RSS

வீழ்வது நாமாக இருந்தாலும்..

24 மே

தமிழகத்துக்கு எல்லாம் வேண்டும், ஆனால் இப்போது இதெல்லாம் தேவையா? 

சரி, இப்போது இல்லையென்றால் எப்போது?

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஒவ்வொரு ஊடகங்களும் தம்மை மூன்று வகையான பிரிவுகளுக்குள் உள்ளடக்கிக்கொள்கின்றன.

 • அரச சார்பு ஊடகங்கள்
 • எதிரணி சார்பான ஊடகங்கள்
 • நடுநிலை விமர்சகர்கள்

வேடிக்கை என்னவென்றால், விரலைத் தூக்கி, “ஆம்” இவர்கள் மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரையும் இனங்காட்ட முடியாத அளவுக்கு “சந்தர்ப்பவாதமே முதலீடு” எனும் கொள்கையோடு இந்த ஊடகங்கள் செயற்படுகின்றன.

அரச சார்பு ஊடகங்கள் எனும் போது, அவை மிகப்பிரதானமாக கட்சி சார்ந்தனைவையாகவே இருக்கின்றன. தற்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாளை ஆட்சியில் அமர்ந்து விட்டால் இவர்களே அரச சார்பான ஊடகங்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

தமிழக நிலை இவ்வாறு இருக்க, இலங்கையிலோ “லேக்ஹவுஸ்” எனும் நிலையான அரச ஊடகங்களின் இல்லம் இருக்கிறது.

தமிழ்,ஆங்கிலம்,மற்றும் சிங்கள மொழிகளில் தினசரி பத்திரிகைகள்,வார இதழ்கள், சஞ்சிகைகளை வெளியிட்டு ஓரளவில் எப்போதுமே அரசு சார்ந்த “நடு நிலையை” இவை கடைப்பிடிக்கும்.

நாளை ஆட்சி மாற்றம் வரும் போது, எடிட்டர் போர்ட் அப்படியே மாறி அடுத்த ஆட்சிக்குத் தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

அல்லது, இருப்பவர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு “சலாம்” போடுபவர்களாக இருந்தால், நிலையாகவும் இருப்பார்கள்.

ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஊடகங்களின் பங்கு மிகப் பிரதானமானது.

தமிழகத்தில் நிலைமை வேறாக இருந்தாலும், ஏறத்தாழ சூழ்நிலைகள் ஒன்றையொன்று ஒத்தனவையாகவே இருக்கும்.

ஒவ்வொரு ஆட்சி வரும் போதும் தலைமை ஏட்டிலிருந்து, தலைமைச் செயலகத்தின் காவலாளி வரை ஒவ்வொருவரும் இதில் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று கேட்டால் அது நிச்சயமாக மக்களின் அசமந்தப் போக்குதான் என்று வரையறுத்துக் கூற முடியும்.

வாக்களிப்பதோடு நின்று விடாமல் மற்றவர்கள் பழிவாங்கப்படுவதையும் ருசித்து, ரசிக்கும் ஒரு கலாச்சாரம் நம் இனத்தில் இருப்பது மிகக் கேவலமான ஒரு செயலாகும்.

அதை ஊட்டி வளர்ப்பது இந்தக் கேவலமான ஊடகங்களாகும்.

அ.தி.மு.க காரன் ஆட்சியில் பழி வாங்கப்பட்டவன் தி.மு.க ஆட்சியில் அவனைப் பழிவாங்கவே ஆசைப்படுகிறான், அவன் பழிவாங்கப்பட்டதும் தி்.மு.க தொண்டன் சந்தோஷ வெள்ளத்தில் முக்குளிக்கிறான்.

இப்படி அடிப்படை மனித சுகத்திலிருந்தே அரசியல் விருத்தியடைகிறது.

“தமிழர்” எனும் உறவை, இலங்கை வாழ் “தமிழ் மொழி” பேசும் மக்களோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக மக்களை, இதே மாயை வைத்து எங்கெல்லாம் கொண்டு செல்லலாம் என்று போட்டி போட்ட தமிழக ஊடகங்கள் தம் மூக்கறுந்த நிலையை தேர்தலில் சந்தித்திருந்தாலும், அந்த விக்கிரமாதித்தர்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

ஆனால், சாதாரண குடிமகனின் அபிலாஷைகளோ வேறு விதமானவை.

ஒரு நாள் காலையில் எழுந்து, அன்றைய காலைக் கடன்களை முடித்து, காலை உணவு உண்டு, தொழிலுக்குச் சென்று, வீட்டில் மனைவியாள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி, மாலை வந்து மீண்டும் குடும்பத்தோடு சங்கமமாகி, வீட்டுக் கடமைகளில் பங்கெடுத்து, ஆழ உறங்கி நாளை மீண்டும் தன் செயற்திட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

இதில் வீடு தவிர, வேறு இடங்களுக்குள் அவன் கால் நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவன் விரும்பியோ விரும்பாமலோ நாட்டின் அரசியல் அவன் வாழ்க்கைக்குள் புகுந்து கொள்கிறது.

விவசாயியின் விளைச்சல் நிலத்தில், அவன் நிலத்துக்கு வரும் தண்ணீரில், அவன் அறுவடையில், அவன் தூக்கிச் சுமக்கும் அத்தனையிலும் இந்த அரசியல் புகுந்து விளையாடி, அவன் வீடு தவிர்ந்த அத்தனையிலும் அவன் விரும்பாத சுமையை அவனுக்கு வழங்குகிறது.

இத்தோடு அது விட்டிருந்தால், தன் விருப்பு வெறுப்புக்கு மேலாக அடி மனதின் “உணர்வுகளுக்கு” இடங்கொடுத்து அவன் வேறு சில விடயங்கள் பற்றிய சிந்தனைக்குள்ளும் இணைந்து கொண்டு, தன்னையும் தன் சிந்தனைகளையும், தன் “அறிவையும்” வளர்த்துக்கொண்டு, தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனுள்ளவனாக மாறிவிடுவான்.

ஒவ்வொரு கிராமத்திலும் இப்படியான ஓரிருவர் உருவாகிறார்கள், இல்லெயென்று மறுப்பதற்கில்லை, அதன் பின் அவர்கள் “அறிவை” இந்த அரசியல் எப்படி வழி நடத்துகிறது என்பதைப் பொறுத்து மீண்டும் அவன் இந்த அரசியல் ஜீவநதியில் இணைந்து கொண்டு, தன்னை விட “அறிவில்” குறைந்தவர்களை எப்படிப் பந்தாடுகிறான் அல்லது எந்த அளவில் வழிநடத்துகிறான் என்பதைப் பொறுத்து அவன் சார்ந்த சமூக மேம்பாடும் அடங்குகிறது.

இதுவெல்லாம் பேச்சுக்கும்,எழுத்துக்கும் நன்றாக இருந்தாலும், தமிழகத்தின் இன்றைய பிரச்சினை ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக இருக்க வேண்டிய அவன் வீட்டிற்குள்ளேயே புகுந்து விட்ட “துரதிஷ்ட” நிலையாகும்.

தன் சொந்த நிலத்தில் உழுது அறுவடை செய்து கொள்ளவே அவன் ஒரு வங்கியில் கடன் பெறும் தேவை, அந்தக் கடனுக்கு வட்டி செலுத்தும் தேவை, அந்த கடனைத் தாங்க முடியாமல் நொந்து கொள்ளும் தேவை, தம் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத மனச்சுமை என்று ஆரம்பித்து அவன் சார்ந்த அந்த நாலு சுவருக்குள்ளேயே அவன் தேவைகள் மிரண்டு போய் கிடக்க, வெளிச்சத்தில் இருந்து சிந்திக்கவும் முடியாமல் அவனுக்கு மின்சாரப் பிரச்சினையும் சேர்ந்து வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பல தேவைகளைச் சென்று அறிந்து, மக்கள் விடிவுக்கு உழைக்க ஊடகங்கள் தயாராக இல்லையென்றால், அந்த ஊடகங்களுக்கு அனுமதி கொடுத்து, அவற்றை வைத்துத் தம் “அரசியல்” பிழைப்பை நடத்தும், ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் தினம் தினம் தீபாவளியே.

சமூகத்துக்காக குரல் கொடுக்கும் உங்கள் கட்டாயக் கடமையை புறந்தள்ளிவிட்டு, எப்போதுமே உங்கள் “பெயரை” முதன்மையாக்கிக்கொள்வதற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும், உங்கள் சொந்த சமூகத்தின் வளர்ச்சியில் விழும் சாட்டையடி ஆகும்.

உங்கள் கடைசி வாசகனையும் ஏமாற்றி, உணர்ச்சியூட்டி அவனிடம் இருக்கும் பைசாக்களை உருவுவதிலேயே நீங்கள் கண்ணாக இருந்தால், உங்கள் “கருத்துக்கள்” அன்றைய நாள் மட்டுமே உயிர் வாழும், அத்தோடு நிற்காமல் அது ஒரு சமூகத்தின் வாழ்க்கையை தேவையற்ற விதத்தில் பந்தாடும்.

விவேகானந்தரின் கருத்துக்கள், புரட்சிக்கவி பாரதியின் கருத்துக்கள், பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் எல்லாம் அன்று உங்கள் ஊடக வியாபாரத்தில் சிக்கியிருந்தால், இன்று எந்த மக்களையும் சென்றடைந்திருக்காது.

நல்ல வேளையாக, அவர்கள் தப்பிக் கொண்டார்கள்.

“அரசியல்” நிலைப்பாடுகளை விட “சமூக” நிலைப்பாடே வளர்ச்சியடையும் நாடுகளின் ஊடகங்களின் மிகப் பிரதானமான பங்காக இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால், எங்கள் ஊடகத்தை நடத்தும் வருமானம், கிளைகளைப் பேணும் வருமானம், பணியாட்களின் கொடுப்பனவு என்று எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது? என்று ஒரு கேள்வியை முன்வைக்கலாம், ஆனால் அந்தக் கேள்வி மூலம் நீங்கள் ஒரு சமூகத்தை தொடர்ந்து முட்டாளாக்க முனைவது மிகத் தவறாகும்.

அதற்கான மாற்றுவழியை நீங்கள் தேட வேண்டும், உண்மையைச் சொல்லி மக்கள் முன் நிலைக்க உங்களை நீங்கள் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

முன்னைய நாட்களில் ஒரு ஊடகத்தில் வரும் பிரதான செய்தியென்பது, அந்த ஊடகத்தின் செய்தியாளர் மிகப் பெரும் சிரத்தையெடுத்து, மிதிவண்டியில் போய், கால் நடையாகப் போய், ஆதாரங்களை சேகரித்து, மிகப் பக்குவமாக சமூகத்தின் பார்வைக்காக முன்வைக்கப்பட்டது.

ஒருவேளை உங்கள் ஊடகங்களின் வரலாறும் இப்படியிருக்கலாம், ஆனால் இப்போது அனேகமான ஊடகங்களின் பிரதான தலைப்புகள் வெறும் “ஊகங்கள்” அடிப்படையிலேயே அமைவதைக் காணும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இன்டர்நெட்டின் வளர்ச்சியின் பின்னர், யார் எழுதுகிறார் என்ற மூலமே தெரியாமல், யாரோ சொன்னதை வைத்து “காசு” பார்க்கும் யுக்தி நம்மிடையே அதிகரித்துவிட்டது.

இதிலும் மிகச் சிறப்பாக “ஈழ மக்கள்” தொடர்பான செய்திகளில் 90 வீதமானவை “ஊகங்களில் இருந்து விருத்தி செய்யப்பட்ட” கற்பனைக் கதைகளாகவே இருந்து கொண்டு வருகிறது.

இதன் மூலம் தமிழக ஊடகங்கள் எதைச் சாதிக்கப்போகின்றன என்று பார்த்தால், அன்றைய “நாள்” வருமானத்தை உயர்த்திக்கொள்வது மாத்திரம் தான்.

இவர்களது கற்பனைக் கதைகள் இலங்கையின் பிற பகுதியில் வாழும் “தமிழ்” மக்களுக்கொ அல்லது தற்போது யுத்தத்தால் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி மக்களுக்கோ எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

ஒரு சமூகத்திற்கான குரலை உலகம் நம்பக்கூடிய “உண்மைகளை” நீங்கள் எல்லோரும் சேர்ந்து முன்வைத்தால், நீங்கள் சார்ந்த அரசியலும், உங்கள் நாடு சார்ந்த அரசியலும், அதன் நலன் சார்ந்த பிற அரசியல் சக்திகளும், அவை சார்ந்த உலக அரசியலும் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

கடந்த காலங்களில் “தமிழ் மக்கள்” எனும் போர்வையில் நீங்கள் வெளியிட்ட 98 வீதமான செய்திகள் ஊகங்களையும், மிகத் தெளிவாக புலி ஆதரவு இணையங்களிலிருந்தும் வெட்டி ஒட்டியனவையாக மாத்திரமே இருந்து வந்திருக்கிறது.

அதன் மூலம் எதையாவது நீங்கள் சாதித்தீர்களா?

அண்மையில் கூட நக்கீரன் கோபால் மீண்டும் தான் ஒரு சிறப்பான “ஊடக விபச்சாரி” என்பதை நிரூபித்திருந்தார்.

அவர் அன்றைய நாளில் “காசு” பார்த்ததைத் தவிர வேறு எதையாவது சாதித்தாரா? இலலை சாதிக்கத்தான் முடியுமா? அது எந்த வகையிலாவது “தமிழ்” மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?

இல்லவே இல்லை!

நீங்கள் சார்ந்த சமூகத்திற்குக் குரல் கொடுக்க நீங்களே தயாராக இல்லை, ஆனால் சிங்கள ஊடகங்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லை என்று கூப்பாடு வேறு போடுகிறீர்கள்.

நாளை திடீரென தமிழக பத்திரிகைகளில்..

“துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல”: புலிகளின் தளபதி வெற்றிக்குமரன் சூளுரை.

என்று ஒரு செய்தியை இவர்கள் பிரசுரிப்பார்கள், இதற்கு ஆதாரம் எல்லாம் கடைசி வரை தேட மாட்டார்கள்,சூடான செய்தியைப் பிரசுரித்து நாலு “காசு” பார்த்தால் போதும் என்பது தானே இவர்களது கொள்கையும்.

இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் இயக்கம், நிலை பெற்றிருந்த ஒவ்வொரு “அங்குல” நிலத்தையும் இலங்கை இராணுவம் மீட்டு விட்டது.

இப்போது இலங்கைத் தீவில் துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்திருக்கிறது.

அல்லல் பட்டு, அவதிப்படும் மக்களுக்காக உலகமே குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது, ஆனால் நீங்கள் மட்டும் நாளையும் இப்படியான “உணர்ச்சியூட்டல்” கற்பனைகளை கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்து, ” புலி அப்போ திரும்பி வரும்” இப்போ நாங்கள் அந்த மக்களுக்கு என்னதான் உதவி செய்தாலும், நாளை அதுவும் அழிந்து போகும் எனும் மன நிலைக்கு சாதாரண மக்களை தள்ளிக்கொண்டு செல்லப்போகிறீர்கள்.

ஏற்கனவே அவன் மீது இருக்கும் சுமைகளைத் தாண்டி ஒரு “இன உணர்வின்” மேலீட்டால் தன் கையில் இருந்தது, கடன் வாங்கியாவது கொடுத்தது என்று தாம் சார்ந்த மக்களுக்காக அவன் எதையாவது செய்த போதும் நீங்கள் உண்மைகளைப் பேச வில்லை, இனியும் இல்லையென்றால் எப்போது தான் உண்மைகளை எடுத்துரைக்கப் போகிறீர்கள்?

சந்தேகத்தின் பலனை அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இன்டர்நெட் புலிகள், மக்களின் உணர்வுகளோடு தொடாந்தும் விளையாடுகின்றன.

புலிகள் எனும் உயர் “பிரம்மை” இவ்வளவு சீக்கிரம், அதுவும் இத்தனை கேவலமாக, இறுதி நாளில் அதே சிங்களவனிடம் உயிர் பிச்சை கேட்டுச் சாகும் என்று சில தீவிர புலி ஆதரவாளர்களால் இன்னும் நம்ப முடியவில்லை.

எனவே, அவர்கள் மறு புறத்திலிருந்து இப்போது ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது, மக்களோடு மக்களாக புலிகள் சென்று விட்டார்கள், அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வேட்டையில் இறங்குவார்கள் என்பதுதான் அது.

இந்தப் பிரச்சாரமானது, உங்கள் மூலமும் முன்னெடுக்கும் போது, உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்று தெரியுமா? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

இப்படி அவிழ்த்துவிடப்படும் பிரச்சாரம், இலங்கை அரசின் தற்போதைய “வடிகட்டும்” நடவடிக்கையைத்தான் நியாயப்படுத்தும்.

சர்வதேச அரங்கில் இது அவர்களுக்கு மிகப்பலமான பிரச்சாரமாக அமையும்.

இடம்பெயர்ந்து வந்த மக்களில் புலிகள் இன்னும் இருப்பார்கள், அவர்களை களையெடுத்தால் தான் ஒரு மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும் எனும் அவர்களின் “மனிதாபிமான” சிந்தனைக்கு மீண்டும் ஒரு தடவை உலகம் “மெளனம்” காக்கும்.

தங்குதடையின்றி, முகாம்களில் இருக்கும் இளைஞர்கள்,யுவதிகள் எடுத்துச் செல்லப்படுவார்கள், வடிகட்டப்படுவார்கள், உண்மையைப் பேசினாலும் சந்தேகக் கண்களுடன் பார்க்கப்படுவார்கள், சில வேளை பல காலங்கள் இருட்டறையில் இருந்து, அவர்கள் பார்க்காத ஒரு புது உலகம் தயாரான பின்னரே “உயிரோடு” இருந்தால் வெளிக்கொணரப்படுவார்கள்.

இப்படி நடந்தால் அது “கொடுமை” என்று வாதிக்கத் தெரிந்த எங்களுக்கு சொந்த மக்களுக்கே நாம் ஆற்றும் இந்தப் பிரச்சாரக் “கொடுமையை” எதிர்த்து நிற்கும் திராணியில்லை அல்லவா?

அதை எதிர்த்தால் நாளைய வருமானம் பாதிக்கப்படும் என்ற உண்மையை ” உணர்வால் ” நீங்கள் மறைப்பீர்கள், இன்றைய இந்தத் தலைப்பை நாளை இன்னொரு வடிவத்தில் இன்னும் பல “தளபதிகளின்” பெயர்களோடு வெளியில் கொண்டுவார்கள், நீங்களும் உங்கள் வர்த்தக நலனை அக்கறையோடு செய்வீர்கள்.

ஆனால், உங்கள் கருத்தைக் கொண்டு செல்ல நினைக்கும் அந்த அடிமட்டக் குடிமகனின் அபிலாஷைகளையோ அல்லது அல்லலுறும் உண்மையான “அப்பாவித் தமிழாகளின்” நிலைகளையோ நீங்கள் நினைத்துப் பார்க்கப் போவதில்லை.

அப்படி நீங்கள் “உண்மையாக” நினைத்து, எதையும் ஆராய்ந்து, சரி வர ஆய்வு செய்து, உங்கள் நேரடிப் பங்களிப்பில் “செய்திகளை” மக்கள் முன் கொண்டு வந்து சேர்க்காத வரை நீங்ள் தொடர்ந்து உங்கள் ஊடகங்களை வைத்து விபச்சாரம் செய்பவர்களாகவே கணிக்கப்பட வேண்டியவர்கள்.

பிரிவினை வாதத்தை இந்திய மண்ணில் இன்னும் எத்தனை காலத்திற்கு நீங்கள் தூண்டினாலும், அது வளரப்போவதில்லை, காரணம் உங்களுக்கே அதில் உண்மையான ஈடுபாடு இல்லை.

எனவே, “தமிழர்கள்” என்ற உணர்வூட்டலில் இருந்து வெளியேறி , பல சூசைகள்,இளந்திரையன்கள்,நடேசன்களைக் “காவு” கொடுத்துவிட்டு, புதிது புதிதாக “அறிவழகன்கள்”, “வெற்றிக்குமரன்களை”க் கொண்டு வரும் புலியின் செய்தியையும், எதுவுமே நடக்கவில்லை என்று மற்றவர்கள் சொன்னால், அவர்களின் தகவல்களையும், நீங்கள் அலசி ஆராய்ந்து, “எக்ஸ்ரே ரிப்போட்” என்று கொப்பி அன் பேஸ்ட் செய்யாமல் , மக்களுக்கு “உண்மைகளைத்” தெளிவு படுத்துங்கள்.

தமிழக உறவுகளின் தொடர்பும்,உறவும்,உதவியும்,ஈடுபாடும் இலங்கை வாழ் மக்களுக்கு நிச்சயம் என்றும் தேவையான விடயம்.

அவர்களைப் பந்தாடும் புலிப் பிரச்சாரங்கள் மற்றும் அரச சார்பு பிரச்சாரங்களுக்கும் எதிராக நீங்கள் இப்போதும் “சுயமாக” சிந்திக்க ஆரம்பிக்கவில்லை என்றால் எப்போது தான் சிநதிப்பீர்கள்?

ஊடகங்கள் சமூக வளர்ச்சியில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதைத் தெரியாமலா நீங்கள் ஊடகங்களை நடத்தகிறீர்கள்?

“தமிழினம் அழிந்து கொண்டிருக்க டில்லியில் பதவிப்பேரம்” என்று உங்கள் அரசியல் காழ்ப்புணர்வை மக்களின் உணர்வலைகளுடன் விளையாடத் துணியும் நீங்கள், அப்போ மத்தியில் ஒன்றுமில்லாமலும் மானிலத்தை வழி நடத்தலாம் என்று தெரிந்தால், நீங்கள் சார்ந்த கட்சியும் தேர்தலில் ஏன் மத்தியில் இருக்கும் ஒரு கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கேள்வி கேட்க வேண்டும், அதுதான் ஊடக தர்மம்.

இன்னும் “தமிழினம்” எனும் பெயரில் “புலிகளையே” பிரதிநிதித்துவம் செய்கிறீர்களே தவிர, ஏறத்தாழ 275000 “தமிழர்கள்”, “உயிரோடு” அந்த யுத்தப் பிரதேசங்களில், தற்காலிக முகாம்களில் இருக்கிறார்களே அவர்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் இல்லை?

அவர்களுக்கு உங்கள் பத்திரிகைகளை விற்க முடியாது, ஆனால் வெளிநாடு வாழ் புலிகளுக்கு ஆகக்குறைந்தது இன்டர்நெட் சந்தாவாவது விற்கலாம் என்றா?

இந்த மக்கள் தவிர “இலங்கையின்” பிற பகுதிகள் எங்கும் “தமிழர்கள்” செறிந்து வாழ்கிறார்களே, அவர்களுக்கு எத்தனையாயிரம் பிரச்சினைகள் இருந்தது, இருக்கிறது? அப்போதும்,இப்போதும், எப்போதும் அவர்களுக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

கடந்த காலங்களை விடுங்கள், இப்போதும் இல்லையென்றால் எப்போதுதான் இனி உங்கள் சமூகப் பொறுப்புணர்வை வெளிக்காட்டுவீர்கள்?

“உணர்ச்சியூட்டல்” ஆயுதம் மூலம் இந்த உலகில் அழிந்த இனம் “தமிழினம்” எனும் வரலாறு ஒரு நாள் பதியப்படுமானால், அதன் மிகப் பிரதானமான பங்காளிகளாக நீங்கள் தான் இருப்பீர்கள்.

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன், உண்மையாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்தாவது, நீங்கள் மாற வேண்டும் என்பதே எமது அவா!

உங்கள் “சொந்த” முயற்சியில், உண்மைகளை அலசி ஆராய்ந்து அவற்றை வெளிக்கொண்டு வாருங்கள், உலகத் தமிழர்களை ஒன்று திரட்டி அவர்கள் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

“வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 responses to “வீழ்வது நாமாக இருந்தாலும்..

 1. brown flore

  மே24, 2009 at 4:11 பிப

  correct

   
 2. thampipillai

  மே24, 2009 at 5:17 பிப

  ungaludaja artical nanraka ullathu.makkal majail erunthu velije vatakkudijathaka erukku. unkalidam erunthu ennum nalla katuththukal vatavendum (makkaluku pitijosanamana)

   
 3. thampipillai

  மே24, 2009 at 5:23 பிப

  srilankavil adthutha kaddamaka sirupanmai makkalin utimaikalukum, kouravathukum sathakamana nadavedikkaikalai muniruthi unkaludaja artical vatavenum. appothuthan ilankai thivu sorkka thivaka maarum.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: