RSS

விஜயகாந்த் Vs வடிவேலு

04 மார்ச்

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது, யாரோடு யார் கூட்டணி சேர்வார் எனும் கணக்கெடுப்புகளும் ஊகங்களும் “பண்ட” மாற்றங்களும் கூட வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்க, எப்படியாவது விஜயகாந்தை ஒரு கோமாளியாக்கியே தீர வேண்டும் என்பதிலும் பிரதான கட்சிகள் முழு மூச்சுடன், திரை மறைவில் செயற்படுகின்றன.

விஜயகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பித்திருக்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், திடீரென ஒரு தேர்தலில் அதுவும் ஈழத்தமிழர்களின் வாக்கெடுப்பில் நடந்திருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏன் என்றே கேள்வி கேட்காமல் விஜயகாந்தை “விரும்பி” வெற்றி பெறச்செய்திருப்பார்கள்.

அந்த அளவுக்கு அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க முன்பே ஈழ மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு மனிதனாக விஜயகாந்த் இருந்தமைக்கு மிகப்பிரதானமான காரணம் திரை மறைவில் அவர் செய்து வந்த நற்காரியங்களும், ஈழப்போராட்டத்தின் உணர்ச்சி மிக்க கால கட்டங்களில் மேடை போட்டு இல்லையாகிடினும் உணர்வுடனும், மனிதநேயத்துடன் அவ்வப்போது “குரல்” கொடுத்திருந்தார் விஜயகாந்த்.

எனினும், அரசியல் என்று வந்தவுடன் மேலோங்கி நிற்கும் பிரதான கட்சிகளின் ஈழ உணர்வு நாடகத்துக்கு முன்னால் எடு பட முடியாத நிலையில் அவர் தன் “குரலை” அடக்கியே வைத்துக்கொண்ட பரிதாபம் பிரபாகராயிச முடிவு நெருங்கிக்கொண்டிருந்த கால கட்டங்களில் காணக்கிடைத்த பரிதாபம்.

இதையும் விட பரிதாபத்தினை ஏற்கனவே “புலிகள்” அதாவது தென்னிந்திய அரசியலில் “தமிழர்கள்” என்று தனியடையாளம் வழங்கப்பட்ட மாமனிதர்கள் விஜயகாந்திற்கு பிரிட்டனில் வழங்கியிருந்தார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தபோது அவரால் மேற்கொள்ளப்பட்ட உலக சுற்றுப் பயணத்தில் பிரிட்டனில் கிடைத்தது போன்ற “அடியும் – இடியும் ” அவருக்கு எங்குமே கிடைத்திருக்காது, அந்த அளவு அவரை நம்பி பணத்தைப் போட்டவர்களையும் நட்டமடைய வைத்து, அவரையும் நட்டப்படுத்தி, வந்திருந்த மிக முக்கிய நடிகைகள் சிலரை விபச்சாரிகளாகவும் ஆக்க முனைந்து அழகு பார்த்தார்கள் மாமாப் புலிகள்.

இத்தனைக்குப் பின் சென்றும் கூட தன் முன்னைய பணிகளை செய்து வந்தவரும், திரை மறைவில் கிள்ளியாவது கொடுத்து மக்கள் பணி செய்தவரும், பின் சரியான தருணத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவருமாக இருந்த விஜயகாந்தின் சரிவும் செறிவும் என்பது வேடிக்கை கலந்த வினோதமாக மாறி வருகிறது.

இதற்குள் வடிவேலுவையும் இழுத்துப்போட்டு விஜயகாந்தை ஒரு கோமாளியாக்க முயற்சிக்கிறது தமிழகத்தின் “மூத்த” அரசியல்.

தன் பாட்டில் தன்னை வருத்தியாவது பிறரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் வடிவேலுவையும் அவர் கலைத்துறையையும் சேர்த்தே சாகடிக்க முயலும் தீவிரம் பெரிய கட்சி அரசியலின் பின்னணியிலிருந்து வருவதை யாரும் மறுக்கப்போவதில்லை.

கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னைக் கூறியதோடு நிற்காமல் தற்போது கறுப்புக்கண்ணாடியும் அணிந்து வலம் வரும் அ.தி.மு.க நண்பனாகிக்கொண்டிருக்கும் விஜயகாந்தை, எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் கறுப்பு எம்.ஜி.ஆராக ஏற்றுக்கொள்கிறார்களா என்று “வெடியை” வடிவேலு மூலம் வீச வைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்.

அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது, இன்னொரு எம்.ஜி.ஆர் என்பது ஒரு பிரதி வடிவமே தவிர அதன் மூலமாக இருக்க முடியாது. எனினும், விஜயகாந்த் இன்று தன் மேலிருக்கும் நம்பிக்கையை இழந்து, ஏற்கனவே எம்.ஜி.ஆர் தயவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒரு பங்காளியாகும் தேவை வந்திருப்பது ஏன் என்று பார்க்குமிடத்து, மீண்டும் பிரதான கட்சிகளிடம் சிறு கட்சிகள் தம்மை அடகு வைக்கும் நிலையைப் பெருந்தலைகள் தக்க வைத்துக்கொள்கின்றமை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.

இரு கட்சி அரசியலின் நடுவே தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பங்கீட்டு அளவுகோளுடன் சிறு கட்சிகள் திருப்திப்பட்டுக்கொள்வதுவே அக்கட்சிகள் இரு பெரும் கட்சிகளை மிஞ்சி வளர முடிவதில்லையா எனும் கேள்வி ஒரு புறமிருக்க, தமது கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஆகக்குறைந்தது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறி தலையிடி கொடுப்பதன் மூலமாவது தம்மைப் பலப்படுத்திக்கொள்ளலாம் எனும் கனவு கண்ட ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் வரிசையில் விஜயகாந்தின் கட்சியும் இணைந்து கொள்கிறதா எனும் பக்கமும் கேள்வியோடு காத்திருக்கிறது.

கலைஞர், ஜெயலலிதா எனும் இரு பெரும் “தலைகள்” இருக்கும் வரை அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பதும் கூட தனக்குத் தேவையில்லாத விடயமென்று ஒதுங்கியிருக்கும், விஜயகாந்தை விட “மாஸ்” அதிகமாகவிருக்கும் ரஜினி போன்றவர்களையும் தாண்டிய விஜயகாந்தின் வருகையானது ஒரு மாபெரும் எதிர்பார்ப்பையும், அலையையும் உருவாக்கியிருந்தாலும், பின்நாளில் “தோல்விகள்” மூலம் தோய்வடைந்து போன நிலையில் இன்று சரணாகதியாகுவதில் மும்முரமாக இருப்பது வேதனைக்குரியது.

கலைஞரை விடவும், ஜெயலலிதாவை விடவும் நல்லாட்சி வழங்கும் தகுதி விஜயகாந்துக்கு இருக்கும் என்பதற்காகவில்லையாகினும், ஆகக்குறைந்தது புதிய சிந்தனைகளுக்கும் அரசியல் புத்துணர்வுக்கும் தமிழகத்தில் விஜயகாந்த மூலமாவது விதையிடப்படலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்துக்குரிய விடயமாகும்.

இந்த நிலையில், தம் கையிலிருக்கும் “பெரும்” ஊடக பலம், மற்றும் பண பலம் மூலம் விஜயகாந்தை கோமாளியாக்குவது என்பது தி.மு.க தரப்பினருக்கு மிக இலகுவான விடயமாகும். அதில் வடிவேலு எனும் மக்கள் அபிமானமிக்க கலைஞனைப் பழிகொடுப்பது தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பாகவே அமையும்.

இன்றைய தேதியில், தமிழகத்தில் கதாநாயகர்களக்காக படங்கள் ஓடினாலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க,கனேடிய பிரதேசங்களில் வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுக்காக அனேகம் படங்கள் ஆகக்குறைந்தது திருட்டி டிவிடியிலாவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் திரையிட்டு நட்டப்படுவதை விட திருட்டு டிவிடிக்களை தாமே தயாரித்து சந்தையில் விட்டு இலாபம் பார்ப்பதும் அதே விநியோகஸ்தர் தரப்புதான் என்பது மகா “சிரிப்பு”.

எது எவ்வாறாயினும், தமிழகத்தின் நாளைய தலைமுறை அரசியல் எதிர்பார்ப்புகள் மீண்டும் சுக்கு நூறாகி, பெருங்கட்சிகளின் காலடியில் அடகுவைப்பதன் மூலம் ஏற்பட இருந்த பெரும் மாற்றங்கள் பின்னடைவையே சந்தித்திருக்கின்றன என்பது வெளிச்சம் போட்டு அரங்கேற்றப்படுகிறது.

தோல்வியில் துவண்டு போயிருக்கும் தம் தொண்டர்களுக்கு “ஒன்றுக்கு” மேற்பட்ட ஆசனங்களில் அமர்ந்து வெற்றி ஆறுதலை வழங்குவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கொள்கை வகுப்பாளர்கள் நினைத்திருக்கலாம், எது எப்படியோ எல்லோருமாக கூட்டு சேர்ந்து, மீண்டும் இரு பெரும் கட்சிகளின் காலடியில் தமிழக அரசியலை அடகு வைத்திருக்கிறார்கள்.

இப்படி தெரிந்து கொண்டே எல்லாவற்றையும் செய்து விட்டு, பின் நாளில் இவர்கள் செய்யப்போகும் கண்துடைப்புப் போராட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், போஸ்டர்கள், உண்ணாவிரதங்கள், அறிக்கைகள், எல்லாம் ஓய்ந்த பின்னர் மீண்டும் சும்மா சும்மா கையிலெடுக்கப்போகும் ஈழத் தமிழர் உரிமைகள் என்று தேர்தல் முடிந்த சில மாதங்களில் நடக்கப்போகும் வானவேடிக்கைகள், நகைச்சுவைகளை நாமும் பார்க்கத்தான் போகிறோம்.

இதையெல்லாம் நன்குணர்ந்தாவது தானும் தன் கலையும் என்று சிரிப்பு நடிகர்கள் தம் தொழிலைச் செய்தாலே புண்ணியமாய்ப் போகும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: