மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது.
நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம்.
அவன் பிடித்து வைத்தான், அதை மீட்பதற்காக நாங்கள் எதிரியை வலுவிழக்கச் செய்யப் போராடினோம், அப்போது இவ்வாறான “துன்பியல்” சம்பவங்கள் நிகழ்ந்தன என புலிப்பாணியிலேயே இனி வரும் காலத்தில் சிங்கக் குகைக்குள் இருந்து அறிக்கைகள் வெளி வந்தாலும் ஆச்சரியமில்லை.
பிரபாகரன் தன் உயிர் அடங்கும் வரை மக்களைப் பலி கொடுத்ததும் மிகப் பெரும் உண்மை, அதை நாம் அப்போதே சுட்டிக்காட்டினோம், இன்று ஐ.நாவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இருந்தாலும் உறங்கிக்கிடந்த புலிப்பினாமிகளும் விசைப்பலகை வீரர்களும் மீண்டும் துயிலெழுந்து தம் ஆக்ரோஷம் அடங்கும் வரை இணையமெங்கும் முழங்கித் தள்ளப்போகிறார்கள்.
தமிழ் நாட்டின் புலிப் பிரச்சாளர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று கச்சையைக் கட்டிக்கொண்டு கிளம்புவார்கள், சீமான்கள் மிஞ்சப்படுவார்கள். உணர்வு எனும் பெயரில் கருணானிதியை வாரிக் கொட்டப்போகிறார்கள், அதற்குள் சத்தமே இல்லாமல் தேர்தல் முடிவுகள் வந்து மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால்?? அதில் 80 விழுக்காட்டினர் அடங்கிக்கொள்வார்கள்.
ஆக, அப்பாவி மக்களின் உயிரை வைத்து மீண்டும் நாறிப்போன அரசியலை தூசு தட்டக் காத்திருந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஐ.நா உபயத்தில் பெரும் பயன் கிடைத்திருக்கிறது.
இது வெறும் அறிக்கையாகப் பார்க்கப்பட முடியாத கோரம், தம்மால் எதுவுமே செய்ய முடியாமல் அப்பாவிகளாக உயிரை நீத்த ஆயிரமாயிரம் மக்களின் சாபம் சரி சமமாகப் புலிக்கும் சிங்கத்துக்கும் போய் சேரும். எனினும், ஒரு அரசாங்கம் எனும் ரீதியில் புலியை விட ராஜபக்சாக்களுக்கு பொறுப்பு அதிகமாக இருந்திருக்க வேண்டும், நாளை சிறையிலிருந்து சரத் பொன்சேகாவும் அப்ரூவராக மாறினால் சர்வதேச நெருக்கடி இலங்கை அரசுக்கு இன்னும் அதிகரிக்கும்.
புலியின் மிகக் கேவலமான யுத்த தர்மம் தான் இதற்கு வழி வகுத்தது என்றாலும் கூட, அதை மீறுவதற்கு, அதுவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மீறுவதற்கு எடுத்துக்கொண்ட பகீரத பிரயத்தனத்தை இந்தியாவோ, சீனாவோ, ரஷ்யாவோ, பாகிஸ்தானோ அறியாமல் இருந்தது என்று யாரும் கூற முடியாது. இந்நாடுகளுக்கு இது ஏற்கனவே தெரிந்த விடயம். எனவே, இனி வரும் எதிர்ப்பை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் தம் கவனத்தைச் செலுத்துவதோடு முன்னையை விட மிகப் பலமான உறவுகளை இந்நாடுகளோடும், ஏகாதிபத்திய அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய சகபாடிகளையும் எதிர்க்கும் அத்தனை நாடுகளோடும் தம் வலுவாகப் புதுப்பித்துக் கொள்வதில் இலங்கை மும்முரமாக ஈடுபடும்.
ராஜபக்சாக்கள் அனுபவித்து வந்த சுக போகத்திற்கு இது ஒரு தடைக் கல் என்பது ஒரு புறமிருக்க, இதைப் பெரும் முட்டுக்கட்டையாக வளர விடாமல் தடுப்பதில் அவர்களும், இதையே பாவித்து ஆகக்குறைந்தது போர்க்குற்றம் புரிந்தோராக அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும், அந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் விரிக்கும் வலையில் விழும் பிரச்சாரப் புலிகளும் என்று புதுமையான கோமாளித்தனங்களும் எதிர்காலத்தில் அரங்கேற வாய்ப்புகள் உண்டு.
நாஞ்சில் சம்பத்தோ, ராமதாசோ இல்லை யார் யார் சொன்னாலும் கூட தனித் தமிழீழம் என்பது உலக அரங்கில் சாத்தியமில்லாத விடயம் என்பதில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர் தெளிவாக இருந்தாலும் கூட உருத்திர குமரர்களுக்குத் தம் பிரச்சாரத்தை முடுக்கி விட இதுவொரு நல்ல வாய்ப்பு என்பதும் மறுப்பதற்கில்லை, அவர்கள் இத்தருணத்தைப் பாவித்தாலும் இல்லாவிட்டாலும் ராஜபக்சாக்கள் புனிதர்கள் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.
இப்படி இரு சாராரும் ஒரே கூண்டில் இணைந்ததனால் நாம் கண்ட ஒரே விளைவு அப்பாவி மக்களின் இன்னுயிர்கள் புலியால் சிறை பிடிக்கப்பட்டு சிங்கத்தால் கடித்துக் குதறப்பட்டதுதான்.
இந்த உண்மை அனைவருக்கும் தெரியும், உண்மையான போராளிகள் அதுவும் மக்களுக்காகப் போராடும் போராளிகளாக இருந்திருந்தால் முதலில் தாம் உயிர் நீத்தாலும், அந்த மக்களை வாழ வைக்க வழி செய்திருக்க வேண்டும், ஆனால் இங்கு அது மாறித்தான் நடந்தது. புலித் தலைவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், பொது மக்கள் அரணைக் கடந்து வர அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம் அழுத்தங்களைப் பிரயோகித்து இன்னொரு முறை யுத்தத்தை நிறுத்தி, அடங்கிப் பின் வேறு வழிகளில் வீராவேசம் பேசவும் போட்ட திட்டத்திற்கு முன்னால், ராஜபக்சாக்கள் மக்கள் அரணை உடைத்தெறித்து அதையும் புலியின் தலையில் கட்டி விட்டுத் தப்பி விடலாம் என்று திட்டமிட்டு விட்டார்கள்.
இதில் புலிகள் மடிவது ஏறத்தாழ உறுதியாகவே இருந்த போது, இதன் பின் விளைவுகளைச் சமாளிக்கும் காரணிகளை வலுப்படுத்தும் அரசியல் தேவை அரசாங்கத்திற்கு அப்போதே இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. அவ்வாறான கட்டத்தில் கேடயமாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பலியெடுத்த கொடூரம் சர்வதேச அளவில் வெடிக்கும் போது அதைச் சமாளிப்பதற்கும் தம் மீது சுமத்தப்படும் குற்றத்தை வேறு ஒருவர் மீது திசை திருப்புவதற்கும் அல்லது ஏற்கனவே ராஜபக்சாக்கள் தயாராகத்தான் இருப்பார்கள். அது எவ்வாறு அரங்கேறப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உணர்வுபூர்வமாக, மனிதாபிமானத்துடன் இவ்விடயத்தை நோக்குவோர் புலியையும் சிங்கத்தையும் ஒரே கூண்டில் வைத்துத்தான் பார்ப்பார்கள். புலியின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்களின் சாட்சியங்கள் அதைத்தான் வலியுறுத்தி நிற்கின்றன.
எனினும், ஏகாதிபத்திய சார்பு நிலை கொண்ட எதிர்க்கட்சியும், பிராந்திய வல்லரசுகளின் துணையோடு நிலைத்து நிற்கும் ஆளும் கட்சியும் உள்ளூரிலும், வெளியூரிலும் நிகழ்த்தப்போகும் சாகசங்களிலும், அமெரிக்க நலன்கள் சரிபார்க்கப்பட்டு அவை ஈடு செய்யப்படும் விதத்திலும் ஒரு வேளை இந்த சத்தங்கள் மீண்டும் சுனாமியாக எழுந்து ஓய்வு பெறலாம்.
எது எப்படியானாலும், தம் உறவுகளைத் தொலைத்து விட்டு அல்லலுறுவோருக்கு யாரும் ஆறுதல் சொல்லப் போவதில்லை. அவர்களும் அதை வெளியில் பேசுவதனால் இருக்கப்போகும் சிக்கல்களை விட தமக்குள்ளேயே வைத்து அடக்கிக் கொள்வதைப் பெரிதும் விரும்புவார்கள்.
ஒவ்வொரு காலத்திலும், அப்பாவி மக்களின் துயரை அடிப்படையாக வைத்து, உள்ளூரிலும், வெளியூரிலும் அரசியல் வாதிகள் நன்மையடைகிறார்களே தவிர, இந்த மக்களுக்கு அவரவர் உறவினர்களும் அவரவர் சொந்தக் கை கால்களும் மட்டுமே உதவியாக இருக்கின்றன எனும் உண்மையை அவர்களைத் தவிர வேறு யாருக்கும் உணர்வுபூர்வமாக விளக்குவதும் கடினம்.
சர்வதேச அரங்கில் கீர்த்தி மிக்க நாடாக இலங்கை மாற வேண்டுமானால் அதற்குப் பாசிசப் புலியின் இருப்பு இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலானோருக்கு ஒத்த கருத்தே இருந்து வந்தது, அதிலும் குறிப்பாகப் புலியின் குணம் அறிந்ததனால் புலி மனிதக் கேடயமாக மக்களை லட்சக்கணக்கில், ஆயுத முனையில் அடக்கி வைத்திருந்தார்கள் என்பதிலும் பெரும்பாலானோருக்கு மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
என்ன பாடு பட்டாவது புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் பின்புலத்தில் புலியின் கைங்கரியத்தை புலியின் முடிவிலேயே முடித்து விடும் நோக்கில் செயற்பட்ட ராஜபக்சாக்கள் மக்களை அழித்தார்கள் என்பதை விட புலிகள் பலி கொடுக்கிறார்கள் எனும் எண்ணமும் மேலோங்கியிருந்ததனாலும், மக்களுக்காக ஒப்பாரி வைக்கத்தவறிய புலி ஜாம்பவான்கள், ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருந்த போதும் கூட, அத்தனை பேருக்கும் பின்னொரு காலத்தில் மாவீரர், தியாகிப் பட்டங்களைக் கொடுத்து விடலாம் ஆனால் இப்போதைக்குப் பிரபாகரனைக் காப்பாற்றியாக வேண்டும் என்று துடிப்பாக செயற்பட்டதனாலும், பொதுவாக இது தொடர்பில் எந்த நிலையில் இதை முன் நிறுத்துவது எனும் குழப்பம் மனிதநேயர்களிடம் இருந்து வந்திருந்தது.
அரசு எனும் ரீதியில் பொறுப்பு இருந்திருக்க வேண்டும் என்னும் ஒரு பார்வையில் இந்த அரசின் கொடூரத்தை கண்டிக்கவும், புலியின் கைங்கரியத்தை ஒரே தட்டில் வைத்துக் கண்டிக்கவும் இனி மேலும் யாரும் தயங்க முடியாது. இன்றைய நிலையில் ஏறத்தாழ சுயேச்சையாக தாம் விரும்பும் எதையும் செய்யும் எதோச்சாதிகார அரசாகவும், பண மாற்றீடின் மூலம் ஏழைகளுக்குத் தற்காலிக சுகபோகத்தினை வழங்கி அவர்களின் நீண்ட கால உரிமைகளை அடக்கும் புதிய கம்யுனிசப் பங்காளிகளாகவும் மாறிச் செயற்படும் ராஜபக்சா அரசு கண்டிக்கப்படவே வேண்டும் !
அன்று புலிகளுக்கும், இன்று ராஜபக்சாக்களுக்கும் என்று நிலைகளை மாற்றிக்கொண்ட அரசியல் கூட்டணிகள், அமைப்புகள், முன்னாள் ஆயுதக்குழுக்கள் எல்லாம் இனி என்ன சொல்லப்போகின்றன என்பதை கணிக்க முடியாதவராக இருக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு இலங்கையருக்கும் யுத்த அனுபவம் இருப்பதனால் இதை அப்பாவி மக்கள் அடையாளங்கண்டு கொள்வார்கள்.
தற்போது வெளிக்கிளம்பியிருக்கும் பூதம் புலியையும் சிங்கத்தையும் ஒரே கூண்டில் வைத்திருப்பதனால், இனி வரும் சில காலங்களுக்கு இது “அரசியல்” பிரச்சினையாக இருக்குமே தவிர மக்களின் பிரச்சினையாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இது மக்கள் பிரச்சினையாக மாற்றப்பட்டு, மக்களுக்குப் பதில் சொல்லும் நிலைக்கு அரசு தள்ளப்படுவதற்கு ஏற்ற சூழ் நிலை இலங்கையில் இல்லவும் இல்லை, மத்திய கிழக்கில் போன்று ஒன்றிணைந்து எழுந்து நின்று அமைதிப் புரட்சிகளை ஒருங்கிணைக்கும் ஜனநாயக சக்திகளும் இலங்கையில் இல்லவே இல்லை.
முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சியும், தேசிய வாதமும், சிதறிப் போன சிறுபாண்மையும் மற்றும் ஆப்பிழுத்த இந்தியாவும், ஆதரவுக்கரம் கொடுக்க சீனாவும் ரஷ்யாவும் என்று இலங்கையைச் சுற்றிக் காணப்படும் சிக்கலான அரசியலை மீறி, மேற்குலகம் செய்யப்போகும் பகீரதப் பிரயத்தனத்தின் பெறு பேறும் கூட அப்பாவி மக்களுக்கு எந்த வகையிலும் சந்தோஷத்தையோ அல்லது ஒரு விடிவையோ தரப்போவதில்லை. மாறாக அரசியல் சதுரங்கத்தில் புதுமையான முடிவுகளும், விந்தையான விளக்கங்களும் வந்து சேர்ந்து அவ்வப்போது மக்கள் உணர்வுகளை தட்டிச் செல்லப் போகின்றனவே தவிர, இதில் நன்மை தீமை என்னவோ அரசியலோடு முடிந்து விடப் போகிறது.
எது எப்படியாகினும், தூண்டியவன் குற்றவாளியா அல்லது தூண்டப்பட்டதனால் கொன்றவன் குற்றவாளியா எனும் நியாயங்களும், விளக்கங்களும் வந்து மக்கள் செவிகளை நிரப்பப் போவதையும், இறுதியின் அன்றைய குற்றவாளிகளும் இன்றைய குற்றவாளிகளும், களங்கமற்றவர்கள் எனத் தம்மை நிரூபித்துக் கொண்டு அரியாசனங்களில் தம் அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யப் போகிறார்கள் எனும் முன்னெச்சரிக்கையோடு நாம் இருப்பது நலம்.
இலங்கை அரசு தம் பொறுப்பற்ற அத்து மீறல்களை ஒத்துக் கொள்ளவும் வேண்டும், புலிப் பினாமிகள் தம் தலைமை செய்த தவறை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதுவே மனித நேயர்களின் விருப்பமாக இருப்பினும், இது இரண்டும் நடந்தால் யார் குற்றவாளி என்று யார் தீர்மானிப்பார்கள்? எனவே, இரண்டுமே நடக்கப்போவதில்லை.
ஆகக்குறைந்தது ஆயுதமேந்திய காட்டு மிராண்டிகள் அனைவரும் ஒரே வகையினர் என்பதையாவது வரலாறு மீண்டும் நிலை நிறுத்திக்காட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் எச்சரிக்கையடைந்து கொள்வோம்.
wije
செப்ரெம்பர்23, 2011 at 3:27 பிப
puliyajum,rajapaksavaijum thiddyvidal puthisale illai