RSS

Daily Archives: மே10, 2009

ஆண்டவா இது என்ன சோதனை?

 

ஆமி அடித்து ஒரே நாளில் 3000 பேர் இறந்துவிட்டார்கள் ப்ளேனில் அடிக்கிறான்,ஷெல் அடிக்கிறான் ஓடி வாருங்கள் ஊர்வலத்திற்கு !
எதிர்பார்த்ததுதான் ஆனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது !
ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்ற ஒன்றில் இராணுவம் உள்ளே சென்று
மீண்டும் ஒரு மண் அணை உடைக்க வேண்டும் இல்லையென்றால் மக்களுக்கு அவர்கள் கைகள் தொடும் தூரத்தில்
மரண பயத்தைக் கொடுக்க வேண்டும்.
இதுதான் கோத்தபாய சிந்தனையின் இறுதி அத்தியாயம்.
ஆமி அடித்துத்தான் இருக்கிறான்,ஆட்கள் இறந்துதான் போனார்கள்,ஆனால் புலி சொல்லும் அளவில் இல்லை,
புலி சொல்லும் கணக்கைப் பொய் என உலகுக்கு நிரூபிக்கலாம் எனும் அதியுயர் நம்பிக்கையில் சில நூறுகளையாவது
இராணுவம் கொன்று குவிப்பதும்,குவித்துவருவதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால்,அவனவன் சொந்த வேலைகளை செய்து முடிக்கவே நேரமில்லாமல் இருக்கும் ஒவ்வொரு தமிழனையும் 
உணர்ச்சிவசப்படுத்துவது எப்படி?அவன் உணர்வுகளை முறுக்கிவிடுவது எப்படி?அவனை எங்காவது ஒன்றுகூட்டுவது எப்படி?
இப்படி எதுவுமே தெரியாமல் இன்று குழம்பிப் போயிருக்கும் புலிகளுக்கு இப்படி அவிழித்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால்,நாளை இந்த உண்மைகளை அறிந்துகொள்ளக்கிடைக்கும் முதல் வாய்பிலேயே ஒவ்வொருவராக புலியின் மரண ஊர்வலங்களில் இருந்து வாபஸ் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மையும் கவனிக்கப்பட வேண்டியது.
ஊரறிய ஒன்று கூடி உண்ணாவிரதம் இருப்பார்கள்,ஆனால் இதற்கு மேல் இருந்தால் உயிர்தான் போகும் என்ற தருவாயில் திடீரென எழுந்திருந்து “உண்ணாவிரதம்” முடிந்துவிட்டது,ஆனால் எப்படி முடிந்தது ஏன் முடிந்தது என்ற காரணத்தை வெளியில் சொல்ல முடியாத நிலையில் அது ரகசியமாக வைக்கப்படுகிறது என்று கலைஞர் ஸ்டைலில் அறிக்கை விடுகிறார்கள்.
சுய சிந்தனை உள்ள எவனாவது இதற்குப்பிறகும் இப்படியான உண்ணாவிரத விளையாட்டுக்களுக்கு தன் வேலைகளை விட்டு விட்டு சென்று ஒரு குரலேனும் கொடுப்பானா?
இன்று ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் தான் காலங் கடந்தாவது முதன் முதலாக மக்கள் எழுச்சியில் தங்கிய ஒரு போராட்டமாக இந்தப் போராட்டத்தை சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக முயற்சி எடுத்திருக்கிறார்கள் இந்த வீணாய்ப் போன புலிகள்,சரி இனி வரும் காலமாவது மக்களோடு இணைந்த போராட்டமாக மாறட்டும் என்று பார்த்தால் இப்போதும் மக்களை “மந்தைகளாக” மாற்றி, தாமே அறிவாளிகள்,தாம் எதைச் சொன்னாலும் நீங்கள் “மந்தைகள்” போன்று நம்ப வேண்டும்.
நாம் கலைஞரைத்திட்டினால் நீங்களும் திட்டுங்கள்,நாங்கள் ஜெயலலிதாவைத் திட்டினால் நீங்களும் திட்டுங்கள் ஆனால் தப்பித்தவறியேனும் கேள்வி கேட்காதீர்கள் என்று மேலும் மேலும் தம் பாசிச நலன் சார்ந்த சித்தார்ந்தங்களுக்காக அப்பாவி மக்களின் உணர்ச்சிகளோடு இந்தப் புலிகள் விளையாடுகிறார்கள்.
ஒரு காலம் இருந்தது,அந்தக் காலத்தில் எப்பேற்பட்ட அசகாய சூரர்கள் வந்தாலும்,என்னதான் கலை நிகழ்ச்சிகள் நடத்தினாலும் கூட
விடுதலைப் புலிகள் போக வெண்டாம் என்று ஒரு மூச்சு விட்டால் கூட அந்த நிகழச்சி மண்ணைக் கவ்வும் நிலையிருந்தது,புலிகளின் மீதும்
மக்களுக்கு அவ்வாறான ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தது.
யாரும் தாம் தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும் கூட மாதாமாதம் புலிகளுக்கு நிதி வழங்குவதை எப்போதும் நிறுத்த நினைத்தது கூட இல்லை. அவ்வாறு புலியின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்த காலமது.
அந்தக் காலத்தில் புலிகள் மக்களை இந்த உணர்வு மயமாக்கலில் வைத்துவிட்டு,அவர்கள் நிம்மதியாக நீச்சல் தடாகங்களில் நீந்தச் சென்று விட்டதை இப்போதுதான் மக்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதால் இனி புலிகள் காட்டுக் கத்தல் கத்தினாலும் ஒரு குறிப்பிட்ட சில தொகையினரைத் தவிர வேறு யாரும் அவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்லும் நிலையில் இல்லை.
எனவே தான் இப்போது இப்படியான ஒள்றைப் பத்தாக்கி மக்களின் உணர்வுகளோடு பந்தாடும் நிலைக்கு விடுதலைப் புலிகளின் முட்டாள்த் தலைமை தள்ளப்பட்டிருக்கிறது.
இப்படியான செய்திகள் பொய் என்பதோடு மறுத்து,விடுதலைப்புலிகள் தான் மக்களை கேடயமாக வைத்திருக்கிறார்கள் என்ற சர்வதேச
கண்டணங்களையும் அள்ளி வீசிவிட்டு கோத்தபாயவின் சிந்தனைகளை மனதார ஏற்றுக்கொள்ளும் நிலையில் உலகில் எந்தத் தமிழனும் இருக்கப்போவதில்லை.
அத்தனை பேருக்கும் உணர்விருக்கிறது,ஆனால் புலிகளின் பாசிசத்தோடு ஒன்றித்தான் போக முடியவில்லை.
எனவே,புலி சார்ந்தவர்கள் தவிர ஏனையவர்களில் ஏராளமானோர் இந்த வீதி வேடிக்கைகளில் பங்கு கொள்ளாமல் மெளனிகளாகவே இருக்கிறார்கள். 
ஆனாலும் அது போதாது,என்னதான் புலியின் பிடியில் இருந்தாலும் அவர்களும் மனிதர்களே!அவர்களுக்கும் ஆகக்குறைந்தது உயிர் வாழும் உரிமையாவது இருக்கிறது எனவே அவர்களுக்காக உலகம் எங்கும் வாழும் அனைத்தின மக்களும் எதையாவது செய்ய வேண்டும்.
ஆனால் எதைச் செய்யப் போனாலும் பாய்ந்தடித்துக்கொண்டு நடேசன் ஐயா நன்றி சொல்லி விடுவதும்,அது ஏதோ விடுதலைப் புலிகளுக்கான
ஆதரவு என்ற வெளிநாடுவாழ் தமிழர்களை குஷிப்படுத்தி நிதி பறிக்கவும் முயல்வதால் பலரால் எதுவுமே செய்ய முடிவதில்லை.
இருந்தாலும் இதை இப்படியே விடவும் முடியாது,எதிர்வரும் காலங்களிலும் பாரிய மனித அழிவுகள் எதிர்பார்க்கப்பட வேண்டியனவையாக இருக்கின்றன.
அவை வரும் முன் தடுக்கப்படாவிட்டால் நாளை இறந்தவர்கள் விழுந்த தடங்களைக் கூட யாராலும் பார்க்க முடியாது.
சரி எல்லோருமாக சேர்ந்து,வீதிகளில் இறங்கலாம் என்று பார்த்தால்,திடீரென ஏதாவது ஒரு மூலையில் இருந்து யாராவது ஒருவன் வேண்டுமென்றே விடுதலைப் புலிகளின் “தேசியக்” கொடியை உயர்த்தி விடுகிறான்,அதன் பின் கூட்டமும் மெல்ல கலைய ஆரம்பிக்கிறது,நமது எண்ணங்களும் நிறைவேற முடியாமல் போகிறது.
சரி அந்த வழியில்லை என்றால் என்ன,வேறு வழிகளையாவது முயற்சிக்க வேண்டும்.
ஐ.நா உட்பட அனைத்து மனித நேய அமைப்புகளையும்,சக்திவாய்ந்த அரசுகளையும் உஷார் படுத்த வேண்டும்,நம்மால் முடிந்தளவு நமது
மக்கள் எதிர்நோக்கப்போகும் அவலங்களை தடுக்க முயல வேண்டும்.
ஆனாலும் இறுதியில் அவர்களுக்கும் பொது நிலையில் இருந்து
இரண்டு வகையான கோரிக்கைகளைத்தான் அனுப்ப முடியும்.
1.புலிகளே மக்களை உடனடியாக விடுவி!
2.அரசே அப்பாவி மக்களை கொல்லாதே,அவர்களுக்கு வெளியேறக் கொஞ்சம் இடங்கொடு
இப்படி கோரிக்கைகளை நாங்கள் வைக்கச் செல்லும் போது,உலகமே இணைந்து இன்னும் ஒன்றைச் சொல்லப்போகிறது,அதாவது புலிகள் தானே மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள்,அவர்கள் மக்களை வெளியேற அனுமதித்தால் ஏன் இந்தப் பிரச்சினை என்று கேட்கப்போகிறது.
அதற்கு ஒரே தீர்வு கோத்தபாய வழியில் புலிகளைத் தோற்கடிப்பதுதான், எனவே சகித்துக்கொள்ளத்தான் வெண்டும் என்று மெளனமாக இருக்கப்போகிறது.
அதையும் விட முடியாது,இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது,அப்பாவி மக்கள் அனுபவிக்கப்போகும் அல்லல்களை நினைத்து மெளனிகளாகவும் இருக்க முடியாது, ஆண்டவா இது என்ன சோதனை?
இனிமேலும் தம்மால் என்ன செய்ய முடியும் முடியாது என்பது புலிகளுக்குத் தெரியும்,உங்களை ஊட்டி வளர்த்த மக்கள்,அவர்கள் சந்ததிகள், நீங்களே அடிக்கடி கூறும் தமிழனமும் நாளை உலக வரலாற்றில் நிலைக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் புலிகளாக முன் வந்து எதையாவது செய்தால் தவிர,புலிகளின் இந்தக் கற்கால வித்தையை வெளிப்படையாகத் தெரிந்து வைத்திருக்கும் யாரிடமும் எதைப் பேசியும் பயனில்லையே?

ஆமி அடித்து ஒரே நாளில் 3000 பேர் இறந்துவிட்டார்கள் ப்ளேனில் அடிக்கிறான்,ஷெல் அடிக்கிறான் ஓடி வாருங்கள் ஊர்வலத்திற்கு !

எதிர்பார்த்ததுதான் ஆனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது !

Read the rest of this entry »

 

குறிச்சொற்கள்: , , , , , , ,