RSS

இடர் மிகு ஈழ வரலாறு ..II

14 மே

ஈழ வரலாற்றின் போராட்டமானது முதலில் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டமாகவே உருவெடுத்தது, அதனால் தான் அது வளர்ச்சியும் அடைந்தது.

எப்போது அதிகாரவெறி மேலோங்கியதோ அப்போது முதல் இந்தப் போரட்டம் மாத்திரமல்ல இந்தச் சமூகமும் சேர்ந்தே தான் பிளவுபட்டுப் போனது.

இந்த உண்மைகளை நின்று நிதானித்து அறிந்துகொள்ளும் இன்றைய சூழ்நிலையில் மக்கள் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் அன்றைய சூழ்நிலையிலும் தம் சமூகம் பிளவுபட்டுச் செல்வது குறித்து இவர்கள் கவலைப்படவில்லை என்பதுதான் முழுச் சிறுபான்மையினத்துக்கும் கிடைத்த சாபக்கேடு.

ஆளும் வர்க்கத்தினரைப் பொறுத்தவரை இவர்களின் ஒற்றுமைச் சீர்கேடுதான் அவர்களின் பலம்.

தம் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து மக்களின் உழைப்பைச் சூறையாட இதை விட சிறந்த கள நிலை அவர்களுக்கு அவசியப்படவில்லை.

ஒரு புறத்தில் இதைச் செய்து கொண்ட ஆளும் வர்க்கம், மறு புறத்தில் இந்தக் கொடுமைகளைக் கண்டு வெதும்பிப் போன கல்வியறிவில் மேம்பட்ட இதே சிறுபான்மை சமூகத்தாரைத் தம் பக்கம் இழுத்து, அவர்கள் மூலமாக “சமவுரிமை”, “சமாதானம்”, “ஒற்றுமை” க்கான அற நெறிகளை அவர்கள் குரல்களிலேயே வழங்கி இந்தச் சமூகம் சிந்திக்கத் தவறுகிறது, தவறான வழியில் போகிறது என்று இதே சமூகத்தின் இன்னொரு சாராரை திருப்திப்படுத்திக்கொண்டு, சர்வேதேசத்திடமும் தம் சித்தார்ந்தங்களை இவர்கள் மூலம் கொண்டு செல்லத் தொடங்கியது.

சரி இந்த வழியிலாவது, நம் சமூகத்திற்கு நல்லது நடக்கட்டும் என்று எத்தனையோ புத்திஜீவிகள் தம்மை அர்ப்பணித்த போது, ஆயுத வெறி கொண்ட மறு சாராருக்கு இவர்கள் “துரோகிகளாக”ப் பட்டார்கள், எனவே அவர்கள் தண்டிக்கவும் பட்டார்கள்.

இந்தப் பிளவைத்தானே ஆளும் வர்க்கமும் எதிர்பார்க்கிறது, எனவே அபிப்பிராய பேதங்கள் மூலம் சிறுபான்மை சமூகத்தை பல துண்டாகப்  பிரித்து வைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றியது.

இதன் மூலம் ஆயுதப் போரட்டம் நடந்துகொண்டிருக்கும் வட – கிழக்குப் பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்கள் ஒரு சாராரை சுத்தக் காட்டுமிராண்டிகளாக அடையாளம் கண்டு கொண்டார்கள், அதற்கேற்பவே இந்தக் காட்டு மிராண்டிகளும் தம்மிடம் இருந்த வங்குரோத்து அரசியல் நிலை மூலம் தம்மை ஆண்ட வர்க்கத்தின் தவறான வழி காட்டலை சித்தார்ந்தமாகவே எடுத்து நடந்து கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை தம் உயிர் போகு முன் நாலு பேரை போட்டுத்தள்ள கையில் ஒரு ஆயுதம் இருக்கிறது, எனவே பொது நலன், சமூக விடுதலை, எதிர்காலம் எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகிப்போய் விட்டது.

இந்த நிலையிலிருந்து அவர்கள் ஆரம்பித்த எதோச்சாதிகாரப் போக்கை சரியாகப் படுத்திக்கொண் தெற்கின் அரசுகளும் இந்தப் போராட்டத்தின் பெயரில் தம் அரசியலையும், போராட்டத்தை அழித்து சமாதானத்தைக் கொண்டு வருவோம் என்று தம் வாக்கு வேட்டைகளையும் கச்சிதமாக சமப்படுத்திக்கொண்டது.

சிறுபாண்மை சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை நன்குணர்ந்திருந்த ஆளும் வர்க்கம் எதை எப்போது செய்தாலும், இவர்களைப் பிரித்தாளுவதில் கண்களை மூடிக்கொள்ளவில்லை.

வடக்குப் பகுதி போன்றன்றி, கிழக்கு மாகாணம் இரு பெரும் சிறுபாண்மையினத்தின் சங்கமமாகவும், கலாச்சார வேறுபாடுகளை சமமாகப் பகிர்ந்துகொள்ளும் தனித்தன்மையைப் பெற்றிருந்தது.

இங்கிருக்கும் சமூகமும் மத ரீதியாக பிளவு பட்டாலன்றி, ஆளும் வர்க்கத்தின் எதிர்கால நலன்கள் பாதிக்கப்படும் என்பதை நன்குணர்ந்திருந்த கனவான்கள் ஏற்கனவே வட – கிழக்கில் காணப்பட்ட அபிப்பிராய பேதங்கள், இதன் மூலம் வந்த இடைவெளியை நிரப்பிக்கொண்ட நாட்டின் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகள் அவற்றிற்கான அரசியல் ஆதரவுகள் மற்றும் நடைமுறைகளையும் வைத்து, எப்படியாவது இந்த சமூகத்தைப் பிளவடைய வைப்பதில் கண்ணுங் கருத்துமாக செயற்பட்டது.

அதுவரை பல போராட்டக் குழுக்களின் மிக முக்கிய பொறுப்புகளில் கூட இருந்து வந்த முஸ்லிம் சமூகம் இங்கிருந்து பிரிக்கப்படும் தேவையை ஆயுத வழியில் அவர்களுக்கே அறிமுகப்படுத்தியது ஆளும் வர்க்கம்.

இதில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சக்திகள் இணைந்துகொண்டாலும், விடுதலைப் புலிகள் செய்த அப்பட்டமன பள்ளிவாசல் தொழுகை நேரக் கொலைகள் அனைத்தையும் மேலோங்கி அழியாச் சுவடாக மாறி, இன்றும் அப்பிரதேச மக்களிடம் நீங்காத வடுவாக இருக்கிறது.

அன்றைய தமிழர் பிரதிநிதிகளிடம் காணப்பட்ட ஆளும் வர்க்கத்திற்கிடையிலான அதிகார முரண்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் திண்டாடுவதால், இந்த சமூகத்திற்கு ஒரு தனியொரு அடையாளம் வேண்டும், பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சம காலத்தில் இவர்களும் வீறு கொண்டு எழுந்து தமது பிரதிநிதித்துவத்தைத் தனிமைப் படுத்திக்கொண்டார்கள்.

இதன் மூலம் சிறுபான்மையினத்தைத் துண்டாடத் தீட்டப்பட்ட ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பேணப்பட்டன, இரு வேறு சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டம் வெவ்வேறு திசைகளில் முடுக்கிவிடப்பட்டன.

ஆயுத வெறியர்கள், தொடர்ந்தும் ஆயுத வெறியர்களாகவே இருந்தார்களே தவிர, அதிகார வெறியர்களாகவே இருந்தார்களே தவிர சமூக விடுதலையைப் பற்றியோ, இன ஒற்றுமை பற்றியோ, எதிர்கால திட்டமிடல் பற்றியே கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்பதே மிகக் கசப்பான உண்மை.

இன்றும் கூட ஒரு பிரபாகரனில் இருந்து கருணாவையும், கருணாவில் இருந்து ஒரு பிள்ளையானையும் உருவாக முடியும் என்றால் இந்த சமூகத்தில் எங்கேயோ, ஏதோ சிந்திக்கப்படாமல் இருக்கிறது, அந்த முரண்பாடுகள் காலம் காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பது தானே உண்மை?  இந்த அடிப்படை உண்மையைக் கூட உங்களால் உணர முடியாமல் போனால், இன்னும் 300 ஆண்டுகள் போராடச் சென்றாலும் உங்களால் உங்கள் இலக்குகளை அடைய முடியாது.

துண்டாடப்பட்ட சிறுபாண்மையினத்தை அதில் பலம் வாய்ந்தவர்கள் தம் ஆயுதங்கொண்டே அடக்க நினைத்தார்களே தவிர முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இன்றுவரை முயன்றதில்லை.

இதைத்தான் ஜே.ஆரும் செய்தார், அதிகாரம் வந்ததும் இவர்களும் செய்தார்கள், எனவே எப்போதும் ஆளும் வர்க்கத்தின் ஆளுமைக்கு வெளியால் இவர்களால் செயற்பட முடிவதில்லை.

மக்கள் நலனை முன்வைத்து ஒரு புரட்சி வேண்டும் என்று கொதித்தெழுந்த அதே சிறுபாண்மை இனம் மீண்டும் வரலாற்றில் பின் தங்கிக்கொண்டே சென்றதே தவிர முன்னேற வில்ல என்ற கசப்பான உண்மையையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாரத்தைக் கேட்பவர்கள், அதிகாரத்தில் வந்ததும் என்ன செய்வார்கள் என்பதை திருப்திகரமாகக் கண்டு கொண்ட ஆளும் வர்க்கமோ சாதாரண மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் நிலைத்து நிற்பதைக் கையாண்ட அதே வேளை, இரு பக்க தலைமைகளையும் ஒரு அரசியல் உடன்பாட்டில் வைத்துக்கொண்டு, இடைநடுவில் ஆயிரக்கணக்கான இளம் உயிர்களை பலிகொடுத்துக்கொண்டிருந்தது.

ஒரே நாட்டின் இறு வேறு சமூகங்களாக இப்போது மக்களைப் பிரித்துக்கொணடார்கள்.

தென்பகுதித் தலைவர்களின் கடந்த கால அத்துமீறல்கள், உரிமைகளின் தேவை எனும் பெயரில் உணர்ச்சியூட்டல்களில் ஒரு பக்கம் முழுதாக தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருந்த அதே வேளை, யுத்தம் என்பது ஒரு சர்வாதிகார ஆயுத வெறிக்காக நடக்கிறது என்று தென்பகுதி மக்கள் நிலைப்பாட்டை துருவிக்கொண்டிருந்தது மற பக்கம்.

எனவே, ஆதரிப்போர் எதிர்ப்போர் என்று இரு பெரும் சமூகப் பிளவை உருவாக்கியதன் மூலம், அதன் பால் அனைத்துக் கவனங்களையும் இழுத்து வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில் தம் ஆளும் நலத்திற்கு எதிரான அனைத்து பெளத்த,இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களையும் ஆளும் வர்க்கம் பழி வாங்கிக்கொண்டிருந்தது.

உலக அரசியலுக்குள் புகுந்து கொண்ட இந்த இருபெரும் சமூகப்பிளவின் மத்தியில் சிறு துளிகளாகத் தென்பட்ட இவர்களது அனைத்து அபிலாஷைகளும் மறைக்கப்பட்டன, மழுங்கடிக்கப்பட்டன என்பது வரலாற்றில் இன்று வரை ஒளித்து வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மகா கசப்பான ஒரு உண்மையாகும்.

இதற்கிடையில் மேலும் மேலும் நசுக்கப்பட்ட மலையகத் தமிழர் நலனும் பிரதான அரசியல் அரங்கிற்குள் பிரேமதாசா காலம் முதல் உள்நுழைந்து கொண்ட போது, அதுவரை நிம்மதியாக நாடெங்கும் பரந்திருந்த இவர்கள் சமூகமும் துண்டாட்டத்தில் பங்கு கொள்ள ஆரம்பித்தது.

உரிமை பெற்றுத்தர ஜனநாயக ரீதியாகப் போராடிக்கொண்டிருக்கும் தலைமைகளும் ஆளும் வர்க்க நலன் சார்ந்தவர்கள் என்பதை ஒரு சில  நேரங்களில் அறிந்து கொண்டு, அதே நேரம் வடக்கின் ஆயுதப் போராட்டத்தின் சூற்சுமங்கள் தெரியாவிடினும் கவர்ச்சியிலாவது உந்தப்பட்டு ஒரு சில இளைஞர்கள் தம் இன்னுயிரை அப்பாவித்தனமாகக் கொண்டு போய் இதே களங்களில் பலியிட்டுக்கொண்டார்கள்.

இதுவெல்லாம் நடக்க முதல் இதே மலையகத் தமிழர்கள் வட பகுதிகளில் தொழில் ரீதியாகவும், கருவாடு,தேயிலை வியாபாரங்கள் மூலமாகவும் ஒன்றரக் கலந்து வாழத்தான் செய்தார்கள்.

அவர்களிற் சிலர் அங்கேயே திருமண பந்தங்களை உருவாக்கிக்கொண்டு நிரந்தரமாக அப்பகுதிகளில் குடியேறி வாழவும் செய்தார்கள்.

இந்த வியாபாரத் தொடர்புகளில் வெற்றி பெற்றுக்கொண்ட முதலாளிகள் வர்க்கம் கொழும்பு நகரத்தில் தம்மை நிலைப்படுத்திக்கொண்டன.

அதே போன்று வட பகுதியின் பெரும் முதலாளி வர்க்கமும் கொழும்பின் பிரதான வர்த்தக மையத்தின் ஒரு பகுதியையே தமது ஆளுமைக்குள் வைத்திருந்தன்.

வட பகுதி விளைச்சல்கள் தென் பகுதியிலும், தென் பகுதி விளைச்சல்கள் வடபகுதிகளிலும் ஏறத்தாழ சம நிலையில் பங்கெடுத்துக்கொண்டிருக்க, சிறிமாவோ காலத்து சுதேசியத்துக்கு எதிராகப் புறப்பட்ட கள்ளக் கடத்தல்கள், இந்திய வர்த்தக நெருக்கங்களும் என்று நாட்டில் விரிந்து கிடந்த சமூக நலன்களும் சேர்ந்து தான் இங்கு துண்டாடப்பட்டன.

ஆக மொத்தத்தில் அனைத்து மக்கள் அபிலாஷைகளையும் குழி தோண்டிப் புதைப்பதில் தெற்கின் அதிகாரம் கொண்டவர்கள் செய்த அதே வேலையை வடக்கில் அதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களும் இறுதி நேரம் வரை செய்து கொண்டே இருந்தார்கள்.

இந்த இடர் மிகு வரலாற்றின் அனைத்துப் பகுதிகளையும் ஒதுக்கி விட்டு ஏற்கனவே குறிப்பிட்ட இந்த இரு பெரும் சமூகப் பிளவுகளும் இதில் கலந்த ஆயுதப் போராட்டமும் மாத்திரமே வெளியார் கண்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன்.

உலக அரங்கில் ஆளும் வர்க்கத்தின் நலன் பேணி, சிறுபாண்மை மக்களின் அபிலாஷைகளைக் கொன்றொழித்தாலும், வடக்கில் தம் பங்காளிகளின் அதே அர்ப்பணிப்பால் ஒரு சம நிலையில் இருந்து கன கச்சிதமாக நாட்டை ஆண்ட தலைவர்களில் பிரேமதாசாவுக்கு அடுத்தபடியாக சந்திரிக்கா அம்மையார் வருவார்.

இவருக்கு அடுத்து வந்த ரணிலின் போக்குகள் ஆளும் வர்க்க நலனிலும் ஒரு படி முன்னேறி முதலாளிகளின் வர்க்கத்தை அரவணைத்துக்கொண்ட அரசியலாக இருந்ததனால், நாட்டில் மேலும் மேலும் அழிவுகளைத் தடுக்கும் மாயையை உருவாக்கி தம் பின்னால் நின்று ஆட்டிப்படைக்கும் முதலாளி வர்க்கத்திற்கு அவர்களும் செவி சாய்த்து, தம் வட பகுதி பங்காளிகளையும் அன்டர்கிரவுண்டில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

உலகறிய சமாதானம், சம அந்தஸ்து, பேட்டிகள், அது இது என்று ஆரம்பித்து தனியான “தேசிய” வானொலி, “தேசிய”த் தொலைக்காட்சி, சுங்கவரி, சைக்கிள் பொலிஸ் என்று ஏறத்தாழ ஒரு நாட்டின் அதிகார அலகுகளை புலிகள் மூலம் வெளிக்கொண்டு வந்து, தமிழீழ மாயையை முதலாளி வர்க்கத்திடம் இரு சாராரும் அடகு வைத்துக்கொணடார்கள்.

இதன் எதிர்கால அரசியல் விளைவுகளின் படி என்றாவது ஒரு நாள் மக்கள் பிரபாகரனைத் தூக்கி வீச வேண்டும், அது நடந்தேயாகும் நிலையைக் காணும் பாக்கியத்தை பின்னால் வந்த மஹிந்த பிரதர்ஸ் எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனாலும், இதைத் தெரிந்து கொண்டுதான் ரணிலை விட்டு விலகினோம் என்று கூறும் உரிமையும் புலிகளுக்கு அவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஏனெனில், என்னதான் வர்க்க முரண்பாடுகள் இருந்தாலும் ஆளும் வர்க்கத்தில் காணப்படும் அதிகார வெறியர்களும், பண முதலைகளும் எப்போதுமே தமக்குள் ஒரு உடன்பாடுடையனவாகவும், தம் முரண்பாடுகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளக் கூடியனவையாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் எதிர்காலத் திட்டங்களை ஒற்றுமையாகவே சேர்ந்து திட்டமிட்டார்கள்.

எனினும், மக்கள் செல்வாக்கு முன்னால் நிற்க முடியாமல் போகும் ரணிலை அவர்கள் தூக்கியெறிய தயங்கவும் இல்லை. அதன் அடிப்படையில் ஒரு வாழ்வா சாவா பந்தயத்தில் மஹிந்தவின் வரவும்,வளர்ச்சியும் அமைந்து கொண்டிருந்தது.

ஆளும் வர்க்கம் வழக்கம் போலவே, பல தசாப்தங்களின் பின்னரும் தன் பிரித்தாளும் குணத்தை தம் அடியாட்கள் மூலம் நிறைவேற்றினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மஹிந்த பிரதர்ஸ் ஆட்சியில் அமர்ந்து கொண்டார்கள், அதன் பின் நடப்பதெல்லாம் எழுதப்படப் போகும் வரலாறு.

இதில் ஒவ்வொரு கட்டத்திலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் மக்கள் சாதாரண மக்களே.

இவர்களை இந்த ஈழத்திரு நாட்டில் பிரித்தாள நிறைய வசதிகள் இருக்கின்றன.

1. அவர்களுக்குள் இலகுவாக தூண்டிவிடப்படக்கூடிய மொழி பேதம்

2. அவர்களுக்குள் மிக இலகுவாகக் கொண்டுவரக்கூடிய மத பேதம

3.அவர்களுக்குள் நிலையாக இருக்கக்கூடிய அரசியல் பேதம்

4. அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கிக்கொண்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகம்.

என்று பல வகையறாக்களை வகைப்படுத்திக்கொண்டே போகலாம், இந்த வகைகளை வகைப்படுத்துவதன் மூலம் இரண்டு விடயங்கள் நடைபெறுமாக இருந்தால் அவை பயனளிக்கும்.

1. மக்கள் சுயமாக சிந்திக்க ஆரம்பிப்பது.

2. மக்கள் தம் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவது

இது இரண்டையுமே இதற்கு முன் வகைப்படுத்தப்பட்ட பிரிவினை விவகாரங்கள் அடியோடு அழித்துவிடக்கூடிய வல்லமை வாய்ந்தது.

அப்படியான நிலையிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால், இதுவரை காலம் நாட்டை அழித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் “யுத்தம்” நிறைவுற்றதும் இன்றைய தலைமை தம் நிலையான கொள்கைகளை மக்களின் சமூக ஒற்றுமையிலும், சமூக மேம்பாடுகளிலும், அவர் உரிமைக்காக அவரை கெஞ்ச வைக்காமல் இருப்பதற்கும் வழி செய்யவேண்டும், அதைச் செய்வார்களா? 

இன்றைய அளவில் யுத்தத்திற்குப் பின்னே இது சாத்தியம் என்று கூறப்படுகிறது, வாதமளவில் அதை நியாயப்படுத்திக் கொண்டாலும், இதை இப்போதிருந்தே திட்டமிடக்கூடிய ஒரு சக்தியும் தமிழர் சமுதாயத்தில் இன்றும் இருக்கிறது.

அதை அடையாளங்கண்டு இந்த மக்கள் வெகுண்டெழுவார்களா? தம் அபிப்பிராய பேததங்களை மறந்து தம் உரிமைகளுக்காக ஒன்றிணைவார்களா? தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தேர்ந்தெடுக்கப்பட்ட, தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைத்து அமைச்சர்களையும் தமக்கு சேவையாற்ற நிர்பந்திப்பார்களா?

நீங்கள் நிர்ப்பந்திக்காவிட்டால் அவர்கள் இறங்கி வரும் அவசியம் அவர்களுக்கு இருக்கப்போவதில்லை, ஏனெனில் அந்த இருக்கையில் அமரும் வரைதான் அவர்கள் உங்கள் வர்க்கம், அங்கு சென்று விட்டால் அவர்களும் ஆளும் வர்க்கம்.

உங்கள் இடர் மிகு வரலாற்றை திருத்தும் பொறுப்பும், மாற்றி எழுதும் சக்தியும் உங்களிடம் மட்டுமே இருக்கிறது.

உங்கள் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள், ஆயுதம் ஏந்தி நீங்கள் பட்ட பாடு போதும், உங்கள் உரிமைக்காக நீங்களே குரல் கொடுக்க ஒன்றிணையுங்கள், இன்று வெளிநாடுகளில் தெருவில் இறங்கியிருக்கும் உங்கள் உறவுகளை அப்போதும் “உங்களுக்காக” பாராளுமன்றங்களை முடக்கச் சொல்லுங்கள், “போக்குவரத்துகளை” முடக்கச் சொல்லுங்கள்.

உங்கள் இடரை நீங்களே நீக்க முன்வந்தாலன்றி அண்டைய தமிழகமோ, அமெரிக்காவோ யாரும் இனி உதவிக்கரம் நீட்ட முன்வரப்போவதில்லை.

கடந்த கால வரலாற்றை மறைத்து வைத்துக்கொண்டு என்னதான் கூச்சல் போட்டாலும் உங்கள் இடர்கள் தீரப்போவதில்லை.

மக்கள் சக்தியை சிறைப்படுத்தாமல், தானாக ஒன்ற திரட்ட ஒரு சிறந்த வழியை உங்கள் சுய சிந்தனையிலிருந்து உருவாக்குங்கள், இன்றைய தலைமையை நம்பிப் பார்க்க நீங்கள் முடிவெடுத்தால் அதையும் உங்கள் சொந்த முடிவாகவே மேற்கொள்ளுங்கள்.

நாளை உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடும் நிலை வந்தால் உங்கள் குரல்கள் உலகுக்குக் கேட்கக்கூடியதாக, சிதைந்து போயிருக்கும் இனத்தை முதலில் ஒழுங்கு படுத்திக்கொள்ளுங்கள்.

சிறுபாண்மையினத்தின் ஒற்றுமையை மேம்படுத்தாமல், அபிப்பிராய பேதங்களை மாற்றாமல் போடும் ஒவ்வொரு காட்டுக்கத்தலும் ஆளும் வர்க்கத்திற்கு ஓசியில் கிடைக்கும் “இனிப்பாக” அமைந்துவிடும்.

உண்மைகளை வெளியில் எடுத்து வரும் தகுதியும், அதை அகிலமே கேட்கும் வண்ணம் ஓங்கி ஒலிக்கும் தகுதியும் இந்த இடர் மிகு வரலாற்றிலும் இருட்டறைக்குள் இருந்து வெளியேறியிருக்கும் “தப்பி வந்த” அந்த மக்களுக்கு மடடுமே இருக்கிறது.

ஈழத்தின் இடர்மிகு வரலாற்றினை அகற்ற வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் ஆர்வம் இருந்தால், அந்த மக்களை முதலில் நிம்மதியாக இருக்க வழி செய்து விட்டு, அவர்கள் குரல்களைக் கேட்டு அவர்கள் தேவைகளை அறிந்து, அவர்களுக்காக போராட்டங்களில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுயாதீனமாக அந்த மக்களின் அபிலாஷைகளை அறியாமல் இன்னொரு குரல் மூலமாக அறிந்து இந்த இடர் நீக்க இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடங்கள் போனாலும் யாராலும் முடியாது.

மக்களுக்காக மக்கள் குரல் ஒலிப்பதே இனி வரும் காலத்தின் தேவை!

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to “இடர் மிகு ஈழ வரலாறு ..II

 1. பாரதி.சு

  மே14, 2009 at 5:48 பிப

  வணக்கம் நண்பரே…
  >>still…i am waiting…
  I’ll tell u Later WHY???

   
 2. பாரதி.சு

  மே15, 2009 at 5:29 பிப

  வணக்கம் நண்பரே,
  இப்ப சொல்றன்….
  இன்னும் இந்தப்பதிவை “தேனி” மீள்பிரசுரம் செய்யவில்லை.
  இதிலிருந்து என்ன தெரிகிறது…அவர்கள் உங்கள் கட்டுரைகளை தங்கள் “வசதிக்கு” ஏற்ப பயன்படுத்துகிறார்கள்.

  நான் குறிப்பிட்டட்து போலவே உங்கள் “அறிவை” சகல் திசைக்கும் மோத வைப்பீர்களானால்..உங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

  புரிந்து கொள்ளுங்கள்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: