RSS

தியாகம் vs துரோகம்

26 மே

அப்போ அவரும் புலி இல்லையாமே? இதுதான் இப்போதைய சூடான தலைப்பு.

அன்று அவர் “ஏதாச்சும்” செய்து, பிரபாகரனைக் காப்பாற்றியிருந்தால்..? இன்று இத்தனை இழிசொல்லுக்கு அவர் ஆளாகியிருக்க மாட்டர் என்று கே.பியின் மேல் அனுதாபம் வரும் அளவுக்கு தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலான நூழிடையில் புலி ஆதரவாளர்களின் உணர்வுகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

தம் முன்னால் இருக்கும் நிஜங்களைப் புரிந்துகொள்ள முடியாத கண்மூடித்தனமான சமூகத்தை வழி நடத்தத் துணிவதும், அதே சமூகத்தின் முன் “உண்மைகளைப் பேசத் துணிவதும்” ஒரு வகையில் தமிழினத்தில் மிகப்பெரும் “ரிஸ்க்” ஆகும்.

அதைச் செய்யத் துணியும் மனிதர்களைப் பாராட்டலாம், ஆனால் அவர்கள் முகமூடி போட்ட மாயாவிகளாய் இருக்கும் போதுதான் தூற்றுவோருக்கும்,போற்றுவோருக்கும் இடையில் “உண்மைகள்” கடினமாக உறங்கிக்கொள்ளும்.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் உண்மையாகவே இருந்த ” உரிமைப் போராட்டம் ” திசை மாறி, திக்குத் திணறி, சீரழிந்து, கேடுகெட்டுப் போனதற்குப் பின்னால் எது இருந்தது? எது இருக்கவில்லை என்பது இன்று ஓரளவு இலங்கை,இந்தியா,மொரிசீயஸ் முதல் அடியோடு இந்த வரலாறே தெரியாத வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மூன்றாம் தலைமுறைக் குழந்தைகளும் தற்போது புரிந்துகொண்டுள்ள விடயமாகும்.

மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட முன்,பின் விளைவுகளை அலசிக்கொண்டே இருப்பதால் நாளைய எதிர்காலம் சிந்திக்கப்படாமல் தவறவிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆயினும், காரியம் நடந்து இன்னும் 30 நாள் கூட ஆகவில்லையே என்று அந்தக்காலத்துக் கிராமங்களில் வாழ்ந்த மனிதர்களைப் போல இப்போதே உணர்வுகளை உடைத்தெறிந்து, நிஜங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்த்தனமான வியூகங்கள் மூலம் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கின்றன.

30 வருடங்களாக அவர்களைக் கட்டிப்போட்டிருந்த “மாயை” திடீரென விலகக்கூடிய ஒன்றல்ல.

தலைவனின் நெற்றிக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்ட போது கூட சுற்றி வளைத்திருக்கும் ஆயிரமாயிரம் இராணுவத்தின் கண்களை மறைக்கும் வகையில் ஒரு புயலையோ,சூறாவளியையோ, சுனாமியையோ அல்லது ஆகக்குறைந்தது மின்னலென கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையையாவது செயற்படுத்தி திடீரெனத் தம் தலைவன் மாயாவியாக மறைந்துவிடுவான், கர்த்தரைப் போல மீண்டும் உயிர்த்தெழுவான், சாகா வரம் பெற்றவன் என்று இல்லாத மாயையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

உலகில் வாழும் ஒவ்வொரு இனமும் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள ஒரு தனித்துவத்தை வைத்திருக்கிறது. “தமிழினம்” தம்மைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள,அதுவும் நவீன காலத்தில் ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ள, ஒளவையார், வள்ளுவர், பாரதிகள் அவர்களுக்குப் போதவில்லை.

பகவதர்கள், எம்.ஜி.ஆர்களும் போதாது, ரஜனிகள்,விஜய்களும் போதாது, அதையும் விட ஏதாவது வேண்டும். தம் தனித்துவத்தைப் பிரதிபலிக்க இன்னும் ஏதாவது வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தப்பில்லை, நம் இனத்திற்கு ஒரு தனி அடையாளம் தேவை, அது நமது பாரம்பரியம் ,கலாச்சாரம், பண்பாடு தாங்கிய மற்ற சமூகங்களாலும் மதிக்கப்படக்கூடிய, உலகின் மாற்றங்களோடு ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒரு தனித்துவமாக அது இருந்தால் தான் நமக்கும், நம் பின் வரும் நம் தலைமுறையினருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்த முன்னேற்றத்தையும், மன மாற்றத்தையும் நம்மிடம் இருந்து பிரித்தது, ஆயுதப் போராட்டம் எனும் வழி தவறிப்போன சித்தார்ந்தமாகும்.

இந்த சித்தார்ந்தத்தின் பால் எதிர்காலத் தலைமுறையினரை ஈர்ந்தும், பலவந்தமாகவும் இணைத்துக்கொண்ட அந்த சக்திகள், இதன் பின்னர் என்ன செய்ய வேண்டும், அதற்கப்பால் என்ன செய்ய வேண்டும் என்ற நடவடிக்கையை பகிரங்கமாகத் திட்டமிடாமல், எங்கே எப்படி ஆரம்பித்தார்களோ, அதை வைத்தே மூனறு தசாப்தங்களை ஓட விட்டபோதும், அதை எதிர்த்துக் கேட்கவோ அல்லது சுய விமர்சனம் செய்து கொள்ளவோ எந்தவித வழியும் விட்டுவைக்கப்படாமல் எதோச்சாதிகாரக் கொள்கையும் அதன் வியூகங்களும் மாத்திரம் கடந்த தலைமுறையினரிடம் விதைக்கப்பட்டது.

அதன் விளைவாக அவர்கள் உருவாக்கிக்கொண்ட கனவுலகம் தகர்த்தெறியப்படும் போது, யார் யாரை நம்புவது? யாரை நம்ப முடியாது எனும் உளவியல் திணறலுக்குள் அகப்பட்டு இப்போது சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவன் எனும் ஒருமுகப்படுத்தப்பட்ட சக்தியின் “இருப்பு” எதனால் சாத்தியமானது என்பதை கடந்த காலத்தில் இவர்கள் புரிந்துகொள்ள மறுத்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் இப்போதும் புரிந்துகொள்ள முடியாது போவது அன்று இவர்கள் மீது விதைக்கப்பட்ட நச்சு விதைகளின் விளைவினால் தான் என்றால் மிகையாது.

ஆனாலும், இவர்கள் கைவிடப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக திருத்தப்பட வேண்டியவர்கள்.

பக்க சார்பான ஒரு நிலையில் இருந்து மட்டுமே எதையும் “ஏற்றுக்கொள்ளும்” மனப்பக்குவம் அவர்களிடம் வளர்ந்ததன் காரணத்தினால் தான் இன்று தியாகத்துக்கும் துரோகத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்களால் எடை போட முடியாமல் உள்ளது.

தலைவன் எதைச்செய்தாலும் சரியாகச் செய்வான் என்பதே அவர்கள் நம்பிய, நம்பும் சித்தர்ந்தமாக இருந்தால் இன்று இவர்களிடம் எழுந்திருக்கும் நம்பிக்கை மறு சீரமைப்புக் கொள்கையின் இறுதி முடிவு, அவர்கள் தம்மை அறிந்தும் அறியாமலும் தியாகி என்று கூறிக்கொண்ட தம் தலைவனை “துரோகியாக” மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

அவன் எல்லாம் சரியாகத்தான் செய்தான் என்றால், இறுதி நேரத்தில் கே.பியின் நியமனத்தையும் சரியாகத்தான் செய்தான்,சூசையை வைத்து இறுதி ஒப்பாரியின் போதும் கே.பியை முன் நிறுத்தி அனைத்தையும் சரியாகத்தான் செய்தான்.

அப்படி அந்தத் தலைவன் செய்த ” சரியான ” முடிவை சந்தேகிக்க ஆரம்பித்த அந்த நிமிடமே நீ உன் தலைவனின் சித்தார்ந்தத்தையும் உடைத்தெறிந்து விட்டாய், அவன் உனக்காக செய்த தியாகத்தையும் தூக்கியெறிந்துவிட்டாய்.

அதன் அடிப்படையில் இறுதியாக உனக்கும், உன்னை ஊட்டி வளர்த்த அந்த நம்பிக்கைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வதாய் நினைத்து, அந்த நம்பிக்கையை உனக்குக் கற்றுத்தந்த தலைவனையே “துரோகியாக” சித்தரித்துவிட்டாய்.

இது உன் பாசிசத் தலைவன் மீது நாம் கொள்ளும் அக்கறையிலோ, பரிதாபத்திலோ இல்லை உன் புதுத் “தலை” யின் அந்தரமான நிலையில் நாம் கொள்ளும் இரக்கமுமோ அல்ல.

மாறாக, உன் முட்டாள்த் தனத்தை நினைத்து நாம் வருந்திக்கொள்வதன் நிலைப்பாடாகும்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்று கே.பி சொன்னால், “தலை வாழ்க” என்கிறாய், “அவர் இறந்துவிட்டார்” என்று அதே கே.பி சொன்னால் கே.பி விலை போய் விட்டான் என்கிறாய்.

இது வரை நடந்தது போதும், இனி இந்த ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று உன் “தலைக்கே” தலையாய் இருந்த கே.பி சொன்னால் இப்போது அவனைத் துரோகி என்கிறாய்.

குறைந்தது கடந்த இருபது வருடங்களாக உன் “தலையின்” இருப்பையே பாதுகாத்து வந்த “தலை” கே.பிக்கே நெடுமாறன், வை.கோ போன்ற அரசியல் வியாபாரிகளின் அறிக்கைகளை வைத்து நாமம் சூட்டி, அவர்கள் ஊட்டித்தந்த அதே பரப்புரைப் பயன்பட்டால் உன் சித்தார்ந்தத்தை நாறடித்து, காலில் போட்டு மிதிக்கிறாய்.

ஈழக்கனவை எப்படியெல்லாமோ போற்றிப் பணிந்த உன் மனம், எப்போது வந்தவன் போனவன் கால்களில் எல்லாம் விழுந்து “ஐயா போரை நிறுத்தச் சொல்லுங்கள்” என்ற நிலையை எட்டியதோ அன்றே உன் தலைவனை நீ தூக்கியெறிந்துவிட்டாய். அது உன் சொந்த மனச் சாட்சிக்கும் தெரியும்.

அவன் மீதும், அவனைச் சுற்றியிருந்த “தள மற்றும் தல பதிகள்” மீதும் உனக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எல்லை கடந்து நாட்கணக்கில் நடந்து சென்று சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உன் ஈழத்தின் தேவையை சொல்ல எத்தனித்திருக்கத் தேவையில்லை.

பம்மாத்து உண்ணாவிரதங்கள் இருந்திருக்கத் தேவையில்லை, ஊர்வலங்கள், கடை அடைப்புகள், பாதை அடைப்புகள், போக்குவரத்து முறியடிப்புகள்,தூதரக தாக்குதல்கள் என்று எதுவுமே செய்திருக்கத் தேவையில்லை.

மாறாக உன் “பலவீனத்தை” எப்போதோ எடை போட்டு, அதைப் பலப்படுத்தும் தேவைகளைப் பார்த்திருப்பாய்.

ஒரு நிமிடம், “நான் இது எதையுமே செய்யவில்லை, என்னைச் செய்யச் சொன்னார்கள் நானும் அதைச் செய்தேன்” என்று இப்போது உன் மனம் கூறுமானால், உன்னைச் செய்யச் சொன்னவர்கள் கூட பலவீனத்தைக் கண்டறிந்து அதைப் பலப்படுத்துவதை விட்டு எதற்காக உன்னையும் நீ சார்ந்த சமூகத்தையும் சர்வதேசத்தின் கால்களை நக்க வைத்து, அதிலும் அவமானப்பட்டு, உன் நேரத்தை,பணத்தை, மானத்தை, மரியாதையை, உணர்வை, உடைமைகளை நாசமாக்கினார்கள் என்று சிந்தித்துப் பார்.

அவர்களின் தேவை எதுவாக இருந்திருப்பின் உன்னை இவ்வளவு கேவலமாக வழிநடத்தியிருப்பார்கள் என்று சிந்தித்துப்பார்.

புலி அல்லாத யார் சொன்னாலும் அது “துரோகம்” என்று அவர்கள் உனக்குப்பாடம் சொல்லித்தந்தார்கள், அதையும் நீ நம்பினாய், சரி புலியாக இருந்து அவர்கள் ஏன் உனக்கு சரியான வழியைக் காட்டவில்லை என்று சிந்தித்துப்பார்.

புலி எதிர்ப்பாளர்கள் எதையாவது சொன்னால், அது உன் சித்தார்ந்தத்திற்கு விரோதமாக இருக்கும் போது அவர்கள் தலைமுறைகளை எல்லாம் இழுத்து திட்டித் தீர்த்தாயே தவிர நீ விரும்பாமல் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பலவீனமான நிலையில் உன் போராட்டத்தை வழி நடத்திய “தலைகளை” ஏன் என்று தானும் நீ கேட்கவில்லை.

அப்படிக் கேட்காமல் இருந்தது உன் “தமிழீழத்திற்கு” நீ செய்த தியாகம் என்றே நீ கருதினால், அது உன் எதிர்காலத் தலைமுறையினருக்கு நீ செய்த “துரோகம்” என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சர்வதேசத்தின் தலையீடு, புலிகளின் சரணடைவு, ஆயுதங்களின் மெளனம், தலைவனின் உயிர் என்று உன்னை வாட்டி வதைக்கும் அத்தனை விடயங்களுக்கும் ஒரு நிலையான விடை உன்னிடம் இல்லை.

அதை உன் சுய புத்தியைக் கொண்டு உருவாக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் உனக்கில்லை.

உன்னுடைய புலன் பெயர்ந்த கனவுக்கு அங்கே தம் உயிர்களை, உடமைகளை, உறவுகளைப் பலிகொடுத்து அனாதைகளாகத் தவிக்கும் அந்த அப்பாவி மக்கள் இருக்கிறார்களே? அவர்களின் நிஜமான உணர்வுகளுக்கு உன்னிடத்தில் எந்த ஒரு மரியாதையும் இல்லை.

அப்படி ஏதாவது உன் மனதின் ஏதாவது ஒரு மூலையில் இருந்தாலும், இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் உன் சுய புத்தியை இனியாவது இயங்கச் செய்வதாகும்.

உன் சொந்தக் கண்களால் உன் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் தகவல்களைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் நல்ல முடிவுகளை, நீ கூறுவது போன்று உண்மையில் உன் “தமிழினத்தின்” நிம்மதியான வாழ்வுதான் உன் பிரதான அக்கறை என்றால், முதலில் அவர்கள் நலன் சார்ந்த நல்ல முடிவுகளை உன் சுய புத்தியைக் கொண்டு எடுக்க வேண்டும்.

இது வரை உன்னிடம் எந்த வகையான “அறிவு” இருந்திருந்தாலும், இப்போது சில விடயங்களை நீ கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அதாவது போரின் இறுதி நிலை என்று வந்த போது அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் எனும் தொகை உன்னிடம் காட்டப்பட்டது உன் உணர்வுகளை தட்டியெழுப்ப மட்டுமே.

உன்னை வழிநடத்திய அந்த சித்தார்ந்தம் பொய்யாகிப்போகும் அந்த வேளையிலும் அவர்கள் “தியாகிகளாக”த் தம்மை சித்தரித்துக்கொள்வதற்காகவே.

அதன் பின்னணியில் நடந்ததோ வரலாறு காணாத பரிதாபம், கூண்டோடு சரணடைந்து கொள்ளத் துணிந்தார்கள் அந்தத் “தலைகள்”.

அவர்களை நெருங்கும் வரை எத்தனை ஆயிரம் அப்பாவி உயிர்களைப் பலி கொடுத்திருப்பார்கள்? புது மாத்தளனின் கடைசி எல்லை கையைவிட்டுப் போன போதும் சரணா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்றுமல்லவா கூறினார்கள்? அப்படியானால் கே.பி எதற்கு அவரின் இறுதி நேர “பேரம்” எதற்கு? அந்தப் பேரத்தில் வெளிநாடுகளின் பங்கு எதற்கு? அதன் பின்னணியில் நடேசனின் சரணடைவு எதற்கு?

இதைத்தான் நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால், மன்னாரில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அநியாயமாகப் போன “அந்த” அப்பாவி உயிர்களையும் காப்பாற்றும் நோக்கில் அப்போதே அவர்கள் செயற்பட்டிருக்கலாமே?

இறுதி வரை எதை நம்பினார்கள்? தம்மிடம் இருந்த விலையுயர்ந்த இரும்புத் துண்டங்களையா? கருமம், அதைத்தான் இயக்கக்கூட ஆளில்லாமல் வந்தவனுக்கு தாரை வார்த்தும் கொடுத்தார்களே? அவர்கள் அதை நம்பவில்லை.

ஆனால், வேறு இரண்டு பிரதான விடயங்களை நம்பினார்கள்.

 1. உன் உணர்ச்சி
 2. தம் உயிர்களின் அரசியல் மதிப்பு

ஆனால், இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னராகவே இலங்கை அரசு இந்த இரண்டையும் உலக அரங்கில் நிர்வாணமாக்கிவிட்டது. உன்னால் மட்டுந்தான் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடிந்திருக்கவில்லை.

உன்னை “உணாச்சியூட்டி” இறுதி வரை தம்மைத் “தியாகிகளாக” காட்டிக்கொண்ட அந்தத் தளபதிகள், நீ சார்ந்த சித்தார்ந்தத்தின் சாத்தான்கள் இப்போதும் ஓதும் வேதம் போல “நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்கள்” என்றே வைத்துக்கொண்டாலும், அவர்கள் தம் உயிருக்குப் பயந்து தானே எதிரியின் காலடியில் வீழ்ந்தார்கள்?

சரி, அதை ஏற்றுக்கொள்ளத்தான் உன் நம்பிக்கை உன்னை விடவில்லை என்று வைத்துக்கொண்டாலும், இதே சாத்தான்களின் செய்திகள்,தகவல்கள், கள நிலவர ஆய்வுகளின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் ஆசுப்பத்திரிகளிலும் வைத்துத் தம் இன்னுயிரை அநியாயமாக இழந்தார்களே அப்போதெல்லாம் இந்த சூசையின் கண்களுக்கு அவர்கள் அப்பாவி மனிதர்களாக, தம் இனத் “தமிழர்களாக” தெரியவே இல்லையா?

காலடியில் மரணம் வந்ததும், கண் முன்னே மக்கள் சாகிறார்கள், பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் சரணடைகிறோம் என்று புளுடா விட்டார்களே, அப்படியானால் இவர்களுக்காக இதற்கு முன் அநியாயமாக இறந்து போன போராளிகள், மக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களை நம்பியும் கெட்டுப்போன உனக்கும் இவர்கள் செய்தது “துரோகம்” இல்லையா?

தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் உன் “உணர்ச்சிகள்” , உண்மைகளை உணரும் வரை நீ திருந்தப் போவதில்லை.

இன்று ஒரு கே.பி தன் திருவாய் மலர்ந்து ” கடவுளின் மகன் இறந்துவிட்டார்” என்று சொல்ல, சில தமிழக அரசியல் வாதிகள், அவர்களை நன்றாகக் கவனித்துப் பார், பதியப்பட்ட ஒரு கட்சி, வேட்டி சால்வையைத் தவிர அவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இப்போதுதான் தேர்தலும் காட்டித் தந்திருக்கும் இந்நிலையில், இந்த அரசியல் வாதிகள் அறிக்கை விடுகிறார்கள்.

ஆனால், வாக்களித்தால் இவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நீ சார்ந்த சித்தார்ந்தமே இலங்கையின் பாராளுமன்றத்திற்கு அனப்பிய கூட்டணிக் குடும்பம் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் வாய் பொத்தி மெளனிகளாக இருக்கிறார்கள், அவர்கள் எதையாவது பேசப்போனால் நீ என்ன செய்வாய், அதில் எத்தனை பேரை துரோகியாக்குவாய் என்ற குழப்பத்தில் பியர் அடித்துவிட்டு தூங்கச் செல்கிறார்கள்.

பத்மனாதனையே விலை போனவனாக்கிவிட்டாய், அவர்களுக்கு என்ன கதியோ என்று அவர் தம் வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.

அப்போ உன் அகராதியில், நீ நம்பக்கூடியவர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை?

உன்னை ஊட்டி வளர்த்த சித்தார்ந்தம் உனக்கு எந்த அறிவைத் தந்ததோ இல்லையோ இதை மட்டும் நிரந்தரமாக உனக்கு ஊட்டி வளர்த்தது, ஆகையால் நீ உன் நண்பனை, உன் சமூகத்தாரை, உன் உற்றாரை, உறவினரைக்கூட நம்ப முடியாமல் போலி வாழ்க்கை வாழ்கிறாய்.

எது உண்மை எது பொய்? என்று உனக்கு நீயே கேள்வி கேட்டாலும் அதை வெளியே சொல்ல மறுக்கிறாய், அதே போலவே உன் நண்பன்,உற்றார்,உறவினர் எல்லோரும் தமக்குள்ளேயே தியாகத்தையும் துரோகத்தையும் இனங்காண முடியாமல் தவிக்கிறார்கள்.

புலியை எதிர்த்தவன் எல்லாம் “இனத் துரோகிகள்” ஆயிற்றே இப்போது கே.பி ஏன் எல்லோரையும் சேர்த்து நம் இனத்துக்கு விடிவு காணலாம் என்கிறான்? இதுதானே உன் புதுப் பிரச்சினை?

ஆயுதப் போரட்டம் தான் வழியென்று தானே சமூகத்தில் இதற்கு எதிராக இருந்த அரசியல் வாதிகள் முதல் புத்தி ஜீவிகள் எல்லோரையும் நம் சித்தார்ந்தம் போட்டுத்தள்ளியது? அந்த ஆயுதங்களை வாங்கத்தானே நாமும் அள்ளி அள்ளிக் கொடுத்தோம்? இப்போது அதுவே இல்லையென்றால்? இதுவும் தானே உன் பிரச்சினை?

சிங்களவன் என்றாலே எதிரி, அவனை எதிர்த்தால் தான் “தமிழன்” அவனைத் திட்டினால் தான் “வீரன்” என்று வாழ்ந்து பழகிவிட்டோம், இப்போது அவனோடு நேருக்கு நேர் நின்று நம் பக்க நியாயங்களை அதுவும் “வாயால்” எடுத்துரைப்பது எப்படி? நமக்குத்தான் அவனைக் கண்டாலே “மோட்டுச் சிங்களவா” என்று மட்டுந்தானே அழைக்கத் தெரியும்? இது தானே உன் தீராத பிரச்சினை?

இதுவெல்லாம் பிரச்சினைகளே இல்லை!

உன் உளம் சார்ந்து நிற்கும் தெளிவற்ற நிலைதான் அத்தனையும், அது ஊட்டி வளர்க்கப்பட்ட சுய விமர்சனம் தடைசெய்யப்பட்ட சித்தர்ந்தத்தின் பெறுபெறுகள் தான் இவை அத்தனையும்.

இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு வேண்டும் என்று நீ நினைத்தால், முதலில் உன் பழைய சித்தார்ந்தத்தைத் தூக்கியெறி.

நீயே துரோகி என்று அழைப்பவர்களையும், ஒட்டுக்குழுக்கள் என்று ஒதுக்குபவர்களையும் நேரடியாக அலசிப்பார், அதில் யாராவது நீ கேட்டும் அதே “இன உரிமையை”, ” சுய மரியாதையை” விட்டுக்கொடுக்கிறார்களா என்றும் அலசிப்பார்.

அப்படியானவர்களை உன் சுய அறிவால், அதாவது புலியின் பிரச்சாரங்களிலிருந்து வேறுபட்டு உன் சுய அறிவால் கண்டு கொண்டால் அவர்களை ஒதுக்கிவிடு, உன் இன விடுதலை அவர்களின் வாழ்வுரிமை, அவர்கள் சுய மரியாதைக்காக குரல் கொடுப்பவர்கள் இருந்தால் அவர்கள் எண்ணங்களையும் உள் வாங்கிக்கொண்டு, உன் சித்தார்ந்தத்தை மீளாய்வு செய்துகொள்.

தலைவன் இருந்தால் தான் பின்னால் செல்வேன் எனும் முட்டாள்க் கொள்கையை விட்டெறி, உன் சொந்தக் கைகளால் உன் சொந்த இனத்துக்கு என்ன செய்ய முடியும் என்று “நீயே” சிந்தி!

ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு பரிமாணத்தையும் சுய விமர்சனம் செய்து, மீளாய்வு செய். தோல்விகள் வருமிடத்து துவண்டு விழாது அவை வந்ததன் காரணத்தை அறிந்து, அதை விலக்கி மாற்று வழியைக் கண்டு பிடி.

நீ செய்யும் ஒவ்வொரு காரியமும், அங்கே அல்லலுறும் மக்களுக்கு எந்த வகையில் நேரடியாக நன்மையளிக்கிறது என்று உன் சொந்த ஆளுமையில் கண்டறி, அறிந்து செயல்படு.

ஒருவேளை உன்னைப் போல் கே.பி உணர்ந்தாரா என்பதை நீயே அறிந்துகொள்.

இல்லையென்றால், இந்த புளுடா வீரர்களையெல்லாம் தூக்கியெறிந்து இன்னொரு நண்பனைக் கூட எதிர்பார்க்காமல் நீயே களமிறங்கு.

இறுதி நேரத்தில் அரங்கெறிய “நாடகம்” கே.பியும் சேர்ந்து அரங்கேற்றிய நாடகமே, அப்போது கே.பியின் நம்பிக்கை தோற்றது, பிரபாகரனின் நம்பிக்கையும் தோற்றது என்று வைத்துக்கொண்டாலும், அவர்கள் உயிர் மேல் வைத்த நம்பிக்கை என்பது உன் சித்தார்ந்தத்துக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

எனவே யாரை நம்புவது என்று உன்னை நீ குழப்புவதை விட, உன்னால் உன் சமூகத்திற்கு நேரடியாக எதைச் செய்ய முடியும் என்பதை சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்தால், தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலிருந்து உனக்கும் நீ சார்ந்த சமூகத்துக்கும் கூட ஒரு புது வழி பிறக்கும்.

ஒன்று இரண்டாகி, அதுவே நாளை பல மடங்காகி அனைத்தும் நல்லதாகவே நடந்தால், இறுதியில் பயன் பெறப்போவது யார் தெரியுமா?

எந்த மக்களுக்காக இந்தப் போராட்டம் அவசியம் என்று நீ நினைக்கிறாயோ அந்த அப்பாவி மக்கள் தான் ! அதுதானே உன் விருப்பமும்? அப்படியானால் உன்னைத் தடுப்பது எது? உன்னை நீ “அறிந்துகொள்ள” நீயாகவே பாவிக்க வேண்டிய, உன் “மாய அறிவு” தான்.

அதை உடைத்தெறிந்து, உன் வழியிலேயே விழ விழ எழுந்து, உன் சுய அறிவை, நிஜ அறிவை, உண் கண் முன்னால் நடக்கும் “உண்மைகளுக்காக”ப் பயன்படுத்து.

அடுத்த தலைமுறையினருக்கு பயங்கரவாதம் எனும் வாதத்தை விட்டு வைக்கப்போவதில்லை என்று கோத்தபாய கூறுகிறார், அடுத்த உன் தலை முறைக்கு உண்மையான விடிவை பெற்றுத்தர உன் “சுய” அறிவை பாவிப்பதற்கு நீயும் உறுதிமொழிந்து கொள்.

உன்னை விட உனக்கொரு சிறந்த ஆசான் யாருமில்லை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 responses to “தியாகம் vs துரோகம்

 1. sekaran

  மே26, 2009 at 1:46 முப

  இந்த புலி மூட்டைகளுக்கு கொஞ்சஅறிவாவது வரக்கூடாதா என்று நீங்கள் ஏங்குவது புரிகிறது. ஆனால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

   
 2. thampipillai

  மே26, 2009 at 7:28 முப

  weldone

   
 3. ganesh

  மே26, 2009 at 12:34 பிப

  vanakam. naan nenkal elluthum sakala kadutaykal ellam vaasippen.nnkal eluthuvathu.unmaikal.but neenkal soolum aruvutaikal etkathakkathu.athai yar valinadathuvathu. enpathuthan pirasanai.nenkale ithatku nenkale kalathil irankalame.naankalum unkaludan kaikoorpom. thoolara.nanri vannakam.

   
  • arivudan

   மே26, 2009 at 1:52 பிப

   நன்றி ganesh,இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான தலைமைத்துவம் மக்களால், தம் சுய அறிவைக்கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு தலைமையாக அமைய வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

   அவர்கள் கடந்த காலங்களில் பட்ட துன்பங்களை இன்னும் பல தசாப்தங்களுக்கு நாம் எழுதிக்கொண்டே இருக்கலாம், விழிப்புணர்வு என்பதை மட்டுமே நாம் வரையறையாகக் கொண்டுள்ளோம், அதன் மூலம் நீங்களும் பயன்பெற்று உங்கள் சார்ந்த சமூகத்துக்கும், அதன் பின் அவர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் விழிப்புணர்வுக்காகவும் பாடுபட்டு, யாரின் கருத்தாக இருந்தாலும் சுயமாக சிந்தித்து,அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் ஒரு நிலையை அடைய வேண்டும், அப்படியான நிலையை அவர்கள் அடைந்தால் அவர்களுக்கான சரியான தலைமை எது என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

   எனவே, எமது சமூகத்துக்கான எமது பங்களிப்பாக விழிப்புணர்வை நோக்கிய எமது கருத்துக்களை இங்கே பதிவாக்கி வருகிறோம், அதை மட்டுமே எமது வரையறையாகவும் நினைக்கிறோம், அந்த வரையறையைத் தாண்டிய செயற்பாடுகள் எமது நோக்கத்ததை குலைத்து விடும். எப்போதுமே எமது நோக்கம் மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், இந்த வரையறையுடன் நாங்கள் செயல் படுவதையே விரும்புகிறோம்.

   இதன் மூலம் பயன்பெறும் உங்கள் போன்ற ஒரு சாதாரண மக்கள் தலைவர் நாளை இந்த சமூகத்தில் தூய மனதுடன் உருவாக வேண்டும் என்பதுதான் எமது அவா, அப்போதும் அந்தத் தலைவருக்கும் மக்களுக்கும் இடையில் நியாயங்களை பிரித்துணர வைக்கும் சக்தியாக மட்டும் நாங்கள் இருப்பதே எமது நோக்கத்தை நிறைவேற்றும்.

   பலபேரின் பின்னூட்டங்களில் கேட்டுக்கொண்டதைப் போல எமது கருத்துக்கள் நியாயமாகப் பட்டால் அவற்றை அல்லலுறும் மக்கள் பார்வைக்குக் கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து இதை ஒவ்வொருவரும் ஆரம்பிக்கலாம், எனவே உங்களால் முடிந்தால் மக்கள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இவற்றை அவர்களிடமும் கொண்டு சேர்க்க உதவுங்கள்.

   உங்களிடமும் இருக்கும் தூய சிந்தனைகளை மக்கள் முன் வையுங்கள், முடிவுகள் அவர்கள் மத்தியில் திணிக்கப்படாமல் சுதந்திரமாக அவர்கள் முடிவெடுத்து அழைப்பு விடுக்கும் தலைமை ஒன்று உருவாகும் நாளுக்காக இணைந்தே உழைப்போம்!

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: