ஜெகத் காஸ்பார் காசு பார்க்கத் துணிந்து விட்டார், துரதிஷ்டவசமாக அவரும் கையிலெடுத்திருப்பது அதே திக்குத் திணறிப்போன “தமிழீழத்தையே”.
ஆனாலும் ஜெகத் காஸ்பார் இப்போதாவது காசு பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது, இதை அவரே கூட மறுக்க முடியாது.
வெரித்தாஸ் வானொலி கஸ்பார் என்றால் தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் அன்று புகழ்பெற்ற ஒரு மனிதராக மாறியிருந்தார்.
பாதர் கஸ்பார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அவரது குரலுக்கு அன்று புலிகளால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் உண்மையை அவரும் அறிவார் புலிகளும் அறிவார்கள்.
அவர் தமிழீழத்திற்கு ஆதரவாகவும்,புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவர் புலிகள் மத்தியில் ஒரு வி.ஐ.பியாக மாறினார் என்று சொன்னால் அது கஸ்பார் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளக்கூடிய சமாதானமாக மட்டுமே இருந்தது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை கஸ்பாரின் குரலை விட அவர் பேசிய தமிழிற்கே முக்கியம் இருந்தது.அது அவர் தமிழ் விற்பன்னர் என்பதற்காகவல்ல, அவர் பேசிய “இந்தியத் தமிழி”ற் காகவாகும்.
புலிகள் ஆதராவாளர்கள் மத்தியில் தென் இந்தியாவில் தமக்குக் குரல் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள், அதிலும் அறிவும்,செறிவும் நிறைந்த பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் ஊட்டி வளர்ப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட சில “குறைந்த செலவில்” நிறைந்த பயனை அடையக்கூடிய விலை பொருட்கள் தான் இவர்கள்.
ஒருவேளை கஸ்பாரைப் பொறுத்தவரையிலோ அல்லது அவரோடு இதே கொள்கையில் ஒன்றிணைந்து அரசியலில் மிளிர்ந்து பின்னர் தேய்ந்த சுபவீர பாண்டியன், நெடுமாறன், வை.கோ போன்றவர்களைப் பொறுத்தவரையிலோ ஓரளவு இன உணர்வு ஒட்டிக்கொண்டிருந்திருந்தாலும் கூட புலிகளைப் பொறுத்தவரையில் இவர்கள் “குறைந்த செலவில்” தம் ஆதரவாளர்களிடைய தமக்கு இலாபமீட்டு்த் தரக்கூடிய “சந்தைப் பொருட்கள்” மாத்திரமே.
இதை ஒரு கட்டத்தில் சரியாகப் புரிந்து கொண்ட கஸ்பாரும் தன் புலிகளின் தொடர்பை வேறு வகையில் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக இனியாவது நல்ல பயனைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
இளையராசாவுடன் திருவாசகக் கூட்டணி அமைப்பதற்கு சில காலம் முன்னராகவே கஸ்பார் காசு பார்க்கத் துணிந்திருந்தார், ஆனாலும் அவருக்கு சரியான சந்தர்ப்பம் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரிலேயே, அதுவும் புலிகளின் அழிவு “உறுதி” எனும் நிலையை அடையும் போதே ஆரம்பித்தது.
விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று கிராபிக் வித்தை காட்டும் பாரதி ராசா போன்றவர்களைப் போலன்றி, கஸ்பார் உண்மையிலேயே பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார், புலிகளின் மிக ஆழமான பகுதிகளுக்குள்ளும் சென்று வந்திருக்கிறார்.
போர் உக்கிரம் அடைந்திருக்கும் இந்நிலையில் கஸ்பார் ஒன்ற ஒருவரை வைத்து கட்டுரைகளை எழுதிக் காசு பார்க்க பத்திரிகைகளும் துணிந்தது, இதுதான் சந்தர்ப்பம் என்று கஸ்பாரும் துணிந்தார்.
அவரை இதில் குறை கூற முடியாது, இது அவருக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலன்றி இனி ஒரு காலத்தில் மீண்டும் அவரால் இந்தப் பேச்சை வெளியே எடுக்க முடியாது.
இத்தனை காலம் சத்தமே இல்லாமல் ஒதுங்கியிருந்த கஸ்பார் இப்போதாவது இதைப் பேச ஆரம்பிக்கவில்லை என்றால் “அன்புத் தம்பி பிரபாகரன்” என்று ஒரு வரலாற்றுப் புத்தகம் எதிர்காலத்தில் எழுதியும் காசு பார்க்க முடியாது.
எனவே அவர் இப்போதாவது அதை ஆரம்பிப்பதில் தப்பே இல்லை.
இப்படி தேர்ந்தெடுத்த ஒரு சில தமிழகப் பேச்சாளர்களையும் புலிகள் எப்போதுமே தரம் பிரித்தே “கவனித்து” வந்தார்கள்.
வை.கோ.விற்கிருந்த கவனிப்பை கஸ்பாருக்கு ஒரு நாளும் கொடுத்ததில்லை, கஸ்பாருக்கு இருந்த கவனிப்பை சுபவீர பாண்டியனுக்கு மிஞ்சியதாக வைத்திருக்கவும் இல்லை, இவர்கள் இருவருக்கும் இடையில் இன்னொரு இந்தியத் தமிழ்க் குரலாக ஜப்பார் என்பவரை குறைத்து மதிப்பிடவும் இல்லை.
ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவருடனும் தேனும் பாலுமாக வெளிக்காட்டிக்கொண்டு மிகக் கச்சிதமாக வை.கோ.வுக்கு 4 நட்சத்திர ஹோட்டலும் கஸ்பாருக்கு ஓரளவு பிரபலமான புலி ஆதரவாளர் வீடொன்றில் தங்குமிடமும், சுப வீர பாண்டியனுக்கு இதைவிடக் கொஞ்சம் குறைந்த நிலை பிரபலமான ஒரு புலி ஆதரவாளர் வீட்டில் சாப்பாடும் கட்டிலுமாகக் கொடுத்து இவர்களை ஒரே நேரத்தில் கன கச்சிதமாகக் கையாண்டார்கள்.
புலிகளுக்கு செலவு வைக்க வேண்டாம் என்று தாமே விரும்பித்தான் இப்படி ஆதரவாளர்கள் வீடுகளில் தங்கிக்கொண்டோம் என்று இவர்கள் இப்போது கூறுவார்களேயானால், அது வை.கோ வுக்கு விழும் சாட்டையடியாகும்.
ஏனெனில், கஸ்பார்,வை.கோ,சுப வீ என்று மூன்று பேரை முன்னால் நிறுத்தி யாருக்கு உங்கள் வீட்டில் தங்க இடங்கொடுப்பீர்கள் என்று யாரும் கேட்டால் வை.கோவுக்கே முதலிடம் கிடைத்திருக்கும், ஆனால் அப்படிப்பட்ட வை.கோவுக்கு 4 நட்சத்திர ஹோட்டலை ஒதுக்கித்தள்ளி விட்டு கஸ்பாரைப் போல ஒரு வீட்டில் தங்குவதற்கு மனம் வரவில்லையே எனும் கோணத்தில் சிந்திக்கும் போது, தம் குரலுக்குக் கிடைக்கும் பரிசாக,புலியே தரும் வெகுமானமாக இதை அவர் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று ஒரு விளக்கமும் வந்து விடும்.
விடுதலை உணர்வோடு இந்த மக்களை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக “சினிமா நட்சத்திரங்களின்” கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் கூட அதை “புலிகள் அமைப்பு” நடத்த வேண்டும் என்பதுதான் புலியின் கடந்த கால வரலாறு இருந்தது.
தனி நபர்களோ அல்லது வேறு நிறுவனங்களோ இப்படி எதையாவது செய்யச் சென்றால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை கடந்த கால வரலாறு ஏற்கனவே பதிந்துவிட்டது, எனவே அதை யாரும் மாற்ற முடியாது.
ஆகக்குறைந்தது புலிப்பினாமி ஊடகங்களில் விளம்பரமாவது செய்ய வேண்டும் என்ற மிகக்குறைந்த தண்டனை வேண்டுகோள் முன்வைக்கப்பட்டு பல மடங்கு அதிக கட்டணம் பெறப்பட்டு அவர்கள் உறிஞ்சப்படுவதுதான் புலிகள் அவர்களுக்கு வழங்கிய மிகக்குறைந்த தண்டனை.
அதற்கடுத்த கட்டமாக என்னவெல்லாம் செய்து இப்படி நட்சத்திர கலை விழாக்கள் நடத்தச்சென்றவர்களை நடு ரோட்டுக்குக் கொண்டு வந்தார்கள் என்பது அவர்களின் உணர்வு மயமாக்கலின் வெளிப்பாடு.
தமிழ் மக்கள் ஒரு தொலைக்காட்சி நாடகத் தொடரை அதாவது சீரியல்களை பார்ப்பது என்றால் கூட அது புலிகளின் தொலைக்காட்சி ஊடாகப் பார்த்தால் “தேசியம்” அவர்கள் தவிர்ந்த வேறு ஊடகங்கள் ஊடாகப் பார்த்தால் அது “தேசிய விரோதம்” என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது.
சீரியல் பார்த்து துரோகியாகிவிடுவோம் எனும் பயத்திற்காகவே புலிகளின் டி.டி.என் தொலைக்காட்சிக்கு சந்தா அட்டையை வாங்கி மூலையில் வைத்திந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது, அதற்குப் பரிசு என்று ஒன்றை வைத்திருப்பது பின்னர் தம் ஆதரவாளர் ஒருவர் மூலம் அந்தப் பரிசுப் பணத்தை புலியின் தமிழர் புணர்வாழ்வு அமைப்புக்கு “நன்கொடையாக”க் கொடுக்கிறேன் என்று சொல்ல வைப்பதன் மூலம், பணமே இல்லாத பணப் பரிசை கன கச்சிதமாக தொலைக்காட்சிகள், வானொலிகளில் விற்பனை செய்து விட்டு, பணம் தருகிறேன் என்று தன் வியாபார நிறுவன விளம்பரத்தையும் மனதில் வைத்து “அனுசரணை” செய்யப்போனவரை , பார்வையாளர்களே தமிழர் புணர்வாழ்வுக் கழகத்திற்கு உங்கள் பரிசை தந்துவிட்டார்கள், அதோடு சேர்த்து “உங்கள் பங்களிப்புக்கான தொகையையும்” இணைத்து காசோலை கூட வேண்டாம் காசைத் தாருங்கள் என்று கறந்து விடுவார்கள் புலிகள்.
இப்படி சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவிலும் உணர்வு மயமாக்கலை மேம்படுத்தி வைத்துக்கொள்ள கஸ்பார் போன்றவர்கள் புலி ஆதரவாளர்கள் மத்தியில் நன்கு பயன்படுத்தப்பட்டார்கள்.
ஒரு பாதிரியாராகவும் அறியப்பட்டுள்ளதனால் இவர்களது அறிவிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் “தமிழீழ” மாயையை சாதாரண ஆதரவாளர்களிடையே விற்பனை செய்வது இலகுவாக இருந்தது.
“தமிழீழம்” என்கிற தனி நாடு தீர்வாக இல்லாவிட்டாலும், தம் உரிமையை வென்றெடுக்கும் தேவை உணர்ந்த மக்களும் கூட அரை குறை மனதுடனாவது இதில் பங்கெடுத்துக்கொண்டார்கள், இப்படியான மனங்களை அறுவடை செய்ய கஸ்பார் போன்ற தமிழகத் தமிழ் பேசும் குரல்கள் பயனுள்ளதாகவும் இருந்தது.
அதிலும் கஸ்பார் ஒரு அருட்தந்தையாகவும் அறியப்பட்டதனால் சில மக்களைப் பொறுத்தவரை அவர்கள் போன்ற மனிதர்கள் புலிகளின் கொள்கையை ஏற்றுக்கொள்வது நல்ல விடயமாகவே தென்படும், எனவே அதைக் கொண்டு தம்மாலான வரை இலாபமீட்டிக்கொள்வது புலிகளின் செயற்பாடாகவும் இருந்தது.
காஸ்பாரின் நிலையோ போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அவரது செல்வாக்கும், தேவையும் புலிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தது.
சில சந்தர்ப்பங்களில், சுபவீ,நெடுமாறன்,வை.கோ வகையறாக்களுடன் இவர் என்னதான் கை கோர்த்துப் பார்த்தாலும், திடீரென சீறிப்பாயக்கூடிய தமிழக அரசியலில் வை.கோ, ராமாதாசு, திருமாவளவளனையெல்லாம் மிஞ்சி எதையும் தன்னால் சாதிக்க முடியாது என்பதை நன்குணர்ந்தபடியால் மாற்றுவழிகளை சிந்திக்க ஆரம்பித்தார், ஒரு கட்டத்தில் மிகவும் ஒதுக்கப்பட்டவராகவே ஆனார் என்று கூட கூறலாம்.
இளையராசாவுடன் “திருவாசக” சிம்பொனி திட்டத்தில் தனக்கிருக்கும் புலிச் செல்வாக்கைப் பயன்படுத்தி புலிகளின் வழியிலேயே “நன்கொடையாளர்களை” கவர்ந்திழுத்து அதற்கான தயாரிப்பு செலவில் ஈடுபடத் திட்டமிட்ட கஸ்பாருக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றம் மட்டும் என்றே கூறலாம்.
அதற்குப் பல காரணங்கள் இருந்தன.
- இளையராசா ஈழத்தமிழர்கள் விடயத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி, தன் கலைத் தொடர்பை மட்டும் வைத்துக்கொண்டார்.
- நன்கொடையோ, தயாரிப்பில் பங்கோ அது “திருவாசகத்தின்” மீது ஓரளவாவது பக்தியும்,அறிவும் கொண்டவர்களை இணைத்து செய்வதே தான் செய்யும் பணிக்குச் சிறந்தது என்று இளையராசா வலியுறுத்தியும் வந்தார்.
- தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி என்னதான் புலி ஆதரவாளர்களிடையே இந்த வரையறைக்குள் அகப்படுபவர்களைத் தேடினாலும், அவர்களில் பெரும்பாலானோர் வேறு வகையில் தான் கஸ்பாருக்கு பதிலளித்தார்களே தவிர, இளையராசாவையும் புலி ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு நடு நிலையில் இதை அவரால் சாதிக்க முடியாது போனது.
இதன் பின்னர் ஏறத்தாழ புலியின் தொப்புள் கொடியிலிருந்து அறுந்தே போயிருந்த கஸ்பார் மிக அண்மையில் பிரபாகரனுக்கு “ஆப்பு” உறுதியானதும், தம் பழைய தொடர்புகள் மூலம் சில “மஞ்சள்” பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதி காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
புலியின் உண்மையான “குணம்” என்ன என்பது கஸ்பாருக்கு நன்றாகத் தெரியும்.
அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த அத்தனை சாதாரண மனிதருக்கும் கொடூர யுத்தத்திலிருந்து விடுதலை வேண்டும், அதற்கு ஒரே வழி இராணுவத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை என்றாலும், கஸ்பார் சென்று சந்தித்த புலிகளின் பயிற்சி முகாம்களில் அந்த எண்ணங்கள் மேலோங்கியிருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.
வயது போன மூதாட்டிகளுக்கும் பொல் ஒன்றைக் கொடுத்து Aerobics கற்றுக்கொடுத்து வயது முதிர்ந்த பலிக்கடாக்களை உருவாக்கிய புலிகளின் சித்தார்ந்தம் ஜெகத் கஸ்பாருக்கு நன்றாகத் தெரியும்.
தானும் அந்த அணியில் நிற்க முயற்சித்து தோற்றுப் போன கஸ்பாருக்கு, புலிகள் தமக்குத் தேவையான போது யாரை எப்படிப் பாவிப்பார்கள்? கழற்றி விடுவார்கள் என்பதும் நன்கு தெரியும்.
அப்படியெல்லாம் தெரிந்தே இந்த ஈழப்போராட்டத்தில் இருந்து காணாமல் போன கஸ்பாரின் குரல் தான் சரியான சந்தர்ப்பத்தைப் பாவித்து மீண்டும் அச்சாகிக்கொண்டிருக்கிறது.
சந்தர்ப்பவாதப் புலி ஆதரவாளர்களும் “பாதர் கஸ்பார் பிரபாகரனைப் பற்றி அவிழ்த்துவிடும்” கதைகளை இணையங்களில் பரப்பி அழகு பார்க்கிறார்கள்.
ஆனால் இடை நடுவில் பாதர் கஸ்பார் ஏன் காணாமல் போனார் என்று இதுவரை அவர்கள் சி்ந்திக்கவில்லை, கேள்வியெழுப்பவும் இல்லை.
ஒருவேளை அவரும் துரோகியாகிப்போனாரோ என்று அவரை மறந்தே போயிருந்தார்கள்.
இப்போது கூட கஸ்பாருடன் அணிவகுத்த சுப.வீ யெல்லாம் இருக்கும் இடமே தெரியவில்லை. ஆக, நெடுமாறனதும், வை.கோவினதும் மட்டுமே பழைய குரல்களில் இன்னும் ஒலிக்கிறது.
அதற்கான காரணம் இந்த இரண்டு பேருக்கும் தமிழக மக்களிடம் இல்லையென்றாலும் கூட தமிழக அரசியல் அரங்கில் ஆகக்குறைந்தது மேடைகளில் பேசும் தகுதியாவது இருப்பதாகும்.
அந்தத் தகுதியைத் தவறாகப் பயன்படுத்தும் நெடுமாறனும் தன் அரசியல் பிழைப்பை வேறு வழிகளில் கொண்டு செல்லத் தட்டுத் தடுமாறுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் போன இடங்களில் எல்லாம் பிதற்றித் திரிகிறார்.
வை.கோவும் விடுவதாயில்லை, புலியின் சமன்பாட்டுக் கணக்கை நன்கு ஆராய்ந்தால் இன்றைய தேதியில் வை.கோ வை விட வேறு யாருக்காகவும் ஒரு பைசா கூட செலவு செய்யும் நிலையில் அவர்கள் இல்லை.
எனவே அதைப் பயன்படுத்தி தன் “கணக்கை சமப்படுத்த” வை.கோ பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்.
ஆனாலும் புலியின் சர்வதேச வலைப்பின்னல் முழுக்க முழுக்க கே.பியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கே.பியை பகைத்துக் கொண்ட பின் அனைத்தும் “அறவிட முடியாக் கணக்காக”ப் போய்விடும்.
இன்னொரு சக்தி அல்லது வடிவில் மீண்டும் தமிழகத்தில் ஒரு தமிழீழ அலை பரவ வேண்டும் என்றால் அது கலைஞரைப் பேச வைத்தால் மாத்திரமே முடியும்.
அம்மையார் இனி தலை கீழாக நின்றாலும் ஈழ ஆதரவு எடுபடாது.
கலைஞருக்கு மாற்று சக்தியாக தமிழக மக்களிடம் போய்ச் சேரக்கூடிய ஒரு குரல் தற்போதைக்கு தமிழகத்தில் இல்லவே இல்லை. எனவே கலைஞரை அணுகுவதற்கான அனைத்து முயற்சிகளும் முழு அளவில் முடுக்கிவிடப்பட்டிருக்கும்.
இதையெல்லாம் நன்கு திட்டமிட்ட உளவுத்துறைகள் மஹிந்த – கருணாநிதி உறவை மிக அவதானமாகப் பேணிப் பாதுகாத்து வருகின்றன.
கலைஞர் தவிர்ந்த மற்ற எந்த “மணி” பேசினாலும் அது ஒரு சிறு கூட்டத்தை மாத்திரமே சென்றடையும்.
எனவே, இப்படியான கள நிலையில் கஸ்பாரின் இந்த “கட்டுரை” வேடிக்கைகள் முழுக்க முழுக்க காசு பார்க்கும் உத்தியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதில் இவர் முந்திக்கொண்டதால் பேராசிரியர் சுப வீ எல்லாம் பின் தள்ளப்பட்டுவிட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கே நாம் இப்போது எழுதியிருப்பதை வாசிக்கும் போதுதான் சில புலி ஆதரவாளர்களுக்கே இந்தப் பெயர்கள் நினைவில் வந்திருக்கும்.
அவ்வளவு ஏன் “தம்பி” போய்ச் சேர்ந்த பின்னர் உணர்ச்சிக் கவிஞன் காசி அனந்தனைக் கண்ணால் காண்பதற்கே இல்லை.
அந்த அளவுக்கு இவர்கள் கடந்த காலங்களில் தேவைக்கேற்பப் பயன்பட்டுப் பின் காணாமல் போன கறி வேப்பிலைகள்.
இப்படி அவர்கள் வரலாற்றில் இணைக்கப்பட்டு,துரத்தப்பட்டவர்களும், நாடிச்சென்று வால் பிடித்தவர்களும், விரட்ட விரட்ட பின்னால் போய் கெஞ்சியவர்களும் என்று பல வகை மனிதர்கள் இன்றும் எஞ்சியிருக்கும் புலி உணர்வுள்ள புலம் பெயர்ந்தவர்களின் உணர்வுக்குக் காரணமானவர்களாவார்கள்.
அவர்களைப் போன்று எதிர்வரும் காலத்திலும் பல கறிவேப்பிலைகள் உருவப்பட்டு, நெய் பூசி வறுத்தெடுக்கப்படுவார்கள். இருந்தாலும் அவை கறி வேப்பிலைகள் என்பதால் பின்னர் தூக்கி வீசப்படுவார்கள்.
அப்போதும் இப்படியான புத்திசாலி கஸ்பார்கள் இருந்தால் குறைந்த பட்சம் “மஞ்சள்” பத்திரிகைகளிலாவது கட்டுரைகள் எழுதிக் காசு பார்க்கலாம்.
arivudan
ஜூன்2, 2009 at 8:51 முப
Thank you Murugan, we leave both your appreciation and accusation at viewer’s judgement. However just a thought, It wont take long to find out the truth yourself if you are really willing to.