RSS

சமத்துவமா? அடிமைத்தனமா?

01 ஜூலை

சமத்துவமா? அடிமைத்தனமா? இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய் என்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? எனும் சந்தேகம் பெரும்பாலானோர் மனதில் ஏதாவது ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கிறது.

இந்த சந்தேகம் வெளிநாட்டில் இருப்போரின் வெளிமனதிலும், உள் நாட்டில் இடைத்தங்கல் முகாம்களில் இன்று தவிக்கும் மக்களின் ஆழ் மனதிலும் நி்ச்சயம் இருக்கக்கூடும்.

ஆனாலும் இது யாருக்குப் பொருந்தும்? எனும் கேள்வியிலிருந்தே சிறிலங்கா அரசின் விளக்கங்கள் ஆரம்பிக்கப்படும்.

முதலில் இப்படியான பிரச்சாரத்தைக் கொண்டு பிரிவினைவாதிகள் நன்மை பெறக்கூடாது எனும் அடிப்படையை உள்வாங்கிக் கொள்ளும் அரச இயந்திரம் “இலங்கை” எனும் ஒரு தேசத்தின் மக்களே நாம் அனைவரும் எனும் கருத்தை ஆழப் பதிப்பதற்கான செயற்பாடுகளில் தம்மை இயக்கி வருகிறது.

ஒரு தாய் நாட்டின் பிள்ளைகள் எனும் அளவில் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் பல்லின மக்களை இந்த நாடு கொண்டிருக்கிறது, அந்த மக்கள் அனைவருமே ஒரே நாட்டின் பிரஜைகள், அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கக் கூடாது எனும் செயற்பாடு நோக்கி அரச இயந்திரத்தின் ஒரு பகுதி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதை யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? என்று பார்த்தோமேயானால் அது இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு வாழ் மக்களை முன் நோக்கியதாகவே இருக்கும்.

ஏனெனில், கிழக்கு மக்கள் ஏற்கனவே சமத்துவ அடிப்படையில் பிரிவினையைத் தூக்கி எறிந்த ஒரு வாழ்வு முறைக்குள் மிக வேகமாக உள்நுழைந்து விட்டார்கள்.

தாம் மற்றும் தம் குடும்ப,சமூக வாழ்வின் முன்னேற்றங்களில் தாம் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மக்கள் கடந்த கால யுத்தமே தம்மை இந்த நிலைக்குத் தள்ளியது என்று உணர்ந்து நாட்டின் பிரதான சமூக நீரோட்டத்திற்குள் மிக வேகமாக கலந்து கொள்கிறார்கள்.

அரசியல் பிரதிநிதித்துவம் செய்யும் பிள்ளையானும்,கருணாவும் பிரிவினை வாதம் தோன்றக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால் வெளிப்படைச் சமூகக் கலப்பில் மிக ஈடுபாட்டுடன் காணப்படுகிறார்கள், அல்லது அவர்கள் சார்ந்த அரச கட்டுமானத்தோடு ஒன்றிணைந்தாவது வெளித்தோற்ற அரசியலை நாகரிகமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வாழ்வு முறைக்குள் வடக்கு வாழ் மக்கள் செல்வதற்கு நெடுநாள் எடுக்கப்போவதில்லை, மீள்க் குடியேற்றங்கள் குதிரை வேகத்தில் நடக்கப்போவதில்லை என்பது உலகறிந்த இரகசியம் என்பதால் அது ஆமை வேகத்திலாவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

இவை நிறைவுறும் பட்சத்தில் கிழக்கு மக்களைப் போலவே வடக்கு மக்களும் தாம் மற்றும் தம் குடும்ப,சமூக வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பிப்பார்கள்.

அடிப்படையில் இந்த இரண்டு நிலையும் இலங்கை மக்களுக்கு ஒரு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். அதாவது, பிரிவினை எனும் நினைப்பு மக்கள் மனதிலிருந்து நீங்கிவிடும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஐக்கியமாகி தம் பாரம்பரியங்களைப் பேணிப்பாதுகாத்து, சமூக வளர்ச்சியைக் காண்பதே அந்த மக்களிடம் தெரிவாக விடப்படக்கூடிய சமூகப்பொறுப்பாக இருக்கும்.

இதற்கு மாற்று வழி தேடுவோர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வார்கள், அந்த வெற்றிடங்கள் தானாக உருவாகும் வரை சிங்கள இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆட்சியில் அமர்ந்திருக்கும் மஹிந்த மற்றும் அவரைத் தொடரப்போகும் அரச இயந்திரம் மிகப் பொறுமையாக இருக்கும்.

எனவே இந்த மக்களை வழி நடத்த முன் வருவோர் கிழக்கில் பிள்ளையான், கருணா போன்றே வெளித் தோற்ற அரசியலை மிக உன்னிப்பாக அவதானித்து, கவனமாகக் கையாண்டு ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரதிநிதித்துவத்தை அரசியல் ரீதியாகக் காப்பாற்றிக்கொள்வார்கள்.

இதன் அடிப்படையை உலகம் வெளிக்கண்களால் பார்க்கும் போது, மக்கள் விரோத சக்திகளை மிக இலகுவாக அடையாளங்கண்டு கொள்ளும்.

அப்போது, சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கப் போகும் மக்கள் விரோத சக்திகளாக எஞ்சியிருக்கும் தீவிர புலி ஆதரவாளர்களும், யாருக்கு என்றே தெரியாமல், நாடும் காடும் நதியும் நிலமும் எதுவும் இல்லாமல் நாடு கடந்த ஈழப் போர்வையில் சொத்துக்கள் சுருட்டும் “கள்ளக் கூட்டமும்” அடையாளப்படுத்தப்படும்.

இவர்கள் தவிர, தமது சொந்த அரசியலுக்காக ஈழ மக்கள் போர்வையில் கூத்துப் பட்டறை நடத்தும் தமிழக அரசியல் வாதிகள் சிலர் வலிந்து வந்து இந்தப் பட்டியலில் சேர்ந்து கொள்வார்கள்.

இந்த இரண்டையும் சமப்படுத்தும் பெருமை இலங்கையில் ராஜபக்சாவுக்கும் தமிழகத்தில் கலைஞருக்கும் வந்து சேரும்.

இதற்கு உதாராணமாக சட்டமன்றத்தில் கலைஞர் இன்று வைத்த “ஆப்பை” மேற்கோள் காட்டலாம்.

“ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும். ” என்று அடித்துக் கூறிய கலைஞர் மேலும் சில மிக முக்கியமான கருத்துக்களை “சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு” எடுத்துரைத்துள்ளார்.

கலைஞர் தமக்கு உதவவில்லை எனும் சமீப கால கோணத்தில் பார்ப்பவர்களுக்கும் தமிழகத்தில் அவரை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களுக்கும் விமர்சன அரசியல் செய்ய சில ஓட்டைகளை அவர் விட்டு வைத்தாலும், எதார்த்தத்தில் என்ன நடக்கிறது என்பதை அதுவும் இந்தியாவின் ஒப்புதலுடன் எவ்வாறு இலங்கையின் எதிர்காலம் நகர்கிறது என்பதையும் தனது பேச்சில் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த ஆப்பை இழுத்துக் குரங்குகளாவதா இல்லை அடக்கி வாசித்து தேர்தல் நேரத்தில் சீறிப் பாய்வதா என்று காத்திருக்கப்போகும் புலி ஆதரவு தமிழக அரசியல்வாதிகள் இரண்டாவதையே பெரும்பாலும் தெரிவு செய்வார்கள். ஏனெனில் என்னதான் வெளியில் அறிக்கை விட்டாலும் இனி கிராபிக்ஸ் செய்து நக்கீரன் வெளியிட்டாலும் மக்கள் நம்பத் தயாரில்லை என்பதால் எங்காவது எப்போவாவது புலி சார்பு புளுடாக்கள் விட முடியுமே தவிர, புலி அமைப்பு எந்தச் சாக்கடைக்குள் இருக்கிறது என்பதை அவர்களும் நன்குணர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

இந்தியாவின் இத்தகைய ஒத்துழைப்பை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதானால் அது இலங்கையின் வெளித்தோற்ற அரசியலிலாவது சமத்துவம் காணப்பட வேண்டும், ஐக்கியம் வெளிக்காட்டப்பட வேண்டும் என்பதே இன்றைய இலங்கை அரசின் முக்கிய செயற்பாடாக இருக்கிறது.

இதற்காக தம் கொள்கைகளோடு ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தமிழர் பிரதிநிதிகளை ஒன்று திரட்டும் அரசு, தமிழர் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் தம் அரச இயந்திரச் செயற்பாட்டினை முழுமையாக தமிழர்களிடமே விட்டு விடுவதன் மூலம் எதிர்காலத்தில் மாநில ஆட்சி எனும் பேச்சுக்குக் கூட இடங்கொடுக்காமல் செயற்படும்.

அரச இயந்திரத்தின் பிரதான செயற்பாடு நாட்டின் ஐக்கியத் தோற்றப்பாட்டினை வெளியுலகுக்குக் கொண்டு வருவது என்பதாக இருப்பதனால் தலை கீழாக நின்றாலும் ஆட்சியின் பிரதான பகுதிகளான இராணுவம் மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாண ரீதியாக மட்டுப்படுத்தி மத்தியில் குவித்து வைத்திருப்பதையே விரும்பும்.

எனினும், காலப்போக்கில் காவற்துறை அதிகாரங்களை மாகாண எல்லைக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் சட்ட ஒழுங்கில் தமிழர் தரப்பின் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் அதிகரித்து ஏறத்தாழ எழுத்தால் எழுதப்படாத அதிகாரப் பகிர்ந்தளிப்பை செயற்பாட்டில் காட்டி அதன் மூலம் தம்மை மத்திய அரசு நியாயப்படுத்திக் கொள்ளும்.

இலங்கையில் தமிழர்கள் என்றாலே அது வடக்கில் வாழ்பவர்கள் மட்டுந்தான் எனும் ஒரு கண் மூடிய விளக்கம் தமிழகத்தில் நிலவுவதால் தமிழகத்தில் கலைஞரின் கொள்கைகளைப் பாதிக்காத அளவில் இந்தியாவும் இலங்கையும் இந்த விடயங்களில் மிகக் கவனமாக நடந்து கொள்ளும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்ன ஆவது? எனும் கேள்வியை பெரும்பாலானோர் கேட்பதே இல்லை, அவ்வளவு ஏன் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை எனலாம்.

அவர்களைப் பொறுத்தவரை பிரதான சமூக நீரோட்டத்திலிருந்து அவர்கள் எப்போதுமே பிரிந்து நின்றதில்லை என்பதால் இதுவெல்லாம் அவர்களுக்கு எந்த வகையிலும் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கப்போவதில்லை.

கொழும்பு நகரில் அடர்ந்து வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களோடு யாழ்ப்பாண மக்களும் யுத்த காலங்களில் இடம்பெயர்ந்து கலந்து கொண்ட சமூகக் கலப்பை மையப்படுத்தி மனோ கணேசன் போன்ற சில ஆசாமிகள் ஆங்காங்கே தேவையற்ற பிரிவினை வாதக் கருத்துக்களை தமது சொந்த அரசியல் லாபத்திற்காக, அதாவது தேர்தல் என்று ஒன்று வந்தால் அதில் சிங்கள மக்கள் இவரைத் திரும்பியும் பார்க்கப் போவதில்லை, தமிழ் மக்களிலும் மலையக மக்கள் கொழும்பில் வாக்களிப்பதை விட தமது சொந்தப் பிரதேசங்களிற்குச் சென்றே வாக்களிப்பதாயின் வாக்களிக்க விரும்புவதால், தமது அரசியல் சுய நலத்திற்காக இடம் பெயர்ந்து வந்த மக்களின் காவலனாக இவரும் போட்டி போட்டுக் கொண்டு புலிப் போர்வையைப் போர்த்தினாலும் தக்க தருணத்தில் இப்போது லாவகமாகக் கழன்று கொண்டிருக்கிறார்.

புலி இருக்கும் வரை ஏதாவது ஒரு மூலையில் தமிழீழம் சாத்தியமாகுமோ? எனும் நம்பிக்கை சிறிதளவேனும் இருந்த யாழ் மக்களின் அனுதாப வாக்குகளை புலிக்கு பொங்கி முழங்கியதன் மூலம் பெற்றுக்கொள்ள மனோ கணேசன், சந்திரசேகரன் போன்றோர் ஒரு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார்கள், ஆனால் மிக விரைவில் தம்மைச் சுற்றிய அரசியலே போதும் என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.

எனவே, தெற்கில் மேற்கில் மலை நாடுகளில் மற்றும் நாட்டின் இன்ன பிற பகுதிகளில் பரந்து வாழும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை உலகம் அவர்களை மறந்தாலும், பிரதான சமூக நீரோட்டத்தில் எப்போதுமே அவர்கள் கலந்து வாழ்வதனால் அவர்களிடம் பிரிவினைவாதக் கேள்விகள் இருக்கப்போவதில்லை அல்லது இருப்பதில் பிரயோசனமில்லையென்பதால் அவர்களும் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.

மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மத்திய அரசுடன் போராடும் தேவையை விட முதலாளி வர்க்கத்துடன் போராடும் தேவையையே அதிகமாகக் கொண்டிருந்தார்கள், மக்கள் நலன் சார்ந்து முதலாளி வர்க்கத்தினரை கட்டுப்படுத்திய ஒரு வெளித்தோற்ற அரசியலைக் கொண்டு வந்ததன் மூலம் அம்மக்களின் அரசியல் பிதாமகனானார் தொண்டைமான், அந்த அனுதாபத்தில் இப்போது அவர் வாரிசுகளும் தொடர்கிறார்கள்.

இவ்வெளித்தோற்ற நிலையை ஆழமாகக் கிண்டி அதன் மூலம் சில திரைக் கிழிப்புகளை மேற்கொண்டு, விடுதலை விரும்பும் சாதாரண மக்களின் ஆதரவைப் பெற்று முன் வந்த சந்திரேசேகர் போன்றோர் ஒரு சில காலம் புரட்சி வாதிகளாக இருந்தாலும் பின் நாளில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலாளி வர்க்கத்தோடு திரை மறைவிலாவது கலந்து வாழும் நிலைப்பாட்டை மேற்கொண்டதன் மூலம் அங்கிருக்கும் மக்களுக்கான உண்மையான போராட்டம் மத்திய அரசோடு இல்லை அவர்களைக் கட்டியாளும் முதலாளி வர்க்கத்தோடு தான் என்பதை மீண்டும் மீண்டும் எடுத்தியம்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் ஒட்டு மொத்தமாக மத்தியில் குவிப்பதற்காக ஜே.ஆரின் முதல் எதிரி பிரேமதாசாவினால் இடுகை செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, புரட்சி சிந்தனையாக விதைக்கப்பட்டதுதான் ஏற்கனவே கிடப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மலை நாட்டு மக்களின் அல்லது இந்திய வம்சாவளியினரின் பிரஜாவுரிமை பற்றிய பிரச்சினை.

அதை வைத்து பிரேமதாசா நல்ல அரசியல் லாபம் பார்த்தார், அவர் விட்ட இடைவெளியை வைத்து மலையக அரசியல் வாரிசுகளும் அவற்றைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்தனர்.

இப்படி பல் கோணத்தில் பார்க்கும் போது, இன்றைய அரசின் மிக முக்கிய செயற்பாடானது நாட்டின் சமூகத்தை ஒருமுகப் படுத்தி “பிரிவினை வாதம்” எனும் அடிப்படையைத் தகர்த்தெறிவது மாத்திரமே.

இந்த அடிப்படையை வெற்றிகரமாக அடைந்து கொள்ள வேண்டும் என்றால் அது தமிழர் பிரதிநிதிகளைத் தவிர்த்து ஒருக்காலமும் சாத்தியப்படாது.

ஆனால், தமிழர் பிரதிநிதிகள் என்போர் கால மாற்றத்தை நன்கு சிந்தித்து இந்த ஐக்கியத்தின் விளைவாக செயலோடு செயலாக தம் சமூகத்தின் உரிமைகளை, சுய மரியாதையை அடகு வைத்துவிடுவார்களா இல்லை அரசியல் மாற்றத்தை நன்கு பாவித்து இச் சந்தர்ப்பத்தில் அவர்களே கூறிக்கொள்ளும் புலியால் அழிந்து போன மக்களின் வாழ்வை மீளப் பெற்றுத் தருவார்களா என்பது தீர்க்கமாக சொல்லப்பட முடியாத ஒன்றாகும்.

ஏனெனில், தமிழர் அரசியல் பிரதிநிதித்துவம் இன்னும் ஜனநாயகத்தை எட்டவில்லை என்பது இதற்குப் பிரதான காரணமாகும்.

ஜனநாயகப் பெயர்களைச் சூட்டிக்கொண்டாலும் இன்னும் பழைய ஆயுத அமைப்புகளாக கொள்கை, கோட்பாடுகளைக் கட்டிப்பிடித்து மக்களை விட தம்மைத் தமது இருப்பை பிரதானப்படுத்தும் செயற்பாட்டுடன் மட்டுமே காணப்படும், தேர்தல் பிரதிநிதித்துவம் கேட்கும் எந்தச் சக்தியும் இது வரை மக்கள் எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு திட்டத்தையோ விஞ்ஞாபனத்தையோ வைக்கத் தவறியிருப்பது வன்மையாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

மக்கள் படும் அல்லலுக்காக குரல் கொடுப்பது என்பது அவர்கள் மீது அக்கறையாக இருப்பது போன்ற மாயையாகவும், அவர்கள் ஆதரவைப் பெறும் சூழ்ச்சியாகவும் பார்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் மக்கள் எதிர்காலத்திற்காக , சமூக மேம்பாட்டுக்காக, சுய மரியாதையுடன் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு தனித்துவமான மக்கள் இனமாக இவர்கள் வாழ்வதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள் என்பதை திறந்த வெளி விவாதத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மாறாக, முதலில் எங்களைத் தெரிவு செய்யுங்கள் பின்னர் எல்லாவற்றையும் பெற்றுத்தருகிறோம் என்று மக்கள் முன் செல்லும் உங்களால், உங்கள் கைகளில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்துப் பயந்து வாக்களிக்க வரும் மக்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமே தவிர வாக்களிப்பது என்பது நம் அடிப்படை உரிமை, நம் பிரநிதியையே நாம் தேர்ந்தெடுக்கிறோம் எனும் உண்மையான உணர்வுடன் யாரும் வாக்களிக்கப் போவதில்லை.

இப்படி தமிழர் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளியானது மத்திய அரசின் வெளித்தோற்ற அரசியலுக்கும் மிகப் பெரும் பலமாகும்.

இதைக்கொண்டு மிக லாவகமாக காய் நகர்த்தப்போகும் மத்திய அரசு நாட்டினை வேறு ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் தம் திட்டத்தைத் தங்கு தடையின்றி அதே நேரம் எழுதப்படாத சட்டங்கள் மூலம் சமத்துவப் போர்வையில் இந்த சமூகத்தை ஒரு முதலாளி வர்க்கத்திடம் அடகு வைக்கும்.

பெயரளவிலாவது சமத்துவம் நிலை நாட்டப்படப்போகும் எதிர்காலத்தை நோக்கும் போது, அதில் ஒன்றரக் கலந்து வாழப்போகும் மக்களைப் பொறுத்தவரை சமத்துவம் எனும் பக்க அளவிலாவது தாம் சார்ந்த வாழ்க்கை மேம்பாடு கிடைக்கப்போவதனால் அவர்கள் பிரிவினைவாதத்தை மறந்து அடிமைத்தனம் என்ற உணர்ச்சியூட்டலை தூக்கியெறிந்து விடுவார்கள்.

மக்கள் தான் தூக்கியெறிவார்களே தவிர, அரசியலைப் பொறுத்த வரை கால மாற்றம் மிகவும் பலவீனமான அரசியல் அடிமைத்தனத்தை தம்மைத் தாமே சமூகப் பிரதிநிதிகள் என்று சொல்வோர் இடத்தில் விதைத்து, அதன் மூலம் உண்மையான அரசியல் அடிமைகளை உருவாக்கும்.

இந்த அடிமைகள் பதவி,செல்வாக்கு,வாழ்க்கை மேம்பாடு மற்றும் இன்னபிற வசதிகளை தாமும் தம் குடும்பமும், தம்மைச் சுற்றியுள்ளர்களும் அனுபவித்துக்கொள்வதில் மிகக் கவனமாகவும், பேச்சளவில் வை.கோ க்கள் வழி வந்தவர்களாகவும் கொடி கட்டிப் பறப்பார்கள்.

ஆயினும், இன்றைய அரசின் திட்டங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் போது இவர்கள் அரசியல் அடிமைகளாக இந்த வகை அரசியல் வாதிகளை உருவாக்கி அவர்கள் மூலம் இவ்வளை அடிமைத்தனத்தை மக்களுக்கும் விதைக்க முடியுமா என்று சிந்திப்பார்களே தவிர நேரடியாக மக்களை அணுக மாட்டார்கள்.

அப்படி அணுகும் செயற்திட்டம் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்பது மிகத் தெளிவாகிறது. அப்படியொரு நிலையை வைத்துக்கொண்டு தம் முதலீட்டுப் பங்காளிகளின் தயவில் நாட்்டை முன்னேற்றவோ அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால அரசியல் இருப்பைக் காப்பாற்றவோ முடியாது என்பது இன்றைய சனாதிபதிக்கும் அவர் குடும்ப வாரிசுகளுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.

உலக அரங்கில் தம்மை மிகப் பெரும் சமத்துவ அரசாகக் காட்டிக்கொள்ள இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இன்றைய தேதியில் அவர்களுக்குப் பலமாகவே அமைந்து வருகிறது.

இப்போது வெறுத்தாலும், சந்தேகித்தாலும் நாளடைவில் தம்மை வலிந்து வந்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் மிக அவதானமாக அதே நேரம் மிக வலுவான பங்காளி அரசியலை நடத்திச் சென்று கொண்டிருக்கும் இன்றைய இலங்கை அரசினைப் பொறுத்தவரை சமத்துவத்தை மக்களிடமிருந்தும் அடிமைத்தனத்தை அரசியல் வாதிகளிடமிருந்தே எதிர்பார்ப்பார்கள்.

தமக்குக் கிடைக்கும் சொகுசு வாழ்க்கைக்காக தம்மை நம்பிப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை வழங்கும் மக்களுக்கு கிடைக்கும் அளவில் பகிர்ந்து கொடுத்து அரசின் திட்டப்படியே சமத்துவத்துக்காக இவர்கள் பாடுபட்டாலும் மக்களின் சமவுரிமையைப் பணயம் வைக்கக்கூடிய அபாயம் மிகத் தெளிவாக இலங்கை அரசியலில் காணப்படுகிறது.

நேரடியாக மக்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்திலும் அரசாங்கம் மிகக் கவனமாக சமத்துவத்தைப் பேணும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லாவிடினும் பழைய பிரித்தானிய பிரபுக்கள் ஒவ்வொரு நாட்டின் சமூகத்தையும் அந்த சமூகத்திலேயே தமக்கு அடிமைப்படக்கூடியவர்களைக் கொண்டு நிர்வகித்தது போன்று பல காரணங்களை முன்வைத்து மிகக் கவனமாக அரசியல் அடிமைகளை மஹிந்த ராஜ்ஜியம் உருவாக்கும்.

இதிலிருந்து மீட்சி பெறுவதற்கு இன்னொரு பிரபாகரன் தான் வேண்டும் இன்னொரு புலி அமைப்புத் தான் வேண்டும் என்பதெல்லாம் அளவுக்கதிகமான எல்லை மீறிய கோசங்களாக அமையும் அதேவேளை தம் சமூகத்தை அச்சுறுத்தும் ஆயுதங்களை தம்மிடம் வைத்துக்கொண்டு அரசியல் அடிமைகளாக சுகபோகம் அனுபவிப்பதும் துரோகாமாகும்.

இப்படியான நிலையை சிந்திக்கும் அளவில் நாளைய எதிர்காலம் மக்களின் வாழ்க்கையை விட்டு வைக்கப்போவதில்லை, இயந்திரமயமாகவும் தம் சுய கெளரவத்துக்காகவும் முண்டியடித்து எந்த வழியிலாவது முன்னேறத் துடிக்கும் ஒரு சமுதாயம் ஆகக்குறைந்தது இன்னும் சில வருடங்களுக்காவது இவற்றையெல்லாம் சிந்தித்துத் தம் நேரத்தை வீணாக்கப் போவதில்லை.

எனவே, இந்த இடைவெளியை அரசும் அரசியல்வாதிகளும் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

நாளடைவில் இந்த அடிமைத்தனத்தை மக்கள் மத்தியிலும் திணிக்கும் தேவை இவர்களுக்கு எஞ்சியிருக்கப்போவதும் இல்லை, ஏனெனில் பிரதான நீரோட்டத்தில் இணைந்து கொண்ட சமுதாயம் தமது அரசியல் தேவைகள் மற்றும் வாக்குரிமையை பிரதான கட்சி மற்றும் எதிர்க்கட்சி எனும் அளவில் சுருக்கிக் கொள்ளும்.

இன்றைய அளவில் பிரதான கட்சியாக இருந்தாலும், நாளடைவில் தென்பகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சியாக மாறின் மஹிந்த அரசு இன்று தமக்குத் தந்த விடுதலைக்கு நன்றிக்கடனாக இந்த மக்களே எதிர்க்கட்சிக்காரராகவும் அல்லது தம் நிலைக்காக ஆளுங்கட்சிக் காரராகவும் மாறுவதன் மூலம் மஹிந்தவன் தொலை நோக்குத் திட்டத்தின் படி இலங்கையின் பிரதான அரசியல் பல் கட்சி சூழ்நிலைகளிலிருந்து விடுதலை பெற்று இரு கட்சி ஆளுமைக்குள் மாறிச் செல்லும் அபாயம் காணப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் அன்றைய தந்தை செல்வா காலம் போன்றே மீண்டும் எதிர்க்கட்சி என்றால் அது தமிழர் கட்சியெனும் நிலை கூட உருவாகலாம், அல்லது ஆளுங்கட்சி காலத்தின் தேவை கருதி ஒன்றுபட்டிருந்தால் இந்த மக்கள் சக்தியிடம் அடிமைப்படலாம்.

எது எப்படியாகினும், இந்த சிந்தனைத் தெளிவு இன்றைய அளவு அவசியமாக இருப்பது தமிழர் அரசியலுக்குள் காலடி வைத்துத் தம்மைப் பிரதிநிதிகளாக்கும் படி வேண்டிக்கொள்வோருக்குத் தான்.

ஏனெனில், சமூக விலங்கை தகர்த்தெறியும் நல்லெண்ணம் அவர்களுக்கு இல்லையென்றால் அதனால் பாதிக்கப்படுவதும் சாதாரண மக்கள் அல்ல, நேரடியாக இவர்களே அரசியல் அடிமைகளாகப் போகிறார்கள்.

மக்களை அடிமைப்படுத்தினால் மஹிந்த அரசாங்கம் நிலைக்க முடியாது எனவே அதற்கு மாற்றீடாக அரசியல் அடிமைகளைக் கொண்டு காலணித்துவ சித்தார்ந்தத்தை மெதுவாக விதைக்கக்கூடிய வல்லமை யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மஹிந்த அரசுக்கு இருக்கிறது.

அது செயற்படு வடிவம் காணும் போது துள்ளிக் குதிக்கவும் முடியாது, ஏனெனில் அதன் வடிவம் ஆமை வேகத்தில் அமையப் போகிறது.

மக்களுக்குத் தேவை மறு வாழ்வு, அதை நோக்கி அவர்களை அரசே செலுத்தப்போகிறது, அதன் ஊடாக அரசு எதிர்பார்ப்பதோ ஒன்றிணைந்து வாழும் இலங்கை எனும் அரசியல் சமத்துவத் தோற்றப்பாடு, அதுவும் அவர்களுக்குக் கிடைக்கப் போகிறது, அதைத் தடுக்கும் சக்தி இன்றைய தேதியில் காணப்படும் எந்தவொரு தமிழர் சக்திக்கும் இல்லை.

அப்படியானால் எஞ்சியிருப்பது அடிமைத்தனம், அது நேரடி சமூக அடிமைத்தனமாக இருக்காது, மாறாக அரசியல் அடிமைத்தனமாக அதுவும் அரசியல் வாதிகளின் அடிமைத்தனமாக மாத்திரமே இருக்கும், அதன் விளைவு அரசுக்கு நன்மையையும் மக்களுக்கு உடனடித் தீங்கையும் தராத வடிவமாக இருக்கும்.

எனினும், காலப்போக்கில் மிகக் கச்சிதமாக ஐக்கியம் எனும் சுதந்திர வலைக்குள் தனித்துவம் காணாமல் போகும். அந்த நேரத்தில் சிந்திப்பதற்கோ மீண்டும் பொங்கியெழுவதற்கோ யாருக்கும் நேரமும் இருக்காது, தேவையும் இருக்காது.

எனவே, கால மாற்றத்தை நன்கு அவதானித்து சமூக அக்கறையுடன் தாங்கள் சார்ந்த சமூக மேம்பாட்டை தொலைநோக்குடன் திட்டமிடுவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

 

குறிச்சொற்கள்: , , ,

4 responses to “சமத்துவமா? அடிமைத்தனமா?

 1. Thambiah Sabarutnam

  ஓகஸ்ட்18, 2009 at 3:43 முப

  Whatever happened, happened for the good;
  Whatever is happening, is happening for the good;
  Whatever will happen, will also happen for the good only.
  You need not have any regrets for the past.
  You need not worry for the future.

  இருபத்தைந்து வருடத்திற்கு முன் துவக்கு இருந்தால் இயக்கம் கட்டலாம்
  யாரையாவது சுட்டு கொன்றால் இயக்கத் தலைவன், தளபதி ஆகலாம்.
  சோவியத் யூனியன் பிளவு படும் ஜேர்மன் சுவர் விழும் என்று எண்பதுகளில் இருந்த தம்மை அரசியல் ஆய்வாளர்களாக சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை

  இருபத்தோராம் நூற்றாண்டில் தம்மை அரசியல்விற்பன்னர்களாக சொல்லிக்கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்துவிடும் என்று புரிந்திருக்கவில்லை. இப்போ ஊரை ஏமாத்தி காசுசுத்தினால் ரேடியோ டிவி பத்திரிகை நடத்தலாம் . இவர்களுக்கெல்லாம் மீடியாவுக்கு இருக்க வேண்டிய தர்மம், ஒழுக்கம் சமூகக் கடமை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. மாறிமாறி மாலை போட்டு பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள்.

  கில்லாடிகளையும் கொலைகாரர்களையும் கள்ளக்கடத்தல்காரர்களையும் காசு அடிப்பவர்களையும் பெரிய சுளியர் என்று தலையில் தூக்கிவைத்து கூத்தாடும் பீலாக்கூட்டம் இந்த யாழ்ப்பாணிகள். நம்பவேண்டியதை நம்பாமல் நம்பக்கூடாத்வர்களை நம்பும் யாழ்ப்பாணிகளுக்கு இந்த சுத்துமாத்து ஏமாத்து மீடியாகாரர்தான் சரி.

   
 2. sami

  மார்ச்3, 2010 at 9:30 முப

  WHAT HAPPENED IS HAPPENED
  WHAT IS GOING TO HAPPEND IS GOING TO HAPPENED
  WHAT IS GOING TO HAPPENED IS ???????????

   
 3. Rajenderam Abreham

  ஜூன்3, 2010 at 12:35 பிப

  அருமையான தலைப்பு …… சமத்துவமா? அடிமைத்தனமா? …….இதிலும் உங்களின் கேள்வி ///புலி இருக்கும் வரை ஏதாவது ஒரு மூலையில் தமிழீழம் சாத்தியமாகுமோ?/// அது தான் விடை காணாத வினாவாக இருக்கபோகுது. கிடைக்கின்ற தமிழ் இனத்தின் எதிர்காலம் கூட எஞ்சி இருக்கும் புலி உருபினர்களால் திசை தெரியாத பயணமா போக வாய்ப்பு இருக்கு …..

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: