உலகுக்கெல்லாம் எச்சரிக்கை, சிங்களர்களுக்கு போர் அறைகூவல் என்று ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்கள் நிகழ்த்தி சிறைச்சாலை வரலாறு மூலம் அரசியலில் தத்தளிக்கும் சீமானுக்கே கொலை மிரட்டலாமே? நம்பவே முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கொள்கிறோம்.
வழக்கமாக இவர்தான் உலகுக்கெல்லாம் எச்சரிக்கை விடுவார், ஆனால் இவருக்கே எச்சரிக்கை அதுவும் கொலை மிரட்டல் என்று போலீஸ் கமிஷனரிடம் சென்றாராம் என்று செய்தியைப் பார்க்க நேர்ந்த போது நெஞ்செல்லாம் ஆடிப்போய் விட்டது.
சீமானுக்கு கொலை மிரட்டல், அதுவும் புதுச்சேரியிலிருந்து கடிதம், ராம் கோபால் எனப் பெயரிடப்பட்ட கடிதம், அதில் மாவீரன் ராஜபக்சாவை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை என்று அடுக்கிச் செல்லப்படும் விந்தைகளை கண்ணுற்ற போது பகவதர் காலத்து சினிமாக்களின் பாதிப்பிலிருந்து சீமான் இன்னும் விடுபடவில்லையோ எ னத் தோன்றுகிறது.
சரியோ பிழையோ இப்படியொரு கடிதம் சீமானுக்கு வந்திருந்தாலோ அல்லது கொலை மிரட்டல் சீமானுக்கு விடப்பட்டிருந்தாலோ அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஜனநாயகம்.
சீமானுக்கென்று ஒரு அரசியல் கலாச்சாரம் புதிதாக இல்லை, அவரிடம் புரட்சி என்ற ஒரு புண்ணாக்கும் இல்லை, முன்னாளில் திருமாவளவன் பற்றிக்கொண்டு திரிந்த அதே கயிற்றை அவர் விட்டுச்சென்ற பின் இவர் பற்றிக்கொண்டுள்ளார், மேலதிகமாக வேண்டுமானால் 30 வருடமாக மக்களை மந்தைகளாக்கி ஒட்டு மொத்தமாக அதே மக்களை பலி கொடுத்து பரலோகம் சென்றடைந்த பிரபாகரனின் அடுத்த வாரிசாக தன்னை இனம் காட்டிக்கொள்வது மாத்திரம் புத்தம் புதிய வரலாறாகக் கொள்ளலாம்.
இதில் வைக்கோக்கள்,நெடுமாறன்கள்,வீரபாண்டியன்கள், கஸ்பார்களின் பழைய கூட்டணிகளையெல்லாம் தகர்த்தெறிந்து முந்திக்கொண்ட காளானாக இவர் இருப்பதனால் தமிழகத்தில் காவல் துறை இவர் குறித்து சற்று விழிப்புடனேயே செயற்பட ஆரம்பித்தது. இருந்தாலும் மேடை கிடைத்தவுடன் துள்ளிப் பாய்ந்த இவரது வேகமும் பின்னர் அடங்கிப் போன விவேகத்தையும் நன்கறிந்து உணர்ந்து கொண்ட ஆரம்ப சகாக்களில் சிலர், குறிப்பாக அமீர் போன்றவர்கள் வெளியிலிருந்து ஆதரவு எனும் தொலைவிற்கு நகர்ந்து விட, கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் தமிழுணர்வைக் கொலையுணர்வாக்கி இறுதியில் காங்கிரசை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு அடிப்படைக் கொள்கையில் இணைந்து கொள்ள முடியாத அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து அரசியல் ஸ்டன்டை நிறைவேற்றிக்கொண்டார்.
எங்கே தேர்தல் நேரத்தில் தான் மாயமாக மறைந்துவிடுவேனோ அல்லது காணாமலே போய்விடுவேனோ என்கிற பயத்தினால் தான் இந்தக் கொலை மிரட்டல் நாடகங்களா அல்லது அவ்வாறு உண்மையிலேயே சீமானைக் கொல்ல ஒருவர் அதுவும் புதுச்சேரியில் திட்டமிருக்கிறாரா என்பது காலம் நமக்கு அறியத்தரவேண்டிய அவிழ்க்க முடியாத புதிர்கள்.
ஏனெனில், தன் பெயரிட்டு விலாசமிட்டு கொலை மிரட்டல் விடுமளவுக்கு ஒரு கொலைகாரன் அதுவும் இந்தக் காலத்திலா என்றொரு கேள்வியும் எழுகின்றது.
ஒருவேளை சீமானுக்கே இவ்வாறான ஒரு உயிர்ப்பயம் இருக்குமானால், அதுவும் தேர்தல் காலத்தில் தான் பழிவாங்கப்படலாம் எனும் ஒரு பயம் அல்லது பய உணர்வோ இருக்குமானால் அவருக்குரிய தனி நபர் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆயினும், அது வி.ஐ.பி தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டும் எனும் திட்டமிடல் சீமான் தரப்பில் இருந்திருக்கலாமா எனும் சந்தேகமே மேற்கூறப்பட்டிருக்கும் இதர காரணங்களினால் வலுக்கிறது. இத்தனைக்கும் சீமான் செய்ததெல்லாம் தன் சொந்த மண்ணில் நடக்கும் அரசியலுக்காகவோ அல்லது தன் சொந்த மக்களுக்காகவோ குரல் கொடுத்ததாக இல்லை. எல்லை கடந்த போர்க் கூவல்களும் மக்களிடம் குழப்பம் விளைவித்தமையும் தான்.
இதற்காக அண்ணன் சீமானுக்கு வி.ஐ.பி தர பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று அவரது தம்பிக்கள் நினைத்தால் ஒட்டு மொத்தமாக அவர்களே அவரைப் புடை சூழ்ந்து பாதுகாக்கலாம். அப்படிச் செய்தால் நாடும், நாட்டின் பணமும் கூட வீண் விரயமாகாமல் தடுக்கலாம்.
இப்போதும் ஒன்றும் குறையவில்லை. உத்வேகமுள்ள அரசியல் பின்ணனியினால் அழுக்கடையாத, மக்கள் நலன் மீது அக்கறையுள்ள, தமிழர் உரிமையை உண்மையாக நேசிக்கும் ஒரு அரசியல் பிரதிநிதிக்கான வெற்றிடம் இன்றும் கூட தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது.
திருமாவளன்கள், வைகோக்களாலோ அல்லது ஸ்டாலின்கள் அழகிரிக்களாலோ , ரஜினிக்கள் விஜய்கள் விஜயகாந்துகளாலோ கூட அவ்விடத்தை நிரப்ப முடியாத அளவு அவர்கள் பாரம்பரிய அரசியல் பாதையில் ஒரு வகை நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, சீமான் போன்ற சுயேச்சைத் தமிழ் பிரதிநிதிகள் மக்கள் முன் வர வேண்டும் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. சேகுவாராக்கள், காஸ்ட்ரோக்களை முன் மாதிரியாகக் கொண்டு, புரட்சியான பாதைகளை விதைப்பதிலும் தவறில்லை. மானசீகத் தலைவனாக பிரபாகரனை அவர் ஏற்றுக்கொள்வதிலும் தவறில்லை.
ஆனால் பிரபாகரனையும் அவர் ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்த அவலங்களையும் மறைப்பது தான் மகா தவறு. அண்ணன் நேரம் வரும் போது வருவார் என்று உப்பு சப்பில்லாமல் மக்களை ஏமாற்றுவது தவறு. தான் விரும்பிய அமைப்பு என்பதற்காக அந்த அமைப்பின் போலித்தன்மையையும், வங்குரோத்து நிலையையும், மக்களை ஏமாற்றும் சதிகளையும் வெளியில் சொல்லாமல் மறைப்பதுவும் மகா தவறு.
இது அத்தனையையும் தாண்டி, இந்த சீமானாலும் ஒரு தலை சிறந்த மக்கள் தலைவனாக வர முடியாவிட்டாலும், ஒரு மக்கள் பிரதிநிதியாகவாவது வர முடியும் எனும் நம்பிக்கை எமக்கும் தான் இருக்கிறது, ஆனால் தேர்தலில் நின்று வெல்லும் அளவுக்கோ அல்லது சுயநலமற்ற தமிழர் சேவை செய்வதற்கோ அவரே இன்னும் தயாரில்லை என்பதே இப்போதைய கணிப்பு.
அரசியல் கோமாளிகள் குழுவிலிருந்து உண்மையான ஒரு மக்கள் பிரதிநிதியாக, உண்மையைப் பேசி, உண்மையாக தமிழருக்கு உழைக்க சீமானுக்கு எமது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கிறோம்.
Ranjith
மார்ச்3, 2011 at 11:11 பிப
Super hats off.