RSS

தலை நிமிருமா தமிழினம்?

26 மே

வடுக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம், அதைப் பந்தாடிக்கொண்டிருக்கும் வெளியார் உலகம், இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை மட்டுமே அவர்களுக்கு மீளப்பெற்றுக்கொடுத்திருக்கும் “காலம்” இந்த மக்களை வாழ விடுமா அல்லது இன்னும் இன்னும் கொன்று விடுமா என்பது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் அவாவாகவும் இருக்கும்.

புலி எனும் “தடை” இல்லாத ஒரு சமூகம் நோக்கிய சிந்தனையை “தமிழர்” சமுதாயம் ஆரம்பித்து விட்டது.

புலிகள் எனும் இராணுவக் கட்டமைப்பு ஒரு புறமிருக்க, அரசியல் எனும் பெயரில் இன்னொரு பொறிமுறையையும், பரப்புரைக்கென்று ஒரு பொறிமுறையையும் வெவ்வேறு பிரிவுகளாக அவர்கள் இயக்கி வந்தார்கள் என்பது, பிரபாகரனின் அழிவுக்குப் பின்னரும் இன்று “தமிழினத்தில்” ஏற்படும் குழப்பங்களை வைத்து சாதாரணமாக யார் வேண்டுமானாலும் ஊகித்துக்கொள்ளும் நிலை இருக்கிறது.

புலியை அழிக்க வேண்டும் என்று திட்டமிடட சக்திகளும் இந்தக் கட்டமைப்புகளை ஒவ்வொன்றாக சிதற வைக்க வேண்டும் என்றுதான் விரும்பினார்கள், எனவே தான் ஆணிவேராக இராணுவக் கட்டமைப்பை முழு மூச்சுடன் தாக்கியழித்தார்கள்.

இருந்தாலும், வெவ்வேறு காரணங்களுக்காக சிறு சிறு குழுக்களாக வேறு பிரதேசங்களில் நிலை கொண்டிருக்கக்கூடிய புலிகள் இன்னும் முற்றாக அழிக்கப்பட வில்லை என்கிற உண்மையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அவர்களில் தம் தலைமையே போனதன் பின்னர் போராட்டத்தில் என்ன பலன் என்று சரணடைபவர்களும், சரணடைந்தால் தம் எதிர்காலம் என்னவாவது என்று தயங்குபவர்களும் என்று இரு சாரார் இருப்பார்கள்.

ஆனாலும், அவர்களால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது, மிக அண்மையில் ஒரு கட்டத்தில் அவர்கள் மக்களோடு கலக்காமல் உயிர் வாழவும் முடியாது.

அதுவரை அவர்களை இயக்கும் சக்தியாக அவர்களது மாற்றுப் பொறி முறைகள் இயங்கும்.

இதில் இலங்கை அரசாங்கத்திற்கும் சாதாரண தமிழ் மக்களுக்கும் மிகப் பெரும் தலையிடியாக இருக்கப்போவது அவர்களது பரப்புரைப் பொறிமுறையாகும்.

இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இலத்திரனியல் உலகிலேயே வாழ்வதால் இவர்களைக் கட்டுப்படுத்துவதோ அல்லது அறிந்து செயற்படுவதோ முடியாத காரியமாகும்.

எனவே அவரவர் மனம் போன போக்கில் சில காலங்களுக்கு இந்தப் பரப்புரை இடம்பெற்றுக்கொண்டே இருக்கும்.

இதன் பலமும் பலவீனமும் பிரபாகரனின் மறைவுக்கு முன்னும் பின்னுமாக பிரித்து அலசப்பட்டால், பிரபாரகரன் உயிரோடு இருக்கும் போதும் இவர்கள் செய்யும் எந்தவொரு பரப்புரைகளும் தட்டிக்கேட்கப்படவில்லை, இனிமேலும் தட்டிக்கேட்கப்படப்போவதில்லை எனும் முடிவுக்கு நீங்கள் வரலாம்.

அவர்களின் இணைய சுதந்திரம் கட்டுக்கடங்காதது என்பதால், இவர்களை நம்பும் ஆதரவாளர்களுக்கும் இவை ஒரு கட்டத்தில் சலித்துப் போகும் வரை அவர்கள் “இருப்பு” நிலையானதாக இருக்கும்.

ஆனால், அவர்கள் தொடர்ந்தும் போடப்போகும் “தமிழினச் செய்திகள்” எந்த வகையில் உண்மையான தமிழினத்தின் அவலத்தில் பங்கு பெறும் என்பதை நீங்கள் அலசிப் பார்த்தால், அதன் பின் அவற்றில் பயன் இருக்குமா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர்களால் நிறுவப்பட்ட “அரசியல்” பொறிமுறை என்பது வெற்றுக் காகிதத்தில் வெள்ளை மையில் கிறுக்கப்பட்ட சாசனம் மாத்திரமே.

அரசியற் துறை, அந்தத் துறைக்கொரு பொறுப்பாளர், அதன் பெயரில் ஒரு கடிதத் தலை இருந்ததே தவிர “அரசியல்” என்பது புலிகளுக்கு சுத்த சூனியமாக இருந்த ஒரு விடயமாகும்.

மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்ன விலை? என்று நடேசனிடம் கேட்டால் 10000 உயிர்களைப் பலி கொடுப்பதும் அதைக் கொண்டு 10000 டாலர்கள் செலவு செய்து ஒப்பாரி வைப்பதுவும் மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்த “அரசியற் கொள்கைகள்” ஆக இருந்திருக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் உயர் நிலை அதிகாரிகளை தமக்குப் பதிலளிக்கும் பொம்மைகளாக மாற்றியதன் மூலம் அவர்கள் ஒரு “நிர்வாகத்தை” நடத்தினார்களே தவிர, சுயமாக ஒரு நிர்வாக அலகோ அதை நடத்தும் திறமையோ அவர்களுக்கு இருக்கவில்லை.

ஏனெனில், அவர்களைப் பார்த்து மக்கள் பயந்து தான் வாழ்ந்தார்களே தவிர, அவர்களின் கொள்கைகளுக்கு இணங்கி வாழ வில்லை.

ஆக மொத்தத்தில் விடுதலை எனும் பெயரில் அவர்கள் அடக்கியாளப்பட்டார்களே தவிர, விடுதலை பெற்றவர்களாக வாழவில்லை.

முல்லைக் கடலின் அப்பால் இருக்கும் உலகம் என்ன நிறம் என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியரும் அவருக்குத் தெரிந்த விஞ்ஞானத்தை வைத்து, எப்படி சோப்பு டப்பாவில் மிதி வெடி செய்யலாம் என்றுதான் கற்பித்தாரே தவிர மன்னார்க் கடல் எல்லைக்கு அப்பால் பரந்து விரிந்திருக்கும் ஒரு உலகின் சமூக விருத்திக்கு இவர் சார்ந்த சமூகம் எவ்வாறு தயாராக வேண்டும் என்று இறுதி வரை கற்பிக்கவில்லை அல்லது கற்பிக்க விடவில்லை.

கற்பிக்க விடவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் நமக்கிருக்கிறது.

அதற்கு மிகப்பெரும் உதாரணம் புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற “தமிழ்” பாடசாலைகளாகும். இந்தப் பாடசாலைகளில் “தமிழைக்” கற்பித்தார்களோ இல்லையோ பிரபாகரனின் சித்தார்ந்தத்தை கற்பிக்கச் செய்தார்கள்.

தமக்கு முன் வாழ்ந்த சமூகத்துக்கும், தன்னோடு வாழும் சமூகத்துக்கும், தமக்குப் பின் வாழும் சமூகத்துக்கும் எதையுமே உருப்படியாக செய்யாத மூக்கறுந்த புலிகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்குள் நஞ்சூட்டுவதை மடடும் திறம்படச் செய்தார்கள்.

உணர்வு உணர்வு என்று முதல் பத்து வருடங்களில் ஒரு தலைமுறையையும், இரண்டாவது பத்தில் ஒரு சமூகத்தையும்,நடுத்தெருவில் விட்டுவிட்டு மூன்றாவது பத்தில் அவர் தம் சொகுசு வாழ்க்கையை மட்டும் கண்டவர்களாகவும் வாழ்ந்து முடித்தார்கள்.

இடைப்பட்ட காலத்தில் மக்களுக்காக எதையாவது செய்திருந்தால் கூட அந்த மக்கள் எகிறிப் பாய்ந்து ஓடியிருக்கத் தேவையில்லை.

மக்கள் அல்ல, அவர்களது மாவீரர்களின் குடும்பங்கள் மட்டுமே அவர்களிடம் இறுதியில் எஞ்சியிருந்தது.

அதற்கும் இரண்டு மிகப் பிரதானமான காரணங்கள் உண்டு, முதலில் இவர்களை வெளியில் விட்டால் இவர்கள் மூலமாக செல்லக்கூடிய அவர்கள் பற்றிய தகவல்கள், இரண்டாவது தாம் வெளியில் சென்றால் புலி எனும் பெயரில் தாமும் கொல்லப்படுவோமோ என்கிற அவர்களது அச்சம்.

இந்த இரண்டுமே நடந்தேறிய உண்மை நிகழ்வுகளாகும்.

எனினும், இப்படி இறுதி வரை புலியின் மிகக் குறுகிய வட்டத்திற்குள் வந்து விழுந்த மாவீரர் குடும்பங்களைத் தவிர, மற்ற அனைவரும் தப்பியோடி விட்டார்கள்.

புத்திசாலி சூசையும் தன் மனைவி, பிள்ளைகளை சூட்கேசில் பணம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்.

சூசையின் பிள்ளைகளே வெளி வர முடிந்தது என்றால் பிரபாகரனின் குடும்பம் எப்போதோ தப்பியிருக்க வேண்டும்.

இப்படி எந்த வகையில் சுற்றிச் சுழன்று பார்த்தாலும், மக்கள் எனும் பிரிவினர் தொடர்ந்தும் அடக்கியாளப்பட்டே வந்திருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புலப்படும் ஒரு விடயமாகும்.

ஆனாலும், இன்றைய அரச நிர்வாகத்தில் இருக்கும் தற்காலிக முகாம்களில் வாழ்வது இந்த மக்களுக்கு சிரமமான ஒரு விடயமாக இருக்கப்போவதில்லை என்றும் சொல்லலாம்.

ஏன்?

“தமிழீழம்” எனு் மாய உலகம் காகிதத்தில் ஒரு புலிச் சின்னத்துடன் இரு்ந்தாலும் அப்படியொன்று எப்போதுமே நிஜத்தில் இருந்ததில்லை, மாறாக இலங்கை அரசின் நிர்வாகக் கட்டமைப்பே தொடர்ந்தும் அங்கிருந்தது.

அந்தக் கட்டமைப்பில் ஓய்வூதியமும் பெற்றுக்கொண்டிருந்த எத்தனையோ மாஸ்டர்கள் அன்று புலியின் கட்டுப்பாட்டுக்குள்ளும், இன்று அரசின் தற்காலிகமுகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மாஸ்டர்கள் மாத்திரமன்றி டீச்சர்களும் இருக்கிறார்கள், மருத்துவர்கள், கங்காணிகள்,கிராம சேவகர்கள், அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் என்று இந்த யுத்தம் தீவிரமடையும் வரை மக்கள் வங்கிகளில் சம்பளப்பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் நூற்றுக் கணக்கில் இந்த மக்களோடு கலந்திருக்கிறார்கள்.

பிரபாகரனின் மகன் சார்ளஸ் அந்தோணியும், மகள் துவாரகாவும் கூட இலங்கை அரசின் கல்வித்திட்டத்தில் சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை எழுதிச் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார்குள், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கும் கல்விச் சான்றிதழ்கள் கிடைத்திருக்கிறது.

தமிழீழ மாயையை துடைத்தெறிந்து விட்டு இப்படி சமுதாயத்தின் அடி மட்டத்திற்குப் பயணம் செய்து, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை வாழ்வும் எப்படி அமைந்திருக்கிறது என்று தேடிப்பார்த்தால் அவர்கள் இலங்கை அரசின் நிர்வாகத்திற்குள் மிக இலகுவாக உள்வாங்கப்படும் வாழ்க்கை முறையையே தொடர்ந்தும் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.

புலியால் இந்த மக்களின் வாழ்வாதாரத்தையோ, வாழ்க்கை முறையையோ எந்த வகையிலும் மாற்றவும் முடியவில்லை, முன்னேற்றவும் முடியவில்லை.

முப்பது வருடங்களில் அவர்கள் செய்தது எல்லாம் இந்த மக்களுக்குத் துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொடுத்தது மாத்திரம் தான்.

அதைத்தவிர்ந்த அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு ஈழத் தமிழனுக்கும் புலியின் கிளர்ச்சியும், புரட்சியும் ஒரு மாற்றத்தையும்,முன்னற்றத்தையும் எப்போதும் வழங்கவில்லை.

மாறாக, தாம் சுதந்திரமாக அனுபவித்து வந்த அத்தனை விடயங்களுக்கும் புலிகளுக்கு கப்பம் கட்டும் நிலையைத்தான் பரிசாகக் கொண்டிருந்தார்கள்.

இந்த மூன்று தசாப்த இடைவெளிக்கு முன்னர் இந்தச் சமூகம் எப்படி வாழ்ந்தது என்பதை அறிந்துகொள்ளத் துணிந்தவர்கள், இனிமேலும் இவர்கள் அதை விட சிறந்த வாழ்க்கையை வாழலாம் என்பதையும் ஏற்றுக்கொள்வார்கள்.

இடையில் புலிச் சித்தார்ந்தம் பேச வந்த இன்டர்நெட் வீரர்களுக்கு வேண்டுமானால், இதுவெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாக இருக்கலாம், ஆனால் அப்பாவி மக்களுக்கு புலி எனும் தடை நீங்கியது அவர்கள் தாய் மண்ணில் அவர்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரமாகும்.

இந்தச் சுதந்திரத்தைப் பாவித்து அவர்கள் தலை நிமிரும் காலம் வர வேண்டும் என்பதுதான் மனிதநேயமுள்ள யாருடைய விருப்பமுமாக இருக்கும்.

ஆனால், அது பேச்சளவில் கூட அவ்வளவு இலகுவான விடயம் இல்லை.

ஏன்?

இன்று இலங்கையில் “யுத்தம் முடிந்துவிட்டது” என்பது விடுதலைப் புலிகளின் இராணுவப் பலம் அடக்கப்பட்டதன் வடிவம் மாத்திரமே.

புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாக கலந்து, விருப்பின் பெயரிலும் நிர்ப்பந்தத்தின் பெயரிலும் கூட வெளியாகியிருக்கலாம்.

விருப்பின் பெயரில் வெளியானவர்கள், தாமாக விரும்பி சரணடைந்தும் இருக்கலாம் அல்லது சரணடையாமல் இன்னும் ஒளிந்துகொண்டும் இருக்கலாம், அவ்வாறான சூழ்நிலைகள் தொடர்ந்தும் மக்கள் தங்கியிருக்கும் இடங்களை ஒரு பதட்டத்துடனேயே வைத்திருக்கும்.

புலிகளின் திட்டமிடலில் அல்லது நிர்ப்பந்தத்தில் பதுங்கியவர்களும் இதே வகை சூழ்நிலையை இடைத்தங்கல் முகாம்களில் தோற்றுவிக்கும் போது, இராணுவத்தின் சந்தேகக் கண்களை எப்போதும் திறந்து வைத்திருக்கும் தேவை அதிகரிக்கும்.

எனவே, இந்த மக்களின் நிம்மதி என்பது படிப்படியாக அடையும் ஒரு விடயமாக மாறுமே தவிர, உனடியாக ஒரே இரவில் கிடைக்கப்போவதில்லை.

அதைக் கொண்டு இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதில் முன்னாள் புலிகளின் விசைப்பலகை வீரர்கள் மும்முரமாக இருப்பார்கள்.

எப்படியாவது இந்த மக்களை தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து தம்மால் தான் விடுதலையைப் பெற்றுத்தர முடியும் எனும் மாயையை நிலைக்கச் செய்ய குறைந்தது இன்னும்ஒரு வருடத்திற்காவது இவர்கள் முயற்சி செய்வார்கள்.

ஆயுத பலத்தில் அடக்கியாளப்பட்ட மக்களும், மீண்டும் இவர்கள் உயிர்த்தெழுந்து விடுவார்களோ என்ற அரைகுறை பயம் இருக்கும் வரைக்கும் முகாம்களிலும் அடங்கித்தான் வாழ்வார்கள்.

உயிர் வாழ்ந்தால் போதும் என்று சரணாகதி அடைந்திருக்கும் இம்மனிதர்களில் அப்பாவி உயிர்கள் தொடர்ந்தும் புலிப் பீதியில் நிலைகுலைந்து, அதிலிருந்து மீள்வதற்குப் பல காலங்கள் எடுக்கப்போவது திண்ணம்.

இது ஒரு புறமிருக்க, மறு புறம் அவர்களை “மீட்டெடுத்த” இராணுவம் எனும் வகையிலும், அவர்களைக் காப்பாற்றிப் பரிபாலிக்கும் அரசாங்கம் எனும் வகையிலும் இந்த மக்கள் தம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்று அக்கறையுடனும், அதிகாரத்துடனும் கலந்து அரச “நிர்ப்பந்தமும்” தலையெடுக்கும்.

இவை இரண்டும் நெருக்கிக்கொண்டிருக்க, இவர்களுக்கு எதிர்காலத் தலைமையை யார் வழங்குவது எனும் நோக்கில் இவர்களை நாடப்போகும் தமிழ் அரசியல் கட்சிகள் “உயிர் தப்பி வரும் போது” ஒன்றாக வந்த மக்களை ” உயிர் தப்பிய பின் ” பிரித்தாளுவதன் மூலம் தம் அரசியல் நலன்களைப் பேண சில சக்திகளும் தலையெடுக்கும்.

கொடுக்கல் பின் வாங்கல் எனும் அடிப்படையில் அவர்களின் சாதாரண வாழ்க்கையைப் பந்தாடக் கிடைக்கப்போகும் சந்தர்ப்பத்திற்காக அரசியல் முதலைகள் காத்துக்கிடக்கின்றன.

தற்போதைய அரசின் இறுக்கமான நிலை, எதிர்க்கட்சியைக் கூட அண்ட விடாமல் தடுப்பது ஒன்றே மக்களுக்கு “நிம்மதியாக” இருக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உலக அரங்கில் ஒரு ஜனநாயக மக்கள் அரசை நடத்துவதாகக் கூறிக்கொண்டு அனைத்து வழிகளையும் மூடிய நிலையில் நெடு நாட்களுக்கு இலங்கை அரசால் தாக்கு பிடிக்க முடியாது.

எனவே, இதர வழிகளை மிக விரைவில் அவர்கள் திறந்தாக வேண்டும்.

அந்த நாள் வந்து பிரதான சமூக நீரோட்டத்திற்குள் இவர்கள் எடுத்துச் செல்லப்படும் போது,இவர்கள் சந்திக்கப்போகும் ” போராட்டங்கள் ” இன்னும் பல வகைப்படும்.

அவற்றுக்குத் தயாராகும் பக்குவம் அவர்களிடம் வருமோ இல்லையோ தாங்கிக்கொள்ளும் சக்தி இருக்கும்.

ஆனால் இப்படி அத்தனை பக்கத்தாலும் அடி வாங்கி, குட்டக் குட்டக் குனிந்து போகும் ஒரு சமுதாயமாக அவர்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு இன்னும் நீங்கள் தயாராக இருந்தால், இதை விட ஒரு பாரிய துரோகத்தை உங்கள் சமூகத்திற்கு நீங்கள் இழைக்கப் போவதில்லை.

அதற்காக புலிக்கெதிராகக் கோஷமிட்டோ அல்லது அரசுற்கெதிராக ஊர்வலம் போட்டோ நீங்கள் அவர்கள் மேம்பாட்டுக்காக உழைக்க முடியாது.

பாழாய்ப் போன புலிகளே இன்று “இன ஒற்றுமையை”ப் பற்றி கதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமது அரசியல் தந்திரத்துக்காக ஒரு சிலரும், உண்மையிலேயே ஏன் நாம் இப்படியானோம் என்று சிந்தித்து ஒரு சிலருமாக எப்படியோ பிரிந்து கிடக்கும் தமிழினம் ஒன்று பட வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

நீங்களும் ஒரு ஐக்கியத்தை விரும்பினால், இலங்கை எனும் தீவின் நாடாளுமன்றத்தில் அன்று இருந்தது போன்று ஒரு பலமான குரலாக, பலம் பொருந்திய “எதிர்க்கட்சியாக” நீங்கள் இனியும் இருக்க வேண்டுமானால், முதலில் உங்களிடம் இருக்கும் வேற்றுமைகள் களையப்பட வேண்டும்.

என்ன வேற்றுமை?

அதை உங்கள் கிராமத்தில் இருந்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டும், ஊர்க் குழுக்கள், பாடசாலைக் குழுக்கள், சாதிக்குழுக்கள், வர்க்கக் குழுக்கள், போராட்ட ரீதியான சித்தர்ந்த வேறுபாடுகள் என்று ஆரம்பித்து ” தமிழினத்தின் ” விடிவு எனும் ஒரே நோக்கினை அடிப்படையாக வைத்து சகல தரப்பின் கருத்துக்களையும் உள் வாங்கி, நன்மை தீமைகளை ஆராய்ந்து செயற்படும் ஒரு செயற்திட்டம் உருவாக வேண்டும்.

அதற்காக எப்படி புலியையும், புலி எதிர்பாளனையும் தேடிச்சென்று ஒன்று படுத்துவது என்று நீங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும் அவசியம் இல்லவே இல்லை.

உங்கள் சுற்று வட்டாரத்தில் ஒரு நாலு பேரில் ஆரம்பித்துப் பாருங்கள், இன்னும் நான்கு நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறுங்கள், சிறு துளி பெரு வெள்ளமாக நீங்கள் உருப்பெறலாம்.

அதை விட்டு, புலியை எதிர்த்தோம் அவர்கள் அழிந்ததே நிம்மதியென்று இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டால், இதே இடைவெளியைப் பாவித்து பரப்புரைப் புலிகள் உங்களை ஒதுக்கி, மீண்டும் அந்த மக்ளை “மந்தைகளாக்க” விரைந்து விடுவார்கள்.

நீங்கள் அவர்களை ஒதுக்காமல், அவர்களையும் “மக்கள் நலனுக்காக” இணங்கச் செய்வதன் மூலம் அவர்களின் சித்தார்ந்தத்தின் வங்குரோத்து நிலையை பிரித்துக் காட்ட வேண்டும்.

அடிப்படையில் தம் மக்கள் விடிவுக்காக எதையும் செய்யத் துணிந்த பல்லாயிரம் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்போதுமே தடையாக இருந்தது புலிகளின் கொடிதூக்கல்களும், அவர்கள் சார்பான கோஷங்களின் முன் நிலைப்படுத்தப்படுவதுதான்.

அந்த நிலையை இலகுவாகத் தூக்கியெறியும் சாதகமான நிலை இன்றுள்ளது, இதை நீங்கள் வேற்றுமைகள் களைந்து ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் உங்கள் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் கேலிக்குரியனவாக்கப்படும்.

கடந்த கால அரசாங்கங்கள் போன்றில்லாமல், இந்த அரசாங்கத்திடம் ஒரு செயற்திட்டம் உள்ளது.

நீங்கள் அறிந்திருந்த பழைய அரசியல் தாண்டிய ஒரு புது நிலை, புதுத் திட்டங்கள் நிறைந்த ஒரு செயற்பாட்டு வரைபு இங்கு இருக்கிறது.

அந்த வரைபை முதலில் நன்கு நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும்.

உலகமயமாக்கலில் இலங்கை அடுத்து எவ்வாறு இணைந்துகொள்ளப் போகிறது எனும் தூர நோக்குடனான அவர்களது திட்டங்கள் உங்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

சமுதாய மேம்பாட்டிலும், நாட்டின் அபிவிருத்தியிலும் “தமிழினம்” எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை அவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

இந்த நிலைகளை அறிவுபூர்வமாக மாத்திரமே எட்டலாம், அதுவே அந்த மக்களின் எதிர்காலத்திற்கும் சிறந்த வழியைக் காட்டும்.

தீவிரவாதத்தாலோ, கடும்போக்காலோ இனி வரும் காலங்களில் எதையும் சாதிக்க முடியாது.

இலங்கை அரசு இணங்கியிருக்கும் எதிர்காலத்திட்டத்தை திறந்த மனதுடன் அலசி ஆராய்ந்து, அதில் “தமிழினம்” ஆகக்குறைந்தது தம் பிரதேசங்களிலாவது எவ்வாறு தம் பங்கை பிரதானப்படுத்திக கொள்ளலாம்? அதன் மூலம் பழைய வடுக்கள் மறைந்த ஒரு புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பலாம் என்பதை அவர்களை வி்ட வாழ்க்கைத் தரத்தில் பல மடங்கு முன்னேறியுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

அதன் பின், அந்த அப்பாவி மக்களுக்கு,  அவர்கள் அபிவிருத்திக்கு வழி காட்ட வேண்டும்.

இலங்கையின் தற்கால புலி மோதலை மட்டும் சிந்தித்துக்கொண்டிருக்கும் நாம், இந்த நாடு எதிர்காலத்திற்காக இணங்கியிருக்கும் பொருளாதார இணக்கப்பாடுகள் பற்றியும் நம் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

தீவிரப் போக்கால் அவற்றை சீரழிப்பதற்காக அன்றி, ஒருங்கிணைந்த சமுதாயமாக நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுப்பதற்காக சோப்பு டப்பாவில் மிதி வெடி செய்து, ஒருவருக்கும் உதவாமல் மண்ணுக்குள் புதைத்த எங்கள் மூளைகளை நம் பிரதேசத்தில் நிலை கொண்டு, இன்னும் ஒரு வகையில் பொருளாதார கொள்ளைக்காகக் காத்திருக்கும் எதிர்காலத்தோடு போட்டியிட அவற்றைப் பாவிக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி, ஆகக்குறைந்தது நாம் செறிந்து வாழும் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியாவது நம் உழைப்பில், நம் சிந்தனையில் தங்கியிருக்க வேண்டும்.

நம் வளங்களை நியாயமாகப் பயன்படுத்தினால் மட்டுமே உண்மையான அபிவிருத்தி வரும் என்று எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களுக்கு அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதற்கான திட்டமிடல், செயற்திட்டம், ஒருங்கமைப்பு, ஒருங்கிணைப்பு என்று இதன் வேலைத்திட்டங்களின் பட்டியல் மிக நீளமானது.

இதை ஆரம்பிப்பதற்கு, அடிப்படை வேற்றுமைகள் களையப்பட வேண்டும்.

ஒரு நீண்டகால வாழ்வியல் போர் இப்போது ஆரம்பமாகிறது, அதற்குத் தமிழினம் முகங்கொடுக்குமா? தலை நிமிருமா? என்பது அவசரமாக விடை காணப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதிலிருந்து ஆரம்பிக்கும் நீங்கள், புலி செய்த அதே திருகு தாளம் மூலம் நாட்டின் பிற பகுதியிலும் வாழும் “தமிழர்களை” மறந்து போனால் இனியொரு காலமும் உடைந்து போன உறவுகளை புதுப்பிக்க முடியாது போகும்.

சமுதாய வளர்ச்சி எனும் நேர்கோட்டில் புலி குழப்பியடித்த “முஸ்லிம்களின்” உறவை மீளக்கட்டியெழுப்ப நீங்கள் மறந்தால் பிளவுண்ட சிறுபாண்மையினத்தின் அடி நிலையில் இருந்து தான் உங்களால் குரல் கொடுக்க முடியும்.

வடக்கும் கிழக்கும் உங்கள் சொந்தக் கரங்களால் பலப்படுத்தப்படவேண்டிய எதிர்காலத்தை நாடி நிற்கின்றன.

பொருளாதாரக் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பிக்க முதல் நீங்கள் விழித்துக்கொண்டாலேயன்றி தமிழினம் தலை நிமிர்வது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to “தலை நிமிருமா தமிழினம்?

 1. brown flore

  மே26, 2009 at 10:17 பிப

  I am a freqent traveller to Srilanka.Only those who live in colombo ask eelam, but they won’t go there like the diaspora. People in Jaffnacares about the education of their children gold and temples. They donot want army neither tigers, they want to live like everyone under the sun.Those wholive in other countries ask for eelam just as ahobby.

   
 2. arivudan

  மே27, 2009 at 9:04 முப

  //They donot want army neither tigers, they want to live like everyone under the sun//

  “ஆம்” brown flore , இதுதான் உண்மை.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: