RSS

மூன்று தசாப்தங்கள், மூவாயிரம் கோடி முரண்பாடுகள்

21 மே

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாறு இதையும் விட அதிக கால அளவைக் கொண்டிருந்தாலும், ஆயுதப் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்த காலங்களே இன்றும் உலகின் கண்களுக்கு “பளிச்” எனத் தெரிகிறது.

இந்த முரண்பாடுகள் “தமிழர்கள்” எனும் சொற்பதத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கைத் தீவின் கட்டமைப்பில் சமவுரிமைக்குப் பதிலாக பெரும்பாண்மை,சிறுபாண்மை எனும் இடைவெளியைக் கொண்டு அரசியல் சூற்சுமங்களால் அன்று உருவாக்கப்பட்ட முரண்பாடுகளை பேசித் தீர்க்க முடியாது என்று ஆயுதப் பேராட்டம் தலையெடுத்தது.

தலையெடுத்த ஆயுதப்போராட்டமும் தறிகெட்டுப் போனதால் முரண்பாடுகளும்,முடிச்சுகளுமே மக்களுக்குக் கிடைத்தனவே தவிர, அவர்கள் உரிமைகள் “அன்றும்”,”அதற்குப் பிறகும்”,”இன்றும்” கூட உண்மையாகக் கிடைக்கவில்லை.

பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஆரம்பித்த போரில் அவர் உலகத்திற்கு இரண்டே இரண்டு தெரிவுகளையே வழங்கினார்.

ஒன்றில் சேர்ந்து நண்பனாக இரு அல்லது,விலகி எதிரியாக இரு என்பனவே அந்தத் தெரிவுகள்.

தமது நாட்டுக் குடிமக்களுக்கான பாதுகாப்பு எனும் பெயரில் தமது உலக அரசியல் “இருப்புக்கு” கேள்விக்குறியாக இருக்கும்,வளரும் எந்த சக்தியையும் வளரவிடக்கூடாது எனும் தத்துவம் தான் அதில் ஒளிந்திருந்தாலும், அதை “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று இன்றும் வர்ணிக்கிறார்கள்.

அதில் அழிக்கப்பட்ட சதாம் உசைனும் முன்னாள் ஒரு காலத்தில் மக்களுக்காக வாழ்ந்த தலைவனாக இருந்தாலும், நாளடைவில் தன் அரசியல் முடிச்சுகளை மக்களுக்குள் முரண்பாடாகத் தோற்றுவித்து, எப்போதும் தன் “இருப்பையே” பாதுகாப்பாகக் கவனித்துக்கொண்டார்.

ஆனால் மக்கள் நலனை அடிப்படையாக வைத்து ஆரம்பித்த கியுபப் புரட்சியோ அரை நூற்றாண்டு தாண்டியும், அதிருப்தியாளர்கள் உள்ளிருந்து உருவாகியும், வெளியிலிருந்து உருவாக்கப்பட்டும் கூட இன்னும் அசையாமல் இருக்கிறது.

இலங்கைத் தீவில் மட்டும் தமிழர் உரிமைப் போராட்டம் என்பது முரண்பாட்டு முடிச்சுகளை இன்னும் அவிழ்க்க முடியாமல் தவிக்கிறது.

இன்றைய நிலையில், மக்களுக்குத் தேவை “தாம் உயிர் வாழ முடியும்” எனும் அடிப்படை உத்தரவாதம் மட்டுமே என்று குறுகி விட்டது.

சுதந்திரமாகத் தன் மானத்துடன் வாழ்ந்திருந்த ஒரு சமுதாயம், இன்று கால் வயிற்றுக் கஞ்சிக்கெல்லாம் கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்த மக்களுக்காக ஒரு உரிமைப் போராட்டம் அதுவும் முப்பது வருடங்கள் நடந்ததாக வேறு வரலாறு பேசுகிறார்கள்.

தெளிவில்லாமற் சென்ற இந்த போராட்டப் பாதையின் முதல் முரண்பாடே “யார் தமிழர்கள்?” என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.

ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போராளிக் குழுக்கள் அத்தனையும் முதன் முதலாக பேச்சு வார்த்தை மேடையில் அமர்ந்த அந்த நாட்களில் இவை இருக்கவில்லை, ஒரு உறையில் ஒரு கத்திதான் என்று ஒரே நோக்கத்திற்காகத் தம் உயிர்களை துச்சமாக நினைத்து போராட வந்த அந்த சகோதரர்கள் அழிக்கப்பட்ட நாளிலிருந்து இது ஆரம்பமாகிறது.

அவர்கள் அழிக்கப்பட்டதன் நோக்கமும் “தமிழர்களுக்காக அவர்கள் போராட” வந்தது தான், என்றால் அவனை அழித்தவர்கள் “தமிழர்களுக்காகப் போராட வில்லை” என்பதுதான் உண்மை.

எல்லாவற்றிற்கும் காரணம் கூறும் இந்த முரண்பாட்டு மனிதர்கள், இதற்கும் வெவ்வேறு விளக்கங்களை அளித்தார்கள், தம் சகோரர்களைக் கொன்றுவிட்டு அவற்றிற்கு முழு நியாயமும் கற்பித்தார்கள்.

சரி, அத்தோடு விட்டார்களா?

ஒன்றோடு ஒன்றாகப் போராடக் கிளம்பிய சகோதர இனத்தை முற்று முழுக்கத் துண்டாடி வேட்டையாடினார்கள்.

இந்தியாவில் “மொழி” எனும் பொது விடயத்தின் மூலம் அனைத்து மதங்கள் சார்ந்த மக்களும் ஒரு அடையாளத்திற்குள் வருகிறார்கள்.

உதாரணமாக மராட்டியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று நீளும் அவர்கள் பட்டியலைப் பொறுத்த வரை “தமிழர்கள்” என்றால் அது தமிழ் நாட்டின் அத்தனை குடிமக்களையும் சேர்த்த ஒரு இனமாக மட்டுமே அறியப்படுகிறது, அதுதான் நியாயமும்.

இலங்கையில் பெரும்பாண்மை இனத்திற்கும் சிறுபாண்மை இனத்திற்கும் தான் மோதல் நடக்கிறது என்று உலகை நம்ப வைத்து, இலங்கை அரசை கேலிக்கூத்தாக்கி, கேள்விகளுக்கும் உள்ளாக்கிய 1983 இனக்கலவரம் இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய பலமாகவே கணிக்கப்பட வேண்டும்.

13 சிங்கள இராணுவச் சிப்பாய்களை, தமிழ்ப் போராளிகள் கொன்றுவிட்டார்கள் என்ற இனத் துவேசம் தான் நாட்டைத் துண்டாடியது.

அதில் தமிழர் என்று சிங்கள இனத் துவேசக்காரர்கள் அடையாளம் கண்டு கொண்டது தமிழ் மொழியைப் பேசும் அனைவரையும் ஆகும்.

ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய “காடையர்கள்” அதாவது சமூக விரோதிகள் தான் தமிழ் மக்களின் உடமைகள், உயிர்களையும் சூறையாடினார்களே தவிர, “நல்ல மனம் படைத்த” மக்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்க விரும்பினார்கள்.

மிக முக்கியமாக இக்கலவரத்தின் போது தம் நண்பர்களை, அயலவர்களைப் பாதுகாப்பதில் பல முஸ்லிம்,சிங்கள மக்கள் முனைப்பாகச் செயற்பட்டதுடன் அவர்களைப் பாதுகாக்கவும் செய்தார்கள்.

சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ்ந்த பல சிங்கள மக்கள் இப்படி எத்தனையோ குடும்பங்களுக்கு உதவி செய்திருந்தார்கள், அதே போன்று தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவோரைத் தம் சொந்த சகோதரர்களாகவே நினைத்து எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் இந்நேரத்தில் பெரும் பங்கெடுத்து அரணாக நின்றிருக்கிறார்கள்.

இந்தக் கலவர காலத்தில் உண்மையில் அங்கு வாழ்ந்திருக்காமல், அவ்வளவு ஏன் அந்தக்காலத்தில் பிறக்கக்கூட இல்லாத தீவிர சிந்தனை உள்ள இணையப் பரப்புரையாளர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

உண்மையில் பாதிக்கப்பட்டு, சில வேளை அரசாங்க உத்தியோகங்கள் காரணமாக வெவ்வேறு இடங்களில் இப்படி மாட்டிக்கொண்டு, ஆனால் பின்னர் கலவரத்தில் “தப்பிக்கொண்ட” வடமாகாண மக்களில் ஒரு பகுதியினராவது அவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இப்படியான “இலவசமாகச் சூறையாட”க் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பாவித்துப் பலன் அடைந்தவர்கள் காடையர்களாகவே இருந்தார்கள்.

அத்தோடு அதை நிறத்திவிடவும் முடியாது, சில கரையோர சிங்களக் கிராமங்களில் மக்களும் உணர்ச்சியூட்டப்பட்டார்கள், அவர்களுக்கும் இனத்துவேசம் அரசியல் சக்திகளால் நன்கு ஊட்டப்பட்டது.

எனினும், அவர்கள் வெகுண்டெழுந்து வந்து எதையும் சாதிக்கும் அளவுக்கு அப்பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ வில்லை, ஆயினும் இந்த அரசியல் முரண்பாடு சிறுபாண்மையினத்துக்கு உலக அரங்கில் சாதாகமாகவே அமைந்திருந்தது.

தம்மைத் தாக்க ஒரு சக்தி இருக்கும் போது, தம்மைக் காக்கவும் ஒரு சக்தி வேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு சிறுபாண்மை மக்கள் தள்ளப்பட்டார்கள் என்றால் அது கூட மிகையாகாது.

தம்மைக் காக்க வேண்டிய அரசாங்கம் தவறிழைத்ததனால் அவர்கள் மீதிருந்த மதிப்பையும்,நம்பிக்கையையும் சிறுபாண்மையினத்தவர்கள் இழந்திருந்தார்கள் என்றாலும், வட மாகாணத்தில் இதைப் பயன்படுத்தி எழுச்சிகொள்ள நினைத்த சக்திகளுக்குத்தான் இவை பயன்பட்டதே தவிர, மீண்டும் கொழும்பை நோக்கி வாழ நினைத்திருந்த யாருக்கும், அதற்குப் பிறகு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கவே இல்லை.

எனினும், வட கிழக்கில் சிறுபாண்மையினம் காப்பதற்கு தமக்குள்ளும் ஒரு ஆயுத சக்தி இருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு ஒவ்வொருவர் மனதிலும் அதிகரிக்கத்தான் செய்தது.

ஒரு இனக் கலவரத்தைத்தூண்டுவதன் மூலம் மக்களை இந்த நிலைப்பாட்டை எடுக்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துத்தான் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனரா இல்லை இது தற்செயலாக திட்டமில்லாமலே நடந்தேறியதா என்றொரு கேள்வி அப்போது இல்லாவிட்டாலும், அதன் பின்னர் இதை மனதில் வைத்து பல தடவைகள் இனக்கலவரங்களை உருவாக்க முயற்சி செய்த “ஆயுத சக்தி” யை ஒப்பீட்டுப் பார்க்கும் போது ஒருவேளை அப்போதும் அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கலாமோ என்று சந்தேகம் வருகிறது. அது அப்போது இல்லாமல் பின்னர் உருவானதாகவும் கூட இருக்கலாம்.

எது எப்படியோ, சிறுபாண்மை மக்களின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்பட இந்தக் கலவரம் வழி சமைத்திருந்தது.

அப்போதும் எல்லோரும் “தமிழர்கள்” என்றே பார்க்கப்பட்டார்கள், ஒற்றுமையாகவும் இருந்தார்கள்.

ஆனால், அதை அத்தனை காலம் நீடிக்க விடுவதற்கு சர்வதிகாரத் தலைமைகள் விரும்பவில்லை.

எனவே, “தமிழர்கள்” என்போர் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற ஒரு நிலையை அவர்கள் அன்றே எடுத்தார்கள்.

இதன் முதற்கட்டமாக சிறுபாண்மையினத்தின் இன்னொரு கையாக இருந்த “முஸ்லிம்” சமுதாயத்தைத் துண்டாட நினைத்தார்கள்.

உலகெல்லாம் வாழும் முஸ்லிம்களிடம் ஒரு ஒற்றுமையிருக்கிறது, அது அவர்கள் தம் இறைவனுக்கும்,மதத்துக்கும் வழங்கும் மிகச் சிறந்த ஈடுபாடும், மரியாதையுமாகும்.

அது அவர்கள் வாழ்க்கை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களாகவே எப்போதும் பார்க்கப்படுகின்றன. டென் மார்க்கில் ஒருவர் ஏதோ நினைப்பில் கார்டூன் என்று தம் அன்பிற்குரிய நபிகளை கேலி செய்யத் துணிந்தால் முழு உலகமும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வெகுண்டெழுகிறார்கள்.

எனவே, அவர்களது மதத்தோடு விளையாடி அவர்களைத் துண்டாடுவது என்பது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு இன விரோதச் செயலாகவே இருக்கும்.

அப்படித்தான் கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மையினத்திற்கு மாத்திரமன்றி ஆயுதப் போராட்டத்திற்கும் பலமாக இருந்த “முஸ்லிம்” சமுதாயம் “தமிழர்கள்” எனும் அடையாளத்திலிருந்து திட்டமிட்டுத் துண்டாடப்பட்டது.

இந்த வெறியாட்டத்தின் பின்னணியில் ஏதோ ஒரு “அரசியல்” நலன் மாத்திரமன்றி “தமிழர்கள்” எனும் சிறுபாண்மையின் பலமும் சேர்ந்தே அடகு வைக்கப்பட்டது என்பதை அன்றைய “பலம் வாய்ந்த” ஆயுத சக்தியாக இதை முன்நின்று நடத்திய விடுதலைப் புலிகள் ஏன் உணர மறுத்தார்கள் என்பது அவர்களும் அறிவாளிகள் என்று நினைப்பவர்கள் கேட்கும் கேள்வி, அவர்கள் அப்படித்தான் என்று தெரிந்தவர்களுக்கு “இதுதான் புலியின் அறிவு” என்பது விடையாக இருக்கும்.

கிழக்கு மாகாண பூகோள அமைப்பைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் பங்கு அனைத்துப் பகுதிகளிலும் வலுவானது, “தமிழினத்தின்” வர்த்தக,கலாச்சாரப் பங்களிப்போடு மட்டும் நிற்காமல் புலிகளின் “வளர்ச்சியிலும்” அவர்களுக்கான “கடத்தல்களிலும்” கூட முஸ்லிம் சமுதாயம் பஙகெடுத்தே வந்தது.

பலமான சிறுபாண்மையினத்தைத் துண்டாடுவதற்கு இவர்கள் துணை போனதன் விளைவாக அப்பாவி உயிர்கள் அதுவும் வணக்கஸ்தலங்களில் வைத்து அநியாயமாக் கொன்றொழிக்கப்பட்டது.

அத்தோடு நின்று விடாமல் வடக்கிலிருந்தும் இரவோடு இரவாக முஸ்லிம்கள் துரத்தப்பட்டு, சிறுபாண்மையினத்தில் “தமிழர்கள்” எனும் அடையாளம் முஸ்லிம்களுக்கு இல்லையென்று இலங்கையில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் “முஸ்லிம்” என்பது “தமிழர்” என்பது போல் இன்னொரு இனம் என்று தமது அரசியல் அத்தியாயங்களை முன் நகர்த்தினார்கள்.

பலமாக இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் “முஸ்லிம்கள் வேண்டுமானால் எம் “தமிழ்” மண்ணில் சேர்ந்து வாழலாம் ” என்று அதிகாரத்திலும், ஆளுமையிலும் அவர்கள் செழித்து விளங்கிய காலகட்டத்தில் கூறினார்கள்.

எனவே, “தமிழர்” எனும் போராட்ட அளவுகோளுக்குள் “முஸ்லிம்கள்” என்ற ஒரு இனம் பிரிக்கப்பட்டு இணைக்கப்படவில்லை.

அப்படியானால், முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் “தமிழர்கள்” என்று குறிப்பிடப்படுவது யார்?

இந்துமதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றிய பெரும்பாலானோர் ஒரு வகையில் சிறுபாண்மையினத்தில் வாழ்ந்த “முஸ்லிம்” மக்களிலிருந்து வேறுபட்ட ஆனால் சிறிதளவு ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார்கள்.

மத ரீதியாக இரு வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றினாலும் கிறிஸ்தவர்களும்,இந்துக்களும் ஏறத்தாழ “தமிழர்” எனும் குடையின் கீழ் வருவதாக எண்ணிக்கொள்ளலாம்.

ஆனாலும், போராட்ட காலத்தில் பலமாக இருந்த ஆயுத சக்தி, “இந்துக்களையோ” அல்லது “கிறிஸ்தவர்களையோ” தம் அகராதி கூறும் “தமிழர்களாக” நினைத்தார்களா என்பது அவர்கள் சித்தார்ந்தத்தோடு முட்டி மோதி அறியப்பட வேண்டிய விடயம்.

ஏனெனில், அவர்களாலேயே கொல்லப்பட்ட பல அரசியல் தலைவர்கள் மத நம்பிக்கையில் இந்துக்களாகவும், சில அரசியல் தவைர்கள் கிறிஸ்தவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, முஸ்லிம் மக்களை சிறுபாண்மையினத்தில் இருந்து அப்புறப்படுத்திய அவர்களது சித்தார்ந்தம் இந்துக்களை கிறிஸ்தவர்களிடமிருந்து அன்னியப்படுத்த முயற்சிக்கவில்லையாகினும், சாதீயத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு தமக்குள் இரு பிளவுகளை உருவாக்கிக்கொண்டார்கள்.

அது ஏறத்தாழ முன்னாள் அதிபர் புஷ் கூறியது போன்ற அதே கோட்பாடாகும்.

அதாவது தம்மை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு சாராரை பிளவு படுத்தி அடையாளப்படு்த்தினார்கள்.

இந்த இரு சாராரும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் இந்த இரு பிரிவுக்குள்ளும் அடங்கினார்கள், ஆனால் அந்த இரு பிரிவினரில் ஏதாவது ஒரு பிரிவினருக்காகவாவது இந்த உரிமைப்போராட்டம் உண்மையுடன் நடந்ததா என்பதே அடுத்த கேள்வி.

அந்தக் கேள்வி எழுப்பப்படும் போது, இவர்களும் “தமிழர்கள்” இல்லையென்றால், விடுதலைப் புலிகளின் அகராதியில் “தமிழர்கள்” என்று இறுதி நாள் வரை பறை சாற்றப்பட்டது யாரை? என்னும் பெரும் கேள்வி எழுந்து நிற்கும்.

மக்களின் மதங்களையும், அவர்கள் உணர்வுகளையும் பந்தாடுவதில் மிகவும் கெட்டித்தனமாக நடந்து கொண்ட புலிகள் இயக்கம், தமக்குப் பிடிக்கவில்லை என்றால் கிறிஸ்தவர்களைக் கொன்று மின் கம்பங்களிலும், இந்துக்களைக் கொன்று டயரில் போட்டும் கொளுத்துவதற்கும் தயங்கவில்லை.

எனவே, இவர்களின் போராட்ட சித்தார்ந்தத்தின் அடிப்படையே தமது “இருப்பு” என்பதாக மாறிவிடுகிறது.

தலைமை, அதைச்சுற்றி இருந்த ஒரு குறுகிய வட்டம் என்பதோடு குறுகிக்கொண்ட இவர்களது சித்தார்ந்த வலைப்பின்னல், இறுதி வரை ஒருவொருக்கொருவர் உண்மையானதாக இருக்கவே இல்லை என்பது மிகத் தெளிவாக நடந்தேறியிருக்கும் வரலாறு.

எனவே, புலிகளாய் இருப்பவர்கள் மட்டுமே “தமிழர்கள்” எனும் நிலைப்பாடுதான் இவர்களது சித்தார்ந்தமாக உலகெங்கும் பரப்புரை செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் “தமிழர்கள்” கொல்லப்படுகிறார்கள் என்று புலி ஆதரவு தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் குரல் கொடுக்கிறார்கள், அவர்களால் கூட அந்தப் புலி நிலைப்பாட்டுக்கு வெளியே லட்சோப லட்சம் “தமிழர்கள்” உயிரோடு இருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதே இல்லை.

இதற்குக் காரணம் புலிகளின் “தமிழர்களுக்கான” வரைவிலக்கணம் தான்.

இதை சாதாரண மக்களிடமும் அவர்கள் சேர்க்கத் தவறவில்லை.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள் என்ற அவர்களது கோஷத்தினை மக்கள் மனதில் வலுப்படுத்தியதன் மூலம் புலிகளாய் இருந்தால் தான் நீங்கள் தமிழர்கள் இல்லாவிடின் தமிழர்களே இல்லை என்று அவர்களது அடிப்படை உரிமைகளையும் பறித்தெடுத்தார்கள்.

இதை மறைமுகமாக உள்வாங்கிக்கொண்ட ஒரு சிலர் விரும்பியே தம்மைப் புலிகளின் “தமிழர்களாகவும்” ஒரு சிலர் விடயமே தெரியாமல் தம்மைத் “தமிழர்” எனவும், இன்னும் சிலர் நாமும் தானே தமிழர்கள் நம்மை ஏன் இவர்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

புலியில் இருக்கும் ஒரு தமிழ்ச்செல்வன் “தமிழனாக” அறிவிக்கப்படுகிறான் ஆனால் வேறு ஒரு இயக்கத்திலோ அல்லது எந்த இயக்க சார்பும் இல்லாமலோ இருக்கும் ஒரு தமிழ்ச்செல்வன் “தமிழனாக” கணக்கிலெடுக்கப்படவே இல்லை.

இங்கிருந்துதான் புலிகளின் போக்கிற்கு எதிரான மாற்றுக் கருத்துகள் உருவாகிறது.

புலி பேசும் அதே தமிழையே தம் மொழியாகக் கொண்ட அதே தமிழ்ச்செல்வன்கள் தான் புலிகளின் இந்தக் கொடூரமான சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகக் கருத்துரைத்தார்கள்.

ஆனால், முந்திக்கொண்ட புலிகள் எப்போதுமே அவர்களை விலை போனவர்களாக மட்டும் காட்டிக்கொள்வதில் மிகக் கவனமாக இருந்தார்கள், சிங்களவன் பணம் கொடுத்துவிட்டான் என்று பரப்புரை செய்தார்கள், அதை அவர்களின் “தமிழர்கள்” நம்பினார்கள், நம்ப மறுத்தவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகள், துரோகிகளாக பட்டம் சூட்டப்பெற்றார்கள்.

ஆனால் அந்தப் பக்கமும் இருந்தது அதே கடவுளைக் கும்பிடும் தமிழி்ச்செல்வன், இந்தப்பக்கமும் இருப்பது அதே கடவுளைக் கும்பிடும் தமிழ்ச்செல்வன், இவர்கள் இருவர் இடையிலும் இருக்கும் வித்தியாசம் புலியின் நிலைப்பாட்டை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது மட்டும் தான்.

ஆனாலும் அதில் ஒருவன் மட்டுமே புலிகளின் கண்களுக்கும், புலி ஆதரவாக தமிழ்நாட்டில் பேசும் அரசியல் வாதிகளின் கண்களுக்கும் “தமிழனாக”த் தென்பட்டான்.

இது அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை கழுத்தில் நெரித்துக்கொன்ற செயல் என்பதை இனியும் உணர மறுத்தால், வெளிநாட்டில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இதே கருத்துச் சுதந்திரத்தைப் பாவித்து தெருக்களில், தைரியமாக நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லு்ம் தகுதியை இழக்கிறீர்கள்.

புலிகளின் அகராதியில் “தமிழர்கள்” என்பது, தாம் சார்ந்த சிறுபாண்மையினமோ அல்லது இன்னும் தெளிவாகக் கூறினால், இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ இல்லை மாறாக அவர்களது சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே.

அவர்களது சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரம் தான் “தமிழர்கள்” என்றால், பிறப்பாலும் மொழியாலும் உணர்வாலும் கலாச்சாரத்தாலும் பரம்பரை பரம்பரையாக “தமிழனாக” இருந்த, இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் முதல் எதிரி சிங்களவன் அல்ல “தமிழன்” எனும் புலிகள் தாம்.

எனவே, தம் அடையாளத்தைத் தொலைத்த புலித்தமிழர்களை இவர்கள் ஒதுக்கி வைப்பதில் எந்தவிதமான குறையும் இல்லை.

நமக்கொரு நாடு எதற்காகத் தேவை? நம் சுய நிர்ணயம், நம் கலாச்சாரம், நம் பண்பாடு, நம் மொழி, நம் அடையாளத்தைக் கட்டிக் காத்து சுய மரியாதையுடன் வாழ்வதற்காகத்தான் நமக்கொரு நாடு தேவை.

ஆனால், நாம் கூறும் அதே நாட்டில் நாம் சாரும் அதே சமுதாயத்தை இப்படிப் பல துண்டுகளாகப் பிளவு படுத்தி அவர்களுக்குரிய அடையாளத்தையே பறித்தெடுத்த பின்னர் யாருக்காக நாடு தேவை?

எனவே இந்தப் போராட்டம் தம் முரண்பாடுகளை உலக சந்தையில் அடகு வைக்க ஆரம்பித்தது.

உலகத் தரகர்களோ இந்தப் பிளவுகளை சரியாகப் பயன்படுத்தி, இனத்துக்குள் இருக்கும் இன முரண்பாடுகளை வைத்து தமது அரசியல் வியாபரத்தை தெற்கிலும்,வடக்கிலும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.

இறுதியில் பேராடச் சென்றவர்களும் “வியாபாரம்” தான் செய்தார்கள்.

புலிகளின் கடற்படைப் பொறுப்பாளராக இருந்த சூசையின் இறுதிச் செவ்வியும் இதைத்தான் மிக ஆழமாக வலியுறுத்தியிருந்தது.

250 புலிகளே அடைபட்டுக் கிடந்த 300 x 300 சதுர மீ்ற்றர் நிலப்பரப்புக்குள் 25000 மக்கள் இருப்பதாகவும், அதில் 3000 பேர் தெருக்களில் இறந்து கொண்டிருப்பதாகவும் அவர் விட்ட “உணர்ச்சியூட்டும்” அறிக்கையும் இறுதியில் இதைத்தான் நிரூபித்தது.

அதாவது அவர்கள் கூறும் “தமிழ் மக்கள்” என்பது புலிகள் இயக்கத்து உறுப்பினர்கள், அதில் எந்த மாற்றுக்கருத்தும் அவர்களுக்கு இறுதி வரை இருகு்க வில்லை.

இதன் அடிப்படையில், புலிகளின் மிக நெருக்கிய நண்பர்களான இந்திய அரசியல் வாதிகள் கூச்சல் போட்ட “தமிழர்களும்” இவர்கள் கூறும் இந்தத் தமிழர்கள் தாம்.

“தமிழர்கள்” என்ற சொற்பதத்தைப் பாவித்து அதற்குள் இவர்கள் அடைக்கலம் தேடிய காரணத்தினால் லட்சோப லட்ச அப்பாவித்தமிழர்கள் அகதிகளானார்கள், இடம் பெயர்ந்தோர் ஆனார்கள், உடமை இழந்தார்கள், தம் உரிமைகளையும் இழந்தார்கள்.

“தமிழ் மக்கள்”, “தமிழ் மக்கள்” என்று புலிகள் இருக்கும் வரை கூச்சல் போட்ட நெடுமாறன்கள்,வை.கோக்கள்,சீமான்கள் வகையறாக்களால் இப்போது இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் நலன் புரி முகாம்களில் வாழும் மக்களுக்காக ஏன் ஒரு கூட்டம் கூட்ட முடியவில்லை? ஏந் ஒரு மேடையில் முழங்க முடியவில்லை? ஏன் ஒரு வேளை உண்ணா நோன்பாவது இருக்க முடியவில்லை?

அவர்களைப் பொறுத்தவரை “தமிழர்கள்” என்பதற்கான அர்த்தமே வேறு.

அதிலும் “தமிழன்” என்பதன் அர்த்தம், அவர்கள் மிகவும் நேசித்த பிரபாகரன் எனும் தனி நபர் தான் அவர்களது “தமிழன்”.

இப்போது இலங்கை அரசு அவரைக் கொன்றதாகக் கூறினாலும், இந்த வகையறாக்கள் அவர் உயிரோடு இருப்பதாகக் கூறுவதனால், இவர்களது சித்தர்ந்தப்படி “தமிழன்” காப்பாற்றப்பட்டு விட்டான், எனவே இவர்கள் கடமை முடிந்து விட்டது.

இனியொரு அரசியல் தேவை வந்தால் தவிர, இந்த வகையறாக்கள் அந்த அப்பாவி மக்களைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை.

ஆனால், வீராப்பாக போரை நடத்தி ஒரு முடிவைக் கண்ட அரசாங்கம் கட்டாயம் கவலைப்பட வேண்டும்.

சர்வதேச சமூகத்தில் இருக்கும் அரசியல் இடைவெளிக்குள் நெளிந்து,சுளிந்து அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தங்க வைத்துக்கொள்ள உண்மையான “தமிழ் மக்களுக்கு” அவர்கள் தோள் கொடுக்க வேண்டும்.

அப்போது, பாதிக்கப்பட்டு, நாதியிழந்து தவிக்கும் மக்களுக்குத் தம் நண்பர்கள் யார் என்று தெரியாவிடினும், அதை யோசிக்கும் சூழ்நிலை இல்லாவிடினும், புலிகள் தம்மைத் “தமிழராக” க் கூட மதிக்கவில்லை என்கிற உண்மை தெரியவரும்.

அதற்காக அவர்கள் சிங்கள அரசாங்கங்களிடம் மீண்டும் தம் உரிமையை அடகுவைக்கும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்களாயின் அது அவர்கள் மீண்டும் தமக்குத் தாமே குழி தோண்டிப் புதைக்கும் செயலாகவே அமையும்.

அவர்கள் சிந்திக்க வேண்டும், அவர்களது உரிமையை அவர்களே வென்றெடுக்க வேண்டும், அதற்கு யாரைத் தலைமை தாங்க வைப்பது என்று அவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

தன் சொந்த அடையாளத்தையே இழக்க வைத்த இது போன்ற போராட்டங்கள் இனிமேலும் வேண்டுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

போராடித்தான் ஆக வேண்டும் எனும் நிலை வந்தால், அந்தப் போராட்டத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இப்போதிருக்கும் எந்தத் தலைவர்கள் அவர்கள் முன் வந்தாலும், அவர்கள் என்னதான் செய்தாலும், மக்கள் சுதந்திரமாக, சுயமாக சிந்தித்துத் தம்மை, தம் சமுதாயக் கட்டுமானத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் தம்மைப் பராமரிப்போரிடம் தம் சுய புத்தியை அடகு வைக்காமல், தற்காலிக நலன்களில் மயங்கி விழாமல் சுதந்திரமாகத் தம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொலைந்து போன தம் அடையாளத்தை சிறுபாண்மையினமாக அல்ல இலங்கைத் தீவின் சுய மரியாதை உள்ள பங்காளிகளாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கான அரசியல் பாடத்தை இவர்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டு விட்டாலும், சரியான முறையில் வழி நடத்தப்படுவார்களா? இல்லை மேலும் பல பிளவுகளாகத் துண்டாடப்படுவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்.

புலிகள் சார்ந்த, புலிகள் சாராத அரசியல் சக்திகளும், மக்கள் நலன் சார்ந்த, அரசியல் நலன் சார்ந்த சக்திகளும், அடங்கிப் போகும், உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகளும் என்று பல மக்கள் குழுமங்கள் இந்த இடம்பெயர்ந்த மக்களுக்குள் இருப்பார்கள்.

இதில், தமக்கெதிராக வெகுண்டெழக்கூடிய விறைப்புள்ளவர்களை அரசாங்கம் இப்போதிருந்தே பிரித்தெடுக்க ஆரம்பித்திருக்கம், அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட பின் அவர்களது நிலைப்பாடு அறியப்படாமல் அவர்கள் பொதுசனத்தோடு கலக்கப்படுவதை இன்னும் ஒரு புலி உருவாகக்கூடாது எனும் நோக்கிலாவது அரசாங்கம் அனுமதிக்காமல் விடும்.

அத்தோடு தமக்கிருக்கும் கல்வி “அறிவை” வைத்து மொழிபெயர்ப்பு,குரல் கொடுப்பு என்று ஒரு சிறு பிரிவு மக்கள் மீது ஆளுமை செலுத்தவும், அனாதரவாய் தவிக்கும் குழந்தைகள், பெற்றோர்கள் என்று ஒரு புறமும் இருக்கப் போகும் இடைவெளியைப் பாவித்து இன்னொரு குழு தம் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும்.

போராட்டம் என்ன போராட்டம் வளைந்து கொடுத்து வெளியேறி தம் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் இறுதிக்காலத்தையாவது சுகமாகக் கழிக்கலாம் என்று ஒரு குழு வெளியேறத் துடிக்கும்.

இப்படி பல்வேறு பிளவுகளைக் கொண்ட இந்த சிறுபாண்மையினத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை அவர்களது “சுய சிந்தனையிலேயே” தங்கியிருக்கிறது.

அங்கே மக்கள் அல்லல் படுகிறார்கள் என்றவுடன் தெற்கிலும் அவர் சார்ந்த சிறுபாண்மையினரும், பெரும்பாண்மையினத்தவரும் கூட சும்மாயிருக்க வில்லை, தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து, அம்மக்களுக்கு தம்மால் முடிந்ததை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புலித்தலைமை ஒழிந்ததே தவிர, புலி இன்னும் இருக்கும் எனும் பயம் அரசிடம் இருந்து அகலப் போவதில்லை.

மீண்டும் பழைய “தலையாட்டி” கலாச்சாரம் கூட அறிமுகப்படுத்தப்படலாம்.

ஆக மொத்தத்தில் முப்பது வருடங்கள் இந்த உரிமைப்போராட்டம் சுமந்து வந்த முரண்பாடுகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும்.

இவை, ஏலவே சரியான பாதையில் பயணித்திருந்தால் இன்றைய தலைமுறையாவது நன்றாக வாழ்ந்திருக்கும், இன்றும் ஒன்றும் குறையவில்லை, இனி வரும் தலைமுறையினர் வாழ்வதற்கு வழி காட்டும் திறன் உங்களிடம் இருக்கிறது.

அவர்களை சரியான முறையில் நீங்கள் வழி நடத்துவீர்களா என்பதைத்தான் வரலாறு பொறுமையாகப் பார்க்கப்போகிறது.

ஆளும் வர்க்கம் எப்போதுமே தம் ஆளும் நலனைக் கருத்திற்கொண்டே தம் திட்டங்களை முன்வைக்கிறது, அது சமூகத்தின் அடி மட்ட மனிதனுக்கும் அவன் அல்லலுக்கும் திருப்தியான பதிலைத் தராதவரை அது ஒரு சமூகம் சார்ந்த தீர்வாக இருக்கப்போவதில்லை.

சமூகப்பிளவுகளை உருவாக்குவதன் மூலம் எப்படி சிறுபாண்மையினமே சிறு சிறு இனமாகத் துண்டிக்கப்பட்டதோ அவ்வாறே அவதிப்படும் மக்களும் துண்டாடப்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

இழந்து போன ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவது அவ்வளவு இலகுவானதல்ல, சிங்கள மக்கள் முஸ்லிம்கள் கலந்த “தமிழ்” மக்கள் மீதும், முஸ்லிம் மக்களோ “தமிழ்” மக்கள் மீதும், தமிழ் மக்கள் நாணிக் குறுகிய நிலையில் “முஸ்லிம்” மக்கள் மீதும், ஆளும் வர்க்கமோ இவ்வனைத்து மக்கள் மீதும் ஒரு “சந்தேகக் கண்ணை” எப்போதும் வைத்திருக்கத்தான் போகிறது.

சர்வதேசத்தோடு வளைந்து,நெளிந்து நீந்சிச்செல்லத் தெரிந்த இந்த அரசாங்கம், எதிர்வரும் காலத்தை மக்கள் தம் அடிப்படைப் பிரச்சினைகளைக் களைந்து அபிவிருத்தியில் வேலை வாய்ப்புகளைக் கண்டு, தம் சுய தேவைகளை உழைத்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் இவ்வாறான சமூகப் பிளவுகளைத் தவிர்க்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு.

சீனா,ரஷ்யா,இந்தியா,பாகிஸ்தானுடன் இலங்கை வைத்திருக்கும் இந்தக் கூட்டுறவு உடன்படிக்கை யார் தலை கீழாக நின்றாலும் நி்ச்சயமாக எதிர்காலப் பொருளாதார நலன் சார்ந்ததாகவே இருக்கும்.

அவ்வாறே அது அமையப்பெற்றால், நிச்சயமாக மக்களின் அபிலாஷைகள் வேறு வடிவத்தில் பிறக்க ஆரம்பிக்கும், ஆனால் அப்போதும் “அரசியல்” இருக்கும்.

அந்த “அரசியலை” நிர்ணயிக்கும் சக்தியாக மக்கள் இருந்தால், நம் கடந்த கால முரண்பாடுகளை மறந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை நோக்கி சுய மரியாதையுடன் செல்லலாம்.

இவையனைத்தும், இன்றோ நாளையோ நடக்கப்போகும் விடயங்களல்ல, காலப்போக்கில் அரசியல் நியதிப்படி அமையக்கூடிய எதிர்வு கூறல்கள் மாத்திரமே.

அவற்றின் கள நிலை அறிந்து செயற்படும் பொறுப்பு ஒவ்வொரு மனிதரையும் சாரும், அவரை வழிநடத்த வரும் தலைமையை அறிந்து செயற்படும் தேவையும் அவரையே சாரும்.

இப்போதைக்கு அது “நடந்து முடிந்த” முரண்பாடுகளோடு தூக்கி வீசப்படடாலும், எதிர்கால முரண்பாடுகளை எதிர்க்கொள்வதும், அவற்றை உருவாகாமல் தடுப்பதும் மக்கள் கைகளிலேயே இருக்கிறது!

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 responses to “மூன்று தசாப்தங்கள், மூவாயிரம் கோடி முரண்பாடுகள்

 1. kolin

  மே22, 2009 at 1:38 பிப

  nalla vidaijam.aalntha karuththu,arivana sinthnai,ujarvana nookku,tholainookkuparvai. ithanai jalpanaththilum,vannimukankalilum,vavunijamukankalilum.ullavarkalitku.thundupirasuramakavo,sejthijakavoo,arijappaduththuvathuvathum thankalathu kadamai????avarkalaitku ivai parkkum vasathikal ilai.ithatku munnurimai koduththu pirasurikkavum,ithai etkum udakanklum angkukillai..nanri…

   
  • arivudan

   மே22, 2009 at 3:39 பிப

   kolin, உங்கள் கருத்து ஏற்புடையதே, பல ஊடகங்கள் இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பார்வையிடுகின்றனர், அவர்கள் தம் மாயையை விட்டு வெளியேறி இவற்றையும் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

   இணையத்தில் பல ஊடகங்கள் எமது கருத்துக்களை தமது வாசகர்ளோடு பகிர்ந்துகொள்கிறார்கள், அவர்கள் மூலமாகவும் பல வழிகளில் இக்கருத்துக்கள் பலரை சென்றடைகின்றது, அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம்.

   எதிர்வரும் காலத்தில், எமக்கு நேரடியான ஒரு தொடர்பு அப்பிரதேசங்களில் இருந்து வருமாயின் அவர்களுக்கான முழு ஒத்துழைப்பை வழங்கவும் தயங்க மாட்டோம், தற்போது எம்மால் எது முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்.

   எமது கருத்துக்களைக் கூட மக்கள் அலசி ஆராய்ந்து தம் சுய சிந்தனையில் முடிவெடுக்க வேண்டும் என்பதே எமது அவாவும்.

   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
   நல்லது என்று நினைக்கும்பட்சத்தில் இன்னும் நாலுபேருக்கு இதை எடுத்துச்செல்லுங்கள், இப்படி ஏதாவது ஒரு வழியில் அல்லல் படும் மக்கள் பார்வைக்கும் இவை செல்லும் என்றும் நம்புவோம்!

    
 2. A.Chandrakumar

  மே22, 2009 at 10:37 பிப

  இந்தக் கட்டுரை உலகத்தில் உள்ள எல்லாத்தமிழர்களின் மின்னஞ்சல் விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும். எல்லோரும் அதை வாசித்துத் தெளிவுபெற வேண்டும். ஆகவே ஒவ்வொரு வாசகரும் தமக்குத் தெரிந்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு இந்தக் கட்டுரையினை அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்தக் கட்டுரை அனைத்துத் தமிழர்களும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் எமது தமிழினம் எதிர்காலத்தில் மிகவும் தெளிவுடனும் நிதானத்துடனும் செயல்பட முடியும். கட்டுரை ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகுக.
  நன்றி.

   
  • arivudan

   மே23, 2009 at 10:08 பிப

   A.Chandrakumar, உங்கள் ஆலோசனைக்கு ஏற்ப எமது பதிவுகளிளேயே மின்னஞ்சல் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்று முயற்சிக்கிறோம், அது முடியுமாயின் அவ்வசதியையும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம், எனவே பார்வையாளர்கள் இங்கிருந்தே அதை செய்ய முடியும்.

   நன்றி.

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: