RSS

இணையங்களும் இன முரண்பாடுகளும்

01 மார்ச்

சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும் இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.

சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள் குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இன முரண்பாட்டு விஷத்தை விதைப்பவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக இருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு விடயமாகினும், கருத்தாடல் மன்றங்கள் பக்கசார்பினை தவிர்ப்பதன் மூலம் வாசகர்களுக்கு நற்பயனைத் தரவாவது முயற்சி செய்யலாம்.

சிதைவடைந்திருந்த இலங்கையை ஒற்றுமை எனும் பெயரில் அதிகார வர்க்கம் ஒரு வகையில் ஒடுக்கியாள ஒரு புறம் முயற்சித்துக்கொண்டிருக்கும் தருவாயில், உனக்கா எனக்கா ? என்றொரு பழைய கள்ளை புதிய பாத்திரத்திலிட்டு மீண்டும் இன உரிமைகளை மறுக்கும் வழி வகைகளை சில இணையங்கள் தமது தலையாய கடமையாக செய்து வருகின்றன.

ஆங்கிலேயருக்குப் பின்னாலான இலங்கையில் வரலாற்றைப் பொறுத்தவரை உட்பூசல்களை மறைத்தாயினும் தனியொரு இனமாக மொழியடையாளத்துடன் தமிழர்கள் எனும் தரப்பை நிறுவுவதில் தமிழரசுக்கட்சியும் அது சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளும் ஓரளவு வெற்றியும் கண்ட அந்த இடத்திலிருந்து கட்டிக் காக்கப்பட்டிருக்க வேண்டிய இன ஒற்றுமையை முற்று முழுதாக சிதைத்த பெருமையை விசர்ப் புலிகளை சார்ந்த அதே வேளை, மீண்டும் அதே மனப்போக்குடன் தமிழ் – முஸ்லிம் பிரிவினைகளை இணையங்கள் அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன.

அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களின் தனித்துவம் எனும் குட்டையைக் கிளறி குளிர்காய நினைக்கும் ஒரு இணையத்தை அண்மையில் பார்க்கக்கிடைத்த போது மீண்டும் வரலாறு எழுதப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கை அரசியல் சாசனப்படி இலங்கையில் பல் வேறு “இனங்கள்” இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பது யாரும் அறியாத விடயமில்லை. இந்தப் பல்வேறு இனங்களில் யாரை எந்த “மொழிக்குள்” அடைப்பது என்பது அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

என்னதான் ஆங்கிலத்தைப் பேசிக்கொண்டாலும் அவுஸ்திரேலியர்கள் ஆங்கிலேயேர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை சிம்பாபிகள் ஆங்கிலேயேர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை, அதே போன்று என்னதான் திராவிடக் குழுமத்தில் பிணைந்தவர்களாயினும் கன்னடர்கள் தம்மைத் தமிழராகப் பார்ப்பதில்லை, தமிழர்கள் தம்மைக் கேரளர்களாகப் பார்ப்பதில்லை.

மொழியென்பது ஒருவொருக்கொருவர் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு ஊடகம் எனும் வரையறையுடன் அவரவர் தம் சொந்த மொழியினை அணுகிக்கொள்வதும், அம்மொழியைக் கொண்டு தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்வதும் அவரவர் உரிமையாகவே கணிக்கப்படவேண்டும்.

உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டிற்கான மொழியையே தம் மொழியாகக் கொண்டிருந்தாலும், தமது பொது அடையாளத்துக்காகவே தம்மை இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவோர் அல்லது மாற்றுப் பெயராக “முஸ்லிம்கள்” அதாவது இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் தமிழ் – முஸ்லிம்கள் என்றும், கேரள மொழியைத் தாய்மொழியைக் கொண்டார் தம்மை மலையாளிகள் என்றும் விரும்பினால் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

தவிரவும் தம் பொது அடையாளத்துக்காக தமது “இன” த்தை முன்னிலைப்படுத்தாது “இஸ்லாமியர்” எனும் ஒரே குடைக்குள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.

மனித வரலாற்றின் ஆரம்பத்தில் காணப்பட்ட குழும அடையாளங்களின் விருத்தியாக மாற்றம்பெற்ற “இன” அடையாளங்கள் சில நாடுகளில் இன்றும் சட்ட ரீதியாகவே பின்பற்றப்படுவது கண்கூடு. மிகச்சிறந்த உதாரணமாக இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக “சோனகர்கள்” என்றே வகைப்படுத்தப்படுவதை எடுத்துக்கூறலாம்.

இதற்கு உதாரணமாக எந்தவொரு இலங்கை முஸ்லிமது இலங்கைப் பிறப்புச்சான்றிதழை எடுத்து நோக்கினும், அதில் இன அடையாளமாக “இலங்கைச் சோனகர்” ( Sri Lankan Moor ) என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசியல் ரீதியாக ஏற்கனவே பிரித்துப்பார்க்கப்படும் ஒரு சமூகம் தமிழர் எனும் அடையாளத்துக்குள் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் தமிழ் பேசும் சாரார் யாராக இருந்தாலும் முதலில் தாம் உளத்தூய்மையுடன் நட்புக்கரத்தினை நீட்டத் தவறுமிடத்து ஏற்கனவே அன்னியப்பட்டுப் போன தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயம் தம்மைத் தூரப்படுத்திக்கொள்ளத் தேவையான அனைத்து வழிகளையும் நாடும் என்பதற்கு “ஏன்” எனும் கேள்வியும் – விடையும் தேவையற்றது.

ஏனெனில் வரலாற்றில் “இனக்கலவரம்” மூலம் தமது இருப்பைப் பாதுகாக்க அத்தனை கைங்கரியத்திலும் ஈடுபட்ட ஜேவர்தனாவும் பிரபாகரனும் மிகச்சாதுர்யமாக இஸ்லாமிய சமுதாயத்தை கையாண்ட கடந்த காலம் நாம் அனைவரும் அறிந்தது.

சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் உணராத அளவு “அன்னியத்தை” தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் உணர்வதன் அடிப்படை என்ன? என்பதை ஆராய்வதிலிருந்து இந்த விடயத்தை ஆழ நோக்கலாம்.

அடிப்படையில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதாவது இலங்கைச் சோனகர்கள் செறிந்து வாழும் இலங்கையின் வட – கிழக்குப் பிராந்தியங்களில் அவர்கள் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் தான் இந்தப் பிளவின் அடிப்படைக் காரணமாக இருந்து வருகிறது.

இந்தப் பிளவுகளின் ஆரம்பம் சாதாரண சிறுவர் பாடசாலையில் ஆரம்பித்து பல்கலைக்கழககங்கள் வரை நீடித்து வரும் உளவியல் போர் மூலம் நிலையான இடத்தைப் பெற்றுக்கொள்கிறது.

அடிப்படையில் தம்மை மொழியால் அடையாளப்படுத்த இலங்கை முஸ்லிம்கள் இணங்கிய கால கட்டம் தகர்த்தெறியப்பட்டதையடுத்து உருவான இடைவெளியை இது வரை காலமும் அதிகாரத்தை அடைந்து கொண்ட அனைத்துத் தரப்பும் பெருப்பித்துக்கொண்டே வந்திருக்கிறதே தவிர அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான நல்லிணக்கத்தை அடி மட்டத்திலிருந்து உருவாக்குவதற்கு போதியளவு முயற்சிகள் மேற்கொள்ள வில்லை என்பதே கசப்பான உண்மை.

அஷ்ரபின் வரவும் வளர்ச்சியும், அதற்கு முந்தைய, பிந்திய சமுதாயப் பின்னடைவுகளும், ஆயுத பலத்தின் மூலம் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றங்களும் , பள்ளிவாசல் கொலைக்கொடூரங்களும் முஸ்லிம் சமுதயாம் தமது தனித்துவத்தைப் பாதுகாப்பதன் மூலமே எதிர்கால அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் எனும் வரலாற்றுப் பாடத்தை அவர்களுக்கு இரண்டு விதமாகப் புகட்டியிருக்கிறது இலங்கை வரலாறு.

1. பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகளின் பெயரில் வேறு ஆயுதந் தாங்கிய காட்டுமிராண்டிகளாலும் அவர்கள் மீது வலுக்கட்டயமாக சுமத்தப்பட்ட சமூக அவலங்கள், கொலைக் கொடூரங்கள்.

2. ஜேவர்தனாவுக்குப் பிந்திய சிங்கள அரசுகள் மற்றும் அஷ்ரபின் வளர்ச்சி மூலமாக தமது அரசியல் உரிமைகளை அரசுடன் நேரடியாகக் கலந்து கொள்வதன் மூலம், அல்லது நேரடி தொடர்பாடல் மூலம் பெற்றுக்கொள்ளுதல் மாத்திரமே சிறந்த வழியெனும் பாடம் புகட்டப்பட்டமை.

இந்த இரண்டுங்கலந்த நிர்ப்பந்தத்தைச் சுமந்து கொண்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைப் பொறுத்தவரை தமது உரிமைகளுக்காக இன்னொரு சமூகத்துடன் இணங்கி வாழ்ந்தாலும், ஒன்று பட்டு பகிர்ந்து வாழ்வதென்பது சாதாரண தேவைகளுள் ஒன்றாக இருக்க வில்லை என்பது ஒரு புறம் இருக்க கடந்த கால அரசியல் அவ்வாறான வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இல்லை.

எனவே, தமது தனித்துவம் அவசியமானது என்பதை ஒவ்வொரு இலங்கை வாழும் இஸ்லாமியரும் தமது ஆழ் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, எதிர்கால சமூக ஒற்றுமை எனும் சந்தர்ப்பமாவது ஒரு மொழி அடையாளத்திற்குள் வருமா என்று பார்த்தால் அதைச் சிதைப்பதெற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு சில இணையங்கள் கைங்கரியங்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

கருத்துப் பகிர்வுகளை ஆரம்பித்து, அதில் சாடுவோரின் கருத்துக்களை முழுமையாகவும், எதிர்த்துரைப்போரின் கருத்துகளை சொல்லப்படும் விடயத்தை எதிர்க்கும் வலுவற்றதாக மாற்றுவதன் மூலம் கேலிக்கூத்தாகவும் மாற்றி இன முரண்பாடு ஒன்றையே தமது நோக்கமாகச் செயற்படும் இவ்வாறான இணையங்கள் தமது வருகையாளர் அதிகரிப்புக்காகவும் குறுகிய வழியில் பிரபலம் தேடவுமே இவ்வாறு செய்கின்றன என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு எதையும் முடிவாக எடுக்க முடியாது.

இதன் பிரதி பயன்களை எதிர்நோக்கிப் பார்க்கும் போது ஆரோக்கியமில்லாத இவ்வாறான குழப்பங்களை உருவாக்கிக் குளிர் காயும் இணையங்கள் மூலம் இணைய உலகிலும் தமிழ் – முஸ்லிம் பிரிவினையை வளர்த்தெடுப்பார்கள் என்பது திண்ணம்.

இதன் பலன்கள் மூலம் தூங்கிக்கொண்டிருக்கும் துவேச உணர்வுகள் “இணையம் தானே” எனும் மனப்போக்கில் தற்காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டாலும் பிறிதொரு காலத்தில் இந்தத் துவேசம் தனி மனித வாழ்க்கையிலும் பின் சமூக ஒன்று கூடல்களிலும் நிச்சயம் பிரதிபலிக்கத்தான் போகிறது.

அதன் மூலம் ஏற்கனவே “வரலாற்றுக் கசப்புணர்வுகளை” சுமந்து செல்லும் இரு சாராரும் மேலும் பிரிவினை நோக்கி நகர்த்தப்படுவர் என்பதையும் கணித்துக்கொள்ளலாம். இதன் மூலம் மிகுந்த பயனைப் பெறுபவர்கள் எப்போதுமே அதிகார வர்க்கத்தினரே.

அதிகாரம் யார் கையில் இருந்தாலும் அவர்கள் அதிகார வர்க்கத்திற்குள் தம்மை உட்செலுத்திக்கொள்வதால் ஒருவரால் இன்னொருவர் எனும் ரீதியில் மீண்டும் மீண்டும் இரு சமூகங்களும் பாதிக்கப்படும் போது பெரும்பான்மை அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் வசம் கை குலுக்கல்கள் மூலம் சமாளிப்பு அரசியலும், தருவதைப் பெறும் நிலையையும் தவிர வேறு ஒரு முன்னேற்றத்தை சிறுபான்மை சமூகம் பெறப்போவதில்லை.

சகோதரத்துவம் என்பது வெளியிலிருந்து வாங்கிக்கொள்ளும் பொருளல்ல அது சம்பந்தப்பட்டவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விடயம் எனும் உண்மை புரியாதளவுக்கு நமது சமூகம் இல்லையாகினும் தற்போது புலிகளின் அழிவுக்குப் பின்னரான சில பச்சோந்தி அரசியல் கருத்தாளர்களின் பார்வைகள் இலங்கையில் நிரந்தர தமிழ் – முஸ்லிம் பிரிவினைக்கு வித்திட்டு வருகிறது.

ஆயா வீட்டில் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் அதையும் மத எதிர்ப்பு கலந்து ஒரு சில பச்சோந்திகள் அதாவது ஆயுதந்தாங்கிய அரசர்கள் காலத்தில் ஓடி ஒளிந்து திரிந்த பச்சோந்திகள் இப்போது புதுப்புது புனைப்பெயர்களில் முளைத்து மத விரோதங்களை வளர்ப்பதன் மூலம் புதிய அத்தியாயத்தை எழுதுவதும் அவ்வாறானோர்களை தமது மடியில் வைத்து தாலாட்டி வளர்த்தெடுப்பதும் இன்றளவில் இவர்களுக்குப் பெருமையாக இருந்தாலும், நாளைய அளவில் வரலாறு வேறு விதமாக மாறும் போது அன்றைய தவறுகளை அவர்கள் உணர்வார்கள். எனினும் கால தாமதமாக அவர்கள் உணரும் போது பிளவுகள் பலமாக இருக்கும்.

இந்த அடிப்படையை அவர்கள் உணராதவர்கள் என்று நினைக்க இயலாத அளவு சாதுர்யமான கட்டுரைகளை வெளியிடுமளவுக்கு புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள் இந்த ஒரு விசயத்தில் அதாவது தமிழ் – முஸ்லிம் பிளவுகளை வளர்ப்பதில் கங்கணங் கட்டிச் செயல்படுவது என்பது சமூக உணர்வுள்ள அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

 

3 responses to “இணையங்களும் இன முரண்பாடுகளும்

 1. Miss Priyakala Kanagaraja

  மார்ச்28, 2011 at 10:56 முப

  thank you

   
  • slmansooras@gmail.com

   ஜனவரி18, 2012 at 11:09 முப

   Oru Muslim……..?
   Neengal Ethanai Vathu Eluthi Ulleergal Enpath Palrukku Puriya Viddalum Selarukku Purithirkkum Ena Naan Ninaikkiran. thamil Pesum Muslimgal Entru Solla Vendiya Avsiyam illai. Muslimgal Mathathal Onru Paddavargal. Moliyal Verupaddu Irkkalaam Neengal Sonar Enrto, Thamil Pasum islaamiyar Enrto Kooravendiya Avsiyam illai. Enve thaniththuvam Udayavargal Enpathil Neengal Kavalaippada thevailai.

    
 2. suji91

  திசெம்பர்14, 2012 at 3:49 பிப

  mmm ipidi thaan pirivinai pirivinainu ellavattaijum pirikkirathila intha inaiyankalin pankum thavaruvathillai,,, manithan enravanitku manitham onru irunthal pirivinai patti pesave maaddan

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: