RSS

வலையில் சிக்கிய எ(பு)லி?

22 மே

இராணுவத்திற்கு எதிரான போரில், இறுதி நாள் வரை முழுக்க முழுக்க இறந்து போனது பெண் புலிகளே.

அவர்களைக் “காவு” கொடுத்து விட்டு ஆண்புலிகள் ஒதுங்கிக் கொண்டார்கள், அதுவும் “நல்லது” நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்.

வடக்கு நோக்கிய இராணுவ நடவடிக்கை மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளைகளில், இலங்கை அரசு பல போர்களை நடத்தி வென்ற உலகப் பெரும் இராணுவத் திட்டவியலாளர்களின் திட்டமிடல் போன்று “பாதுகாப்பு வலயங்களை” அறிமுகப்படுத்த ஆரம்பித்தது.

வெளியுலகைப் பொறுத்தவரை அது இராணுவம் மக்களை பாதுகாப்பாக ஒதுங்குவதற்காக ஒதுக்கித்த ரும் இடங்களாகவும், வீரமிருந்தால் புலிகள் முன்னால் வந்து போராடிப் பார்க்கட்டும் எனும் சவாலாகவுமே பார்க்கப்பட்டது.

ஒவ்வொரு தடவை பாதுகாப்பு வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், முழு வன்னியையும் ஆளில்லா விமானம் படம் பிடித்துக்கொண்டே இருந்தது.

மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிமுகப்படுத்தப்படும் இப்பகுதிகளில்  புலிகள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்வார்கள், பின்னர் “தமிழர்கள்” கொல்லப்படுகிறார்கள் என்ற ஒப்பாரி வைப்பார்கள் என்பதையெல்லாம் எதிர்பார்க்காமல் இந்த யுத்தத்தை முடித்தே ஆக வேண்டும் என்று இலங்கை இராணும் முன்னேறியிருக்காது.

இதுவெல்லாம் நடக்கும் என எதிர்பார்த்த இலங்கை இராணுவம் தன் களப் போக்கை ஒரு விதமாகத் தீர்மானித்து முன்னேறிக்கொண்டிருக்கும் அதே வேளை, புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை அறுத்தெறிந்து ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் பணியையும் இலங்கை அரசு செய்து சம காலத்தில் கொண்டேயிருந்தது.

அதன் உச்சகட்டமாகவே நோர்வேயை உத்தியோகபூர்வமாக கழற்றி எறிந்தது.

நடந்து முடிந்த இந்த யுத்தத்தைப் பொறுத்தவரை அது வெறும் இலங்கை மண்ணில் மட்டும் நடந்த யுத்தமல்ல, சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக இந்த யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

அந்த யுத்தத்தின் விளைவுகளை ஆராய்வதில் மும்முரமாக இருந்த அரசுகளால், தெருவில் இறங்கிய புலி ஆதரவாளர்களைக் கவனிப்பதற்கு வேறாக நேரம் செலவழிக்க முடியவில்லை.

பூகோள வர்த்தக அமைப்பில் முக்கியமான ஒரு புள்ளியில் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் மீது கண்வைக்காத மேலை நாடுகள் அதுவும் பலமுள்ள மேலை நாடுகள் இல்லவே இல்லை எனலாம்.

வர்த்தக ரீதியாக மாத்திரமன்றி, பிராந்திய ஆதிக்கத்தைப் பேணவும் கூடிய அரசியல் ரீதியான இலாபமும் பெற்றுத்தரக்கூடிய பல இயற்கையான வளங்களையும், இடங்களையும் கொண்டது இலங்கை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

காங்கேசன்துறை,முல்லைத்தீவு,திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி,பேருவளை, கொழும்பு, நீர்கொழும்பு, புத்தளம், மன்னார்,பூனேரி என்று நாட்டைச் சுற்றியிருக்கும் பிரதான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரதேசங்கள், பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த வேறொரு சக்தி முயலுமானால் அவர்களுக்கு இராணுவ இலாபங்களையும் வழங்கக்கூடிய இடங்களாகும்.

இதில் மிகப்பிரதானமான பல பகுதிகள் விடுதலைப் புலிகளிடமே இருந்தது.

அவை சரியான வர்த்தகத் திட்டமிடலுடன், ஆகக்குறைந்தது ரணில்-பிரபா ஒப்பந்தத்தின் பின்னராவது செயற்படுத்தப்பட்டிருக்குமாயின் “தமிழீழம்” வேறு நிலையை அடைந்திருக்கும்.

ஆனாலும், சொந்த மக்களை சுரண்டி வாழ்வதிலேயே புலிகள் நாட்டமிருந்ததால் அவர்களிடம் சிறப்பான அரசியற் திட்டங்கள் இதுவரை இருக்கவில்லை.

இத்தனை நலனுள்ள ஒரு தீவின் உள்ளக அரசியலை “புலியுடன் போர்” எனும் குறுகிய நிலையில் இருந்து இதற்கு முன்னரான அரசுகள் நடத்தி வந்தாலும், சர்வதேசத்தையும் தம் நாட்டின் உண்மையான பெறுமதியையும் அளந்து கொண்ட ஒரு முதலாளித்துவ அரசாக இவ்வரசு வளரப்போகும் முதல் அறிகுறியாகவே விடுதலைப் புலிகளின் அழிப்பு கவனிக்கப்பட வேண்டும்.

புலிகளின் பலம், பலவீனத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த முன்னைய அரசுகள் இழைத்த தவறை மீண்டும் இழைக்கத் துணியாமல் வேறு ஒரு வகையில் அரசியல் செய்வதை விரும்பிய அரசாக மஹிந்த அரசு காணப்படுகிறது.

எனினும், பிராந்திய நலன் என்று வரும் போது இலங்கையின் மிக முக்கிய பிரதேசங்களை ஏதாவது ஒரு வகையில் கையகப்படுத்தும் தேவை இந்தியாவுக்கு இருக்கிறது, இந்தியாவை மீறி வேறு சக்திகள் இலங்கையில் நிலைகொள்ளுமாக இருந்தால், அது இந்தியாவின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் வெகுவாகப் பாதிக்கும்.

எனவே, பிராந்தியத்தில் ஏற்படும் அரசியல் தற்ப வெட்ப நிலைகளுக்கேற்ப தம் எதிர்காலத்திட்டங்களை இந்தியா நவீனப்படுத்தியே ஆக வேண்டும்.

மஹிந்த அரசின் திடமான நிலைக்குப் பின்னால் வேறு பல வல்லரசுகளின் துணை நின்றாலும், புலி எனும் இயக்கத்திற்கு பிரபாகரன் எனும் பெயர் எப்படி வலுவானதோ, அதே போன்று புலியின் இராணுவ பலத்திற்கு கருணா எனும் பெயர்தான் முதுகெலும்பாக இருந்தது என்பதை இப்போதாவது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

30 வருடங்கள் எத்தனையோ சாதனைகள் செய்ததாகக் கூறும் விடுதலைப் புலிகள் மொத்த இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருந்தார்கள், அப்படி ஒரு பலமான நிலையிலிருந்து அவர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் தம்மைத்தாமே திருப்திப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் இராணுவத்தைக் கொன்று குவித்த கதைகளை புலிகள் கூறிக்கொண்டாலும், அத்தனை தடைகளையும் மீறி புலிகளால் ஒரு வெற்றியைத் தானும் பெற முடியாமல் போனதும், இராணுவம் முழு மூச்சில் இந்தப் போரை நிறைவுக்குக் கொண்டு வந்ததும் கருணா எனும் புலிகளின் இராணுவ முதுகெலும்பு உடைக்கப்பட்டதன் விளைவில் தான் என்று ஏற்றுக்கொள்ள முடிந்தவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு தடவையும் “எப்படியாவது” தமது இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரிந்த விடுதலைப்புலிகளின் தலைமை, தமது பெண் போராளிகள், சிறுவர்கள், மக்கள் படை, எல்லாளன் படையை எல்லாம் முன்னால் அனுப்பிவிட்டு, மக்களுக்காக என்று அறிமுகப்படுத்தப்படும் ஆனால் அவர்களுக்காக வைக்கப்படும் “பொறிக்குள்” போய் நிலை கொண்டார்கள்.

ஒவ்வொரு தடவை பாதுகாப்பு வலயம் மாற்றப்படும் படும் போதும் பிரபாகரன் அன் கோ அங்கே தான் இருக்கும் என்பது இராணுவத்திற்கு நன்றாகத் தெரிந்த விடயம், அவர்கள் “அந்த” அளவு வீரம் மிக்கவர்கள் என்பதும் தெரியாமலா முழு சர்வதேசத்தையும் எதிர்த்து இந்தப் போரை இராணுவம் மேற்கொண்டது?

புலிகளின் ஒரே வீரம் “பரப்புரை” என்பதை நன்றாக அறிந்து கொண்ட கோத்தபாயவின் பாதுகாப்பு அமைச்சு, முன்னெப்போதும் இல்லாத அளவு மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இணையத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

அத்தோடு நின்று விடாமல், புலிகளின் ஒவ்வொரு பரப்புரைக்கும் உடனுக்குடன் எதிர்ப்பிரச்சாரங்களையும் முடுக்கி விட்டிருந்தது.

நிலைமை தலை கீழாகப்போகிறது என்பதை உணர்ந்த புலிகள் தவிர்ந்த அனைத்துத் தரப்பும் இதை அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தாலும், தமக்காக விரிக்கப்பட்ட “வலை” யை ஏதோ ஒரு காப்பாற்றும் சக்தியாகவே நினைத்துக்கொண்டு, தொடர்ந்து “மக்கள்” “மக்கள்” என்று ஒப்பாரிவைத்து விட்டு, அதே மக்களின் பின்னால் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டார்கள் இந்த எலிகள்.

இங்கே இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பொறி முறைக்குள் சர்வதேசம் நுழைய வேண்டுமானால், அதுவும் இந்தியாவின் ஆளுமையை மீறி நுழைய வேண்டுமானால் அது நோர்வேயின் ஈடுபாட்டை வைத்து மட்டுமே முடியும்.

இதை நன்கு அவதானித்துத் திட்டமிட்ட “சக்திகள்” நோர்வே அரசை சுலபமாக வெளியேற்றிவிட்டன்.

புலிகள் பாவிக்கும் அதே “உணர்ச்சியூட்டலை” ஆயுதமாகக் கொண்டே அரசாங்கமும் இதை சாதித்துக்கொண்டது.

நோர்வேயில் வாழும் தமிழர்களை “ஏதோ” ஒரு சக்தியைக் கொண்டு உணர்ச்சியூட்டிய அரசாங்கம், தம் தூதரகத்தை அவர்களைக் கோண்டே தாக்க வைத்து, மிகச் சுலபமாக தமது தூதரகத்தைக் காக்கத் தவறிய நோர்வேக்கு இனிமேல் சமாதானம் என்ற மேடையிலும் இடமில்லை என்று தூக்கி வீசியது.

ஒ மேலை நாட்டை, அதுவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையை இந்த ஒரு சப்பைக் காரணத்துக்காக இலங்கை வெளியே போட்டது என்று நினைத்து அதன் பின்னும் புலி ஆதரவாளர்கள் பெருமிதப்பட்டுக்கொண்டார்கள், தம் செயலை நினைத்து அவர்கள் வருந்தவே இல்லை, மாறாக அதை ஒரு சாதனையாக நினைத்துக்கொண்டார்கள்.

மறு புறத்தில், வெளியேற்றப்பட்ட “தம்” நிலையையையும், தம்மை மீறி ஆசிய பிராந்திய சக்திகளின் ஒற்றுமையையும் கணக்குப்போட்ட அமெரிக்கா இப்போது நேரடியாகத் தலையிட முடியாமல் போனாலும், எச்சரிக்கை பாணியில் சில விடயங்களை ஹிலாரி கிளிண்டன் மூலமாக வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தது.

தம் பக்கம் இருக்கும் சக்திகளின் பலம் அதிகம் என்பதால் இலங்கை அரசு இதைப்பற்றிக் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ள வில்லை.

எனினும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தம்மை மூடி மறைக்கும் உணர்ச்சியின் அடிப்படையில், இலங்கைத் தீவுக்கு வெளியே எதிரொலிக்கும் இந்தப் போரின் உண்மயான சக்தியை எடை போடத் தவறிவிட்டார்கள்.

எனவே, அவர்கள் ஒரு குறுகிய நோக்கத்திற்காக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனா சக்திகளும் மிகவும் வரையறுக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில், உலக அரங்கில் உள்ள அரசியல் சக்திகள் இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடும்.

 1. புலிகளை இல்லாதொழிக்க உதவினால் அதன் பின் இருக்கும் அரசியல்,வர்த்தக இலாபங்கள்.
 2. அடுத்ததாக புலிகளைக் காப்பாற்றுவதன் மூலம் வரக்கூடிய எதிர்கால அரசியல்,வர்த்தக நலன்கள்.

இவ்விரண்டையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது தென் பகுதியில் இருக்கும் அரசின் “அரசியல்” நிலைப்பாடாகும்.

இப்போதைய அரசின் மிகக் கடுமையான நிலைப்பாடானது ஓரளவில் மேலை நாடுகளால் முன்னர் எதிர்பார்க்கப்படாத ஒன்றாகவே இருந்திருக்கும்.

அதற்கான அடிப்படைக் காரணம், பொதுவாகவே அரசியலில் புதைந்திருக்கும் வர்த்தக,வளமீட்டு நலன்கள் மீதான அக்கறையாகும்.

புலியின் இருப்பை வைத்து பெறப்படும் நலனை விட, புலியில்லாமல் பல மடங்கு பெறலாம் எனும் “புதிய” திட்டத்தைக் கொண்ட அரசாக இவ்வரசு தன்னை மாற்றிக்கொண்டது.

அதற்கு, உலக அரங்கில் யாரும் எதிர்பார்க்காதவாறு தன் வர்த்தக நலனை பிராந்திய வல்லரசுகளுடன் பகிர்ந்து கொண்டது.

அதன் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் சக்திகளோடு கை கோர்த்துக்கொண்டு, புலிக்கு நிரந்தரமான ஒரு வலையை விரித்தது.

இதே அரசியல் பாணியில் தம்மையும், தம் வயிற்றையும் “போராட்டம்” எனும் பெயரில் வளர்த்துக்கொண்டிருந்த புலி, இந்த வலையை முதலில் புரிந்துகொள்ள வில்லை என்றாலும், புரிந்து கொண்டதும் முதல் வேலையாக அரசாங்கத்தை நிலை குலைக்கச்செய்யும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் மீதும், இராணுவத் தலைமை மீதும் “உயிர் ஆயுத” ம் என்று அவர்கள் குறிப்பிடும் வீணாய்ப்போன தற்கொலைத் தாக்குதலை நடத்தியது.

கிடப்பில் இருந்த திட்டங்களையும் விரைவு படுத்திய புலியின் இந்த செயல், அவர்களுக்கான சாவுமணியை சர்வதேசத்தில் மிக வேகமாக ஒலிக்க வைத்தது.

படிப்படியாக வளர்த்து வந்த மக்களின் “உணர்ச்சியூட்டல்” நிலையிலிருந்து அவர்களைத் திடீர் என திசைதிருப்ப முடியாவிட்டாலும், தொடர்ந்தும் தம்மால் “ஏதாவது” ஒரு வகையில் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும் என்றே புலித்தலைமை இறுதி வரை நம்பியது.

அந்த பேச்சுவார்த்தைகள் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுதுகளில் அதே சர்வதேச சக்திகளின் தலையீட்டாலேயே ஒவ்வொரு தடவையும் “பாதுகாப்பு வலயங்கள்” அறிமுகப்படுத்தப்பட்டு புலித்தலைமை ஒளிந்து கொள்ளவும் இடங்கொடுக்கப்பட்டது.

முன்னேறும் இராணுவத்தை புலிகள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே சர்வதேச சக்திகளின் நிலை மாறியிருக்கும், எதிர்பாராத விதமாக இலங்கை அரசின் நம்பிக்கைக்குப் புறம்பாக விடுதலைப் புலிகளின் இராணுவ சக்தி நிரூபிக்கப்பட்டிருந்தால், ஆகக்குறைந்தது கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பொழுதிலாவது ஒரு “உடன்பாடு” ஏற்பட்டிருக்கும்.

தொடர்ந்தும் தம்மை ஆட்டுவிக்கும் சக்திகளில் தங்கி, திரை மறைவில் அழுது கெஞ்சிக்கொண்டு, வெளியில் வீராவேசம் போடுவதைத் தவிர வேறு எதையும் புலிகள் செய்யாததனால், சர்வதேச சக்திகளும் புலிகள் மீது வைத்திருந்த முழு நம்பிக்கையையும் இழந்து, பெரும்பாண்மை வாக்குடன், யுத்தத்தை முடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்படும் அரசை ஆதரிப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கும்.

இதன் மூலம் பிராந்திய சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்தாலும், தாம் ஓரங்கட்டப்பட மாட்டோம் என்பது இந்த சக்திகளின் நம்பிக்கையாக இருந்திருக்கும்.

இதற்குச் சான்றாக, இறுதி நேரங்களில் நோர்வே போட்ட “தடுமாற்ற” நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

முதற்தடவையாக இந்தியாவுடனும் கலந்தாலோசிக்கும் நிலைக்கு நோர்வே சென்றதை விட வேறு வலுவான உதாரணம் இதற்குத் தேவை இல்லை.

இருந்தாலும், நிலைமையை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவம் தொடர்ந்தும் இவர்களுக்கு எதிராகவும், தமது நண்பர்களுக்கு ஆதரவாகவுமே செயற்பட்டு வந்தது.

இந்தியாவின் தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பைக் கொண்டு வர புலிகள் என்னதான் முயன்றாலும், கருணானிதி அடிக்கடி சொன்ன அவரது “முயற்சிகள்” வெற்றியளித்த கதையாக அவர்களின் தூர நோக்கு அரசியலுக்கு சார்பாகவே இலங்கையும் போரை முன்னெடுத்துச் சென்றது.

இந்த நிலையை இராணுவம் அடையும் வரையும், முன்னரங்குகளில் பலி கொடுக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அருமையை புலிகள் புரிந்திருந்தால் முன்னதாகவே “வெள்ளைக் கொடியை” தூக்கியிருக்க வேண்டும்.

பந்தயங்கட்டி தம்மை வளர்த்துவிட்ட ஆதரவாளர்களையும் முழுதாக ஏமாற்ற முடியாமல், தம் “இருப்பை” பாதுகாத்துக்கொள்ளும் திட்டத்தையும் கை விட முடியாமல் வெளியார் “சக்திகள்” சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலையைத் தவிர வேறு எந்த நிலையையும் வலுவாக எடுக்க முடியாத மிகக் கடுமையான நிலைக்கு புலிகள் தலைமை நெருக்கப்பட்டது.

இன்னொரு வகையில் இதைச் சொல்வதானால் முழுமையாக வலையில் சிக்கிய எலிகளாக இவர்கள் மாறிப்போனார்கள்.

இந்த நாடகத்தின் இறுதி அத்தியாயம் எப்படி அமைய வேண்டும் என்கிற அறிவு புலிகள் பக்கத்தில் பிரபாகரனையும் அதன் சர்வதேச தொடர்பாடல் விற்பன்னரையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

தன்னைச் சுற்றி பாதுகாப்பாக இருந்த அத்தனையையும் இழந்த நிலையில் இறுதியாக இருக்கும் “தளபதிகளை” அரணாகப் பாவித்துக்கொண்டிருந்த பிரபாகரன், அந்த அரணுக்கும் பின்னால் தான் “இலக்காக” இருப்பேன் என்பதை இறுதி வரைக்கும் முழுமையாக நம்பியிருந்திருக்கப்போவதில்லை.

புலிகளின் இந்த இறுதி 250 -300 பேர் கொண்ட அணி இருந்த அந்த இடத்துக்கு இராணுவம் வந்து சேர ஒரு மணி நேரம் முன்பு வரைக்கும் உயர் மட்டங்களுக்கு இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறது என்று தற்போதைய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வனைத்தையும் தாண்டி இராணுவம் நெருங்கிய போது, விரிக்கப்பட்ட வலையில் இறுதியாக, முழுமையாக சிக்கியது தலைமை எலி.

இங்கே இந்த கட்டத்தில், இறுதி நேர தொடர்பாடலில் இரண்டு விடயங்கள் நடந்திருக்க வேண்டும்.

ஒன்றில் பிரபாகரனை நிபந்தனையின் பேரில் தப்ப விடுவது, அல்லது முற்றாக அழிப்பது என்பதே அவையாகும்.

இதைப் புலிகளின் தற்போதைய கூற்றின் படி, அதாவது பிரபாகரன் சாகவில்லை என்கிற கூற்றின்படி பார்த்தால், தமது முழு சக்தியையும் இழந்து, இறுதி வரை சரணடைய மாட்டோம் என்று அடம் பிடித்து, கழுத்தில் சயனைட் வில்லை மாட்டித்திரிந்த இந்த நாடகக்காரர்கள் இனிமேல் ஒரு வழி இல்லை என்ற போது சயனைட் கூட அடிக்காமல் தமது உயிர்களுக்காக கெஞ்சி மன்றாடியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் சாட்சியங்களே தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் பிரபாகரன் தப்பியோட அனுமதிக்கப்பட்டிருந்தால், “இனி ஒரு போதும்” இலங்கைப் பக்கம் அவரது “தமிழீழம்” வரக்கூடாது , வெளிநாடுகளில் இருந்து காகிதங்களில், இணையங்களில் “தமிழீழ” வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு நலமாக இருந்துகொள் எனும் மிகக் கடுமையான நிபந்தனையின் பேரில் மட்டுமே தப்ப விடப்பட்டிருக்கலாம்.

புலிகளின் எதிர் நிலையிலிருந்து பார்த்தால், மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு பிரபாகரனுக்காக ஒவ்வொரு தடவையும் ஏற்படுத்திக்கொடுத்த “பாதுகாப்பு வலயம்” இறுதியாக எங்கே உருவாக்கப்பட்டது என்று அவதானித்தாலே அதன் சூற்சுமம் தெளிவாகத் தெரிந்து விடும்.

30 வருட புலிகளின் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக “கடல்”  தண்ணீரைப் பார்க்க முடியாத வாறு புலிகள் முடக்கப்பட்ட அந்த நிலையை விட வேறு சிறந்த உதாரணத்தை இதற்கு சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது.

தரையில் எப்படி மோதினாலும் ஒரு முடிவு வந்துவிடும்,ஆனால் கடல் மார்க்கமாக “எப்படியாவது” தப்பிச் செல்லலாம், அதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

அதற்குப் பல வழிகளும் உண்டு, ஆகக் குறைந்தது ஒரு பெரும் படையை இறுதி நேரத்தில் தயார் செய்து, சில நூறு உயிர்களைக் “காவு” கொடுத்தாவது பிரபாகரனை நிச்சயமாகத் தப்ப வைக்கலாம்.

ஆனால், மிகத் துல்லியமாக வலை விரித்த அறிவாளிகள், கச்சிதமாக கடல் தண்ணீரையே பார்க்க முடியாத வாறும் எங்கே ஓடினாலும் களப்புப் பகுதியில் சிக்கும் வகையிலும் பிரபாகரனுக்கான “பாதுகாப்பு வலயத்தை” ஏற்பாடு செய்து கொடுத்தது.

அவரும் அங்கே அமைதியாக தனது விடுதலைக்காகக் காத்திருந்தார்.

ஆனால், வலை விரித்து எலியைப் பிடித்த பெருச்சாளிகளோ இந்த எலியை வைத்து இனி எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும்? என்று மட்டும் தான் சிந்தித்திருக்கும்.

திட்டமிடல் சக்திகளில் பிரதான பங்கை வகித்திருக்கக்கூடிய இந்திய உளவு அமைப்போ, தமிழ் நாட்டில் சமீப காலமாகக் கிளறப்பட்டு வரும் துவேச சக்திகளை மிகக் கவனமாக கையாள வேண்டிய தேவையை புரிந்து கொள்ளாமல் இருந்திருக்காது.

பிரபாகரனை உயிரோடு தப்பிக்க விட்டால், அவர் எங்கிருந்து என்ன செய்தாலும் அது தமிழகத்தை நிச்சயம் பாதிக்கும் என்கிற உண்மையைப் புரியாமல் ஒரு எலியைப் பிடிக்க இவ்வளவு பெரிய திட்டம் தீட்டப்பட்டிருக்கவும் மாட்டாது.

எனவே, அவரது இறுதி நம்பிக்கையை கேள்விக்குறியாகவே வைத்து, வலையில் விழுந்த எலியை நசுக்கிக் கொன்று விட்டது உண்மையான “அரசியல்”.

பிரபாரன் சுடப்பட்டார் என்பதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மிக அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டு அடித்துத் தாக்கியழிக்கப்பட்டுள்ளார் என்பது என்றாவது ஒரு நாள் வெளியாகும்.

இனிமேல் எந்த நாட்டிற்கும் எந்த வகையிலும் பயனற்றுப்போன ஒரு எலியை வைத்து என்ன செய்வது? என்ற நிலையில், வெறியுடன் முன்னேறிச் சென்ற சிப்பாய்களின் கையில் மிக அவதானமாக இவர் கையளிக்கப்பட்டார் என்பது ஒரு நாள் தெளிவடைய வேண்டிய உண்மையாகும்.

ஒருவேளை யுத்த களத்தில் அவர் உண்மையிலேயே புலியாக இருந்திருந்தால், இந்த வெளியார் சக்திகளின் முடிவுகளும், நிலைப்பாடுகளும் கூட மாறியிருக்கலாம்.

இராணுவ ரீதியாக முன்னேறிச்செல்லக்கூடிய மனோ பலத்தை அளிக்கும் ஒரு தலைவனாக அவர் இருக்கவில்லை.

மக்களோடு கலந்த ஒரு தலைவனாகவும் எப்போதும் இவர் இருந்தததில்லை, மாறாக கண்காண முடியாத ஒரு தூரத்தில் சொந்தப் போராளிகளைக் கூட நம்ப முடியாத ஒரு தொலை தூரத் தலைவனாக மட்டுமே எப்போதும் இருந்தார்.

வெளியார் சக்திகளைப் பொறுத்தவரை இதுவரை இலங்கையில் கொள்ளையிடக்கூடிய வருமான வழியாக புலியின் போராட்டம் இருந்தாலும், நவீன மயப்படுத்தல் அவர்களுக்கும் அவசியமாக இருந்தது.

புலிகள் இயக்கம் எப்போதுமே ஒரு அரசியல் கலவையுடன் வியாபாரம் செய்து வந்த இயக்கமாகவே இருந்து வந்தது என்பதற்கு மாத்தையாவில் தொடங்கி இறுதியில் நடேசன் வரை பல உதாரணங்கள் இருக்கிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்டமும் பாவிக்காத மக்கள் “உணர்ச்சியூட்டல்” ஆயுதத்தை புலிகள் கடந்த 30 வருடங்களாகப் பாவித்து வந்ததனால், அதற்கு அப்பால் விலகி உண்மை,பொய்களை அலசி ஆராயும் பக்குவத்தை புலி ஆதரவாளர்கள் இழந்துவிட்டனர். அதுவே புலிகளும் பலமுமாக அமைந்திருந்தது.

இனி வரும் காலத்தில், அவர்களுக்கும் தத்துவங்கள் புரியும் போது, வலையில் சிக்கியது புலியல்ல எலி என்பதை ஒத்துக்கொள்வார்கள்.

இறுதி நேரத்தில் இலங்கை அரசை எதிர்த்து நின்றவர்களில் சூசை பிதானமானவர் என்றால், இலங்கை இராணுவத்துக்கு மிக அண்மையில் நெருங்கி, அவர்கள் காலடியில் வீழ்ந்தவர் பொட்டம்மானாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு வேளை பிரபாகரனுக்குப் பதில் அவருக்காக இந்த வலையின் ஒரு பகுதி அறுக்கப்பட்டிருக்கலாம், அதுவும் இன்னும் சில நாட்களில் வெளிவரக்கூடிய மறைக்க முடியாத உண்மை!

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 responses to “வலையில் சிக்கிய எ(பு)லி?

 1. செல்வராஜ்

  மே26, 2009 at 11:29 பிப

  நிஜத்தை சொல்லியுள்ளீர்கள். உங்களைப்போல சிலரே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகிறீர்கள். இதை நிதானமாக இருந்து படிக்கக்கூடிய பொறுமை புலி ஆதரவாளர்களுக்கு இருக்காது.

   
  • arivudan

   மே27, 2009 at 10:26 முப

   நன்றி செல்வராஜ் அவர்களும் திருந்த வேண்டும் என்று சேர்ந்தே உழைப்போம்.

    
 2. Nandan

  மே29, 2009 at 11:07 முப

  Well the way you are criticising LTTE is fine, in the mean time you are loosing yourself from the point of you are a Tamil. From the point of living with deginty you are making all the Tamils to loose their hope and leading them to live a kind of slavery life.

  Don’t just be a LTTE criticiser, do alteast something good for your Tamils.

   
  • arivudan

   மே29, 2009 at 11:15 முப

   Nandan, hope you will spend some time to read the whole blog which can answer your question as that’s the same cause which leads us to write these.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: