இந்தியாவை எடுத்துக்கொண்டால், எம் அறிவுக்கு எட்டியவரை ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக்குக் கேட்பவர்களையும், ஆட்சியில் இருந்த போது எதைச் செய்தோம் என்பதைச் சொல்லி வாக்குகளைக் கேட்பவர்களையும் பார்க்கிறோம், கேட்கிறோம்.
ஆனால், உலகிலேயே தம் சொந்த இன மக்களுக்கு, உண்மையான அரசியல் சேவை செய்யும் வாய்ப்பொன்று யாருக்காவது கிடைத்திருக்கும் என்றால், அது இலங்கையில் தற்போது இருக்கும் தமிழர் அரசியல் கட்சிகளே !
அதை அவர்கள் சரி வரப் பயன்படுத்துவார்களா? இது மில்லியன் டாலர் கேள்வி.
அரசியல் என்றாலே நமக்கு உடனடியாக குறுக்கே வந்து தொலைக்கும் அரசியல் இரண்டு நாட்டுடையது, ஒன்று இந்தியா, அடுத்தது பாகிஸ்தான்.
மூன்றாவதாக ஒன்று ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மூளையில் பதியும் என்றால் அது அமெரிக்க அரசியல்..
இலங்கையைப் பொறுத்தவரை தமிழர் பிரதிநிதித்துவம் என்பது குறைந்தது ஒரு இருபது வருடங்களாகவே வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கிறது.
அதேபோன்று, உலகில் எந்தவொரு இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும், வரையறை இல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கவும், வலிந்து சென்று உதவி செய்யவும், தம் இரத்த உறவுகளுக்கு நல் வழி காட்டவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கவும் இந்த அளவுக்குஓரு வாய்ப்பு இனி ஒரு காலத்தில் அமையுமா என்பது சந்தேகமே.
ஆயினும், நம் குட்டித்தீவில் அது அமைந்திருக்கிறது.
கடந்த கால வரலாற்றை விடுங்கள், இன்று நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் சொந்த மக்கள், வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாத அளவு சோகங்களையும்,துன்பங்களையும் சுமந்தபடி வந்து பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு என்ன வழி காட்டப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள் !
மீண்டும் பழைய வரலாற்றுக்குள் சென்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நீங்களும் விழுந்து, மக்களை ஊர் வாரியாகப் பிரித்து, கிராம வாரியாகப் பிரித்து, சாதி, குடும்பம், சுற்றம், உற்றார் எனப் பிரித்து அவர்களை காயப்போட நீங்கள் எத்தனித்தால், இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் உங்கள் சாயங்களும் வெளுக்கத்தான் போகின்றன.
இலங்கையில் இயங்கும் பதிவு செய்த ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளாக உங்களுக்கு என்னென்ன வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமோ அந்த வசதிகளையெல்லாம் பெற்று, இன்று உயிரை மட்டும் தம் சொத்தாகக் கொண்டு வந்திருக்கும் அந்த மக்களுக்கு என்ன உங்களால் செய்ய முடியும் சொல்லுங்கள்.
இலங்கை என்பது ஒரு மிக வறிய நாடு, வளங்கள் இருந்தும் தலை தூக்க முடியாமல் தத்தளித்து, தவறி, சிதறிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்த ஒரு நாடு.
இன்றைய அரசாங்கம் தம்மால் எல்லாம் முடியும் என்று ஒரு வீராப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தாலும், அவர்களாலும் செய்ய முடியாத பல மனிதத் தேவைகள் இன்று பெருகிக்கொண்டு வருகின்றன.
உள்ள மக்களுக்கெல்லாம் வீடு கொடுத்து, உண்ண உணவு கொடுத்து, ஆடை கொடுத்து, அவர் நாளாந்த செலவுகளைக் கொடுத்து அரவணைத்துப் பார்க்கும் நிலையில் எதார்த்தத்தில் இந்த அரசாங்கம் இல்லையென்பது உலகறிந்த விடயம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்தின் உண்மை நிலை என்னவென்றே தெரியாமல் வேறு ஒரு மாயைக்குள் இருந்து விடுபட்டு இப்போதுதான் வந்திருக்கும் அந்த மக்கள், மீண்டும் திறந்த வெளிகளில் அடைபட்டுக் கிடப்பது இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழன் மனதையும் குடையும் ஒரு விடயம்.
ஒரு விடயம், அதை உடனடியாக மறுக்க முடியாது, இராணுவ வெற்றிகள் அடைந்தாலும், எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு வரலாறு வராமல் தடுக்க, எந்த விதமான சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும் இந்த அரசாங்கம் சில “வடிகட்டல்” களை செய்யத்தான் போகின்றது.
அந்த “வடிகட்டல்களை” நியாயப்படுத்த அவர்களிடம் பல காரணங்கள் இருக்கப்போகின்றன, அவற்றையெல்லாம் அவர்களோடு இணைந்து,அறிந்து, மக்கள் நலனை முன்நிறுத்தி அவர்கள் பாதுகாப்பையும், புணர் வாழ்வையும் உறுதி செய்யும் கடமை உங்களிடம் இருக்கிறது, அதற்காக நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்?
பெற்ற பிள்ளைகள் எல்லோரையும் வயிற்றைக்கட்டி,வாயைக்கட்டி வெளிநாடு அனுப்பிவிட்டு, இன்று பிணையில் யாரும் “சைன்” வைக்க இல்லாமல் அரசாங்க புணர் நிர்மாணக் கிராமங்களில் பல நூறு முதியவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் சொல்லுங்கள்.
குடும்பங்களை இழந்து, அனாதைகளாக பல சிறுவர்கள் அங்கே தத்தளிக்கிறார்கள் அவர்கள் சுபிட்சமான எதிர்காலத்துக்காக நீங்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள்?
இப்போதுதான் புலிப் பிரச்சினை ஓய்கிறது, அரசின் கை ஓங்கித்தான் கிடக்கிறது, இப்போது எதுவும் செய்ய முடியாது என்று உங்கள் உரிமைகளையும் அவர்களுக்காக நீங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிமைகளையும் தட்டிக்கழித்தால், பின்னர் எப்போதுமே நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது, பெற்றுக்கொடுக்கவும் முடியாது.
ஆயுதப் போராட்டத்தின் அழிவுகள் வேண்டாம் ஜனநாயக வழியே சிறந்தது என நீங்களே தேர்ந்தெடுத்த இந்தத்திட்டத்தில் இப்போது உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது, அந்த அனுபவத்தை வைத்து இப்போது தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு என்னவெல்லாம் உங்களால் செய்ய முடியும் என்பதை… சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்கள் !
மீண்டும் இந்த மக்களை பிரித்துப்பார்க்காதீர்கள், மேலை நாடுகள் எல்லாம் ஒரு மாபெரும் போரின் பின்னர் தான் மிகப்பெரும் பக்குவமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பின.
அதற்கு அங்கு இருந்த அத்தனை அரசியல் பிரதிநிதித்துவமும் ஒன்றிணைந்து செயற்பட்டன்.
நீங்களும், உண்மையில் உங்கள் சிந்தனைகளில் மக்கள் சேவை முன்னணியில் இருந்தால், இப்போது வெளிப்படையாகக் களமிறங்கி உங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்.
அங்கிருக்கும் மக்களில் பல ஆயிரம் பேர் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் எதிரிகாளக இருந்திருக்கலாம், கொள்கை ரீதியாகப் பிளவுபட்டவர்களாகக் கூட கடந்த காலங்களில் இருந்திருக்கலாம், ஆனால் இனிமேல் அதையெல்லாம் வைத்து மீண்டும் இந்த மக்களின் அபிலாஷைகளை, அவர் உரிமைகளை அரசியல் ரீதியாகச் சாகடிக்கும் வித்தையை இனிமேலும் யாரும் செய்வதை நீங்கள் அனுமதிக்கவும் கூடாது, நீங்களும் அதைச் செய்யவும் கூடாது.
30 வருடங்கள் போதும்,போதும் என்றளவு இந்த மக்கள்ல அல்லல் பட்டுவிட்டார்கள், இப்போது அவர்களுக்குப் புதிய வழிகளைக் காட்டும் தார்மீக கடமை உங்களிடம் இருக்கிறது, இதைச் செய்வதனால் அவர்கள் நாளை உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையில் இதை நீங்கள் செய்யச் சென்றால், நீங்கள் சந்தேகமே இல்லாமல் மூன்று தசாப்தங்களுக்கு முன்னராக இந்த மக்களை வழி நடத்திய அதே குறுக்கு வழிக்கே இட்டுச் செல்வீர்கள்.
மனமுவந்து மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவையை செய்யுங்கள், அவர்களாக உங்களை தம் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் காலம் வந்தால், அதையும் ஒரு வரமாக எண்ணி உங்கள் சொந்த மக்களின் துயர் துடையுங்கள்.
உங்கள் சொந்த மக்களில் அவலம் துடைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒற்றுமையாகவும், மக்கள் சேவையை மனிதாபிமானத்துடனும் செய்து இந்த இனம் வேறெங்கும் கைவிடப்படவில்லை என்பதை நிரூபிக்கும் தேவை உங்களிடம் இருக்கிறது.
இதில் நீங்கள் தவறிழைத்தால் மீண்டும் இந்த இனம் பந்தாடப்படுவதும் உறுதி! அது எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கும் என்பது இப்போது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் வெகுண்டெழுவார்கள், உங்கள் இடைவெளியை நிரப்பி இந்த மக்களை பந்தாடிக்கொள்வார்கள்.
அதன் பின், உங்கள் சொந்த மக்களே உங்களை நிராகரிக்கும் நாள் வந்ததும், நீங்களும் உங்கள் சமூகமும் மீண்டும் பிரித்தாளப்படும்.
சிந்தித்துச் செயல்படுக!
-அறிவுடன்.
Thambiah Sabarutnam
மே17, 2009 at 1:31 முப
சூசை இராணுவத்திடம் பிடிபட்டு உள்ளான். வெளி நாட்டுக்கு சட்ட லைட் தொலை பேசியில் பிணக் கணக்கு சொல்லி பிலிம் காட்டிய டாக்டர்மார் பாட்டுபாடி உசுப்பேத்தி விட்ட சாந்தன் உட்பட பல பாடகர்கள் பல புலி கேணல் மார் எல்லாம் இராணுவத்திடம் பிடிபட்டு போனார்கள். இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து பிரபாகரன் பொட்டு மற்றும் பலர் தற்கொலை செய்து விட்டனர். மதிவதனியும் பிள்ளைகளும், தமிழ் செல்வனின் மனைவியும் புதிய காதலனும், சூசையின் மனைவியும் பிள்ளைகளும், இன்னும் பல புலி தலைவர்களின் குடும்பங்களும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்து நல்ல பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தப்பி வரும்போது மட்டும் பின்னாலை சுடுவதற்கு ஒரு புலியும் இருக்கவில்லை.
எம் பிள்ளைகளை தற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பும் போது அவர்களுடன் கடைசியாய் சாப்பிட்டுவிட்டு படுத்துதூங்கின பயந்தாங்கொள்ளிகள் பேடிகள் இராணுவம் சுற்றி வளைத்ததும் பயத்தில் தற்கொலை செய்து குத்தகைக்கு எடுத்த போராட்டத்தை முடித்து கொண்டார்கள்.
புலிகளின்தாகம் புலன்பெயர்ந்த தமிழ்ஈழத்தாயகம்!
ஸ்டாப் சுயிசைடு!