RSS

பாசிசம் தன் முடிவை தானே தேடியது..

17 மே

விதை விதைத்தவன் விளைச்சலை அறுக்க, வினை விதைத்தவனோ வினையையே அறுப்பான்! 

சில பழமொழிகள் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

வளர்ந்த சமுதாயத்தில் விதைக்கப்படும் அறிவுக்கும், வளராமல் தடுக்கப்படும் ஒரு சமுதாயத்தின் மீது திணிக்கப்படும் அறிவுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகப் பெரியது.

FASCISM

இதைச் சில வேளைகளில் என்னவென்று புரிந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும், பாசிசம் என்றால் புலிகள், புலிகள் என்றால் பாசிசம் என்கிற ஒரு அர்த்தத்தை இலங்கைத் தமிழர்கள் கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணம் எல்லாம் அறிய வேண்டியதில்லை, ஆனால் புலிகள் ஒரு விதமான பாசிச வாதிகள் என்பதை பூரணமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

ஏன் புலிகள் ?

FASCISM என்றால் ஜனநாயக அரசியலைப் புறந்தள்ளி, எதோச்சாதிகாராக, சர்வாதிகார ஆளுமையைத் திணிக்கும் ஒரு செயலாகும்.

கடந்த சில கட்டுரைகளில் நாம் பார்த்திருந்த பல கசப்பான உண்மைகளின் படி புலிகள் திரும்பத் திரும்ப தாம் பாசிஸ்டுகள் என்பதை நிரூபித்து வந்திருக்கின்றனர்.

மக்கள் என்போர் எப்போதும் ஆளப்படும் வர்க்கத்தினரால் ஆட்டிவைக்கப்பட்டுக் கொண்டே இருப்பது தலை விதியல்ல, நாளை ஒரு தலைவன் இதே மக்களில் இருந்து தான் உருவாகிறான்.

ஆனால், அவனும் நாளை ஆளும் வர்க்கத்திற்குள் சென்ற பின்னர் தன்னை மாற்றிக்கொள்வானாக இருந்தால், மறைமுகமாகத் தன் சமூகத்துக்கு துரோகமிழைக்க ஆரம்பிக்கிறான், நாளடைவில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை நியாயப்படுத்திக்கொள்ள, தான் வாழும் வாழ்க்கையை “சேவை” எனும் போர்வை கொண்டு மறைக்க, தன்னால் இயன்ற, ஆனால் சாதாரண மக்களின் சக்திக்குள் அடங்காத பல அதிகாரங்களை பாவித்து அவர்களை அடக்க முயல்கிறான்.

இப்போது இவன் ஆகக்குறைந்தது “மக்கள் சேவகன் இல்லை” எனும் முடிவுக்கு நீங்கள் வருகிறீர்கள், அதனைத் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்தி வைத்துக்கொள்ளும் “பதவி” ஆசையின் மூலம் அதே மக்களை தன் சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கிறான், மறுக்கும் போது அவர்களை தானே தண்டிக்கவும் ஆரம்பிக்கிறான்.

இப்போது இவன் நிச்சயமாக ஒரு ஜனநாயக விரோதியாக அறியப்படுவான்.

நாளை தன் மீது விமர்சனங்கள், தன் குறைகள் வெளியே எடுத்து வரப்படுகின்றன என்பதை அறியும் போது மேலும் மேலும் தன் அதிகாரங்களை கையிலெடுத்து அடக்கியாளும் தன் சுய ரூபத்தை அனைவர் மீதும் திணிக்கிறான்.

இப்படிப்பட்ட ஒருவனை ஏதாவது கதைப் புத்தகங்களில் வாசிக்கும் போதே நீங்கள் முகம் சுளிக்க மாட்டீர்களா?அப்படியாயின் நேராக அனுபவிப்பவர்கள் நிலை?

இப்போது இதை ஏற்றுக்கொண்டாலும், அடுத்து உங்கள் மனதில் எழும் கேள்வியானது எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வார்களா? அதாவது அந்த அடக்கியாளும் மக்களிலேயே எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதுதான்.

“இல்லை” என்பது நேரடியான பதில்.

ஏன்? என்று எழும் மறு கேள்விக்கு, “தன் நலம்” என்பது பதிலாக வரும்.

இந்தத் “தன்நலம்” என்பது பல காரணிகளின் அடிப்படையில் இந்த மக்களிடம் இருக்கும், அதில் பிரதானமானது தம் “சுய தேவை” களை நிறைவேற்றிக்கொள்ளும் வழியாக இதைப் பயன்படுத்துவதாகும்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள் எப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, தமிழக மக்கள் இதில் மிகவும் குழம்பிப்போன ஒரு நிலையிலேயே இருக்கிறார்கள்.

அதற்கு மிகப்பிரதானமான காரணம், ஒவ்வொரு அடிமட்டக் குடிமகனிடமும் எல்லா விடயங்களும் சென்றடையாமையாகும்.

இந்தத் தார்மீக கடமைகளை செய்ய வேண்டிய ஊடகங்கள் கூட தம் வியாபாரத்திலேயே அதாவது தொலைக்காட்சிகளாக இருந்தால் பார்வையாளர்களைக் கூட்டி, அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவது, பத்திரிகைகள் தம் வாசகர்ககைளக் கூட்டி வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பதை,இருந்ததைச் சுட்டிக்காட்ட முடியும்.

இதற்காக அவர்கள் “கவர்”  & “கவர் ஸ்டோரிக்காகச்” செய்யும் பாத்திரங்களும், கதைகளும் முழுக்க முழுக்க அவர்கள் வியாபாரம் சம்பந்தப்பட்டதாகும்.

தமிழகத்தில் 2009 தேர்தல் முடிவடைந்து இப்போது மீண்டும் கலைஞரின் ஆட்சியும், மத்தியில் அதே காங்கிரஸ் ஆட்சியும் வந்திருப்பதானது இன்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத செய்தியாக இருக்கிறது.

ஏன் அவர்களால் ஜீரணிக்க முடியாது என்பதற்கு “அவர்களை நம்பி இருந்தோம்” என்று ஒரு குறுகிய நோக்கம் கொண்ட அவர்கள் பதில் இருக்கிறது.

ஏன்? எதற்காக நம்பினீர்கள்? என்று திரும்ப ஒரு கேள்வி கேட்டால், உண்மையிலேயே கலைஞர் ஆட்சி கலையப்பட்டிருக்க வேண்டும் என்கின்ற அவர்களது எஜமானர்களின் “அதே” சுயநலமான பதிலைத் தவிர, அந்த மக்கள் அதாவது தமிழக மக்கள் ஏன் “கலைஞரை” அவரது ஆட்சியை, மத்தியில் “காங்கிரஸ்” ஆட்சியை வர விடக்கூடாது என்பதற்கு அவர்களிடம் சரியான பதில் இருக்கப்போவதில்லை.

பதில் இருக்கிறதோ இல்லையொ, தமிழ்நாட்டின் மக்களுக்கு அவர்கள் தாம் விரும்பிய அரசியல் தான் தேவை எனும் அடிப்படை உரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்து, இன்று ஒட்டு மொத்த தமிழக மக்களும் எள்ளி நகையாடப்படுகின்றனர்.

இது “புலிகளின் கடந்த கால வரலாற்றை மீண்டும் எழுதுகிறது”. 

அதாவது இவர்கள் சந்தர்ப்பவாதிகளாகவே எப்போதும் இருக்கிறார்கள் என்பதுதான் அது.

அடுத்ததாக இவர்கள் எப்போதும் உண்மையை ஏற்றுக்கொள்ளத் துணிவதில்லை, அப்படித்தான் இன்று இத்தனை லட்சம் டிவிடி போர் நடத்தியும் தமிழக மக்களே தம் உணர்வலைகளை ஒருமுகப்படுத்தி அல்லது புலிகளின் பாஷையில் விலைக்கு விற்று என்றே வைத்துக்கொள்வோமே, தம் முடிவினை உலகறிய வைத்திருக்கிறார்கள் என்றால், எங்கேயோ ஏதோ இடிக்கிறதே? என்று தம்மை சுய விமர்சனம் செய்வதை விடுத்து, மீண்டும் மீண்டும் அதே பிழையை அதாவது “இனிமேல் இந்தியர்களை நம்பக்கூடாது” என்று மட்டும் தம் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இறுதிவரை தம்மைத்தாம் சுய விமர்சனம் செய்து கொள்வதும் இல்லை, செய்து கொள்ளப்போவதும் இல்லை.

இது குறித்து, தமிழக மக்கள் கவலைப்படப்போவதும் இல்லை, உலகம் கவலைப்படப்போவதும் இல்லை, ஏனெனில் இந்த வாதங்களை முன்வைப்போர் யார்? எதற்காக முன்வைக்கிறார்கள் என்பது உலகறிந்த விடயம், அவர்கள் இன்னும் இன்னும் ஒதுக்கப்படுவார்களே தவிர ஒரு சமூக ஓட்டத்துக்குள் இழுத்தெடுக்கப்பட மாட்டார்கள்.

தாமாகத் திருந்தி அவர்கள் வரும் காலமே அவர்களுக்கு நற்காலம்.

ஏன் இந்த நிலை?

இதில் பெரும் பங்கு சுயநலம் சார்ந்தது, ஒரு சிறு பங்கு “உணர்ச்சி” மயமானது.

குறிப்பிட்ட வயதை உடைய சில அல்லது சில நூற்றுக்கணக்கான மக்களிடம் ஒரு உண்மையான “உணர்வு” இருக்கிறது, அந்த உணர்வு வளர்த்தெடுக்கப்பட்ட விதமும். வார்த்தெடுக்கப்பட்ட வடிவமும் தவறானது என்பதனால், அவர்கள் தாம் எதற்காக வாதாடுகிறோம் என்கிற கருப்பொருளை இழந்து, தம் மீது திணிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாதாடுகிறார்கள், கருத்துத் தெரிவிக்கிறார்கள், இணையங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் வாதம் செல்லாக்காசாக மாறுகிறது.

இப்படியானவர்களுக்கு சரியான வழிகாட்டலும்,புகட்டலும் இருந்திருக்குமாயின் இந்தப் “புரட்சி” இன்றைய வசதிகளைக் கொண்டு வேறு ஒரு நிலையை அடைந்திருக்கும்.

இம்மக்களை சிந்திக்க விடாமல் செய்ததும்,செய்வதும் துரதிஷ்டவசமான இந்தப் பாசிசத்தின் ஒரு பங்காகும்.

அதை அவர்கள் நன்கு திட்டமிட்டு செய்தார்கள், எனவே இவர்கள் பலிக்கடாக்களாக இன்று விரக்தியின் உச்ச நிலையை அடைந்திருக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் “உணர்வு” எனும் பெயரில் தம் மக்களை ஒரு “வட்டத்திற்குள்” வைத்திருக்கும் இந்தப் பாசிச வெறியர்களின் விளைவுகளை அவர்களே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

விரக்தி

அண்மைய காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி வரும் மக்கள் மீது அவர்களே துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை பல செய்திகள் வெளிக்கொண்டு வந்திருந்தன, அதைக் கேள்வியுற்று பலர் அதிர்ச்சியடைந்தார்கள், சிலர் கவலைப்பட்டார்கள், சிலர் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அந்தப் புலித்தொண்டனின் விரக்தியில் ஒரு நியாயம் இருக்கிறது என்கின்ற உண்மையை மட்டும் எப்போதும் போல சிந்திக்க மறுக்கிறார்கள்.

இப்படியான அதிகார வெறியை நாம் ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம், அந்த அப்பாவித் தொண்டனின் உண்மையான மன நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

புலிகளின் கட்டாயத்தில் சேர்ந்தவர்களை எல்லாம் தான் பலி கொடுத்துவி்ட்டார்களே, இப்போது அவர்கள் பழைய உறுப்பினர்கள் அதாவது “விடுதலை உணர்வில்” இணைந்துகொண்ட போராளிகளின் மன நிலையை சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் வெளியுலகையோ, வேறு அறிவையோ பெறுவதற்கு எது வித வழியுமின்றி ஒரு இறுக்கமான சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட அவன் விடுதலை வேட்கை, “இந்த மக்களுக்காகத்தானே நான் போராடுகிறென், இவர்கள் ஏன் என்னை விட்டு ஓடுகிறார்கள்” என்று சிந்திப்பதில் தவறே இல்லை, அதிலும் மீண்டும் அவன் உணர்ச்சிவசப்படுவதில் தப்பேயில்லை, ஏனெனின் பாசிசம் அவனை வளர்த்தவிதம் அப்படி.

இறுதியில் தன் சொந்த இனத்தையும் வேட்டையாடத் துணிந்ததன் மூலம் கீழ்த்தரமான தம் பாசிச ஆளுமையை பல விதங்களில் இவர்கள் உலகறிய வைத்திருந்தார்கள்.

அதில் பிரதானமானது, இந்த அப்பாவி மக்களின் மீதான துப்பாக்கிப் பிரயோகம் என்று பார்த்தால் அதற்கு அடுத்தபடியானது இந்த வெளிநாடு வாழ் மக்களின் “அறியாமை” அல்லது அளவுக்கு மீறிய ரியக்டிங் என்று அடித்துச் சொல்லலாம்.

ஏன்?

உலகத் தமிழர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ஆணித்தரமான உண்மை இருக்கிறது, அதுதான் இந்தப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தாம் வந்தடைந்த நாடுகளில், எதற்காக நீங்கள் இங்கே வந்தீர்கள் என்று கேட்டபோது, தம் அரசியல் தஞ்சத்தை நியாயப்படுத்த வழங்கித்தள்ளிய காரணங்கள்.

80 விழுக்காடு தமிழர் அரசியல் தஞ்ச விண்ணப்பங்களின் பின்னால் “புலிகளினால் உயிர் அச்சுறுத்தல்” என்கிற காரணம் தான் இருக்கிறது.

இந்த விளையாட்டுப்பிள்ளைகள், தம் அரசியல் தஞ்சம் அங்கீகரிக்கப்பட்டால் போதும் என்று மட்டும் நினைத்தார்களே தவிர, முழு உலக நாடுகளும் இந்தக் காரணங்களை பட்டியலிட்டு, கோப்பாக்கி இறுதியில் விடுதலைப்புலிகளுக்கு ஆப்பு வைத்த கதையை மறந்து போகிறார்கள்.

அவனால் உயிருக்கு ஆபத்து என்று வந்துவிட்டு, அவன் கொடியைப்பி டித்துக்கொண்டு தெருவில் நின்றால், உன்னை யார் பார்ப்பார்? அதுதான் அவர்கள் தம் பாட்டிலே சென்று விட்டார்கள்.

எனினும் தம் நாடுகளில் ஜனநாயக இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சில அறிக்கைகள், சில நேரங்களில் உங்களுடன் கலந்துரையாடல்களை அவர்கள் நடத்தினார்கள், ஆனால் அழிவைத் தேடித்தந்ததே நீங்கள் தான் என்பதை மறந்து விடுகிறீர்கள்.

இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியத் தமிழர்கள், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி “சட்டில்” ஆகியிருக்கும் இந்தியத் தமிழர்களையே கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன காரணத்தைக் கூறி அரசியல் தஞ்சம் கேட்டார்கள்? எந்த நாட்டுக்காரர்கள் என்று கூறி அரசியல் தஞ்சம் கோரினார்கள்? என்று ஒரு புள்ளி விபரம் எடுத்துப் பாருங்கள், அப்போது உங்களுக்கே உண்மை புரியும்.

இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிய பெருமையும், அவர்கள் மூலமே தமக்கு அழிவைத் தேடிக்கொண்ட பெருமையும் அதே பாசிசத்தையே சாரும்.

ஏனெனில் அவர்கள் அதிகாரப் போக்கின் மீது காட்டிய ஆற்றலையும், அறிவையும், ஆர்வத்தையும், மக்கள் நலனின் மீதோ தம் எதிர்கால சந்ததியினர் மீதோ காட்டியதில்லை.

பல வெளிநாடுகளில் இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சுரங்க ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டு, பாவனைககும் வந்து விட்டன, ஏன்? எப்படி என்று எப்போதாவது சிநத்திருக்கிறீர்களா? அவன் எப்போது தன் வருங்காலத்தை திட்டமிட்டிருக்கிறான் என்று சிநத்தித்திருக்கிறீர்களா? அவன் எதனால் இத்தனை காலம் முன்னதாக எல்லாம் திட்டமிடுகிறான் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

அப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் அதே நேரம், அரசியல் இலக்கை அடைய ஆரம்பிக்கும் அல்லது ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு சிந்தனைத் தெளிவு எவ்வளவு அவசியமானது? மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதையும் ஒத்துக்கொள்வீர்களா?

வாய்ப்புகள் வரும் போது, எப்போதும் தம் அதிகாரத்தை அதாவது மக்களை ஆளும் அதிகாரத்தை, மற்றவர்களை விட தாமே பெரியவாகள் என்கிற அதிகாரத்தை வென்றெடுப்பதில் காட்டிய நாட்டத்தை எப்போதாவது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், மக்கள் எதிர்காலத்திற்காக வரைபுகள் என்று எதையாவது சாதித்ததுண்டா?

மாறாக, கிடைத்த சந்தர்ப்பத்திலும் வெளியுலகை ஒரு “மாயைக்குள்” வைக்க விசைப்பலகை வீரர்களை உருவாக்கி விட்டு, அடர்ந்த காடுகளுக்குள் அவர்கள் விடுமுறையைக் கழிக்கச் சென்றதனால், மீண்டும் தாம் பாசிசத்தை மட்டும் வளர்த்து விடுகிறோம் என்பதையும் மறந்துவிட்டார்கள்.

அவர் வளர்த்து விட்ட அந்த கோட்பாடுகளின் படி, இவர்கள் தெருவில் இறங்குவது முதல் இணையங்களில் செய்யக்கூடிய அத்தனை போர் முறைகளையும் பாவித்து, தம் “இருப்பை” நிலைப்படுத்திக்கொள்ள முயன்றார்கள்.

பணம் இருக்கிறது என்று பத்து வீடு வாங்கிப்போட்டாலும் வாழ்வதற்கு நமக்கு ஒரு வீடுதானே வேண்டும்? வாடகைக்காவது விடவில்லை என்றால் மீத ஒன்பது வீடுகளிலும் “ஏதோ” தான் குடியிருக்கும்.

அதே போலத்ததான் பில்லியன்களில் இரும்புத் துண்டங்களை வாங்கிப்போட்டும், அதை இயக்க “உணர்வுள்ள” போராட்டம் வேண்டாமா? அது செத்துப் போய் பல காலம் ஆன உண்மையை, இதற்கு முன்னரும் பலர் அறிந்திருந்தாலும், அதைச் சரியான முறையில் இன்றைய இலங்கை அரசாங்கம் Expose செய்தது.

அதன் விளைவில் இன்று பாசிசம் தன் முடிவை, தானே தேடிக்கொள்கிறது.

இறுதியாக, புலிகளின் சர்வதேசத்திடம் பேசவல்ல புதுப் பத்மநாதன் ” அமெரிக்கா எதைச் சொன்னாலும் செய்கிறோம்” என்று ஒரு வேடிக்கை,வினோத அறிக்கை விட்டிருந்தார்.

இதையே ” அமெரிக்கா மற்றும் ஐநா கேட்டுக்கொண்டதற்கிணங்க, மக்களை நாம் வெளியேற அனுமதித்துவிட்டோம் ” என்று இறுதி நேரத்திலாவது ஒரு செயற்பாட்டை அரங்கேற்றி, “நீங்களே எங்கள் அரசியல் உரிமைகளை பெற்றுத்தாருங்கள், இவர்கள் எப்படித்தருவார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள் ” என்றாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.

என்ன செய்வது? கழுத்து வரை வெள்ளம் வந்த பின்னர் இப்போது பிறக்கும் ஞானம் கூட புது ஞானமாக இல்லையே? இது அவர்களின் பாசிச அறிவு அவர்களை வழிநடத்தும் விதம்.

எனவே, அவர் தம் முடிவுகளை அவரே தேடிக்கொண்ட வரலாற்றை, துரதிஷ்டவசமாக தமிழர் வரலாறு பதிந்து கொள்கிறது !

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: