RSS

கலைஞர் துரோகமிழைத்தாரா ?

03 ஜூன்

தமிழினத் தலைவனாக அறியப்படும் கலைஞர் துரோகமிழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களில் ஒரு சாரார் (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) குற்றஞ்சாட்டுகின்றனர்.

இன்னொரு சாரார் கருத்தே கூறாமல் இருக்கின்றனர்.

அப்படியானால், இதில் ஏற்கக்கூடியதும் மறுக்கப்பட வேண்டியதும் என்ன? அவர் உண்மையில் துரோகமிழைத்து விட்டாரா? 

தமிழ் மொழிக்கே ஒரு வாழும் அடையாளமாக ஒரு காலத்தில் அறியப்பட்ட கலைஞர் தமிழினத்தின் தலைவர் என்று அறியப்படுவதிலும் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் எனும் நதியில் இருக்கும் போது எதிரிகளாகிப் போவதும், அதில் ஒருவரை ஒருவர் குறை காண்பதும், குற்றங்களைக் காண்பதும் அவற்றை வைத்துப் பிரச்சாரம் செய்வதுமென்ற நுணுக்கம் இருப்பதனால் கலைஞர் எனும் மனிதரின் மறைக்கப்பட முடியாத சில உண்மைகளை அவ்வப்போது எதிர்க்கட்சிகளாவது வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

அதேவேளை பழுத்த அரசியல் வாதியான கலைஞரின் அரசியல் சூற்சுமங்கள், அதன் ஆளுமை, கையாளும் திறமை என்பவற்றை தூக்கியெறிந்து விட்டு வெற்றிடையில் அவரை ஒருமைப்படுத்தி தமிழர் எனும் தீவிர வாதத்தில் வைத்தும் ஒரு சிலரால் அவர் அளவிடப்படுகிறார்.

இந்த அடிப்படையில் ஒரு சாரார் கலைஞரைத் துரோகமிழைத்து விட்டார் என்றும் இன்னொரு சாரார் இது தம் எதிரிக்கும் அல்லது தாம் விரும்பாத ஒரு பயங்கரவாத சக்திக்கும் அவருக்குமிடையிலான கருத்து முரண்பாடு என்கிற அளவில் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

இவர்கள் பக்கமும் நியாயமிருக்கிறது, ஏனெனில் புலி ஆதரவாளர்களால் வகைப்படுத்தப்படும் தமிழர்கள் எனும் வரையறைக்குள் இவர்கள் வருவதில்லை எனவே அவர்கள் புலிகளால் பிரச்சாரப்படுத்தப்படும் இந்த தமிழர் விரோதத்தில் கருத்துக்கூறவும் எதுவும் இல்லை.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது கலைஞரை இப்படியான விடயங்களில் சம்பந்தப்படுத்தி அவரை இழுக்குக்குள்ளாக்குவது தேவையற்ற விடயம் எனும் முடிவையும் ஒரு சிலர் எடுக்கலாம்.

ஆனாலும், கலைஞர் கருணாநிதி எனும் மனிதர் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பல கோடி மக்களை நிர்வகிக்கும் ஒரு மாநில அரசின் “முதல்வர்” எனும் நிலையில் வைத்துப் பார்க்கப் படும் போது அவர் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களுக்குள் வருவது தடுக்கப்பட முடியாதது.

இன்றைய தேதியில் இந்த விடயத்தை கலைஞரை விட நன்கறிந்த ஒருவர் இருக்கவே முடியாது.

இதை நன்கறிந்த கலைஞரால் இந்த அத்தனை விடயங்களையும் சம அளவில் கையாண்டு, தொடர்ந்தும் தன் அரசியல் “இருப்பை” நிலைக்கச்செய்ய முடிகிறது என்றால் அதற்கான மிகப் பிரதானமாக காரணம் அவரிடம் இருக்கும் “சிந்தனைத் தெளிவு” என்று சொன்னாலும் மிகையில்லை.

இந்த “சிந்தனைத் தெளிவை” பல சாரார் பல விதத்தில் விமர்சிக்கலாம்.

அவர் குடும்ப நலன் சார்ந்த சிந்தனைத் தெளிவு, பதவி சார்ந்த சிந்தனைத் தெளிவு, மற்றும் மத்திய அரசு சார்ந்த சிநதனைத் தெளிவு என்று பல கோணத்தில் இந்தத் தலைப்பை வைத்து அவரை விமர்சனத்துக்குள்ளாக்கலாம், அதை வைத்து விளையாடலாம்.

இவையனைத்தும் தனித்தனியாகப் பிரித்து மேயப்பட்டாலும் அவற்றின் நியாய, அநியாயங்களை அறிவதற்குப் பல காலங்கள் விவாதிக்க நேரிடும்.

எனவே, நாம் கூறும் சிந்தனைத் தெளிவு எதன் அடிப்படையில் என்பதை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறோம்.

அது, அரசியல் சார்ந்த சிந்தனைத் தெளிவாகும்.

கலைஞரைப் பொறுத்தவரை அவருக்கிருப்பது இரண்டு வகை முகங்கள்.

1. ஒரு கலைஞன், படைப்பாளி, எழுத்தாளன், தமிழறிஞர் என்கிற முகம்.

2. அரசியல்வாதி அதுவும் பழுத்த அரசியல் அனுபவமுள்ள கட்சித் தலைவன் என்கிற இன்னொரு முகம்.

இதனடிப்படையில் தன் கலைத்துறைத் தொடர்புகளை மிகக் கச்சிதமாக கலைத்துறை சார்ந்ததாகவும், அரசியல் நிலையை மிகத் தெளிவாக அரசியல் நீரோட்டத்திலும் வைத்துப் பிரித்தாள்வது கலைஞரின் மிகப்பெரிய பலமாகும்.

ஒரு கலைத்துறை சார்ந்த கூட்டமாக இருந்தாலும், தான் பேசும் அரசியலை கலை நலன் சார்ந்த அரசியலாகப் பேசி, தான் சொல்ல வரும் விடயத்தை நாசுக்காகக் கசிய விடும் கலைஞரின் நுணுக்கம் கடந்த காலங்களில் எப்போதுமே அவருக்குப் பலமாக இருந்த விடயமாகும்.

அதேவேளை அரசியல் சார்ந்த இடங்களில் அரசியலை மையப்படுத்தி அவர் மக்கள் நலனை அதில் கலக்கும் விதம் எப்போதும் வாத விவாதங்களுக்குட்படுத்தப்பட்டாலும், முழுக்க முழுக்க அவரது அரசியல் நிலைப்பாட்டின் எதிரொலியாகவும் மக்கள் அக்கறை என்கிற ஒரு போர்வைக்குள்ளான ஆனால் தெளிவுள்ள அரசியல் பிரச்சாரமுமாகவே இருக்கும்.

ஆட்சிக் காலத்தில் இவ்வாறு நடந்தேறும் விடயங்களை வைத்து அவரும் அவரது எதிர்க்கட்சிகளும் ஆடும் “சடுகுடு” ஆட்டத்தில் சாதாரண மக்கள் சில நேரங்களில் இவை தமக்குத் தொலைவான விடயங்கள் என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

அதைச் சாதகமாகப் பயன்படுத்தத் தெரிந்த கலைஞரின் அரசியல் அனுபவம் எப்போதுமே தன் அரசியல் பிரச்சாரத்தை அடிமட்டத் தொண்டர்களையும் மக்களையும் “முடிவுக்கு வர முடியாத” நிலையில் வைத்து அவர் சொன்னால் ஒருவேளை சரியாகத்தான் இருக்கும் என்று விட்டுவிடும் போக்கை வலியுறுத்தும்.

இது ஒவ்வொரு காலத்திலும் கலைஞர் என்ற இந்தப் பழுத்த அரசியல் வாதி புயலாய்க் கிளம்பிய ஒவ்வொரு பிரச்சினைகளையும் சமாளித்த விதத்தினை ஆழமாக ஆராயும் போது வரக்கூடிய மிகச் சுருக்கமான விடையாகும்.

எனினும், அந்த விடையை வைத்துக்கொண்டு தான் வெளியிலிருந்து இதற்கான விமர்சனங்கள் ஆரம்பிக்கின்றன.

அந்த அடிப்படையில், கலைஞரின் உலக மரியாதையில் அண்மையில் வந்த மிகப் பெரும் “புயல்” விடுதலைப் புலிகளின் அழிவாக இருந்தது.

ஆனால் அந்த விடயத்தை உப்பு சப்பே இல்லாமல் கை கழுவி விட்ட கலைஞரின் அரசியல் நுணுக்கம் ஒருவகையில் அவரது தொண்டர்களுக்கு பெருமையானதாக இருந்தாலும் மறு பக்கத்தில் வேறு ஒரு வடிவத்தில் இது விமர்சிக்கப்பட்டு, தாம் இழைத்த தவறுகளை அவரைக் குற்றஞ்சாட்டாவிட்டாலும் அமைதியாக அல்லது அரசியலுக்காக ஒதுங்கியிருந்தவர்களும் சேர்ந்ததே அறிந்து கொள்ளலும் அவசியமாகும்.

ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை கலைஞர் கருணாநிதி பொறுப்புடன் செயற்படவில்லை என்பது புலி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டாகும்.

“இன உணர்வு” எனும் அளவுகோலில் வைத்து இந்த விடயத்தைப் பார்க்கும் தமிழக மக்களிடமும் நிச்சயமாக இது தொடர்பிலான ஒரு ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கும், ஒரு சிலர் வெளியில் வந்து பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டவும் செய்திருக்கின்றனர்.

ஆனாலும் கலைஞர் இந்த விடயத்தை முழுமையாக “அரசியல்” நிலையிலிருந்து மட்டுமே கையாண்டார், “இன உணர்வை” அரசியல் கலப்போடு வித்திட்டதால் மீண்டும் தொண்டர்களின் “முடிவற்ற” நிலையை உருவாக்கி அதன் பயனால் மிகச்சவாலாக இருந்த கால கட்டத்தில், அதுவும் அம்மா குஸ்தியடித்து “ஈழத்தை அமைப்பேன், இராணுவத்தை அனுப்புவேன்” என்றெல்லாம் அறைகூவியும் மாபெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.

அவரது தேர்தல் வெற்றியானது, முழு ஈழ உணர்வுக்கே விழுந்த சாட்டையடியாகக் கூட விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனாலும், தேர்தல் காலத்தில் கலைஞரின் அரசியல் நுணுக்கத்திற்கிணங்க “ஈழ மக்கள் ஆதரவும்” , “புலி இயக்கப் பிரதிநிதித்துவமும்” மிகக் கவனமாக மக்களால் பிரித்தாளப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

“இன உணர்வு” ள்ள மக்களாக இலங்கையில் அல்லல் படும் மக்களுக்காகத் தம் உணர்வை,தம்மாலான உதவிகளை வழங்கத் துடி துடித்தாலும், அவர்களை இயக்கும் சக்தியாக இருந்த “புலிகள்” எனும் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களால் தான் இந்த நிலையே வந்தது எனும் நிலைப்பாட்டை வாக்காளப் பெருமக்களும் எடுத்துக்கொண்டார்கள்.

இதைத்தான் கலைஞரும் விரும்பினார்.

கலைஞரைப் பொறுத்தவரை இலங்கையின் இனப்பிரச்சினை என்பது இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு ஆயுதக்கும்பலுக்கும் இன்னொரு மக்கள் அரசாங்கத்துக்குமான பிரச்சினை என்றாகிவிட்டது.

அந்த நிலையை அவர் எடுக்கும் வரை அதன் பின்ணனியில் நடந்த பல்வேறு சம்பவங்களை, அதாவது அவரது அன்புக்குப் பாத்திரமான சில இலங்கைத் தமிழர் தலைவர்களைக் கொன்று குவித்த பாவம் தவிரவும், பிரபாகரன் என்கிற தனி மனிதனைத் தனக்கெதிரான ஒரு இனத் தலைவனாக அதுவும் தமிழக அரசியல் வாதிகளே சித்தரிக்க முனைந்ததும் இன்னொரு காரணமாகிறது.

எப்படி கலைஞரின் அரசியல் நிலைக்கு எதிரிகள் இருக்கிறார்களோ அதே போன்று பிரபாகரனின் சித்தார்ந்தத்தைப் பிடிக்காத எதிர்க்கொள்கை கொண்டோரும் இருக்கவே செய்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.

எனவே, கலைஞரைப்பொறுத்தவரை பிரபாகரன் எனும் அரசியல் வாதியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே அவரது நிலையாக மாறியது.

பிரபாகரனும் அரசியல் வாதி என்பதைக் கடந்த கால இந்திய நடவடிக்கைகள் மூலமும், அவர்களது எதோச்சாதிகார ஆக்கிரமிப்பு மூலமும் கலைஞரும் அறிந்து கொண்ட விடயம் என்பதால், பிரபாகரனை அரசியல் வேறுபாட்டின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார்.

அதற்குப் பக்க பலமாக, எப்போதுமே ஈழத்தமிழர் பற்றி கலைஞர் பேசி வந்தாலும், அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்று அவர் குரல் கொடுத்து வந்தாலும், தப்பித் தவறியும் விடுதலைப் புலிகள் எனும் இயக்கத்தின் சித்தார்ந்தத்திற்குத் துணை போவதை அவர் விரும்பவில்லை.

தமிழகத்தில் அனேகமான பிரச்சாரங்கள் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனை ஒரு போராளியாக அல்லது விடுதலை வீரனாகக் காட்டிக்கொள்ளவே எத்தனித்து வந்ததால், பிரபாகரன் பற்றி நேரடியாகக் கேட்கப்பட்ட தொலைக்காட்சி செவ்வியொன்றிலும் பிரபாகரன் நல்லவர் தான் ஆனால் அவரது இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற தொனியில் நாசுக்காக தனது அரசியல் வேறுபாட்டையும், ஜனநாயக ரீதியில் பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஒரு ஈழம் உருவாகுமா என்று கேட்கப்பட்ட போது “இல்லை, இங்கே (தனிக்கட்சி) சர்வாதிகாரம் கொண்ட ஆட்சி தான் நடைபெறும்” என்று பிரபாகரன் சொன்னதாகவும் கூறி தான் வேறுபட்ட அரசியல் நிலையில் நின்று பார்ப்பது எவ்வளவு நியாயமானது என்கிற தொனியிலும் தன் கருத்தை முன்வைத்திருந்தார்.

இவற்றின் அடிப்படையில் கலைஞருக்கு ஈழ விவாகாரத்தில் இருப்பது உண்மையில் ஒரு அரசியல் வேறுபாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனாலும் அந்த அரசியல் வேறுபாட்டிற்காக வகை தொகையில்லாமல் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் கேள்வி இங்கே முக்கியம் பெறும்.

அனுமதிக்க முடியாது எனும் பக்கத்தில் இருந்து வாதிடும் போது, மீண்டும் கலைஞரின் அரசியல் வேறுபாடு தலைதூக்கி நிற்கும். அதாவது மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டிய கட்டாயக் கடமையுள்ள புலிகள் அவர்களை வெறியேற அனுமதிக்காமல் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், அதைக் கொண்டு குறுக்கு வழியில் தம் இருப்பை நியாயப்படுத்த முனைகிறார்கள், எனவே இதற்கு எந்த வழியில் குரல் கொடுப்பது எனும் திணறல் இருக்கும் அதே வேளை, குறைந்தளவு மக்கள் இழப்போடு புலிகளை அழித்தொழிப்போம் அதற்கு உதவுங்கள் எனும் இலங்கை அரசின் கோரிக்கையும், தோள் கொடுத்தே ஆவது என்று அவரும் பங்கு வகிக்கும் மத்திய அரசின் முடிவும் சேர்ந்து அவரை எப்போதும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கும் பேர்வழியாக மாற்றியது.

அனுமதிக்கலாம் என்று கலைஞர் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அரசியல் காரணங்கள் மேவி நிற்பதால் நன்றி சொல்வதற்கு மட்டும் முன் வரும் நடேசன் போன்றவர்களை நம்பி ஒரு தீர்வைக் கூட முன்வைக்க முடியாத நிலை அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும்.

அதாவது, பிரபாகரனின் தலைமையும் வேறு ஏதாவது சக்தியுள்ள மேற்குலக நாட்டின் உதவியுடன் உயிர்தப்பிக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்ததனால் அருகில் இருக்கும் ஒரு தமிழர் தலைவரை நெருங்காமலே விட்டுவந்தது.

இதற்கான முழுக்காரணமும் புலிகளின் தாம்தான் ஏக பிரதிநிதிகள் எனும் வீராப்பான அரசியலாகும்.

எனவே இந்த அரசியலில் யார் வெல்வார் என்கிற போட்டிதான் இருந்ததே தவிர மக்கள் உணர்வு பிரபாகரனுக்கும் இருக்கவில்லை, கலைஞருக்கும் இருக்கவி்ல்லை.

மேற்குலகின் உதவியோடு பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்து, அவர்களைக் கேடயமாகப்பாவித்து, அந்த மனித அவலத்தைக் காரணங்காட்டியாவது தப்பிக்கொள்ளலாம் என்று இறுதி நிமிடம் வரை பிரபாகரனின் வங்குரோத்து அரசியல் திட்டமிட்ட அதே வேளையில், இந்தியாவின் முழுப்பங்களிப்புடன் மரணத்தை அருகில் காண்பித்து, ஏற்கனவே தம் சக்திக்கு மேலாக அடக்கி வைத்திருக்கும் மனித எண்ணிக்கையை இலகுவாக உடைத்தெறியலாம் என்ற இலங்கை அரசின் செயற்திட்டமும் ஒரு சேரப் பார்க்கும் போது, இந்தியாவை மீறி மேற்குலகம் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமாயின் அது இலங்கையின் உதவியோடு தான் முடியும்.

ஆனால், இலங்கையோ இந்தியாவோடு தோளோடு தோள் நிற்கிறது, எனவே வங்குரோத்து அரசியலுக்குப் பின்னால் சென்று தன் பெயரைக் கெடுத்துக்கொள்வதை விட வெற்றிபெறப்போகும் கூட்டணியில் இருந்து நீலிக் கண்ணீராவது வடிப்பது மேல் என்று மீண்டும் தன் அரசியல் வேறுபாடையை அவர் கையிலெடுத்திருப்பார்.

இதில் எந்த நிலையில் கலைஞர் இருந்திருந்தாலும், சாதாரண மக்களையும் உலுக்கும் ஒரு உண்மை இருக்கிறது.

அதுதான் போரின் அனைத்துக் கட்டங்களிலும் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்பு.

அப்பாவி மக்களின் உயிரிழப்பைப் பற்றிப் பேசும் போது, அதில் பெரும்பான பங்கை புலியின் தலையில் போட்டுத் தப்பித்துக்கொள்ள அனைவருக்கும் கதவு திறந்தே இருக்கிறது.

எனினும், உண்மையில் அவர்கள் கொல்லப்பட்டதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கலைஞரையும் சார்ந்தே இருந்தது.

புலிகளும், புலிகள் சார்பான ஊடகங்களும் அல்லது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தித் தம்மைப் பிரபலப் படுத்திக்கொள்ள விளையும் பல பத்திரிகைகளும் ஒரேயடியாக 3000,5000,10000 மற்றும் 20000 என்று காட்டும் கணக்கு இறுதியில் தோல்வியுற்றுப் போவதால், இடையில் உண்மையிலேயே இழக்கப்பட்ட 300,400,500 என்ற உண்மைக் கணக்கு உலகின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்டு விட்டது.

மிக அவதானமாகத் திட்டமிடப்பட்ட இந்தப் பிரச்சார நுணுக்கத்தைப் புலிகளுக்கே அறிமுகப்படுத்தியது இந்திய,இலங்கை உளவுத்துறைகளாக இருக்கும் எனும் சந்தேகம் வலுக்கும் வகையில் தற்போதும் புலியாதரவாளர்கள் வழி நடத்தப்படுகிறார்கள்.

எப்படித்தான் பார்த்தாலும் கடந்த தடவைகள் போலன்றி இந்த யுத்தத்தில் புலிகளை விட முந்திக்கொண்டு அரசுக்கெதிரான பரப்புரைகளை அரசாங்கமே செய்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதில் சிக்கிக்கொண்ட புலி ஆதரவாளர்கள் மீள்வதற்கு இன்னும் பல காலங்கள் எடுக்கலாம்.

எனவே, இப்படியான அனைத்துத் தரப்பு நிலைகளையும் நன்கு அவதானித்துத் திட்டமிட்ட கலைஞர் மெளனத்தைத் தன் நிலையாகவும், அஹிம்சை ஆயுதத்தை அவ்வப்போது கையில் எடுத்துக்கொண்டு “நானும் சபையில் இருக்கிறேன்” எனும் ரீதியாக சில பம்மாத்துகளும் காட்டி வந்தார்.

இவையனைத்தையும் அடிப்படையில் தன் அரசியல் சாதக,பாதக விடயங்களை மட்டும் வைத்தே கலைஞர் நடத்தி வந்தார் என்பதற்கு இன்னும் ஒரு கசப்பான உதாரணம் இருக்கிறது.

நமது இனம் அழிகிறதே என்கிற உணர்வை எதிரிக்குச் சொல்லும் தேவைதான் அவருக்கு இருக்கவில்லை என்றிருந்தாலும் ஆகக்குறைந்தது பிரபாகரனுக்காவது ஒரு கோரிக்கையாக முன்வைத்திருக்கலாம்.

“தம்பி பிரபாகரா நீ மக்களை போக விடு” எப்படியாவது இதில் நான் தலையிட்டு ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தித் தருகிறேன் என்றாவது கேட்டிருக்கலாம்.

அல்லது அவர் காட்டிய மூன்று மணி நேர “உண்ணாவிரத” சினிமாவில் ஒரு சப் டைட்டிலாக “பிரபாகரன் மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும்” என்றாவது கேட்டிருக்கலாம்.

கலைஞர் இதில் எதையும் செய்ய வில்லை, மாறாக தன் அரசியல் இருப்பைக் காப்பாற்றிக்கொண்டு, மக்கள் முன் நடிப்பதை மட்டும் மிகச் சரியாக செய்து முடித்தார்.

இப்படிப் பார்க்கும் போது, கலைஞர் நிச்சயமாகத் தன் பொறுப்பில் இருந்து தவறிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

ஆனால், வழக்கம் போல புலி ஆதரவாளர்களின் “கலைஞரின் துரோகம்” என்பது தம் தலைமையோடு மட்டுப்படுத்தப்படுவதால் புலி எதிர்ப்பாளர்கள், நடு நிலையாளர்கள் இதில் மெளனம் சாதிக்கிறார்கள்.

“மக்கள் உணர்வின்” உண்மை நிலை எப்படி மாறும் எனும் ஒரு சந்தேகம் நிகழ்ந்ததால் தேர்தல் காலத்தில் பிரபாகரனைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று கலைஞர் நினைத்திருக்கலாம், ஆனால் அதன் பின் அவர் இனி இப்போதும் இந்தக் கேள்வியைக் கேட்கவும் முடியாது, இழந்த உயிர்களைத் திரும்பப் பெறவும் முடியாது என்பதை ஊகிக்கக்கூடிய அறிவிருந்த கலைஞர் இதையும் கேட்காமல் விட்டது இனத்துக்குச் செய்த துரோகமே.

அதன் பின், அதை மூடி மறைக்க அது ஈழத்தின் உள்வீட்டுப் பிரச்சினை என்று பூசி மெழுகிவிடலாம் என்பதில் திடமாக இருந்த கலைஞர் தமிழினத்தின் வலுவான ஒரு குரலாக இருந்துகொண்டு வழிநடத்தாமல் விட்ட அளவில் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு துரோகமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும், கலைஞர் சொல்லியும் அவர்கள் எந்தளவு தூரம் கேட்டிருப்பார்கள் எனும் வாதத்தையும் புறந்தள்ள முடியாது.

கலைஞரை விட, மேற்குலகின் தலையீட்டிலேயே அதிக கவனம் செலுத்திக்கொண்டிருந்த புலிகள், திடீரெனத் தமிழகத்தில் கிளம்பிய தமிழீழ ஆதரவு எழுச்சியைக் கண்டு கொஞ்சம் அசைய முயற்சி செய்தாலும், அதை வலுவாகப்பற்றிக் கொண்டு கலைஞரின் உதவியை நாடவில்லை.

தன்னை நம்பி நாடாத அவர்களை அரசியல் ரீதியாக நம்பவோ, நண்பனாக்கவோ கலைஞரும் விரும்பவி்ல்லை.

இறுதியில் ஏறத்தாழ இது ஒரு நீயா நானா எனும் போட்டியாகவே முடிந்தது.

தமிழகத்தில் தேர்தல் காலம், அதிலும் கலைஞர் ஆட்சி பற்றிய ஏராளமான விமர்சனங்கள், அம்மையார் ஆட்சிக்கு வரலாம் என்ற எதிர்வு கூறல்களும் இருந்ததால், அன்று எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து கலைஞரைப் புறந்தள்ளிய புலிகள் இன்று கலைஞரை எதிர்ப்பவர்களைத் தேர்ந்தெடுத்து அதே பணியை செய்தார்கள்.

எனவே, தன்னை நம்பித் தன்னிடம் அவர்கள் வரவில்லை என்பதற்காக கலைஞரும் அவர்களைக் கைவிட்டார்.

ஆனாலும், கலைஞர் அப்பாவி மக்களையும் சேர்த்துத்தான் கை விட்டார்.

அதுவும் பிரபாகரனின் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மெளனம் எனும் ஆயுதத்தை எடுத்து, சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுக்க அவர் தவறிவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கடந்த காலங்கள் அவ்வாறு அமைந்திருந்தாலும் இனி வரும் காலத்திலாவது கலைஞர் தன் கடமையைச் செய்ய வேண்டும்.

வெவ்வேறு அரசியல் கலாச்சாரங்களில் நீங்கள் இருந்தாலும் வாழ்வு முறைக் கலாச்சார ரீதியில் இலங்கைத் தமிழர்கள் உங்களிலிருந்து பிரித்துப் பார்க்கப் பட வேண்டியவர்கள் இல்லை.

அதிலும் இது ஒரு இக்கட்டான கட்டம்.

இலங்கை மக்கள் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்வுகளைக் களைந்து “உண்மையாக” நீங்கள் நடந்து கொள்ளாது விடுவது நீங்களே தாங்கும் தமிழித் தலைமைப் பட்டத்திற்கு உகந்ததல்ல.

யார் சொல்லியுமா நீங்கள் கேட்க வேண்டும்? ஆனாலும் நீங்கள் கடந்த காலத்தில் அரசியலுக்காக மக்களைப் புறந்தள்ளியது வரலாற்றில் மறைக்க முடியாத துரோகமே.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

2 responses to “கலைஞர் துரோகமிழைத்தாரா ?

 1. இரா.சுகுமாரன்

  ஜூன்3, 2009 at 6:56 பிப

  //தமிழினத் தலைவனாக அறியப்படும் கலைஞர் துரோகமிழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களில் ஒரு சாரார் (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) குற்றஞ்சாட்டுகின்றனர்.

  இன்னொரு சாரார் கருத்தே கூறாமல் இருக்கின்றனர்.//

  இன்னொரு சாரார் கருத்து கூறவில்லை!!
  ஏனெனில் உண்மையை ஏன் நாமும் சொல்ல வேண்டும் என்று விட்டிருப்பார்கள்.

  கலைஞர் துரோகமிழைத்தாரா ?
  என்ற கேள்வியே தவறு ஏனெனில் அவர் மிகப்பெரிய துரோகிதான் கேள்வி போட்டு அந்த துரோகிக்கு துணை போகாதீர்கள்

   
 2. uma

  ஜூன்18, 2009 at 3:36 பிப

  He is not real tamilan.He is the betrayar of tamilpeople.
  wast of time.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: