RSS

யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு

02 மார்ச்

மீளக்கட்டியெழுப்பப்படும் யாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவுகள் பற்றி சூத்திரம் இணையத்தில் வெளியான நேர்காணலின் மீள் பதிவு.

யாழ்.தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்லஉறவுடனேயே வாழ்ந்து வருகிறோம்

– ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பெருமிதம்

வடபகுதியின் கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகளினால் பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் படிப்படியாக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருப்பதும் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

முஸ்லிம் மக்கள் பலர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது ஏராளமான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டதால், பழுதடைந்த நிலையிலிருந்த பள்ளிவாசல்களும், முஸ்லிம் பாடசாலைகளும் திருத்தம் செய்யப்பட்டு, மீளவும் இயங்க ஆரம்பித்திருப்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான முஸ்லிம் பாடசாலையாக திகழ்வதுதான் ஒஸ்மானியாக் கல்லூரி. இதன் அதிபராகக் கடமையாற்றும் எம். எஸ். ஏ. எம். முபாரக் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். பெரியகடை ஜும்ஆ பஸ்ஜித் பள்ளிவாசலின் பிரதம இமாம் பதவியையும் இவர் வகித்து வருகிறார். யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் கல்வி பயின்றவர். இவரது தகப்பனார் யாழ். மஸ்றஉத்தீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியவர்.

இவரை சந்தித்த போது ஒஸ்மானிய கல்லூரி பற்றியும், யாழ். மக்களுடனான தனது நட்புறவு பற்றியும் சிறப்பாக எடுத்துச் சொன்னார். ‘யாழ். ஒஸ்மானியா கல்லூரி 1963 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. 1200 முஸ்லிம் மாணவர்களுடனும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இக்கல்லூரியில் தரம் ஆறு முதல் க. பொ. த. உயர்தரம் வரையில் அமைந்திருந்தது. அன்றைய கால துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளினால் 1990 அக்டோபர் 30ஆம் திகதியுடன் மூடப்பட்டது.
அப்போது அதிபராகக் கடமையாற்றி வந்தவர் எம். ஹாமீம் என்பவராகும் என்கிறார் இப்போதைய அதிபரான எம். எஸ். ஏ. எம். முபாரக்.

மீண்டும் இக்கல்லூரி இயங்க ஆரம்பித்திருப்பது பற்றி அதிபரிடம் கேட்ட போது, 2003 செப்டம்பர் 25ஆம் திகதியன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முன்பதாக 2002 ஆம் ஆண்டில் ஏ9 பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் சுயவிருப்பத்தின்பேரில் படிப்படியாக இங்கு வந்து மீளக் குடியேறத் தொடங்கினார்கள்.

கொழும்பு டி. பி. ஜாயா மகா வித்தியாலயத்தில் பகுதித் தலைவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நான், யாழ். முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபராக பதவியேற்க நேரிட்டது.

சேதமடைந்த பாடசாலை கட்டடங்களை திருத்தியமைத்தோம். அரசாங்கத்தினதும், சமூக, கல்வி சிந்தனையாளர்களினதும் நலன் விரும்பிகளினதும் உதவியுடன் கட்டடங்கள் மீளவும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, மலசலகூட வசதி, நூலகம் என்பனவும் மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
இப்போது எத்தனை மாணவர்கள், கல்வி கற்கிறார்கள், என்ற கேள்விக்கு ‘முன்பு ஆண் பிள்ளைகள் மட்டும் கல்வி கற்றுவந்த இக்கல்லூரி கடந்தகால சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது ஆண், பெண் பிள்ளைகள் பயிலும் கலவன் பாடசாலையாக இயங்கி வருகிறது.

175 ஆண் பிள்ளைகளும் 147 பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 322 மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகிறார்கள். முதலாம் தரத்திலிருந்து பதினொராம் தரம் வரையில் இங்கு இயங்கி வருகிறது. இப்போது 13 ஆசிரியர்களுடன், 4 தொண்டர் ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக மாணவர்களின் தொகையும் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. இவ்வருடம் மாணவர்களின் தொகை நூறால் அதிகரித்திருப்பதையும் சிறப்பாகச் சொல்லலாம்’ என்று பதிலளித்தார் அதிபர் எம். எஸ். ஏ. எம். முபாரக்.

பாடசாலையின் வளர்ச்சிக்கு கிடைத்துவரும் பங்களிப்புப் பற்றி கூறுகையில், ‘யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலமாக்கள், சமூகக் கல்வி அபிவிருத்தி அமைப்பு, அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் நிறுவகம், மக்கள் பணிமனை, சமூக கல்வியாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரமுகர்கள் எல்லோருடைய ஆலோசனையும், வழிகாட்டலும், பங்களிப்பும் கல்லூரியின் வளர்ச்சிக்கு துணைநிற்கின்றன.

அத்துடன் வலயக் கல்வி அலுவலகம், கோட்டக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு என்பனவும் கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான இயக்கத்திற்கும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதையும் குறிப்பிட வேண்டும்’ என்று நன்றி பாராட்டினார்.

ஒஸ்மானியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியன்று நடைபெற்றிருந்தது. கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது யாழ். கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ. வேதநாயகம் முதன்மை விருந்தினராகவும், யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி வ. சிவபாலன் சிறப்பு விருந்தினராகவும், பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ. எம். அப்துல் அமஸ் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததாக அதிபர் குறிப்பிடுகிறார்.

பெப்ரவரி 16ஆம் திகதியன்று கல்லூரியில் மீலாத் துன் நபி விழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வைத்திய கலாநிதி எம். ஏ. சி. எம். றம்ஸி கொழும்பிலிருந்து வருகை தந்து இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்றார் அதிபர்.
அதிபரிடம் யாழ்ப்பாண மக்களைப் பற்றியும், அவர்களுடனான தொடர்புகள் பற்றியும் கேட்டபோது, எனக்கு யாழ்ப்பாணத்தில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் இப்போது வெளிநாடு சென்றுவிட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இணைந்து நல்ல உறவுடனேயே வாழ்ந்து வருகிறேன். இதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.

மீலாத்துன் – நபி விழாவையொட்டி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி, அரபுப் பாடல் போட்டி என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டிருந்ததுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் எம். றம்ஸியால் வழங்கப்பட்டன.

ஒஸ்மானியா கல்லூரி அதிபர் முபாரக்கின் மனைவியும், யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவர். யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி பயின்ற இவர், இப்போது கொம்பனித்தெரு அல்இக்பால் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார் என்ற தகவலையும் அதிபர் சொல்லி வைத்தார்.

சந்திப்பு : அ. கனகசூரியர்

நன்றி: சூத்திரம்

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் மார்ச்2, 2011 in சமூகம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: