RSS

பேரினவாதம் தகுமா? ஐரோப்பிய இலங்கை முஸ்லிம்கள் கேள்வி !

27 ஏப்

இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் தற்செயல்கள் அல்ல, திட்டமிடப்பட்ட செயற்தொடர் என்பதை ஏறத்தாழ ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

திட்டமிடப்பட்ட இனத்துவேசத்தை அரசாங்கம் கண்டும் காணாததும் போன்று நடிப்பதும், அரசில் பங்கேற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி நலன்களுக்காக தட்டிக் கேட்காமல் இருப்பதும், ஒரு கட்டத்தில் தமது சமூக சம்பந்தமான விடயங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு, மக்கள் உணர்வுகள் பொங்கியெழும் போது மாத்திரம் அறிக்கைகள் வெளியிட்டு தம் இருப்பையும் பாதுகாத்துக்கொள்ள முனைவதுமான பொதுவான அரசியல் நாடகங்கள் இன்றைய அளவில் முற்றாக நிர்வாணமாகியிருப்பது, எதிர்கால இலங்கையில் இஸ்லாமிய மக்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பெரிதும் உதவக் கூடிய விடயமாகும்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் நாட்டில் தம் சமூகம் எங்கேயிருக்கிறது? அவர்களின் முன்னேற்றப் பாதைக்கான வழிகாட்டல் எவ்வகையில் இருக்க வேண்டும் என்று இன்றைய ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்திருப்பதும், செயற்படுவதும் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்ற திக்கு வேறுபாடின்றி, சமூக நோக்குடன் இளையோர்கள் இணைந்து செய்படுவது மாத்திரமன்றி, அச்செயற்பாடுகளை ஆக்கபூர்வமாக இரண்டாவது தலைமுறையினரும் மேற்கொண்டு செல்வதோடு, தக்க தருணத்தில் நாட்டின் நிலைமைகளை முஸ்லிம் மக்களுக்கே உரிய ராஜதந்திரத்தோடு கையாள்வது நிச்சயமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எப்போதுமே தம் உரிமைகளை விட்டுக்கொடுக்காதவர்கள், தேவையேற்படின் தம் அரசியல் பலம் மூலம் தமது சமூக உரிமைகளை நிலை நாட்டிக்கொள்பவர்கள், பொறுமையான போராளிகள், சிறந்த அணுகுமுறையாளர்கள் எனும் வட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆயுதமே தீர்வு என்று நம்பியிருப்பவர்களுக்கு சற்றுக் கடினமாகவே இருக்கும்.

வரலாற்றில் இதற்கு முன்னரும் இலங்கையில் கலவரங்கள் மூண்டிருக்கின்றன, குறிப்பாக சிங்கள – முஸ்லிம் மக்களிடையிலான முறுகல்கள் இது முதற் தடவையல்ல. எனினும் ஒவ்வொரு தடவையும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இப்பிரச்சினைகளை மிகவும் அவதானமாகவே கையாண்டதோடு மாத்திரமல்லாமல், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாட்பட்ட ஒரு நிலையில் கருத்தொருமைப்பாட்டையும் பேணி வந்திருக்கின்றனர்.

எனவே, வன்முறையாளர்கள் தாம் எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல், பெரும்பாலும் முஸ்லிம்களிடம் மேலதிகமான சலுகைகளையும் விட்டுச் சென்றதை மாத்திரமே 19ம் நூற்றாண்டைய வன்முறை முதல் 1914 சிங்கள முஸ்லிம் கலவரங்கள் உட்பட்ட அனைத்துக் கலவரங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, வன்செயல்களின் போது முஸ்லிம்களின் ‘அமைதி’ நிலை என்பது பிறருக்குப் புரியாவிட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்குப் பிற்காலத்தில் பயனுள்ளதாகவே அமைந்து வருக்கிறது. இது தொடர்பில் உணர்ச்சியூட்டப்படலிலிருந்து முஸ்லிம்கள் இது வரை காலமும் தம்மைப் பாதுகாத்தே வந்திருக்கின்றனர்.

உணர்ச்சியூட்டப்படலை வன்முறையாக மாற்றாது அதனை ஆக்கபூர்வமான அரசியல் பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் திட்டமிடுவதில்லை, ஆனால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் அது தானாகவே நடைபெறுகிறது.

இருந்தாலும், இலங்கை முஸ்லிம்கள் தம் குரல்கள் ஒலிக்க வேண்டிய இடங்களில் துணிகரமாகக் குரல்களை ஒலிக்க வைப்பதிலும், செயற்பாட்டுத்திறன் காட்டப்பட வேண்டிய இடங்களில், செயற்பாட்டுத் திறனை வெளிப்படுத்துவதிலும் எப்போதும் ஆக்கபூர்வமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, எப்போது சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றாலும் அந்த சந்தர்ப்பத்தில் தம் சமூகப் பற்றுடனான கேள்விகளை முன்வைப்பதிலும், அரசைத் தட்டிக் கேட்பதிலும் முஸ்லிம்கள் எப்போதும் முன்னிலையிலையே இருக்கிறார்கள்.

நவீன உதாரணமாக, நேற்றைய தினம் (26-04-2012) அன்று இலங்கை இஸ்லாமிய மக்கள் சார்பான அனைத்து அமைப்புகளின் ஒன்றியமான COSMOS இனரின் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை அரச பிரதிநிதி டாக்டர். க்ரிஸ் நோனிஸ் அவர்களுடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இச்சந்திப்புக்கும்,COSMOS செயற்பாட்டிற்கும் , ஐக்கிய இராச்சியம் , க்ரோலி பிரதேசத்தில் இருந்து இயங்கும் SLMDI  (www.slmdi.org.uk) அமைப்பினர் வழங்கியிருந்த பாரிய பங்களிப்பும், கருத்தொருமையுடன் தமது நேர காலத்தை ஒதுக்கி உடனடி செயற்பாட்டில் இறங்கிய அனைத்து அமைப்பினரின் பங்களிப்பும் இன்றியமையாதவனையாகும்.

சரியான தருணத்தில் நெறிப்படுத்தப்பட்ட செயற்பாட்டுத் திறன் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நகரங்களில் வாழும் இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் மூலம் உத்தியோகபூர்வ இலங்கை அரச பிரதிநிதியிடம் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான பிரேரணைகளும், கேள்விகளும் இஸ்லாமிய சமுதாயத்தின் அறியப்படாத ஒரு பரிமாணத்தினை காட்சிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கவொரு விடயமாகும்.

தமது நியாயமான கேள்விகள் மூலம், இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பிரதிநிதி, மற்றும் உயர்ஸ்தானிக முக்கியப் பிரமுகர்கள் உட்பட உயர்ஸ்தானிகரையும் மெளனப்படுத்திய திறமையும், அதன் மூலம் பொறுப்புள்ளவொரு மக்கள் தூதரகமாகவும் அரசின் கிளையாகவும், மக்கள் சேவகர்களாகவும் தாம் நடந்து கொண்டு புலம் பெயர்ந்து வாழும் இஸ்லாமிய அமைப்பின் ஒன்றியத்திடம் தகுந்த முறையில் பதில் கலந்துரையாடலில் ஈடுபட்டது மாத்திரமன்றி, தம் முன் வைக்கப்பட்ட பாரிய பொறுப்பிற்கு தார்மீக முறையில் பதிலளிப்பதற்கும் இணங்கிச் செயற்பட்ட உயர்ஸ்தானிக ஊழியர்களுக்கும் சமூகம் சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டே ஆக வேண்டும்.

அதேவேளை, சிந்திக்கத் தூண்டிய கருத்துக்களை முன்வைத்து எம் சமூகத்தின் நாட்டுப்பற்று, சமூகக் கடமை மற்றும் எம்மை வழி நடத்தும் மார்க்கப் பற்றினையும் உரக்கக்கூறி எம் சமூகத்தின் தரத்தினையும் அந்தஸ்தினையும் உயர்த்திக்கொள்ள பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கலந்து கொண்ட அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளும் இங்கு நினைவு கூறப்படவேண்டும்.

முப்பது வருட பொல்லாத போரின் முடிவில், மீண்டும் பேரினவாதம் தகுமா? எனும் ஆழ்ந்த சிந்தனையை விதைத்த அறிவுபூர்வமான மேற்படி கலந்துரையாடலும் சந்திப்பும், புலம் பெயர்ந்து வாழும் இலங்கை இஸ்லாமியர்களின் வரலாற்றில் நிச்சயம் மறக்கப்படமுடியாத ஒரு நிகழ்வாகும்.

இதன் தொடர்ச்சியும், எம் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கம் இச்சமூகம் தொடர்பாக மேற்கொள்ளவிருக்கும் முடிவுகம் தொடர்பில் தங்கியிருப்பதனால், அனைத்துத் தரப்பு ஆர்வலர்களும் இது தொடர்பில் அதீத அக்கறையுடன் இருக்கிறார்கள்.

இன்றைய தினம் அமைதியான ஹர்த்தால், நாட்டின் கிழக்குப் பகுதியில் நடைபெற்று முடிந்திருக்கிறது. கண்டனப் பேரணிகள் தம் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்திருக்கின்றன, இன ஒற்றுமை மேலோங்க தமிழ்நாட்டு முஸ்லிம்களும் தம் குரல் எழுப்பியிருக்கிறார்குள், தம்புள்ளை மக்களோ அமைதியாக ஒரு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள், ஜம் இயதுல் உலமா தன் பங்கிற்கு அரசின் முடிவு எவ்வாறு அமைவது நம் சமூகத்திற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் பங்கமற்றுத் திகழும் எனும் தம் நிலைப்பாடு தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது, இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் உணர்வுகளைத் தனிப்பட்ட ரீதியாகத் தெரிவித்திருக்கிறார்கள், அரச இயந்திரத்தின் உறுப்பினர்கள் தற்போது வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள், மேலும் கிழக்கின் இராணுவப் பொறுப்பாளர்களும் இப் பேரினவாத வன் முறைக்கு எதிராகவும், அப்பேற்பட்டவர்களின் பொறுப்பட்ட நடவடிக்கைகளையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தனையும் நடைபெறும் போது, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான தார்மீகக் கடமையானது தம் குரல்களை அமைதியான முறையில் வெளிப்படுத்தித் தம் கண்டணங்களை முன் வைத்து, சமூக ஒற்றுமையைப் பலப்படுத்துவதோடு, வன் முறையாளர்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு எமது மார்க்கம் காட்டித் தரும் அமைதியான முறையை நடைமுறைப்படுத்திக் காட்டுவதாகும்.

அவ்வகையில் இன்றைய உலகளாவிய இலங்கை இஸ்லாமிய சமூகம் தன் கடமைகளை இதுவரை சரிவரச் செய்து வருகின்றமை இங்கு குறிப்படத்தக்கதாகும்.

இன்ஷா அல்லாஹ், அமைதியான முறையில் மிக விரைவில் இதற்கான தீர்வைக் கண்டு, பதட்ட நிலை தனிந்து, எம் தனித்துவம் மீண்டும் நிலை நாட்டப்படும் என்று நம்பி அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கோள்வோமாக !

– மானா.

http://www.sonakar.com

 

பின்னூட்டமொன்றை இடுக