தமிழ்த் தேசியம், தமிழீழம் எனும் கவர்ச்சிகரமான வாதத்தால் உந்தி இழுக்கப்பட்டு, இறுதியில் அதன் தலைமையின் மிக அருகில் இருந்த காவல் தெய்வங்களைத் தவிர, அதற்கு முன்னரணில் இருந்து உயிர் விட்ட பெரும்பாலான துப்பாக்கி வீரர்கள் நம்பிக்கெட்ட மாவீரர்களே.
சில வேளை இந்தத் தமிழ்த்தேசிய வாதம் எங்கே எப்படி அல்லது எதற்காகக் புறப்பட்டது என்பதே அவர்களைப் பொறுத்தவரை கேள்வி ஞானமாக மட்டுமே இருந்திருக்கும்.
அதுவும் அவர்களுக்குத் துப்பாக்கி தூக்கப் பழக்கிக்கொடுத்த புலிகள் இயக்கம் “எதை” ச்சொன்னதோ அதுவாக மட்டுமே இருந்திருக்கும்.
அவர்கள் பெற்றோர்களோ மடியில் வைத்து உண்மைகளை எடுத்துக் கூறும் நிலையில்லாத தடுமாற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, புலிப் பிரச்சாரத்தின் அடிப்படையில் இவர்களுக்கு இரண்டு தெரிவுகளே வழங்கப்பட்டிருந்தன.
அது “நண்பன் அல்லது போராளி என்கிற தெரிவு” அல்லது ” எதிரி அல்லது துரோகி என்கின்ற தெரிவு.
நண்பனாக இருக்க வேண்டுமென்றால், அடிப்படையில் எதிர்க்கேள்வியே கேட்காமல் புலிகளின் சித்தார்ந்தத்தை நம்ப வேண்டும், காலத்துக்குக் காலம் அதன் கொள்கை வகுப்பாளர்கள் எதையெல்லாம் தம் கொள்கையாக அறிவித்தார்களோ அதையெல்லாம் இவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் நண்பர்கள் என்று சொல்பவர்கள் தான் நண்பர்கள், எதிரி என்று சொல்பவர்கள் தான் எதிரிகள்.
இவர்களை வழி நடத்தும் தலைமை என்பது மிகப் பத்திரமாகப் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு உயர்ந்த “பொருள்”, எனவே அதை நெருங்குவதற்கு விலை அவர் உயிராக மட்டுமே இருக்க முடியும்.
அதாவது தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள அவர் முன் வந்தால், அதுவும் அவரை அனுப்பும் நேரம் வந்தால் மட்டுமே அவரால் தலைமையை நெருங்க முடியும்.
எனவே, கடை நிலைப் போராளி என்பவன் சித்தார்ந்தத்தின் உண்மை,பொய்களிலிருந்து மிகத் தொலைவில் இருக்கிறான். அவன் கையில் இருக்கும் துப்பாக்கிகளை துடைத்து வைத்து எப்போதும் தயார் நிலையில் நிற்கிறான், ஆனால் அவன் தான் எதற்காக தயார் நிலையில் நிற்கிறான் என்று எண்ணுகிறான் என்றால் “தன் மக்களுக்கு தமிழீழம்” பெற்றுத்தரவே தயாராக நிற்கிறான்.
இவன் உண்மையான போராளி, இவனைப் போலவே பல்லாயிரம் இளைஞர்கள் இணைந்தார்கள்.
ஆனால் ஒரு மாபெரும் உண்மையிருக்கிறது, அதை நீங்கள் சமாதானமாக இருந்து ஒரு முறை சிந்தித்து,அல்லது பெரியவர்களிடம் கேட்டாவது அறிந்து கொள்ள வேண்டும்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நாட்களில் நமக்கொரு விடிவு வேண்டும் என்கிற உணர்வு ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் தானாகத்தான் ஊற்றெடுத்தது.
அதற்காக அவன் அங்கிருந்த பல்வேறு இயக்கங்களில் தன் மனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அப்படி அவர் தேர்ந்தெடுத்ததும், திடீரென வீட்டில் இருந்து காணாமல் போய்விடுவான். அன்றைய நாளில் ஒரு பிள்ளை வீட்டில் இருந்து காணாமல் போனால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்களே வட – கிழக்கு யுத்த பிரதேசங்களில் காணப்பட்டது.
ஒன்று அவனை போலீஸ் கைது செய்திருக்கிறது அல்லது அவன் “இயக்கத்தில்” சேர்ந்து விட்டான் என்கிற இரண்டும் தான் அது.
பிள்ளையைக் காணவில்லை என்றவுடன் பெற்றோர் செய்யும் முதல் வேலை அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரிப்பதாகும்.அங்கே அவன் இல்லையென்றதும் அவர்கள் வீட்டில் வந்து செய்யும் முதல் வேலை “ஒப்பாரி” வைப்பதாகும்.
ஏன் ஒப்பாரி வைத்தார்கள்? என்று உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்டுப் பாருங்கள்.
போலீசில் இல்லை என்றால் “இயக்கத்தில்” அவன் சேர்ந்து விட்டான் என்றவுடன் இந்தப் பெற்றோர்கள் இரண்டு காரணத்திற்காக கண்ணீர் சிந்தினார்கள்.
ஒன்று அவர் குழந்தை தேர்ந்தெடுத்த பாதையில் அவர்களுக்கிருந்திருக்கக்கூடிய முரண்பாடு, அடுத்தது அவன் உயிர் மேல் இவர்களுக்கிருந்த அக்கறை.
இவர்கள் இந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, திடீரென பக்குவப்பட்டவனாய் அந்த இளைஞன் இவர்கள் முன் வந்து தோன்றுவான். நான் “இயக்கத்தில்” இருக்கிறேன், என்னைத் தேட வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவான்.
நாளடைவில் அவர்கள் பிள்ளை இயக்கத்தில் சேர்ந்த விடயம் நாலு பேருக்குத் தெரியும் போது, அதில் சிலர் அவர்களைப் பெருமைப்படுத்தவும் செய்தார்கள், எனவே அதற்கும் இதற்கும் இடையில் தம்மைத்தாமே அவர்கள் சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.
இன்னொரு கட்டத்தில் “இயக்கம்” என்றாலே அது புலி இயக்கமாக மாத்திரமே இருக்க வேண்டும் என்கிற “பாசிசம்” வளர்ந்த போது இவர்கள் காட்டியும் கொடுக்கப்பட்டார்கள், பெற்ற பாவத்துக்காக தண்டிக்கவும் பட்டார்கள்.
ஆனாலும், துப்பாக்கி தூக்கச் சென்றவனை அடையும் செய்திகள் “அவர்கள்” சொல்வதாக மட்டும் இருப்பதால், அதுவே அவன் நம்பிக்கையாகவும் இருந்தது, அந்த நம்பிக்கைக்காகவே அவன் வாழ்க்கையும் இருந்தது.
நாளடைவில் “புலிகளே காவல் தெய்வங்கள்” என்ற திணிப்பின் பின்னர், கவர்ந்திழுக்கப்பட்டு ஆயுதம் தூக்கச் சென்ற கலாச்சாரம் மறைந்து, கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அதே “இயக்கத்தில்” சின்னஞ்சிறு பிள்ளைகளையும் சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயம் கால வரலாற்றில் பதியப்பட்டது.
இப்போதும் இந்தப் பெற்றவர்கள் கண்ணீர் சிந்தினார்கள்.
ஆனால், முன்னர் போன்று சமாதானமாக முடியாத நிலையில் தொடர்ந்தும் கண்ணீர் சிந்தியதுதான் இவர்களது துரதிஷ்டமான வாழ்க்கையாகிப்போனது.
கொண்டு செல்லப்பட்டவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள், ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டார்கள், ஒரு கட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ போரடியே தீர்வது என்ற சுய முடிவுக்குள்ளும் வந்திருப்பார்கள்.
இப்போது இவர்கள் போராளிகள் எனும் பிரிவுக்குள் வந்தாலும் இன்னொரு சக்தியால் இயக்கப்படும் பணியாளர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே அவர்களின் அத்தனை செயற்பாடுகளும், ஒரு தலைமைப் பீடத்தின் அறிவுறுத்தல், செயற்படுத்தல், வழி காட்டல் என்று ஒரு பெரிய இடம் நோக்கியதாக மாறிவிடும்.
இந்தக் காரணத்தை வைத்துத்தானே,அதாவது மற்ற இயக்கங்களின் தலைமைகளோடு ஏற்பட்ட முரண்பாட்டுக்காகத்தானே அந்த இயக்கப் போராளிகளும் வேட்டையாடப்பட்டார்கள்?
மாற்று இயக்கத் தலைமைகளோடு “தமழீழத்துக்காக” மாத்திரமன்றி சில “பிரமீளாக்களுக்காகவும்” தலைகளின் துப்பாக்கிகள் அதுவும் சிங்காரச் சென்னையிலும் வெடித்திருக்கிறது.
நல்ல வேளை எம்.ஜி.ஆர் காப்பாற்றினார்.
எனவே போராளிகள் எனும் நிலையில் இருப்பவர்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அத்தனை அதிகாரங்களும் தலைமைக்கே இருந்து வந்தது.
அதிலும் விடுதலைப் புலி இயக்கத்தில் தலைமையென்பது மிகக் குறுகிய ஓர்மமாகவே இருந்தது.
தமழீழம் பெற்றுக்கொடுக்கவே தாம் போராடுவதாகப் போராளிகள் தம்மைத்தாம் அர்ப்பணித்துக்கொண்டாலும் அந்தத் தலைமை என்ன செய்தது என்பதை வைத்தே அவர்கள் சார்ந்த இயக்கத்தின் நிலை வெளியுலகில் கணிக்கப்படுகிறது.
வெளியுலகம் என்றால் என்ன என்றே அறியாத இவர்களைப் பொறுத்தவரை தாம் கேட்கும் புலிகளின் குரல் மாத்திரமே உண்மையாகத் தெரிகிறது.
அப்படித்தான் அவர்கள் வெளியே அனுப்பப் பட்டாலும் அவர்கள் உயிர் ஆயுதமாகவே அனுப்பப்பட்ட காரணத்தினால், மிக இறுக்கமான முறையில் கண்காணிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வந்தார்கள்.
எனவே இவர்களின் “சுய அறிவு” முழுக்க முழுக்க மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.
அதிலும் எதிரியின் கோட்டைக்குள் இருப்பதனால் அனைத்திற்கும் மேலாக எதிரியின் எதையுமே உள்வாங்கக்கூடாது எனும் கட்டாயப் பயிற்சி இருக்கும்.
இதன் அடிப்படையிலும், ஒவ்வொரு கடைநிலைப் போராளியும் “தலைமை” எனும் ஒரு இடத்தை நோக்கிய சுய சிந்தனையைப் பறிகொடுத்த நிலையிலேயே வாழ முடியும், அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்களும் கூட.
நமது பலம் என்ன? எதிரியின் பலம் என்ன? என்பதைப் பற்றிய அலசல்களுக்கு அவர்களுக்கு நேரமோ அல்லது போதிய தகவல்களோ ஒருக்காலமும் இருந்திருக்கப் போவதில்லை.
தப்பியோடி வெளிநாடு வந்த ஒரு சில முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள் இதை மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதாவது, வெளியுலகத்திற்கு வந்த பின்னர் தான் சரி, பிழையை உணரக்கூடியதாக இருக்கிறது, இளமைப் பருவம் அநியாயமாக்கப்பட்டுவிட்டது என்று அங்கலாய்க்கவும் செய்கிறார்கள்.
தப்பியோடிய ஒரே காரணத்திற்காக இவர்களும் “துரோகிகளாகவே” கணிக்கப்படுகிறார்கள், அத்துடன் இவர்கள் உற்றார்,உறவினர்கள் அங்கு அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லியடங்காதவை.
விடுதலைப் புலிகளின் ஓர்மமான இந்த சித்தார்ந்தத்திற்கு எதிராக இலங்கை அரசு போர் புரிந்தது என்கிற உண்மை மேலோங்கியிருந்ததால், இவர்களின் இந்த நிலைக்கு எதிராக தம் வாழும் உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயிரமாயிரம் தமிழர்கள் அவர்களுக்கெதிராக போராடிக்கொண்டும் இருந்தார்கள் என்கிற உண்மை மறக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பல்லாயிரம் “தமிழர்கள்” இவர்களை விரும்பாத நிலையில், இவர்கள் சித்தார்ந்தத்தை மறதலித்த நிலையில், தமக்கான உரிமைப் போரை எங்குமே எடுத்துச்செல்ல முடியாத கேயேறு நிலையில், தமக்குள்ளேயே அனைத்தையும் புதைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களும் “தமிழர்களாக” இருந்தாலும், அவர்களால் புலிகளின் சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அண்மையில் பிரபாகரனின் மரணச்செய்தி வெளியானதும், ஒரு இணையத்தில் “நிம்மதி! நிம்மதி! நிம்மதி” என்று தலைப்பிட்ட ஒரு பதிவைப் பார்க்கவும் கிடைத்தது.
தமிழர்களுக்காக போரடியதாகக் கூறிய பிரபாகரன் இறந்த இந்தத் தருணத்தை அந்தப் பதிவாளர் இலங்கை அரசிற்கு ஆதரவாகக் கொண்டாடவில்லை, ஆனால் அவர் தம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளைத்தான் கொட்டித் தீர்க்கிறார்.
இப்படி நிம்மதி நிம்மதி நிம்மதி என்று துள்ளிக்குதிக்கும் அளவுக்கு ஒரேயொரு தமிழன் இலங்கையில் இருந்திருந்தாலும் அவன் உணர்வுக்குப்பின்னால் மறைந்திருக்கக்கூடிய “வலி” என்னவென்பதை புலி ஆதரவு ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் மறந்துவிடுகிறார்கள்.
ஒரே வார்த்தையில் அவன் விலை போனவன், துரோகி என்றெல்லாம் பட்டம் சூட்டி அவன் குரலை மற்றவர்கள் கேட்காமல் பண்ணிவிடுகிறார்கள்.
அப்படி ஒரு தமிழன் தான் இருந்தார் என்றால் கூட மன்னிக்கலாம், ஆனால் இப்படிப் பல்லாயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலானோர் அன்றைய தினம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
- இனிமேலாவது நம் பிள்ளைகள் உயிர் தப்பியது என்று பல பெற்றோர்கள்
- பரம்பரை பரம்பரையாக நாம் வாழ்ந்த நிலங்களை ஆகக்குறைந்தது கண்ணாலாவது பார்க்க முடியும் என்று பலர்
- அனைத்தையும் தான் இழந்திருந்தாலும் மீண்டும் தம் சொந்த மண்ணில் கப்பம் கட்டாமல் காலடி வைக்கலாம் என்று ஒரு சாரார்
- என் கட்டை அந்த மண்ணில் தான் வேக வேண்டும் என்று லட்சியத்தோடு வாழும் சில பெரியவர்கள்
- இனியொரு சமுதாயமாவது உயிர்ப்பயம் இன்றி கண் விழிக்கலாம் என்று ஒரு சாரார்
இப்படியாக லட்சோப லட்ச மக்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
அவர்கள் விடும் அந்த நிம்மதிப் பெருமூச்சானது புலியின் சித்தார்ந்தத்தினால் இதுவரை அடக்கியாளப்பட்ட அவர்கள் உணர்வுகளின் விடுதலை பெறும் தருணமுமாகவே கணிக்கப்பட வேண்டும்.
எனவே இனத்திற்கு விரோதமாக இருந்து “இன விடுதலை” பெற்றுத்தரப்போன சித்தார்ந்தம் இதை விட ஒரு நாகரீகமான முடிவைப் பெற்றிருக்க முடியாது என்பது புலனாகிறது.
ஆனால், இதில் எதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பார்க்கும் போது, அப்பாவியாக முன் நிலையில் நின்று மாவீரர் ஆகிப்போன, அநியாயமாகப் பலி கொடுக்கப்பட்ட அந்த உயிர்களை வழி நடத்திய சித்தர்ந்தம் தான்.
இதை எதிர்த்து எத்தனை வடிவில் அதே தமிழர்கள் குரல் கொடுத்த போதும் இறுதிவரை புலியின் பிரச்சார மருத்துவர்கள் அவற்றை அவர்கள் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளாமல் விடத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்து கொண்டார்கள்.
மீறியும் கண்டு கொள்ளாமல் விலை போனவர்கள், துரோகிகள் சொல்வதாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளத் துணிந்தார்களே தவிர, உண்மைய உணர மறுத்தார்கள்.
ஆனால், இப்போது பல புலி ஆதரவாளர்கள் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், அதாவது பிரபாகரனின் இறுதிப் படையணியைச்சுற்றி தம் இன்னுயிரைப் பறிகொடுத்த அந்தப் போராளிகள் பெரும்பாலும் நம்பிக் கெட்ட மாவீரர்கள் என்பதே அது.
அத்தனை தூரம் அவர்களை நம்ப வைத்த தலைமை இறுதியில் தம் உயிரைக் காப்பாற்றத் துணியும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு அகோர இயக்கத்தை அடியோடு விரட்டி, இறுதி நிலப்பரப்பு வரை சென்று கொடி நாட்டிய ஒரு நாட்டின் இராணுவம் இறுதியில் வந்து நின்று இல்லாத பிரபாகரனைக் கொன்று விட்டோம் என்று பொய் அறிக்கை விடுவதற்கு எந்தத் தேவையும் இல்லை.
அங்கே இறுதிவரை பிரபாகரன் இருந்தது அவரது இறுதிப் பிரதிநிதியும் வழிமொழிந்த விடயம்.
அவ்வாறிருக்க, அந்தத் தருணத்தில் அவர் கொல்லப்படவில்லை என்று இன்னும் புலி ஆதரவாளர்கள் கூறுவதாக இருந்தால், இறுதி வேளையில் பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தப்பிக்கொண்டதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
அப்படி அவர் தப்பிச் செல்வதாக இருந்தால் அல்லது அதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மாவிலாறு முன்னரங்கில் இருந்து இறுதியாக சூசை வரை பிரபாகரனே “காவு” கொடுத்தது தான் உண்மை என்றாகிவிடும்.
அப்படித்தான் பார்த்தாலும் அதற்கு முன் தம் கனவில் அவர்கள் வாழ வைத்துக்கொண்டிருந்த “தமிழீழத்துக்காக” இன்னுயிரை நீத்த அத்தனை போராளிகளும் நம்பிக்கெட்ட மா வீரர்களே.
இல்லை, பிரபாகரன் கொல்லப்பட்டார் என்கிற அடுத்த பக்கத்தைப் புலி ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வதானால், இந்த செய்தி வெளியான அன்றே நாம் அடித்துக் கூறிய படி பிரபாகரன் தொலைதூரத்தில் இருந்து தாக்கப்படவில்லை, அதுவும் துப்பாக்கிகளால் சுடப்படவும் இல்லை, மிக அருகில் இருந்து வேறு வகையில் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறியது தற்போது உண்மையாகவும் வெளி வந்திருக்கிறது ( பிரபாகரனின் “அந்த” இறுதி நாள் .. )
தலையில் வெட்டுக்காயங்கள் உள்ள படங்கள் இப்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
தூரத்தில் இருந்த பிரபாகரனுக்கு இதெல்லாம் நடந்திருக்க முடியாது, சரணடைந்த, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதிரியின் காலில் விழுந்த தலைமைக்குத்தான் அந்த முடிவு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
பழிபோட காரணம் தேடி வேண்டுமானால் கே.பி காட்டிக்கொடுத்தார் அல்லது திட்டமிட்டுக் கொலை செய்தார் என்று வரலாற்றை எழுதினாலும், யார் யாரையோ யார் பெற்ற பிள்ளைகளையோ எல்லாம் “வீர மரணம்” எனும் மாயைக்குள் வைத்திருந்த தலைமை இறுதியில் முழு இனத்துக்கும் துரோகமிழைத்து, ஆகக்குறைந்தது கே.பியின் பேச்சை நம்பியாவது கோழையானது உண்மை தானே?
எனவே இதில் எந்தப்பக்கத்தில் நீங்கள் புலிச் சித்தார்ந்தத்தின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், இறுதி வரை, அதாவது இந்தப் புலிக்கெதிரான யுத்தம் நிறைவுற்ற பின்னர் அம்பாறைக் காடுகளில் அண்மையில் உயிர் நீத்த அத்தனை உயிர்களும் நம்பிக்கெட்ட மாவீரர்களே.
அவர்களை நம்ப வைத்துக் கெடுத்த தலைமை அழிந்துவிட்டது, ஆனால் அவர்களை நம்ப வைத்த சித்தர்ந்தம் பிரச்சார ரீதியிலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பிள்ளையைப் பறி கொடுக்க முன், சரி பிழையை ஆராய்ந்து அவர்கள் தொடர்பில் இருந்தால், அவர்களை வழி நடத்த வேண்டிய கடமையை இனியும் அவர் உற்றார்,உறவினர்கள், பெற்றவர்கள் மீற முடியாது.
அப்படி மீறுவது நீங்கள் அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் தவறாகும்.
உங்கள் சுய அறிவு கொண்டு நீங்கள் சிந்தித்து அவர்களுக்கு விளக்கமளித்து, அதன் பின்னும் அவர்கள் சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொள்ளவே அவர்கள் விரும்பினால் அது அவர்களது சுய உரிமை.
அன்றும் கவரப்பட்ட அத்தனை பேரும் இந்த சித்தார்ந்தத்தில் உண்மை இருப்பதாகவே கவரப்பட்டார்கள்.
இன்று இன்னொரு தலைமையை அவர்கள் உருவாக்கிக்கொண்டால் அதுவும் உண்மையுள்ளதாகவே காட்டிக்கொள்வார்கள், ஆனால் அதன் ஆழமான மறு பக்கத்தில் இருப்பதைக் கொண்டு எதையாவது அள்ளிச் செல்ல அவர்கள் போடும் திட்டங்களாகவே அவை இருக்கும்.
அப்போதும் இவர்கள் நம்பிக் கெடப்போகும் மாவீரர்களாக மரணிப்பார்கள், ஒரு கிரனைட் வீச்சில் அவர்களுக்கு இரண்டு போஸ்டர்கள் ஒட்டப்படும். மிதி வண்டிகளில் மீண்டும் அவர்கள் பயணங்கள் முடக்கப்படும்.
இன்னும் சில புலித்தலைமைகள் வாய் திறக்க வேண்டியிருக்கிறது, அவையும் நாளடைவில் வாய் திறந்ததும், நாம் சொல்லும் இந்த சத்தியம் அவர்களும் விரும்பி ஏற்கும் ஒன்றாக மாறும்.
அது வரையிலும் மேலும் சில உயிர்கள் நம்பிக்கெடக்கூடாது என்பதே எமது அவாவும்.
பொறுப்புகள் அனைவரிடமும் இருக்கிறது, சிந்தித்தால் அத்தனைக்கும் ஒரு விடிவு கிடைக்கும்.
seidhigal
மே29, 2009 at 4:47 பிப
உண்மையை உணர்த்த உரைத்த – கட்டுரை .
brown flore
மே29, 2009 at 9:58 பிப
how much you write these chemmali kootam wo,nt think
arivudan
மே29, 2009 at 10:29 பிப
lets keep trying brown flore, நம்பிக்கை தானே வாழ்க்கை?