RSS

தேர்தலும் முடிந்தது, இனி என்ன?

13 மே

இலங்கைத் தீவில் நம் பலத்தைக் காட்டி முடிந்த கையோடு, இந்தியத் தேர்தலிலும் எங்கள் பலத்தைக் காட்டிவிட்டோம் என்ற பெருமிதம், ஈழத்தமிழ் மக்கள் பெயரால் அறிக்கை விடும் அறிஞர்களுக்கு இன்றளவில் இருக்கப்போகிறது.

நேற்று இருந்திருக்காவிடினும் இன்று அது நிச்சயம் வந்திருக்கும்.

ஆதரவாளப் பெருமக்கள் மன்னிக்கவும், நாளை என்ன முடிவு வரும் என்று அவர்கள் இனிமேல் சிந்திக்கப்போவதில்லை, ஜெயலலிதா வென்றால் அதைக் கொண்டாடாமல் இருக்கப்போவதும் இல்லை.

நம்முடைய பலவீனத்தைப் பார்த்தீர்களா?

நாம் தொடங்கிய போராட்டத்தில், முப்பது வருடம் முக்கியும் ஒரு அங்குலமேனும் முன்னேற முடியவில்லை ஆனால் தமிழகத்தின் தேர்தல் தலையெழுத்தை அறிக்கைகள் மூலம் நாம் நிர்ணயிக்கிறோமாம்.

இந்தக் கதையைக் கேட்டு யார் யார் எந்தப் பக்கத்தால் சிரித்திருப்பார்கள் என்கிற பலவீனமான ஆய்வுகளை விட்டெறிந்து அதில் நமக்கிருக்கும் பலாபலன்கள் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் “சுயநலமாக” சிந்தித்தாலும்,  நடுவில் நாங்கள் ஜோக்கர்களானதுதான் மிஞ்சும்.

தமிழகத்தின் உறவும்,தொடர்பும்,உதவியும் என்பது வெறும் போராட்டம் சம்பந்தப்பட்டதல்ல.

அது நம்முடைய மொழி,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகள் சம்பந்தப்பட்டது. நமது வரலாறு,பூர்வீகம்,எதிர்காலமும் சம்பந்தப்பட்டது.

அப்படிப்பட்ட ஒரு பிணைப்பை வெறும் அரசியலால் பிரித்தாள முயல்வதால் எப்போதும் நட்டப்படுவது ஈழத் தமிழர்களே.

கற்காலத்தில் இருக்கும் நம் சமூகம் இன்றைய தேதியில் தமிழக மக்களுக்கு வழங்கக்கூடிய ஒரே உதவி, பிரிவினைவாதத்தைத் தூண்டுவோருக்கு அதை எப்படித் தூண்டலாம்? எங்கெல்லாம் தூண்டலாம்? எதைக் கொண்டெல்லாம் தூண்டலாம் என்கிற “பெறுமதி” வாய்ந்த உதவி,அறிவுரை,வரலாற்றுப் பாடம் மட்டுமே.

அதன் மூலம் வை.கோக்கள்,ராமதாசுகள், மற்றும் இளைப்பாறிய இயக்குனர்களான ராஜாக்கள்,சீமான்களை உருவாக்கி, தமிழக மக்களையும் இன்னும் இன்னும் பிளவு படுத்தி, ஆளும் கட்சியோடு கூட்டணி வைத்தால் அவன் இறையான்மையில் நம் சிந்தனைகளை எதிர்க்கவும், எதிர்க்கட்சிகளாக இருந்தால் தம் சுய அரசியலுக்காக ஈழ ஒப்பாரி வைக்கவும் இந்த முன்னோடிகள் காட்டிய வழிப்படி இன்னும் பல கில்லாடிகளை உருவாக்கலாம்.

எல்லாம் முடிந்து கூட்டிக்கழித்துப் பார்த்ததும் அந்த “அரசியல்” உங்களைப் பந்தாடியதும், அதை நீங்களே கைதட்டிப் பாராட்டியதும் இனிதே காட்சியளிக்கும்.

இதன் பின்னணியில், அதாவது அரசியல் தலைவர்களின் மாயைகளில் நீங்கள் மறந்துபோகும் ஒரு முக்கியமான அம்சம், சாதாரண அப்பாவித் தமிழனின் குழம்பிப்போன மனம்.

நீங்கள் உணர்வு எனும் ஆயுதத்தைத் தூக்கி தமிழக மக்களை தட்டியெழுப்ப நினைத்தீர்கள், வாஸ்தவம் தான், அவர்களும் சில ஆயிரங்கள் அல்லது நூறுகளிலாவது திரண்டெழுந்தார்கள், ஆனால் கொதித்தெழவில்லை, எழவும் முடியவில்லை.

உணர்ச்சியூட்டல் ஆயுதத்தை முழுமையாக நம்பியிருந்தீர்கள், வண்ண வண்ணமாக படம் எடுத்து டிவிடிக்கள், நிழற்படங்கள் அனுப்பி, வகைதொகையில்லா அறிக்கைகள் செய்தெடுத்து, இதற்கு முன் எங்குமே இருக்காத “அமைப்புகள்” எல்லாம் ஆரம்பித்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்து, வாக்குரிமையே இல்லாத வெளிநாடு வாழ், அதுவும் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் தெரிந்த மக்களுக்கு மட்டும் உங்கள் இணையங்களில் பரப்புரை செய்து, அவரைத் தோற்கடிப்போம் இவரை வெல்லச் செய்வோம் என்று மீண்டும் மீண்டும் “சுய இன்பம்” கண்டீர்களே?, ஆனால் நீங்கள் இந்த ஆயுதத்தைக் கொடுத்தவர்கள் அதை வைத்து என்ன செய்தார்கள் என்று சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, அது அப்பாவித் தமிழகக் குடிமகனின் உள்ளத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்,ஏற்படுத்தியது,ஏற்படுத்தக் கூடியது என்று என்றாவது சிந்தித்தீர்களா?

ஈழப்போர் எவ்வளவோ காலமாக நடக்கிறது என்பது அவர்கள் அறிந்தது, அதனால் அல்லல் பட்டு எத்தனையோ ஆயிரம் பேர் அகதிகாளாகத் தமிழகம் வந்தார்கள், ஆங்காங்கே அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்பதும் அவர்கள் நேராகக் கேட்டும், சினிமாக்காரர்கள் துணைகொண்டும் அறிந்ததே, அவர்கள் அடிப்படை வசதிகளுக்குக் கூட அல்லல் படுகிறார்கள், துன்பத்தில் துவைத்தெடுக்கப்படுகிறார்கள் என்பது அங்கே நேரிடையாக சேவை செய்வோர், தம்மால் முடிந்ததச் செய்யும் நல்ல உள்ளம் படைத்தோர் மூலமாவது அறிந்திருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் உள் வீட்டிலேயே நம் உறவுகளைக் காக்கும் தேவை இப்படியிருக்க, என்னதான் இந்த அரசியல் வாதிகள் புலம்புகிறார்கள் என்று அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

சரி, ஈழத்தில் அதைவிட அவசரம் வந்துவிட்டது எனவே அதற்கு முதலிடம் கொடுத்து செயற்படுவதுதான் இப்போது அவசியமானது என்று உங்களை நீங்கள் ஏமாற்றி அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டால், புலிகள் தான் மாவீரர்களாச்சே? மக்களை விட்டுவிட்டு, அவர்கள் நின்று போராடலாமே என்று யோசித்திருக்க மாட்டார்களா?

சார்ள்ஸ் ஆன்டனியின் அந்தத் திட்டம், பிரபாகரனின் பின் வாங்கலுக்குப் பின்னால் இந்தத்திட்டம், 5000 இராணுவம் ஒரே நேரத்தில் சாவு என்று குமுறர்கள்,ஆவி,ஜுவிக்கள்,நக்கீரர்கள் போட்டுத்தாக்கினார்களே, அதைக்கொண்டு நீங்களும் புளகாங்கிதம் அடைந்தீர்களே, இதையெல்லாம் படிக்கும் அப்பாவிக் குடிமகன் “ஏன்தான் இந்த மக்களை பிடித்துவைத்திருக்கிறார்கள்” என்று சிந்திக்க மாட்டார்களா?

சரி, அதற்கும் நடேசன் ஐயா ஒரு விளக்கம் அளித்திருந்தார் ” மக்கள் தாமாக விரும்பித்தான் எங்களோடு இருக்கிறார்கள் ” என்று அதை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்களும் இராணுவப் பகுதிக்கு செல்வதை விட புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதே மேல் என்று மக்கள் எம் வீர மக்கள் வாழ்கிறார்கள் என்று இன்னொரு கட்டு டிவிடிக்களை வெளியிட்டீர்கள், இதையெல்லாம் நம்பித் தொலைத்த அந்த அப்பாவிக் குடிமகன், இன்னொரு சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவம் மண் அணையை உடைக்க, ஒரே நாளில் லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய போதும், அதை தமிழகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பிய போதும், தப்பி வருபவர்கள் எல்லாம் நின்று நிதானமாக வரிசையில் வரும் போதும், அவர்கள் முகங்களில் ஒரு “உயிராவது மிஞ்சிய” உணர்வு தெரியும் போதும் என்னதான் நினைத்திருப்பான் என்று கொஞ்சமாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

இப்படி அடிப்படை உண்மைகள் எதையும் ஏற்றுக்கொள்ளவோ, வெளியில் சொல்லவோ முடியாத பரப்புரைக்காரர்கள் மிக மிக தைரியமாக சீமான் கையில் தமிழனின் தலையெழுத்தை கையில் கொடுத்தார்கள், அவரும் சீவித்ள்ளினார், அவரைப் பார்த்து நடுங்கிப்போன வை.கோவும் ஒரு படி மேலே சென்று “இரத்த ஆறு” ஓடும் என்றார், இவர்களை எல்லாம் புறம் தள்ளி, பாரதி ராசாவும் பாய்ந்து பார்த்தார்.

இதிலெல்லாம் “நிறைவு” கண்ட நீங்கள், இந்தக் கூத்தையெல்லாம் பார்த்து தமிழகத்தின் சாதாரண மக்கள், என்னதான் நினைப்பார்கள் என்று கொஞ்சமாவது கவலைப்பட்டதுண்டா?

ஏட்டிக்குப் போட்டியாக எதிரியை சம்பாதிப்பதிலும் அரசியல் வாதிகள் தலையில் நீங்கள் எண்ணை தேய்ப்பதும் அவர்கள் மாவரைப்பதுமாக காலம் செலுத்திக்கொண்டிருந்த வேளை, கலைஞர் அழைத்தாலும், அம்மா அழைத்தாலும், நெடுமாறன் ஐயா கூட அழைத்தாலும் ஓடோடிச்சென்று தம்மால் ஆனது எல்லாம் அங்கே கஷ்டப்படும் மக்களுக்காகப் போய்ச் சேர வேண்டும் என்று ஓடோடி வருகிறார்களே அந்த அப்பாவி மக்களின் உணர்வுகளை எந்தளவு நீங்கள் மதித்தீர்கள் என்று இனியாவது சிந்திப்பீர்களா?

ஈழ விடயம் தமிழக தேர்தல் முடிவை நிர்ணயித்தால் போதும் என்று ஒரு சாரார் தன்நிறைவும், மறு சாரார் அதற்குப் பிறகுதானே விளையாட்டே இருக்கிறது என்று நெடுநாள் எதிரி ஜெயலலிதாவின் இந்நாள் வாக்குறுதியில் திகைத்துத், தித்தித்துப் போனோரே, அதற்கிடையில் சீமான் வந்து “தேர்தல் முடிந்ததும் அவர் வாக்குறுதியை மீறினால் இருக்கிறது விளையாட்டு” என்று சீமான் சீறிய போதும் நீங்கள் மகிழ்ச்சிக்கடலில் முக்குளித்திருப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை நமக்கிருக்கிறது.

ஆனால்,இந்த வாய்ச்சொல் வீரர்களால் எதைச் சாதிக்க முடியும்,முடியாது என்று ஏன் மறந்தீர்களோ? அதை நீங்கள் உணர்ந்திருந்தால் அத்வானி கூட ஈழ அரசியலை அதுவும் தேர்தல் நேரத்தில் பேசிப்பார்க்க விட்டிருக்க மாட்டீர்கள்.

சரி, இப்போது எல்லாம் முடிந்து விட்டது, வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் கோளாறாம், நாடே அறிந்த ஜனநாயகம் பேசும், வாக்குரிமை ஒவ்வொருவரினதும் கட்டாய உரிமை என்று அடிக்கடி ஞாபகப்படுத்தும் கமல்ஹாசனுக்கே வாக்குப்பட்டியலில் பெயரில்லை என்று வாக்களிக்க முடியிவில்லையாம்.

ஜெயலலிதா வேறு இரட்டை இலை பட்டனைத் தட்டினால், உதய சூரியனுக்கு வாக்குப்பதிவாகிறது என்று புலம்பத் தொடங்கி விட்டார், கோடி கரை புரள்கிறது என்று வை.கோ மீண்டும் தன் விளையாட்டைத் தொடங்கி விட்டார், எங்கே உங்கள் அடுத்த கட்ட ஈழப்போருக்காகத்தான் உலகமே காத்துக்கிடக்கிறது, இன்னுமா அறிக்கைகள் தயாராகவில்லை?

இல்லை, இனிமேல் இந்த மக்கள் உங்கள் அறிக்கைகளை நம்புவார்களா என்ற நம்பிக்கை தொடர்பில் நீங்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லையா?

நீங்கள் இந்தத்திசையில் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்க, அங்கே அந்ததத் திசையில் மரண ஓலங்கள் ஒரு புறமும், வாழ்வாதாரத்துக்காக ஏந்தி ஏங்கிக்கொண்டு தவித்து, வெளியேறாமல் குமுறும் மனித மனங்கள் இன்னொரு புறமும், உங்கள் விளையாட்டுக்களின் நேர் கோட்டில் “நிஜமாக”  வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

2 responses to “தேர்தலும் முடிந்தது, இனி என்ன?

 1. Dharan

  மே13, 2009 at 2:32 பிப

  100% True

   
 2. kazeeb

  மே13, 2009 at 5:34 பிப

  தெளிவான சிந்தனை.. ஆக்ககரமான எழுத்து. இதை இன்னும் சற்று ஆழமாக யோசித்தால் தமிழ் விரோதி என்றும் ஈழ விரோதி என்றும் விமரிசிக்கப் படலாம். ஒரு முப்பதாண்டுகள் முன்பு வரை இங்கு உள்ள தமிழ்நாட்டு்த் தமிழர்களை ஈழத் தமிழர்கள் செல்லாக் காசாக நினைத்திருந்தனர். எந்த விதமான ஒட்டுக்கள் இருப்பதாக இப்பொழுது புலம்புகிறார்களோ அதை அவர்கள் சிறப்பாக வாழ்ந்த காலங்களில் நிரூபிக்க வில்லை. மேலும் விடுதலைப் புலிகளின் மீதேற்பட்ட அளவுக்கதிகமான பாசமோ,அல்லது பயமோ புலிகளின் தவறுகளை யாரும் கண்டு கொள்ள வில்லை. அவர்களின் எல்லை கடந்த கொலை வெறி ராஜீவ் காந்தியையும் பதம் பார்த்த போது தமிழக மக்கள் புலிகளோடு சேர்த்து அனைத்து ஈழ மக்களையும் வெறுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்பொழுதும் கூட தமிழக மக்களிடம் உண்மையைச் சொல்லி ஈழ ஆதரவைத் திரட்டி இருக்கலாம். புலிகள் இருக்க பயமேன் என்றே நினைத்தீர்கள். இன்றைக்கு புலிகள் ஆட்டம் காண ஆரம்பித்தவுடன் தமிழக மக்களின் ஆதரவை நாடுகிறீர்கள். மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல நாட்டை ஆளும் அரசையே ஆட்டம் காண வைத்து விட வேண்டும் என்று துணிந்து விட்டீர்கள்.ஒரு வேளை உங்களின் கனவு நிறைவேறி யார் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களும் ஜெயித்து உங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கித் தருவார்கள் என்று நம்பினீர்கள் என்றால் உங்களை வி்ட அறிவுள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஏனெனில் சொந்த மக்களுக்கு தண்ணீர் வாங்கித் தர முடியாத அரசியல்வாதிகளால் நிரம்பி இருக்கும் தமிழ்நாட்டில்,இலங்கையில் தனிநாடு வாங்கித் தருவோம் என்று சொன்னால் அதையும் கேட்கவும் புல்லரித்து கை த்ட்டவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்த உங்களுக்காக பரிதாபப் படுகிறேன். அதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாதவனாக இருப்பதால்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: