RSS

அரசியல் குத்தாட்டம்

22 அக்

அரசியல் குத்தாட்டங்களை காலத்திற்குக் காலம் அரங்கேற்றி, யார் கெட்டாலும் தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்படும் ஒரு சமுதாயம் இருக்கும் வரை, அந்த சமூகத்திற்கான விடிவைப் பற்றி சிந்திக்கும் அக்கறை எந்த ஒரு அரசியல் தலைமைக்கும் இருக்கப் போவதில்லை.

இந்த உண்மையை தமிழ் பேசும் நல்லுலகம் உணர்ந்து கொள்ளாத வரை தீர்வு என்பது வெறும் பேச்சளவில் மாத்திரமே இருக்கப் போகிறது என்பதை மகிந்த ராஜபக்சா சொல்லித்தான் புரிய வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இல்லை என்றாலும், இன்னும் இருபது வருடங்கள் சென்றாலும் அரசியல் வாதிகள் இதை உணரப்போவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

திருடர்கள் எல்லோரும் திடீரெனத் திருந்தி, நான் திருடவில்லை அவன் மட்டும் தான் திருடினான் என்று கூறுவது எப்பேற்பட்ட நகைச்சுவை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மாத்திரம் விளங்கக்கூடிய விடயம்.

இணையத்தில் இன்று பரவலாகக் காணப்படும் பிள்ளையானின் அரசியல் குத்தாட்டமே இன்றைய நமது தலைப்பிற்கு அடிப்படைக் காரணமாகும்.

இது வெறும் பிள்ளையானின் குத்தாட்டமாக மாத்திரம் கணிக்கப்பட முடியாத ஒரு விடயம், ஏனெனில் நாளடைவில் இலங்கை அரசியலைப் பொறுத்த வரை இப்படியான குத்தாட்ட வீரர்கள் திரை மறைவிலும், சில வேளைகளில் பிள்ளையான் போன்று திரைக்கு வெளியிலும் எப்போதும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அரங்கேறிய “புத்தி சாதுர்யமான” வரலாற்றுக் காவியங்கள் கொண்டு வந்த சமூகப் பிளவுகளையும் அரசியல் வெறுமையையும் மேலும் வலுப்படுத்தும் நிலையில் இருந்து இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் மாறி வருவதற்கு எடுக்கப்படப்போகும் கால இடைவெளியில் மகிந்த இராச்சியம் பலம் மிக்கதாக வேரூன்றியிருக்கும்.  அந்த நிலையில் மீண்டும் சமூக முன்னேற்றம் பற்றிய ஒப்பீடுகள் இன்றைய கால கட்டத்தில் இருந்த அதே அளவுடன் , தரப்படுத்தக் கூடியதாகவும் , பின் தங்கியதாகவும் காணப்படும் அவலத்தின் பொறுப்பை இன்றைய அரசியல் தலைமைகள் தார்மீகப் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அவர்களைத் தொடர்ந்து வரப்போகும் அவர்கள் வாரிசுகளும் வரலாற்றுத் தவறுகளை எடை போட்டு, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளத்தயாராக இருக்கப்போவதில்லை, அதற்கான அடிப்படைக் காரணம் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்படப் போகும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள்.

இன்றைய நிலையில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கலைவதிலோ அல்லது ஒற்றுமையான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலோ அரசுக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ, விடுதலைப் புலிகளின் அரசியல் ஞானம் தவறு என்று கண்டறிந்து வெளியேறியதாகக் கூறும் பிள்ளையானுக்கோ அவரது முன்னாள் குரு கருணா அம்மானுக்கோ அல்லது தமிழ் கூத்தமைப்பின் முன்னாள் தியாகிகளுக்கோ இருக்கப் போவதில்லை.

இதில் கே.பியும் விதி விலக்காக இருக்கப் போவதில்லை என்பது அண்மைய அரங்கேற்றங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள். முன்னாள் “அவர்”  திடீரென “இவராக” மாறுவதென்பது சாத்தியமற்ற சமூகச் சிக்கல் என்பதை கே.பி க்கும் நன்றாகத் தெரியும், அவரை ஆதரித்து இன்று பிரச்சாரப் பீரங்கிகளாக மாறியிருக்கும் அவரது விசுவாசிகளுக்கும் நன்கு தெரியும்.

மக்களின் வறுமையையும், இயலாமையையும் பயன்படுத்தி உருவாக்கிக் கொள்ளும் அரசியல் தோற்றத்தினால் எதுவரை பயணிக்க முடியும் என்பதை மகிந்தா சகோதரர்களும் வெளியுலக அரசியல் அவதானிகளும் நன்கறிவார்கள்.  கே.பி உட்பட இலங்கையின் அரசியல் வாதிகள் இதை அறிவார்களா என்பது கேள்விக்குறியே.

நல்லிணக்கத்தைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் தமது இருப்பைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதனால் உலகிற்கு நல்லுபதேசம் செய்யும் நிலையில் வைத்து தமது பொறுப்பான அரசியலை மகிந்த சகோதரர்கள் செய்யும் வழியையும் இவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள் எனும் உண்மையை உணரும் போதே, நம்மிடையே காணப்படும் அரசியல் வெறுமையின் ஆழம் நமக்குப் புரிய வேண்டும்.

பதவிகளும்,புகழ்ச்சிகளும் இணைந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் கடினமாக உழைக்கும் குத்தாட்டக்காரர்களை மீண்டும் ஆட்சியல்அமர்த்தும் தவறை அடுத்த தடவையும் மக்கள் எவ்வாறு செய்யப்போகிறார்கள் என்பதை காலம் நமக்கு எடுத்துச் சொல்லும் அந்த நேரத்தில் சாதாரண மக்களின் அரசியல் மயப்படுத்தப்பட்ட வேற்றுமைகளை இனங் காண்பது மிகக் கடினமாக அமையும்.

மக்களுக்கும் குத்தாட்ட மகேசன்களுக்குமான இடைவெளியை அதிகரித்து வைப்பதே தீர்வில்லாத சமூக அரசியலின் அடிப்படை என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் அரசியல் தலைமையும் அதன் வெளிநாட்டுப் பங்காளிகளும் மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு உரிமை வழங்கல் எனும் பெயரில் அடக்கியாளும் திறனை வளப்படுத்திக் கொள்ளும் அதே வேளை சமூக வேறுபாட்டு ஏற்றத் தாழ்வுகளை இலங்கைத் தீவில் சாதி,மத பேதமின்றி அரங்கேற்றுவார்கள்.

எதிர்காலத்தில் இதன் விளைவுகள் அனைத்து சமூகங்களுக்குள்ளும் இருக்கப்போகிறது என்பதை நியாயப்படுத்துவதன் மூலம் மீண்டும் மீண்டும் அரசியல் குத்தாட்டம் மேலோங்கி வளர்வதும் அரங்கேறத்தான் போகிறது.

இருந்த நிலையை விட நல்ல நிலை எனும் விளக்கத்திற்குள் அடங்கிப் போகும் மக்கள் ஒரு பக்கம் இருக்க, ஆட்சியாளர்களின் சுகபோக அரசியலில் தமது உரிமைகளை விட்டுத்தொலைத்து விட்டு மீண்டும் அனாதராவாகத் தவிக்கப்போகும் எதிர்கால அரசியல் நிலையை எண்ணிப் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.

அப்படியான எதிர்கால நிலை உருவாகும் போது, அதைத் தடுக்கும் வழி காட்டலையோ அல்லது முன் மாதிரியையோ உருவாக்கத் தவறும் எந்த ஒரு இன்றைய அரசியல் வாதியும் மக்களுக்காகப் போராடப் போவதில்லை என்பது திண்ணம்.

இது கே.பிக்கும் பொருந்தும், கருணா அம்மான், பிள்ளையான், கூத்தமைப்பு, அமைப்பின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் மக்களை கோரப்பிடியில் வைத்து பல தசாப்தங்கள் பின் நோக்கிக் கொண்டு சென்று மண்டியிட்டு மடிந்து போன பிரபாகரனுக்கும் பொருந்தும்.

இவர்கள் அனைவரும் தமது இருப்பைப் பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை தெளிவான அரசியல் சிந்தனையில் இது வரை வெளிக் காட்டவில்லை. எனவே மக்கள் உரிமை என்பதெல்லாம் தயவில் தங்கியிருக்கும் நிலைக்கு பின் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்குமே தவிர முன்னேறப்போவதில்லை.

புதிய பாத்திரத்தில் பழைய கள்ளாக மீண்டும் மீண்டும் அதே நிலைக்கு மக்களை விட்டுச் செல்வதை விடுத்து உருப்படியாக என்றாவது எதையாவது இவர்கள் செய்ய மாட்டார்களா என்று ஏங்கும் சாதாரண மக்கள் வசதியான வீடுகளில் தான் வாழ வேண்டும் என்பதில்லை, அன்றாட உணவுக்கும் முடியாமல் இருக்கும் ஏழைக் குடிமகனிடமும் இருக்கும்.

ஆனால் அதை யாரால் வெளியில் சொல்ல முடியும் என்பதே கேள்வியாகும். அதை வெளியில் சொல்லும் சுதந்திரத்தையும் அதன் பின்னான தனி மனித பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு குத்தாட்ட அரசியல் ஒரு போதும் மக்களுக்கு உதவப்போவதில்லை.

 
2 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஒக்ரோபர்22, 2010 in அரசியல், சமூகம்

 

2 responses to “அரசியல் குத்தாட்டம்

 1. Sundar

  ஒக்ரோபர்23, 2010 at 9:12 முப

  Very nice article.

   
 2. maaran

  ஒக்ரோபர்24, 2010 at 5:18 பிப

  100 % உண்மை

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: