RSS

சூடுபிடிக்கும் “சிலோன்”

07 ஜூன்

இலங்கை மக்களைப் பார்த்து, “சிலோன் காரன்” என்று வெளிநாட்டு மக்கள் அடையாளப்படுத்தும் போது, அதை ஓரளவுக்கு எல்லோருமே பெருமையாகத்தான் நினைத்திருந்தார்கள்.

பின்னர் வந்த இலங்கையும்,தமிழீழமும் மக்களையும் பிரித்து, நம்மீது அக்கறை கொண்டிருந்த பிற நாட்டு மக்கள் உணர்வுகளையும் சேர்த்துத்தான் பிரித்தன.

அதற்காகத் திரும்பவும் இலங்கையை சிலோன் ஆக்க முடியாது, ஆனால் பிரிந்து போன மனித உள்ளங்களை முயற்சித்தால் மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்.

யுத்தம் முடிந்த சூட்டோடு சூடாக அவசர அவசரமாக வடக்கில் தேர்தல் நடத்தப்படப் போகிறது.

துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்த நிலையை அனுபவித்த ஓய முன்னர் மக்கள் மிக மிக அவசரமாக தம் பழைய வாழ்க்கைக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் முனைப்புடன் இருக்கிறது.

ஆயுதப்போராட்டம் சூடு பிடித்த பின்னும் கூட மக்கள் தம் வாக்களிக்கும் உரிமையைப் பெருமையாகவே நினைத்து வந்தார்கள், வாக்களிக்கவும் செய்தார்கள்.

துரதிஷ்டமாக சில தேர்தல்களில் அவர்களின் தெரிவை விட,அவர்களை ஆளுமை செய்தவர்களின் தெரிவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது.

அந்த நிலையிலிருந்து அவர்களை விடுவித்தது ஒன்றுதான் இன்றைய அரசாங்கம் இதுவரை இந்த மக்களுக்காகச் செய்திருக்கும் சாதனையாகும்.

அந்த சாதனை நிலைக்க வேண்டுமென்றால்,இந்த மக்களுக்கு அவர்கள் விரும்பும் வாழ்க்கையையும் உரிமையையும்,அதற்கான சூழ்நிலையையும் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

அப்படியொன்றை உருவாக்குவதற்கு,அதாவது மக்கள் புணர்வாழ்வுக் கட்டமைப்பைச் செயற்படுத்துவதற்கு,மத்தியில் இருக்கக்கூடிய அரசின் அதிகாரங்களைப் பகிர்ந்து,பிரதேச நலனில் பங்கெடுக்கும் பிரதிநிதிகளை மக்கள் அவசரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அரசின் தற்போதைய நோக்கமென்று சொல்லப்படுகின்றது.

அப்படியானால்,அது மக்களுக்கு நல்ல சகுணம் தான்.

தம் பிரதிநிதிகளையும்,தமக்காகப் பேசவல்ல மனிதர்களையும் தேர்ந்ததெடுப்பதன் மூலம், தம் மீது செலுத்தப்பட்டிருக்கும் ஆளுமையிலிருந்து விடுபட்டு,சுதந்திரமாக வாழ்வதற்கு இதை ஒரு அடிப்படைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், உண்மையான விடுதலையைப் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியே.

இன்றைய தேவையில்,அரசாங்கத்தின் மீள் குடியேற்ற,புணர்வாழ்வு திட்டங்கள் யாவுமே இராணுவ நலன்களுக்குப் பின்னரான இரண்டாம் பட்சத் தெரிவு மாத்திரமே.

அழிந்துபோன புலிகள் இயக்கம்,இராணுவ ரீதியாக முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்டது உண்மையாகினும்,அவர்களிடமிருந்து கழன்று சென்று மக்களோடு மக்களாக வாழும் பழைய புலி இயக்க உறுப்பினர்களைக் கண்டறிந்து,அவர்கள் மன நிலையை ஆழ அலசி,தேவையெற்படின் அவர்களைத் தனிமைப்படுத்தி,தடுப்புக் காவலில் வைத்து,அவர்களிடம் ஏற்படும் மனமாற்றத்தை அவதானித்து,மீண்டும் மக்களோடு அவர்களைக் கலக்க விடுவது பற்றித்தான் அரசு சிந்திக்குமே தவிர,உலகச் சட்டங்கள் சொல்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாகச் செயற்பபடப்போவதில்லை.

இதற்கான மிக அடிப்படைக் காரணம்,மஹிந்த அரசாங்கம் புலிகளை வெற்றி கொள்வதற்குப் பூண்ட திடசங்கற்பம் என்பதை விட புலி இயக்கம் அழிக்கப்பட்டதன் பின்னரான நாட்டின் எதிர்காலம் பற்றிய அவர்களது பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகள் என்று சொன்னால் அது மிக மிகப் பொருத்தமானதாக அமையும்.

கடந்த காலங்களில் போன்று புலியை வைத்து அரசியல் செய்யும் தேவையை நிராகரித்த போதே, இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மஹிந்த அரசிடம் ஒரு மாற்றுத் திட்டம் இருக்கிறதென்பதை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த பல்வேறு திட்டங்களில் மிகப் பிரதானமான திட்டம் நாட்டின் வளத்தைப் பாவித்து உலகில் ஏற்படுத்தக்கூடிய வர்த்தக நலன் சார்ந்த சரியான கூட்டணிகளை அமைத்துக்கொள்வது என்பதாகும்.

மேற்குலக நாடுகள் இலங்கையில் கால் வைக்கும் போது,எப்போதுமே இந்த நாட்டின் பிளவை மையப்படுத்தி அல்லது நிலையற்ற ஒரு அரசை வைத்துக்கொண்டு ஆயுதத்தை விற்று, வளத்தைக் கொள்ளையிடும் திட்டமாகவே இருக்கும். அவ்வாறே கடந்த காலங்களிலும் நடைபெற்றது.

அரச சார்பற்ற மக்கள் சேவை நிறுவனங்கள் என்ற பேரிலும் நாட்டிற்குள்,அதுவும் யுத்தம் நடந்த பிரதேசங்களுக்குள் குடியிருந்த வெளிநாட்டவர்கள் தம் எசமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக, புலிகளை வளர்த்துவிட்டார்கள்.

ராஜீவைக் கொன்றது மூலமாக மாத்திரமன்றி,பிராந்தியத்தில் எப்போதும் பலமான சக்தியாக இருக்க விரும்பும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட பலம் வாய்ந்த அரசியல் திட்டங்களையும் நிராகரித்ததன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பகையாளியாகிய புலிகளை அழித்து விடுவதில் இந்தியா உறுதியாக நின்றதும், கணவனை இழந்து துடித்த மனைவியின் கையில் அந்நாட்டின் எதிர்காலத்தை மக்கள் ஒப்படைத்திருக்கும் வேளையில், மனைவிக்கும் வேண்டுமானால் மாலை போடுவோம் ஆனால் நமக்கு எதிர்கால திட்டம் எல்லாம் இல்லை எனும் போக்கில் இருந்த புலிகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் சக தமிழர்களே நின்றதும், சம காலத்தில் புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று மஹிந்த சகோதரர்கள் கங்கணம் கட்டியதும் ஒரு சேர நடந்து முடிந்ததால் வரலாறு மிக வேகமாக பதியப்பட்டு விட்டது.

பல இயக்கங்களை ஊட்டி வளர்த்த இந்தியா நினைத்தால், இன்னொரு பிரபாகரனையும் நவீன புலிகளையும் கூட உருவாக்கிவிடலாம் என்பதில் இலங்கை அரசாங்கமும் மிகத் தெளிவாக இருக்கிறது.

அப்படியொரு தருணம் வந்தால், கருணாநிதி தலைமையிலேயே ஒரு தமிழர் புரட்சியையும் இந்தியா நடத்தும் என்பதும் உலக அரசியல் தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.

எனவே,இந்தியாவைத் தவிர்த்து அவர்களின் நலன்களையும் சமப்படுத்திய ஒரு அரசியல் நகர்வை மிஞ்சும் நிலையில் இலங்கையின் திட்டங்கள் இருக்காது என்பது மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.

யுத்தத்திற்குப் பின்னான இலங்கை என்பது புலியில்லாத இலங்கை, புலியில்லாத இலங்கை என்பது வளங்களைப் பாவித்து முன்னேறக்கூடிய ஒரு இலங்கை, வளங்களைப் பாவிப்பது என்பது உலக மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒன்று சேராமல் முடியாத ஒரு விடயம், எனவே உலகப் பொருளாதார சந்தையில் இணைந்து கொள்ளும் போது, பிராந்தியப் பொருளாதார நிலையை சமப்படுத்தி,அண்டை நாடுகளின் தற்ப, வெட்பங்கள் அவதானிக்கப்படட்டு பொருளாதாரச் சம நிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் தேவை இந்தியாவுக்குக் கட்டாயம் இருக்கிறது.

இதன் அடிப்படையில் இலங்கைப் பொருளாதாரத்திலும்,அரசியல் சூழ்நிலைகளிலும் எப்போதும் தம் பங்கை வைத்துக்கொள்வதற்கே இந்தியா விரும்பும், அவ்வாறு வரும் இந்தியாவைப் புறந்தள்ளினால் அது ஏறத்தாழ தமக்குத் தாமே அதாவது தமது எதிர்காலக் கொள்கைகளுக்குத் தாமே தோண்டிக்கொள்ளும் புதை குழி என்பதை மஹிந்த அரசும் நன்குணரும்.

எனவே இலங்கை-இந்திய கூட்டுறவு பல வெளியில் வராத கசப்புகளை மறந்து, வெளிப்பார்வையில் எப்போதும் இருதரப்பின் சம்மதத்துடன் சமப்படுத்தப் பட்டுக்கொண்டே செல்லும்.

இதைப் பிராந்திய ரீதியாகப் பிரித்துப் பார்க்கும் போது, வட கிழக்கில் காட்டும் அக்கறையை நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்தியா காட்டப்போவதில்லை.

எனவே, நாட்டின் பிற பகுதிகளை முன்னேற்றும் பொறுப்பை வேறு சக்திகளுடனும் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும்.

வட – கிழக்குப் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதென்பது அரசின் பார்வையில் எவ்வாறு இருக்குமோ இல்லையோ அது மக்களின் பார்வையில் மிக மிக முக்கியம் பெற வேண்டிய ஒரு அம்சமாகும்.

இன்னொரு அழிவை தமக்குத் தாமே தேடிக்கொள்வதும், உண்மையான விடுதலையைப் பெறுவதும் மக்கள் தம் கைகளிலேயே இருக்கிறது.

அதிலும், குறிப்பாக வட பிராந்தியத்தின் மீதான தமது ஆளுமையை மிகவும் திடமாக வைத்திருப்பதற்கு இந்தியா எப்போதுமே தவறாது.

இத்தருணங்களில் இலங்கை – இந்திய உறவுகளின் உள்ளார்ந்த ரீதியாக நடைபெறும் பனிப்போர்களின் விளைவாக மக்கள் நலன்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்.

அழிந்து போன இயக்கம் மீது பற்றுக்கொண்டிருந்த ஒரு சிலரைத் தேடிப்பிடித்தாலே போதும், இன்னொரு ஐந்தாறு வருடங்களின் பின் மீண்டுமொரு “காயப்பட்ட இலங்கையை” உருவாக்கிவிடலாம்.

எனவே, இப்போதைய நிலையில் மக்கள் எண்ணங்கள் பொருளாதார முன்னேற்றம் காணப்போகும் ஒரு இலங்கையின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்ட ஐக்கியமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்த ஐக்கியத்தை யாரோடு வைத்திருப்பது என்பதில் தான் மக்கள் குழப்பமடைகிறார்கள்.

கடந்த காலங்களில் புலிகளால் துரோகிககள் என்று பட்டம் சூட்டப்பட்ட, அதே நேரம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்த சக்திகளாக அறியப்பட்ட பழைய தமிழ்க்கட்சிகளை ஆதரிப்பதா? இல்லை அமைச்சர் கருணா அம்மானும் இணைந்து வலுப்படுத்தியிருக்கும் மஹிந்தவின் கைகளை நேரடியாகப் பலப்படுத்துவதா எனும் குழப்பம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திணிப்பில் இருந்து விடுபடுவதற்காக சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி, எதையுமே சாதிக்க முடியாது.

அவர்கள் வெற்றிபெறும் வரை சுயேட்சையாக இருந்தாலும், வென்றதன் பின்னர் ஏதாவது ஒரு கூட்டணிக்குள் சென்றாலொழிய மக்களுக்கு சேவை செய்யவும் முடியாது, வளங்களைப் பெற்றுத்தரவும் முடியாது.

எனவே அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் மக்கள் விருப்பும்,வெறுப்பும் மட்டுப்படுத்தப்படுகிறது.

இது ஒரு வகையில் ஜனநாயகத்துக்குப் புறம்பான செயலாகும்.

இன்றைய தேதியில் மக்களை சிந்திக்க விட்டால், மாற்று சக்திகளைத் தெரிவு செய்து வீண் அரசியல் குழப்பங்களைக் கொண்டுவருவதை விட,அரசின் ஆசி பெற்ற ஒருவரை அது சிங்களவராக இருந்தாலும் அவரைத் தெரிவு செய்வதன் மூலம் தம் வாழ்வு மீட்சி பெறலாம் எனும் அவசர சிந்தனைக்குள் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், ஒரு சிங்களவரைத் தம் பிரதிநிதியாகத் தெரிவு செய்வதை விட கருணா அம்மான் கூறுவது போன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் செல்லும் பிரதிநிதிகளையாவது ஆதரிப்பது நல்லது எனும் ஒரு நிலைக்கு மீண்டும் மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.

அதேவேளை,கருணா அம்மான் சொல்வதிலும் தவறில்லை,அதாவது ஆட்சியில் இருக்கும் அரசில் பங்கெடுத்துக்கொண்டே நம் மக்களுக்காகக் குரல் கொடுப்பதன் மூலம், விரைவாக நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனும் வாதமும் புறந்தள்ளப்பட வேண்டியதொன்றல்ல.

அதிலும் உண்மையிருக்கிறது.

கடந்த காலங்களில் நாம் கட்டி வளர்த்த அனாமேதய அரசியல் சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது,அவரது கருத்திலும் நியாயமிருக்கிறது.

ஆனால், அந்த நியாயத்தை மக்கள் உணர்வதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வாழ்வதை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், அதில் மாற்றுக் கருத்துக்கெ இடமில்லை.

அப்படி வாழ முடிவெடுத்த மக்கள் தம் சுய அறிவைக் கொண்டு, நிதானமாகச் சிந்தித்து,தமக்கு விருப்பமில்லாதவர்களை புறக்கணிக்கவும், விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கவும் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இப்போது அந்த அவகாசம் வழங்கப்படாமலே மக்களின் விருப்புகளை அறிய முனைவது, ஒரு வகையில் திணிப்பாகவே அமையும்.

இந்த முதற்கட்டத் திணிப்புக்கு மக்கள் பழக்கப்பட்டுப் போனால் அடுத்தடுத்து வரும் மேல் மட்டத் திணிப்புகளுக்கும் மக்கள் அடங்கிப்போகவே வேண்டும்,அதற்கான சூழ்நிலைகளே அமைந்து கொண்டும் செல்லும்.

அப்படியானால், இவற்றிற்கு எதிராக அணி திரள்வது எப்படி?

அதை மக்கள் செய்யமுடியாது, இப்போது அதை செய்யும் நிலையிலோ அல்லது சூழ்நிலையிலோ அவர்கள் இல்லை.

அவர்களை வழி நடத்துவதாகக்கூறிக்கொள்ளும் அனைத்து அரசியல் கட்சிகளும் தான் இதைச் செய்ய வேண்டும்.

ஒரு தலைவர் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது மற்ற தலைவர்கள் வாய் மூடி இருப்பதால் இந்தக் கேள்வி பலமிழந்தே போகும்.

இப்படியான ஒரு கட்டமைப்புக்கள் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது,ஆனால் அது இவ்வளவு அவசரமாகத் திணிக்கப்பட முடியுமா என்பதிலேயே கேள்வியும் – பதிலும் இருக்கிறது.

கேள்வி அதுவாக இருக்கும் அதேவேளை, தம்மை நம்பி முதலிட்டவாகள்,அவசரமாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து,உலகப்பொருளாதாரம் சரிந்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவசரமான கட்டுமானத்திற்குள் காலடி வைத்திருக்கும தம் கூட்டாளிகளையும் இலங்கை அரசு ஏமாற்ற முடியாது.

வெறும் அறிக்கையளவில் அதைத்தருகிறோம்,இதைத்தருகிறோம் என்று அவர்களுக்குக் காரணம் காட்ட முடியாது.

இந்தியா வேண்டுமானால் எதிர்கால நலன் கருதிப் பொறுமையாக இருக்கும்,அதற்காக மற்ற நாடுகளை எதிர்பார்க்க முடியாது.

எனவே, இலங்கை அரசின் அவசர முன்னெடுப்புகளும் அவர்கள் பக்கத்திலி்ருந்து நியாயப்படுத்தப்படுகிறது,ஐக்கியப்பட்ட இலங்கையை ஏற்றுக்கொள்ளத் துணிந்து விட்ட மக்கள் இதற்கு சார்பாக அவசரத் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் நிலையும் உருவாகிறது.

சரி,நாட்டின் நலன் கருதி மக்கள் இதற்குத் தயாராகிவிட்டாலும்,சமூக நலன் கருதி இந்த மக்களுக்காகக் களத்தில் இருப்பதாகச் சொல்லும் அரசியல் கட்சிகளின் நிலை எவ்வாறு அமையப்போகிறது?

புறக்கணிப்பு எனும் விடயத்தை நினைத்தாலே நீங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுவீர்கள். எனவே உங்கள் அடுத்த கட்டத்தை எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறீர்கள்? அதை உங்கள் தனிப்பட்ட கட்சி நலன் சார்ந்ததாக இல்லாமல் முன்னேற்றம் காண வேண்டிய ஒரு சமூகம் சார்ந்ததாக எவ்வாறு முன்னெடுக்கப் போகிறீர்கள்? வழி தவறிய அவர்கள் வாழ்வுக்கு எவ்வாறு வழி காட்டப்போகிறீர்கள்? அதில் எது சாத்தியம்? எது அசாத்தியம்?

வார்த்தைகளால் மக்களை ஏமாற்றும் காலம் மலையேறிவிட்டது,இனிமேலும் தவிச்ச முயல்கள் அடிக்கப்படக்கூடாது.

அவர்களுக்கிருக்கும் இன்றைய அடிப்படைப் பிரச்சினையிலிருந்து இலங்கை இராணுவக் கட்டுப்பாடுகளை மீறி, அல்லது அந்தக் கட்டுப்பாடுகள் தேவையற்றது எனக்கூறி விலகி நின்று மக்களை உணர்ச்சியூட்டி நீங்கள் எதையும் சாதிக்க முயலக்கூடாது.

அதற்காக இராணுவக் கெடுபிடிகள் அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படுவதையும் நீங்கள் அனுமதிக்கக்கூடாது.

இப்படி எதையும் சாராத நிலையில் நீங்கள் மெளனமாக இருந்தால், மக்களாக வெகுண்டெழுந்து ஒரு போராட்டம் செய்தாலே தவிர வேறு எந்த வழியிலும் இந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்காது.

ஐயாயிரம் மக்களை அதுவும் உயிர் தப்புவதற்காக இறுதி ஓட்டத்தை ஓட வந்த மக்களை வெறும் மூன்றே மூன்று புலி உறுப்பினர்கள் ஆயுதத்துடன் நின்றதனால் கட்டுப்படுத்திய ஒளிப்பதிவுகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த மக்கள் புலியின் துப்பாக்கிக்கு மட்டுமல்ல இப்போது இராணுவத்தின் அதுவும் புலியை வென்ற இராணுவத்தின் துப்பாக்கிக்கு இன்னும் அதிகமாகப் பயப்படுவார்கள்.

அப்படிப் பயந்து வாழும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க அவர்கள் பால், அவர்கள நலன் பால் அக்கறை கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதிலிருந்தே இந்தப் புதிய இலங்கையின் வரலாறு பதியப்படப்போகிறது.

ஏறத்தாழ 60 வருடங்கள் தன்மானத்தை அடகு வைக்கும் நிலையை மட்டுமே பெற்றுத்தந்த உணர்ச்சியூட்டல் கலாச்சாரத்தை மக்கள் இன்னும் புரிந்துகொன்றதாகத் தெரியவில்லை,ஆனால் வெளியில் இருக்கும் அரசியல் வாதிகள் நீங்கள் புரிந்துகொண்டிருக்கவே வேண்டும்.

இன்றைய “தேனீ”யின் பதிவுகளில் வரதராஜப்பெருமாள் அவர்களின் அறிக்கையொன்றைக் காணக்கிடைத்தது.

http://www.theneeweb.de/html/070609-6.html

அதில் காணப்படும் வார்த்தை வீரியங்கள் செயற்பாட்டில் எவ்வாறு அமையப்போகிறது? அவை நியாயமான வலியுறுத்தலாகத் தென்படுகிறது, ஆனால் அதற்கு அவர்கள் சார்ந்த கட்சியோ,கட்சிகளோ எந்தளவில் தயாராக இருக்கிறது? முடங்கியிருக்கும் மக்களிடம் ரகசியமாக உங்கள் செயற்திட்டங்களை முன்வைப்பது உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யத் தயங்குவதைத்தான் எடுத்தக்காட்டும்.

மஹிந்த அரசாங்கம் சிறந்ததொரு எதிர்காலத்திட்டத்தை வைத்திருக்கிறது என்பதில் இனியும் சந்தேகப்படுவதில் பிரயோசனமில்லை.

அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையை வேறு ஒரு வடிவத்துக்குக் கொண்டு போவதற்காகக் கடுமையாக உழைக்கப்போகிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அது சிங்கள,தமிழ் மக்கள் என்பதை இரண்டாம் பட்சமானதாக்கித் தம் குடும்பத்தின் அரசியல் இருப்பு மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆளுமையை அதிகரிப்பதை மிக அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

அதன் பின் வரப்போகும் அடுத்த திட்டங்களில், தமிழ் முஸ்லிம் மக்களும் சரி, சிங்கள மக்களும் சரி அனைவரும் ஒரு சேர ஒரே தராசில் வைத்தே பார்க்கப்படப் போகிறார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு அரசியற் கொள்கைகள் தென்பகுதியில் நிலவியதில்லை.

இப்போது அது நிலவுகிறது என்றால் அதன் பின்ணனி, இந்த நிலையில் அவர்கள் இத்தனை செளகரியமாகப் பேசுவதற்கும், திட்டங்களை முன்னெடுப்பதற்கும் சேர்த்திருக்கும் உலகக் கூட்டணிகள் மற்றும் அதன் செயற்பாட்டு விளைவுகள் பற்றிய அறிவும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

நாட்டில் இதற்கு முதல் எந்தவொரு சனாதிபதியும் தமிழ் மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் பெயரளவிலாவது தரவில்லை.

இவர் நாடாளுமன்றம் முதல் ஐ.நா வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தான் தமிழ் மக்களின் சகோரன் என்பதை உலகுக்குக் காட்டிக்கொள்கிறார்.

அப்படியானால், கடந்த காலங்களில் போலன்றி “இனப் பிரச்சினையை” வைத்து அரசியல் செய்யும் தேவை மஹிந்தவின் சிந்தனையில் கடுகளவும் இல்லையென்பதை நீங்கள் இன்னுமா உணரவில்லை?

அடுத்த கட்டத்திற்குத் தேவையான நவீன மயப்படுத்தல் உங்களிடம் இல்லையென்றால் அவர்கள் உங்களை ஓவர் டேக் செய்து கொண்டு போய்விடுவார்கள் என்பது மட்டும் எமது கவலையல்ல.

அவ்வாறு ஓவர் டேக் செய்யப்படும் போது, தேசியக் கட்சியொன்றின் காலடியில் உங்கள் பிரதேச நலன்களையும்,பலத்தையும், வளத்தையும் நீங்களே அடகு வைக்கிறீர்கள் என்பதும் தான் எமது கவலை.

தேசியக் கட்சியொன்றோடு இணைந்து உங்கள் குரல்களை ஓங்கச் செய்வதில் தவறில்லை, அதற்கு விரும்பாது போனால் உங்களிடம் ஒரு ஒற்றுமை உருவாகி அணி திரண்ட ஒரு புதுச் சக்தியாக நீங்கள் உருவெடுத்தால் அதை விட மகிழ்ச்சிகரமான விடயமும் வேறு இல்லை.

ஆனால், காலடியில் அடகு வைக்க நீங்கள் ஆரம்பித்தால், அன்று முதல் ஆரம்பிக்கப்படப் போகும் பொருளாதாரக் கொள்ளையில் அப்பாவி மக்களின் உழைப்பையும் சுரண்ட அனுமதிப்பீர்கள், அவர்கள் வாழ்வாதாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதற்கும் வழி சமைப்பீர்கள்.

மிகக்குறுகிய வட்டத்திற்குள் இருக்கம் தமிழர் அரசியல் கட்சிகளின் சிந்தனைகள் இன்னும் பரவலாக விரிவாக சிந்திக்கப்படவேண்டும்.

இல்லையேல், உங்கள் மக்களிலிருந்தே நீங்கள் அன்னியப்படுத்தப்படுவது திண்ணம்.

தேசியப் புலம்பல் மூலம் அரசியல் இலாபம் காணும் நிலை இனி வரும் இலங்கையில் வரப்போவதில்லை, இத்தனை முனைப்பாக இருக்கும் மஹி்ந்த சகோதரர்கள் அதை வர விடப்போவதும் இல்லை.

எனவே, நவீன மயப்படுத்தப்பட்ட சிந்தனைகள் அவசியமாகிறது.

ஐக்கிய இலங்கைக்கள் தன் மானத்துடன், தம் உழைப்புக்குரிய உண்மையான வெகுமானத்துடன்,சுயமாக வாழக்கூடிய மக்கள் சமுதாயத்தைத் தட்டியெழுப்பி அவர்களுக்கு வழிகாட்டும் தேவை இன்றைய வரலாற்றுக் கடமையாக இருக்கிறது.

இவை தவிர்க்கப்படும் போது, அந்த மக்களின் உழைக்கும் உரிமைகளும் மட்டுப்படுத்தப்படப்போகிறது.

அன்று கொப்பேகடுவாவுக்கு “வெங்காய” மாலை போடும் அளவுக்கு சிறு தொழிலை பெரும் பலமாக மாற்றிப்பார்த்த மக்களை நாளை வெங்காயத்துக்கும் வரிசையில் நிற்கும் மக்களாக மாற்றிவிடாதீர்கள்.

மஹிந்த அரசாங்கம் மக்களுக்கு நிச்சயமாக நல்லது செய்யத்தான் போகிறது, ஆனால் அந்த நல்லது என்பது கொள்ளையிடப்பட்ட பின் வழங்கும் எச்சமாக இருக்கக்கூடாது, நம் மக்கள் பகிர்ந்தளிக்கும் உழைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா.

அதுவே இந்தச் சமூகம் இனிவரும் காலங்களில் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும்.

பழைய சிலோன் காரனாக இந்தச் சமூகம் தன் மானத்துடன் வாழ்வதை மீண்டும் இந்த உலகம் பார்க்க வேண்டாமா?

 

குறிச்சொற்கள்: , , , ,

2 responses to “சூடுபிடிக்கும் “சிலோன்”

 1. maabharathidhasan

  ஜூன்9, 2009 at 8:27 முப

  தோழர் அவர்களுக்கு!
  இந்த கட்டுரை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறது என்றுதான் சொல்லுவேன். உயிரையும் உடமைகளையும் இழந்துதான் விடுதலையை பெறவேண்டும் என்றால் அந்த விடுதலை தேவை இல்லை, பொருளாதாரத்துடன் கூடிய அடிமை வாழ்வே போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். அடிமைகள் இதைத்தான் விரும்புவார்கள்.
  இறுதி தீர்வு விடுதலைதான். தமிழீழம்தான் அதைதரும்.
  மனக்கசப்பு ஏற்பட்ட கணவன் மனைவி நாங்கள் இனி சேர்ந்து வாழமுடியாது எங்களுக்கு மணவிலக்கு கொடுங்கள் என்று கூறி தங்கள் குழந்டைகளைக்கூட பிரிதுகொல்கிறார்கள், அதைப்போல சகோதரர்கள் இனி ஒன்றாக இருக்க முடியாது எங்கள் சொத்துக்களை பிரிதுகொடுங்கள் என்று நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
  சிறு சிறு சண்டைகளே இவர்களை நிரந்தரமாக பிரிக்கிறது என்றால் இதை விட தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே நடைபெற்ற யுத்தங்கள் என்ன சிரியனவோ! அல்லது தவறு இழைத்தவர்கள் தமிழர்களா மண்டி இட்டு மன்னிப்பு கேட்க?
  அங்கே எப்போது தேர்தல் நடைபெற வேண்டும், அவர்கள் யாரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறும் நீங்கள் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு என்ன பதிலை தரப்போகிறீர்கள்?
  அவற்றை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?
  காவிரி நீரை கேட்போம். நீதிமன்றத்திற்கு போவோம். தீர்ப்பை செயல்படுத்த சொல்லுவோம். ஒன்றுக்கு இருமுறை கடிதம் எழுதுவோம். அதற்குமேல் எதையும் செய்ய மாட்டோம். ஏன்னென்றால் போராட்டம் இழப்பை தரும். நம்மை இழந்து உரிமையை பெற்று என்ன பயன். தேர்தலில் நிற்போம், மந்திரிகலாவோம், தமிழகத்திற்கு கொஞ்சம் பணத்தை கொண்டுவருவோம். நம்மை பொருளாதாரத்தில் உயர்திக்கொள்வோம். அடிமை வாழ்வை வாழ்வோம். இதைப்போலத்தானே ஈழத்தமிழர்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
  இதனை மானமுள்ள தமிழர்கள் விரும்பமாட்டார்கள்.
  அவர்கள் மீண்டும் யுத்த களத்தில் இறங்குவார்கள் தேர்தல் களத்தில் அல்ல.
  நன்றி!

   
  • arivudan

   ஜூன்9, 2009 at 10:11 முப

   ஆக்கபூர்வமான வாதம் தோழரே, கடந்த பின்னூட்டத்தில் போலல்லாது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளை உங்கள் சொந்தக் கருத்துகளில் பொதிந்திருக்கும் ஆதங்கத்தையும் அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

   இப்போது, உங்கள் கேள்விக்கு வருவோமானால், உரிமைகளையும்,உடைமைகளையும் இழந்த ஒரு நடைபிண வாழ்க்கையை அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அடிமை வாழ்க்கையை ஆதரிப்பது எங்கள் நோக்கம் இல்லை.

   முதலில், நாம் அனைவரும் உண்மையைப் பேசவும், சுய விமர்சனம் செய்யவும், நம் கடந்த காலத் தவறுகளை அலசி அவற்றை நவீனப்படுத்தவும் எமது சிந்தனையை விரிவு படுத்தவேண்டும், அவ்வாறில்லாமல் முடக்கிக்கொள்ளப்பட்ட ஒரு நிலையில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் நமக்கிருக்காது, எனவே நம் பார்வையில் அனைத்துமே தப்பாகவே தென்படும்.

   இந்த வலைப்பூவில் முழுக்க முழுக்க நாம் ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம், அந்த விடயங்கள் உங்கள் கண்களிலும் நிச்சயமாகப் பட்டிருக்கும். அதுதான் தமிழினத்தின் ஒன்றிணைவு,ஒற்றுமை அல்லது ஒருவொருக்கொருவர் மீதிருக்கும் விருப்பு,வெறுப்பை நீக்கிய புதிய சமுதாய நலன் சார்ந்த தோள் கொடுப்பு என்பதாகும், எமது பதிவுகளை நிதானமாகப் படித்துப்பார்த்தால் இதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.

   தமிழர் போராட்டம் இன்றைய நிலையை அடைந்ததற்கான முதற் காரணம் என்னவென்று கேட்டால், அது உரிமை தேவைப்பட்ட ஒரு இனத்திடம் இல்லாமல் போன ஒற்றுமை என்பதுதான் பிரதான காரணியாக இருக்கும். அதன் பின் அந்த ஒற்றுமை குலைந்ததற்கான காரணம் என்ன? அது மீண்டும் ஒன்றிணைய முடியாமற் போன பின்ணனி என்ன என்ற கேள்வி முன்வரும் போது, தமிழ் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க ஆயுதத்தை மட்டும் நம்பிய சித்தார்ந்தம் கேள்வி கேட்கப்படுகிறது.

   அடிப்படையை ஆராயாமல் வெறும் உணர்ச்சிமயத்தை நம்பி கடந்த 30 வருடங்களாக தமிழினம் அடைந்த பின்னடைவுக்கு கட்சி பேதம், இயக்க பேதம் இன்றி அனைவரும் பொறுப்பேற்று, அவற்றைக் களைந்து மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்னும் நோக்கத்தை அடைய, தவறிச்செல்லும் வழிமுறைகளை சுட்டிக்காட்டி அந்தத் தவறுகளை விமர்சனம் செய்யவும் கடந்த காலத்தில் தவறியதுதான் இன்றைய தமிழினத்தின் கையேறு நிலை என்பதை நீங்கள் உணர மறுத்தால், விடுதலை என்று நீங்கள் எதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று அலுத்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

   இலங்கையில் ஒரு காலத்தில் எதிர்க்கட்சி என்றாலே அது தமிழர் பிரதிநிதிகளின் கூட்டணி என்ற நிலை மாறி, இன்று இந்த இனம் துண்டாடப்பட்டிருக்கிற நிலைக்கு எந்த அரசியல் வங்குரோத்து நிலை காரணம் என்பது அறியப்படவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அரசியல் கலக்காத எந்த சமூக விடுதலையைப் பற்றி நாங்கள் கதைக்கப் போகிறோம்?

   மானம்,ரோசம் என்றெல்லாம் உணர்ச்சிவயப்பட முதல் நமக்குள் இருக்கும் உண்மையான உரிமையின் மறுப்பை உணர்ந்து,அதற்காக நாங்கள் ஒற்றுமையாகக் கை கோர்த்துக் குரல் கொடுப்பதற்கு எந்த வழியில் மக்களை ஒன்றிணைக்கப் போகிறோம்? வெறும் உணர்ச்சிவசப்படல் மற்றும் உணர்ச்சியூட்டலில் திருப்தி காண்பதாக இருந்தால் எதற்காக நமக்கொரு விடுதலையும், போராட்டமும்?

   அன்றைய நாள் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட உண்மையும், அதற்காகப் போராட வேண்டிய தேவையும் காலத்தால் மறுக்கப்பட முடியாமல் இருந்த போது, அதன் வரலாற்றுத் தேவை அறிந்து தமிழகமும் தோள் கொடுத்தே நின்றது, ஆனால் இன்றளவில் அப்படி நிற்க இயலாமல் போகிறதே? அதற்கு காங்கிரஸ் ஆட்சி என்பதும் ராஜீவின் மனைவி சோனியா என்பதும் மட்டுந்தான் காரணமா? அப்படி மட்டும் சிந்தித்துக்கொள்வது எப்போதுமே எமது தவறை நாமே மறைத்துக்கொண்டு அடுத்தவன் முகத்தில் சேறு பூசுவதற்கு மட்டுந்தான் உதவுமே தவிர, ஒரு சமூக விடுதலைக்கு ஒரு நாளும் உதவாது.

   தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை என்னாவது? என்று கேள்வி கேட்கிறீர்களே. அது எதனால் இப்படியானது? என்று எப்போதாவது ஒரு நாள்,ஒரு நிமிடமாவது உங்களை நீங்கள் கேள்கி கேட்டிருக்கிறீர்களா தோழரே? அந்தத் தேடலின் பின்ணனியில் இந்த சமூகம் ஏன் இந்தளவு பிளவு பட்டிருக்கிறது எனும் உண்மையை அறிய முற்பட்டிருக்கிறீர்களா தோழரே?

   சமுதாயம் ஒற்றுமையாக இருக்குமானால், இன்று முழு உலகமும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் குரல்களுக்கு எந்தளவு சக்தி கிடைக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா தோழரே? அப்படியொரு நிலை வந்தால் சிங்கள அரசென்ன, வெள்ளைக்கார நாடுகளும் எந்த அளவு எம்மோடு அனுசரித்துப் போகும் நிலை வரும் என்று சிந்தித்திருக்கிறீர்களா தோழரே?

   எம்மைப் பொறுத்தவரை அத்திவாரமில்லாத கட்டிடம் 30 வருடங்கள் கழிந்தாவது சரிந்தே போகும், நாம் அத்திவாரத்தைப் பலப்படுத்துவதைப் பற்றி மட்டுமே இப்போதைக்குக் கருத்துரைக்கிறோம், இதில் உணர்ச்சியூட்டலை முற்றாக வெறுக்கிறோம்.

   சாக்குப் போக்குகள் சொல்லி மக்களை மந்தைகளாக வைத்திருக்கும் அநியாயத்தை எதிர்க்கிறோம், அதன் பேரில் நடக்கும் சமூக அட்டூழியங்களை சுட்டிக்காட்டுகிறோம், இதில் முடிவெடுக்கும் நீங்கள் திறந்த மனதுடன் முடிவெடுக்காத வரை, நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட சித்தார்ந்தம் அதைத் தடுத்துக்கொண்டே இருக்கும்.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: