நித்திரை வி்ட்டு எழுந்து கேட்கப்படும் ஒரு முட்டாள்க் கேள்வி போன்று இருக்கும் இந்தக் கேள்விக்கான சில விடைகளை தேடிப்பார்த்தால் ஈழப்போரின் இறுதித் தாக்குதலை நீங்களும் எதிர்கொள்ளலாம்.
ஈழத்தில் ஒவ்வொரு முறை சமாதான உடன்படிக்கைகள் எழுதப்படுவதும், அதன் பின்னர் அவை கிழித்தெறியப்படுவதும், அதற்குப் பின்னர் திடீரென ஆயுத பலத்தை இரு தரப்பும் காட்ட முனைவதும், அந்த ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஈழப்போர் 1,2,3 என்று பெயர் சூட்டுவதுமாக காலங்கள் கடந்தோடி மூன்று தசாப்தங்கள் முடிந்துவிட்டது.
இந்த ஒவ்வொரு கால கட்டத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கம் என்னதான் மனித விரோதிகளாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் தம்மைப் பலப்படுத்தி அல்லது ஒரு பலமான அமைப்பாக நிலை நிறுத்திக்கொண்டே வந்த உண்மையும் மறுக்க முடியாத உண்மையாகும்.
தமக்கான வழங்கல் பாதைகளை சரியான முறையில் பராமரிக்கும் அதே வேளை தமக்கான நிதி திரட்டல்களை கன கச்சிதமாக மக்கள் உழைப்பிலிருந்து உறிஞ்சியெடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
அப்போதெல்லாம் தென் பகுதி அரசுகளும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு அரசியல் வியாபாரமாக மாற்றி தம் பலத்தை வெவ்வெறு வழியில் முதலீட்டாக்கி, தம் அரசியல் இலாபக் கணக்கை மட்டும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
ஆனால், என்பதன் பின்னால் மஹிந்த அரசாங்கம் வரப்போகிறது.
ஆம், இந்த அரசாங்கம் எப்படி ஆட்சிக்கு வந்தது என்பதே இன்னும் நிரூபிக்கப்படாத அல்லது இனியொரு காலமும் நிரூபிக்க முடியாத ஒரு வதந்தியைத் தாங்கிக்கொண்டிருக்க, அரசியல் விளையாட்டின் இன்னொரு பக்கத்தை கரைத்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள் மஹிந்த பிரதர்ஸ்.
பல வல்லரசுகளைக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் நெளிவு சுளிவுகளோடு இசைந்து, பிராந்திய நலனின் ஒருமைப்பாட்டையும் ஆயுதமாக ஏந்தி, பூகோளத்தில் இலங்கைத் தீவின் அமைவிடத்தையும் தம் மூலதனமாக்கிப் பல கை தேர்ந்த வித்தகர்களின் வழமையான பாதையை விட்டு விலகி, ஒரு நிலையான, உறுதியான, கொள்கையைக் கொண்ட ஒரு அரசாங்கமாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்று அவர்கள் கங்கணம் கட்டிய போது, முதன் முதலில் அவர்கள் உடைத்தெறியத் திட்டம் தீட்டியது, புலிகளின் சர்வதேச வழங்கல் பாதைகளையோ,அவர்களது நட்பு நாடுகளையோ அல்லது அவர்கள் மனோ பலத்தையோ அல்ல.
அவர்களுக்கு முதுகெலும்பாக நின்று நிதித் திரட்டை நிலையாக வழங்கிக்கொண்டிருந்த வெளிநாடு வாழ் புலி ஆதரவுத் தமிழர்களின் உள நிலையையாகும்.
விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் மக்கள் அரசிற்கு ஒரு பிரச்சினையே இல்லை, அவர்களை ஆதரிப்போர் பேர்வழியென்று கங்கணம் கட்டி நிற்போரை கதிகலங்கச் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது முழுத் திட்டமாகவும் இருந்திருக்க வேண்டும்.
அதையே ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக செய்தும் வந்திருக்கிறார்கள்.
வழமையான இலங்கை அரசுகள் தாம் செய்யாததை செய்ததாகக் கூறி, அதன் வழியில் கதைகளை உருவாக்கி தம் புகழைப் பராமரிப்பதிலேயே நாட்டம் காட்டி வந்திருந்த வரலாறே நமக்குத் தெரியும், ஆனால் முதன் முறையாக ஒரு அரசு, “நெகடிவ்” அப்ரோச், அதாவது தம்மைப் பலவீனப்படுத்திக் காட்டும் வதந்திகள் மூலம், தம் திறமையை எள்ளி நகையாட வைத்து, அதன் பின் சொல்லாததைச் செய்யும் அதிரடி அரசாக உருவெடுத்துக்கொண்டது.
இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம், எனினும் அவர்களது இந்தப் பாணியிலான இறுதித்தாக்குதல் இன்றோ நாளையோ நடக்கக்கூடும் என்பதால் அதையும் நினைவூட்டிக்கொள்வது நன்று.
மாவிலாறிலிருந்து இராணுவம் முன்னேறிக்கொண்டு வருகிறது, இதோ அதோ என்று எங்கெல்லாமோ வந்துவிட்டான், ஆனாலும் புலி ஆதரவாளர்கள் “இராணுவம் அகலக் கால் வைக்கிறது”, “தலைவர் பாய்வார்”, “புலிகள் பாய்ச்சலுக்குப் பதுங்குகின்றனர்” என்று பரபரப்புப் பண்ணி காசு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தப் பரபரப்புகளின் பின்னாலான ஒரு மறைமுக சக்தியாக இலங்கை அரசு தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வந்தது.
அதன் உச்ச கட்டமாக, கிளிநொச்சியை கைப்பற்ற சரியான தருணம் பார்த்திருந்த இராணுவம், தலைவரை வைத்தே “இலங்கை இராணுவமும் மஹிந்தவும் பகற்கனவு காண்கிறார்கள்” என்று சொல்ல வைத்து அவர்கள் ஆதரவாளர்களைக் குஷிப்படுத்தியது.
துள்ளிக் குதித்து அவர்கள் தரையிறங்க முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றித் தம் அதிர்ச்சி வைத்தியத்தினை ஆரம்பித்து வைத்தார்கள் இலங்கை இராணுவத்தினர்.
இடங்கள் எல்லாம் முக்கியமில்லை என்று தலைவரே சொல்லிவிட்டாரே என்று சிஷ்யர்கள் விட்டுக்கொடுத்தாலும், எப்போது புலி பாயும் எனும் அவர்கள் எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை, உற்சாகமூட்டும் பல செய்திகள் அடிக்கடி புதினத்திலும், தமிழ்நெட்டிலும் எழுத்தாகவும் பல புலி ஆதரவு இணையங்களில் வீடியோ பரப்புரைகளாகவும் சில தொலைக்காட்சிகளில் புலிகளே அனுப்பும் வீர தீர ஒளிப்படங்களாகவும் ஓஹொவென ஓடிக்கொண்டிருந்த தருணத்தில், அடுத்த கட்ட பெருந் தாக்குதலுக்குத் தயாராக இருந்தது இலங்கை இராணுவம்.
இந்தத் தடவை புலி ஆதரவாளர்களை ஒரேயடியாக வானத்தில் மிதக்க வைக்க வைத்திருந்த திட்டத்தின் அடிப்படையில், கல்மடு அணைக்கட்டு உடைப்பைப் பாவித்தார்கள்.
செய்வதறியாது திகைத்த புலிகள் இயக்கம் “ஆம்” என்று ஒத்துக்கொள்ளாவிட்டாலும், வெள்ளத்தில் வள்ளங்களை மிதக்க விட்டு மறைமுகமாக உரிமை கொண்டாடியது.
கல்மடுகுளம் அணைக்கட்டு தகர்க்கப்பட்டது, ஐயாயிரம் இராணுவம் அழிந்தது, மடை திறந்த வெள்ளத்தில் புலிகள் “சுனாமி” தாக்குதல், கடற்புலி படகுகள் அப்படித்தாக்கின, இப்படித்தாக்கின, கன ரக ஆயுதங்களில் ஆரம்பித்து, முன்னேறிக்கொண்டு வரும் 58 வது படையணி முற்றாக அழிந்தது என்பது வரைக்கும் வீராதி வீர அறிக்கைகள் கசிய விடப்பட, புலி ஆதரவாளர்கள் எதிர்பார்த்தபடி வானத்தில் மிதந்து “விஸ்கியில்” குளித்து, களைப்படைந்து உறங்கச் சென்றார்கள்.
மறுநாள் விடிந்ததும், ” ஐயோ முல்லைத்தீவும் பறிதுபானதாம்” என்று அலறும் அதிர்ச்சி வைத்தியம் அவர்களுக்குக் காத்திருந்தது, எதிர்பார்த்தது போல் அதுவும் நடந்தேறி புலி ஆதரவாளர்களை உலுக்கி எடுத்தது.
இப்படி அதிர்ச்சி வைத்தியங்கள் சரியான முறையில் தம் உளவியல் போரை நடத்திக்கொண்டு செல்வதை மிகக் கவனமாக அவதானித்த இராணுவமும், இதை கடைசி வரை தொடர்ந்து கொண்டு சென்றது.
அதில் ஒரு பகுதியாக தமது நாளாந்த போர் நடவடிக்கைகளையும் பாவிக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் போர் நிலவரங்களைத் தெரிவித்து வரும் அரச தொலைக்காட்சிகளில் சில முக்கியம் வாய்ந்த செய்திகளை வரும்,வராது என்கிற தோரணையில் புலி ஆதரவாளர்களை மிகவும் எதிர்பார்க்க வைத்து, இல்லை அது நடந்திருக்காது என்று வாதாட வைத்து, அப்படியொன்று நடந்திருந்தால் நேற்றே தொலைக்காட்சிகளில் படம் போட்டிருப்பார்கள் என்றெல்லாம் தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்தி, ஆறுதலடைய வைத்து, பின்னர் திடீரென மீண்டும் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டது.
இதற்கு ஒரு உதாரணமாக தயா மாஸ்டரின் கைதைக் குறி்ப்பிடலாம்.
அப்படியெல்லாம் கைதாகியிருந்தால் பாதுகாப்பு அமைச்சு படம் வெளியிட்டிருக்கும், ரூபவாஹினி செய்தியில் காட்டியிருக்கும், இதெல்லாம் பொய், புலிகள் அகப்பட்டால் சயனைட் அடித்து இறந்து விடுவார்கள் என்றெல்லாம் இவாகளை நன்கு குழப்பி விட்டு, தயா மாஸ்டரை சுயா தீன தொலைக்காட்சியில் படு ஜாலியாக பேட்டி கண்டு, குழம்பிப்போயிருந்த புலி ஆதரவாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.
இப்படி வெளிநாடு வாழ் புலி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வழங்கிக்கொண்டிருந்த இராணுவம், பிரபாகரன் ஒரு சூப்பர் மேன் என்னும் மிகப் பலவீனமான கருத்தை வளர வைப்பதற்கு பெரும் பாடு பட்டது.
இன்னும் புலி ஆதரவாளனால் நம்ப முடியாத பல விடயங்கள் இருக்கின்றன:
- உண்மையிலேயே இப்படி எல்லா “தளபதி” பட்டம் சூட்டப்பட்டவர்களும் ஒன்றாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டார்களா?
- உலகிலேயே பெரும் பலம் வாய்ந்த இயக்கமாக இருந்த புலிகள் அமைப்புக்கு கடல் பகுதியே இல்லாமல் போகும் அளவுக்கு இராணுவத்தின் யுத்த வியூகம் அமைந்திருந்ததா?
- நீர்மூழ்கி, விமானங்கள், உலங்கு வானூர்தியெல்லாம் வைத்திருந்தும் புலிகளின் தலைவர் இப்படி ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டாரா?
- நடேசன் மின்னஞ்சலில் எல்லாம் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார், அப்படியிருக்க எந்த வசதியும் இல்லாமல் இறுதியாக அனைவரும் ஒரு இடத்தில் முடக்கப்பட்டிருப்பார்களா?
- அத்தனைக்கும் மேலாக சூப்பர் மேன் பிரபாகரன் அம்பாறைக் காடுகளுக்கு தப்பிச் செல்லவே இல்லையா?
- நீர்மூழ்கியொன்றையாவது பாவித்து தப்பிக்கொள்ள வில்லையா?
- இத்தனை கனரக ஆயுதங்கள் இருந்தும் போராடி மடியவில்லையா?
- கழுத்தில் சயனைட் வில்லை இருந்தும் அதைக் கடித்தாவது வீர மரணம் அடையவில்லையா?
என்று எண்ணிலடங்காத கேள்விகள், அவை எல்லாவற்றிற்கும் புலிகளே ஒரு மருந்தும் தருவார்கள் என்று காத்திருந்த இராணுவ வியூகத்திற்கும் சர்க்கரை சேர்ப்பதற்கு இனிமேல் வேறு வழியில்லை என்று ஆனதன் பின்னர் பத்மனாதன் செய்மதித் தொலைத் தொடர்பில் வந்து பல உண்மைகளைக் கொட்டித் தீர்த்தார்.
அப்போ, இத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் எல்லாம் எதற்காக? இந்த நிலையை தலைவரின் காலடியில் மரணம் வந்த பின்னர் தான் உணர முடியும் என்றால் தலைவர் இதுவரை கட்டிக்காத்த சயனைட் கலாச்சாரம் எங்கே? தற்கொடைக் கலாச்சாரம் என்ன ஆனது என்றெல்லாம் புலி ஆதரவாளர்களையே சிந்தித்துச் சின்னாபின்னமாக்க வைக்கும் அந்தப் பேட்டியின் விபரங்களே இன்னும் ஓயாமலிருக்க, தமது இறுதித் தாக்குதலுக்காக இப்போது இவர்களை தயார் படுத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம்.
அதுதான், பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? எனும் சூடான தலைப்பு.
அவர் இறந்து விட்டார் என்று பறை சாற்றாத ஊடகமே இல்லை, ஆனால் இன்னும் இலங்கை அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
தமது படையினருக்கு பதவி உயர்வுகளைக் கூட ஜனாதிபதி வழங்கிவிட்டார், தமக்குத் தந்த வேலை நிறைவுற்றது என்று கூட பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் ஜனாதிபதியிடம் கூறிவிட்டனர்.
ஆனால், குழம்பிக்கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களுக்கான அதிர்ச்சி வைத்தியத்தை மட்டும் அரசாங்கம் இன்னும் செயற்படுத்தவில்லை.
அது எதுவாக இருக்கும் என்று நீங்கள் குழம்பிக்கொண்டிருக்கும் இடைவெளியில், வட பகுதி யுத்த பிரதேசங்கள் சத்தமே இல்லாமல் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
நாளை இந்தப் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் வெளி வந்து, அந்த அதிர்ச்சியில் இருந்து இவர்கள் வெளியேற முன்னர், சர்வதேசங்கள் எல்லாம் இலங்கையைக் கட்டிப்பிடித்து வாழ்த்தி கைகளை கோர்த்துக்கொள்ளும் தருவாயில்..
போரா.. அப்படி எதுவுமே நடக்கவில்லையே என்று ஒரு அதிர்ச்சி மிக்க தகவல் நம்மை வந்து அடைந்தாலும் அடையலாம், எதற்கும் நோயாளர்கள் தம்மைத் தயார்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது.
இன்றளவும் தான் இல்லை, இனிமேலும் கூட சிந்திக்க மறுக்கும் ஒரு “மந்தைக்கூட்டமாக” இம்மக்கள் கூட்டம் இருந்தால், நாளை பல பிரபாகரன்கள் உருவாக்கப்பட்டு அதில் அரசியல் கணக்குகள் தீர்க்கப்படும் அபாயம் இன்னும் நீங்கவில்லை, நீங்கப்போவதும் இல்லை.
RATHA
மே19, 2009 at 3:18 பிப
urookellam kuri solisam palli, than vilunthisam kulampusadil thulli………………………?