அதிகார வர்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிக முக்கியமான அம்சம் தாம் அழிய முன் மாற்று சக்திகளை அழிப்பது, இதில் பல படிமுறைகள் அவரவர் ஜனநாயக பூச்சின் அளவைக்கொண்டு மேற்கொள்கிறார்கள்.
இதற்கான சீரிய உதாரணங்களை அமெரிக்காயிசத்திலிருந்தும் புலிகளின் முட்டாள் ஈழமிசத்திலிருந்தும் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
அண்மைய உலக அரங்கை உலுக்கிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத மத்திய கிழக்கு மக்கள் புரட்சி என்பது தற்கால நடைமுறையில் காணப்படும் பூச்சளவிலான மேற்கத்தேய ஜனநாயக அதிகார அளவுகோளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் போது, போற்றப்பட வேண்டிய மக்கள் புரட்சியாகவும், வரலாற்றில் பதியப்படப்போகும் மறுமலர்ச்சிக்காலமாகவும் மாறுவது திண்ணம்.
எனினும், இதன் அடிப்படையில் வீழ்ச்சியில் ஓர் சூழ்ச்சி இருந்தது என்பதையும், அது மத்திய கிழக்கில் எதை தகர்த்தெறிந்தது அல்லது பலவீனமாக்கியது என்பதையும் எண்ணிப்பார்க்கும் வேளையில் வரலாறு ஏற்கனவே பதியப்பட்டதனால் காலதாமதம் பின்னொரு காலத்தில் உணரப்படும்.
அமெரிக்காவின் எதிர்காலம்
உலக வல்லாதிக்க சக்தியாக நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா, எத்தனை காலத்திற்கு அந்நிலையில் தாக்குப்பிடிக்கும் என்பது குறித்து சில காலங்களுக்கு முன்னதாக சி.ஐ.ஏ அறிக்கைகள் பேச ஆரம்பித்திருந்ததை மக்கள் தற்போது மறந்திருக்கலாம் என்பது ஏற்புடையது. அதாவது சர்வ வல்லாதிக்க சக்தியாக இருக்கும் அமெரிக்க மிக விரைவில் சம பலத்துடனான “பிற” சக்திகளுடன் சம மேடையில் அமைதி காக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதே அந்த அறிக்கைகளின் சாரம்சமாகும்.
அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், கறுப்பினத்தவர் மாத்திரமன்றி இஸ்லாமிய பின்புலத்தையும் கொண்ட பராக் ஒபாமா உசைனின் எழுச்சியும், ஆட்சியும் உலக அரங்கில் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கப்பட்டிருக்கையில் மக்கள் எதிர்பார்க்காத வகையில் உலகத்தை ஆட்டிப்படைக்கும் “பொருளாதார” பின் தங்கல் மாயமாக உருவாகி வந்தது என்று கூறுவோரை ஒரு புறம் தள்ளி வைத்து விடுவோம்.
ஒரு சிறு உதாரணமாக, 200 வருடங்களுக்கு முன்பதாகவே அடுத்த 200 வருடங்களில் சந்திக்கப்போகும் போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க நிலக்கீழ் பயணப் பாதைகளை வடிவமைத்துச் செயற்பட்ட மேற்கத்தேய திட்டமிடல், கொள்கை வகுப்பாளர்கள் தம்மை எதிர்கொள்ளப்போகும் பொருளாதார நெருக்கடிகள் பற்றி அறியாமல் தான் இருந்தார்கள் என்பதை வாதத்திற்கே எடுத்துக்கொள்ளத் தவறுபவர்களையும் தள்ளி வைத்து விடலாம்.
ஆனாலும், சர்வ ஆதிக்கத்தைக் கொண்ட மாபெரும் சக்தியாகத் திகழும் நிலையிலிருந்து சறுக்கினால் உலக அரங்கில் அமெரிக்காவின் எதிர்காலம் எங்கு போய் முடியும் என்பதை அமெரிக்க திட்டமிடல் வல்லுனர்கள் அறியாமல் தான் இருக்கிறார்கள் அல்லது அதற்கு மாற்றீடு செய்யாமல் தான் இருக்கிறார்கள் என்று முன்னுரை வழங்க வரும் எண்ணமே யாருக்கும் இருக்காது என்பதே உண்மை.
அமெரிக்காவிற்குச் சமமான வல்லரசாக இந்தியா உருவாகும் என்ற கோஷம் இந்திய அளவில் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டு வருவதை விட சத்தமே இல்லாமல் நிலவு வரை தன் வழியில் புதிய பாதைகளைத் திறக்கும் சீனா குறித்து அமெரிக்கா எச்சரிக்கையாகவே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
புவியியல் ரீதியாக அமெரிக்க நட்புறவை புறந்தள்ளும் நிலைக்கு இந்தியா செல்ல வேண்டுமாக இருந்தால், அணு வல்லமையுடன் பாகிஸ்தானோ, சீனாவோ அல்லது ரஷ்யாவோ அருகில் இருந்திருக்கக் கூடாது, ஆனால் இப்பேற்பட்ட சுற்றுச்சூழலில்தான் இந்தியா இருக்கிறது எனும் உண்மையின் அடிப்படையில் அமெரிக்காவின் எதிர்கால நிலைக்கு இந்தியா ஒரு சவாலாக வருவது என்பது ஆகக்குறைந்தது அரை நூற்றாண்டிற்குப் பின்னர் வாதத்திற்கு வரவேண்டிய விடயம்.
ஏனெனில், விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க நட்புறவு என்பது இந்தியாவுடன் எப்போதும் தொடரும், ஆகக்குறைந்தது நட்புக்கு மரியாதை நிமித்தத்திலாவது, இன்னொரு இந்திரா காந்தி வராத வரை, பேச்சளவும் செயலளவும் இந்திய அரசியலில் ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படும்.
அதனைத் தவிர்ந்த ரஷ்ய ஏதாதிபத்தியம் என்பது காலங்கடந்த எதிர்பார்ப்பாயினும், சீன வளர்ச்சியும், கொரியத் தலையிடிகளும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவைப் பொருளாதார ரீதியில் வீழ்தியே ஆகும் எனும் உண்மை உணரப்படுவதன் விளைவில் ஏற்படப்போகும் பல்வேறு உலக மாற்றங்களில் ஒன்றாகவே இந்த மத்திய கிழக்கு மறுமலர்ச்சிகள் பார்க்கப்பட வேண்டும், அல்லது எதிர்காலத்தில் உணரப்படும்.
சதாமின் வீழ்ச்சிக்குப்பின்னர் மேற்கத்தேய உலகின் தோழராக வர்ணிக்கப்பட்ட கடாபியை கவிழ்ப்பதாலோ, இஸ்ரேலோடு இன்னொரு யுத்தத்தை விரும்பாத முபாரக்கின் ஆட்சியைக் கலைப்பதாலோ, யாருக்கும் தொந்தரவில்லாத பஹரைனின் மன்னராட்சியைக் கவிழ்ப்பதாலோ அமெரிக்காவிற்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கும் கோணம் “பச்சையாக” காணப்பட்டாலும், மத்திய கிழக்கில் சிந்தப்படும் “சிவப்பு” நீரினால் அமெரிக்கா அடையப்போகும் நன்மைகள் மிகக் கொடுமையான ஜன நாயகம் என்பது காலங்கடந்தாவது நிச்சயம் உணரப்படும்.
உலகமே பொருளாதாரச் சிக்கலில் சீரழிந்துகொண்டிருக்கையில் மத்திய கிழக்கில், குறிப்பாக அரபு நாடுகளில் அதன் பாதிப்பு விகிதம் குறைவாகவே இருந்தாலும், மத்திய கிழக்கை ஒன்றிணைக்கும் முக்கியமான விடயங்களைப் பிளவு படுத்துவதன் மூலம் எதிர்கால “சம சக்திகளின்” வளர்ச்சியை அல்லது அதன் வளர்ச்சி வேகத்தை அமெரிக்காவினால் குறைக்க முடியும் என்பது கவனத்திற்கொள்ள வேண்டியது.
சிங்கள அரசுகளால் பாலூட்டி,தேனூட்டி உல்லாசமாய் வளர்க்கப்பட்ட பிரபகராயிசம் தான் அழியும் தருவாயில் எந்த மக்களுக்காகப் போராடியதாகக் கூறியதோ அந்த மக்களையே கூண்டோடு ஒரு இடத்தில் குவித்து எவ்வாறு பலிச் சூழ்சியை மேற்கொண்டதோ அதை விட அதிக பங்கில் தம் நிலை தகர முதல் உலகின் நிலையை தகர்த்துத் தங்கிக்கொள்ளும் வீழ்ச்சியின் சூழ்ச்சியையே அமெரிக்க திட்டமிடலும் செயற்படுத்தப்படுகிறது.
அதற்கான வெளிப்படைப் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவது ஈரானும் சியாயிசமும்.
இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் மாற்றங்களினால் எதிர்காலத்தின் அமெரிக்கா சார்பு நிலை உருவாகுமோ இல்லையோ பலவீனமாகிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் நிலையை கண்டு கொள்ளவோ அல்லது உள் நாட்டு உறவுகள் ஒரு சீரான நிலையை அடையும் வரை, அடுத்ததாக பிராந்திய நிலை சுமுகமாக மாறும் வரை, கூட்டணிகள் மூலம் பிற சக்திகளைப் பலப்படுத்தும் மனோ நிலையை ஈரான்,எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா போன்ற முக்கிய நாடுகளிடம் காணப்படப்போவதில்லை.
இதன் மூலம் பொருளாதார கூட்டணிகளின் பிணைப்பைப் பலவீனப்படுத்தி, சீர் குலைந்திருக்கும் மேற்கத்தேய பொருளாதார பலவீனத்தாக்கத்தை மத்திய கிழக்கு முதல் ஆசியா வரை விரித்து, தமது நிலையை உலகுக்குப் பலவந்தமாகத் திணிக்கும் திட்டமிடலை அரங்கேற்றுவதில் அமெரிக்க அதிகாரத்திற்கு பெருந் தடைகள் தளர்த்தப்படுகிறது.
மறு புறத்தில் சீனப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்தின் சக்தியாக மாற்ற முனைந்துகொண்டிருக்கும் சீனத் திட்டமிடல்களை சமாளிப்பதில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் தமது முன்னாள் சகாக்களை அல்லது முன்னாள் நண்பர்களை இழக்கும் அமெரிக்க சூழ்ச்சியின் இன்னொரு காரணம் என்பது உணரப்படும்.
எனவே, தாம் வீழும் போது மாற்றாரையும் பலவீனப்படுத்தியே ஆக வேண்டும் எனும் அதிகார வர்க்கக் கோட்பாட்டை அதிகார உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா மீண்டும் நிரூபிக்கிறது.
எதிர்கால உலகம்
ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவரவர் பங்குக்கு உலக நாடுகள் போட்டி போட்ட காலம் மறைந்த பின், வல்லாதிக்கப் பனிப்போர், வல்லாதிக்க எதோச்சாதிகாரம் என்று பல் வேறு வகை வரலாற்றை 1900 – 2000 வரை கண்டு களித்து விட்ட நவீன உலகம் பொருளாதார ஏகாதிபத்திய நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா எனும் கேள்வி ஒரு புறமிருக்க, சீர் குலைவினால் சமப்படுத்தல் மூலம் மீண்டும் வல்லாதிக்கம் துளிர் விடுமா எனும் கேள்வியும் முன் வைக்கப்படும் நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதது.
இருந்தாலும் ஆதிக்க சக்திகள் பேரழிவின் நுனியில் இதைத்தான் செய்யும் என்பதையும் உலக வரலாறு நமக்குப் புகட்டித்தந்திருக்கிறது. திரைமறைவில் அதைச் செய்யும் “அறிவாளிகளாக” அமெரிக்காவும், ஆக்ரோஷமும், வளர்த்த கடா மார்பில் பாயும் ஆத்திரமும் அடக்க முடியாத அப்பாவியாய் கடாபியும் இன்று நம் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதை விட, இரு முனைகளிலும் செயல்படுவது ஆதிக்க, அதிகார வெறி என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியது.
சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை எப்போதுமே இதைத்தான் செய்தார்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள். அதைக் கடந்த காலங்களிலும் நாம் கண்ணுற்றோம், கடந்த வருடமும் கண்ணுற்றோம், இந்த வருடமும் கண்ணுற்று இன்பம் பெற்றுக்கொண்டேயிருப்போம்.
நீண்ட காலஅதிகாரத்தில் இருக்கும் யாரும் இதைத்தான் செய்வார்கள், அதற்கு ஜனநாயகப் போர்வை இருந்தாலும் கூட அதன் செயற்பாடுகளில் அதீத ஒற்றுமை காணப்படும். இந்த மக்கள் எழுச்சி என்பது தற்செயலாக இருந்தாலும், திட்டமிடலாக இருந்தாலும், பேராதிக்கவாதிகளுக்கு ஒரு செய்தியை நன்கு திட்டமிட்டு சொல்லியிருக்கிறது.
எனவே தான், அமைதியாக ஆரம்பித்த மக்கள் எழுச்சி இன்று சொந்த மக்களுக்கெதிராக ஒரு தலைவனை ஆத்திரங்கொண்டு திரண்டெழவும் செய்திருக்கிறது.