கடந்த ஒரு மாத காலமாக யார் சொன்னாலும் கேட்கவில்லை, அடம் பிடித்தார்கள்.
அடப்பாவிகளா (ஆகக்குறைந்தது) உங்களை 30 வருட காலங்களாக வழிநடத்திய ஒரு தலைவன், அவனுக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்துங்கள் என்று எத்தனை விதத்தில் எத்தனை பேர் எத்தனை இணையங்களில் கேட்டுக்கொண்டாலும் அவர்கள் அடங்கவில்லை.
அடங்கவில்லை என்பது உண்மையா? இல்லை மக்கள் அடங்கக்கூடாது என்ற பாசிசத்தின் திணிப்பு உண்மையா என்பதே இங்கு முக்கியமான கேள்வியாகும்.
பிரபாகரன் இறந்ததைக் கூட மஹிந்த சொல்லக்கூடாது, கோத்தபாயா சொல்லக்கூடாது, கருணாநிதி சொல்லக்கூடாது, சோனியா சொல்லக்கூடாது, கோர்டன் பிரவுண் சொல்லக்கூடாது, ஒபாமா சொல்லக்கூடாது, புலிதான் சொல்ல வேண்டும் என்கிற குறுகிய புத்திதான் இதற்கு முக்கிய காரணம்.
புலி தான் சொல்ல வேண்டும் என்று ஆன பின், அதைக் கே.பி சொல்லக்கூடுமா கூடாதா என்று ஆராய்வதற்காக வெளிநாடுகளில் வாழும் பாசிஸ்டுகள் முடிவுக்கு வருவதற்கு எடுத்துக்கொண்ட காலம் தான் கடந்த ஒரு மாதம் என்று சொன்னால் எத்னை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஆனால் அதுதான் உண்மை.
கே.பிக்கு எதிராக ஒரு அறிவழகன் அறிக்கை வெளியாகிய அந்தக் கணமே இந்த அறிவழகனின் அறிமுகத்தை நாம் கேள்விக்குரியதாக்கியிருந்தோம்.
இது எஞ்சியிருக்கும் புலிகளின் பாசிச எண்ணங்களின் இறுதி விளையாட்டு என்பதை பல தடவைகள் எடுத்தும் கூறியிருந்தோம்.
உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகள், வாழா நாடுகளாக இருந்தாலும், எங்கெல்லாம் தம் நலன்களைப் பேணிக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் முதலீடு செய்து தம் வருமான வலைப்பின்னலை மிகப்பெரிய அளவில் வைத்திருக்கும் புலிப்பினாமிகள் ஒரு தலைமை நோக்கிய இடத்தில் குவிக்கப்படா விட்டால் அவர்களது அசையும், அசையா சொத்துக்கள் கண்மூடித்திறக்கும் நேரத்திற்குள் என்னவாகும் என்பதை கே.பி நன்கறிந்தவர்.
எனவே, குழப்பங்களைத் தீர்த்து ஒரு இடத்தில் மக்கள் உணர்வுகளைக் குவித்து, அதன் தலைமையை தன்னை நோக்கித் திருப்புவதன் மூலம் சர்வதேசச் சந்தைகளில் முடங்கிக்கிடக்கும் தம் முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்வதே அவரது எண்ணமாக இருந்தாலும், அவரோடு கதைத்து அதை சரிவரப் புரிந்துகொண்டு, ஒரு பங்கீட்டு உடன்படிக்கையைக் காணும் வரை முரண்பட்ட இன்னும் சில வெளிநாட்டுப் புலிப் பினாமிகளின் அவசரமும்,ஆளுமையும் கொண்டு வந்து கொடுத்ததுதான் நேற்று வரை அறியப்பட்ட அறிவழகன், இன்று முதல் கதிர்காமத்தம்பி அறிவழகன்.
இப்படியொரு நபர் இருப்பாரோ இல்லையோ, புலி எனும் பெயரில் வெளிநாடுகளில் இயங்கும் கட்டமைப்பொன்றும், அதற்குள்ளான முரண்பாடும் நூறு வீதம் நிரூபணமாகிவிட்டது.
கே.பியின் மீது முரண்பட்ட இப்பினாமிகள், அறிவழகன் எனும் பெயரிலும் வெளியுறவுப் புலனாய்வுத் துறை எனும் புத்தம் புது டிபார்ட்மென்ட் பெயரிலும் முரண்பட்டுக்கொண்டதை மக்களெல்லாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை கே.பி வேடிக்கையாகப் பார்க்கவில்லை.
தமக்குள் எதிரிகளைப் பெருப்பித்துக்கொள்வதை விட இருப்பவர்களோடு உடன்படுவதே சத்தமே இல்லாமல் மக்களின் உழைப்பை, அவர்கள் உணர்வுகளால் நிரப்பிய கஜானாவைக் காலி செய்வதற்கு தகுந்த வழியென்பதை தன் அரசியல் அறிவைக் கொண்டு நன்கறிந்திருந்தார்.
முரண்பட்ட பினாமிகளிலும் இரண்டு வகையினர் இருந்திருப்பார்கள்.
1. உண்மையில் பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்.
2. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலியின் வயிற்றுக்குள் இருக்கும் பணத்தை, சொத்துக்களை, பங்கிட்டுக்கொள்ளத் திட்டமிட்டவர்கள்.
இதில் முதல் வகையினரை சமாதானப்படுத்துவதற்கு கே.பிக்கு இரண்டு நாட்கள் கூட தேவைப்பட்டிருக்காது.
ஏனெனில், தலைவருடன் இறுதி வரை தொடர்பில் இருந்த ஒரே நபர் அவர் தான், ஆரம்பத்தில் சூரிய தேவனின் மகனுக்கு சாவெல்லாம் வரும் என்று நம்பவில்லை என்றாலும், நாளடைவில் “பிரபாகரன்- கடவுள் அல்ல மனிதன்” எனறு கட்டுரைகளை எழுதி அவர்கள் சமாதானமாகி விட்டார்கள்.
இரண்டாவது வகையினர் தலைவர் இறந்தார் என்பதை உதய நாணாயக்காரா சொல்ல முதலே நன்குணர்ந்து கொண்டவர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை இதுதான் சந்தர்ப்பம், அடித்துப் பிய்த்து, கே.பியுடன் முரண்பட்டு அள்ளுவதை அள்ளிக்கொண்டு ஓடிப்போவது தான் திட்டமாக இருந்திருக்கும்.
தலைவர் என்ற சின்னத்தை வைத்து காய் நகர்த்திய கே.பியைப் பொறுத்தவரை இவர்களை சமாளிப்பதுதான் மிகப் பெரும் சவாலாக இருந்திருக்கும்.
ஏனெனில், இரண்டாம் வகையினரின் முழுக் குறிக்கோளும் பணத்தில் தங்கியிருப்பதால் அவர்களைப் பொறுத்தவரை, கே.பியிடமிருந்து பறிமுதல் செய்ய முடியுமோ இல்லையோ, தலைவரைக் கொல்லாமல் உயிரோடு வைத்திருந்தால் எஞ்சியிருக்கும் புலி ஆதரவாளர்களிடம் மேலும் மேலும் எதையாவது கறக்க முடியும்.
லண்டனில் 73 நாடுகள் தம் அன்றாட வாழ்க்கையை விட்விட்டு வந்திறங்கி, எதையும் சாதிக்க முடியாமல், ஏன் சாதிக்க முடியாமல் போனது என்ற உண்மையை இன்றும உணராமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்ற அந்த மக்களைப் பற்றி பி.பி.சி செய்தி நிறுவனம் எழுதிய செய்தியில் ஒரு இடத்தில் :
Participants had put up several tents in the centre of Parliament Square and at one point opened a curry takeaway.
என்றும் மிக அழகாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
எங்கு கூட்டத்தைக் கூட்டினாலும் அங்கே இப்படி ஒரு கொத்து பரோட்டாக் கடையைப் போட்டு, “எல்லாம் நாட்டுக்காக” எனும் மந்திரத்தை ஓதி மக்கள் உணவுக்குள்ளும் தமிழீழ மாயையை கையாண்ட புலிப் பினாமிகள் தலைவர் இறந்து பொன பின்னும் தம் வித்தைகளைக் கை விடவில்லை என்பதிலிருந்து, இவர்கள் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் எனும் உண்மை புலனாகிறது.
எனவே, இது வரை பிரபாகரன் இறக்கவில்லை என்று மறுத்து வந்த இந்த இரண்டாவது வகையினர், பொட்டம்மான் உயிரோடு இருக்கிறார், புலிகளின் புலனாய்வுத்துறை செயற்படுகிறது எனும் நாசகார பிரச்சாரத்தை மிகக் கவனமாக தமது நலன் வேண்டி செய்து வைந்தார்கள்.
அதற்குத் துணை போன சில தமிழக பத்திரிகைகள் இவர்களின் பிரச்சாரத்தை வைத்து அவர்களும் காசு பார்த்துக்கொண்டார்கள்.
அப்படியானால், இப்போது மாத்திரம் பிரபாகரன் இறந்ததை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? “ஆம்” ஏற்றுக்கொள்வார்கள், ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்.
ஏன் ஏற்றுக்கொள்வர்கள் என்று ஆராய்ந்தீர்கள் என்றால், இப்போது அவர்களுக்கும் கே.பிக்கும் ஒரு உடன்பாடு வந்து விட்டது என்பது அதற்குத் தெளிவான பதிலாக இருக்கும்.
புலித்தலைவன் பிரபாகரனோ, பொட்டம்மானோ உயிரோடு இருக்கும் வரை புலிகளிடம் இல்லாமல் இருந்த மிகப் பெரும் கொள்கை,குணம் என்னவென்றால் சரியோ,பிழையோ தாம் ஒரு தடவை செய்வதை வாழ்நாள் முழுக்க மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துவதாகும்.
அதாவது, அதைப் பிழை என்று ஒருக்காலமும் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படி ஏற்றுக்கொண்டால், அது மக்கள் தம் மீது வைத்திருக்கும் உணர்ச்சி மிக்க ஆதரவைப் பாதிக்கும், அது பாதிக்கப்படும் போது, புலிகளும் தவறு செய்வார்கள், எனவே மற்ற இயக்கங்களும் ஒரு வகையில் சரியானவை என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த ஒரே காரணத்திற்காக, இறுதி வரை இராஜீவைக் கொன்றதைக் கூட புலிகள் ஏற்றுக்கொள்ளவி்ல்லை. அதற்கு மாறாக ரணில்-பிரபா ஒப்பந்த காலத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அதைத் “துன்பியல் வரலாறு” என்று வித்தியாசமான சொற் பிரயோகம் மூலம் வர்ணித்தார்கள்.
தாம் செய்யும் பிழைகளை ஏற்றுக்கொள்வது, சுய விமர்சனம் செய்வது, தம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வது, அவற்றின் மூலம் மக்கள் நலன் சார்ந்த ஒரு போராட்ட அமைப்பாகத் தம்மை மாற்றிக்கொள்வது என்று புலி எப்போதாவது சிந்தித்திருந்தால் இப்படி மண்டை உடைபட்டு மாண்டு போகும் நிலைமை அவர்கள் தலைவருக்கும் வந்திருக்காது, இந்த அளவு அல்லல் படும் நிலைமை மக்களுக்கும் வந்திருக்காது.
எனவே,செய்த பிழையை ஒத்துக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பழக்கம் என்பது புலிக்கு இல்லவே இல்லாத ஒரு விடயம்.
அதையும் மீறிப் புலி ஒரு தவறை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அது பெரிய இலாபத்தை அள்ளுவதற்காக அமைய வேண்டுமே தவிர வேறு எதற்காகவும் இருக்காது.
எனவே, இன்றைய அறிக்கையோடு அறிவழகனை இயக்கும் புலிப் பினாமிகள், கே.பியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஏனெனில், தாம் பிழையானவர்கள் என்பதை அவர்கள் இறுதி வரை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை அவர்கள் அறிக்கையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
புலனாய்வுப் படை எனும் பெயரில் அவர்கள் செய்ய ஆரம்பித்த இந்தப் பித்தலாட்டத்தைப் பொறுத்தவரை இராணுவத் தளபதி பிரபாகரனைப் பலி கொடுத்தாலும், பெயர் குறிப்பிடாத ஆனால் புலனாய்வுத் “தலைகள்” பாதுகாப்பாக தப்பி வந்து விட்டது என்கிற ஐயம் கலந்த தகவல் திணிப்பின் மூலம் மக்களை தொடர்ந்தும் குழப்பி வைப்பதில் அவர்கள் மிகத் திறமையாக தீவிரம் காட்டியிருக்கிறார்கள்.
கடவுளின் அடுத்த திட்டம் என்ன என்று கூட அறிந்து வைத்திருக்கும் புலனாய்வுப் படையாக தம்மை மார் தட்டிக்கொண்ட புலிகளின் இந்தப் படை இன்று தைரியமாக தமக்கு சீரான புலனாய்வு கிடைக்கவில்லை என்று மழுப்புவதிலிருந்தே அப்படியொரு புலனாய்வுப் படை “உயிருடன்” இல்லை என்பது உறுதியாகிறது.
இவர்களுக்குத் தான் கிடைக்கவில்லை என்றாலும், கே.பிக்குக் கிடைத்திருந்ததே? அப்படியானால் உலகமே அறிய இறுதியாக புலிகளின் தலைவரால், அவர் உயிரோடு இருக்கும் போது நியமிக்கப்பட்ட இந்த சர்வதேசத் தொடர்பாளர், இயக்குனர் கேள்விக்குள்ளாக்கப்பட்டது ஏன்?
இப்படியான கேள்விகளைக் கேட்கும் போது, பிரபாகரனின் இருப்பையும்,இறப்பையும் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம் அம்பலத்துக்கு வரவேண்டும்.
அந்தக் கூட்டம் தான் இந்த இரண்டாவது வகையினர்.
எனவே இவர்களை சமாளித்து, பங்கீடு உடன்படிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி காலதாமதமாகியாவது ஒன்றாக நிற்பது போல் தமிழ் மக்கள் முன் அதுவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன் வரவேண்டும் என்பதுதான் கே.பி “அண்ணாவின்” முழுத் திட்டம்.
அந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பது போல ஒத்துழைத்தாலும், கே.பிக்கும் சேர்த்து ஒரு எச்சரிக்கையாக தம் மீது சாணியடித்துக்கொண்டாலும் அது ஒட்டாத விதமாக அவர்கள் அதாவது அந்த இரண்டாவது கூட்டத்தினர் விட்ட அறிக்கைதான் இன்றைய அறிக்கை.
பல புலனாய்வு உறுப்பினர்கள் தப்பி வந்தார்கள் என்றால்? புலித் தலைவரை அவர்கள் நட்டாற்றில் விட்டு வந்தார்கள் என்றுதானே அர்த்தம்? தலைவர் தலைவர் என்று எல்லாமே தலைவர் மயமாக அவரை முன் வைத்து, அவர் பெயரால் வியாபாரம் செய்தவர்கள் தலைவரை இப்படி அனாதையாக விட்டு வந்தார்கள் என்ற உண்மையை எடுத்து நோக்கினால், சராசரி மனிதர்கள் இதை இரண்டு காரணங்களுக்காகச் செய்வார்கள்:
1. எதிரியோடு கூட்டுச் சேர்ந்து காட்டிக்கொடுப்பதற்காக
2. தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் மரண பயத்துக்காக, வாழ்க்கை மேல் இருக்கும் விருப்புக்காக.
இந்த இரண்டாவது வகை என்பது புலியின் சித்தார்ந்தத்தோடு பலமாக மோதும் ஒரு விடயமாகும்.
ஏனெனில், புலி யென்றால் அது பிடிபடாது, பிடிபட்டாலும் உயிரோடு பிடிபடாது என்று உயிரைத் துச்சமாக மதிக்கும் அற்புத மனிதர்களாகவும், தியாகிகளாகவுமே பார்த்து வந்த மக்களுக்கு புலியும் உயிருக்குப் பயந்து ஓடும் எனும் உண்மை புலனாகிறது.
அப்படியானால், முன்னரங்கில் இருந்த அத்தனை புலிகளும் செத்து மடிய, பின்னரங்கில் அதுவும் தலைவருக்கு மிக அண்மையில் இருந்த புலிகள் தான் உயிருக்குப்பயந்து ஓடியிருக்கிறார்கள் எனும் உண்மையும் வெளிவரும்.
பின்னரங்கில் இருப்பவர்களுக்குத்தானே உணர்வும்,தலைவனின் பாசமும் மிக அதிகமாக இருக்க வேண்டும்? அவர்கள் ஏன் விட்டு ஓடினார்கள்? தலைவனே உயிருக்காக சிங்கள இராணுவத்தின் காலடியில் விழப்போகிறான் என்பது தெரிந்ததனாலா ( ஏனெனில் இவர்கள் தான் புலனாய்வுப் புலிகளாச்சே ) ? அல்லது தமிழீழம் என்கிற மாயமானுக்காக தன் உயிரை ஏன் இழப்பான் எனும் சுயநலத்திற்காகவா?
எப்படிப்பார்த்தாலும், உலகமெல்லாம் துரோகிப்பட்டங்கள் வழங்கி வந்த பிரபாகரன் அன் கோ, உண்மையான துரோகிகளை தனது அருகில் அதுவும் தன்னைச் சுற்றியே வைத்திருந்தார், இனம் இனத்தைச் சாரும் எனும் அடிப்படையில் இவர் இறுதி வரை துரோகிகளுக்குத்தான் தலைவராக இருந்தார் எனும் உண்மையும் வெளிவரும்.
அப்பாவித் தமிழ் மக்களின் உயிரை மாயை காட்டிப் பலி கொடுத்து வந்த தலைவன் எனும் இறுதி முடிவுக்குப் புலி ஆதரவாளர்கள் வருவதற்கு இன்னும் சில காலங்கள் செல்லும்.
ஆனாலும், ஆகக்குறைந்தது தலைவன் என்று காட்டப்பட்ட பிரபாகரனின் பெயரில் அவரைச்சுற்றி உண்மையான வியாபாரிகள் இருந்தார்கள் என்பதையாவது இந்தத் தருவாயில் ஏற்றுக்கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில், மக்கள் அவலத்துக்கு ஏதேனும் வழிமுறையில் உதவி செய்ய முடியாத புலிப் பினாமிகள், நாடு கடந்த அரசு, வெளியுறவுப் புலனாய்வுத் துறை, என்று ஆரம்பித்து இன்று இறுதியாக தலைவருக்கு வீர வணக்கம் என்று என்றோ செத்துப்போன தலைவனுக்கு இன்றுதான் அவர் இறந்தார் என்பதை மக்களுக்கு அறிவிக்க முடிவெடுத்திருந்தால்..
எப்போது நாம் எதைக்கூறினாலும் அதைக் கேட்கும் மந்தைகளாக மட்டுமே இந்த மக்கள் இருக்க வேண்டும் எனும் “உயர்ந்த” நோக்கத்தை அடிப்படையாக வைத்தே செயற்படுகிறார்கள்.
அதே நேரம் மக்கள் முன் போய் மண்டியிட்டாலன்றி இனியொரு காலத்தில் தம் வருமானத்தை நிலையாக வைத்திருக்க முடியாது என்பதிலும் தெளிவாக இருக்கும் இந்த வகையினர் பாசமுள்ள ஈழ மக்களுக்குக் கடிதம் வரைந்துள்ளார்கள்.
இந்தப் பாசமுள்ள ஈழ மக்களை மாதக்கணக்கில் குழப்பி வைத்திருந்ததற்கு, உலகிலேயே மிகப்பலம் வாய்ந்த இயக்கமாக இருந்த புலிகளியக்கத்திற்கு அதுவும் அந்த இயக்கத்தின் புலனாய்வுத் துறை, அதுவும் வெளியுறவுப் புலனாய்வுத் துறை சொல்லும் காரணம் அவர்களுக்கு சீரான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதாகும். அதை ஆதரவாளர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஒட்டு மொத்தக் கூட்டத்தையும் கூண்டோடு இராணுவம் அழித்த கதையையும் இனியாவது புலிகளின் எஞ்சியிருக்கும் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளும் தருவாயில்,ஒரு கொஞ்சம் புலனாய்வுப் புலி தப்பியதாக ஒரு இலகு ரக புளுடாவை, பின்னர் உதவும் என்பதற்காக சேர்த்தே அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
இனி என்ன? மீண்டும் மீண்டும் நாடுகடந்த தமிழீழ அரசிற்காக கூட்டங்களும், உண்ணாவிரதங்களும், நிதித் திரட்டல்களும் என்று ஏக போக அறுவடைக்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள், புலி ஆதரவாளர்கள் இப்படி 73 நாட்களோடு எழுந்து,கலைந்து செல்லக் கூடாது.
730 நாட்கள் இருந்த இடத்தில் இருந்து உங்கள் உயிர்களை விட வேண்டும், அப்போதுதான் தலைவரே தன் முழு முகத்தைக் காட்டினாலும் எப்போதுமே தன் ஒரு பக்கத்தை மட்டும் காட்டித் திரியும் பத்மநாதனும் கொளுத்து, பில் கேட்சை மிஞ்சலாம்.
கதிர்காமத்தம்பி அறிவழகன், தெய்வீகன்கள், ருத்திரக் குமரர்கள் எல்லாம் தம் சுக போக வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
தம் வாழ்நாளில் சிங்களவனை எதிரியாக மட்டுமே அறிந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இப்படி ஒவ்வொருவர் செயலுக்கும் தத் தம் விருப்பப்படி நியாயம் கற்பித்து ஏற்றுக்கொள்ளலாம், பிரச்சாரம் பண்ணலாம், இறுதியில் மனமுடைந்து போகலாம்.
ஆனால், தப்பித் தவறியும் புலி அல்லாத ஒரு இன்னொரு இணையமோ, மனிதர்களோ உண்மையை எடுத்துக் கூறினாலும் அதை புலி வாயால் சொல்லும் வரை ஏற்றுக்கொள்ளாமலேயே தொடர்ந்தும் வாழலாம்.
இறுதியில், தமது பங்கீட்டுப் பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பின்னர் புலிகளின் கடிதத்தலைப்பில் உத்தியோக பூர்வமாக புலி இன்னொரு புதிய டிபார்ட்மென்டு பெயரில் எழுதும் அறிக்கையின் பின்னர், ஐயோ இதை அப்பவே சொல்லியிருந்தால் தலைவருக்கு ஒரு மெழுகுதிரியாவது ஏற்றியிருக்கலாமே என்று அங்கலாய்த்துக் கொள்ளலாம்.
தகவல் தொடர்பு என்பது விரல் நுனியில் இருக்கும் இந்தக் காலத்திலும் இவர்கள் நிலை இதுதான் என்றால் இவர்களை ஆயிரம் பிரபாகரன்கள் வாழ்ந்தும் திருத்த முடியாது, இறந்தும் திருத்த முடியாது.
உலகமே சொன்ன போது ஓடி ஒளிந்து கொண்ட அந்த அப்பாவி உணர்வாளர்கள் இப்போது புலியின் பெயரில், நம்பத்தகுந்த புலி இணையங்களில் அதுவும் கடிதத்தலைப்பில் பிரபாகரன் – கதை முடிந்தது என்பதை சொல்லியிருக்கும் இத்தருணத்தில் எங்கே ஓடி ஒளிக்கப்போகிறார்கள்.
இந்தக் காழ்ப்புணர்ச்சியை மீண்டும் மீண்டும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதும், புலியை ஆதரிக்காத இணையங்கள் மீதும் காறி உமிழ முனைவார்களே தவிர தம்மைத்தாமே எப்போதாவது சுய விமர்சனம் செய்து கொள்வார்களா?
அன்று பிரபாகரன் கொல்லப்பட்ட அந்த நாளே ஒக்கம இவராய் என்ற தலைப்பிட்டு நாங்கள் கூட அதை எழுதினோமே? பிரபாகரனுக்கு ஆப்பு நெருங்கிக் கொண்டிருக்கும் நாட்களில் பல் வேறு தரப்பினரும் பல் வேறு வகையில் இறுதித் தருவாயிலாவது விழித்துக்கொள்ள எவ்வளவோ எல்லாம் எழுதித்தள்ளினார்களே? அதில் எதையும் ஏற்க விரும்பினாலும், ஏற்க மறுத்தது எது? இந்தப் புல நாய்வுத் துறை உங்களை மிகக் கவனமாகத் திட்டமிட்டு நடத்திச் சென்ற உணர்ச்சியூட்டல் தானே?
இப்போது அதே புல நாய்வுத் துறை பிரபாகரன் – Chapter Closed என்று கூறுகிறது, இதை அறிவிக்க அவர்களுக்கு ஒரு மாதம் எடுத்தது, அதுவும் அதற்கான காரணம் தலைவரைத் தனியாக விட்டு வந்த புல நாய்வுத் துறை என்றும் கூறுகிறது, நீங்கள் மறுக்கவா போகிறீர்கள்? இல்லை ஏன் எங்கள் தலைவனுக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்த விடவில்லை என்று கேள்விதான் கேட்கப் போகிறீர்களா?
தலைவரைத் தனியாக விட்டு விட்டு தப்பி ஓடி வந்த புல நாய்வுத் துறை இனியும் விடப்போகிறதா? முன்னர் கூட பரவாயில்லை தமிழீழம் எனும் கட்டமைப்புத்தான் இருந்தது, இப்போது தமிழீழ அரசாங்கமே வரப்போகிறதே? அனைவரும் இப்போதே ஓவர் டைம் வேலை செய்யத் தயாராகுங்கள்.
புலிகளின் சொத்துப் பங்கீடு ஒருமுகமாக கே.பியின் அல்லது கே.பியை எதிர்க்கும் இன்னொரு அணியின் கையில் நிபந்தனையின்றிக் கிடைக்கும் வரை தமிழீழ அரசாங்கத்திற்காக இரு தரப்பும் மாய்ந்து மாய்ந்து உழைக்கப் போகிறது.
அதன் பின் ஒரு நாளில் யார் தலைவன் என்பதில் குழப்பமும், விடுதலைப் புலிகளின் கே.பி அணி, பிரபா அணி என்று சில பிரிவுகளும் உருவாகி, தமிழீழம் காணப்புறப்பட்ட போராளி இயக்கங்கள் எவ்வாறான இறுதி நிலையை அடைந்ததோ அந்த நிலையை விடுதலைப் புலிகள் இயக்கமும் அடைவது உறுதி.
அப்படியொரு நிலை வரும் போது, இது வரை நீங்கள் தூற்றியவர்களையும், போற்றியவர்களையும் ஒரு சம அளவில் வைத்துப் பார்க்க உங்கள் மனச் சாட்சி ஒத்துழைத்தால் முயற்சி செய்து பாருங்கள்.
அதுவரையும் காத்திருக்காமல், தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவது, உங்கள் சுய அறிவைக் கொண்டே எதார்த்தத்தைப் புரிந்து, மக்கள் நல் வாழ்வுக்காக நீங்கள் ஒவ்வொருவரும் பாடு பட ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும்.
அதற்கொரு தலைவன் தான் வேண்டும், அமைப்புத்தான் வேண்டும், அவர்களின் புல நாய்வுத் துறை தான் வேண்டும், புற நிலை அரசாங்கம் தான் வேண்டும் என்றால், நீங்கள் இதில் எங்கே நிற்கிறீர்கள்? உங்கள் அறிவு இங்கே எந்த அளவில் இருக்கிறது? உங்கள் உணர்வு எந்த வகையில் உயிர் பெறுகிறது? அது வரை உங்கள் உறவுகள் என்ன பாடுதான் படுவது? என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
முதல் பத்தில் பிரபாகரன் ஒரு போராளியாகத்தான் இருந்தார் என்பதில் குறைந்தளவு ஆட்சேபனையே இருந்தாலும் பின்னர் வந்த இரண்டு பத்து ஆண்டுகளிலும் பிரபாகரன் எனும் சந்தைப் பொருளை உருவாக்கி அதில் குளிர்காய்ந்த உண்மையான ” (…. இடைவெளியை உங்கள் சொந்த அறிவைக் கொண்டு நிரப்பிக்கொள்ளுங்கள்)..” தான் இப்போது வெளிப்பட ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
தம் கையாலாகாத தனத்தை மறைக்க சில “பேராசிரியர்களைப்” பட்டியலிடுகிறார்கள் என்றால் இதற்கு முன்னரும் சமூகத்தில் இருந்த புத்திஜீவிகளைக் கொல்லாமல் விட்டிருக்கலாமே என்று ஒரு சம அளவில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்.
இந்த சமூகம் கண்டிக்கும் பின்னடைவுக்கு முதற் காரணம் கல்வியால் மேலோங்கியிருந்த உங்கள் வரலாற்றை ஆயுத மோகத்தால் அழித்துப் பிழைப்பு நடத்திய நயவஞ்சகத்தனம் என்பதை உணர்ந்து கொண்டால் பேராசிரியர்கள் வந்து உங்களை வழி நடத்தத் தேவையில்லை, நீங்களே உங்கள் சொந்த இனத்துக்கு வழி காட்டும் தலைவர்களாக மாறிவிடலாம்.
ஆகக்குறைந்தது, ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்திற்காக பிரபாகரன் கதை முடிந்தது என்று எஞ்சியிருக்கும் புலிப் பினாமிகள்ஆரம்பித்திருக்கிறார்கள், அதே சந்தர்ப்பத்தை நீங்களும் பயன்படுத்திக்கொண்டால், உங்கள் சுய அறிவைக்கொண்டு மக்கள் நலன் மீது நீங்களே சுயமாக அக்கறை கொள்ள ஆரம்பித்தால் ” Its not an end but a begginning ” என்று நீங்களும் மார் தட்டிக்கொள்ளலாம்.
அறிவிப்புகளும், அறிக்கைகளும் வெளியிடக்கூட ஒரு முகம் தெரிந்த புலியை அவர்களால் முன் வைக்க முடியாது.
அப்படியிருக் இந்த அறிக்கைகள்,அறிவிப்புகளின் முழுப் பின்னணியும் எதுவாக இருக்கு் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வதுதான் ஆகக்குறைந்தது, தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் பிரபாகரனுக்கு முன்னும்,பின்னும் அவரை நம்பியும்,அவரால் அழிக்கப்பட்டுமாக முழுக்க முழுக்க இந்த மண்ணுக்காகவே மடிந்து போன பல்லாயிரம் உயிர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடனாகும்.
sekaran
ஜூன்20, 2009 at 6:23 பிப
பரோட்டா , கொத்துக்கறியுடன் ஸ்பெஷலாய் கடை திறந்திருக்கிறார்களா? இத்தனை நாள் அந்த எருமை மாடுகளின் ஊர்வலத்துக்கு போகாதவன், இன்று ஒரு பிடி பிடிக்கலாம் என்று யோசிக்கிறேன். அவர்கள் உம்பா, உம்பா என்று கத்திவிட்டுப் போகட்டுமே. நான் சாப்பிடப் போகிறேன்.
vannimahal
ஜூன்21, 2009 at 5:24 முப
Get tamileelam in a democratic way. Dom’t ask money for that further.
sekaran
ஜூன்21, 2009 at 3:28 பிப
வன்னிமகள் அவர்களுக்கு :
தயவு செய்து தப்பாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஈழம், தமிழீழம் போன்ற சொற்களை கேட்கும்போதே, புலிகளின் ரத்த, அதிகார வெறி தான் நினைவுக்கு வருகிறது. தவிர சிங்கள மக்களோ கோபம் தலைக்கேறி கிட்டத்தட்ட சாமியாடுகிற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இப்போ தான் ராஜபக்ச கொஞ்சம் நிம்மதியாக இருக்க விட்டிருக்கிறார். அதையும் கெடுத்து விடவேண்டாம். ஒரே இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் சிநேகத்துடன் வாழ எப்படியான சூழ்நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும், என்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று முயல்வது நல்லது. தமிழ் இனம், தமிழ் நிலம் என்று குதித்துக் குதித்து நாம் அழிவை நோக்கி நகர்ந்தோமே தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.
மேல்நாடுகளில் தஞ்சம் புகுந்த ஆட்களின் உலகமே வேறு. அவர்களில் அநேகமானவர்களுக்கு இலங்கையின் இனப்பிரச்னை என்றாலே இனிக்கிற சமாசாரம். அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும். வீட்டிலே, ரோட்டிலே, தலைமாட்டிலே எல்லாம் பேசுவதற்கு கைகொடுக்கிற ஒரே தலைப்பு இது தான். தவிர சொந்த பந்தங்களை அங்கே கூப்பிட்டுக்கொள்ள இருக்கிற அனுகூலங்கள்… காசு உழைக்க என்னென்ன செய்யலாம்…. இப்படியான சிந்தனைகளிலேயே அவர்கள் வாழ்வதால் அவர்களின் சித்து விளையாட்டுக்களை நாம் சினிமா அல்லது டிவி தொடர் சீரியல்கள் லெவலில் பார்க்க வேண்டுமே தவிர நம் நாட்டின் யதார்த்தத்துடன் ஒப்பிடக்கூடாது. (சின்னத்திரை தொடர் நாடகங்களில் ஏற்கெனவே ‘கப்டன் அலி கப்பல்’ சீரியல் கலக்கிக்கொண்டிருக்க, இப்போ புதுசாய் ‘ கடல் கடந்த தமிழீழம்’ என்று துவங்கியிருக்கிறார்கள். கவனித்தீர்களா?..வாவ்!..)
வெட்டி சாய்ப்பது ஒரு நிமிஷ வேலை. கட்டி அமைப்பது காலங் காலமாய் கஷ்டப்பட்டு, கவலைப்பட்டு செய்ய வேண்டிய ஒரு கலை. அந்த நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். செய்து தானாக வேண்டும். இனங்களுக்கிடையில் நிச்சயம் புரிந்துணர்வு வரும். வந்து தானாக வேண்டும். ஏனென்றால் நாம் வாழ்வது ஒரு சின்னத் தீவில்!
nathan
ஒக்ரோபர்13, 2009 at 7:28 பிப
“அதன் பின் ஒரு நாளில் யார் தலைவன் என்பதில் குழப்பமும், விடுதலைப் புலிகளின் கே.பி அணி, பிரபா அணி என்று சில பிரிவுகளும் உருவாகி, தமிழீழம் காணப்புறப்பட்ட போராளி இயக்கங்கள் எவ்வாறான இறுதி நிலையை அடைந்ததோ அந்த நிலையை விடுதலைப் புலிகள் இயக்கமும் அடைவது உறுதி.”
You openly accept the fact that Praba is a good leader for Tamil,s libaration struggle than other Tamil so called “leaders”
rajavarthanan
திசெம்பர்3, 2009 at 5:09 முப
neeng ellam oru manithana? podaa paddu
Rajenderam Abreham
ஜூன்3, 2010 at 12:46 பிப
மனிதனுக்கும், மிருகத்திக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் சிந்திக்கும் ஆற்றல் ஆகும்.
எனவே, ஒருவர் மாறி ஒருவர் விமர்சனம் செய்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நிஜமாக சிந்திப்பதற்கு பல விடயங்கள் உள்ளன.
சிந்திக்கும் ஆற்றல் இருப்பின் எவரும் உண்மைநிலையை இலகுவாக அறிந்து கொள்ளலாம். முதலில் நடுநிலையில் இருந்து ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அதையிட்டு விதண்டாவாதம், விட்டுகொடுக்காமை, சகித்துக்கொல்லாமை, முரட்டுத்தனம், முற்கோவம், பழிதீர்க்கும் எண்ணம், எதையும் அலாப்பும் மனநிலை என்று தமிழினம் இன்றும் திருந்துவதாக இல்லை.
நேர்மை, நீதி, நியாயம் என்று உள்ளதை மறந்துவிட்டார்கள். அத்துடன் கடவுளின் தண்டனை என்று ஒன்று இருக்கிறது என்பதையும் மறந்துவிட்டார்கள் போலும்.
அருமையான கட்டுரைகளை எங்களுக்கு தந்ததுக்கு ஆசிரியருக்கு மற்றும் எழுத்தாளருக்கும் என் நன்றிகள்