என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்?
விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம்.
தமிழீழ மாயை ?
பெரும்பாண்மை அடக்கு முறையிலிருந்து விடுபட்டு வாழ, தனித்துவமும் தன்னாட்சியும் சுதந்திரமும் வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளாத தமிழர் ஒரு காலத்தில் இல்லையெனும் அளவுக்கு தமிழீழத்தின் ஈர்ப்பு மக்களிடத்தில் ஆழ ஊடுருவி இருந்த காலத்தில், அதிகார மிலேச்சைத்தனத்தின் உச்ச கட்டமாக ஒரு சுய நலக்கும்பலின் நாசகார செயற்பாடுகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி அழிக்கப்பட்ட, அடியோடு அகற்றப்பட்ட ஒரு உன்னதமான கனவு தமிழீழம் என்றால் அது மிகையாது.
இந்தக் கனவின் உன்னதம் அறிந்து கை கோர்த்த எத்தனையோ பெரும் புள்ளிகள் நாளடைவில் அரசியல் எதிர்காலம் இல்லாத வங்குரோத்து நிலையினை நன்குணர்ந்து தம்மை விலக்கிக்கொண்ட வரலாறும், அரசியல் திட்டமற்ற அரக்கப் போக்கினை சகிக்க முடியாமல் விலகிக்கொண்ட வரலாறும் சிறு பிள்ளையும் அறியும்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உணர்வில் குடிகொண்ட தமிழீழக் கனவை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடிக்கும் வரை நடந்த ஒவ்வொரு அநாகரீகமும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் போது, தமிழீழம் எனும் கனவு மாயையாகிப் போய் இன்று எல்லையும் இல்லாமல், நிலமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையெல்லாம் யாரால் வந்தது என்ற ஆராய்வு தேவையற்ற நிலையை அடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.
இந்தக் கால மாற்றத்தின் போது, எவ்வாறு உருவான ஒரு தமிழீழ உணர்வு மாயையாகிப்போனதோ அவ்வாறே அதை உருவாக்கிய காரணியும் தேய்ந்து போனது எனும் உண்மையை தமிழீழத்தை அந்தரத்தில் வைத்து அழகு பார்ப்பவர்கள் ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அடக்கு முறை சர்வாதிகாரத்தில் அரசியல் முன்னெடுத்த பெரும்பாண்மையினம் தேய்ந்த அதே நேரத்தில் திட்டமேயில்லாத ஆயுதப் போராட்டத்தை அரசியல் மயப்படுத்திக்கொண்டு சென்றதன் விளைவை அப்போது அறிய மறுத்த புத்திஜீவிகள் இப்போது மட்டும் வீறு கொண்டு எழுவது வேடிக்கையானது.
அதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது, “அவர்” இருக்கும் வரை புத்தி ஜீவிகளை சிந்திக்கக் கூட இடங்கொடுக்காமல் விட்டு விட்டார் என்று, இன்று “அவர்” மீது இவர்கள் சேறு பூசும் மறைவான நாடகம் தான் இப்போது நடந்தேறுகிறது என்பதை அறிய மறுக்கும் கடை நிலை பக்தனுக்கு எதைச் சொன்னாலும் ஏறப்போவதில்லை. காலம் பதில் சொல்லாமலும் விடப்போவதில்லை.
ஒரு சமூகத்தைக் கட்டியாளும் கவர்ச்சிகரமான தலைவர்கள் எப்போதாவது தான் பிறப்பார்கள், அப்படியொரு தலைவன் தனக்குக் கிடைத்த வழிகளைக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்வதை விடுத்து, தன் இருப்பையும் மூன்று தலைமுறையினரையும் எவ்வாறு அழித்தொழிக்க முடியும் என்பதற்கு “அவர்” காரணமோ இல்லையோ அவரைச் சுற்றியிருந்து தம்மை வளப்படுத்திக் கொண்ட இவர்கள் தான் மிகப் பெரும் காரணிகள்.
இன்றளவும் தமிழ் மக்களை முட்டாளாக்குவதன் மூலம் இவர்கள் எதைச் செய்யப் போகிறார்கள் என்பதை இன்று கேள்வி கேட்கும் முக்கியமான நபராக கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் மாறியிருக்கிறார் என்று ஒத்துக் கொள்ள மறுப்பவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
மாற்றப்பட்டது தான் உண்மை என்று எடுத்துக்கொண்டால் கூட, இப்படி நிலை தடுமாறுபவர்களைத் தான் உங்கள் சூரிய குமரன் அருகில் வைத்துக்கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள், அதை ஏற்றுக் கொள்ளும் மறு கணம் இப்போது அந்தரத்தில் தமிழீழம் காட்ட வந்திருக்கும் இவர்கள் நிலை தடுமாறப் போவதில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்?
அண்மைய ஒளிப்பதிவுகள் வெளிவரும் வரை கே.பி எப்படியிருப்பார் என்பதே வெறும் ஊகமாகத்தான் பெரும்பாலனவர்க்கு இருந்தது, அப்படியிருந்த ஒரு நபர், அதுவும் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த இந்த கே.பி க்கே உங்கள் வாதப்படி இப்படியான நிலை தடுமாற்றம் என்றால் சும்மா வரும் பணத்தில் மில்லியேனர்களாக இருக்கும் அமெரிக்க புத்திஜீவிகளுக்குள் எப்போதோ இந்த மாற்றம் வந்திருக்க வேண்டும், ஆனால் அது எப்போது பகிரங்கமாகும் என்பது மட்டுமே இன்றைய கேள்வி.
சுற்றி வளைக்கப்பட்ட தலைவனைக் காப்பாற்ற மில்லியன் கணக்கில் பணத்தை விரயப்படுத்த விரும்பாத சீருடைச் சருகுப் புலி பற்றியெல்லாம் கே.பி தகவல் தருகிறார், வெள்ளை வேட்டியில் இருக்கும் தமிழ் நாட்டு நரிகளின் கதைகளும் இனி வரும் காலத்தில் முழுமையாக வெளிவரக் காத்திருக்கிறது, இத்தனைக்கும் மேலாக நாட்டுக்கு நாடு அவை வைத்து அந்தரத்தில் பாராளுமன்றம் கட்டி அதில் இல்லாத தமிழீழத்தை ஆள நினைக்கும் குமரர்களுக்கு என்ன பங்கு இருக்கப்போகிறது என்பது காலம் சொல்லப் போகும் உண்மைகள்.
உணர்ச்சியூட்டல் ஆயுதம் புறக்கணிக்கப்படும் வரை கிடைக்கும் 10 யூரோவையும் விடப்போவதில்லை இந்த முடிசூடா மன்னர்கள்.
எப்போது கடைநிலை பக்தன் தான் கொடுத்த ஒரு காசுக்கும் கணக்கு கேட்க ஆரம்பிப்பானோ அப்போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மீண்டும் தமிழீழ உணர்வை அந்தரத்தில் விட்டு விட்டு இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
இதன் இடைவெளியில், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலிருந்து அந்நியப்பட்ட ஒரு மக்கள் சமூகம் நிலத்தில் உருவாவதை கே.பியாலும் தடுக்க முடியாது.
கடந்த வருடமே ” சமத்துவமா? அடிமைத்தனமா? ” என்று தலைப்பிட்டு ஒரு பதிவை மேற்கொண்டிருந்தோம். அங்கு உருவாகப்போகும் ஒரு புதிய சமூகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்களது பிரதான தேவையான வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றம் புலியோ இந்தப் புளுகர்களோ அற்ற நிலையில் வந்தடையத்தான் போகிறது.
அதை எவ்வாறு குழப்புவது என்பது மட்டுமே இந்தக் குருடர்களின் செயற்திட்டங்களில் காணப்படப்போகிறதே தவிர, சமஷ்டியில் சுய கொளரவத்தைப் பெற்று, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு அந்த மக்களுக்கு இவர்களால் எதுவும் செய்ய முடியாது.
அரசாங்க உதவிப் பணத்தைப் பெறுவதற்காக சொந்த மனைவியையே விவாகரத்துச் செய்து விட்டதாக ஏமாற்றித்திரியும் இந்த அண்டப் புளுகர்கள் புலம் பெயர்ந்த மக்களுக்காகத்தான் தமிழீழத்தை நாடு கடத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அதை அவர்கள் தாராளமாகச் செய்து கொள்ளலாம்.
ஏனெனில், இறுதியில் அவர்கள் அவை உறுப்பினர்ள் மட்டுந்தான் அந்த மாயையில் வாழப் போகிறார்கள், அது மக்களைப் பெரிதளவில் பாதிக்கப்போவதில்லை.
தற்போது கிளம்பியிருக்கும் மக்கள் விழிப்புணர்வை என்ன செய்தாவது அடக்கி வைக்க வேண்டும், அவர்களை மீண்டும் உணர்ச்சியூட்டிக் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் மேற்கொள்ளும் நடை பயணங்கள், போராட்டங்கள், கவனயீர்ப்புகள் எல்லாம் அந்தரத்தில் வாழத் திட்டமிருக்கும் மாயையை வளர்த்தெடுக்க மட்டுமே உதவப்போகிறதேயன்றி, இவர்களைப் போலல்லது தமது சொந்த நிலத்திலேயே இவர்களால் ஒரு புறமும் அவர்களால் ஒரு புறமும் சிதைக்கப்பட்ட வாழ்க்கையைக் கட்டியமைக்கப் போராடப்போகும் சாதாரண தமிழனுக்கு இவர்களது முட்டாள் முயற்சிகளால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் சினிமாவில் தலைவனுக்காகத் தீக்குளிக்கும் தொண்டர்களைப் பார்த்துப் பழகிய பிரபாகரன் தனக்காக யாரும் வராததைக் கண்டு அவர்களைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பலி கொடுத்த வரலாறு இன்னும் பல நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கும். இப்படி ஆங்காங்கே நடக்கும் சில தொண்டர்கள் தீக்குளிப்புகளுக்குப் பின்னால் கூட வறுமையும், பணமும், பல வந்தமும் விசைகளாகச் செயற்பட்டமையையும் அதே தமிழ் சினிமா எடுத்துக் காட்டுகிறது.
உண்மையான பாதிக்கப்பட்ட சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட இந்த வேடிக்கையின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பித்திருக்கும் அதே வேளை தம்மைக் கட்டியெழுப்ப தம் கைகளை மாத்திரமே நம்பியிருக்கும் ஒரு சமூகமும் மெல்ல மெல்லத் துளிர் விடுகிறது.
அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து உணர்ந்து கொள்பவர்கள் தம் சொந்தக் கைகளாலேயே நேரடியாக அவற்றை செய்து முடிப்பது சாலச் சிறந்தது.
சிறுபாண்மை,பெரும்பாண்மை அடக்குமுறை வரலாறுகளெல்லாம் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த கால வரலாறுகள் ஆகிக்கொண்டு போவதைத் தடுப்பதற்கு முண்டியடிப்பதை விட பெரும்பாண்மை, சிறுபாண்மை மற்றும் இதர தரப்பினரையும் இனி வரும் காலத்தில் கட்டியாளப்போகும் வர்க்க நிலை மாற்றங்களை எதிர்கொள்வது தான் நாளைய இலங்கையின் ஒவ்வொரு குடிமகனினதும் தேவையாக மாறப் போகிறது.
அவ்வாறான ஒரு நிலைக்கு நாடு மாறிக்கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் கற்காலத்துக்கே தம் சமுதாயத்தை இட்டுச் சென்று உணர்ச்சியூட்டி மாயையில் வைத்திருக்கத் துடிப்பவர்களை காலம் தண்டிக்கும் என்பது பொறுத்திருந்து காணக்கூடிய வரலாறு.
பலத்தோடு இருந்த போது கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து உலகமே தன் காதுகளைப் பொத்திக்கொண்ட போது “மெளனித்தும்”, இன்று ஐநாவில் பிரிகேடியர் நிரந்தரப் பிரதிநிதியாகிவிட்டதன் பின்னால் “சரணடைந்ததை” ஏற்றுக்கொண்டும் தமது புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் இந்த புத்தி ஜீவிகளின் தமிழீழ மாயை அவர்களோடு வாழ்வதில் யாருக்கும் ஆட்சேபனையில்லை. மாறாக, கடின உழைப்பை ஆதாரமாகக் கொண்டு வாழும் அப்பாவித் தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை.