bommbers , otherwise this artcle is excellent . This western hypocrasy irritates me if we srilankans unite together we can win , essential is economic development.

   
  • arivudan

   ஜூன்1, 2009 at 9:44 முப

   agree with u brown flore, we are in opinion that the title better suits in both ways to point its misuse and the result of it.
   Thank you.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: