RSS

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?

02 நவ்

வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு.

இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?

ஒன்று பட்ட இலங்கை என்பதன் அடிப்படை ஆளும் வர்க்கத்தின் கொள்கைக் கோட்பாடு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் அதை மக்கள் மயப்படுத்தி வேற்றுமைகளை வளர்ப்பதும் அதைப் பரிபாலிப்பதும் அரசியலின் அடிப்படை.

இந்த இரண்டையும் தாண்டி மக்கள் என்பது சாத்தியமா என்றால் அது நடைமுறையில் சவாலான விடயமாகக் கருதப்படும், இந்த இரண்டும் இல்லாத மக்கள் ஒற்றுமை சாத்தியமா என்றால்? அது சாத்தியம் என்று அடித்துக் கூறிவிடலாம்.

எனவே, அரசியலுக்கப்பாற்பட்ட சமூக ஒற்றுமைக்குத் தடையாக இருக்கப்போவது ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் கோட்பாடுகளும், அவற்றை அவர்கள் செயற்படுத்த உபயோகப்படுத்தப் போகும் அரசியல் வாதிகள் எனும் கருவிகளும் தான் என்பதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் தயக்கம் இருக்கப் போவதில்லை.

இந்த சவாலை மகிந்த அரசு அறியுமா? அறிந்தாலும் அதற்கான விடிவைப் பெற்றுத்தருமா என்பது என்றாவது ஒரு நாள் மீண்டும் இலங்கைக்கே போய் விட வேண்டும் எனும் ஏக்கத்தில் வாழ்பவர்களின் மனதில் வாழும் பிரதானமான கேள்வியாகும்.

பிரபாகரனை அழித்தொழித்த கையோடு அவசர அவசரமாக களையெடுப்பைச் செய்து கொண்டு வந்த வெளிப்பக்க மகிந்த அரசைக் கூட விமர்சனம் பண்ணத் தெரியாத வங்குரோத்து நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்க, நாட்டில் என்ன நடக்கிறது எனும் அனுமானமே இல்லாத நிலையில் தான் தமிழ்க் கட்சிகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி அரசியலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் பல்வேறு பட்ட குழப்ப நிலைக்குள் தந்திரமாக பிரதான (Main steam) அரசியலை வெளியில் வைத்துப் பாதுகாக்கும் புத்தி சாதுர்யமான மகிந்தா சகோதரர்களின் அரசியல் வலையிலிருந்து மீண்டு எழுவதற்கு இன்னும் நூறு ரணில் விக்கிரமசிங்காக்கள் பிறக்க வேண்டும்.

இலங்கையின் அபிவிருத்தி என்பது உலக அரங்கில் இனிமேல் ஆர்ப்பாட்டமில்லாமல் அரங்கேற்றப்படும்.

இந்த அபிவிருத்தியைத் தடுக்கும் சக்தியோ அல்லது இணைந்து பணியாற்றும் சக்தியோ கூட தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு இல்லாத நிலையில், மகிந்தா சகோதாரர்களின் பாதை மிகத் தெளிவானதாகவும், தங்கு தடையற்றதாகவும் இருக்கப்போகிறது.

சூழ்நிலை அரசியலின் ஆளுமையில் தவித்திருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறுவதற்கு எடுக்கப்போகும் காலத்திற்குள், இலங்கையின் அரசியல் நிலைப்பாடும் நாட்டின் பயன்பாடும் முதலாளித்துவ சுரண்டல்களின் மையமாக நவ நாகரீக முறையில் மாற்றம் பெற்றிருக்கும்.

பல்வேறு சர்வதேசப் பங்காளர்களின் தலையில் (ஏறத்தாழ பிரேமதாசா பிரபாகரனிடம் வடக்கைக் கொடுத்து ஏகபோகமாக தமிழர் காதில் புலியின் பிரசன்னத்தை ஊதிப் பெருப்பித்ததைப் போல) கட்டிவிட்டு, விளைச்சலின் சுகபோகத்தை தம் குடும்பத்தோடும், ஒரு பகுதியை நாட்டோடும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிங்கப்பூரின் “லீ” யை மிஞ்சிய ஒரு வரலாற்றுப் பதவியை நோக்கி மகிந்த சிந்தனை பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடைவெளியை நிரப்ப, மக்கள் அபிப்பிராய பேதத்தை ஏதாவது ஒரு வழியில் உருவாக்கும் பழைய அரசியலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அதைத்தவிர எதையும் செய்யத் தெரியாத காரணத்தினால் மகிந்தாக்கள் எதிர்பார்க்கும் ஆனால் நேரடியாகத் தலையிட விரும்பாத “பிளவுகளை” தானாகத் தோற்றுவிப்பார்கள்.

இந்தப் பிளவுகளுக்காக தரங்கெட்ட அரசியல் பாவிக்கப் போகும் பிரதானமான ஆயுதம் மீண்டும் இனப் பிளவுகளாகும். இலங்கையில் பிரதானமாக ஏற்படுத்தக்கூடிய இனப் பிளவுகள் என்பது சிங்கள – தமிழ் அல்லது முஸ்லிம் – தமிழ் அல்லது சிங்கள – முஸ்லிம் பிளவுகள் என்ற வகைகள்.

எனினும், மீண்டும் இந்தப் பிளவுகளின் போது ஆயுத , அதிகார ஆளுமைகளின் விதமும், வகையும் வேறுபட்டுக் காணப்படப்போகிறது.

அரசோடு இணைந்து செயற்படும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படப்போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்த வரை கடுகதியாக முன்னேற முடியாத கட்டாயம் என்பது தங்கி வாழும் அல்லது சார்ந்து வாழும் நிலைக்கே அரசியலையும் மக்களையும் இட்டுச் செல்லும் எனும் போது, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்பவர்களிடன் யார் முந்தி சலுகைகளைப் பெற்றுக்கொள்வது எனும் போட்டிதான் நிலவுமே தவிர பெற்றுக்கொடுப்பது என்பது இரண்டாம் கட்டத் தேவையாக மாறிவிடும்.

எனவே சராசரி வருமானத்திற்குக் குறைந்த நிலையில் வாழும் மக்கள் மீண்டும் மீண்டும் தயவில் வாழும் நிலைக்கும், அல்லது குறுக்கு வழியில் முன்னேறிச் செல்லும் பழைய நிலையிலுமே வைத்துப் பாதுகாக்கப்படுவார்கள். எனவே சலுகைகளைப் பெற்றுக்கொள்வதையே தமது உச்ச பட்ச இலக்காகக் கொண்டு வாழும் ஒரு தரத்தினரையும் பிரித்தாளும் வர்க்கத்தினர் உருவாக்கி விடுவார்கள்.

இந்த நிலையை சிங்கள மக்கள் உணர்ந்து புரட்சி செய்வதற்கான கால அவகாசத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் தென்பகுதி காணப்போகும் மாற்றங்களில் ஏற்படும் மாயையையும், நாட்டைக் குட்டிச் சுவராக்கிக்கொண்டிருந்த போரினை முடிவுக்குக் கொண்டு வந்து சுபீட்சத்துக்கு வழி சமைத்த மகிந்தாக்களின் சேவை தொடர்பான எண்ணங்களையும் பிரித்தறிந்து அம்மக்கள் எப்போதும் சாதகமாகவே பார்க்கப்போவதனால், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் வளங்கள் மூலமாக அவர்கள் வாயடைக்கப் படுவார்கள்.

எனவே தமிழ் – முஸ்லிம் உறவுகள் சீர்குலைந்திருப்பதன் தேவையே எதிர்கால முதலாளித்துவத்துக்கு பேருதவியாக இருக்கப்போகிறது.

இந்தத் தேவையை அரச சார்பில் நிறைவேற்றி வைக்கப்போவது யார் எனும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமாகினும், இதன் மூலம் தோல்வியைக் காணப்போவது ஏற்கனவே போர் எனும் பெரும் பூதத்தால் பெரும் பின்னடைவை சந்தித்த அதே தமிழ் பேசும் சமூகமாகும். அவர்களுக்கான மாற்றீடாக வெளிநாடுகளின் உருவம் முன்னால் வந்து நிற்கப்போவதால் அதற்கான வழிகளில் தன் நிறைவு பெறுவதே எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அவர்களின் முதற் தேவையாக இருக்கப் போகிறது.

இந்த வெற்றிடத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் விழித்துக் கொண்டாலன்றி ஆத்மார்த்தமான ஒன்று பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

தற்போது விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள “இடத்தை” தமது ஆளுமையின் மூலம் நிரப்பிக்கொண்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடருமாக இருந்தால் நாளடைவில் இதனை மீண்டும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வர்க்க ஆளுமையின் மூலம் சிறுபான்மையினர் தரம் பிரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். அந்தத் தரம் பிரித்தலின் போது மீண்டும் வன்முறைகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையாகினும், பிரிவினைகள் முன்னரை விட ஆழமாக விதைக்கப்படப்போவது திண்ணம்.

அந்த விதைப்பின் பின்ணனியில் இலாபமடைவது மீண்டும் வர்க்கக்கூட்டு அரசியலாக இருந்தாலும் உண்மையான நட்டத்தின் பாதிப்பு சிறுபான்மைத் தமிழ் பேசம் சமூகத்தையே வந்து அடையும். சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவ்வாறான உளவியல் போரினை கட்சி ரீதியாகவும், அரசியல் வேறுபாடுகளாகவும் மாத்திரமே உணர்ந்து கொள்ளப்போவதனால் அவர்களுக்கு இது முக்கியத்துவமற்ற விடயமாகவே இருக்கும். தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்தவரை இதன் பாதிப்புகள் அரசியல் வரையறையைத் தாண்டிய இன, பிரதேச மற்றும் தராதரப் பிரச்சினைகளாகவும் உருவெடுக்கும் நிலையை அறிந்து அரசியல்வாதிகள் தமது நிலை மாற்றத்தினை உரிய நேரத்தில் மேற்கொள்ளவில்லையாயின் உண்மையான முன்னேற்றத்தை தமது சமூகத்துக்கு அவர்களாலும் வழங்க முடியாது, இவ்வாறான நிலை ஏற்படாமல் தடுக்கும் வகையில் உள்ளாட்சிக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொள்ளத் தவறினால் மகிந்த அரசாலும் ஆத்மார்த்தமான ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்க முடியாது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: