RSS

கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !

31 அக்

சராசரியாக ஒவ்வொரு இலங்கையரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிய போர் முடிந்து விட்டது, ஆனால் அதிலிருந்து சுமக்கும் வடுக்கள் எப்போது மறக்கப்படும்? – இந்தக் கேள்வி அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும்.

விடுதலைப் போர் என்று ஆரம்பித்தாலும் பின்நாளில் கயவர்களின் இருப்புக்கான பலி கொடுக்கும் போராக மாறிய யுத்தத்தின் வெளி முகத்துக்கு சர்வதேச அரங்கில் புதிய முகவரி கொடுத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றுதான் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடு இரவாக பல வந்தமாக வெளியேற்றிய முட்டாள் புலிகளின் புத்தி சாதுர்யம்.

அது இடம்பெற்று 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் புலி ஆதரவாளர்களின் மன நிலையும், தமிழின ஆர்வலர்களின் மன நிலையும் எவ்வாறு இருக்கின்றது என்று தேடிப் பார்த்த போது மீண்டும் காதுகளில் ஒலித்த நியாயமான கேள்விதான் இன்றைய தலைப்பாகிறது.

புலி ஆதரவாளர்களுக்கும் – தமிழின ஆர்வலர்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. புலியின் வான வேடிக்கைகளுக்காகக் காசை அள்ளிக் கொடுத்து விட்டு ஏமாந்து போன புத்தி சாலிகளின் கண்களில் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஒரு சேர, மனிதர்களாகப் பார்க்கும் பண்பு வளரும் வரை அவர்கள் தமிழின ஆர்வலர்களின் வகையிலிருந்து என்றும் வேறுபட்டே இருப்பார்கள்.

தமிழின ஒற்றுமை பேசுவோர் மத்தியில் அரசியல் நிலைப்பாட்டில் வேறுபாடுகள் காணப்படினும், ஆகக்குறைந்தது மனிதர்களை மதிக்கும் குறைந்த பட்ட மனித நேயத்திலாவது ஒரு குடையின் கீழ் வருகிறார்கள். ஒரு கூட்டத்தில் கூடியிருக்கும் நான்கு பேரும் நான்கு வகை அரசியல் பார்வையில் இருப்பது தான் தெற்காசியா அரசியல் வாதிகளின் பலம். இருப்பினும், புலி ஆதரவு நிலையைக் கடைப்பிடித்த, கடைப்பிடித்து வருகிற யாருக்குமே தமது வட்டத்தை விட்டு வெளியே வந்து மனிதர்களை மதிக்கத் தெரிவதில்லை, மாறாக அவர்கள் எப்போதும் தம்மை மட்டுமே நியாயப்படுத்தி வாழ்க்கையின் இன்பம் காண்பவர்கள்.

முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள், அதனால் புனிதப் புலிகள் அவர்களை விரட்டியடித்தார்கள் என்று உப்பு சப்பில்லாத பிரச்சாரத்தை இன்னொரு தலைமுறையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மிகக் கவனமாக வரலாற்றை புலிகள் எவ்வாறு செதுக்கியெடுத்தார்களோ அவ்வாறே காலம் காலமாக இரவோடு இரவாக புலிகள் பாரம்பரியமிக்க ஒரு சமூகத்தை அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து வெளியேற்றினார்கள் எனும் வரலாறும் சம காலத்தில் ஏந்திச் செல்லப்படும்.

புலி எனும் ஆயுதம் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைகளுக்கேற்ப இயங்கிய “மேல் மாடி” இல்லாத வெற்றுப் பை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் வரை இனங்களுக்கிடையிலான முரண்பாடு எப்போதும் நிலைத்திருக்கப் போகின்றது. வடக்கின் பிராந்திய கலாச்சாரமாக இருந்தாலும், கிழக்கின் கலாச்சாரமாக இருந்தாலும், தெற்கின் கலாச்சாரமாக இருந்தாலும் தாம் வாழும் பிரதேசங்களின் கலாச்சாரத்துக்கு உரியவர்களாகவே பரந்து வாழும் முஸ்லிம்கள் இலங்கையில் காணப்பட்டாலும், தொழில் சார் வளத்தில் தனி அடையாளத்தைக் கொண்டவர்களாகவும், தமது மத நம்பிக்கையிலும் அதன் படி நடப்பதிலும் இறுக்கமான முறைகளைக் கடைப்பிடித்து வருபவர்ளாகக் காணப்படும் முஸ்லிம் சமூகத்தை நசுக்கி வெளியேற்றியதில் புலிகளை விட புலிகளை இயக்கிய “மூளைகள்” தான் நன்மையடைந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்கு கடை நிலை அபிமானிக்கு இன்னும் வெகு காலம் எடுக்கும்.

தாம் வாழும் பிரதேசங்களில் வர்த்தகத்துறையில் கொடி கட்டிப் பறப்பது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம். அதிலும் யுத்த காலத்திலும் முஸ்லிம்கள் வடக்கில் தம் வசம் வைத்திருந்த வர்த்தகமே பின்னால் இருந்து செயற்பட்ட “மூளைகளின்” இலக்காக இருந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு பல் வேறு வரலாறுகளை புலிகள் ஏற்கனவே புகுத்தியிருப்பதனால் கடை நிலை அபிமானியைப் பொறுத்தவரை அவன் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து இந்த வரலாற்றுப் பிழையை மூடி மறைக்க மட்டுமே பார்க்கிறான்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் கருத்துக்கூறிய ஒருவர், வடக்கில் ஆகக்குறைந்தது 5000 முஸ்லிம் குடும்பங்கள் தான் இருந்தன என்று வைத்துக்கொண்டாலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு நண்பர் தான் முஸ்லிம் அல்லாத தமிழர்களில் இருந்திருந்தாலும், ஒரு குடும்பத்திற்கு ஒருவர் ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தாலும் ஆகக் குறைந்தது 5000 பேர் குரல் கொடுத்திருப்பார்களே? 5000 பேர் குரலை இரண்டு மணித்தியாலத்திற்குள் புலிகளால் கூட அடக்கியிருக்க முடியாதே? என்று தனது விசனத்தை வெளியிட்டமையை , எமது முந்தைய பதிவொன்றில் மேற்கோள் காட்டியிருந்தோம்.

இதை ஆராயும் போது, சகோதரத்துவமும் மனித நேயமும் ஆயுத முனையில் எவ்வாறு திசை திருப்பப்பட்டது எனும் சூற்சுமத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு சற்றும் குறையாமல் தமது சகோதரத் தமிழனையே அவன் மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகப் புலி டயரில் இட்டுக் கொளுத்திய போதும் தமிழர் சகோதரத்துவம் பார்த்துக்கொண்டு இருந்தது மாத்திரமன்றி, தீ யிடுபவன் களைப்பை நீக்க சோடாவும் ஊற்றிக்கொடுத்தது எனும் உண்மையையும் சேர்த்தே புலி ஆதரவாளன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவற்றை திறந்த மனதுடன் பார்ப்பவர்களைத் தவிர வேறு யாராலும், புலியின் கொடூரம் எவ்வாறு மனிதத்துக்கு எதிராக செயற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவர்கள் தமது பாழுங் கிணற்றிலிருந்து வெவ்வேறான பரப்புரைகளை மட்டுமே முன் வைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக தமது தரப்பை நியாயப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களாக நினைப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள்.

இலங்கையில் சமூகவியல், தமிழ் – சிங்கள – முஸ்லிம் – கத்தோலிக்க – பறங்கிய இனங்கள் என்று தான் நமக்குப் பாடம் சொல்லித்தந்திருக்கிறது, ஒற்றுமை பற்றிப் பேசும் போது தமிழ் – சிங்கள – முஸ்லிம் எனும் மூவினம் பற்றித்தான் பேசுகிறது. இலங்கையின் தொன்று தொட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட சமூகவியலைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் எப்போதும் தனி இனமாகவே அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

கலாச்சார ரீதியாக தாம் வாழும் இனங்களோடும் அவர்களது விழுமியங்களோடு ஒன்றிணைந்து வாழ்பவர்களாக இருந்தாலும் கூட பண்பாட்டு ரீதியாகத் தனி அடையாளத்தோடு வாழ்வது அவர்கள் இவ்வாறு தனியான இனமாக அவதானிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாகக் கூட இருக்கலாம். காலி – மாத்தறைப் பிரதேச முஸ்லிம்களும், கத்தான்குடி – வாழைச்சேனை முஸ்லிம்களும், பதுளை – பிபிலை முஸ்லிம்களும் தம்மைப் பண்பாட்டு ரீதியிலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றாகக் கண்டு கொண்டாலும், கலாச்சாரத்தில் அவர்கள் தத்தமது பிரதேச ஆளுமைக்குட்பட்டவர்களாகவும் , இப்பிரதேசங்களில் மொழியையே தமது தாய் மொழியாகவும் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இலங்கையில் அவர்கள் மொழி ரீதியாக அடையாளப்படுத்தப்படவில்லை, மாறாக தனித்துவமான ஒரு இனமாகக் கணிப்பிடப்படுகிறார்கள், பெரும்பாலான முஸ்லிம்களும் தம்மை முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவார்களே தவிர தமிழர்கள் என்று இலங்கையில் குறிப்பிடுவதில்லை, ஏனெனில் இலங்கையில் தமிழர்கள் என்றால் அது பெரும்பாலும் இந்துக்கள் எனும் தோற்றப்பாடு நிலவியதும், அதுவே ஆயுத,அதிகார முனைகளில் நியாயப்படுத்தப்பட்டதும் தான் காரணம்.

சகோதரத்துவம் துண்டாடப்பட்ட வடுக்கள் காய்வதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதை மீண்டும் நினைவூட்டிய கேள்விதான் கழற்நி வீச நாங்கள் என்ன செருப்பா? என்று ஒரு இஸ்லாமியப் பெண்மணி இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் பகுதி நேர தொலைக்காட்சி சேவையொன்றின் விபரணப் படத்தில் முன் வைத்திருக்கும் உணர்வு பூர்வமான நியாயங்கள்.

எமது உடைமைகளையும், உரிமைகளையும் இழந்து விரட்டப்பட்ட கொடூரம் பசுமரத்தாணியாக எமது நெஞ்சில் இன்னும் பதிந்திருக்கிறது என்று அவர் கூறும் நியாயங்களுக்கு எதிராக புலி விசுவாசிகள் அப்படியானால் “தமிழர்கள்” விரட்டப்படவில்லையா என்ற அரசுக்கெதிரான கேள்வியையும், கிழக்கில் இடம் பெற்ற தமிழ் – முஸ்லிம் கலவரங்கள் என்று விபரிக்கப்பட்ட மோதல்களையும் முன் வைத்து நியாயம் கேட்கிறார்கள்.

ஆரம்ப கட்டத்தில் உரிமைக்கெதிரான போராட்டத்தை பொதுவான போராட்டமாக நினைத்து தோளோடு தோள் நின்ற ஒரு சமூகத்தை சந்தேகக் கண்ணோடும், இரண்டாந்தர நிலையிலும் வைத்து நடத்தியலிருந்துதான் புலிகளின் இன பேதத்துக்கான அடிப்படை ஆரம்பித்திருந்தது. புலியிலிருந்து விலகினாலும் பொது எதிரியின் பார்வையில் ஆயுதம் தூக்கிய போராளியாகவே பார்க்கப்படப்போகும் அவர்கள் பின்னர் ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் போன்ற அமைப்புகளோடு மாத்திரம் ஒற்றுமையாக இருக்க முடிந்தது எப்படி எனும் கேள்விக்கு அடிமட்ட புலி விசுவாசியடம் விடை இருக்கப் போவதில்லை.

இருந்தாலும் தமது நிலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இவர்களும் “துரோகிகள்” என்று மழுப்பப் பார்ப்பார்கள். மாற்று இயக்கங்களைத் துரோகிகளாக வர்ணிக்கும் படலம் எப்போது ஆரம்பித்தது எனும் வரலாறு தெரியாத முட்டாள்கள் தான் இவ்வாறு நியாயங் கற்பிக்க முடியும். இனக் கலவரம் தமது இருப்புக்கு மிகப் பெரிய ஆயுதம் என்பதை பல தடவைகள் புலிகள் கிழக்கு மாகாணத்தில் நிரூபித்திருந்தாலும், நாடளாவிய ரீதியில் அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்த விடக்கூடாது என்பதில் சந்திரிக்கா அரசு முதல் இன்றைய மகிந்தா அரசுக்கள் வரை மிகக் கவனமாக செயற்பட்டதன் விளைவு என்ன என்பது 2009 மே மாதம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

மேடையேறி உசுப்பேற்றிய தமிழரசுக் கொள்கையாளர்களும், பெடியன்கள் வருவார்கள், ஆயுதம் தூக்குவார்கள் என்று இளைஞர்களைக் குறி வைத்துத்தான் தமது இலட்சியத்தை முன்னெடுத்தார்கள், புலிகளும் வலி மூலத்தினையும் விரக்தியையும், பிரிவினையையும் ஊட்டி வளர்ப்பதன் மூலமே தமது இயக்கத்தின் மீதான புறக்கவர்ச்சியைத் தங்க வைத்துக் கொண்டார்கள். 1980 இலிருந்து 1990 வரை இயக்கங்களில் இணைந்து கொண்ட பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு வகையில் இவ்வாறான வலி இருக்கத்தான் செய்தது.

தமது பலத்தை நிரூபிக்க ஆயுதம் தூக்க முடியாத ஒரு சமூகம் அரசியலைத் தெரிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இருக்கும் போது, ஆயுதத்தின் மூலம் எவ்வாறான மனிதக் கேடுகளை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை கொடூரத்தின் உச்ச கட்டமாக ஆலயங்களில் தொழுது கொண்டிருந்தவர்களின் பின்னால் நின்று உலகறிய அரங்கேற்றியவர்கள் புலிகள். எனவே அவர்களிடம் நியாயம் எப்போதும் பேச்சளவில் தான் இருக்கும் என்பதையும் அவர்களது கடை நிலை விசுவாசி அறிந்து கொள்வதற்கு மேலும் பல வருடங்கள் ஆகும்.

இது போல எமக்கும் நடந்தது என்று ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு நியாயப்படுத்தும் விசுவாசிகள் பொது எதிரியால் தமக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தம்மோடு ஒன்றிப்பிணைந்த ஒரு சமூகத்துக்கு தண்டனை கொடுத்தது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்க மறுப்பது அவர்கள் புலி மூளைகள் ஏன் இன்னும் அப்படியே இருக்கப்போகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

30 வருட ஆயுதப் போராட்டத்தில் முஸ்லிம்களை விரட்டியடித்த வரலாறு 20 வருடங்களுக்கு முன்னரே இடம்பெற்று விட்டது என்பதையும் திட்டமிட்டு மறுதலிப்பது அவர்களது அறிவீனமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இலங்கையில் பிரபாகரனுக்கு முந்திய இன மோதல்களில் தமிழ் – முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒருவொருக்கொருவர் உதவியாகவே இருந்திருக்கின்றனர். 1983 கலவரத்தின் போது காடையர்களின் தாக்குதல்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால்தான் காப்பாற்றப்பட்டனர், அதே போன்று அதற்கு முந்தைய கலவரங்களில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்குத் தோள் கொடுத்தது தமிழர்கள் தான். இந்நிலைகள் அனைத்திலும் மாத்திரமன்றி அண்மைய சுனாமியின் பின்னான பேரழிவுகளின் போதும் மனித நேயத்துடன் தமது சகோதர இனத்துக்குக் கை கொடுக்க முஸ்லிம்கள் ஓடிச் சென்ற வரலாறும் பதிவாகித் தான் இருக்கிறது.

ஆக, புலிப் பாசிசம் ஒன்று தான் தமிழ் – முஸ்லிம் எனும் பிரிவினை வேருக்கு தமது அரசியல் வங்குரோத்தின் காரணமாக பசளையிட்டு வளர்த்ததே தவிர, வேறு யாரும் இல்லை. சந்தர்ப்ப வாதக் காடையர்கள் அல்லது சமூக விரோதிகள் எல்லா இனத்திலும் இருப்பார்கள், அவர்கள் மூலம் இடம் பெறும் சிறு சிறு விடயங்களைப் பயன்படுத்தி அல்லது உருவாக்கி அதன் மூலம் பயன்பெற நினைத்துத் தோல்வி கண்டதும் புலிகள் தான் என்பதற்கு சான்றா நவீன சமுதாயம் வளர்ந்து வருவது பொறுக்க முடியாமல் பழைய பல்லவியைப் பாடி சுய இன்பம் காண விளையும் புலி விசுவாசிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்வுகளும், வேறுபாடுகளும் மனிதருக்கு மனிதர் வேறு படும் விடயங்களாகும். அவற்றை மாற்றி ஒரு உண்மையான சமூகக்கட்டமைப்பின் பால் செல்வதற்கு எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது சிறந்த வழியென்று நினைக்க புலி விசுவாசிகளையன்றி வேறு யாராலும் நினைக்க முடியாது.

எவ்வாறாயினும், தமது சொந்த மண்ணிலிருந்து வெறும் 500 ரூபாயோடு விரட்டப்பட்ட சமூகத்திற்கு தமது உணர்வுகளை வெளியிட உரிமையுண்டு, அவர்கள் சொந்த மண்ணில் மீளக்குடியேறவும் சுமுகமான வாழ்வும் வாழ்வதற்கு உரிமையுண்டு எனும் நியாயம் புரிந்து கொள்ளப்படுவது மாத்திரமன்றி அவர்களது தனித்துவத்தைப் பேணும் உரிமையை மறுப்பதற்கோ அல்லது அவர்கள் சாராத பண்பாட்டுக்குள் அவர்களைத் திணித்து அடையாளப்படுத்துவதற்கோ வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர்31, 2010 in அரசியல், சமூகம்

 

3 responses to “கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !

 1. Ahamed

  நவம்பர்1, 2010 at 8:19 பிப

  நன்றி அறிவுடன் ஆசிரியருக்கு. முஸ்லிம்கள் எப்போதும் தனி இனமே.

   
 2. maaran

  நவம்பர்2, 2010 at 7:22 பிப

  dear arivudan,

  can you publish this at thesamnet also?

  Thanking you,
  Your’s Truly.
  K. Maran

   
  • arivudan

   நவம்பர்3, 2010 at 11:26 முப

   வணக்கம் மாறன், தங்கள் அன்புக்கு நன்றி.

   குறிப்பிட்ட இணையத்தோடு தொடர்புகளை மேற்கொள்ளும் வசதிகள் வெளிப்படையாகக் காணப்படவில்லை, அதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டதும் நிச்சயமாக அதற்கான ஆவண செய்கிறோம். எம்மைப் பொறுத்தவரை அனைவரோடும் ஆக்கங்களைப் பகிர்ந்து கொள்வதே எமது நிலை.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: