அதிகாரங்களை மையப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை முதன்மைப்படுத்தியும், ஒரு சில வேளைகளில் காப்பிய நாயகர்கள் மூலம் தர்மத்தை முன்நிலைப் படுத்தியும் பல போர் வரலாற்றுக் காவியங்களை நம் மூதாதையர் வரலாறாகாவும், இலக்கியங்களாகவும், கதைகளாகவும் கேட்டறிந்து வளர்ந்த நம் “அறிவுக்குள்” ராஜபக்சாவின் போரும் புகுந்து கொள்கிறது.
நம் பண்பாட்டின் வழக்கப்படி இந்தப் போரையும் புலிகளின் ஆதரவு நிலையிலிருந்து ஒரு வரைவிலக்கணத்துடனும், புலி எனும் கொடூரம் அழிந்தே ஆக வேண்டும் எனும் நிலையில் இருந்து இன்னுமொரு வரைவிலக்கணத்துடனும், நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு நிலையான அரசாங்கம் எத்தனை முக்கியம் எனும் கோணத்திலிருந்து இன்னொரு வரைவிலக்கணமுமாக, பல பக்கங்களிலிருந்து நடந்து முடிந்த இந்தப் போரை நாம் பார்க்கிறோம்.
வெறுமனே புலிகள் எனும் இயக்கத்திற்கு எதிராக நடந்த ஒரு போராக மாத்திரம் இந்தப் போர் இருந்திருந்தால், இது சர்வதேசத்தில் இத்தனை முக்கியத்தைப் பெற்றிருக்கப் போவதில்லை.
அதே நேரம் வெறுமனே இது புலிகளுக்கு எதிரான போர் மாத்திரம் தான் என்று காட்டிக்கொள்வதிலேயே அரசாங்கம் முழு முனைப்புடன் செயற்பட்டும் வந்ததை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
புலிகள் எனும் சக்தி இலங்கையில் இருப்பதானது தொடர்ந்து வந்த அத்தனை அரசுகளுக்கும் இலாபமீட்டும் “சக்தியாகவே” இருந்து வந்ததை கடந்த கால வரலாற்றை மீள் ஆய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம், அதை பிறிதொரு பதிவில் இங்கே நாமும் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.
ஆசிய நாடுகளில் பிரதான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு தலைபோகும் பிரச்சினையை தமக்குள் வைத்துக்கொண்டு அதை தீர்க்கவும் மாட்டாமல், தீரவும் விடாமல் அரசியல் இலாபம் பார்த்து வரும் கலாச்சாரம் இன்றும் இருக்கிறது.
அப்படிப் புலிகளை வைத்துப் பயன்பட்ட அரசுகளில் மிகப் பிரதானமானது பிரேமதாசா அரசாகும்.
அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சிக்கு வந்தாலும், கொள்கையளவில் வேறுபட்டாலும் ஆட்சிப்பீடத்திற்கு வந்ததன் பின் சந்திரிக்கா அம்மையாரும் இந்த அரசியற் கோட்பாட்டுக்கு விதி விலக்காக இருக்கவில்லை.
ஆக மொத்தத்தில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளும் விடுதலைப் புலிகள் எனும் ஒரு அமைப்பை உலகளாவிய ரீதியில் ” பயங்கரவாத அமைப்பாக ” அறியச் செய்துவிட்டாலும் கூட, அவர்களின் இருப்பில் அடைந்த இலாபங்களே அதிகம்.
இந்த இலாபங்களை அவர்கள் உள் நாட்டில் அடைந்து கொண்டாலும், வெளிநாட்டைப் பொறுத்தவரை புலிகளின் பலம் பற்றிய பரப்புரை மற்றும் ஏறத்தாழ ஒரு புற நிலை ஈழத்தின் இருப்பு பற்றிய நம்பிக்கைக்கு எதிராக எதையுமே செய்ததில்லை என்பது அவர்களுக்குள் அதாவது புலிகளுக்கும் தொடர்ந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் புலிகளை சில பிரதேசங்களை விட்டுப் பின் வாங்கச்செய்து விட்டு, பேச்சு வார்த்தை மேடையில் அமர்ந்த அரசாங்கங்களுக்கும் இடையிலான எழுதப்படாத புரிந்துணர்வு உடன்படிக்கையாகும்.
அதன் விளைவில், தமது பெரும் பகுதி ஆதாயத்தை புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளில் தங்கு தடையின்றிப் பார்த்து வந்தார்கள் புலிகள், அதன் உச்ச கட்ட அறுவடையாக இன்று தம் தலைவனின் இழப்பைக் கூட மறைத்துத் தொடர்ந்தும் தம் வங்கிகளுக்கு வரும் நிலையான வருமானத்தை தக்க வைத்துக்கொள்வதிலேயே இன்னும் குறியாக இருக்கிறார்கள்.
கடந்த கால அரசுகள் போலன்றி, மஹிந்தவின் அரசு இந்நிலையிலிருந்து விடுபட்டதன் பின்ணினியில் நாட்டின் எதிர்காலம் தொடர்பான அவர்களது சிந்தனைகளும், கருத்துக்களும், வர்க்க மற்றும் வர்த்தக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களும் மிகவும் வலுவான காரணிகளாகும்.
பயங்கரவாதம் எனும் ஒரு விடயத்தை வைத்து கடந்த மூன்று தசாப்தங்களாக ஆமை வேகத்தில் வளர்ந்து, ஆனால் குதிரை வேகத்தில் தேய்ந்து போயிருந்த ஒரு நாட்டை, அது பழகிப்போயிருந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலிருந்து ஒரேயடியாக, அதுவும் தலை கீழாக மாற்றுவதென்பது எவ்வளவு இடர்பாடானது என்பது ஒரு புறம் இருக்க, அப்படியொரு திட்டத்திற்குள் காலலெடுத்து வைப்பதற்கு எவ்வளவு பெரிய திட்டமிடலும், துணிச்சலும், கூட்டணிகளும் இருக்க வேண்டும் என்பதையும் ஒரு முறை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இலங்கை அரசாங்க காவற்துறையினர் SLR ரக துப்பாக்கிகளை வைத்திருந்த போது, தம் பண பலத்தால் புலிகள் SMG ரக துப்பாக்கிகளை வைத்து அவர்களைத் திணறடித்தார்கள்.
அப்போதும் எப்போதும் பண பலத்தை தம்மிடம் அதிகரிப்பதன் மூலமே எதிரியைத் தோற்கடிக்கலாம் எனும் தத்துவத்தைப் புலிகள் பின்பற்றி வந்ததனால், மிகக் கவனமாகத் திட்டமிட்டு புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பணத்தைக் கறந்து வந்தார்கள்.
தமக்கொரு விடிவு வேண்டும் என்று நினைத்த தமிழர்களும் புலிகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், புலிகளும் ஒரு கட்டத்தில் இலங்கை அரசாங்கங்கள் தென் பகுதி மக்களைப் புலிகளின் பெயரால் ஏமாற்றி வந்ததைப் போலவே, வரும் எந்தவொரு அரசாங்கத்தையும் முதலில் ஆதரித்து ஒரு மாவீரர் உரையையும், பின்னர் வீராப்புப் பேசி ஒரு மாவீரர் உரையையும் கொடுப்பதோடு நிறுத்தி புலிகள் ஏமாற்றி வந்தார்கள்.
இப்படி மாறி மாறி இரு தரப்பாலும் ஏமாற்றப்பட்டவர்கள் சாதாரண மக்களே.
இப்படியான ஒரு நிலையிலேயே காலம் தள்ளிக்கொண்டிருந்த இலங்கையின் அரசியலை தலைகீழாக மாற்றத் துணிந்த மஹிந்த பிரதர்ஸின் அரசியல் தொலை நோக்கு, அரசியல் ராஜதந்திரங்கள், மற்றும் நவீன மயப்படுத்தப்பட்ட சிந்தனை வடிவங்களுக்கெல்லாம் மிகப்பெரும் சவாலாக இருந்தது இந்தப் போர் எனும் ஒரு பக்கத்தை மிகச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளலாம்.
அந்த சூழ்நிலைகளை வெற்றிகொள்வதற்கு உலக நாடுகளில் யார் யாரோடு கூட்டணி அமைக்கலாம், யார் யாரை விட்டு விலகலாம் என்கிற அடிப்படை விடயம் முதல் புலிகளின் பலவீனத்தை எப்படி முழுமையாகத் தமக்குச் சாதகமாக்கலாம் என்பது வரை அவர்களது அரசியல் காய் நகர்வுகளில் இருந்த சாதுர்யத்தை மறுக்க முடியாது.
அவுஸ்திரேலியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கிய கோத்தபாயாவிடம் ” இந்தப் போருக்கு கருணா உதவுவதாகக் கூறுகிறார்களே” என்று கேள்வி கேட்கப்பட்டது, “கருணா அவர்கள் ஆட்சியில் தானே புலிகளை விட்டுப் பிரிந்து வந்தார், அப்போது அவர்கள் அவரைப் பாவித்திருக்கலாமே” என்று கோத்தபாயா ஒரு மறு கேள்வியைக் கேட்டிருந்தார்.
எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிலை குலைந்து போகாத மிகப்பெரும் திட்டமிடல் இல்லாமல் ராஜபக்சா சகோதரர்கள் இந்தப் போருக்குப் போகவில்லை என்பது தெட்டத் தெளிவான விடயமாகும்.
புலிகளின் பலமும் பலவீனமும் என்ன என்பதை நன்கறிந்திருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா “புலிகளின் கணக்கை மூன்று வருடங்களுக்குள் முடிப்பேன்” என்று போர் தொடங்க முன்னரே கோத்தபாயா கூறிய போது அது ஒரு வகையில் நம்ப முடியாத ஒரு வீராப்பாகவே உலக அரங்கில் பார்க்கப்பட்டது.
அதற்கான காரணம், புலிகளுக்கு இருந்த மிகப் பலமான புற நிலைக் காரணிகளாகும்.
அப்படியொரு போர் நடந்தால் ஆகக்குறைந்தது ஆயிரமாயிரம் மனித வெடிகுண்டுகளையாவது சந்திக்க வேண்டும், மிகப் பெரும் மனித அவலம் இடம்பெற வேண்டும், லட்சக்கணக்கில் மக்கள் அழிய வேண்டும் எனவே அப்படியொரு ஆபத்தை இலங்கை விலை கொடுத்து வாங்காது என்பது அனேகரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அத்துடன், புலிகளின் மனோபலம் பற்றி வெளியில் நிலவிய திடமான நம்பிக்கையும், தற்கொலை அணி மற்றும் கடல், வான் என்று விரிவடைந்திருக்கும் அவர்களது போர் முறைகளும் இந்த நம்பிக்கையை எல்லோர் மத்தியிலும் விதைத்திருந்ததில் தப்பேயில்லை.
இப்படியொரு சூழ்நிலையிலேயே புலிகளுடனான ஒரு போரைத் தயார் செய்தது இலங்கை அரசாங்கம் எனும் போது, அதன் பின்ணனியில் மிக வலுவான காரணிகள் இருந்தே ஆக வேண்டும்.
இந்த வலுவான காரணியைப் பலப்படுத்தும் விதமாக நாலா புறமும் வரும் சவால்களைச் சமாளிக்கக் கூடிய ஒரு நிரந்தரமான கூட்டணியும் அமைய வேண்டும்.
அந்தக் கூட்டணியினரை ஒரு முகப்படுத்தக்கூடிய ஒரு நோக்கமும், அந்த நோக்கத்தின் செயல் வடிவம் பற்றிய மிகத்தெளிவான திட்டமிடல் மற்றும் விளக்கிக்கூறும் செயற்திறனும் இருந்திருக்க வேண்டும்.
இப்படியொரு பலமான நிலையில் இருக்கும் அரசாங்கம் முன்னர் உருவாகியிருந்தால் இந்த நாடு எங்கோ போயிருக்கும்.
எனவே, மிகப் பாரியதொரு திட்டமிடல், அதிலும் புலிகளின் பலத்தை மிகத் துல்லியமாக அளவிடாமல் அவர்கள் இந்த யுத்தத்திற்குள் இறங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த யுத்தத்தை என்ன விலை கொடுத்தாவது முடித்துவிட வேண்டும் என்கிற ராஜபக்ச பிரதர்ஸின் முனைப்புக்குப் பின்னால், இது வரை இல்லாத ஒரு இலங்கையை உருவாக்க வேண்டும் எனும் நோக்கம் மிகப்பிரதானமானதாகும்.
இதுவரை இல்லாத ஒரு இலங்கை எனும் போது அதில் நாட்டின் அபிவிருத்தியும், வளப்படுத்தலும் எத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்குமோ அதே போன்று ராஜபக்ச குடும்ப நலனும் சம அளவில் அவர்கள் திட்டத்தில் முதன்மை பெற்றிருக்கும்.
பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஆளுமையில் இருந்து மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் இலங்கை அரசியல் மீதான ஈடுபாட்டையும் , அவர்கள் வகித்த பங்கையும் இனியொரு காலத்திலும் இலங்கை வரலாறு மறக்கக்கூடாத வகையிலும், அதே நேரம் தேய்ந்து போன பண்டாரநாயக்கா ஆளுமையைக் கைப்பற்றி ராஜபக்ச குடும்பத்தின் ஆளுமையை சுதந்திரக் கட்சியிலும் இலங்கை அரசியலிலும் நிலைக்கச் செய்யும் தேவையும் பலத்தையும், மக்கள் ஆதரவையும் ஒரு சேரப் பெற்றுக்கொண்ட ராஜபக்ச பிரதர்ஸின் மிக முக்கிய செயற்திட்டமாகும்.
அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் அவர்களின் போர் என்பது இரண்டு நிலைகளில் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
ஒரு பக்கம், ஆயுதம் ஏந்திய புலிகள் எனும் மக்கள் விரோத அமைப்புக்கு எதிராக இருந்த அதே வேளை, மறு பக்கத்தில் பெரும்பாண்மை மக்களின் மனங்களைத் திருப்திப்படுத்து வெல்லத் திட்டமிட்ட ஒரு உளவியல் போரும் நடைபெற்றது.
புலிகளும் உளவியல் போர் நடத்தினார்கள், ஆனால் அது மக்களை மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிமயமாக்கலை நோக்கியதாக மட்டுமே இருந்தது.
ராஜபக்ச பிரதர்ஸின் உளவியல் போர் வேறு வடிவத்தையுடையது.
அது நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தையும்,யுத்தமற்ற ஒரு சூழ்நிலையையும் உருவாக்குவதன் மூலம் மாத்திரமே நிலைக்கச் செய்ய முடியும் என்கிற உண்மையை உணர்ந்ததாக இருந்தது.
கிளிநொச்சி வரை கைப்பற்றி விட்டு மீண்டும் சமாதானம் பேசப் போவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நிரந்தர விடிவைப் பெற்றுக்கொடுத்த அல்லது ஒரு புதிய இலங்கையை உருவாக்கிய மிகச்சிறந்த குடும்பமாக ராஜபக்ச குடும்பம் வர முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள்.
இந்த நிலையில் வைத்துப் பார்க்கும் போது, 13 இராணுவம் கொல்லப்பட்டதற்காக ஆரம்பித்த இனக்கலவரம் இன்று கோத்தபாயவின் கணக்குப்படி 6,200 பேர் கொல்லப்பட்டும் மீண்டும் வெடிக்கவில்லை, 30000 பேர் காயமடைந்தும் மீண்டும் உருவாகவில்லை என்கிற உண்மையும் அவதானிக்கப்பட வேண்டும்.
இவற்றை உற்று நோக்கும் போது, நாட்டு மக்களும் எப்படியாவது தாம் அடைந்திருக்கும் இந்தக் கேவலமான நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒருமித்த கருத்துடனேயே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
அதற்கான விலையைக் கொடுக்க அவர்களும் தயாராக இருந்தார்கள், சரியான சந்தர்ப்பத்தில் தமக்கிருக்கும் அதிகாரத்தையும், பலத்தையும் திட்டமிட்டு, ஆகக்குறைந்தது ராஜபக்ச வம்சத்தின் பெயரை இலங்கை அரசியலில் நிரந்தரமாகப் பதியும் தூர நோக்குடனாவது செயற்பட்ட மஹிந்த பிரதர்ஸ் மிகவும் வெற்றிகரமாக உலக அரங்கில் தம் அரசியல் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
இது அவர்கள் குடும்பம் சார்ந்த நிலையிலிருந்து விடுபட்டு, நாட்டின் அபிவிருத்தி சார்ந்த நிலை என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ராஜபக்சாக்கள் விரும்பியமைத்துக்கொண்ட “உலகக் கூட்டணியும்” அந்தக் கூட்டணியின் எதிர்கால வர்த்தக நலன் அடிப்படையிலான திட்டங்களும் உற்று நோக்கப்படும் போது, அவர்கள் தலை சிறந்த அரசியல் வாதிகளாக மாத்திரமன்றி, நாட்டைக் காப்பாற்றி, மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்த தியாகிகளாகவும் உருவாகப்போகிறார்கள் என்பது உறுதி.
இத்தனைக்கும் அவர்களை வலிந்து வர வைத்ததே, அதாவது ஆட்சியில் அமர்த்தியதே புலிகளின் கேவலங்கெட்ட ராஜதந்திரம் தான்.
எது எப்படியோ ராஜபக்சாக்களின் முதற்கட்டப் போர் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது, அவர்களது இரண்டாங்கட்டப் போர் தான் அவர்களை நிரந்தரமாக மக்கள் மனதில் குடியமர்த்தப் போகிறது.
எனவே, நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் அவர்கள் காட்டப்போகும் வேகமும், செயற்பாடும் தேசிய அரசியல் நதியில் பல மாற்றங்களைக் கொண்டு வரும்.
தம் தந்தையின் கனவுகளை நிறைவேற்றப் புறப்பட்டுவிட்ட புதல்வர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்? என்பது நாட்டின் ஒற்றுமைக்குக் கொண்டு வரப்படப்போகும் சவால்.
ஒற்றுமையாக இருப்பதென்றால் நாட்டில் இரு, இல்லையேல் வெளியேறு எனும் ரீதியில் ஒவ்வொரு குடிமகனும் இந்த தேசத்திற்குள் வாழும் தேவை வரும்.
அப்படியான ஒரு சூழ்நிலையில் பிரிவினைவாதம் ஒழிக்கப்படும், தேசியம் மீண்டும் வீறு பெறும்.
ஆனால், வடுக்களை சுமந்திருக்கும் தமிழ் மக்கள் தம் மீட்சியை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது மட்டும் எப்போதும் ஒரு சந்தேகமாகவே இருந்து கொண்டு இருக்கும்.
காலம் மாறி நவீனம் பெறும் இத்தருணத்தில், தமிழ் மக்களைத் தலைமை தாங்க முன் வரும் அரசியல் தலைவர்களும் ஆகக்குறைந்தது தொலை நோக்குள்ள மக்கள் நலனை, விட்டுக்கொடுக்காத சுய மரியாதையை, ஒரு ஒற்றுமையுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்ப முன் வரவேண்டும்.
அதைவிட்டுக் தவித்துப்போயிருக்கும் இவர்களை அரசியல் வேட்டையாடி இன்னும் இன்னும் முடமாக்கக்கூடாது.
ஒரு நிலையான கொள்கையை வெளிச்சொல்லாத தமிழர் தலைமைகள் இருக்கும் வரை இந்தக் கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
நாட்டில் ஒரு பக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மக்களின் மந்த நிலையை மறு பக்கத்தில் வாழும் மக்களாவது உணர்ந்து செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.
உங்களை வழி நடத்த முன் வரும் அரசியல் தலைமைகளை இப்போதிருந்தே நீங்கள் வடி கட்ட ஆரம்பித்தால் நாளை மீள் குடியேற்றங்கள் என்று வந்ததன் பிற்பாடு அந்த மக்களும் நன்மை பெறுவார்கள்.
இல்லையென்றால், அசுரத்தனமாக முன்னெறும் இன்னொரு சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின் தங்கிய சமூகமாகவே நீங்களும் எப்போதும் இருப்பீர்கள்.
அப்போதும், உங்கள் குறைபாடுகளை சுய விமர்சனம் செய்யாமல் சிறுபாண்மையினத்தை பேரினவாதம் முடக்கி வைத்திருக்கிறது என்று வெற்று அரசியல் பேசுவீர்கள்.
நாடு வளரும் வேகத்தில் மக்களும் வளர வேண்டும், அதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
தலைமைகளைத் தீர்மானிக்க முன்னதாக உங்கள் “சுய அறிவை” செயற்படுத்த வேண்டும்.
நல்லதொரு எதிர்காலத்தை யார் தான் விரும்பவில்லை? ஆனால் வரும் வாய்ப்புகளைத் தவற விட்டுவிட்டு பின்னால் வந்து யாரையும் குற்றம் சொல்லி எதைக் காணப்போகிறோம்.
மக்கள் விழிப்புணர்வு என்பது எப்போதும் தேவையானது, அதைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விழித்துக்கொள்வது என்பது இன்றைய தேவையாக இருக்கிறது!
sekaran
ஜூன்5, 2009 at 5:41 பிப
ராஜபக்சவுக்கு இனி தான் பெரும் போர் காத்திருக்கிறது. எப்படியான தீர்வை முன் வைக்கப்போகிறார்? சிங்கள பேரினவாதிகளையும் சமாளித்து தமிழர்களையும் திருப்திப்படுத்தி…..எப்டி?…. எப்டி? …என்று பரபரப்புடன் காத்திருக்கிறோம். தேனீயில் இன்று வந்த (05.06.09) வி.சின்னத்தம்பியின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். ஏன் இன்று அரசுடன் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் (அவர்கள் சுதந்திர கட்சியுடன் இணையாமலே) ஒரே சின்னத்தில் தொகுதி உடன்பாட்டுடன் போட்டியிடக்கூடாது? இல்லாவிட்டால் ஐதேக வுடன் இணைந்து மோதிப்பார்க்கலாம்! (வட கிழக்கில் ஜனநாயகம் என்பது இரண்டு தலைமுறைகளுக்கு என்னவென்றே தெரியாமல் போனது கவலையான விஷயம்.) இன்னும் தமிழ் இனம், தமிழ் நிலம் என்று குதித்துக் கொண்டிருந்தால் ஒரு வேலையும் உருப்படாது. சிங்கள இன மக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தான் அறிவுடமை.
சரி அப்படி நடக்கும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் முன்னாள் தமிழ்த்தலைவர்கள் போல் வட கிழக்கு சந்து பொந்துகளில் மேடை போட்டு நேரத்தை வீணடிப்பது முட்டாள்த்தனம். இன்றுள்ள தமிழ் தலைவர்கள் நன்றாக சிங்களம் பேசவாவது கற்றுக்கொண்டு தென்னிலங்கை ஊர்களில் சக சிங்கள தோழர்களுடன், அங்கே மேடைகள் போட்டு, நம் பிரச்னைகளை சாதாரண மக்களுக்கு நேர்மையுடன் விளக்கினால், நிச்சயமாக அவர்கள் புரிந்துகொள்வார்கள். பேரினவாத சக்திகளை ஒடுக்க இது தான் ஒரே வழி. சிங்கத்தை அதன் கோட்டையிலே தான் சந்திக்க வேண்டும். (அடிச்சிப்பிடித்துவிடலாம என்று முழங்கியவர்கள் கதை நந்திக்கடலோடு முடிந்துவிட்டது.) முயல்குட்டிகளுக்கு புரிகிறதா?
rajen
ஜூன்16, 2009 at 9:51 பிப
It is very important to our people and very clear message for our community. please continue thanks.