RSS

தமிழ்த்தேசியம் !?

09 ஜூன்

ஒவ்வொரு தமிழர் உணர்வோடும் விளையாடக்கூடிய மிகக் கூரிய ஆயுதமான “தமிழ்த் தேசியம்” எனும் சொற்பிரயோகத்தை பல தரப்பட்ட மனிதர்களும், பல தரப்பட்ட கோணங்களில், சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தமிழ்த் தேசியம் எனும் சொற் பிரயோகம் இரண்டு வகைப்படுகிறது.

திராவிட நாட்டுக் கோரிக்கையின் போது காணப்பட்ட தமிழ்த்தேசியத்தையும் இலங்கை இனப்பிரச்சினையில் பேசப்படும் தமிழத்தேசியத்தையும் ஒன்றபடுத்திப் பார்க்கும் சிலர், தம்மை இரண்டாம் நிலைக்கு எடுத்துச்சென்று இதை அலசி ஆராயும் பக்குவத்தை அல்லது நிதானத்தை இழந்து விடுகிறார்கள்.

அதற்கான பிரதான காரணம், இலங்கையில் காணப்பட்ட தமிழ்த்தேசிய எழுச்சியின் அதன் விளைவு மீது தமிழகம் காட்டிய ஆர்வமுமாகும்.

தமிழ்த்தேசியம் என்பது ஒவ்வொரு தமிழரின் உணர்விலும் ஊறிக்கிடக்கும் ஒரு விடயமாகும்.

இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும் போது, தம்மை அறியாமலே மிக விரைவாகத் தம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையே அனைத்து தமிழர்களிடமும் இருக்கும்.

எனவே, இந்த ஆயுதத்தை அவரவர் விரும்பியபடி தம் வசதிக்கேற்பப் பாவித்து மக்களை உணர்ச்சியூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்காலத்தில் தமிழ்த்தேசியம் எனும் சொல்லுக்குப் பின்னால் இலங்கைப் பிரச்சினை தான் மேலோங்கி இருக்கிறது.

எனவே, இந்தத் தமிழ்த்தேசியம் எவ்வாறு இலங்கையையும் தமிழகத்தையும் இணைத்துக்கொள்கிறது என்று பார்ப்போமாயின், ஒரு சில கசப்பான விடயங்களையும் அலசிக்கொள்ள நேரிடும்.

இலங்கையைப் பொறுத்தவரை 1970 களில் வீறு பெற்ற ஒரு விடயம் தான் தமிழ்த்தேசியம்.

சுதந்திரத்தின் பின்னான காலப்பகுதியில் மத்தியில் அமைந்த அரசு தமிழினம் அல்லது சிறுபாண்மையினம் என்று அறியப்பட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு செய்யத்துணிந்த அடக்குமுறை அரசியலுக்கு எதிராகப் புறப்பட்டதே இந்தத் தமிழ்த்தேசியம்.

அப்போது பேசப்பட்ட தமிழ்த்தேசியம் என்பது மிரட்டல் அரசியலாகவே ஆரம்பித்திருந்த போதும், பிற்காலத்தில் அதற்கான தேவையையும் உணர்ந்த மக்கள் அதன் மீது நம்பிக்கையும் வைக்கத் துணிந்தார்கள்.

அதிலும் கல்வி மற்றும் அடிப்படை வாழ்வியல் உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தப்பட்ட போது தம்மைச் சுற்றி ஒரு அரசியற் புரட்சியும், அதைக் காக்கும் காவற் திறனும் வேண்டும் என்றும் திடமாக முடிவெடுத்தார்கள்.

வீறு கொண்டு எழுந்த இந்த சிந்தனையின் வளர்ச்சியை அன்றைய இளைய சமுதாயம் பற்றிப் பிடித்துக்கொண்டதனால் அவர்கள் மக்களாலேயே ஊட்டி வளர்க்கப்பட்டார்கள்,வாழ வைக்கப்பட்டார்கள்.

ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்பது இலகுவாக இருந்தாலும், இலக்கையடைவதற்கான தூரம் நெடியது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அந்த இலக்கை அடைவதற்ககுத் தாமும் உடல் மற்றும் பொருள் ரீதியான ஒத்துழைப்பை வழங்கியே ஆக வேண்டும்,அதுதான் நம் வருங்கால தலைமுறையினரின் செழிப்பான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பது ஒவ்வொரு ஈழத்தமிழராலும், குறிப்பாக வட – கிழக்கில் வாழ்ந்த அனைவராலும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருந்தது.

இதன் பால் மக்கள் காட்டிய ஆர்வமும், நம்பிக்கையுமே ஆயுதப் போராட்டத்தைக் கட்டியெழுப்பவும் உதவியது.

அதன் அடிப்படையில் ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்றதும், அது தமிழகத்தின் ஆர்வத்தையும் சுண்டியிழுத்ததும் வரலாறு.

அதன் பின்ணனியில் தமிழக அரசியல் சக்திகள், ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தை வழி நடத்தும் அல்லது தமிழக அரசியலின் உதவியுடன் தான் ஈழத்தின் ஆயுதப்போராட்டத்தை வழி நடத்தவும் முடியும் எனும் நிலைக்கு ஆயுதமேந்திய போராளிக்குழுக்களும் முழு மனதுடன் வந்து தமிழக அரசியலிடம் தம் இலக்குகளையும் ஒப்படைத்தார்கள்.

அதற்கான வெகுமதி தான் ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சியாகவும் இருந்தது.

அந்த வகையில், தமிழத்தேசியம் என்பது பொது நோக்காக இருக்கும் வரை தமிழினம் முற்று முழுதாக ஒற்றுமையுடன், ஒன்று பட்டு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

இதன் ஒரு பக்கம் இவ்வாறு இருக்க, மறு பக்கம் எதோச்சாதிகாரத்தை நோக்கி மெதுவாக முன்னேறிக்கொண்டு வந்தது தமிழ்த்தேசியம் ஆகக்குறைந்தது 1989 களிலிருந்து எதிர்வரும் இருபது வருடங்களுக்குச் செய்யப் போகும் அறுவடையாக இருந்தது கசப்பான உண்மையாகும்.

தமிழ்த்தேசியம் எனும் பொது நோக்கு, தமிழ் மக்களையே பிரித்துத் துண்டாடி நாம் அனைவரும் ஒரு பக்கம் என்ற நிலையிலிருந்து விலகி, நீ யார் பக்கம்? நான் யார் பக்கம்? என்ற அடிப்படை முரண்பாட்டை மக்கள் முன் தோற்றுவித்ததிலிருந்து ஒன்றாக இருந்த தமிழ்த்தேசியக் கொள்கையும் பிளவு பட்டது.

அதற்குப் பின்னான ஈழ வரலாற்றில் புலித்தேசியம்=தமிழ்த்தேசியம் எனும் புதிய சமன்பாடு நிறுவப்பட்டதனால், அதில் முரண்பட்டுக்கொண்டவர்கள் விலக ஆரம்பித்தார்கள், விரும்பியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தத் தேர்வு அவரவர் விருப்பமாக விடப்படுவதே மக்களின் ஜனநாயக உரிமையாகவும் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த மக்கள் விரும்பிய அடிப்படையிலேயே இப்போது முரண்பாடு எழுகிறது, எனவே அந்த முரண்பாடு தொடர்பான நிலையை மக்களை சுதந்திரமாக எடுக்க விடுவதே நியாயமானதுமாகும்.

அதையும் மீறி, இல்லை நாங்கள் எடுத்த காரியத்தை முடிப்போம், இந்தத் தமிழ்த்தேசியத்தைக் காத்தே தீருவோம் என்று ஒரு சாரார் தம் தரப்பு நியாயங்களைக் கூற விளைந்தபோதும் கூட மீண்டும் மக்கள் பிளவு பட்டார்கள்.

அவர்கள் கூறுவது போன்று ஓர்மப்பட்ட தலைமையின் கீழ் அதுவும் ஆயுத அதிகாரத்தை முதன்மைப்படுத்தி இந்த விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்று சிந்தித்து முரண்பட்டார்கள்.

இப்போதும் விரும்பிய மக்கள் அந்த ஒரு சாராரின் போக்கை ஆதரிக்கத்தான் செய்தார்கள்.

இந்த ஆதரவைப் பேணிப்பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கும் இந்த உணர்வையூட்ட வேண்டும் என்று சிந்தித்த அந்த சாரார், தம் போராட்டத்தின் மிகப்பெரும் பலமாக பிரச்சார சக்தியை மீள் வடிவமைத்துக்கொண்டு, மக்கள் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக்கூடாது, எதைப் பேசலாம் எதைப் பேசக்கூடாது என்பதிலிருந்து ஆரம்பித்து ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கலாம் இருக்கக்கூடாது, எத்தனை பேர் வெளிநாடுகளுக்குச் செல்லலாம், செல்லக்கூடாது, ஒருவருக்கு எவ்வளவு நிலம் சொந்தமாக இருக்கலாம், இருக்கக்கூடாது, ஒருவருடைய வியாபாரம் எந்தளவு இலாபத்தை தனதாக்கிக்கொள்ளலாம், அதற்கு மேல் வந்தால் என்ன செய்வது என்று ஆரம்பித்து மக்களின் மிக அடிப்படையான ஒவ்வொரு வாழ்வியல் தேவைகளிலும் கை வைக்க ஆரம்பித்தது.

இப்போதும், மக்கள் சிந்திக்க விளைந்தார்கள், முரண்பட்டுக் கொண்டார்கள்.

விடுதலை வேண்டும் என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்த அந்த நாளுக்கு முன்னர் அவர்களிடமிருந்த சுதந்திரத்தையும் இப்போது அவர்கள் அடைந்திருக்கும் நிலையையும் ஒப்பிட்டு முரண்பட்டுக்கொண்டார்கள்.

அப்போதும் கூடத் தாம் விரும்பும் கொள்கையை ஆதரிப்பவர்கள், தொடர்ந்தும் ஆதிரிக்கச் செய்தார்கள். இன்றில்லையெனில் துயரங்களைத் தாங்கி நின்று என்றாவது ஒரு நாள் விடுதலை கிடைக்கும், அந்த விடுதலைக்குப் பின் மக்களுக்கு ஒரு சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும் என்ற நப்பாசையிலும் சிலர் ஆதரித்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்று தம்மைத்தாமே சமாதானப்படுத்திக்கொண்ட, ஆனால் வெளிநாடுகளில் வாழ்ந்தவர்களும் தொடர்ந்து ஆதரித்தார்கள்.

இந்த ஒவ்வொரு படிகளிலும சரி பிழைகளைத் தமது அறிவால் ஆதரித்தவர்கள் செய்த மாபெறும் தவறானது, தமக்கிருக்கும் முடிவெடுக்கும்,முரண்பட்டுக்கொள்ளும் உரிமை மற்றவருக்கும் அதுவும் நம்மோடு கூடவே நம் மண்ணில் பிறந்த அந்த மனிதர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறியதாகும்.

இதன் விளைவில், மக்களை இரு சாராராகப் பிரித்தாளும் ஒரு சக்தியாக தமிழ்த்தேசியம் பேசிய சக்தியும், அதன் மூலம் தனிமைப் படுத்தப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட நிலையில் தமிழ்த்தேசியத்தை விட்டு விலகிச்சென்ற நிலையில் இன்னொரு பிரிவும் ஒரே சமூகத்திற்குள் தம்மை நிறுவிக்கொண்டன.

அத்தோடு நின்று விடாமல் தாம் சார்ந்த அதே சமூகத்தில் ஒரு பிரிவினரைத் துரோகிககள்,கூலிகள்,மாற்றுக் கருத்தாளர்கள் என்று பிரித்தாள முற்பட்ட நாளிலிருந்து, பிரித்தாளும் வர்க்க நலனை உள்வாங்கிய ஆளும் வர்க்கமாகவும் தமிழ்த்தேசியம் மாறிக்கொண்டது.

எனவே, அந்த மமதை மேலோங்கிய நிலையில் ஒன்றோடு ஒன்றாகப் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த அதுவும் தமிழினம் அல்லது ஆகக்குறைந்தது சிறுபாண்மையினம் என்ற அடையாளத்திற்காவது தோளோடு தோள் நின்ற சமூகங்களையும் பிரித்து வேட்டையாடியது.

எனவே ஆளும் வர்க்கத்தின் குணங்களைக் காட்ட ஆரம்பிக்கும் வரை அரை குறை வாதங்களில் இருந்த புலித்தேசியம்=தமிழ்த்தேசியம் எனும் சமன் பாடு, இப்போது மிகத் தெளிவாக நிறுவப்பட்டு சமுதாயத்தை மிகத் துல்லியமாக துண்டாடி விட்டது.

இந்த நிலையைத் தமிழக தமிழ்த்தேசிய வாதிகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைப்பதனால் அவர்களது அரசியலுக்கான தமிழ்த்தேசியமும் நன்றாகவே நடந்தேறுகிறது.

இலங்கையில் வீறு கொண்டெழுந்த தமிழ்த்தேசியம் எங்கே பிளவு பட்டதென்கிற உண்மையை மக்கள் முன் வைக்காமல், இங்கு நிறுவப்பட்ட ஒரு சமன்பாட்டை அவர்களும் ஏற்றுக்கொண்டதனால் அங்கும் திணிப்பை மட்டும் மேற்கொண்டார்கள்.

இப்படித் துண்டாடப்பட்ட நிலையில், மேலும் பலவீனமடைந்த தமிழ்த்தேசியம், தன் சொந்தச் சமூகத்தை, அண்டை நாடுகளை, தன் தொடு தூரத்தில் இருக்கும் தமிழகத்தை விட தொலை தூர முதலாளி வர்க்கத்தின் வாக்குறுதிகளின் பால் தன்னை செலுத்த ஆரம்பித்துக்கொண்டது.

சம பலம் என்கிற ஒன்றை மட்டும் நிரூபித்தால் போதும், உங்களை ராஜாக்களாக்கி அழகு பார்க்கிறோம் எனும் சக்திவாய்ந்த வாக்குறுதிகளால் உந்தப்பட்டு, இராணுவ ரீதியாக எதிரியின் பலவீனங்களை அறிந்துகொண்ட திறமையின் மூலம் இலக்குகளைத் தாக்கியழித்து மேற்குலக எஜமானர்களைத் திருப்திப்படுத்தினார்கள்.

இப்படி இந்தப்பக்கத்தையும், இந்தியா என்றொரு ஜனநாயக நாட்டை ஏதாவது ஒரு வகையில் பொருளாதார அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்கத் திட்டமிட்ட அதே பெருச்சாளிகளின் தயவில் இலங்கை அரசுகளின் அந்தப் பக்கத்தையும் ஒரு சேரச் சமாளித்து, பின்நாளின் எப்போதுமே தம் நலத்தை முற்படுத்திக்கொள்வதற்காக புலிகளை மிகக்கொடிய பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட்டு தடையும் செய்து கொண்டார்கள்.

இவையனைத்தையும் தம் ராஜதந்திரம் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்ட தமிழ்த்தேசியமும் முற்று முழுக்க புலித்தேசியத்தின் நலனை முற்படுத்தி, வகை தொகையில்லாமல் கருத்து ரீதியாக தம்மோடு முரண்பட்டவர்களைக் கூட போட்டுத்தள்ள ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் கை கட்டிப் பார்த்துக்கொண்டாலும், எப்போதும் தம் வர்க்க நலனைப் பேணிக்கொள்ளும் முதலாளி வர்க்கமும், ஆளும் வர்க்கமும் பிளவுண்ட அரசியலில் பிரியாணி போட்டுத் தின்று நன்றாக ஏப்பம் விட்டுக்கொண்டது.

இந்த நிலையை உணர்ந்தாலும்,உணர முடியாத இறுக்கமான வலைக்குள் சிக்கிக்கொண்ட புலித்தேசியமோ தமது ஆதரவாளர்கள் ஒரு சிறிதளவும் இதைச் சிந்தித்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தால், போர்க்காலங்களை விட சமாதான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த காலங்களில் “உணர்ச்சியூட்டலை” அதிகமாகப் பயன்படுத்தியது.

இதையும் கூட ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தற்போதிருக்கும் தொழிநுட்பத்தின் உதவியில் எதிர்த்துக் குரலாவது கொடுத்தார்கள்.

எனினும் விடுதலை வேண்டும் தமிழினத்திற்குள்ளேயே பிளவுகள் தொடர்கின்றன என்பதை தமிழ்த்தேசியம் பேசியவர்கள் அதாவது தமிழரின் ஏப பிரதிநிதிகள் தாம் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையின் பெயரில் எது வந்தாலும் தட்டிக்கழித்தவர்கள், தம் சமுதாய நலன் சார்ந்த நிலையில் சிந்திக்கவே இல்லை.

மாறாக, களத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் இன்னொரு வடிவமாக இணையத்தில் அவர்கள் சார்ந்த கருத்துக்கும், சாராத கருத்துக்குமான ஒரு இணையப் போரையும் உருவாக்கிவிட்டார்கள்.

இதன் உச்ச கட்டமாக, பின்நாளில் புத்தி தெளிந்த சில முன் நாள் புலிப் பிரமுகர்கள் கூட மிகக் கேவலமாக வேட்டையாடப்பட்டார்கள், அவர்கள் குடும்பம்,பிள்ளைகள் என்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேவலப்படுத்தி,மானபங்கப்படுத்தி அழகும் பார்த்தார்கள்.

அங்கே இரு சாராராகப் பிரியும் வரை ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்து வந்த அதே குடும்பத்தினர் இந்தத் தமிழ்த்தேசியத்தின் மீதான விரோதங்களை இன்ன பிற காரணங்கள் மூலம் வளர்த்தெடுத்து, இந்த முரண்பாட்டுக்காக ஒருவரை மற்றவர் கேவலப்படுத்தி அழகு பார்த்தார்.

இப்போதும், தமிழ்த்தேசிய வாதத்தை நம்பியவர்கள் தம் நம்பிக்கையைத் தொடர்ந்தார்கள், இவ்வாறான பல கசப்பான நிகழ்வுகளின் பின்ணனியில் கருத்துக்கும்,மாற்றுக் கருத்துக்கும் இடையில் நடு நிலையாலர்களும் உருவாகத் தொடங்கினார்கள்.

தமிழ்த்தேசியம் தன் சொந்த மக்களோடு முரண்பட்டுக்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமுதாயம் இப்படிக் கூறு போடப்பட்டதே தவிர, பிளவுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒரு இணைவு வரவே இல்லை.

இந்த இரண்டாம் கட்ட உண்மைகளையும் தமிழ்த்தேசியத்தைப் பேசித் தம் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளும் தமிழக அரசியல் வாதிகள் மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவும், அதிக பட்சமாக ஊடகங்கள் ஊடாக இவை கசிந்து விடக்கூடாது என்பதிலும் மிகக் கவனமாகச் செயற்பட்டார்கள்.

எனவே, இத்தருணங்களில் குரல் எழுப்பிய சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கூட மட்டமான ரகத்தில் துரோகிகள் என்று நிலத்திலும், புலத்திலும், இணையத்திலும் முத்திரை குத்தப்பட்டார்கள்.

இப்போதும், ஆதரிக்க விரும்பியவர்கள் ஆதரித்தார்கள், விரும்பாதவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறைந்து போகும் சனத்தொகை எதனால் குறைகிறது என்பதை சுய விமர்சனம் செய்து கொள்ளத் துணியாத புலித்தேசியமோ கருத்து முரண்பாட்டையும், மக்கள் விருப்பு,வெறுப்பையும் அவரவர் உரிமை என்று கருதியாவது விட்டு விடாமல் நாட்டின் சனத்தொகையில் பெரும் பகுதியை அதுவும் தமிழினத்தின் பெரும் பகுதியை துரோகிகளாகவே ஆக்கிவிட்டார்கள்.

விடுதலை உணர்வை இவர்கள் கையில் எடுத்த போது, அதையும் இவர்களையும் சேர்த்தே நெஞ்சில் தாங்கிய சொந்த மக்களைத்தான் அன்னியப்படுத்துகிறோம் என்கிற உணர்வு கூட இல்லாத செயற்திட்டம் வெறும் ஆயுதத்தின் மேல் இவர்கள் கொண்டிருந்த மோகத்தின் விளைவு மாத்திரமல்ல, மேற்குலக ஜனநாயகக் கொள்ளையர்களிடம் தம் தலைகளை இவர்கள் அடகு வைத்ததன் வெளிப்பாடுமாகும்.

எனவே சக்திவாய்ந்த உலக வலைப்பின்னல் எப்படியும் தம்மை நியாயப்படுத்தும் என்ற நம்பிக்கையில், சொந்த மக்களின் விருப்பு,வெறுப்புக்கு வெளியே அவர்கள் தம் வசதிக்கேற்பத் தமிழ்த்தேசியத்தைத் திணித்துக்கொண்டார்கள்.

இந்த நிலையிலும் சில சிந்திக்கத் தெரிந்த மக்கள் தம்மை இந்த வகை தமிழ்த்தேசியத்திலிருந்து அன்னியப்படுத்திக்கொள்ள, ஆதரிக்க விரும்பியர்வர்கள் தொடர்ந்தும் ஆதரித்தே வந்தார்கள்.

இந்த ஒவ்வொரு படிநிலையிலும் தமிழ்த்தேசியத்தின் வரைவிலக்கணம் மக்கள் நலனிலிருந்து விலகிக்கொண்டே போன உண்மையை ஈழத்தில் தமிழ்த்தேசியம் பேசியவர்களும், ஈழம் சார்ந்த தமிழ்த்தேசியத்திலிருந்து தமிழகத்தில் புரட்சி செய்ய முன்வந்தவர்களும் திட்டமிட்டே மறைத்து வந்தார்கள்.

தமிழ்த்தேசியம் மக்களின் நலனிலிருந்து எவ்வளவு தூரம் பிரிந்து சென்றது என்பதற் மிகப் பெரும் உதாரணம் யாழ்ப்பாணமாகும்.

யாழ்ப்பாணத்தை இழந்த புலிகள் அதை மீண்டும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே முடியாது போனதன் பின்ணனியை இணையக் கட்டுரைகள் மூலம் சோடித்தாலும் உண்மைகளை மறைக்க முடியாது.

ஒரு காலத்தில் மக்கள் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தில் தமிழ்த்தேசியம் இருந்தது, அதன் மீது மக்களுக்குப் பற்றும் இருந்தது.  தமிழ்த்தேசியம்=புலித்தேசியம் எனும் சமன்பாடு நிறுவப்பட்ட காலத்திலிருந்து விடுதலை உணர்விலிருந்து மக்களும் மெது மெதுவாக விடுவிக்கப்பட்டு, எதுவும் வேண்டாம் உயிர் வாழ்ந்தால் போதும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.

அப்படி மக்கள் விலகிச்சென்ற போது பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ்த்தேசியம் தான் மக்களுக்காக பல நூறு பரப்புகளில் மனித இனத்தால் நம்பவே முடியாத வகையிலான கொடூர சித்திரவதை முகாம்களையெல்லாம் உருவாக்கி, சிங்களவர்களை அல்ல, “தமிழர்களை” அதுவும் தம் சொந்த இனத்தவர்களை, கருத்தால் முரண்பட்ட காரணத்திற்காக வதைத்துத் தண்டித்தார்கள்.

வீட்டிலிருந்து பிள்ளைகளை அனுப்ப மறுத்தவர்கள், பணம் கொடுக்க மறுத்தவர்கள் என்று ஆரம்பித்த இந்தப் போக்கு அவர்கள் தம் சொந்த மக்களையே நாளடைவில் இவர்களிடமிருந்து விடுதலை பெற வழி தேடும் நிலைக்கு இட்டுச்சென்றது என்பது மிகக் கசப்பான உண்மை.

இப்போதும், இப்படி முரண்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் தொடர்ந்தும் ஆதரித்தே வந்தார்கள்.

ஏற்கனவே தம் பிள்கைளை இழந்த குடும்பங்கள் மாவீரர் குடும்பங்களாக கெளரவிக்கப்பட்ட நிலையில் அவர்களது உணர்வுகளை மேலோங்கிய நிலையில் வைத்திருப்பதற்காக முரண்பட்டவர்கள் மீது மீண்டும் மீண்டும் தமிழ்த்தேசியம் திணிக்கப்படடதே தவிர, விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சிறு மாற்றமேனும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த உண்மைகள் தமிழகத்தில் வாழும் எந்தத் தமிழரையும் சென்றடையக்கூடாது என்பதில் இந்தத் தமிழ்த்தேசிய வாதிகள் மிகவும் கெட்டித்தனமாகச் செயற்பட்டார்கள்.

அவர்கள் பகுதியை விட்டு வெளி வருவது என்றாலே ஒரு ஆள் பிணை, மற்றும் அபராதமும் கட்ட வேண்டும்.

ஆள் பிணையில் வெளியேறி வந்த எந்தத் தமிழனும் அவர்கள் பதாகை போட்டு எச்சரித்த “நாட்டின் ரகசியத்தை” வெளியில் பேசப் பயப்பட்டார்கள், அதைப் பேசி முடியும் அந்தத் தருணத்தில் அங்கே தாம் விட்டு வந்த அந்த உறவு விண்ணை அடைந்து விடும் என்கிற பயத்தால் மூடி மெளனித்தே இருந்தார்கள்.

இப்படி நாட்டிலிருந்து எத்தனையோ லட்சம் மக்களை விரட்டியடித்த பின்னும், அவர்கள் மீண்டும் வரும் போது பிடித்து வைத்துப் பணம் கறந்து, அவர்களையும் முரண்பட வைத்து போனால் போ என்று அனுப்பிய பின்னும், எந்த மக்களின் விடுதலைக்காக இவர்கள் தமிழீழம் கேட்டார்கள் என்று சிந்தித்தாலோ அல்லது இவர்கள் கூறிய தமிழ்த்தேசியத்தைக் கேள்வி கேட்டாலோ அவனை உடனடியாகத் துரோகியாக்கி இன்டர்நெட் புலிகள் அவர்களது விசுவாசத்தையும் காட்ட ஆரம்பித்தார்கள்.

லட்சோப லட்ச மக்களுக்காகத் தனி நாடு கேட்கப் புறப்பட்டு, இறுதியில் ஒரு சில லட்சம் மக்களை, அதுவும் பலாத்காரமாக இழுத்து வைத்திருந்து இவர்கள் தமிழ்த்தேசியம் பேசிய போது கூட, மிகத் தீவிரமாக இவர்களை ஆதரித்தவர்களைத் தவிர வேறு யாராகினும் தெருக்களில் இறங்கியிருந்தால், அது அவர்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்காகக் கூடிய ஒரு சிலராகத்தான் இருந்தார்கள்.

இப்படி, படிப்படியாக எதிரிகளையும், சொந்த மக்களை எதிரிகளாக்கியும், தாம் சொல்வது மட்டுமே உண்மை எனவும், தாம் காணும் உலகம் மட்டுமே நிஜமானது என்றும் தம்மையும் தம் சகாக்களையும் ஏமாற்றிக்கொண்ட இந்த தமிழ்த்தேசியம், இறுதித்தருவாயில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழக மக்களிடமும் ஊறிக்கிடக்கும் தமிழுணர்வைத் தட்டியெழுப்ப ஒரு முயற்சி செய்து பார்த்தது.

உணர்வுள்ளவர்களாக கம்யுனிஸ்டுகள் வெளி வந்தாலும், அரசியல் எனும் சதுரங்கத்தைக் கரைத்துக்குடித்த பழம் பெரும் அரசியல் வாதிகள் அதற்குள் புகுந்து, சடுகுடு விளையாடி ஒட்டு மொத்தத் தமிழுணர்வு எனும் விடயத்தையே ஆட்டுவித்தார்கள்.

அவர்கள் ஆட்டுவித்தார்கள் என்பது எவ்வளவு குற்றமுள்ளதோ, அதையும் விடப் பல மடங்கு குற்றமுடையது அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிச் சென்ற தமிழ்த்தேசிய சித்தார்ந்தமும் அதைக் கட்டிப்பிடித்துத் தனிமையாகிக்கொண்ட அதன் இறுதிக் கட்டமைப்புமாகும்.

மக்கள் சாராத விடுதலை, மக்கள் இல்லா மண்ணொன்றின் விடுதலை யாருக்காக? எனும் சாதாரண கேள்வியை அப்போதுதான் உணர்ந்து கொண்டவர்கள், தம்மை நியாயப்படுத்தவும், தம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் மிகக் கேவலமாக மனிதக் கேடய வளையத்தை உருவாக்கினார்கள், அதன் பின் மக்கள் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் மக்கள் பெயரில், மூன்றாந்தரப்பினர் அதாவது அவர்களது மேற்குலக எஜமானர்களின் உதவியை நாடி பாதுகாப்பு வலயத்திற்குள் தம் காலடியில் துப்பாக்கி வெடிக்கும் வரையில் தமக்கே மட்டும் உரித்தான தமிழ்த்தேசியத்தைப் பாதுகாத்து, மிக இறுதியான அந்தக் கட்டத்தில் ஒரேயடியாக எதிரியின் காலடியில் சரணாகதியடைந்து தம்மோடு தாம் கட்டிப்பிடித்த வெறியையும் சேர்த்துக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போதும், அதை எதிர்த்தவர்கள் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு பேசுகிறார்கள், ஆதரித்தவர்களோ உண்மையை நம்பி மாற்று வழியைத் தேடுவதா? இல்லை பொய் என்று அடித்துரைத்து நவம்பர் மாதம் வரை காலந்தள்ளுவதா என்று போராடிக்கொண்டு, இடைக்கிடையே சில உணர்ச்சி பொங்கும் கட்டுரைகளை எழுதி, தமிழகத்தி்ல் ஒரு சிலரை மேடையில் முழங்க வைத்து, சில பத்திரிகைகளில் இருக்கிறார் ஆனால் இல்லை என்று கவர் ஸ்டோரிகள் செய்து ஒரு பக்கம் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்த்தேசியக் கட்டமைப்பின் பெயரில் வெளியுலகில் நடமாடித்திரிந்த பணப்பிசாசுகளோ எந்தக் காரணங்கொண்டும் தம் வருமானம் குன்றிவிடக்கூடாது என்று கண்ணுங்கருத்துமாகச் செயற்பட்டு ஆகக்குறைந்த அளவாக இப்போது மாறிக்கொண்டு வரும் சில நூறு மக்களை வைத்தாவது இந்தப் போலித் தமிழ்த்தேசியத்தை விற்பனை செய்து வருகிறார்கள்.

இதன் இடைநடுவில்,கடந்த கால வரலாறு அறிந்த ஈழத்துத் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழுத்து விட இரு பக்கத்திலும் எடுக்கப்பட்ட இரு பெரும் முயற்சிகள் படு தோல்வியும் அடைந்ததன் மூலம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதற்கான நல்ல அறிகுறிகள்.

எனினும் தற்போது மீண்டும் ஒரு இளைய சமுதாயத்திடம் திராவிட நாட்டுக் கோரிக்கையை தூசு தட்டி, திரிபு படுத்தப்பட்ட ஒரு தமிழீழ தமிழ்த்தேசியத்தை விதைத்து மேலும் சிலர் களமிறங்க ஆரம்பித்துள்ளார்கள்.

அதிஷ்டவசமாக அது இப்போது ஈழத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வருகிறது, துரதிஷ்டவசமாக தமிழகத்தில் குடிகொள்ள எத்தனிக்கிறது.

இதில் யார் பயன்பெறப்போகிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் இடைவெளியில், பழைய தமிழ்த்தேசியவாதிகளை இழந்த சோகத்தைக் கொண்டாட இன்னொரு வடிவில் புதிய தேசியவாதிகளை உருவாக்கி, அதன் மூலம் பிராந்திய நிலையைக் குழப்பியடித்துக் கொள்ளையிட அதே பழைய முதலாளிகள் தயாராக இருப்பார்கள்.

பேசும் போது வெடி வெடிக்க தமிழுணர்வைப் பேசலாம், செயலில் இறங்கும் போது, பணம் தன் மடியில் அவர்களைக் காவு கொள்ளும், அதன் பின் மீண்டும் பழைய குருடி கதவைத்திறந்து கொள்வாள்.

அனுபவமே நம் வறலாகிப்போன நிலையில், கூறு போடப்பட்ட சமூகத்தில் இன்னும் இன்னும் தமிழ்த்தேசியத்தை விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் இனங்காணப்பட்டு, ஆரம்பத்திலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.

தமிழர் ஒன்றிணைந்தால், தமிழ்த்தேசியம் தானாக உருவாகும்!

 
 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

One response to “தமிழ்த்தேசியம் !?

 1. Haleem

  ஜூன்15, 2009 at 10:29 முப

  Arivukkyu atputha virunthu. vaalha, valarha!!
  Thamil Makkal ithai sinthittu seyal pattal avarhal vadukkal atthanaikkum oor atputha marunthu.

  Enrenrum anpudan arivukku nanrihal.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: