RSS

சூனியத்தை நோக்கி..

03 ஜூன்

கி.மு , கி.பி போன்று பு.மு , பு.பி என்று இரண்டு வகைப்படுத்தலுக்குள் இலங்கை மக்களின் வாழ்க்கை வரலாறு மாற்றயமைக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை எனும் சுதந்திர நாடுஅ ன்று அடைந்த சுதந்திரத்தை விட இன்று பெற்றிருக்கும் “விடுதலை” அனைத்துத் தரப்பு மக்களின் ஒவ்வொரு அடிப்படை விடயத்திலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

இலவசக் கல்வியை வழங்கினாலும் அது இங்கிலாந்தின் கல்வித் தராதரத்திற்குப் போட்டியாக தரமுள்ளதாக வழங்கி வரும் நாடு இலங்கை.

பிரதேச ரீதியாக முதன்மை பெறும் மொழிகளில் தனித்தியங்கும் பாடசாலைகளும், கலப்பு மற்றும் இரு பிரதான மொழிகளான தமிழ்,சிங்கள மொழிகளிலும் இயங்கும் பாடசாலைகளுமாக அனைத்துப் பாடசாலைகளும் சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் சென்றடையும் வகையிலேயே போதித்தும் வருகின்றன.

இன்றைய கால மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, பல அரச பாடசாலைகளே முழுக்கவும் ஆங்கில பாடசாலைகளாக மாறிக்கொண்டு வரும் சூழ் நிலைகளும் காணக்கூடியதாகவே இருக்கின்றன.

கொழும்பு நகரின் பிரதான அரச பாடசாலைகள் அனைத்திலும் பொதுவாக இரு மொழிகளிலுமான தனித்தனி பிரிவுகள் இயங்குகின்றன , அவை மூலம் தாம் விரும்பும் மொழியில் தமது கல்வியைத் தொடரும் வாய்ப்பையும் அனைத்து மாணவர்களும் பெற்றும் வருகின்றனர்.

வட – கிழக்கு யுத்தப் பிரதேசங்களில் கூட யுத்த அகோரத்தின் மத்தியிலும் இந்தக் கல்விச் சேவையில் இடையூறுகள் ஏற்பட்டதில்லை.

அதே வேளையில், யுத்த சூழ்நிலை மற்றும் குண்டு வீச்சின் காரணமாக பாடசாலைகளில் கற்பித்தலைத் தொடர முடியாமலும், கல்விக் கூடங்கள் தாக்கப்படாது எனும் காரணத்தை சாதகமாக்கிக் கொண்டு கல்விக் கூடங்களை பயிற்சிக்கூடங்களாக புலிகளே மாற்றியிருந்ததும் என்று ஒன்றுக்கு ஒன்று சமனான அல்லது இரு வேறு வடிவங்களில் வாதிட்டு, இரண்டையுமே நியாயப்படுத்த முடியாத ஒரு “நிலை” யும் மறுக்கத்தக்க விடயமில்லை.

எவ்வாறாயினும் ஒரு நாட்டின் வளர்ச்சியானது அதன் எதிர்கால சந்ததியினருக்கு வழங்கப்படும் “அறிவை” அடிப்படையாகக் கொண்டது.

தகவல் தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இக்காலத்தில் அதற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேச முடியாது.

இன்றைய உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்று வகைப்படுத்தல்கள் உண்டு.

இதில் அபிவிருத்தி என்பதை விரும்பியோ விரும்பாமலோ அந்தந்த நாட்டின் பொருளாதார நிலையை வைத்தே அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள்.

ஒரு நாட்டின் மக்களுக்கு அந்த நாட்டின் அரச இயந்திரத்தால் வழங்கக்கூடிய சலுகைகள், நாட்டின் பிரதான வர்த்தக நிலை மாற்றங்களின் போது அவற்றைக் கையாளக்கூடிய வசதி வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி வளங்கள் என்று பல தரப்பட்ட உள்நாட்டு விடயங்களும், வெளிநாடுகளில் அந்த நாட்டின் வளங்கள், மற்றும் முதலீட்டு மதிப்புகள் என்று பல்வேறு பட்ட வர்த்தக நலன் சார்ந்த விடயங்களுமாக ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் தகைமை தொடர்பாக உலக அரங்கில் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.

இவ்வாறு உலக அரங்கை எதிர்கொள்ளாது தனித்தியங்க வேண்டுமானால் முதலில் அந்த நாடு “தன் நிறைவைப்” பெற்ற நாடாக இருக்க வேண்டும்.

அந்த நாட்டின் மக்கள், அந்த நாட்டினது பிரதான மொழிகளிலேயே தம் கல்வியைக் கற்று, வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொண்டு தம் உழைப்புக்கான சந்தையையும், மீள் வரவுகளையும் உள் நாட்டிலேயே கண்டு கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

நவீன உலகை எதிர்கொள்ளக்கூடிய தரமும், தொழிநுட்பமும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, அதற்கான விற்பனை மற்றும் ஏற்றுமதி சந்தையை உலக அரங்கிலேயே காணக்கூடியதாகவும் இருக்க வேண்டும், இதை ஒரே சொல்லில் குறிப்பிடுவதானால் “சுதேசிக்” கொள்கை என்று நம் அனைவருக்கும் புரியும் படியாக விளக்கிக் கொள்ளலாம்.

ஆசிய பிராந்தியத்தில் இந்தக் கொள்கையில் ஓரளவாவது இறுகிப் பிடித்த இந்தியா கூட தற்போது பல்வேறு நிலை மாற்றங்களை ஏற்படுத்தியும்,சந்தித்தும் வருகிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளி்ல் தொழிநுட்பம் என்பது மக்களின் மிகச் சாதாரண அடிப்படைத் தேவையாகவும் மாறிவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் சிதைந்து போயிருக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியை மிக அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது என்பது அத்தனை எளிதான விடயமில்லை.

அதிலும், தற்போது யுத்த சூழலில் சிதைந்து போயிருக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவது என்பது மிகப் பெரும் பணியாகும்.

இந்நிலையில் இருந்து ஒரு மாறுபட்ட சமூக வளர்ச்சியைக் காண்பதென்பதே இனி வரும் காலங்களில் அரசினதும், கிராம, பிரதேச, மாகாண, மற்றும் அனைத்து அதிகாரத்தில் இருப்பவர்களினதும் தலையாய கடமையாக இருக்கும்.

இநத சமூக வளர்ச்சியை நோக்கிய கொள்கை வீச்சும், அரசியல் நிலையும் உள்ளவர்கள் இந்த மக்களை வழி நடத்துவதால் மாத்திரமே அதுவும் சாத்தியமாகும்.

அதற்குத் தடையாகப் பல விடயங்கள் இருந்தாலும், மிகப் பிரதானமான விடயமாக அங்கு வாழும் மக்களின் “மன நிலையை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய 40-50 விழுக்காடு குடும்பங்கள் இன்றைய நிலையில் தம்முடைய யாராவது ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளில் வாழக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மக்களின் இன்றைய ஒரே தேவை, இத்தனை நாள் நடந்தது போகட்டும், அரசாங்கம் செய்வதைச் செய்துவிட்டு நம்மை இந்த முகாம்களில் இருந்து விடுவித்தால் போதும் என்னும் “காத்திருப்பு” நிலையாகும்.

இப்படிக் காத்திருப்பவர்கள், நிச்சயமாக வேறு எந்த வகையிலும் அரசின் சந்தேகக் கண்களுக்குள் சிக்கி தேவையில்லாத பிரச்சினைகளை உள்வாங்கிக்கொள்ள மாட்டார்கள், சந்தர்ப்பம் தானாக அமைந்ததும் அவர்கள் வெளியில் வந்து, கொழும்பு,இந்தியா, மலேசியா அல்லது வசதி கிடைத்தால் ஏதாவது ஒரு மேற்குலக நாட்டிற்கு தம் அடுத்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவே விரும்புவார்கள்.

வசதியிருப்பவர்கள் கொழும்பு மற்றும் புற நகர்ப்பகுதிகளில் மேற்கில் இருந்து வரும் பெறுமதி மிக்க கரன்சிகள் மூலம் ஒரு நிலை மேலோங்கிய வாழ்க்கையை ஆரம்பித்து, தம் பழைய வடுக்களை மறந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

இன்னும் ஒரு பகுதியினர் தமக்கிருக்கும் வடுக்களை மறந்தாலும் அரசையோ அல்லது புலிகள் மீள இணையலாம் என்கிற சந்தேகத்தையோ ஏற்றுக்கொள்ளவும்,விட்டுக்கொடுக்கவும் முடியாமல் நாட்டை விட்டு வெளியேறிவிடவே எத்தனிப்பார்கள்.

வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் இந்நிலைகளைத் தெரிவு செய்து கொண்டாலும், அனைத்தையும் இழந்த நிலையில் பரிதாபமாகத் தவிப்பவர்கள் தம்மை ஆட்டுவிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வளைந்து கொடுத்து, இனி வரும் வாழ்க்கையையாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்று விட்டுக்கொடுத்து வாழப் பழகிக்கொள்வார்கள்.

இந்த மக்களை வழி நடத்தும் பொறுப்பைத் தான் தமிழ் மக்கள் தம்மைப் பிரதிநிதிப்படுத்த வருபவர்களுக்கு வழங்கப் போகிறார்கள்.

எனவே, நாளைய எதிர்காலத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்த வருபவர்களுக்கு தம் சமூகம் சார்ந்த எதிர்கால வளர்ச்சித் திட்டமும், நாட்டின் ஐக்கியத்தில் தம் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் சுய மரியாதையுடன் தம் சமூகத்தை வழி நடத்தக்கூடிய தைரியமும் கலந்து இருக்க வேண்டும்.

இவ்வாறானவர்களை இனங்கண்டுதான் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது சுமைகளை சுமத்தும் நேரம் இதுவல்ல.

ஏனெனில் அவர்களின் தற்போதைய தேவை ஒரு நிரந்தரமான, நிம்மதியான குடியுரிமையாகும்.

அதைப்பெற்று, அவர்கள் வாழ்க்கை நிதானமாகப் பயணிக்கும் காலம் வரை அவர்களிடம் சமூகப்பளுவைச் சுமக்கும் சக்தி இருக்கப்போவதில்லை.

எனினும், அந்த ஒரு சாரார் சார்ந்த அரசியல் துஷ்பிரயோகம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது முழு சமுதாயத்தையும் பாதிக்கும்.

யுத்தத்தின் பின்னான மீள் கட்டமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சரியான தலைமைகள் அமைக்கப்படவில்லை என்றால், அதன் பின் தொடர்ந்தும் “தங்கி” வாழும் ஒரு இனமே வளரும்.

எனவே, இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்பிற்குத் தலைமை தாங்க முனையும் மற்றும் நாட்டின் சிறுபாண்மையினத்தைப் பிரதிநிதிப்படுத்த முனையும் அனைத்து தலைவர்களும் ஒரு தடவை பு.மு காணப்பட்ட அரசியல் சூழ்நிலையையும் பு.பின் இனி வரும் காலங்களில் காணப்பட வேண்டிய மாற்றங்களையும் கவனத்திற்கொண்டு உங்கள் “சார்பு” மற்றும் “சாரா” நிலைகள் தொடர்பான முடிவை எடுக்கவேண்டும்.

மக்களின் எதிர்காலத்தை கையிலெடுத்திருக்கும் அரசியல் சக்திகள் அதை ஒரு ஆயுதமாகப் பாவித்து மீண்டும் இந்த சமூகத்தை ஒரு சூனியத்தை நோக்கிச் செலுத்துவது என்பது வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை இந்த சமூகம் தலை நிமிரவே கூடாது எனும் வர்க்க நலன் சார்ந்த கொள்கையாகும்.

அதைத் தமிழர்களைக் கொண்டே தமிழர்கள் மீது திணிப்பதன் மூலமே உலக அரங்கில் தம்மை நியாயப்படுத்துவார்கள் ஆளும் பெரும்பாண்மையினர்.

எனவே, சமூக அக்கறையையும், சமுதாய வளர்ச்சியையும் நம்மிடமிருந்தே ஆரம்பிக்கும் தேவையே நமக்கு இன்று இருக்கிறதே தவிர, இன்னொரு சக்தியில் சார்ந்து நின்று ஆரம்பிப்பதல்ல.

ஆட்சிப் பங்கீடு, ஆளும் வர்க்கத்தில் கூட்டணி மற்றும் அதிகாரப் பங்கீடு என்று அரசியலின் எந்தப் பக்கத்தில் நீங்கள் நின்றாலும், மக்கள் நலன் என்று வரும் போது அதை சமூக வளர்ச்சி சார்ந்து நின்று சிந்தித்தாலே போதும், இன்று திக்குத் திணறியிருக்கும் சமூகம் விடுதலை பெறுவதற்கு ஆயத்தமாகும்.

இது நாட்டின் அனைத்துப் பகுதியனருக்கும் பொதுவானதாக அமையும்.

வர்க்க நலனுக்கு வெளியால், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட சிங்கள அரசியல் தலைவர்கள் தவற மாட்டார்கள், அப்படித் தவறினால் அந்த சமுதாயம் மீண்டும் சுதந்திரத்திற்கு முன்னரான நிலையை நோக்கி நகரும், இதை சிறுபாண்மையினர் பயன்படுத்தினால் இவர்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கும்.

ஆனாலும், சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை என்னதான் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் மக்கள் நலனில் ஓரளவாவது அக்கறை கொண்டவர்களாக, ஆகக்குறைந்ததும் தம் பிரதேச,தொகுதியின் அபிவிருத்திக்காகவது நிறையவே உழைக்கிறார்கள்.

சிறபாண்மையினரின் அரசியல் இந்த வரையறையோடு நின்று விடக்கூடியல்ல, இதற்கு மேலும் ஒரு படி முன்னேறி சமுதாயத்தினை ஒரு சூனிய நிலையிலிருந்து வெளியேற்றிக்கொண்டு வந்து அவர்களுக்கு உண்மையான,தரமான வாழ்க்கை நிலையை உருவாக்கிக்கொடுக்கும் தேவை உங்களுக்கிருக்கிறது.

அது உங்கள் தேவை இல்லை என்று நீங்கள் கருதினால் அல்லது அப்படியொரு தியாகத்துக்கு நீங்கள் தயாராக இல்லையென்றால் நீங்கள் அரசியலில் இறங்கவும் கூடாது.

அப்படியும் மீறி இவ்வாறானவர்கள் தான் அரசியலில் இருப்பார்கள் என்று கருதும் போது அதை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நிலையிலிருந்து ஓரளவாவது இவற்றைப் புரிந்துகொள்ளக் கூடிய மக்கள் தவறக்கூடாது.

அதையும் தாண்டிய நிலை இருக்குமென்றால் “விழிப்புணர்வின்” பால் உழைக்க ஊடகங்கள் தயங்கக்கூடாது.

ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பாக, வர்க்கசார்பு நிலையில் தம் வருமானத்தையே குறிக்கோளாக வைத்து செயற்பட ஆரம்பித்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் மீண்டும் அந்த சூனியத்தை நோக்கியே தள்ளப்படுவதை தடுக்க முடியாது.

இப்படியே போனால், நாளடைவில் மேற்கு நாடுகள் “எம்” அறிவைக் கொண்டும் தம் அபிவிருத்தியை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்க, அபிவிருத்தியடைந்து வரும் நாடாக ஒரு காலத்தில் அறியப்பட்ட நம் நாடும் மீண்டும் ஏழை நாடாக, “மூன்றாம் உலக” நாடாகவே தொடர்ந்தும் உலக அரங்கில் இருக்கும்.

அந்த நிலை உருவாகும் போது, முதலாளி வர்க்கம் சர்வ சாதாரணமாக உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சிக்கொள்ளும், நாடு வளமாக இருக்கும், ஆனால் மக்கள் ஏழைகளாக இருப்பார்கள்.

அரச இயந்திரம் தடுமாற்றமின்றிச் செயற்படும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அச்சமேயின்றி ஆடம்பரமாக வாழலாம், அரசியல் வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும் ஒலிவாங்கியின் முன் “வீசித் தள்ளலாம்”.

ஆனால், மக்கள் இப்போது இருப்பதையும் விட மென்மேலும் சூனியத்தை நோக்கிப் பயணிப்பர்.

நாட்டின் மீது அக்கறையில்லாத மக்கள் சமுதாயத்தை வலிந்து உருவாக்கி விட்டு அவர்களுக்காக நாடு காணப் புறப்படுவதிலும், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உழைப்பதாக அறிக்கை விடுவதிலும் எந்த அர்த்தமும் இருக்காது.

எனவே, காலத்தின் தேவையறிந்து அதிகாரத்தில் உள்ளவர்களும், வழி நடத்தத் துணிபவர்களும், எதிர்காலத்தைத் திட்டமிடுபவர்களும் “நியாயமான” சிந்தனைகளை உள்வாங்கித் திட்மிட்டு இன்ற காணப்படும் வெற்றிடத்தை அறிவால் வென்ற நிலையாக மாற்ற வேண்டும்.

தேசிய அரசியலுக்கு வலுச்சேர்க்கும் ஆனால் பிரதேசிய உரிமைகளை விட்டுக்கொடுக்காத நிலையான அரசியல் திட்டமிடலுக்காக அரசியல் மறறும் கட்சி பேதங்கள் மறந்த ஒரு ஒன்று கூடல் உங்கள் மத்தியில் உருவாக வேண்டும்.

அது உருவாகுமா?

 
 

குறிச்சொற்கள்: , , , , ,

One response to “சூனியத்தை நோக்கி..

  1. brown flore

    ஜூன்4, 2009 at 10:16 பிப

    During chandrica,s time the govt started teaching tamil in sinhales scool,s and vice versa now slowly english mediam is coming in schools in the north, even sinhalese are cursing Bandaranayake for destroying their future bring back english as acommon language as alink willbring peace and development in economy is very essential xixty years of independance what are the jobs crated by the state for their own people army for the men and housemaids for the women and whatever industries existed in Jaffna destroyed unless we start to create jobs we are doomed

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: