RSS

மஹிந்தவை நம்பலாமா?

24 ஜூன்

நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை, அதைத் திணிக்கும் உரிமையும் எவருக்கும் இல்லை, அதே நேரம் நம்புவோரைத் தூற்றும் உரிமையும் “அந்த சிலருக்கு” இல்லை.

மனித உரிமை, மண் உரிமை மற்றும் சுயாட்சி உரிமை பற்றிப் பேசுவதெற்கெல்லாம் முன்பாக தன்னைத் தவிர்ந்த இன்னொருவரின் கருத்துக்களையும், உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வதே அப்பேற்பட்டவர்களின் அடிப்படைத் தேவையாகும்.

நாம் சொல்வதுதான் சரி, அதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்ட ஆரம்பித்துவிட்டால், அதையே அரசியல் ரீதியாக திணிக்க ஆரம்பித்து விட்டால் அங்கே தான் “பாசிசம்” உருவாகிறது.

அதைப் பிரபாகரன் செய்த போது பாசிசம் என்றால், மஹிந்த செய்தாலும் பாசிசம் தான், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தவரை தமிழ்மக்களின் தலையாய பிரச்சினையாக இருப்பது இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகும்.

யுத்தம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், வெளியில் இருந்து என்னதான் காட்டுக் கத்து கத்தினாலும், 30 வருடங்கள் இரத்தம் படிந்திருந்த மண்ணிலிருந்து புத்தம் புதியதொரு வாழ்க்கையை மக்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர், முகாம்களுக்குள்ளும், வெளியிலும் மக்களுக்குள் மக்களாக கலந்திருக்கக்கூடிய முன் நாள் புலி உறுப்பினர்களை முற்றாக வடிகட்டும் வரை இலங்கை அரசாங்கம் வளைந்து கொடுக்கப் போவதில்லை.

மனம் திருந்தி வாழ விரும்பினாலும், இல்லை இன்னொரு நாள் போராட என்று ஒளிந்திருந்தாலும், அரசின் பார்வையில் அனைவரும் “புலிகள்” என்கிற ஒரு வரையறைக்குள் மாத்திரமே அடக்கப்படுவார்கள்.

அவ்வாறு அடக்கப்படுபவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்கள் தொடர்பில் ஒரு தெளிவான முடிவை எடுக்கும் வரை மீண்டும் இவர்களை மக்களோடு கலக்கவிடுவதில் அரசாங்கம் தயங்கும் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த உண்மை.

எனவே, அதற்கு வெளியில் அப்பாவி மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து மனிதநேயம் உள்ளவர்களின் விருப்பமாகும்.

எனினும், 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது காட்டும் நடைமுறைத் தளர்வுகளை 10 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மீது அரசு இன்னும் காட்டத் துணியவில்லை.

அதற்கான ஒரே காரணமாக அவர்கள் கூறப்போவது, புலிகளிடம் இவர்கள் பெற்ற கட்டாய பயிற்சியும், அதன் தூர விளைவுகள் பற்றிய எச்சரிக்கை எண்ணமுமாகும்.

இந்த வயதெல்லைக்குள் அடங்கும் மக்களின் மனங்களை, அவர்கள் உளவியல் நிலைகளை நன்கறிந்து, தமக்குத் திருப்தியளிக்கும் வகையில் இல்லாவிட்டால் அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்துக் கண்காணிப்பதிலேயே இலங்கை அரசும், இராணுவமும் மும்முரம் காட்டுகிறது.

இந்த இடைவெளியில், நமக்கேன் இந்நிலை? என்று அப்பாவி மக்களும் மாட்டிக்கொண்டு ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

இப்போதைய நிலையில், இம்மக்கள் தொடர்பான விடயங்களை சீக்கிரப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர் செய்தே ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயமும் இருக்கிறது.

அது மண்ணில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, புலத்தில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, இது அனைவரினதும் கடமையாக இருக்கிறது.

இந்தக் கடமையை சரிவரச் செய்யும் போது அது மக்களுக்குத் தகுதந்த வழியில் நல்லதாகவே சென்றடைய வேண்டும் என்றால், முதலில் ஒரு சில அடிப்படை உண்மைகளை, கள எதார்த்தங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதில் பிரதானமானது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்ளான வாழ்க்கை.

ஐக்கிய இலங்கைக்குள் வாழ தமிழ் மக்கள் எப்போதுமே மறுத்ததில்லை எனும் இனிப்பான உண்மையை இது வரை காலம் உலகுக்கு மூடி மறைத்த,மறைக்க முற்பட்ட, நிலை நாட்டப் பாடுபட்ட ஒரே அமைப்பு புலி அமைப்பு.

புலி அமைப்பின் அடாவடித்தனங்களால் அவர்களாகப் பெற்றுக்கொண்ட ஏக பிரதிநிதித்துவம் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை விட புலம் பெயர்ந்து வாழ்ந்த அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் தான் இந்த முரண்பாட்டை பெரிதும் வளர்த்து வந்தது, இதுதான் உண்மையுங் கூட.

அப்படியிருக்க, இன்றும் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வாழ முடியாது எனும் கோசம் உலகின் எப்பாகத்திலாவது எழுப்பப்படுமேயானால் அது புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் மிகக் குறுகிய வட்டத்திற்குள் இருந்து அதுவும் அதி தீவிர இன்டர்நெட் புலிகளிடமிருந்து மாத்திரமே வருகிறது.

நல்லதோ கெட்டதோ அந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் அந்த மக்களின் அபிப்பிராயம என்ன என்பதை புலிகளும் அறிந்ததில்லை, அரசும் அறிய முயற்சி செய்ததில்லை.

ஆயுத பலம் கொண்டு புலிகள் மக்களை அடக்கியது என்பது இலங்கை அரசிடம் இருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பாடமாகும். ஜே.ஆர் அரசு ஆரம்பித்து வைத்த அந்தக் கலாச்சாரத்தை புலிகள் செவ்வனே செய்து முடித்தார்கள்.

இடைப்பட்ட காலத்தில் மக்கள் தம்மால் முடிந்தளவு கஷ்டப்பட்டு விட்டார்கள், உயிர்களை, உடைமைகளை, உறவுகளை தம் அங்கங்களைக் கூட அநியாயமாக இழந்து விட்டார்கள்.

இந்நிலையில் இருந்து மீட்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மக்களைப் பொறுத்தவரையில், அடிப்படையில் புலி எனும் போர்வை அவர்களைச் சுற்றியிருந்தாலும், அவர்கள் இலங்கை நாட்டின் அரசக் கட்டமைப்புக்குள் எப்போதுமே வாழப் பழகியவர்கள் . எனவே நாட்டின் ஐக்கியத்துக்கு தம்மை அர்ப்பணிப்பது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு இடரற்ற காரியமாகும்.

இந்நிலையை சரிவரப் புரிந்துகொள்ளக்கூடிய தமிழினம் செய்ய வேண்டிய மிகப் பிரதானமான கடமை இரண்டு வகைப்படும்.

1. மக்கள் ஐக்கியமாக வாழ்வார்கள் என்பதில் ஐயமே இல்லை, ஆனால் அவர்கள் சுய மரியாதையோடு வாழ வேண்டும், அந்த வாழ்க்கையைப் பெற வேண்டும், அதற்காக நாம் பாடு படவேண்டும்.

2. கடந்த காலங்களில் போலன்றி ஒரு திடமான அரசு, அதுவும் சிறுபாண்மை,பெரும்பாண்மை வித்தியாசமற்ற சமவுரிமையுடன், சமத்துவத்துடன் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தம் நோக்கம் என்று கூறும் மஹிந்த அரசை அதன் பால் அவர்களும் நடந்து கொள்ளும் விதத்தில் ஒத்துழைத்து,ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

முதலாவது விடயத்தைப் பொறுத்தவரை இனிமேல் பிரபாகரனே உயிரோடு வந்து முன்னால் நின்றாலும் மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னகர்வை மேற்கொள்ள முடியாது என்பது கள எதார்த்தம். அதாவது அவர்கள் ஐக்கியத்துடன் வாழ எப்போதுமே பின் நிற்கப்போவதில்லை, ஆனால் தம்மை அரசும், புலியின் எதிரிகளாக இருந்த ஏனைய தமிழ்க்கட்சிகளும் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு பழிவாங்கிவிடுவார்களோ என்கிற பயந்தான் இருக்கும்.

இரண்டாவது விடயம் முக்கியமானது.

அதில் தான் வாக்குறுதிகளை மிக வெளிப்படையாக, சர்வதேசமே கேட்கும் அளவுக்கு அதுவும் தமிழிலும் வெளியிடும் மஹிந்தவை நம்புவதா இல்லையா எனும் முக்கியமான அம்சமும் அடங்குகிறது.

இன்றைய நிலையில் தீவிர புலி ஆதரவாளர்களால் எதையாவது பேச முடிகிறது என்றால் அது இந்த அம்சத்தை வைத்தேயாகும். அதாவது மஹிந்த ஏமாற்றுகிறார், சிங்கள இனம் நம் எதிரி, பொது எதிரி, நாம் தனியாகப் பிரிய வேண்டும், தனி நாடு வேண்டும் என்கிற உப்பு சப்பில்லாத இன்டர்நெட் வாதங்களை நடத்துகிறது, அதை அப்படியே செய்திகளாக அச்சிட்டு தமிழ்த்தேசிய பத்திரிகைகளும் வயிறு வளர்க்கிறது.

சிங்கள இனம் , தமிழருக்கு எதிரான இனம் எனும் கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டு ஏறத்தாழ 60 ஆண்டுகளாகிவிட்டது, அப்பேற்பட்ட நிலையில் சந்தர்ப்ப சாதகங்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டமும் அவர்கள் சித்தார்ந்தத்தைப் போன்றே மிகக் கேவலமான ஒரு முடிவை அடைந்து விட்டது.

இந்நிலையில் இது சிங்கள இனம் தமிழினத்துக்கு எதிராகப் பெற்ற வெற்றியாகிறதா? இல்லையா என்பதிலிருந்தே அடிப்படை ஆய்வுகள் முக்கியம் பெறும்.

1983ம் ஆண்டு 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட போது சிங்கள மக்கள் மற்றும் காடையர்கள் மத்தியில் இருந்த மன நிலையும் தற்போது கோத்தபாயாவின் கணக்குப்படி 6200 இராணுவம் கொல்லப்பட்டு விட்டார்கள் 30000 பேர் காயப்பட்டுவிட்டார்கள் என்று வெளிப்படையாகக் கூறப்பட்ட பின்னரும் அதே சிங்கள மக்கள் மத்தியிலும் காடையர்கள் மத்தியிலும் காணப்படும் மன நிலையும் எவ்வாறு வித்தியாசப்பட்டுக் காணப்படுகிறது எனும் உண்மையை இன்டர்நெட் புலிகள் ஆராய்வதில்லை, ஆனால் தமிழ் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் ஆராய வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை புலிகளின் கொட்டம் அடங்க வேண்டும் என்பதை சிங்கள மக்களை விட தமிழ் மக்கள் தான் மிக அதிகமாக விரும்பினார்கள் என்கிற உண்மையை அவரவர் சொந்தக் கண்களால் கண்டு,கணக்கெடுத்தாலன்றி இவர்கள் திருந்தப் போவதில்லை. எனவே, உண்மைக்குப் புறம்பாக கூக்குரலிடுபவர்கள் பற்றி கவலை கொள்வதற்கில்லை.

தன் சொந்த இனத்துக்கே துரோகியாகிப்போன ஒரு அமைப்பு அழிக்கப்படும் போது அதை நாட்டைச் சீர்குலைக்கும் ஒரு பயங்கரவாதத்தை அழிக்கவே தம் பிள்ளைகளைக் கொடுக்கிறோம் என்கிற உணர்வே பெரும்பாலான சிங்களப் பெற்றோர்களிடம் இருந்தது, தம் நாட்டைக் காக்கத் தாம் செல்கிறோம் என்கிற உணர்வே இராணுவச் சிப்பாய்களிடமும் இருந்தது.

மக்கள் தான் புலிகள் – புலிகள் தான் மக்கள் எனும் விடுதலைப் புலி இயக்கத்தின் விசமத்தனமான கூற்றை உண்மையா? பொய்யா? என்பதை தமது சொந்தக் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஒவ்வொரு இராணுவச் சிப்பாயும் இந்த யுத்த வெற்றியின் மூலம் பெற்றிருப்பதனால், தம்மோடு பயணிந்து உயிரிழந்தவர்கள், அங்கங்களை இழந்து காயப்பட்டவர்களோடு தாமும் சேர்ந்து, நாட்டின் பயங்கரவாதத்தையே ஒழித்திருக்கிறோம் எனும் வெற்றிக் களிப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவச் சிப்பாய்கள் பல பேரின் வயது இந்த முரண்பாட்டின் வயதாகவும் இருக்கும், எனவே இப்போது அவர்கள் தம் கடமையை முடித்துக்கொண்ட திருப்தியுடன், தம்மை வழி நடத்தும் அரச இயந்திரத்தின் கட்டளைகளுக்கேற்ப தம் கடமைகளைச் செய்து வருகிறார்கள்.

எனவே, இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி தற்போது குறைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்குமா இல்லையா எனும் கேள்வி மேலெழுகிறது.

சிங்களவன் முழுக்க முழுக்க நம் எதிரி என்று இன்றும் கூட தமிழ்மக்களில் ஒரு சாரார் நினைக்கக்கூடும், ஆனாலும் புலிகள் தமக்கு செய்த அட்டூழியங்களை விட அரசு ஒன்றும் செய்யவில்லை எனும் கள உண்மையை அவர்கள் மனங்கள் ஏற்றுக்கொண்டுள்ள காரணங்களால் அவர்கள் அரசின் கட்டமைப்புக்கள் மிக வேகமாக தம்மை ஆட்படுத்திக்கொள்வார்கள்.

எனவே, மஹிந்த அரசும் தமிழ் மக்களுக்கும் தமக்குமான இடைவெளியைக் குறைப்பதில் மிகத் தீவிரமாக அதே வேளை மிக அவதானமாக முன்னோக்கி நகரும் என்பதில் சந்தேகப்படும் அவசியம் இனியும் வரப்போவதில்லை.

சின்னஞ்சிறிய இலங்கை தாங்கவே முடியாத ஒரு யுத்தக் கோரத்திலிருந்து இன்று மீண்டு வந்திருக்கிறது, கடந்த காலங்களிலும் நாம் பார்த்தது போன்று, ஆயுதப் போரட்டம் வளர்ச்சியடைந்த கடந்த மூன்று தசாப்தங்களில் முதன் முறையாக புலியை வைத்த அரசியல் செய்யும் தேவை இல்லை எனும் நிலைப்பாட்டை மஹிந்த அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அதன் பேரிலேயே இன்று புலியையும் அழித்தொழித்து தற்போது மேலதிக வடிகட்டலைச் செய்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் புத்தம் புதியதொரு அரசியல் அத்தியாயம் ஆரம்பிக்க வேண்டும் என்றால், நாட்டை வருமான ரீதியாக வளப்படுத்த வேண்டும், அதற்காக நம் நாட்டில் இருக்கும் இயற்கை வளங்கள் முதல் ஒவ்வொருவரின் உழைப்பையும் உபயோகப்படுத்த வேண்டும், அவ்வாறான ஒரு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதென்றால் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் இருக்க முடியாது, பிரிவினைகள் இருக்க முடியாது, பிளவுகள் இருக்க முடியாது.

இவையனைத்தையும் சாதிக்க வேண்டுமென்றால் தெளிவான அரசியல் சிந்தனை இருக்க வேண்டும், நாட்டின் ஒருமைப் பாட்டிற்கான திட்டமும் இருக்க வேண்டும்.

இவையனைத்தும் கொண்ட தொலை நோக்குள்ள அரசியல் நடைமுறை பற்றிய விளக்கங்கள் இல்லாமல், தெளிவு இல்லாமல், செயற்திட்டங்கள் இல்லாமல் முட்டாள்த்தனமான ஒரு அரசியல் நடவடிக்கையில் மஹிந்த அரசு இறங்கியிருக்கவும் முடியாது, அவர்களை நம்பி எதிர்பாராத ரஷ்ய,சீன,இந்திய,பாகிஸ்தான் கூட்டணிகள் அமைந்திருக்கவும் முடியாது.

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும், நாட்டின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட மஹிந்த அரசின் நடவடிக்கைகளில் திட்டங்களில் தமிழினம் முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொள்ளும். அந்த சந்தர்ப்பங்களிலும் சரி, இப்போதும் சரி இந்த மக்கள் சுய மரியாதையுடன், சமவுரிமையுடன் தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுவது, அல்லதுஅவை தவறும் போது அரசை நிர்ப்பந்திப்பது, மக்களுக்காகக் குரல் கொடுப்பதே ஒவ்வொரு தமிழர் அரசியல் பிரதிநிதியின் தேவையுமாக இருக்கும்.

எனவே, மஹிந்த அரசின் தொலை தூரச் செயற்பாட்டிலிருந்து விலகிச்சென்று அங்கிருந்து மீண்டும் புரட்சி செய்து இந்த மக்களுக்கு எந்தவிதமான விடிவும் வரப்போவதில்லை.

அதற்கு அர்த்தம் மஹிந்த அரசின் பின்னால் தொங்கிக்கொண்டிருப்பதா? அடிமைப்பட்டு வாழ்வதா? எனும் வாதங்கள் முன் வைக்கப்படுமாக இருந்தால் அடிப்படையில் இவை மிகத் தவறானதாகும்.

தமிழர் பிரதேசங்களின் மகத்துவத்தை, அதன் பொருளாதார வளத்தை, எதிர்கால முன்னேற்றத்தில் அப்பிரதேசங்கள் வகிக்கக்கூடிய பங்கினையெல்லாம் தென் பகுதியின் குறிப்பாக இந்த மஹிந்தவின் அரசாங்கம் மிகத் தெளிவாக திட்டமிட்டு விட்டது.

அந்த முக்கியத்துவங்களை மிக அவதானமாக ஆராய்ந்த சில அபிவிருத்தியடைந்த சக்திகளும் நெருக்கமான கூட்டணிகளாக மாறிவிட்டது.

ஆனால், தமிழர் பிரதிநிதிகளோ இன்னும் கூட தம் அரசியல் அத்திவாரத்தைத் தானும் நிறுவிக்கொள்ளவி்ல்லை. இதன் பயனாக பிரதான அரசியல் நீரோட்டத்தில் தங்கி நின்று ஏறத்தாழ கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கியே தமிழர் அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகும் எஞ்சியிருக்கும் புலிப் பிரச்சார மருத்துவர்கள் சிங்களவனிடம் தங்கி வாழும் நிலை, அடிமை நிலை என்று தொடர்ந்து தம்மைத் தவிர வேறு சக்தியில்லை எனும் நிலையில் தமது பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள்.

ஏற்கனவே இவர்களிடம் சூடு கண்ட பூனையான மக்களைப் பொறுத்தவரை, சரியோ தவறோ மஹிந்தவை நம்புவது ஏதாவது ஒரு வகையில் நல்லது எனும் முடிவுக்கு வருவார்கள்.

அதன் அறுவடையைச் சம்பாதிக்க மஹிந்த அரசாங்கமும் கடந்த கால யுத்த வடுக்களிலிருந்து மக்களுக்கு விரைவான ஒரு மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முனையும் என்பதைச் சந்தேகிக்க முடியாது.

எனினும், எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மிக அவதானமாக வடிகட்டல் நடவடிக்கைகளை அவர்கள் செய்யப்போவதும், அதற்காகவே இடைத்தங்கல் முகாம் வாழ்க்கை நீண்டு கொண்டு செல்லப்போவதையும் கூட ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

எது எவ்வாறாகினும், நாட்டின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்க முனையும் இந்த அரசாங்கம் அந்த இலக்கை நோக்கிய பயணத்தை மாற்றம் அறிகுறி இல்லை, எனவே வட பகுதியின் அபிவிருத்தியும் மிகத் தொலைவில் இல்லை.

அந்த அபிவிருத்திகள் வந்தடையும் போது, தற்போது உடுக்கக் கூட மாற்றுத் துணி இல்லாதிருக்கும் மக்கள் தம் சொந்தக் கைகள் கொண்டு தம்மை முன்னேற்றக்கிடைக்கும் வாழ்க்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரிவினைவாதம் என்பது கடந்த கால துன்பியல் வரலாறாக அவர்கள் மனங்களில் பதிந்து கொள்ளுமே தவிர அது பின்னொரு காலத்தில் நியாயப்படுத்தக் கூடிய வரலாறாக அமையப் போவதில்லை.

எனினும், இந்தளவு எதிர்கால நம்பிக்கையை விதைத்திருக்கும் மஹிந்தவை தொடர்ந்தும் நம்பலாமா இல்லையா என்பதே பலரது மனதில் நெடுங்காலத்துக்கு இருக்கப் போகும் ஒரு கேள்வியாகும்.

வட பகுதியைப் பொறுத்தவரை முழு வீச்சில் அங்கு முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இராணுவக் கட்டமைப்பு முழுப் பலத்துடன் அப்பகுதிகளில் ஆகக்குறைந்தது இன்னும் ஒரு தசாப்த காலத்திற்காவது நிலை கொள்ளப் போவது உறுதி.

படிப்படியான மாற்றங்கள் நிகழுமே தவிர, சந்தர்ப்பம் பார்த்து மக்களுக்குள் ஊடுருவி அவர்கள் நிம்மதியைக் குழப்பக் காத்திருக்கும் எஞ்சியிருக்கும் புலிகள் நினைப்பது போன்று ஒரேயடியாக முகாம்களைத் திறந்து விட்டு வேடிக்கை பார்க்கும் நிலையில் இந்த அரசாங்கம், அதுவும் என்னதான் வெளி நாட்டு அழுத்தம் வந்தாலும் செயற்படத் தயாரில்லை.

எனவே இன்றளவு இல்லாவிடினும் நாளடைவில் மஹிந்தவை மக்கள் நம்புவது யாராலும் தடுக்கப்படக் கூடிய விடயமல்ல. அதிலும் யாழ் நகரைப் பொறுத்தவரை மக்கள் மனங்கள் ஏற்கனவே இந்த விடிவை ஏற்றுக்கொண்டாகிவிட்டது.

மிக விரைவில் மற்ற மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

தமது வாக்குறுதிகளை மஹிந்த பிரதர்ஸ் காப்பாற்றுவார்கள் என்பது ஒரு பக்க உண்மையாக இருப்பினும், இவர்கள் நடவடிக்கைகளை கேள்விக்குறியாக வைத்திருக்கக் கூடிய ஒரு சில விடயங்களில் மக்கள் விழிப்புணர்வு கட்டாயம் அவசியப்படும்.

1. திட்டமிட்ட குடியேற்றங்கள்.

2. சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கும் வாழ்வு முறைகள்

3. வர்க்கப் பாகுபாடு

மக்களுக்குள் கற்றோர், கல்வியறிவில்லாதோர், பணம் படைத்தோர், பண வசதியற்றோர் என்கிற அடிப்படை வித்தியாசத்தை மட்டுமன்றி அதிகார வர்க்கம், செல்வாக்குள்ள மக்களுக்கு அடி பணிந்து வாழும் நிலை என்று ஏறத்தாழ மலையக மக்கள் வாழ்வு துண்டாடப் பட்டிருக்கும் நிலையை ஒத்த வாழ்க்கையை வட பகுதி மக்கள் மீது அரசாங்கம் திணிக்காவி்ட்டாலும், எதிர்வரும் காலமும் அதன் மாற்றமும் திணிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் தாராளமாக இருக்கின்றன.

இவற்றிலிருந்து ஒரு சாரார் விரைவில் விடுதலை பெற்றுக்கொள்வார்கள், அவர்களுக்கான உதவிகள் வெளிநாடுகளில் வாழும் தம் உறவினர்களிடமிருந்து வந்தடையும்.

என்னதான் உதவி வந்தாலும், நாட்டிலிருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரை பாரிய அளவில் வெளிச்செல்ல அனுமதிப்பதில் மஹிந்த அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கப் போகிறது. இங்கு தான் மஹிந் அரசின் உண்மையான வர்க்க சார்பு வெளியாகும்.

அதே நேரம் புலியெனும் இயக்கத்தையே சர்வதேசத்தில் மிக அவதானமாகக் கையாண்ட இந்த அரசு, மனித வளத்தை ஒரு பிரச்சினையாக்கிக் கொள்ளாமல் கச்சிதமாகக் கையாளும் திறமையையும் கொண்டிருக்கப் போகிறது.

பற்பல காரணங்களுக்காக தம் சொந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறும் இடைவெளியை தென்பகுதி மனித வளத்தைக் கொண்டு நிரப்புவதன் மூலம் தாமாகவே விட்டுச்செல்லும் மக்கள் இடைவெளியை திட்டமிடாமலே குடியேற்றங்களைக் கொண்டு நிரப்பும் அரசியல் வழிமுறைகளும் அவர்களுக்குத் தெரியும் என்பது இவர்களது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு நன்கு உணர்ந்து கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

எனவே, தமது சுய உரிமைகளைத் தாமாகவே விட்டுக்கொடுத்துவிட்டு மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு மக்கள் தம்மைத் தாமே இட்டுச் செல்வார்கள் என்றால், அதை சிங்களப் பேரினவாதம் என்று வரையறுத்துக்கூறும் தகுதியை தமிழினம் தானாகவே இழந்து கொள்ளும்.

மண் மீதும், மக்கள் மீதும் அக்கறையுள்ள உண்மையான அரசியல் வாதிகள் இருப்பார்களாயின் அவர்களால் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

முரண்டு பிடிக்கத் தேவையில்லை, ஒத்துழைத்து ஆனால் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத மக்கள் நலன் சார் அரசியல் நிலைப்பாடும் அதைக் கொண்டு நடத்தும் சுத்தமான உள்ளங்கொண்டவர்களும் தேவை.

அவ்வாறான மனப்பான்மை இல்லாது தம் சொந்த நலன்களுக்காகவும், செல்வாக்கு, வருமானத்தை அடிப்படையாகவும் கொண்ட ஒரு நல்ல வாழ்க்கைக்காகவும் கடந்த காலங்களிலும் அரசியல் மேடையில் காணப்பட்ட சிறுபாண்மை அரசியல் நடிகர்கள் மீளவும் உருவாவதும் அவர்களை உருவாக விடுவதும் மீண்டும் மீண்டும் இந்த மக்கள் மேல் விழும் பாரிய சுமையாகும்.

பின்னொரு காலத்தில் இந்தச் சுமைகளை உணர்ந்து கொள்ளும் ஒரு சமுதாயம் தாமாகவே வேறு நாடுகளுக்கு புலம் பெயர, அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தி்ட்டமிடாத ஆனால் சத்தமில்லாத குடியேற்றங்கள் மூலம் பாரம்பரியம் மறையும்.

அதன் பி்ன் தமிழீழம் எப்படி நாடு கடத்தப்பட்டு விட்டதோ அதே போன்று தமிழினத்தி்ன் பாரம்பரியமும் நாடு கடத்தப்படும்.

மாறி வரும் நாகரீகத்தின் காலடியில் ஏற்கனவே கலாச்சார விழுமியங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஆகக்குறைந்தது நாம் எல்லாம் தமிழர் எனும் உணர்வையாவது மிஞ்ச வைத்து வாழ ஆரம்பிக்கும் அந்த அப்பாவி மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையைச் சீர்குலைத்து, நாளையொரு நாள் இப்படியொரு இனம் அங்கு வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது என்று எம் பின்னோர் கதை படிக்கும் அளவுக்கு விட்டு விடாமல், காலத்தின் தேவையையும், வரலாற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து மக்களிற்கு உண்மயாக சேவை செய்யக்கூடிய மனப்பான்மை உள்ளவர்களே களத்தில் இறங்க வேண்டும்.

அவ்வாறு அவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை வெளியில் இருந்து யாரும் எடை போட முடியாது, அவரவர் மனச்சாட்சிப் படி களத்திலிறங்க முன் வந்து விட்ட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

முடியவில்லை என்றால் பேசாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

நாளைய இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களை சரியாகப் புரிந்து அதனோடு நிகராக நிற்கக் கூடிய அரசியல் புணருத்தாரணம் மேற்கொள்ளப்படவில்லை என்றால், சொந்த அடையாளத்தை இழந்து மிகக் குறுகிய பலமிழந்த சக்தியாக இந்தச் சமூகம் மாறப் போவது உறுதி.

அப்போதும், யாரும் மஹிந்த மேல் பழி சுமத்த முடியாது, ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று இந்தச் சமூகத்தின் அரசியல் வங்குரோத்தே இனிவரும் காலத்தையும் தீர்மானிக்கும், வரலாற்றையும் மாற்றி எழுதும்.

எனவே, ஒன்று பட்ட ஒரு அரசியல் சக்தி, வேற்றுமைகள் களைந்த பிரதிநிதித்துவம், நவீன மயப்படுத்தப்பட்ட சிந்தனை மற்றும் செயல் வடிவங்களுடன் தமிழ் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய சிறந்த கொள்கையுடன் அவர்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

கடந்த கால வரலாற்றில் மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் இறுதி வரை மக்களுக்கு விரோதிகளாக மாத்திரம் இருந்தவர்களைப் புறந்தள்ளும் அதிகாரத்தையும் மக்களிடமே வழங்க வேண்டும்.

இப்படியும் இதைவிடவும் ஆழமான அரசியல் சித்தார்ந்தங்கள் மீளாய்வு செய்யப்படவில்லை என்றால், மற்ற அத்தனையும் மக்களால் மாற்றப்படும், மஹிந்தவின் வெளிச்சொல்லப்பட முடியாத, எழுதப்படாத சிந்தனைகளும் முழு வடிவம் பெறும் !

 

குறிச்சொற்கள்: , , ,

5 responses to “மஹிந்தவை நம்பலாமா?

 1. pirathiba

  ஜூன்25, 2009 at 12:35 முப

  அது சரி! இந்த கருத்தினை இடுகை செய்ய நீர் மஹிந்தவிடம் எவ்வளவு பணம் வாங்குகிறீர்? நீர் நிச்சயமாக அறிவில் ஆதவன்!!

   
 2. A.Chandrakumar

  ஓகஸ்ட்5, 2009 at 5:07 பிப

  நீங்கள் எழுதியது ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே. அப்படி நடைபெறலாம் அல்லது நடைபெறாது போகலாம். ஏனெனில் கடந்த காலத்தில் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நடந்துள்ளார்கள்.ஆனால் மகிந்தாவின் கடந்த காலத்தைப் பார்க்கும் போது அவர் எதையும் யதார்த்தமாக ஆராய்ந்து மிகவும் நிதானமாக திட்டமிட்டு செயற்படுபவராக தெரிகின்றார். ஆனால் எதிர்காலத்திலும் அவர் அப்படி செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தங்களிலும் பார்க்க மகிந்த நல்லவர் என்பதை புலிகள் நிரூபித்துவிட்டு அழிந்ததால் தமிழ்மக்கள் மகிந்தவை நப்புவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையை புலிகள் ஏற்படுததி உள்ளார்கள். ஆனால் ஈழ வரலாற்றிலேயே முதல் முதலாக சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கிய ( இந்திய சமாதானப்படை இலங்கையில் இருந்த காலத்தில் ) புலிகள் பின்னர் பணத்திற்காக மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்கினார்கள். அதன் பின்னர் புலிகளின் சூரியத்தேவன் தனது மாவீரர் உரையில் நடைமுறைச்சாத்தியத்தை உணர்ந்த யதார்த்த அரசியல்வாதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ என புகழ்ந்து பேசினார் ( அதை மகிந்த ராஜபக்ஸவும் புலிகளை அழித்ததன் மூலம் நிரூபித்துக் காட்டினார்). இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாத புலி ஆதரவாளர்கள் உங்கள் கட்டுரைகளின் பொருளையோ அதில் புரிந்திருக்கும் யதார்த்தமான உண்மைகளையோ புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் பிரபாகரனை கடவுளாக கும்பிடும் மேதகு பக்தர்கள்.

   
 3. rajesh

  செப்ரெம்பர்10, 2009 at 10:16 முப

  Hello!,Do you think Any Sinhala leader wiiling to give power or any power share with Tamils?No one so far?Rajapakse himself a Ex JVPer do you know this truth?he is a bottom heart anti Indian?Now since the siuation changes he praised india for india to become superpower in south east asia need to help some means helping even the against tamil nadu?
  Discrimination in srilanka and treating Srilankan tamil as slaves and treating tamils as Srilankan 2nd class citizen was there since more than 60 yrs?don’t think Mahinda is separate from this bloody sinhalavan all sinhalaya DNAs from Vedda all should be Jungle livers!They don’t know for sure what is future!what is development?Wait Tamil Nadu will create another LTTE soon with help of Indian central government to fight against Sinhalavan’s in srilanks soon!

   
 4. nallurkantha

  செப்ரெம்பர்30, 2009 at 8:52 முப

  I am sorry to send this in English.I am not familiar in Tamil typing.I appreciate yr efforts.Tamil society needs rational thinking.I have some difference with you.Whether Sinhalese govt or Sinhalese people discriminated Tamils?My opinion No.So what is the problem.Tamil ruling clique,Jaffna centred Elite(some section of High caste)could not tolerate the upliftment of the lower caste Tamils.Jaffna elite could not approve the development of the Vanni,Ampara Batticaloa temil peoples thro Standadisation and other district quota employment .Jaffna elite capmpaigned Standadasiation was anti Tamil and soonSri Lanka is definitely a paradise.Compare the Tamils in Tamilnadu with Tamils in North and East.We are much above.There is no ethnic problem in Sri Lanka.I myseld a Tamil from Jaffna.During August I was in Jaffna and enjoyed Nallur fesitval days.

   
 5. sami

  மார்ச்3, 2010 at 9:15 முப

  Friends
  This is a matter of power OF Mahinda AND Rajapakse AND Budist Mongs (WOLF) ////singlies people are sufferig like Tamiles
  IF THE BUDIST MONGS SUT THEAIR MOTH THEAIR IS NO Mahinda AND RAJAPAKSE and not nessery for a new pra..

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: