RSS

போதுமய்யா போதும் ..!

29 மே

நெல்லையில் திருமணத்துக்குப் போனீங்க, வயிறு நிறைய சாப்பிட்டு வெத்தலை பாக்குப் போட்டு கையிலிருந்தா மொய் எழுதிட்டு வருவோமா என்றில்லாமல் அங்கேயுமா ஐயா நெடுமாறா?

போதுமய்யா போதும்.. தப்பிப் பிழைத்து வந்திருக்கும் ஈழத்தமிழர்களை அவர்கள் பாட்டில் வாழ விடும்.

ஈழம் என்ற சொல் இலங்கையைக் குறிக்கும்.

அதில் பிரிவை ஏற்படுத்தி தனித் தமிழ்ஈழம் அதாவது இலங்கையின் ஒரு பகுதியை தமிழ்ஈழம் எனும் நாடாக உருவாக்க வேண்டும் என்றுதான் முப்பது வருடங்களாக தவறான கைகளில் ஆயுதப்போராட்டமும், அதற்கு முன்பதாக தவறிப்போன தலைமையிடம் அஹிம்சைப் போராட்டங்களும் படாத பாடு பட்டன.

ஈழம் எனும் நாடுதான் வேண்டும் என்று போராடிய பிரபாகரனை கள்ளத் தோணியில் போய் சந்தித்தீர்கள் அதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

அவரோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து அவற்றை அப்போதே பத்திரிகைகளில் பிரசுரித்து நீர் வீரத்தமிழனும் ஆகியிருந்தீர், அதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

அண்மையில் கூட பொருள் சேர்த்தீர், பணம் சேர்த்தீர், புரட்சி செய்வோம் என்றெல்லாம் அறிக்கை விட்டீர், அதையும் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

உண்ணா நோன்பு, அது இது என்றெல்லாம் மிரட்டினீர் இறுதியில் உங்களையெல்லாம் கலைஞர் ஓவர்டேக் செய்த போது வாயடைத்தும் போனீர், அந்தக்கொடுமையையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அதெல்லாம் சரி ஐயா, இப்படி ஈழம் தமழீழம் எல்லாம் கோரிய அத்தனை பேருடனும் கை கோர்த்து, தமிழர் வரலாற்றிலேயே பிரபாகரன் போல் ஒரு வீரனில்லை என்றெல்லாம் வயிறு புடைக்கப் போன இடங்களில் எல்லாம் அறிக்கை விடும் நீங்கள் ஏனய்யா உங்கள் கடிதத் தலைப்பை இன்னும் “இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை” என்று வைத்திருக்கிறீர்கள் ?

அப்போ ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழர் உரிமையை வென்றெடுப்பது தான் உங்கள் கோரிக்கையுமா?

இடிக்கிறதே ஐயா? நீங்கள் உண்மையில் யார் பக்கம்? எந்த இலங்கைத் தமிழருக்காக புலியோடு கை கோர்த்திருந்தீர்கள்?

காலம் காலமாக “இந்திய வம்சாவளியினர்” என்ற ஒரே காரணத்திற்காக வாழ்க்கைத் தரத்தில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகத் தோய்ந்து போய் கிடக்கிறதே அந்த இலங்கைத் தமிழினமா?

அவர்கள் தான் தமது தலைமையை தாமே தேர்ந்தெடுத்து, நல்லதோ கெட்டதோ தம் உரிமைகளைப் போரடிப்பெற்றுக்கொள்ளும் வீரத் தமிழர்களாக இலங்கை வரலாற்றில் அதுவும் உங்கள் உதவியோ இல்லை உங்கள் தமிழினத்தின் புலித்தலைவர்கள் உதவியோ இன்றி போரடி வாழ்ந்து வருகிறார்களே? அப்போ அவர்களும் இல்லை.

தமிழினம் என்கிற பொது அடையாளத்திலிருந்து நீங்கள் விரும்பி இன்றளவும் வயிறு நிரப்பச் சென்ற இடங்களில் எல்லாம் வானளவில் புகழ்ந்து தள்ளும் புலிகளால் இரவோடு இரவாக ஓட ஓட விரட்டப்பட்டு, கடவுளைத் தொழும் பள்ளிகளில் வைத்து முதுகுப்புறத்தில் இயந்திரத் துப்பாக்கியை விளையாட விட்டு “உங்கள்” புலிகளால் வேட்டையாடப்பட்டார்களே அந்த “முஸ்லிம்கள்” எனும் தமிழ் பேசும் மனிதர்கள் அவர்களா? அவர்கள் முன் நீங்கள் சென்றால் செருப்படி தான் கிடைக்கும், அப்போ அவர்களும் இல்லை.

யாழ்ப்பாணம் விடுபட்ட போது நடப்பது நடக்கட்டும் என்று தம் புலியின் “இழுப்பையும்” மீறித் தம் சொந்த நிலங்களிலேயே வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு அன்று ஒரு சிறு நிம்மதியும் இன்று நிம்மதிப் பெருமூச்சுடனும் வாழ்கிறார்களே அந்தத் தமிழர்களா? அவர்கள் முன் உங்கள் அறிவுரைகளை அல்ல உங்கள் நகலை வைத்தாலே தீயிட்டுக் கொளுத்தி விடுவார்களே? அப்போ அவர்களும் இல்லை.

வடக்கும் கிழக்கும் என்ற வாதத்தில் கிழக்கையும் ஆள நினைத்து, கிழக்குக்குத் தரக்கூடிய துன்பங்களையெல்லாம் கொடுத்துவிட்டு துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று “உங்கள்” புலிகள் ஓடும் போதும் சும்மா போகாமல் காட்டிக்கொடுத்தார்கள், ஒத்துழைக்க மறுத்தார்கள் என்று காடுகளில் இழுத்துச்சென்று அடி அடியென அடித்துத் துவைத்தார்களே அந்த கிழக்கு வாழ் தமிழர்களையா? பாவம், அவர்கள் பிள்ளையானோ கருணாவோ தம் வாழ்க்கையை இனி எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று “சுய புத்தியுடன்” வாழ்கிறார்கள். அவர்கள் முன் சென்றால் உங்களை மீன்பாடும் நதிக்கரைகளில் மீனுக்கே இரையாக்கி விடுவார்கள். அப்போ அவர்களும் இல்லை.

சரி, கொழும்பு மற்றும் நாடெங்கும் வர்த்தகத்தில் கொடி கட்டிப்பறக்கும் வர்த்தகத் தமிழர்களா? அவர்களிடம் நீங்கள் சென்றால் எண்ணைப் பீப்பாயில் உங்களை உள்ளடக்கி, சீல் வைத்து, ஐந்து லாம்புச் சந்தியில் சரவெடி கொளுத்தியல்லவா விளையாடுவார்கள்? கருமம் அவர்களும் இல்லை.

அப்போ பிரபாகரனின் கோரப் புலிகளின் அகோரப் பிடியில் இருந்து தப்பினோம் தம்பிரான் புண்ணியம் என்று மூச்சைப் பிடித்திருக்கும் தம் இதயத்தை மட்டுமே இறுதி உடமையாகக் கொண்டு அல்லல்பட்டு, அவதிப்பட்டு, ஓடோடி வந்து கால்வயிறு கஞ்சி கிடைக்காவிட்டாலும் கண்ணீரோடு வாழ்கிறார்களே அந்தத் தமிழர்களா? வாய்ப்பே இல்லை.

ஐயா ஒரே ஒரு தடவை உம் வாழ்நாளில் “துணிவிருந்தால்” அவர்கள் முன் சென்று பாரும்! வீரத்தமிழன் ஒருவனைத்தான் இதுவரை கண்டதாகக் கூறும் உம் வாக்கெல்லாம் பொய்யாகி, பல்லாயிரம் வீரத் “தமிழர்களை” நீர் காண்பீர். அதுவரை உம்மால் தாக்குப் பிடிக்க முடிந்தால் அதுவே நீர் போன சென்மத்தில் செய்த புண்ணியம்.

உம் வயது தான் இருக்கும் அந்தத் “தியாகம்” எனும் பொன் தியாகத்திற்கு, விடுதலைப் புலிகளை மாவீரராக்கி விட்டு பெற்றவர்கள் பிள்ளைகளைத் தேடிச்சென்றால் அதையும் இதையும் கூறி மழுப்பியும்,விரட்டியும் விட்ட தியாகியவர்.

கேள்விப்பட்டீரோ அவருடைய முகத்தை மறைக்க அவர் வளர்த்திருந்த தாடியையும், முடியையும் பிடுங்கி எடுத்துவிட்டார்களாம் இந்த முகாம்களில் வாழும் “தமிழர்கள்” எதற்கும் இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

சரி, இவர்கள் தான் உம் பேரவை பாதுகாக்கும் தமிழர்களில்லை, அப்போ உம் காலடியிலேயே தமிழக மண்ணில் அகதி வாழ்க்கை வாழும் துரதிஷ்டத் தமிழர்களையா கூறுகிறீர்? ஐயா இலங்கைக் கடவுச் சீட்டொன்றை வைத்துக்கொண்டு உம் நாட்டிற்கு வருவதற்கு ஒருவன் விசா எடுப்பது எத்தனை துன்பமாக இருக்கிறது என்று உமக்குத் தெரியுமா? சரி அதுதான் தெரியாது, ஆகக்குறைந்தது இந்த “மண்டபங்களில்” தவித்திருந்து ஏதோ ஒரு வழியில் தம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல ஆயத்தங்களை மேற்கொண்டாலும் “உம்” காலடியில் கிடக்கும் அந்தத் தமிழர்கள் ஒரு “எக்சி்ட்” அனுமதி வாங்க என்ன பாடுபடுகிறார்கள் என்று உமக்குத் தெரியுமா? இல்லை அவர்கள் பட்டதெல்லாம் போதும் அதையாவது இலகுவாக்கிக்கொடுங்கள் என்று நீர் இதுவரை ஒரு குரல்தானும் கொடுத்திருக்கிறீரா?

அப்போ அவர்கள் மத்தியில் போய் உம் புலிச்சவாடல் இனிமேல் அவிழ்க்கப்பட்டால் அங்கும் உமக்கு “பரிசுகள்” காத்திருக்கும்.

அவர்களும் இல்லை, இவர்களும் இல்லை எவர்களுமே இல்லையெனும் போது யாருக்காக ஐயா உம் “பாதுகாப்புப் பேரவை”?

எந்த இலங்கைத் தமிழர்களை நீர் பாதுகாத்தீர் அல்லது பாதுகாக்கப் போகிறீர்?

பிரபாகரன் நியமித்த என்றே வைத்துக்கொள்ளக்கூடிய பிரபாகரனையும் புலி இயக்கத்தையும் தன் விரல் நுனியில் வைத்துப் பம்பரம் விளையாடிய கே.பி யே சொன்னாலும் நீர் விடுவதாயில்லை, சரி கருமம் உம் பார்வையிலும் “ஒரு பிரபாகரன்” இறக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோமே, அதற்காக வயிறு நிரப்பப் போன இடங்களிலுமா இந்த வதை?

ஐயா உம் “மாவீரன்” செய்த மாபெரும் புண்ணியத்தால் 3 லட்சம் மக்கள் முகாம்களில் வாடுகிறார்கள், அதில் அந்த மாவீரனைப் பெற்ற திருவெங்கடமும் அவர் பாரியார் பார்வதியும் அடக்கம், மகளிருக்கு அரசியல் சொல்லித்தரச் சென்ற தமிழினியும் அதோ கதியென்று எல்லாவற்றையும் விட்டு ஓடியிருக்கிறார்.

உமக்குத் தெரிந்த ஈழத்தை விட அந்த ஈழப்போராட்டத்தில் ஒன்றரக் கலந்திருந்த உம் வயதுப் பெரியவர்கள் தயா மாஸ்டர் ஜோர்ஜு மாஸ்டர்கள் கூட உயிரோடு இருந்தால் போதும் என்று ஓடிவிட்டார்கள்.

அவ்வளவு ஏன் நீர் சொல்லும் மாவீரனை பாதுகாத்த ஜெயம், பானுவெல்லாம் பலி கொடுக்கப்பட்டுவிட்டார்கள், அதற்கும் மேலாக அந்த சிங்களப் பெண்ணின் கணவன் நடேசன் ஐயா கூட வெள்ளைக் கொடியோடு அனுப்பப்பட்டு முதுகில் சுடப்பட்டு விட்டார்.

இதுவெல்லாம் உம் வீரப்புலிகளுக்கு கை வந்த கலை! கிட்டு மாமாக்கும் இதைத்தான் செய்தார்கள், அவ்வளவு ஏன் தமிழ்ச்செல்வன் ஏன் ஒரு காலை நொண்டும் தேவை வந்தது என்று எப்போதாவது தேடிப்பார்த்தீரா? அதுவும் கூட உம் மாவீரன் அவருக்கு வழங்கிய பரிசு ஐயா பரிசு.

மிக விரைவில் தமிழ்ச்செல்வனின் மனைவி இதையெல்லாம் புட்டு வைப்பார் அப்போதும் நீர் இன்னொரு இழவு வீட்டிற்குச் சென்று தமிழ்ச்செல்வனின் மனைவியும் விலை போய்விட்டாள் என்றொரு அறிக்கை விடும்.

இத்தனை நாளாய் அறிக்கை விடும் உமக்கு இன்னும் தான் இலங்கைத் தமிழர்கள் யார் என்பதில் ஒரு வரையறை இல்லை, இந்த லட்சணத்தில் அவர்களைப் பாதுகாக்க ஒரு பேரவை.

ஆழ ஊடுருவினால், உமது பேரவையும் பேர் அவாவும் ஈழத்தமிழினத்தின் பெயரில் தமிழகத் தமிழரை ஏமாற்றுவது மாத்திரமே என்பது வெள்ளிடை மலையாகத் தெரிய வரும்.

உங்கள் உணர்ச்சியூட்டலில் தீக்குளித்த முத்துக்குமாரனுக்கெல்லாம் ஊர்வலம் போனார்கள், ஆனால் உம் மாவீரனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட மக்களால் செலுத்த முடியாமல் போனதே ஏன்?

அதன் பங்கு உம் போன்ற அரசியல் வாதிகளையும் சாரும்.

கே.பி விலை போனாரோ இல்லையோ உம் வகையறாக்கள் நிச்சயமாக விலை போனவர்களே.

நாளை ஒரு நாள் பிரபாகரனை அழிக்கும் நேரம் வந்தால், அதை மக்களின் மனங்களில் குழப்பத்துடன் விதைத்து, அப்படியொரு மனிதன் இருந்த அடையாளம் மறையும் வரை அவனை வைத்துப் பிழைப்பு நடத்த என்றோ “இடுகை” செய்யப்பட்ட அரசியல் நச்சுக்கள் நீங்கள்.

அதனால் தான் அண்டை நாடுகளில் எல்லாம் புகுந்து விளையாடும் உம் புலனாய்வுத்துறை உம்மையெல்லாம் விட்டு வைத்திருக்கிறது.

என்றோ ஒரு நாள் இந்த “உண்மைகள்” வெளியானால், உமக்கென்ன அதை வை.கோவின் தலையிலாவது அரைத்து விட்டு நீர் உம் அரசியலைச் செப்பனிடுவீர், பாவம் நம்புவதற்கு யாருமே இல்லாமல் இன்று உம்மையும் உம் திருமண வீட்டு அறிக்கைகளையும் நம்பிச் சிறு மூச்சு விடுகிறார்களே புலி ஆதரவாளர்கள் அவர்கள் விரக்தியின் உச்சத்தில், அன்றைய நாளில் உமக்கொரு “மாலை” போட்டாலும் வியப்பதற்கில்லை.

உங்களைப் போன்ற குழப்பக்காரர்கள் இருக்கும் தைரியத்தில் தான் முள்ளிவாய்க்கால் இறுதி அத்தியாயம் பல்வேற வடிவங்களில் பல்வெறு நேரங்களில் கசிய விடப்பட்டது.

உண்மையை ஆராய யாராவது போனாலும் கூட நீங்கள் தான் விட மாட்டீர்களே? உங்கள் புண்ணியத்தால் மக்கள் இதை வைத்துக் குழம்பிக்கொண்டிருக்க ஐ.நா வரை சென்று அதுவும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் கைதட்டல் வாங்கிக்கொண்டு வந்து விட்டது இலங்கை அரசு.

இறுதி நேரத் தாக்குதலுக்கு முன்புவரை கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களின் அத்தனை பொறுப்பும் புலியின் பேரில் திருத்தியெழுதப்பட்டுவிட்டது.

ஆனால் உண்மையான ஈரமுள்ள மனதிருக்கும் யாருக்கும் அங்கு வீணாய்ப் பலியான மக்களை நினைத்து உருகாமல் இருக்க முடியாது, ஆனால் உம்மைப் பாரும் அவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கிறீரா? இல்லை ஒரு இரங்கல் தான் தந்தீரா? காலாகாலத்தில் எங்காவது ஒரு கல்யாண சாப்பாடு நிரப்பிக்கொண்டு அங்கும் போய் பிரபாகரன் பெயரால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறீரே தவிர, உம் இயக்கம் சொல்லும் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு” உம் வீட்டு நாய்க்கும் இருக்காத ஒரு நோக்கம் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறீர்.

இனியும் அவசரப்படவேண்டாம், நிலைமை எல்லாம் சுமுகமாக வந்தவுடன் உம் பழைய நட்புகளை மீட்டிக்கொள்ள முடியும், தற்காப்புக்காக நீர் வைத்துக்கொண்ட “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு” எனும் பேரவையை அப்போதும் நியாயப்படுத்த முடியும்.

நீர் போகும் இடங்களில் கூட்டம் போடும் அந்தக் கடைசி நாலு பேர் சிந்திக்கும் வரை உம் பாடு கொண்டாட்டம் தான்.

ஆனாலும், போதுமய்யா உம் தொல்லை போதும்.

உம் பங்குக்கு நீர் ஒரு அறிக்கை விட, வை.கோ விடுவதாய் இல்லை அதைப் பார்த்து ராமதாசும் விடுவதாய் இல்லை.

இப்படியே உங்கள் அறிக்கைக் குழப்பத்தில் வீணாகிப்போன தம் கனவுகளை மீண்டும் மீண்டும் குழப்பியடித்து உம் புலி ஆதரவாளர்களும் தாங்கிக்கொள்ளும் மன உளைச்சலும் போதும், அவர் தலைவன் இருக்கும் போது எதிர்காலத்துக்கு வழி காட்டவில்லை.

எனவே, அவன் இருக்கும் போது பார்த்த அந்த தலைவனுக்காவது அஞ்சலி செலுத்திவிட்டு, தான் விலகிக்கொண்ட தன் சொந்தத் தமிழினத்தோடு வேற்றுமை மறந்து ஒன்றிணைந்து அவன் உரிமைகளை வென்றெடுக்கப் புறப்படட்டும். அவர்களை இன்னும் இன்னும் பிரித்து வைக்காதீர்கள்.

“இலங்கைத் தமிழினத்தின்” பெயரால் நீர் செய்ததெல்லாம் போதும், அங்கே தமிழ் நாட்டில் தீர்க்கப்பட எத்தனையாயிரம் பிரச்சினைகள், அதில் ஒன்றுக்காக வேணும் குரல் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது செய்யும், அவர்களும் தமிழர்கள் தானே உம்மால் அவர்களாவது நன்மை பெறட்டும்.

அந்த இடைவெளியில் “இலங்கைத் தமிழர்” ஒரு புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பிக்கட்டும். தம்மையும் தம் சொந்தக் கைகளையும் நம்பி ஒரு புது வாழ்வு படைக்கப் புறப்படட்டும், நீர் வாய் மூடி இருந்தால் போதும், உமக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

One response to “போதுமய்யா போதும் ..!

 1. prasanna

  மே30, 2009 at 5:28 முப

  i totally agree with you…

  Dont believe these hypocrites like vaiko,nedumaran….

  they are biased in their opinions…. they are not seeing the other side of the prabhakaran.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: