RSS

மண்டை மேல் ஒரு கொண்டை!

05 ஜூன்

சுமார் 3 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை மீட்டெடுத்துப் புணர்வாழ்வும்,பாதுகாப்பும் அளிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கமும், தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புலி சார்பு இறுதி ஆதரவாளர்களும் பிரச்சாரங்களை முன் வைக்கிறார்கள்.

எந்த சர்வதேசத்தையும் நம்ப முடியாது என்று அங்கலாய்த்துக்கொண்டாலும் இப்போதும் அதே சர்வதேசத்திடம் எதையாவது சாதிக்கலாமா என்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது நம்பிக்கை, ஆனால் அதை மனிதர்களாக இருந்து நீங்கள் நகர்த்தாமல் புலிகளாக இருந்து நகர்த்தினால் ஒரு அங்குலம் கூட “அம்மி” நகராது, நகரவும் முடியாது.

இது கடந்த காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்ட சரித்திரப்பாடம்.

மேலோங்கிய கனவில் உச்சத்தில் உங்கள் தலைவனும் இதை நம்பியிருந்துதார், இறுதியில் தன் வீரத்தை உலகறியச் செய்து, தலையில் அடி வாங்கி இறந்து போனார்.

நீங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும், அது உலகின் காதுகளில் சந்தர்ப்பவாதக் கூச்சல் போன்றே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது, உங்களைப் பாவிக்க விரும்பும் சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் ஒரு ஆறுதலுக்காக உங்கள் முன் வந்து செல்கிறார்கள், அதுதான் உங்கள் வெற்றியென்றால் இன்னும் ஒரு 40 மாதங்கள் வெஸ்ட்மினிஸ்டர் திறந்த வெளிகளில் நீங்கள் ஒன்று கூடி 304 பார்ப்பதில் தவறே இல்லை.

இதைவிட நல்ல உதாரணம் என்று கூறுவதென்றால், உங்கள் எல்லோருக்கும் பிடித்த தமிழ்ச் சினிமா நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை ஒன்றைக் கூறலாம்.

“போக்கிரி” எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்-அசின் காதலைக் கண்காணிக்க பல இடங்களுக்குப் பல வேடங்களில் இவர் செல்வார்.

ஆனால் எங்கு, எந்த வேடத்தில் சென்றாலும் விஜயின் நண்பர்கள் இவரை அடையாளங் கண்டு கொள்வார்கள். இதில் விரக்தியடைந்த வடிவேலு ஒரு கட்டத்தில் “என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல? நானும் கஸ்டப்பட்டு எத்தனையோ வேசம் போடுறன், ஆனாலும் நீங்க உடனேயே கண்டுபிடிக்கிறீங்களே எப்படிடா?” என்று ஆக்ரோசமாகக் கேட்பார்.

அதற்கு விஜயின் நண்பர்கள் ஒரு பதில் சொல்வார்கள், அந்த பதில் உங்களுக்கும் மிக மிகப் பொருந்தும்.

இது போக்கிரி படத்திற்கான விளம்பரம் அல்ல, ஆனால் நல்லது எங்கிருந்தாலும் சுட்டிக் காட்டுவதில் தவறில்லையே, எனவே அந்த பதிலைக் கண்டு களித்து உங்கள் சிந்தனையைத் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

30 – 40 செக்கன்கள் தான் வரும் அந்த நகைச்சுவைக் கதை வசனத்தில் 30 வருடங்களாக நீங்கள் மூடி மறைக்கப் பார்க்கும் ஒரு மிகப் பெரிய “உண்மையும்” இருக்கிறது.

அதைத் தேடும் சிரமமும் உங்களுக்கு இருக்க வேண்டாம் என்பதற்காக அதற்கான ஒளிப்பதிவையும் இங்கேயே இணைத்துக்கொள்கிறோம்.

ஏறத்தாழ இது தான் உங்கள் நிலையும்.

கடந்த காலங்களில் உங்களை வழி நடத்திய புலிகளும் சரி, இப்போதும் அதைப் பயன்படுத்தி இலாபம் பாக்க முனையும் புலி முகவர்களும் சரி, உலகின் கண்களில் மிக அப்பட்டமான ஒரு உண்மையை மிகத் தெளிவாக ஏற்கனவே முன் வைத்திருக்கிறார்கள்.

அதுதான், அவர்கள் எப்போது “தமிழர்கள்” கைது செய்யப்பட்டார்கள், “தமிழர்கள்” கொல்லப்பட்டார்கள், “தமிழர்கள்” முடக்கப்பட்டார்கள், “தமிழர்கள்” காணாமல் போனார்கள் என்று சொன்னாலும், அந்த ஒவ்வொரு தடவையிலும், அவர்கள் “தமிழர்கள்” என்று குறிப்பிடுவது “புலிகளை” அல்லது “புலி ஆதரவாளர்களை” மாத்திரம் தான் என்கிற உங்களுக்குத் தெரியாத பரகசியம்.

எனவே, ஒவ்வொரு தடவை புலி சார்பு தலைமைகளில் இருந்து நீங்கள் “தமிழர்கள்” எனும் கோரிக்கையை முன் வைக்கும் போதும், உலகின் கண்களுக்கு ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரியும், அதாவது நீங்கள் முதலில் காப்பாற்ற முனைவது “புலிகளை”, இப்போதைய நிலையில் எஞ்சியிருக்கும் மீள் இணைவுக்கு வழி வகுக்கக்கூடிய முன்னாள் “புலிகளை” என்பதாகும்.

இதை முதலில் தம் அறிவுக் கண் முன் நிறுத்திவிட்டு, பின்னர் தம் ஜனநாயக முகத்தைக் காப்பாற்றிக்கொண்டு, அதே நேரம் ஒரு காலத்தில் உங்கள் வாக்குகளை (வாக்களிக்கும் உரிமை உங்களில் பெரும்பாலானோருக்கு இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்) கிடைத்தால் பெற்றுக்கொள்ளலாம் எனும் ரீதியில் தம்மால் முடிந்தளவு உங்களுக்கு ஆறுதலைத் தந்து அனுப்பிவிடுகிறார்கள்.

பின்னர் அவர்கள், ஒரு பேச்சுக்காகத்தானும் தாம் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் இதைப் பேச முன் வரும் போது, இவர்கள் தவிர மற்றவர்களும் உங்கள் இந்தக் கோசங்களின் உண்மையான பின்ணனி என்ன என்பதை நன்கறிந்து இருப்பதால், இவர் என்னதான் கட்டுரை வாசித்தாலும், அது எடுபடாமலே போகிறது.

அப்படியானால், தமிழருக்கு இலங்கையில் பிரச்சினை என்பதே இல்லையா? அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கவே முடியாதா? குரல் கொடுத்தும் அதில் பயனில்லையா? என்றெல்லாம் மிக நியாயமாக உங்கள் ஆழ் மனது கேள்வி கேட்கலாம்.

“ஆம்” உங்களுக்கு நிச்சயமாக உரிமை மாத்திரமல்ல, அதற்கான கடமையும் இருக்கிறது, ஆனால் வடிவேலு சொன்னது போல “கெட்டப் போடுவதெல்லாம் சரி,” மண்டை மேல் இருக்கிற கொண்டையை மறந்த கதையாக” நீங்களும் ஒரு தவறை திரும்பத் திரும்ப இழைத்து வருகிறீர்கள்.

அதுதான், புலியின் பிரதிநிதியாக நீங்கள் முன்னால் சென்று நிற்பது.

புலி உங்கள் பிரதிநிதி என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள், அதை மேற்குலகம் இவர்கள் புலியின் பிரதிநிதிகள் அல்லது புலிப் பிரதிநிதிகளினால் வழி நடத்தப்படுகிறவர்கள் எனும் ஆகக்குறைந்த அளவு கோளில் வைத்துத்தான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் உரிமைகளைப் பாவித்து, உங்கள் குரல்களும் செவி மடுக்கப்பட வேண்டுமானால், முதலில் நீங்கள் “மனிதர்கள்” மீது அக்கறை கொண்ட சக சமூகத்தினர் என்பதை நிரூபித்துக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலும் சரி, எப்போது ஒரு புலி அமைப்பு எந்த நாட்டில் தடைசெய்யப்பட்டாலும், உடனடியாக இன்னொரு அமைப்பை உருவாக்கி அதன் பெயரில் காரியத்தில் இறங்கி விடுவீர்கள்.

இப்படி நீங்கள் உருவாக்கிய அமைப்புகளே பல நூறு இருக்கும்.

ஆனால், எத்தனை அமைப்புகளை நீங்கள் பெயரளவில் உருவாக்கினாலும், உங்கள் அத்தனை செயற்பாடுகளும் ஒரு அங்குலமேனும் விலகாத சாட்சாத் புலியின் செயற்பாடாக மாத்திரம் தானே இன்று வரை இருக்கிறது?

அப்போ, மண்டை மேல் இருக்கும் கொண்டையை விட்டுவிட்டு எத்தனை கெட்டப் போட்டு என்ன செய்வது?

புலியில்லாத ஒரு சமூக எழுச்சி உங்களிடமிருந்து வரும் முதல் தருணத்திலேயே இலங்கை அரசு மீது பாய, ஏறத்தாழ அனைத்து மேற்குலக சக்திகளும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால், உங்களால் தான் அதை சாதிக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வெறுமை நிலையை அடைந்திருக்கும் உங்களிடம் இன்னும் மிஞ்சியிருப்பது வெறும் பிரம்மையே அன்றி, மக்கள் மீதான உண்மையான அக்கறையில்லை.

மக்கள் மீதான உண்மையான அக்கறை உள்ளவர்களாக, அவர்கள் செயற்பாட்டில், அவர்கள் முன்னேற்றத்தில் உண்மையான ஈடுபாடு கொண்டுள்ளவர்களாக அல்லது கொண்டிருக்க விரும்புபவர்களாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை உங்கள் “கெட்டப்” எல்லாம் விழலுக்கிறைத்த நீர் தான்.

மிகத் தெளிவாகத் திட்டமிட்டியங்கும் இலங்கை அரசு, யுத்தம் முடிந்தது என்று கொக்கரித்து விட்டு அடங்கிப் போகவில்லை, வெற்றி விழா கொண்டாடியதோடு வீடுகளுக்கும் செல்லவில்லை.

இன்றும் கிழக்குப் பிராந்தியத்தை “சுத்தப்படுத்திக்கொண்டு” இருக்கிறார்கள்.

தம் இராணுவத்தை மென் மேலும் பலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தம் செயற்திட்டம் மிகத் தெளிவானது என்பதால் உங்கள் பிரமுகர்கள் போடும் போலி வேசங்களை மிக இலகுவாகக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதங்களை மெளனித்துவிட்டோம், இனி ஜனநாயக வழியில் மக்கள் உரிமைக்காகப் போராட விரும்புகிறோம் என்று உங்கள் (பாதிப் பேரின்) தலைவர் கே.பி ஒரு அறிக்கை விட்டுப் பார்த்தார்! அதற்கு என்ன நடந்தது?

இலங்கை அரசாங்கம் “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என்று பெனால்டி அடித்து விட்டது.

சர்வதேசம் அதை வாய் மூடிப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது? ஏன் என்று இதுவரை சிநத்தித்தீர்களா? எல்லாம் அந்த மண்டை மேல் இருக்கும் கொண்டை விவகாரம் தான்.

“புலி” எனும் முப்பது வருட கால வேசம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதில் உலகமே மிகத் தெளிவாக இருக்கிறது.

அதற்கு இலங்கையின் விடயங்கள் மாத்திரம் தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் “கொண்டையை” ஒன்றுமே செய்ய முடியாது.

இலங்கையின் அரசியற் சூழ்நிலைகளுக்கு சற்றும் குறையாத அளவில் சர்வதேசத்தில் உங்கள் அடாவடித்தனமும் இதில் சம பங்கு வகிக்கிறது.

உயிர்ப்பயத்தில் புலம் பெயர்ந்து வந்த மக்களாகவா நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்? அந்ந்த நாட்டில் அகதியாகப் பதிவதற்கு நீங்கள் என்ன காரணம் சொன்னீர்கள்? அந்த நாட்டின் பிரஜையாக சத்தியப்பிரமானம் செய்து கொள்ள நீங்கள் என்ன சொன்னீர்கள்? அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு நீங்கள் எந்த அளவில் அடிபணிகிறீர்கள்? அந்த நாட்டின் சமூக ஒருமைப்பாடு, சமூக அபிவிருத்தியில் நீங்கள் எந்த வகையிலான பங்கை வகிக்கிறீர்கள்?

அந்தந்த நாட்டின் சலுகைகளை நீங்கள் எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள்? அவற்றை எவ்வளவு தூரம் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? இவற்றையெல்லாம் அறியாத ஒரு மொக்கு அரசாங்கம், மொக்கு நாடாளுமன்றம், மொக்குப் பிரதிநிதிகள் தான் நீங்கள் நின்று கோசமிடும் கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் போது அதற்கு அவர்கள் என்ன செய்வது?

தனியாக நிற்கும் ஒரு மனிதனின் உணர்வு, நாலு பேருடன் சேரும் போது வேறு வடிவில் வீரியம் பெறுகிறது, அத்தோடு சேர்ந்து உணர்வு பூர்வமாகக் கூச்சலிடுகிறீர்கள், அத்தோடாவது நிற்பதுண்டா? இல்லையே? சாலையை மறித்து அரசுக்க நட்டத்தை வரவைக்கிறீர்கள், கட்டிடங்களை உடைக்கிறீர்கள், தூதராலயங்களுக்குள் சென்று வீரம் காட்டுகிறீர்கள், அதெல்லாம் சரி இது அத்தனையையும் நீங்கள் எந்த “முக மூடியோடு” செய்கிறீர்கள் என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

அத்தனை காரியங்களையும் செவ்வெனே நிறைவேற்றி உங்கள் வெற்றிகளைப் படம் பிடித்து வகை தொகையில்லாமல் இணையங்களிலும் தானே போட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டீர்கள், கொள்கிறீர்கள்?

இப்போதும் அவை உங்கள் இணையங்களில் இருக்கின்றனவே, ஒரு தடவை மீண்டும் போய்ப் பாருங்கள்.

வடிவேலுவின் மண்டை மேல் இருந்த கொண்டையைப் போல உங்கள் ஒவ்வொருவர் கையிலும் என்ன இருக்கிறது? உங்கள் ஒவ்வொருவரின் செயலிலும் என்ன இருந்நதது? உங்கள் கோசங்களும் செயற்பாடுகளும் எப்படி அமைந்திருந்தது என்பதை மீண்டும் ஒரு தடவை அலசிப்பாருங்கள்.

புலிக்கொடி, தமிழரின் கொடி அதைப் பிடிப்பது எங்கள் உரிமை, அது தேசியத்தின் கொடி என்று உங்களிடம் விதைத்த அந்த “வீராப்பு” யாருக்கு நன்மையளிக்கிறது, யாருக்கு நன்மையளிக்க வில்லை என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு நாள், நீங்கள் எல்லோரும் மீண்டும் கூடி புலிக்கொடியை விட்டு விட்டு, புலிப் பிரச்சாரங்களில் நீங்கள் “நம்பிக்கொண்டிருக்கும்” கதைகளை விட்டு விட்டு, உலகம் நம்பக்கூடிய உண்மைகளை, இலங்கையில் நடக்கும் “உண்மையான” பிரச்சினைகளை பேசிப்பாருங்களேன், நீங்கள் கூடி ஒரு மணி நேரத்திற்குள் உங்களுக்கும் உங்கள் குரல்களுக்கும் ஒரு மரியாதை கிடைக்கும்.

நீங்கள் வைக்கும் அனேகம் குற்றச்சாட்டுகளின் அடிப்படை என்ன? அவற்றில் பெரும்பாலானவை புலிப்பிரச்சார இணையத்தளங்களில் வெளியிடப்படும் கட்டுக் கதைகள்.

கடந்த காலங்களிலும், மக்களை ஒன்று கூட்டுவதற்காக நீங்கள் அனுப்பிய SMS கள் என்ன? திடீர் திடீர் என்று ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், மூவாயிரம் என்று மக்கள் அழிந்தார்கள் என்ற ஆதாரமற்ற கதைதானே?

அது பொய்யென அறிந்ததும், வெள்ளைக்காரர்கள் தம் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள், அப்படி அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்ற பின்னர் இராணுவம் சுதந்திரமாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார்களே தவிர, நீங்கள் கோசமிட்ட அந்த நேரங்களில் அவர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்களாக இருக்கவில்லை.

இப்படி உங்களை உணர்ச்சிவசப்படுத்தியதில் புலிகளி்ன் முட்டாள்த்தனம் வகிக்கும் பங்குக்கு சம அளவாக, இலங்கை அரசின் ஊடுருவல் கெட்டித்தனமும் இருந்நது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழனாக இருந்தாலும் “யாழ்ப்பாணத் தமிழ்” பேசவில்லை என்பதற்காக சகோதரர்களை சந்தேகக் கண்டு பார்க்கத் தெரிந்த உங்களுக்கு, உங்களை எல்லாம் ஒன்று கூட்டிய வேடிக்கையான பிரச்சாரத்தின் உண்மை, பொய்யை அறிய முடியாமல் போனது மிகப் பெரும் துரதிஷ்டம்.

இன்றும் கூட நீங்கள் கூடியிருக்கும் இடங்களில் எழுப்பப்படும் கோசங்களின் பின்னணியில் இருக்கும் விடயங்களின் கருத்தாழத்தையோ அல்லது அதன் உண்மையையோ உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்?

முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் அதற்கு மேல் சென்று வேறு எந்த நியாயமான காரணங்களை உங்களால் முன்வைக்க முடிகிறது? அவற்றை எந்தளவு ஆதாரபூர்வமாக உங்களால் நிரூபிக்க முடிகிறது?

எப்படியோ நீங்கள் கூடும் இடங்களில் எல்லாம், தமிழீழ “பென்டன்கள்”, புலி மாலைகள், ஆடைகள், உணவு விற்பனை என்று அனைத்தையும் பார்த்து உங்கள் “நன்கொடைகள்” வசூலிக்கப்படுகின்ற வேகத்தை, நீங்கள் கையில் பிடித்திருக்கும் பதாகைகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களின் பின் இருக்கும் நம்பகத்தன்மையை அதிகரிக்க ஏன் உங்கள் வழிகாட்டிகள் சிந்திக்கத் தவறுகிறார்கள்?

பழைய சமுதாயம் இப்போது அலுத்து, ஒதுங்கிக்கொண்டிருக்க இளைய சமுதாயம் உணர்ச்சியூட்டபடுகிறது. இளைஞர் வேகம் வரவேற்கத்தக்கது, ஆனால் அந்தந்த நாடுகளில் ஆகக்குறைந்தது 4,5ம் வகுப்பிலிருந்தாவது படித்திருக்கும் இந்த இளைய சமுதாயம், தமிழ் சினிமாவில் போன்று கலகக்காரர்களாக உருவாகுவதில் காட்டு வீரத்தையும்,வேகத்தையும் உங்கள் விவேகத்தைப் பாவித்து நல்லதையும் கெட்டதையும் அறிந்து, நம்பகத்தன்மையுடைய கோரிக்கைகளையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைப்பதற்கு ஏன் முன் வருவதில்லை?

அப்படி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் உங்களை வழி நடத்துபவர்கள் உங்களுக்கு எந்த அளவில் ஒத்தாசை வழங்குவார்கள்? தம் பதவிகளை விட்டுவிட்டு புதிய சிந்தனை உள்ள உங்கள் இளமையை எவ்வாறு பயன்படுத்துவார்கள்?

ஆகக்குறைந்தது உங்களை எந்த மட்டத்தில் வைத்து நடத்துவார்கள்?

இப்படி அனைத்தையும் நீங்களே அலசி, ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் போது உங்கள் உண்மையான பிரச்சினை முதலில் உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

முதலில் உங்களிடம் “உண்மையைப் பேசும்” தலைமை இல்லை.

அடுத்து உங்களிடம் காணப்படும் “உணர்ச்சிவசப் படுதலுக்கு” வழங்கும் ஒத்துழைப்பும், வேகமும் உண்மைகளைக் கொண்டு கோசமிடுவதற்கு பாவிக்கப்படுவதில்லை.

உங்களோடு வந்து ஊர்வலங்களில் தங்கியிருப்போர் எல்லோருக்கும் ஒரே கொள்கையும், நோக்கமும் இல்லவே இல்லை.

பல பெரியோர்கள், பெற்றோர்கள் ஒரு வேளை உங்கள் ஊர்வலங்களில் இருக்கும் போது அதற்கு “வேறு ஒரு காரணமும்” இருக்கிறது என்கிற அடிப்படை உங்களுக்குத் தெரியவே தெரியாது.

எத்தனையோ பல பெற்றோர்கள் முன்னர் உங்களோடு இருக்கும் போது “இப்படியாவது” ஒரு வழியில் யுத்தத்தை நிறுத்தி, புலியால் பிடித்துச்செல்லப்பட்ட தம் பிள்ளைகளின்,பேரப்பிள்ளைகளின் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவும், இப்போது அந்த முகாம்களில் அவர்கள் உயிரோடு இருந்தால் “இப்படியாவது” ஒரு அழுத்தத்தைக் கொடுத்து அவர்களை வெளியில் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கிறார்கள்.

இந்த உண்மையை மறுப்பதற்கு உங்களிடம் திராணியிருந்தால், முதலில் உங்களை விட வயதும், அனுபவமும் உள்ள மனிதர்களிடம் “மனிதாபிமானாக” உண்மையை அறிந்து ஒரு புதுக் கொள்கையை வழிவகுக்கும் ஆர்வத்தில் மனம் விட்டுப் பேசிப் பாருங்கள்.

கடந்த காலங்களில் உங்கள் தலைமைகள் விட்ட மிகப்பெரும் தவறு ” சுய விமர்சனம் ” செய்யத் தயங்கியது ஆகும்.

அதே வழியில் நீங்களும் செல்வதனால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பிரபாகரனின் அழிவு கூட உங்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால், வேறு எதைக்கொண்டு உங்களைத் திருத்தலாம்?

பல போராளிக் குழுக்கள் ஈழம் காணப்புறப்பட்டன, அதில் புலி தவிர்ந்த மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று மட்டுமே வரைவிலக்கணம் வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் “சுய விமர்சனம்” செய்யத் தயாராகும் அந்த நாளில் இந்த வரைவிலக்கணம் பிழை என்பதை உணர்வீர்கள்.

கடந்த கால போராட்ட வரலாற்றிலிருநு்து ஏற்றுக்கொள்ளக்கூடியதையும், விட்டுத்தள்ள வேண்டியதையும் பிரித்தறிந்து விட்டு, கடந்த காலத்தில் இருந்து உங்களை வழி காட்டும் திறன் இருப்போரையும், விட்டு விலக வேண்டியவர்களையும் இயக்கங்களின் வேறுபாடுகளைக் களைந்த நிலையில் தெரிவு செய்து, தொலை நோக்குடன் “மக்கள் நலன்” முற்படுத்தப்பட்ட ஒரு அரசியல் வியூகத்தை வகுத்து, அதன் செயற்பாட்டு வடிவத்தை மீண்டும் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டே வரைபமைத்து ஒரு தடவை நீங்கள் உதவி கேட்கும் இந்த சர்வதேசத்தின் முன் வைத்துப்பாருங்கள்.

அதற்கான பதில்களை நீங்கள் பெறும் போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்? இந்த இனம் ஏன் இன்னும் பின்தங்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனும் உங்களுக்கே குழப்பமாக இருக்கும் கேள்விக்கும் விடை காண்பீர்கள்.

அதை விட்டு விட்டு, பழைய கதையை வைத்துப் புதுப் போர்வையில் என்னதான் நீங்கள் பிலிம் காட்டினாலும், அது யாருடைய காதுக்கும் வலுவான விடயமாகப் போய்ச் சேராது.

மாறாக, உங்களை உணர்ச்சியூட்டித் தெருவில் இறக்கும் பழைய தலைமைகளை வைத்தே இதையும் கணித்து, உங்கள் காட்டுக் கத்தல்களை யாருமே கேட்காமல் விட்டுவிடுவார்கள்.

கற்கால வித்தைகளை இப்போதாவது மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மிக அடிப்படையில் “உண்மைகளை” வைத்தே உங்கள் முரண்பாட்டை முன்வைக்கப் பழக வேண்டும்.

அதன் அடுத்த கட்டமாக உங்கள் முரண்பாடுகள் “மக்கள் நலன்” முதன்மைப்படுத்தப்பட்ட கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.

தவறுகளைத் தட்டிக்கேட்கும் உங்கள் குரல்களிடம் அதற்கான தீர்வுகள் தொடர்பான தொலை நோக்குச் சிந்தனையும், அவற்றை உள்வாங்கிச் செயற்படும் திறனும், கட்டமைப்பும் இருக்கிறது என்பது சர்வதேசத்தின் கண்களுக்கு நிரூபிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத ஒரு சூனியமாக உங்கள் “அறிவு” இருப்பதால் தான் இவன் ஏன் ஏற்றுக்கொள்கிறான் இல்லை? எனும் குழப்பமும் நாம் எதைச்செய்யக் கூடாது எனும் தெளிவும் இல்லாமல் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் காட்டப்படும் பல “மக்கள் எழுச்சிகள்” அந்த வெள்ளித்திரையோடு முடியும் கதையாகும்.

அதையும் தாண்டிக் கற்கால வித்தகர்கள் போல கடையுடைத்தல், வாகனங்களை எரித்தல், அடிதடி, வீராவேசம் என்று நீங்கள் போடும் கேலிக்கூத்துகளைப் பார்க்கும் நாகரீக உலகின் எந்தவொரு அரசும், உங்கள் அறியாமையைத் திருத்தி, அஹிம்சை வழியையும், விட்டுக்கொடுப்பு (tolerance), அமைதி (peace) போன்ற விடயங்கள் தொடர்பில் உங்களுக்கு Counselling , அதாவது அறிவுரை வழங்கி வழிநடத்துவதற்காகத்தான் கூடி ஆராயுமே தவிர, உங்கள் உண்மைக்குப் புறம்பான கோசங்களுக்கு செவி மடுக்காது.

பல்வேறு விதமான பெயர்கள்,அமைப்புகள் என்று மாற்றிக்கொண்டாலும் எத்தனை காலத்திற்குத்தான் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பீர்கள்? புதிதாக எதையாவது சிந்திக்கும் நோக்கமே உங்களிடம் இல்லையா?

என்னதான் வேசம் போட்டாலும், உங்கள் மண்டை மேல் இருக்கும் கொண்டை பற்றிய அறிவு, உங்கள் சுய அறிவைக் கொண்டு எடைபோப்படாத வரை அறிவுரைகள் எல்லாம் தூற்றலாகவும், வழிமுறைகள் எல்லாம் துரோகங்களாகத்தான் உங்கள் கண்களுக்குத் தெரியும்.

எப்போது சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்? நீங்களும் வழிகாட்ட அங்கே ஒரு வருங்காலத் தலைமுறை காத்திருக்கிறது, அவர்களுக்கும் காட்டுமிராண்டி வாழ்க்கையை போதிப்பதுதான் உங்கள் எண்ணமாக இருந்தால், அவர்களால் மிக விரைவில் நீங்கள் ஒதுக்கப்படுவது திண்ணம்.

அந்த நேரத்தில் நீங்கள் சிந்தித்துத் தெளிவு பெற எதுவுமே மிஞ்சியிருக்காது, உங்கள் குரல்கள் அவசியப்படும் அளவுக்கு அந்த நாடும் இருக்காது, நாட்டின் மக்களும் இருக்க மாட்டார்கள்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள விரும்பினால், அதுவும் உங்கள் சமுதாயத்திற்காக உங்கள் குரல்களை ஒலிக்க விட நீங்கள் விரும்பினால், முதலில் உங்களிடம் எது அவசியம்? என்பதை அறிந்து அதைப் பற்றிப் பிடித்து, வளர்த்துக்கொள்ளாமல் நீங்கள் எதைச் செய்தாலும் அது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் படத்தில் காணும் “மண்டை மேல் இருக்கும் கொண்டைதான்“.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

2 responses to “மண்டை மேல் ஒரு கொண்டை!

 1. sekaran

  ஜூன்5, 2009 at 4:46 பிப

  அறிவுடன் அவர்களே! நீங்களும் இந்த பேதைகளுக்கு கொஞ்சமாவது அறிவு வரக்கூடாதா என்று விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர்களும் அது வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறார்கள். ஓரளவு படித்த மனிதர்களைக்கூட மாற்றிவிடலாம். ஆனால் மெத்தப் படித்து மேல் நிலையில் இருக்கிறார்களே, அந்த கோஷ்டியை திருத்துவது கஷ்டம். (இது என் சொந்த அனுபவம்.) இருந்தாலும் உங்கள் பணி தொடர்க. வாழ்த்துக்கள்!

   
 2. munir

  ஜூன்5, 2009 at 10:32 பிப

  please keep writing these things for this people,and tell them how to live with other communities.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: