RSS

சம்பந்தர், காமெடி கீமடி பண்ணலையே?

02 ஜூன்

எத்தனையாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது? புலியின் நிர்ப்பந்தத்தால் உங்களையெல்லாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய எத்தனை லட்சம் மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள்?

இதையெல்லாம் விட்டு நன்றியுள்ள “அதுவாக” நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக காமெடியெல்லாமா பண்ணுவது?

புலி ஆதரவாளர்களிடம் முரண்பட்ட கருத்துக்களைக் கூறினாலும் அதை அவர்களை மடையர்களாக்கிக் கூறும் வித்தை தெரிந்ததனால் தான் இவர்கள் எல்லாம் புலியின் காவலர்களாகவும் உள்ளதை உள்ளபடி பேசுபவர்கள் புலி எதிர்ப்பாளர்களாகவும் அறியப்படுகிறார்கள்.

சம்பந்தர் பேசிய காமெடி வசனங்களை வேறு யாராவது ஒரு சாதாரண நபர் பேசியிருந்தால் அவருக்கு இன்றளவில் துரோகிப் பட்டங்கள் குவிந்திருக்கும்.

ஆனாலும், புலியின் சித்தார்ந்தத்திற்குள் ஒளிந்து குளிர்காயும் அடிமட்ட நிதி திரட்டும் பணியாளர் முதல் அதியுயர் மேதகுபீடங்கள் வரை அனைவருக்கும் இந்த வித்தை அத்துப்படி.

அந்த ஒற்றுமை ஒன்றே அவர்களைத் தொடர்ந்தும் ஒன்றிணைந்து நிற்க உதவுகிறது.

பாவம், உண்மையைப் பேசத் தெரிந்தவர்கள், துணிபவர்களால் இதைச் சாதிக்க முடிவதில்லை.

இதற்கு மிக நவீன உதாரணமாக சம்பந்தரையும், மனோ கணேசனையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சம்பந்தரை நாடாளுமன்றத்திற்கு புலிகள் அனுப்பி வைத்தனர், எனவே அவரைப் பொறுத்தவரையில் மக்களுக்கு நன்றியுடன் இருப்பதை விட புலிகளின் “தமிழர்கள்” அதாவது, புலிகளின் அகராதியில் “தமிழர்கள்” என்றால் அது புலிகள் மாத்திரமே எனவே புலித்தலைமைக்கும் அதைக் கொண்டு நடத்தும் உப தலைவர்கள், கட்டுப்பாளர்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டால் அத்தோடு அவர்களது தமிழ் மக்களுக்கான வரலாற்றுக் கடமை நிறைவு பெறுகிறது.

வி.ஐ.பி கடவுச்சீட்டு இருக்கிறது எனவே தேவையான போது ஏதாவது ஒரு நாட்டிற்கு விசா எடுத்துவிட்டு “தம்பி நாங்கள் இங்கே இருந்தால் மக்களுக்காகவும் எதையாவது பேச வேண்டி வரும் எதுக்கும் வெளியால் இருக்கிறோம்” என்று மக்கள் வாக்களிக்காமலே தம்மை நாடாளுமன்றுக்கு அனுப்பி வைத்த எசமானர்களுக்கு நன்றியுடன் நடந்து கொண்டால் போதும்.

மனோ கணேசனை இவர்களோடு ஒப்பீட்டுப்பார்த்தால் (மாத்திரம்) அவர் இவர்களை விட அதிகமாக கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதியில் போலீஸ் கைதுகளில் அகப்படும் தமிழருக்காக பல சந்தர்ப்பங்களில் நேரடித் தலையீடுகளைச் செய்திருக்கிறார், நாடாளுமன்றத்தில் கூட கதைத்திருக்கிறார்.

அதே நேரம் நாளையொரு நாள் வன்னிப் பக்கம் போய் வாக்குக் கேட்கும் நிலை வந்தால் அந்த மக்களும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொங்கு தமிழிழும் முழங்கியிருக்கிறார்.

எப்படித்தான் பார்த்தாலும் அத்வானியின் கால்களில் தொங்கிக்கொண்டு அதை படம் எடுத்து நாலு பத்திரிகைகளுக்கு நகல் கொடுத்துவிட்டு, திருச்சி,மதுரை,சென்னை என்று புலியின் பிரதிநிதியாக வயிறு வளர்க்கும் சிவாஜிலிங்கம் மற்றும் சம்பந்தர் கூட்டணிகளை விட மனோ கணேசன் ஓரளவாவது தமிழ் மக்களுக்காக “குரலாவது” கொடுத்திருக்கிறார்.

ஆனால், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிந்து போன வரலாறு.

காரணம், “ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்ட உண்மையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று அவர் போட்ட அந்தப் போடு புலி ஆதரவாளர்களை நிலை குலையச் செய்துவிட்டது.

கே.பி, தயா மோகன் பட்டியலில் இப்போது மனோ கணேசனும் “நன்றியுடன்” இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவசரக்குடுக்கை மனோ கணேசனுக்கு கொட்டித் தீர்க்கத் தெரிந்ததே தவிர சம்பந்தர் போன்ற பழந்தின்று கொட்டை போட்ட ஆசாமிகளின் அரசியல் நுணுக்கம் தெரிந்திருக்க வில்லை.

ஆனால், சம்பந்தருக்கில்லாத அரசியல் தீர்க்க தரிசனம் மனோ கணேசனுக்கு வந்திருக்கலாம் என்று கூட இதை ஏற்றுக்கொள்ளலாம்.

இருந்தாலும் சம்பந்தர் அன் கோ அதிஷ்டக்காரர்கள்.

“சரணடைந்த புலிகளுக்கு மறு வாழ்வு கொடுங்கள்” என்று அதுவும் கலைஞரின் காலடியில் போய்க் கூறியும் கூட புலி ஆதரவாளர்கள் அவரை இன்னும் எதிர்க்க ஆரம்பிக்கவில்லை.

அப்படியானால் புலி ஆதரவாளர்களும் புலிகள் சரணடைந்தார்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களா? அதெப்படி ஏற்றுக்கொள்வது? புலிகள் என்றால் சயனைட் அடித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமே தவிர எதிரியின் கையில் அகப்படக்கூடாதே.

அப்படியானால் பிடிபட்டவர்கள் யாரும் புலியில்லை என்றாகிவிடுமே. எந்தப் புலிகளுக்காக சம்பந்தர் காமெடி பண்ணுகிறார்?

இது ஒவ்வொரு புலி ஆதரவாளரும் கேட்க வேண்டிய கேள்வி.

புலிகளின் மிக முக்கிய பொறுப்பில் இருந்து மக்களோடு மக்களாக தலைவரை விட்டுவிட்டு ஓடி வந்த பாலகுமார் உட்பட்ட பல வாய்ச்சொல் வீரர்கள் இப்போது அரசின் பிடியில் இருக்கிறார்கள்.

இவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை இப்போதாவது புரிந்து கொண்ட யார் யாரோ இவர்கள் தம்மோடு கலந்திருப்பதைப் போட்டுக் கொடுத்தும் விட்டார்கள்.

சம்பந்தரோ பல படி மேலே சென்று, மிகத் தெளிவாக “சரணடைந்த” புலிகளுக்கு மறு வாழ்வு கோருகிறார்.

இதை வைத்துப் பார்க்கும் போது ஒரு தொகை புலிகள் தப்பி வந்ததும் உண்மை, அவர்கள் சரணடைந்ததும் உண்மையாகிறது.

ஆகக்குறைந்த பட்சமாக தலைவரின் திட்டமொன்றின் படிதான் இவர்கள் மக்களோடு “அனுப்பப்பட்டார்கள்” என்று புலி ஆதரவாளர்கள் தம்மைத்தாமே தேற்றிக்கொண்டாலும், “அனுப்பப்பட்டவர்கள்” சரணடைவது என்பது புலிச் சித்தார்ந்தத்திற்கு விரோதமான செயலாகும்.

அதை மேல் மட்ட புலிகளே செய்த போது “இனியும் இதில் என்ன பிரயோசனம்” என்று தம் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள இந்தப் புலிகள் முன் வந்ததில் எந்தத் தப்பும் இல்லை.

ஆனால் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டும், இதற்கு சம்பந்தரும் பதில் சொல்ல வேண்டும்.

சம்பந்தரும் புலிகளின் பிரதிநிதியாகத்தான் இது நாள் வரை நாடாளுமன்றத்திலும் மக்கள் முன்னாலும் இருக்கிறார்.அந்த வகையில் அவர்களது சித்தர்ந்தத்தை இவரும் ஏற்றுக் கொண்டதாகவே கருத வேண்டும்.

அப்படியானால், இறுதிக்கட்டத்தில் நீங்கள் “சரணடையும்” வரை கழுத்தில் சயனைட்டையும், நெஞ்சில் குண்டையும் கட்டி இது நாள் வரையில் “தமிழீழம்” எனும் பெயரில் எத்தனை உயிர்களைப் பலி எடுத்தீர்கள்? அப்போதெல்லாம் அவர்களைப் பலி கொடுப்பதை விட அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?

மாற்றான் பிள்ளைகளையெல்லாம் இழுத்துச் சென்று வெறும் மூன்றே மூன்று நாள் பயிற்சியின் பின்னர் அதுவும் முன்னரங்கு நிலைகளில் நிற்க வைத்துப் பலி கொடுத்தீர்களே அப்போதெல்லாம் ஒவ்வொரு பெற்ற மனமும் என்ன பாடு பட்டது? எந்த வழிகளில் எல்லாம் உங்கள் கால்களில் விழுந்து தம் பிள்ளைகளை விட்டுவிடும்படிக் கேட்டுக் கதறியது? அவர்களையும் சாகடிக்காமல் சரணடையவாவது வைத்திருக்கலாமே?

தமிழர் பிரதிநிதிகள் என்று 22 பேரை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு இருந்த கருமத்தைத்தான் விட்டு விட்டாலும், ஒரு வயது முதிர்ந்த அனுபவம் மிக்க தகப்பனாக, குடும்பத் தலைவனாக, மக்கள் பிரதிநிதியாக!? சரி அதுவும் வேண்டாம் சாதாரண மக்களில் ஒருவனாகவாவது, இன்று கலைஞரிடம் போய் சரணடைந்த புலிகளுக்கு மறுவாழ்வு கேட்கும் நீங்கள் அன்று பிரபாகரனிடம் “தம்பி எதிர்கால சமுதாயத்தை அழிக்க வேண்டாம்” என்று காலில் விழுந்தாவதல்லவா கேட்டிருக்க வேண்டும்?

எப்படிக் கேட்டிருப்பீர்கள்? சமுதாயத்தின் பெயரில் குளிர் காய மட்டும் தானே உங்களுக்கெல்லாம் தெரியும், சமூகத்திற்காகக் குரல் கொடுப்பதற்கான தெளிவோ சித்தார்ந்தமோ உங்கள் கூட்டணிகளில் இருப்பதும் இல்லை, ஆயுதப் போராட்டத்திற்கு அடங்கி வாழும் அடிமைத்தனத்தை விட ஒரு சமூக விழிப்புணர்வு உங்கள் நெஞ்சங்களில் அடியோடு இல்லை.

ஆனால், ஆகக்குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது நீங்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் எனும் பெயரில் ஊர் சுற்றித் திரியலாம்.

சுதந்திரமாக மக்கள் நலனைப் பற்றி பேச முடியாத கையேறு நிலையில் புலியின் துப்பாக்கிக்குப் பயந்து “நியாயங்களையே” மறந்த உங்கள் அரசியலும், தம் சக போராளிகள் வேட்டையாடப்பட்டாலும் தாம் தப்பினால் போதும் என்று புலியின் கோட்டைக்குள் ஓடிச்சென்று சரணாகதியடைந்த சிறிகாந்தா குழுவுவும் மக்களுக்கு எதை எடுத்துச் சொன்னீர்களோ இல்லையோ பிரபாகரனுக்கு உங்கள் கலாச்சாரத்தை நன்றாகக் கற்றுக்கொடுத்து விட்டீர்கள்.

அவர் உங்களிடம் இருந்து பழகினாரா இல்லை நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து பழிகினீர்களா என்பது முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? போன்ற “லாஜிக்” உள்ள விடயங்கள், அத்தோடு அதை “அது” உள்ளவர்களிடம் மட்டும் தான் பேசவும் முடியும்.

எப்படியோ தன்னை நம்பி, அடிபணிந்து என்று பல தரப்பட்ட வகையறாக்களில் புலியின் அடக்கு முறைக்குள் மூன்று தசாப்தங்களாக முடங்கிக்கிடந்த மக்களின் நெஞ்சில் எல்லாம் எட்டி உதைத்து விட்டு, கூண்டோடு சேர்ந்து சரணடைந்தார் உங்கள் புலித் தலைவர்.

முன்னாள் ஆயுத வீரனாக இருந்த அவர் உங்கள் போன்ற கூட்டணிகளோடு சேர்ந்ததால் தான் இப்படி திருட்டுப் போராட்டம் நடத்தி முழுத் தமிழினத்தையுமே நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டார்.

கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருந்த புலி ஆதரவாளர்களின் புத்திக்கும் இப்போது நீங்கள் ” Bata ” வால் அடித்த கதையாக “சரணடைந்த புலிகளுக்கு மறு வாழ்வு” கேட்கிறீர்கள்.

சம்பந்தர், Are you Ok?  காமெடி கீமடி பண்ணலையே?

தலைவரும் சாகவில்லை, தளபதிகளும் சாகவில்லை, விடுதலைப் போராட்டம் எங்காவது மியான்மார் தீவிலிருந்தாவது ஆரம்பிக்கும் என்று அவர்கள் மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் அதாவது தமிழர்களின் முன்னாள் “ஏக பிரதிநிதிகளின்” பிரதி நிதி, அதுவும் புலிகளின் இன்நாள் “முதன்மை எதிரி” கலைஞர் கருணாநிதி அவர்களின் காலடியில் வைத்து இப்படியெல்லாம் காமெடி பண்ணலாமா?

என்னாவது புலி ஆதரவாளர்களின் “சுய புத்தி” ?

இதற்காகத்தானே பழைய துரோகிகள் பட்டியலைப் புதுப்பித்து அண்மையில் ஆளாளப்பட்ட கே.பியையும், நேற்றோடு மனோ கணேசனையும் கூட கெளரவித்திருக்கிறார்கள் அதற்குள் நீங்கள் போய் இப்படியெல்லாம் அறிக்கை விட்டிருந்தாலும் பரவாயில்லை “வேண்டுகோள்” விடுவதை புலி ஆதரவாளர்களால் சகித்துக்கொள்ள முடியுமா?

புலியையும் புலிச் சிந்தார்த்தையும் எதிர்ப்பவர்கள் எதைக்கூறினாலும் அதை நம்பக்கூடாது என்பதோடு நிறுத்திக்கொண்டு தாம் அறிவாளிகள் என்று நினைப்பதோடு தம்மை வழி நடத்தும் அறிவாளிகள் அவர்கள் என்றல்லவா இந்த அப்பாவி ஆதரவாளர்கள் காலங்கடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் “அறிவை” இப்படி கேள்விக்குறியாக்குவதும் “கேலிக்குள்ளாக்குவதும்” உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் பற்றுக்கு முரணானதில்லையா?அதை நாங்கள் தான் சுட்டிக்காட்டுவோம் ஆனால் அவர்கள் இதையெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைத் தானே நீங்கள் எல்லாம் பிரயோகிக்கிறீர்கள்.

அது “உண்மையாக” இருந்தாலும் கூட , சொன்னது யார்? தலைவரே தேர்ந்தெடுத்து இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த பிரதிநிதிகள் அல்லவா என்று விட்டுவிடுவார்கள் என்கிறீர்களா? இல்லை நீங்களும் மிக விரைவில் “பட்டம்” கொடுத்து கெளரவிக்கப்படுவீர்கள், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு குஸ்திக் கரணம் அடித்து இதுதான் வாய்ப்பு என்று தேசிய அரசியலில் கலந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறீர்களா?

அப்படி நீங்கள் எதைச் செய்தாலும் உங்களுக்கெல்லாம் வாக்களிக்க ஒரு தமிழன், அதாவது உங்கள் குடும்பங்கள் தவிர்ந்த வேறு ஒரு தமிழன் போனாலும் நீங்கள் எல்லாம் வரலாற்றை வென்ற அரசியல் வாதிகள் தான் ஐயா.

எப்போது நீங்களும் அவர்கள் சரணடைந்ததை ஏற்றுக்கொண்டீர்களோ அப்போதே அத்துடன் சேர்த்து மேலும் சில விடயங்களை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

  1. புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் அனைவருமே உயிர் ஆசை மிக்கவர்கள்.
  2. அவர்கள் பலிக்கடாவாக்கியது எல்லாம் அப்பாவி மக்களை, அடுத்தவன் பிள்ளைகளை மட்டுமே.
  3. சயனைட் வித்தை, கரும்புலி வித்தையெல்லாம் தம் ஆதரவாளர்களை உசுப்பேற்றி “உணர்ச்சி மேலோங்களில்” வைத்துப் பரிபாலனம் செய்து கொள்ளவேயன்றி வேறு எதற்கும் இல்லை.
  4. புலம் பெயர் தமிழர்கள் பணங்கறக்கும் “அதுகளே” அன்றி வேறு எதுவாகவும் புலிக்கண்களில் இருக்க வில்லை.
  5. போராட்டம் எனும் பெயரில் அவர்களும், அவர்களைத் தாங்கி நீங்களும் சேர்ந்து செய்ததெல்லாம் ஒரு வெற்றுச் சித்தார்ந்த மாயையே அன்றி வேறு எதுவும் இல்லை.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ஐயா, என்னதான் அடுக்கினாலும் “புத்தியில் ஏற்க வேண்டிய” அவர்கள் திருந்தினாலன்றி யார் சொல்லி இதில் என்ன பயன் இருக்கப் போகிறது.

ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளை அநியாயமாக இழந்திருக்கிறோம், உங்கள் “சுய புத்திக்குக் கூடவா” இனி வரும் சமுதாயத்தையாவது வாழ விட வேண்டும் என்று இன்னும் தெளிவு பிறக்கவில்லை?

பிரபாகரன் கொல்லப்பட்ட நாள் முதல் காணாமல் போயிருந்த நீங்கள், அதுவரையிலும், அதற்குப் பின்னும், இன்னும் வாடிக்கொண்டிருக்கும் அந்த மக்கள் தொடர்பில் எதையாவது செய்ய வேண்டும் என்று இன்னுமா சிந்திக்கவில்லை?

நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இன்னொரு கட்சியை முறியடிக்கவும், தம் பிரேரணைகள் எடுபடுவதற்காகவும் எப்படி எப்படியெல்லாமோ கூட்டணிகள் அமைக்கிறார்கள், தகர்த்தெறிகிறார்கள், மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமானக் கூட்டணியொன்றை நாடாளு மன்றில் உருவாக்க இதுவரைதான் நீங்கள் முயற்சிக்கவில்லை? இனிமேலுமா முயற்சிக்கப் போவதில்லை?

சிங்களக் கட்சிகளிலும் அரசின் யுத்த நகர்வை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள், இன்று அல்லல் படும் மக்களுக்காக உண்மையான மனிதாபிமானத்தோடு குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், பல தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன, தமிழினத்தில் இருந்து பிரிக்கப்பட்டாலும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், ஏற்கனவே உங்கள் ஒன்றுக்கும் உதவாத கூட்டணியில் 22 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், இத்தனையும் இருந்தும் ஒரு பலமான குரலை தெளிவான ஒரு அரசியல் கோரிக்கையை அந்த மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமானத் தேவைகளுக்காக உங்களால் இதுவரைக்கும் வைக்க முடியாமல் போனதேன்?

இதற்கும் “அந்த ” தலைமையிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லையோ?

செத்துப்போன தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைக் கூடக் கொடுக்காத ஒரு கேவலங்கெட்ட அரசியலை உங்கள் கூட்டணியும் சேர்ந்துதானே இயக்கிக்கொண்டிருக்கிறது.

இந்தக் குழப்பம் இல்லாமல் நேரடியாக “உண்மை” வெளி வந்திருந்தால் சிவாஜிலிங்கம் இல்லாமலே “தமிழகத்தில்” ஒரு உணர்வலை உருவாகியிருக்குமே? அந்த உணர்வலையின் பயனால் போனவர்கள் தான் போய்ச் சேர்ந்துவி்ட்டாலும் இருப்பவர்களுக்காவது எத்தனையோ வகையில் அந்த “எழுச்சி” நன்மையாக அமைந்திருக்குமே? ஏனய்யா இத்தனை முதிர்ந்த அரசியல் தலைவர்கள் உங்களுக்கெல்லாம் இன்னும் கூட மக்கள் நலன் பற்றிய ஒரு ஒருமைப்பாடோ, நோக்கமோ இல்லை?

அரசியல் கொள்கையே இல்லாமல் நீங்கள் அரசியல் கட்சி நடத்துவதும், சந்தர்ப்பவாதிகளை வைத்துக் கூட்டணி நடத்துவதும் கடந்த கால வரலாற்றுடன் தான் விட்டுத் தொலையட்டும் என்று விட்டு இனியாவது மக்கள் நலன் என்றால் என்ன என்று சிந்திப்பீர்களா?

அதுதான் அடுத்த தேர்தல் வரையிலாவது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உங்கள் கூத்தணியின் கையில் இருக்கிறதே அதைப் பாவித்தாவது மக்கள் முன்னேற்றத்திற்கு, ஒரு குரல் தானும் கொடுப்பீர்களா?

வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் பாய்ந்து பாய்ந்து திரிந்த “நவீன” நடிகர் திலகம் சிவாஜிலிங்கம் இப்போது எங்கே போய்விட்டார்? சவுத் லண்டனில் தன் உடன் பிறப்புக்களுடன் “குடியும்” கும்மாளமுமாக இருக்கிறாரா ? இல்லை பிரபாகரனைப்பற்றி பாரதி ராசா படம் எடுக்க இவர் கதை வசனம் எழுதி யாராவது நடிகையோடு குத்தாட்டம் போடுகிறாரா?

கிழக்கு மாகாணத்தில் இருந்த மக்கள் தான் அன்று உங்கள் கண்களுக்கு மக்களாகவே தென்படவில்லையே? வடக்கில் அதுவும் இராணுவம் பூனேரியைத் தாண்டியதும் தான் உங்களுக்குத் “தமிழ்” மக்கள் என்ற வார்த்தையே ஞாபகம் வந்தது, அதற்காக இன்னொரு பிரபாகரனைக் கொண்டு வந்து இன்னொரு யுத்தம் நடத்தி, அதை கிளிநொச்சி வரை நகர்த்தித்தானா உங்களையெல்லாம் “தமிழ்” மக்கள் தொடர்பில் குறைந்தபட்ச அளவிலாவது பேச வைக்க முடியும்?

பின்வாங்கல் பின் வாங்கல் என்று அவர்கள் அறிவுறுத்திக்கொண்டிருந்தால் நீங்களும் கிழக்கில் மடிந்து வீழ்ந்த மக்களைப் பற்றியோ இல்லை இழக்கப்பட்ட உடைமைகள் பற்றியோ வாய் திறக்கத் துணியவில்லை.

புலி இருக்கும், அது இருக்கும் வரை நம் கூட்டணியும் இருக்கும், அரசியல் இருக்கும் வரை நம் வி.ஐ.பி பாஸ்போர்ட் இருக்கும், நம் உல்லாசமும் இருக்கும் என்ற உங்கள் கடந்த கால கணக்கெல்லாம் இப்போது பொய்யாகிவிட்ட நிலையில், இன்னும் ஏன் உங்களால் மக்கள் நலன் சார்ந்த ஒரு நடவடிக்கை தானும் எடுக்க முடியவில்லை?

குறைந்தபட்சம் ஒரு குரல் கூடக் கொடுக்கவில்லை, மாறாக சரணடைந்த புலி உறுப்பினர்களின் நலன் பற்றி அதுவும் இந்தியா வரை சென்று குரல் கொடுக்கிறீர்கள், நீங்கள் எல்லாம் தமிழினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் “தலைவர்கள் ” !?

இதுவரை நீங்கள் என்ன செய்திருக்காவிட்டாலும், காமெடியாகவாவது இப்போது புலி ஆதரவாளர்களின் அறிவில் வைத்தீர்களே ஒரு சூடு அது ஒரு சாதனை தான்.

உங்களுக்கும் அரசியல் தெரியும் என்பதை நிரூபிக்க முனைந்திருக்கிறீர்கள், “தாவல்கள்” இல்லாமல் அரசியலா எனும் சித்தார்ந்தத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறீர்கள், ஆனாலும் ஆகக்குறைந்தது அடுத்த தேர்தல் வரை “இந்த அப்பாவி மக்களுக்காகவும்” ஒரு சிறு குரலாவது கொடுக்க வேண்டும்.

புலி சொல்லியாவது உங்களை எல்லாம் அவர்கள் நம்பினார்களே அந்த நன்றிக்கடனுக்காகவாவது அவர்கள் நலனில் கொஞ்சம் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும்.

தமிழினத்தின் தலைவிதி இப்போதைக்கு உங்கள் தலைமையில் ஒரு கூத்தணி நாடாளுமன்றத்தில் இருக்கிறது, எனவே அந்தத் தலைவிதி மாறும் வரை இந்தத் தாவலுக்கான அத்திவாரங்களை மட்டும் செய்யாமல் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும்.

ஒருவேளை வயதாகிவிட்டது என்று நீங்கள் ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்தாலும் பரவாயில்லை, இப்படி காமெடி கீமடி பண்ணி,இனி மேலும் புலி ஆதரவாளர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச “அறிவையும்” சோதிக்க மாட்டீர்கள் தானே?

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: