RSS

என்ன கொடுமை தலைவா!

20 மே

சாதாரணமாக உன் அன்பைப் பெற்றவர்கள் காச நோயில் இறந்தால் கூட அவர்களை “மாமனிதர்களாக்கி” அழகு பார்த்த உன் உயிர் பிரிந்து இரண்டு நாட்களாகியும் உன்னை விசுவாசித்ததாய் சொல்பவர்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் தானும் இன்னும் வடிக்கவி்ல்லை.

கேட்டால் நீ இன்னும் இறக்கவில்லை என்கிறார்கள், என்னதான் செய்வது அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை.

இந்தப் பெருமையெல்லாம் உன்னையே சாரும்.

ஈழ மக்களை ஒரு வகை “பிரம்மையில்” வாழ வைத்து, அவர்களின் உணர்வுகளை ஒரு வகை “தனித்திசையில்” மட்டும் சிந்திக்க வைத்து, நேற்று மாலையும் உன்னோடு 30 வருடம் கூடவே இருந்த தயா மாஸ்டர் சொன்னது போல “உனது இருப்புக்காக” ஈழப் போராட்டம் நடத்தி முடித்து, இன்று நீ விண்ணுக்கும் சென்று விட்டாய், ஆனால் பார் உன்னால் உருவாக்கப்பட்ட இந்த விசுவாசிகள் தம் கால்களைத் தரையில் கூட வைக்கப்பயப்படுகிறார்கள்.

மோட்டுச் சிங்களவன்,மோட்டுச் சிங்களவன் என்று கும்மாளம் போட்டுக்கொண்டு, அந்தச் சிங்கள சமுதாயமே பார்த்துப் பரிதாபப்படும் அளவுக்கு ஒரு முட்டாள்ச் சமூகத்தை வளர்த்து விட்ட முழுப் பெருமையும் உனக்கும் உன் புலன் ஆய்வுத் தலைவர் பொட்டம்மானுக்குமே சேரும்.

கல்வியிற் சிறந்து விளங்கிய ஈழத்தமிழர் சமுதாயம் இன்று இந்த அளவு முட்டாள் சமூகமாக மாறிவிட்டதை நினைக்க வேதனையாய் இருக்கிறது.

அதையும் விட, நீ உருவாக்கிவிட்ட இந்த கலாச்சாரம் இன்று உன் மரணத்துக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூட ஒரு மனிதனை உன்னை ஆதரித்தவர்களில் உருவாக்கி வைக்காதது மாபெரும் கேவலமாகப் படுகிறது.

சமுதாயத்தின் அடிமட்டத்தில், அனைவராலும் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு போக்கிரி கூட தான் செத்தால் தன்னை நாலு பேர் நல்லெண்ணத்துடன் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பான்.

உலகெல்லாம் உனக்கென ஒரு படை இருந்தும், இன்று அவர்களால் உனக்காக ஒரு மெழுகுவர்த்தி தானும் ஏற்ற முடியாமல் போயிருப்பது நீ வளர்த்த அதே மூடர் கலாச்சாரத்தால் தான் என்றால் அது மிகையாகாது.

தமிழீழம் கிடைத்ததோ இல்லையோ, மக்களை எப்போதும் “உணர்ச்சி மேலோங்கிய” ஒரு நிலையில் வைத்துக்கொண்டு, உண்மை பொய்களை பிரித்தறியும் பக்குவத்தை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதற்கு உன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட பரப்புரை மருத்துவர்கள் தம் காரியத்தை செவ்வெனே செய்து முடித்து, அதே பொய்ப் பரப்புரைகளால் உன்னையும் மக்களிடமிருந்து மறக்கடிக்கச் செய்து விட்டார்கள்.

என்றாவது ஒரு நாள் இந்த உண்மை வெளிவரும் போது, அன்று இதே மக்களுக்கு உன்னை மறந்து போயிருக்கும், இல்லை உன் கதை ஒரு கடந்த கால வரலாறாக மாறிப்போயிருக்கும், அன்று வேண்டுமானால் உன்னை மிக மிக நேசித்த உன் குடும்பம் மட்டும் மீண்டும் கண்ணீர் சிந்தும், ஏனெனில் அவர்கள் இன்றும் வெளியுலகுக்குத் தெரியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள்!

ஆனால், அதை வெளியில் கொண்டுவந்தால், தமிழீழ மாயை மறைந்து தம் வங்கிக்கணக்குகள் வறண்டு போகும் என்பதால் உன் தலைமையை வழிநடத்திய “தலைகள்” சிந்திக்கின்றன போலும்.

எனவே, நீ மறைந்த கொடுமையை உன் கடைசி ஆதரவாளன் ஏற்றுக்கொள்ளும் அந்த நாளில் அவனால் கண்ணீர் சிந்தக்கூட முடியாத தூரம் காலம் சென்றுவிடும்.

சிங்களவன் பிரச்சாரம் செய்கிறான் அதை நாங்கள் எதிர்க்க வேண்டும் என்பது அடிப்படை, ஆனால் அந்தப் பிரச்சாரத்தை எதிர்க்கும் சக்தியை நீ தொப்பிகலவை விட்டுச் சிதறி ஓடிய போது அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் சூப்பர்மேன் நீ எனும் பிரம்மையை உன் பிரச்சார மருத்துவர்கள் அவர் பங்கு மற்றும் உன் பங்கு நிதி திரட்டல்களுக்காக தொடர்ந்தும் பேணி வந்தார்கள்.

15000 சதுர கி.மீ நிலப்பரப்பை வைத்திருந்த நீ, பின் வாங்கிப் பின்வாங்கி முள்ளிவாய்க்கால் புற்தரையைச் சுற்றி ஒரு சில மீற்றர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் வரையிலும் கூட “உண்மையை” உண்மையாய் ஏற்றுக்கொள்ள உன் சீடர்கள் மறுத்த காரணத்தினால், நீ தான் சூப்பர் மேன் ஆச்சே திடீரென ஆமிக்காரனுக்கு கண்கட்டு வி்த்தை காட்டி உன் படைசூழ அம்பாறைக் காடுகளிலோ இல்லை அட்லாண்டிக் கடற்கரையிலோ காற்று வாங்கிக்கொண்டிருப்பாய் என்றுதான் நம்பினார்கள்.

உன் தலைக்கு ஆபத்து நெருங்குகிறது என்கிற “உண்மையை” உண்மையாய் மக்கள் அறிந்திருந்தால் ஒரு வேளை தாம் போராடும் காரணத்தை நேரடியாகவே தம் ஆர்ப்பாட்டங்களில் முன்வைத்து, தம் கோரிக்கையை நேரடியாகவே உலகறியச் செய்து, “ஆம்” அவன் தான் எங்கள் தலைவன், அவன் தலைமைதான் எங்களுக்கு வேண்டும் என்று அவர்களை ஒன்று திரள வைத்து, இலங்கைக்கு எதிராகப் பாய சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த உலகின் மிகப்பெரும் வல்லரசுகளான அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தி லட்சோப லட்ச மக்களின் தலைவன் அவன், ஆகவே சமாதானமாக அதிகாரப் பகிர்வுக்கு செல்லலாம் என்றாவது பேச வைத்திருக்கலாம்.

உன் மருத்துவர்கள் அதை விட வில்லை, மாறாக “தமிழர்”,”தமிழர்” என்று மறைமுகமாக மக்கள் மேல் பாரத்தைப் போட, மக்களா? அவர்களைத்தானே நாங்கள் விடுவிக்கிறோம் என்று அரசாங்கம் அதற்குத் திரைக்கதை எழுத, பேச வந்தவர்களும் நிலையாக நின்று நேரடியாக எந்த விடயத்தையும் கையாள முடியாமல் மூக்குடைந்து போனார்கள்.

“மக்கள்” எனும் போர்வையில் அவர்கள் ஐ.நாவில் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு அதே “மக்களின் விடுதலை” என்கிற அரசாங்க வாதத்திற்குப் பலம் இருந்தது, அதற்கும் காரணம் நீ எப்போதும் ஒரு போர்வையைப் போர்த்தி ஒளிந்து கொள்ளத் துணிந்தாயே தவிர, உண்மையாக மக்களுக்கு உழைக்க வில்லை.

உலகத்தில் எவனொருவன் உன்னை எதிர்த்து சிறு கேள்வி கேட்டாலும், அவனுக்குத் “துரோகி”,”ஒட்டுக்குழு” என்று பட்டம் சூட்டி அழகு பார்க்க உன் பரப்புரை மருத்துவர்களுக்கு அதிகாரம் வழங்கினாயே தவிர உன் கூடவே அதுவும் உன் ஆரம்பம் முதல் முடிவு வரை “துரோகிகள்” இருந்தார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவே இல்லை.

இப்போதும் உன் மருத்துவர்கள் தம் பரப்புரைப் பலனால் உன்னை உயிரோடு வாழ வைத்திருக்கிறார்கள்.

அதற்காக இன்னும் சில காலத்துக்கு உன் “பதிவு செய்யப்பட்ட” ஒலி,ஒளி கசமுசாக்களை வைத்து அவர்கள் படங்காட்டினாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால், என்றாவது இந்த உண்மை வெளி வராமலா போய்விடும்?

வரும், நிச்சயமாக வரும், ஆனால் பரிதபம், அந்த நாளில் மீண்டும் ஒரு தடவை தெருவில் இறங்கி உனக்காக ஒரு அஞ்சலி செலுத்தும் சக்தியைக் கூட இழந்திருப்பார்கள்.

உன் மருத்துவர்களின் முகங்கள் கரி பூசப்பட்டு, தாம் வாழும் வாழ்க்கையை அவர்கள் வாழப் பழகியிருப்பார்கள்.

இப்போது போட்ட கூப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக இனனும் சில காலங்களுக்கு உன் இன்டர்நெட் படை இலங்கைத் தீவின் எந்த மூலையில், அரசாங்கம் என்ன தவறு செய்தாலும் அதற்காகக் குரல் கொடுக்கும்.

இப்படியே ஈழம் காணப்புறப்பட்ட உன் போராட்டம் இன்டர்நெட்டோடு குறுகி, ஒரு சில காலத்துக்கு இலங்கை அரசை விமர்சிக்கும் பணியைச் செய்து விட்டு, இன்னும் சில காலங்களில் முற்று முழுக்க சினிமா பாடல்கள், திருட்டு வி.சி.டி வெளியீடுகள், நட்சத்திர கிசுகிசுக்கள் மற்று நடிகைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுதல் என்று திசை மாறிச் சென்றுவிடும்.

அதற்கு ஏதுவாகவே பல தமிழ்த்தேசிய இணையங்கள் அதையும் இதையும் ஏற்கனவே சம நிலையில் பேணி வருகின்றன.

அதன் பின்னரும், இன்னும் சிலர் அமைதியாக வீட்டில் இருந்தாவது அழிந்து போன ஒரு உரிமைப்போராட்டத்தைப் பற்றி மனம் வருந்திக்கொண்டிருப்பார்கள், அவர்கள் உண்மையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்களை இறுதி வரை தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

ஏனெனில், அவர்கள் அப்போது உனக்கும் பயந்தும், இப்போது இனி வரப்போகும் நிலை மாற்றங்களுக்குப் பணிந்தும் தம் குமுறல்களை அடக்கிக்கொள்வர், நேரம் கிடைத்தால் “மாற்றுக் கருத்து” இணையங்களில் தம் கருத்துக்களைச் சொல்வர்.

காலஞ் செல்லச் செல்ல உன் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற பலர் தம் அன்றாட வாழ்க்கையில் இந்தக் கருத்துக்களை வைத்து எடை போட ஆரம்பிப்பர், பின்னொரு காலத்தில் உன் கதை அழிந்தே போய் விடும், இப்போது முதல் முன்னெடுக்கப்படப் போகும் ஈழத் தமிழரின் புது அத்தியாயம் இனி வரும் காலத்தில் முக்கியம் பெறும்.

இதை வாசிக்கும் ஒவ்வொரு புலி ஆதரவாளனுக்கும் ஆத்திரமும், அழுகையும் வரும், ஆனால் சிந்தனை மட்டும் வராது, ஏனெனில் அவன் உன்னால் சிந்திக்கப்பழகவில்லை.

ஆத்திரத்தைக் கொட்டப் பழகியிருக்கிறான், தேவையான அளவு கெட்ட வார்த்தைகளில் திட்டப் பழகியிருக்கிறான், கண்ணீர் வழியும் படங்களைப் போட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பழகியிருக்கிறான், ஆனால் சிந்திக்கப் பழகவில்லை.

எனவே, அவன் மீது திணிக்கப்பட்ட “சிகிக்சை” பலமிழந்து, அவனாக வெளி வந்தால் தான் அவனுக்கும், அவன் சமூகத்துக்கும் அவனால் நன்மை.

அதுவரை, இனி வரும் புதுப்புது அத்தியாயங்கள் பற்றிய வாத,விவாதங்களுக்கு உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த அத்தனை உண்மைகளின் நடுவிலும், நீ மறக்கப்பட்டு விட்டாய்! மறைக்கப்பட்டு விட்டாய்! அதுதான் உண்மை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to “என்ன கொடுமை தலைவா!

 1. roy

  ஜூன்2, 2009 at 12:15 முப

  நல்ல காலம் நான் மாற்று இயகத்தில் இருந்து சிந்திக்க தெரிந்ததால் விடுபட்டு ஓடி வந்து விட்டேன். இல்லையேல் இன்று ஒரு வெள்ளை வான் கடத்தல் காரனாகவோ அல்லது சிறுமையை கடத்தி கற்பளிப்பவனாகவோ அல்லது சிங்களவனுக்கு பாதை காட்டி எம்மக்களை அழிப்பவனாகவோ மாறி இருப்பேன். நான் யோசித்ததால் தான் பொய், புரட்டுக்களால் இயக்கத்தில் சேர்ந்தவர்களை ” மக்கள் போராட்டம் ” என பம்மாத்து காட்டி நாலு சிவப்பு புத்தகத்தை காட்டி மாக்சிச – லெனிச மாயை காட்டி விட்டு இன்று எதிரியின் அரசவையில் அமைச்சர்களாம். சனநாயகம் என கூறி நாலோ ஐந்தோ வாக்குகள் எடுத்தவர்கள் அமைச்சர்களாம். தூ, தமிழனாக இப்படி ஒரு பிறப்பு பிறக்க வேண்டுமா என நன்றாக யோசித்து தான் சொல்கிறேன்.

   
 2. shan naran

  ஜூன்9, 2010 at 8:08 பிப

  பதினேளாவது வயதில் மக்களின்
  புரட்சியாழன்………..
  ஐம்பதவது வயதில் கிட்லரின் விரிவாளன்……………
  நீ பிரிந்து போனது
  எனக்கெந்த மகிழவையும் தரவில்லை……

  சுதந்திரம் கிடைத்த உணர்வைவிட……..
  துவண்டு போன மனதில்
  நம்பிக்கை கொன்டு
  கை தூக்கி நின்றது…..

  முகங்களின் சலனமற்ற சந்தோசம்………..
  கண்கழில் மலர்ந்த கண்ணீர் பளிங்குகளாய் விழிகளெல்லாம் நனைந்தன ………….
  வார்த்தைகள் கொதிப்பற்ற மகிழ்வாழ்……
  எல்லாம் கிடைத்த உணர்வு………
  எத்தனையே நாள் நெஞ்சுக் குழிக்குள்ளே, …………
  நிஜங்களைத் தொலைத்துவிட்ட
  நினைவுப் போராட்டம்….
  எத்தனைநாள்கள் விடை தெரியாமல் கலைந்து போன கனவுகள்…………….

  விடியலை நோக்கி
  நின்ற ஏக்கம் ………..
  இருண்ட என் இனத்தால்
  உருவான கனவுகள்………..
  உணர்வறிய கதிர்கழாய்
  உடைந்து எறிந்த நினைவுள்…………

  பயம் என்ற வார்த்தை
  வீரத்திற்குள் புதைத்துவிட்டு….
  மண்மீது காதலால்தாகம்
  என்ற வேகத்தால் வந்த
  எத்தனை பூக்கள் விரியமுன்
  விதைக்கப்பட்டது உன் கரங்களால்…

  கண்ணியமிக்க தோழர்களை

  கண்ணி வைத்து பிடித்திழுத்து

  கதற கதற தீயில் எரித்த வரலாறு…….

  தரம்கெட்ட உன்செயல்கல் தலைசுமந்த – நீ
  தள்ளாடி நடந்து தட்டேந்த வைத்த உன்சிந்தனை- உனை
  தள்ளாடியில் தான்டவம் ஆடவைத்தது

  உனக்கு இரங்கல் உரைவைக்க
  எவன் வருவான் என்றெண்ணி
  நிலவுகாத்த கிளிபோல்
  அன்று இன்று நாளை என்று
  இரவ பகலாய் காத்துகிடக்கின்ற –உன் விழுதுகள்………..
  கண்ணீரில் நனைந்து
  உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
  நான் கோமாளியும் இல்லை
  அங்கு மௌனவிப்பவர்கள் புரட்சிகர சிந்தனையாளர்கள்…..…..

  எங்களுக்குள் இடைவெளிகள் அதிகம்
  என்றாலும்
  உன் கல்லறையில்
  நாம் பூ வைக்க வேண்டும்
  நீ வீரன் என்பதற்காக அல்ல
  நாம் வாழ்வதற்காக -நீ
  வீழ்ந்தாய்

  மழை முடிந்த மாலைகளில்

  இப்போதும் காண்கிறேன்,

  தனியாய்

  சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை…….

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: