RSS

நல்லிணக்க அமைச்சர் வாய் திறக்கிறார்..

30 மே

அவரை விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அறியச் செய்வதற்கு உலகமே படாத பாடு படுகிறது, கருணா அம்மான் என்று சொன்னால் ஆபிரிக்கக் காடுகளிலும் தெரிய வருகிறது.

எனவே, நாமும் இலங்கையில் நல்லிணக்க அமைச்சரை கருணா அம்மான் என்றே விளித்துக்கொள்வோம்.

கருணா அம்மான் எப்போது வாய்திறப்பார்? என்பது நெடுநாளாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விடயம்.

அந்த மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு போராளி என்கிற ஒரு விடயம் ஒரு புறம் இருக்க, பல்லாயிரம் இளைஞர்களை போரின் பால் கவர்ந்திழுத்த ஒரு சக்தியாகவும், அவர்களைப் பலி கொடுத்த சித்தார்ந்தத்தின் அங்கமாகவும் ஒரு காலத்தில் இருந்த கருணா அம்மான் இந்த சமுதாயத்திற்கு மீளச் செலுத்த வேண்டிய கடன் நிறையவே உள்ளது.

அதில் மிக முக்கியமானதாக, காலத்தின் தேவையில் நாம் காண்பது அரச கெடுபிடிகளில் இருந்து முடிந்த அளவு மக்களுக்கு நிம்மதியைப் பெற்றுக்கொடுப்பதாகும்.

ஏறத்தாழ திறந்த வெளிச் சிறைகள் போன்று வர்ணிக்கப்பட்டாலும், இன்று உயிரோடு வாழக் கிடைத்திருப்பதை வரப்பிரசாதமாக எண்ணி, கொஞ்சமாவது மூச்சுவிடும் அந்த அப்பாவி மக்களுக்கு அரசின் “வடிகட்டல்” நடவடிக்கைகளில் இருந்து விடுதலையை வெகுவிரைவில் பெற்றுத்தர வேண்டிய மாபெரும் பொறுப்பு கருணா அம்மானுக்கு இருக்கிறது.

ஆயுதச் சித்தார்ந்தம் பெற்றுத்தந்தது எதுவும் இல்லை எனவே அரசியலில் எம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று நீங்கள் கூறும் விடயங்கள் நாளைய சமுதாயத்திடம் எடுபட வேண்டுமென்றால், உங்கள் சிந்தனைத் தெளிவை ஒரு திறந்த கொள்கையாக மக்கள் முன் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

போர்தான் முடிந்ததே தவிர, எதிர்காலத்திலும் தப்பித் தவறியும் பழைய புலிகள் மீளிணைவு என்பது இருக்கக்கூடாது எனும் அரச கொள்கைப் பிரகாரம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பழம் புலிகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் சிலர் விரும்பி வந்தவர்களாகவும், ஒரு சிலர் திட்டங்களோடு வந்தவர்களாகவும் கூட இருக்க முடியும்.

இந்தப் பதட்டத்தைப் பெருக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் இருக்கும் சில அரசியல் கூத்தாடிகளும் அவ்வப்போது அறிக்கைகளை விட்டு அரசியல் நிலையை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட புலிகளின் அபிமானம் பெற்று நாடாளுமன்ற ஆசனங்களில் அமர்த்தப்பட்ட கூட்டணியோ அடுத்து என்ன நடக்கும் என்று வயிறு கலங்கிப்போய் ஓடி ஒளிந்துவிட்டது.

கிழக்கில் வாழும் மக்களின் அரசியல் நிலையோடு சம்பந்தப்பட்டதாக அல்லது வரையறுக்கப்பட்டதாக உங்கள் முன்னாள் கட்சி நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

சர்வதேச அரங்கில் பெயர் இருந்தாலும் எதையும் நேரடியாகச் செய்து காட்டும் நிலையில் இல்லாத சில அரசியல் பெரியவர்கள் தற்போதைக்கு அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

யாழ் குடாவின் பால் நாட்டம் கொண்டிருக்கும் சீனியர் தமிழ் கட்சிகளுக்கு, இப்பக்கம் இருந்து நல்ல உறவொன்று வளர்ந்து வரவும் நாளெடுக்கும், அவர்கள் தம் நாட்டத்தை விரித்துப் பயனளிக்கவும் நாளெடுக்கும்.

வன்னிப் பகுதியில் பலம் பெற்ற கட்சிகள் தடைகளைத் தாண்டிச் சென்று சேவைகளைச் செய்யச் சென்றாலும், அவர்களை முழு மனதோடு ஒன்றிணைத்துக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும், அதற்கும் நாளெடுக்கும்.

இந்த அத்தனை இடைவெளிகளையும் கடந்து, மக்களுக்குள் இருந்தே ஒரு மக்கள் தலைவன் உருவாகத் துணிந்தால், அவனைக் கிளர்ச்சியாளன், புரட்சியாளன் என்று அடக்கவோ அல்லது அவனும் முன்னாள் புலியென்று முடக்கவோ அரசாங்கம் தயங்காது.

இப்படிப்பட்ட சிக்கலான அவல நிலையில், தென் பகுதியில் இருந்து அங்கே செல்லக்கூடிய தமிழ் பேசத் தெரிந்த அமைச்சர்களாலும், தமிழைக் கற்றுக்கொள்ளக்கூடிய பிற அமைச்சர்களாலும் இந்த மக்களின் உண்மையான உணர்வை எந்த அளவு உணர்ந்து கொள்ள முடியும் என்பது ஆகக்குறைந்தது தற்போதைய நிலையில் கேள்விக்குறியான விடயம்.

எனவே, அந்த மக்களுடைய வலியை உணர்ந்தவராக ஒரு வகையில் அந்த வலியில் பங்கெடுத்தவராக அதுவும் அரசின் நல்லிணக்க அமைச்சராக இருக்கும் உங்கள் மீது சுமத்தப்படும் பணி மிகப் பளுவானது.

அந்தப் பளுவை இதுவரை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ இனியும் வாய் மூடி இருந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.

நீங்கள் அந்த மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டாம், ஆனால் அவர்கள் வலியைக் குறைக்க ஏது செய்யலாம்.

நீங்கள் அந்த மக்களுக்கு ஒரே இரவில் அவர்கள் இழந்த நிம்மதியை மீளப்பெற்றுக்கொடுக்க முடியாது, ஆனால் வடிகட்டலில் இருந்து அப்பாவி மக்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏதாவது செய்ய முடியும்.

அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையம் பெற்றுக் கொள்ளலாம்

என்ற உங்கள் தலைப்புச்செய்தி இணையம் எங்கும் சூடு பறக்கிறது.

ஆனால், இந்த அரசியல் பலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அந்த மக்களுக்கு முதலில் மனோபலம் வேண்டும், அந்த மனோபலத்தைப் பெற அவர்கள் நிம்மதியாய் வாழ வேண்டும், நிம்மதியாய் வாழ அவர்களுக்கு கெடுபிடிகளில் இருந்து விடுதலை வேண்டும், கெடுபிடிகளில் இருந்து விடுதலை பெற அவர்கள் வலியை உணர்ந்த ஒரு பிரதிநிதி வேண்டும், அப்படி வலியையும் உணர்ந்த பிரதிநிதிக்கு அரசில் செல்வாக்கு வேண்டும், செல்வாக்கும் உள்ள பிரதிநிதிக்கு சம உரிமையைப் பேரம் பேசக்கூடிய ஒரு பதவி வேண்டும், அந்தப் பதவியில் இருக்கும் பிரதிநிதிக்கு இவற்றைச் செய்ய நல்ல “மனம்” வேண்டும்.

அந்த “மனம்” உங்களிடம் இருந்தால் நீங்கள் இன்னும் வேகமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதே எமது அவா.

முகாம்களில் முடங்கிக்கிடக்கும் எத்தனையோ வயோதிபர்கள் தம்மைப் பார்க்க வரும் விருந்தாளிகளைக் கூட நடந்து வந்து வேலி ஓரங்களில் சந்திக்க முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒலிபெருக்கிகளில் அவர்களை அழைக்கிறார்கள் என்பதற்காக எத்தனை கட்டை தூரத்திலிருந்துதான் அவர்கள் நடந்து வர முடியும்?

பல சிறார்கள் போசாக்குக் குறைபாட்டால் தவிக்கிறார்கள், நேற்றும் கூட சனாதிபதி “ஒசுசல” அரச மருந்தகங்களை முகாம்கள் எங்கும் திறக்கும்படி கட்டளையிட்டாராம், நல்ல விடயம் தான். 

ஆனால், அந்தக் குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து ஊட்டச்சத்து உளவியல் சத்தும் வரவில்லையே? அதைக் கொடுக்க அந்தத் தாய்மார் நல்ல சத்தான நிலையிலும் இல்லையே? முகாம்களில் இத்தனை குழந்தைகள் பிறந்தது என்று கணக்குக் காட்டினால் மட்டு்ம் போதுமா? அந்தத் தாய் மாருக்குப் போதிய அளவு உளவியல் ஆதரவும், சுமுகமான வாழ்க்கைக்கான நம்பிக்கையும் வேண்டாமா?

இன்னும் பிரபாகரனை அழித்து இரண்டு வாரங்கள் ஆக வில்லை அதற்குள் இதெயெல்லாம் நாம் எப்படி எதிர்பார்ப்பது? என்று உங்கள் அருகில் இருக்கும் அட்வைஸ் சிகாமணிகள் யாரும் அறிவுரை சொல்ல வந்தால், ஐயா இப்படி விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து தான் யார் யாரோ எதைச் சொன்னாலும் நம்பி நாசமாய்ப் போன ஒரு சமூகம் வாழ்ந்தது என்று நீங்கள் எடுத்துக் கூற வேண்டாமா?

புலிப்படை உங்கள் படை மீது போர் தொடுத்த போது சண்டையை விலக்கி உங்கள் படையின் பலரை டோஹா கட்டார்,ரியாத், லண்டன் சவுத்ஹோல்,துபாய் என்று வழியனுப்பி வைத்த போது உங்களிடம் இருந்த அந்தத் தெளிவு இன்னும் பல மடங்காய் இந்த மக்களுக்காக இப்போது மிளிர வேண்டாமா?

ஆளும் வர்க்கம் உங்களையும் பிரித்தாண்ட போது ஆகக்குறைந்தது ஒரு சில உயிர்ச் சேதங்களுடன் விட்டுக்கொடுப்பை மேற்கொண்ட உங்கள் “அறிவு” இங்கே அல்லல் படும் மக்களுக்காக பல மடங்கு வேகமாகச் செயற்பட வேண்டாமா?

அவர்களின் தலைவராக இருந்தால் தான் பணியாற்ற முடியுமா? ஏன் ஒரு மனிதனாக, “தமிழனாக”, இன்னும் சொல்லப்போனால் ஒரு மகத்தான அமைச்சின் பொறுப்பாளராக நீங்கள் இன்னும் அதிகமாக,வேகமாகச் செய்ய முடியுமே.

உங்கள் நல்லிணக்க அமைச்சு இதுவரை எனன் நல்லிணக்கத்தைக் கண்டதோ இல்லையோ இனிமேலும் அது செயற்படாமல் இருந்தால், உங்கள் மீதிருக்கும் பழைய கறைகள் மேலும் மெழுகி மேம்படுத்தப்படுமே தவிர உங்கள் அறிக்கைகளில், நோர்காணல்களில், சந்திப்புகளில், கூட்டங்களில் நீங்கள் வெளியிட்டு வரும் “நோக்கங்கள்” தவறிக்கொண்டே, தவற விடப்பட்டுக்கொண்டே, மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே செல்லும்.

இறுதியில் விடுதலைப் புலிகளின் வரலாறு மீள எழுதப்படும் போது உங்கள் மீதும் ஒரு கறை படிந்த அத்தியாயம் எழுதப்படுவதும் தவிர்க்க முடியாதது.

வாய்ச் சொல் வீரர்கள் எல்லாம் எதிரியின் காலடியில் விழுந்து மண்டை உடைபட்டு மாய்ந்து போனார்கள்.

இவர்களையெல்லாம் மிஞ்சிய செயல் வீரன் நீங்கள் என்றால், உங்கள் செயல் வீரத்தைக் காண உலகமே ஆவலுடன் பார்த்திருக்கிறது.

தலைமை எனும் பெயரில் சொல்வதற்கெல்லாம் “ஆமா” போடும் ஒரு கூட்டத்தை நீங்களும் உருவாக்கக்கூடாது, உங்களை நீங்களே முதலில் சுய விமர்சனம் செய்து, உங்கள் கைகளில் இருக்கும் மக்கள் பணியை மனதில் வைத்து வேகமாகச் செயற்பட வேண்டும்.

பழைய வரலாறு இந்தத் தமிழினத்திற்கு எதைக் கொடுத்தது? முழுக்க முழுக்க சந்தர்ப்ப வாத அரசியலை மட்டுமே பெற்றுக்கொடுத்தது.

இன்று உலக அளவில் ஈழத்தமிழர் பற்றி ஒப்பாரி வைக்கும் அத்தனை அரசியல் வாதிகளுக்கும் ஒரு பொருவான குணாதிசயமுண்டு. அதாவது அவர்கள் வட ஈழமோ தமிழகமோ அத்தனை பேரும் தாம் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறும் தொகுதிக்கு எந்த வகையிலும் உதவாத முதுகெலும்பில்லாத உதவாக்கரைகள்.

அவர்களுக்கு முதுகெலும்பு என்று ஒன்று இருந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு வட மாகாணத்தில் எந்த ஒரு மனிதனுக்குமே பிரயோசனப்படாமல் வெளிநாடுகளில் சுற்றித்திரிந்திருக்க மாட்டார்கள்.

மக்கள் உரிமை பற்றி அத்வானியிடம் போய் பேசியிருக்க மாட்டார்கள், மாறாக பிளவுபட்டிருக்கும் தம் இனத்தின் பிரதிநிதிகளையே ஒன்று சேர்த்து மக்கள் நலனை முற்படுத்திச் செயற்படுத்தியிருப்பார்கள்.

அவர்கள் அத்தனை பேருடைய அரசியல் இருப்புக்கும் “புலி” என்னும் ஒரு காரணம் தான் இருந்தது, அது இப்போது இல்லாது போனதால் எதைப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

புலிக்காக உலகம் எல்லாம் சென்று குரல் கொடுத்த இந்தப் புண்ணியவான்களால் 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றில், இந்த மக்களுக்காக இதுவரை ஒரு குரல் தானும் கொடுக்க முடியவில்லை.

இவர்கள் எல்லோருடைய அகராதியிலும் “தமிழர்கள்” என்பது புலியின் சித்தார்ந்தம் சார்ந்தவர்கள் மட்டுமே.

நீங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமை உங்களுக்கு இருக்கிறது.

இளைஞர்கள் யுத்தத்தின் பால் சென்றதற்கு நீங்களும் ஒரு காரணம், இந்த மக்களின் அநியாய வாழ்வுக்கு நீங்களும் ஒரு வகையில் காரணம்.

ஆனால் பிரபாகரனுக்கோ வேறு யாருக்குமோ கிடைக்காத அரிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நீங்கள் இன்னும் பேச வேண்டும், இந்த மக்களுக்காக இன்னும் நிறைவான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தயவு தாட்சனையின்றி, குறுகிய அரசியல் இலாபத்துக்காகவன்றி, அவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், வரலாற்றுக் கடமையறிந்து நீங்கள் செயல் பட வேண்டும்.

இவற்றில் இருந்து நீங்கள் தவறுமிடத்து, அனைத்து வரலாற்றுத் துரோகங்களும் இணைந்த ஒரு புதிய அத்தியாயத்தில் உங்கள் பெயர் முதன்மை பெறும்.

அது காலத்தால் தடுக்க முடியாத ஒன்றாகப் போய்விடும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

7 responses to “நல்லிணக்க அமைச்சர் வாய் திறக்கிறார்..

 1. brown flore

  மே30, 2009 at 5:39 பிப

  Arivudan is the best website among the srilankan websites clear thinking and best analysis thanks

   
 2. bharvathy

  மே31, 2009 at 8:37 முப

  uyarntha karuththukkalai ,neriya parvai konda aruvudan enrum vazha vendum.thamilinaththurokikakal viduthalai enra mulamudan ula vanthathu pothum.enimelavathu sinthanaiththezhivu,yananayaka udkaddamappudan serntha oru puthiyathor kazhakam thonri tharam kedda arasiyalai thuokkai erinthu nallathor ulakam padaippom. ennankalaikk kondapadiyal than ennu muzhakkamidukinren.

   
 3. Anusha

  மே31, 2009 at 6:05 பிப

  why did u delete my message..

   
  • arivudan

   ஜூன்1, 2009 at 9:35 முப

   நாகரீகமான சொற் பிரயோகங்களும், கருத்தாடல்களும் இருந்தால் உங்கள் எந்த விதமான கருத்துக்களையும் அனுமதிப்பதில் ஆட்சேபனை இருக்காது.

    
 4. thampipillai

  ஜூன்1, 2009 at 5:52 பிப

  correct

   
 5. உமா

  ஜூன்6, 2009 at 8:05 பிப

  அமைச்சர் செய்ய வேண்டியதை தெட்டத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள். கருணா துரோகி என்று அழைக்கப் படுவதையோ, வரலாற்றில் மாசு படுத்தப்படுவதையோ நாமும் விரும்பவில்லை. ஏனெனில் புலிகளிடம் இருந்து பிரிந்து போனதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்கள் நாம். வீணே உயிர்கள் பறிக்கப் படுவதை விரும்பாததால்.

  முடிந்தால் இக் கட்டுரையினை தயவு செய்து அமைச்சருக்கு மெயில் பண்ணுங்கள்.

  நன்றி

   
  • arivudan

   ஜூன்7, 2009 at 8:30 முப

   உமா, அமைச்சரின் இணையத்துக்கும் இந்த நகலை அப்போதே அனுப்பிவைத்திருந்தோம், ஆனால் அந்த மின்னஞ்சல் பாவனையில் இல்லை என்று திரும்பிவிட்டது.

   வேறு வழிகள் இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: