RSS

தொலைந்து போன மனிதம் !

12 மே

உங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த, உங்கள் கண் பார்க்க வளர்ந்த அந்த இளைஞனை நடு ரோட்டில், டயரில் போட்டுக் கொளுத்தும் போது, நீங்கள் பார்த்துக்கொண்டு இருந்திருந்தாலும் பரவாயில்லை, நெருப்பு வைப்பவனுக்கு சோடா அல்லவா ஊற்றிக்கொடுத்தீர்கள் ?

சரி, ஒரு கதைக்காகவாவது யாழ்ப்பாணத்தில் 5,000 முஸ்லிம் குடும்பங்கள் தான் இருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நண்பன்தான் இருந்திருப்பான் என்று கணக்கில் வைத்திருந்தாலும் கூட அவர்களை இரவோடு இரவாக வெளியேற்றிய போது 5,000 அல்ல ஒரு 500 பேர் கூட ஏன் என்று கேட்கவில்லையே ?

நீங்கள் மனிதத்தைத் தொலைத்த வரலாறு இப்படித்தான் பதிவாகிக் கொண்டிருக்கிறது.

ஆயுத முனையில் ஆள நினைத்த பிரபாகரனின் புலிக்கும்பலை ஆதரிக்கிறோம் எனும் பேர்வழியில் இப்படி நடந்தேறிய மனித விரோதங்கள் எத்தனை? எத்தனை?

கடவுளின் மகனாகப் பிரபாகரனை மக்கள் பார்த்தார்கள? இல்லை பார்க்க வைக்கப்பட்டார்கள் என்பதே உண்மை, இயற்கைக்குப் புறம்பான திட்டமிடலை அவர்கள் ஆயுத முனையில் உங்கள் முன் திணித்த போது வெறும் மந்தைகளாக மட்டுமே நீங்கள் காட்சியளித்தீர்கள், உங்கள் உயிர்மேல் உங்களுக்கே பயத்தை உருவாக்கிய அந்தப் பயங்கரவாதி யார் என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

போர் வந்ததும், அல்லோல கல்லோலப்பட்டு கால் ஓடும் திசையெல்லாம் சென்று புலி தவிர்ந்த எவனிடமும் சரணடையத் தவிக்கும் உங்களை நீங்களே என்றாவது, எதற்காக நாங்கள் ஓடுகிறோம்? எதனால் ஓடுகிறோம் என்று ஒரு தமாஷுக்காகவேனும் கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? 

ஏன் கேட்பீர்கள்? எதற்காகக் கேட்பீர்கள்? காலம் காலமாக உங்கள் மனிதத்தைத் தொலைத்து விட்டு ஆயுத முனையில் தலை குனிந்து வாழப்பழகிவிட்டீர்கள் இனி ஏன் கேட்பீர்கள்!?

சனியன் நம்மோடு போகட்டும், நம் பிள்ளைகளாவது எங்கேயாவது போய் உருப்படட்டும் என்று உள்ளதெல்லாம் விற்று,கடன்பட்டு அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி, அந்தக் கொஞ்ச நாள் கண்ணீர் விட்டு, பின் யுரோக்களும், பவுண்களும், டொலர்களும் இறங்கியதும் கண்ணீர் மறைந்து, உங்கள் மனதெல்லாம் குறுகி “ஆண்டவன் நம் பக்கம் கண் திறந்துவிட்டான்” என்று அமைதியாகிப் போனீர்களே, அப்போதே உங்கள் அயலவன் யாருமற்ற அனாதையாகிவிட்டான், அதில் உங்களுக்கென்ன கவலை?

கால காலமாக அதே கலாச்சாரத்தையும், வாழ்வு முறைகளையும், பண்பாட்டையும், பேச்சு வழக்கையும் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை அர்த்த ராத்திரியில் அடித்து விரட்ட, பாசிசப்புலிகள் திட்டமிட்டபோதும் மெளனித்து இருந்தீர்கள், மறுநாள் அவர்கள் சொத்துக்களையெல்லாம் விட்ட இடத்தில் விட்டுவிட்டு அனாதைகளாக விரட்டியடித்த போதும் மெளனிகளாக இருந்தீர்கள், அவர்கள் உடமைகளை தெருவில் ஏலம் போட்டுப் பணம் பார்த்தபோது ஊரோடு சேர்ந்து அல்லுகிளி போட்டீர்கள், ஆனால் ஏன் இந்தப் பாவம் என்று தவறியும் கேட்க மறந்தீர்கள்.

அவ்வளவு ஏன், யாழில் வாழ்ந்தது மொத்தமாகவே வெறும் 5,000 முஸ்லிம் குடும்பங்கள் தான் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நண்பன் ஒரே ஒரு நண்பன் கூடவா இல்லாது போனான்? அப்படி ஒருவர் ஒரு குடும்பத்திற்காக தெருவில் இறங்கியிருந்தால் கூட 5,000 பேர் இறங்கியிருப்பீர்களே? அது மக்கள் எழுச்சியாக இருந்திருக்குமே? சர்வதேசம் கண்டிருக்குமே? ஆகக்குறைந்தது உங்களோடு கூட வாழ்ந்த இன்னொரு சமுதாயத்தைக் காப்பாற்றத்தான் இல்லை ஒரு குரல் கொடுத்த வரலாறாவது பதியப்பட்டிருக்குமே? ஏன் இதைச் செய்யவில்லை !?

புலிக்கொடுங்கோலர்கள் “களையெடுப்பு” எனும் பெயரில் மாற்று இயக்கங்களை எல்லாம் அழிக்க ஆரம்பித்து, பிறவிக் கொடூரர்கள் கூட பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு உங்கள் மண்ணின் மைந்தர்களை, நீங்கள் பார்க்க வளர்ந்த அந்த எதிர்காலத் தலைமுறையினரை, உங்கள் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட உங்கள் இனத்தவரையே நடு வீதியில், டயரில் போட்டு கொழுத்தினார்களே அப்போதும் நீங்கள் மெளனமாக இருந்தீர்கள், புலி ஆதரவாளர்களோ இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு தன் சொந்தக் காசில் சோடா உடைத்துக் கொடுத்தார்கள்.

ஏன்? எங்கே போனது உங்கள் மனிதம்? அது உங்களிடமிருந்து தொலைந்ததா இல்லை தொலைக்க வைக்கப்பட்டதா? எப்போது சிந்திப்பீர்கள்?

அப்போதும் சிந்திக்கவில்லை,இப்போதும் சிந்திப்பதில்லை, இனி எப்போதாவது சிந்திப்பீர்களா?

இன்றும், அன்றைய வரலாறு மீள எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது, உங்கள் மண்ணின் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் உணர்வுகளையும், நியாயங்களையும் ஒரு பக்க சார்பாகவே வைத்திருக்கிறீர்கள்.

சாதி வெறி, இன வெறியையெல்லாம் மேவி நிற்கும் உங்கள் இந்தக் கொலை வெறியை எப்போது அகற்றுவீர்கள்?

ஒரு பக்கம் புலியின் பிடியிலிருந்து விடுபட்டாலும், இன்னும் நம் போராட்டம் முடிவடையவில்லை, இனிமேல் தான் அது ஆரம்பிக்கப் படப் போகிறது.

ஜனநாயக வழியில் மக்கள் கையாலேயே செருப்படி வாங்கிக்கொடுத்து பிரபாகரனையும் அவர் கும்பலையும் ஓரங்கட்ட வேண்டும் என்பது தான் ரணில் போட்ட திட்டம், அதற்காக அவர் வருடங்களையும், வரலாறுகளையும் தியாகம் பண்ணத் துணிந்திருந்தார், உயிரிழப்புகளைத் தவிர்த்திருந்தார், உங்கள் எண்ணங்களை செதுக்கி நாளையொரு நாள் நீங்களே பிரபாகரனைத் தூக்கியெறியும் காலம் வரும் என்று நல்லவனாய் நடித்திருந்தார், சரி இந்த விஷயமெல்லாம் தான் நம் அறிவுக்கு எட்டாதே, மஹிந்தவை ஒரே பிடியில் அரசாள வைக்கச் சொன்னார்கள், மந்தைகள் போல நாமும் அரியாசனத்தைப் பெற்றுக்கொடுத்தோம்.

இப்போது அவர்கள் அழிகிறார்கள், ஆனால் நம் உரிமைகளைப் பெற்றுவிட்டோமா? இல்லை இதுவரை கால அழிவுகள் தந்த சுவடுகளில் இருந்து பாடங்களைத்தான் கற்றுக் கொண்டாமோ? அப்படி எதுவும் தெரியவில்லையே?

இன்னும் கூட புலி சொல்லும் புளுகுகளை ஆராயாமல் நம்பித் தொலைக்கும் புண்ணியவான்கள் இருக்கும் வரை புலியும் அவிழ்த்துக்கொண்டே இருக்கிறது.

ஐ.நா. கூட்டத் தொடரைத் திட்டத்தில் வைத்து புலி எழுப்பிய அண்மைய அண்டப் புளுகை (ஆண்டவா இது என்ன சோதனை?) நம்பி இன்னும் நீங்கள் மட்டும் தான் கூப்பாடு போடுகிறீர்கள், விஷயம் தெரிந்த வெளிநாட்டுக்காரன் எவனாவது வாய் திறக்கிறானா? 

நவீன உலகில் உரிமைப் போராட்டம் என்று ஒரு பித்தலாட்டம் நம் மண்ணில் மட்டுந்தான் நடக்கிறதா? வேறு எங்கேயும் அதற்குப் பின்னும் அதற்கிடையிலும் நடக்கவே இல்லையா? நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் போராட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? எப்போது முடிந்தது? எவ்வாறு முடிந்தது? அதை நீங்கள் அறிய எப்போதாவது முயற்சி செய்தததுண்டா?

அவ்வளவு ஏன் ஆளாளப்பட்ட கியுபப் புரட்சிகள் எத்தனை காலம் நடந்தது? எவ்வாறு நடந்தது? எவ்வாறு முடிவுற்றது? என்று நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

மூன்று தசாப்தங்களாக எந்த மண்ணையும் பிடுங்க முடியவில்லையே ஏன் என்றாவது சிந்தித்ததுண்டா? அன்று நம் விடுதலைக்காக உயிரையும்,குரலையும் கொடுத்த எத்தனை பேர் இன்றும் குரல் கொடுக்கிறார்கள் என்று அலசிப் பார்த்ததுண்டா?

நம்மைச்சுற்றி எத்தனை விடயங்கள் நடந்தேறுகின்றன,நாமும் தான் மனிதர்கள், நமக்கும் தான் உயிர் இருக்கிறது, ஒவ்வொரு நாட்டுக்காகவும் எத்தனையோ நட்பு நாடுகள் இருக்கிறார்கள், ஐ.நா.வில் எல்லாம் குரல் கொடுக்கிறார்கள், வீணாய்ப்போன நம் போராட்டங்களுக்காக உலகில் யாராவது சுயநலமின்றிக் குரல் கொடுக்கிறார்களா?

நம்மைச்சுற்றி நமக்கென நண்பர்கள்தான் இருக்கிறார்களா? இல்லை நண்பர்களை நண்பர்களாக இருக்கத்தான் நம் வீரர்கள் விட்டார்களா? எதிரிகளை சம்பாதிப்பதில் காட்டிய நாட்டங்களை என்றாவது நண்பர்களைச் சம்பாதிக்கக் காட்டினார்களா?

வன்னிக் காட்டின் மூலைகளில் இருந்து உங்கள் தலையெழுத்தைத் திட்டமிட்டார்கள், கிணற்றுத் தவளைகள் போன்று ஆயுத மோகங் கொண்டு தண்ணீருக்கு அடியில், வானத்தில்,பூமியில் என்று உங்கள் சொத்துக்களை வெறும் இரும்பாக்கி அதில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள், இன்று அத்தனையையும் தெருவில் போட்டு விட்டு உங்கள் ஆயாக்களின் முந்தானை மறைவில் ஒளிந்திருந்து ஆமி வரும் திசை பார்க்கிறார்களே, இதற்குப் பிறகும் உங்கள் தலையைக் கொடுத்துத்தான் அவர்கள் தலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இன்னுமா நீங்கள் உணரவில்லை?

நேற்றைய சரித்திரத்தில் கூடியிருந்த சமூகத்தை நாதியற்று விரட்டிய போது நண்பர்களாக இருந்து நம் குரல்கள் எழ மறுத்தனவே அது போன்றுதான் நமக்காக நண்பர்களாக இருந்தாலும் கூட குரல் கொடுக்க யாருமற்ற நிலை இருக்கிறது.

இப்படியொரு நாதியற்ற வாழ்வில் என்ன சுகம் காணப் போகிறீர்கள்? இனி வரும் காலத்தில், இனி வரப் போகும் போராட்டங்களுக்கு எப்படி முகங் கொடுக்கப்போகிறீர்கள்?

வடக்கில் ஒரு வசந்தத்தை மஹிந்த பிரதர்ஸ் அள்ளித்தந்ததும் கவ்விப்பிடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறீர்களா? அது அவ்வளவு இலகுவில் நடக்குமாக இருந்தால் நமக்குப் பின்னால் இவ்வளவு கொடூரமான ஒரு வரலாறு நடந்தேறியிருக்கத் தேவையில்லை.

போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை, உடுக்கத் துணி கூட இல்லாது அல்லல் படும் மக்களுக்கு நட்புக்கரம் நீட்ட நாங்களே இல்லை என்றால் வேறு யார் வருவது? நம் மக்கள் சார்ந்த மனிதம் நம்மிடமே இல்லை என்றால் வேறு யாரிடம் எதிர்பார்ப்பது? அதற்காக யாரிடம் போவது? யாருடைய கையை நம்புவது என்று கேள்வி கேட்பீர்களாயின் திரும்பவும் சொல்கிறேன் “இன்னும் ஆயிரமாயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை”.

உங்களுக்கென்று இருக்கும் சுய மூளையைப் பாவித்து, உங்கள் சக்திக்குள் அடங்கும் வசதிகளைப் பாவித்து, நல்லது கெட்டதுகளை நீங்களே கண்டறிய வேண்டும்.

பசப்பு வார்த்தைகளைக்கேட்டு பாதையில் இறங்குவதற்கு முன்னும் பின்னும், நீங்கள் இன்னும் சிந்திக்க நிறைய இருக்கிறது, இன்றைய அளவில் உங்களிடமிருந்து, அங்கே இராணுவ எல்லைக்குட்பட்ட சிறைகளிலும், அதற்கு அப்பால் இருக்கும் கட்டாயச் சிறைகளிலும் இருக்கும் மனிதர்கள் தொடர்பில் உங்களுக்குள் ஒரு “மனிதம்” இருந்தால் அதை வெளிக்கொண்டு வாருங்கள்.

உங்கள் சொந்த மனச்சாட்சியின் அடிப்படையில் உங்கள் சொந்த உணர்வுகளை உங்கள் சொந்த மக்களுக்காக நாலு பேரிடம் நீங்கள் பறை சாற்றுங்கள், அவர்களும் செய்வார்கள், நாலு நாற்பதாகி ஒரு மக்கள் எழுச்சியாய் நீங்கள் ஆரம்பித்தால் ஆயுதம் தாங்கிய இரு தரப்பும் அடங்கிப்பணிய வேண்டும்.

ஆகக்குறைந்தது, நாளை வரும் நாட்களில் நமக்கொன்று என்றால், கலைஞரின் அரசியல் நாடகம் வேண்டாம், ஜெயலலிதாவின் ஸ்டன்ட் சினிமா வேண்டாம்,சீமான்களின் சீறல்கள் வேண்டாம்,நம் உறவுகளின் உரிமையுள்ள குரல்கள் இருக்கின்றன எனும் மனத் தெம்பாவது வரும்!

அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று இங்கே தெருவில் இறங்கிக்கொண்டவர்கள் சந்துக்குள் புகுந்து சிந்து பாட வந்தால் இவர்கள் தெருவில் என்ன கோஷத்தை முன் வைக்கிறார்கள் என்பதைக் கேளுங்கள்? அதில் எத்தனை மக்கள் நலன் சார்ந்தது என்று கேளுங்கள்.

அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி என்று இவர்கள் அடிக்கும் பல்டியில் உலகமே சிரித்துக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்கூறுங்கள்.

உலகம் சேர்ந்து கப்பல் அனுப்பி மக்களை வெளியேற்ற முனைந்தால், எங்கள் மக்களை வெளியேற்றாதே என்று போலிக் கோஷம் அதுவும் அமெரிக்காவில் லோயர்களிலிருந்து ஆரம்பித்த அதே புலிகள் இன்னும் கொஞ்ச நாளில் “ஐயா யாராவது வந்து கப்பலை அனுப்புங்கோ” என்று கேட்டும் யாரும் வரவில்லையே அந்த உண்மையை உங்கள் சொந்த மனதுடன் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளுங்கள்.

முதல் நாள் அவுஸ்திரேலியாவுக்கு பேட்டி கொடுத்த பேச்சாளன் இன்று ஆகாயம் கடந்து போய்விட்டார் என்றால் இலக்குகள் எங்கிருந்து தீர்மானிக்கப்படுகின்றன என்பதை சிந்தித்துப்பாருங்கள், அவற்றில் இருக்கும் துல்லியத்தை விட, அவை தரும் தாக்கங்களை கவனித்துப் பாருங்கள்.

சும்மா கோஷம் போடுவதை நிறுத்தி அவர்களை உருப்படியாக எதையாவது செய்ய வைக்க முடியுமா பாருங்கள், இல்லாத கட்டுமானத்தில் மூன்று தசாப்தங்கள் அவர்கள் கண்ட கனவெல்லாம் போதும், அதில் நீங்கள் தொலைத்த வாழ்க்கையெல்லாம் போதும், இனியாவது ஒரு சுய மரியாதையுள்ள தமிழினம் உருவாக வேண்டும் என்றால், அத்தனையையும் தூக்கியெறிந்து விட்டு, அன்றும் இன்றும் நாம் தொலைத்த மனிதத்தை முதலில் மீளப் பெற வேண்டும்.

மனிதனாய் சிந்திக்கத் துணிய வேண்டும், தொலைந்து போன மனிதத்தை நீங்கள் தேடிப்பிடிப்பதிலிருந்து இன்னுமொரு ஆரம்பம் காத்திருக்கிறது!

ஒவ்வொரு மனிதனும் தன் மனித உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்கத் தெரிந்து கொண்டாலே உங்களிடம் எப்போதும் ஒற்றுமை இருக்கும், ஒற்றுமை இருந்தால் உங்கள் பலம் உங்களிடமே இருக்கும், பலமான உங்கள் கரங்கள் இருந்தால் நாளைய வாக்குரிமைகளும், திருத்த சாசனங்களும் உங்கள் காலடியில் வந்து கிடக்கும், இன்றைய புலிக் கூண்டை விட திறந்த வெளி சிங்கக்கூண்டு போதும் என்று விடுபட நீங்கள் துணிந்து விட்டால் அத்தனையும் மண்ணாகிப் போகும் ஒரு நாளில் பிரபாகரனின் பொங்கு தமிழும், மஹிந்தவின் வெசக் கொண்டாட்டமும் தான் நடக்கும்.

மக்கள் பூமி முதலில் மனிதர் வாழ்வதற்கே, அந்த மனிதர்களின் வாழ்வாதாரத்தை ஒரு ஆயுதக் குழு நிர்ணயிக்கவும் முடியாது, அந்த நிர்ணயத்தை நம்பி உலகில் எந்த ஒரு சமூகமும் வாழவும் முடியாது எனும் தத்துவத்தை உலக வரலாறு பதிந்து கொண்டது இந்த வீணாய்ப்போன போரட்டத்திலிருந்துதான்.

அரசியல் உரிமைகள், சுய மரியாதை உரிமைகளுக்குப் போராட முன்னர் அடுத்த மனிதனின் உணர்வுகளையும், அவன் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதில் நாங்களே தவறிழைத்து விட்டது, யார் யாரிலும் குற்றஞ்சுமத்திக்கொண்டிருப்பதனால் யாருக்கு என்ன லாபம் ?

அடி அடி என்று அடித்து ஒரு மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன் அடிக்கவில்லை, அவர்கள் அடித்தார்கள் இவர்கள் அடித்தார்கள், அவர்கள் அப்படி உதவி செய்தார்கள், இவர்கள் இப்படியெல்லாம் உதவி செய்தார்கள் என்று நமக்குள் நாமே பரிதாபமாக உளறுகிறோமே, அவனுக்கிருக்கும் அந்த “அவர்களும்”,”இவர்களும்” ஏன் உங்களுக்கு இல்லை என்று சிந்தித்துப் பாருங்கள்.

விரும்பியோ விரும்பாமலோ இன்று சூனியத்தில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு புதிய சமுதாயமாக எம் சமுதாயம் மாறிவிட்டது.

மேலை நாடுகளும் இந்த நிலையைக் கண்டுதான் வந்தன, அதிலிருந்துதான் மீண்டன, அங்கிருந்துதான் தம் நாட்டை, சமூகத்தை, வளங்களை கட்டியெழுப்ப ஆரம்பித்தன்.

இந்தக் கொடுமைகளிலிருந்து அவர்கள் மீண்ட பின்பு அவர்களிடம் இருக்கும் மனிதப் பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் குறைகளை விடுங்கள் நிறைகளை கவனித்து உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

அதை விடுத்து, வழி காட்ட வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு அந்த மேலை நாட்டுக்காரனுக்கே நம் ஆதிவாசிகள் கலாச்சாரத்தைக் காட்டாதீர்கள், அவர்கள் எஞ்சியிருக்கும் மனிதர்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளைக் குழப்பி நிரந்தர மனித அவலத்தை அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்காதீர்கள்.

ஒரு மிலிபாண்டும், குச்னரும் காட்டும் நேசக்கரத்தின் பின்னால் அவர்கள் நமக்காக விட்டுச்சென்ற கடந்த கால பாடங்கள் இருக்கின்ற, அதை உங்கள் சொந்த மூளை கொண்டு யோசித்து ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற முடிவெடுங்கள்.

நமக்காக எதையாவது செய்ய எத்தனையோ மனம் இருந்தும், இடையில் இருக்கும் இந்த அட்டூழியக்காரர்களினால் அவரவர், அவ்வளவு ஏன் தமிழக மக்கள் தலைவர்கள் கூட இந்தப் பிரச்சினையை வெறும் அரசியலாக்கிப் பந்தாடும் நிலைதான் உள்ளது.

முழு உலகையும் பகைத்துக்கொண்டு எழுந்து நின்று எந்தத்திசையிலும் வெள்ளைக் கொடியைக் கூட காட்ட முடியாது, அரசியல் தெளிவில்லாத பாசிசக் கொள்கைகள் எப்படியும் ஒரு நாள் மக்களால் அல்லது மக்கள் நலன் எனும் பெயரால் இன்னொரு சக்தியால் அழிக்கப்படுவதுதான் நியதி்.

நமக்காக தமிழ் நாட்டின் எங்காவது ஒரு கோடியில் ஒரு ஷாஜகான் தீக்குளித்தால் அவரை “தமிழின மறவனே! வீரனே” என்று போஸ்டர் அடிப்போம் ஆனால் அதே ஷாஜகான் சார்ந்த மக்களை காத்தான்குடியில் தொழுகை நேரத்தில் அதுவும் பின்புறம் இருந்து வேட்டையாடி விளையாடுவோம், இதையெல்லாம் எல்லோரும் எப்போதும் கண் மூடித்தனமாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

பல முத்துக்குமார்களை உருவாக்கி அவர்களை மாவீரர்களாக்குவோம், திடீரென ஒரு தியாகியை லண்டனுக்கு அனுப்பி உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவோம், இப்படி நாங்கள் சிறிது சிறுதாகக் காட்டும் அடுத்தவன் பிள்ளைகளின் “தியாகங்களை” முழு உலகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தீக்குளிக்க முன்னர் இருவாரத்திற்கு முன் தான் அவர் டிரெய்னிங் முடித்து வந்தார் என்ற உண்மையையோ, இத்தனை சிந்தனைத் தெளிவுடன் சாக முதல் நாள் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போர் அப்போதுதான் இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து பறந்து வந்தார் என்கின்ற ரகசியங்களையோ யாரும் வெளியிடக்கூடாது, வெளியிட்டால் அவன் “துரோகி” , இவர்கள் செய்யும் சுத்துமாத்துக்களை வெளியே எடுத்துரைத்தால் அவன் “துரோகி”, மக்களை சிந்திக்க வைத்தால் அவர்கள் “துரோகி”, ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வெளியேற வாய்ப்பொன்று கிடைத்தால் அங்கிருந்து வெளியேறி, சுயாதீன தொலைக்காட்சிகளின் தோன்ற வைத்தால் தான் புலிகளின் “தளபதிகளும்” துரோகிகளா இல்லையா என்பது தெரிய வரும்.

இப்படியே எல்லோருக்கும் துரோகப்பட்டம் சூட்டி இறுதியில் அவர்கள் தனியாக இருந்து யாருமற்ற பூமியை அரசாளட்டும், உங்கள் சகோதர மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க ஆரம்பியுங்கள்.

சிந்திக்க ஆரம்பித்த பின்னராவது அவன் சொன்னான்,இவன் சொன்னான் என்றில்லாமல் உங்கள் சொந்த மூளையைக் கொண்டு, உங்கள் வடுக்களை, வரலாறுகளைக் கொண்டு சுயாதீனமாக முடிவெடுங்கள்.

இவற்றையெல்லாம் மீள அடைவதற்கு என்ன விலையாவது கொடுத்து முதலில் தொலைந்து போன மனிதத்தை மீளக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து வாழத் தயாராகுங்கள் !

வரலாறு என்பது நீங்களும் சார்ந்தது, அதை உருவாக்கிய பங்கு உங்களுக்கும் உரியது.

யார் பழந்திண்பார்கள் என்று மற்றவனுக்குக் கற்றுக்கொடுத்தால் போதாது நீங்களும் அதன் படி வாழ ஆரம்பித்தால் தான் உங்கள் உலகம் உங்களுக்கு உண்மையாக இருக்கும்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 responses to “தொலைந்து போன மனிதம் !

 1. பாரதி.சு

  மே13, 2009 at 12:46 முப

  வணக்கம் நண்பரே!!
  அப்பப்பா கண்ணைக் கட்டுதே..முடியல சார். உங்கள் கருத்துக்களை என் அறிவுக்கெட்டிய வரையில் உள்வாங்கி அலசுகிறேன்.

  //”உங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த, உங்கள் கண் பார்க்க வளர்ந்த அந்த இளைஞனை நடு ரோட்டில், டயரில் போட்டுக் கொளுத்தும் போது, நீங்கள் பார்த்துக்கொண்டு இருந்திருந்தாலும் பரவாயில்லை, நெருப்பு வைப்பவனுக்கு சோடா அல்லவா ஊற்றிக்கொடுத்தீர்கள் ?”//

  கொடுமை தான்..
  அப்படித்தான் கேள்விப்பட்டேன். ஏனெண்டா அந்த நேரம் நான் பிறக்கவில்லை. அப்படிப் பிறந்திருந்தாலும் ஒன்டில் “அவங்க” போட்டிருப்பாங்க இல்லையெண்டா நான் சார்ந்திருந்திருக்ககூடிய “அமைப்பே” என்னை ஏதேனும் “அற்ப” காரணங்களுக்காக போட்டிருக்கும். அது தானே அந்த காலத்திய “கலாச்சாரம்”. இதெல்லாம் படித்தும் செவி வழியாகவும் அறிந்து கொண்டது.
  அப்ப ஆயுதம் ஏந்திய எல்லோருமே ஒராளை ஒராள் எப்போதுமே சந்தேகமாக் தான் பார்த்து வந்திருக்காங்க..யார் துப்பாக்கியில் இருந்து முதலில் புகை வருதோ அவன் தப்பிப் பிழைப்பான்.
  என்ன “அவங்க” ஒரேயடியாக தங்களை ஸ்திரப்படுத்த ஏனையோரை அழித்தார்கள்.
  அழிக்கப்பட்ட அமைப்புகளில் இருந்து தப்பிபிழைத்து இருந்தவர்கள் பேரினவாத அரசுடன் இணைந்து “அழிச்சாட்டியம்” செய்யாமலிருந்திருந்தால் மக்கள் மனங்களில் இருந்திருப்பார்கள்….காலம் கடந்தாவது அவர்களுக்கு “நீதி” கிடைத்திருக்கும். “சோடா” உடைத்து கொடுத்தவன் மனச்சாட்சியாவது “அவனை” கொண்றிருக்கும் அல்லவா???
  அதைவிடுத்து “எனக்கு ஒரு கண் போயிடுத்து அதனால் யாருக்கு என்ன ஆனாலும் அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்” என்ற அவர்களின் எண்ணம் தான் அவர்கள் இன்றும் “தனியே” புலம்புவத்ற்கு காரணம்.

  இன்றைய எங்கள் அவலத்துக்கு காரணம் அன்றைய தவறுகள் அல்ல..அதில் இருந்து பாடம் “படித்திருக்க வேண்டியவர்கள்” படிக்காததால் தான், அதைவிட அதே தவறுகளினை தொடர்ந்ததும் தான்.

  எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும்.
  அருமையாக கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தொலைத்ததன் பயனை இன்று அனுபவிக்கின்றோம்.
  அந்த சந்தர்ப்பங்களினை உருவாக்கிய “வீரர்களினை இன்றும் அல்லது என்றும் மறக்கப்போவதில்லை…அதே போலவே அதை “தவறவிட்டவர்களினை” வரலாறு மன்னிக்கப்போவதில்லை.

  அதே போலவே எங்களுக்கு கிடைத்த சாபக்கேடு “அவங்களைத்” தவிர வேறொரு உறுதியான அமைப்பு எம்மிடையே இல்லாதது தான்…இதுக்கும் “அவங்களையே” காரணம் எனக் கூறிக்கொண்டு “பல கூட்டம்” இணையங்களில் உலா வருது.
  ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது கார்ல்மாக்ஸ்க்கே பாடம் எடுப்பவர்கள் மாதிரி அரசியல் கதைப்பார்கள்..அப்புறம் “அவங்கயெதிர்ப்பை” மட்டும் சொல்லில் காட்டுவார்கள்…சிங்களப்பேரினவாதம் பற்றி எதுவுமே சொல்லிலோ/செயலிலோ காட்டமாட்டார்கள். இவர்கள் தமிழ்மக்களின் ஆதரவினை பெற முயற்சிக்காமல் “தங்களுக்கென” என ஒரு வட்டத்தினை போட்டுக்கொண்டு அதற்குள்ளிருந்து சிங்கியடித்தது தான்.இன்றுவரை எந்த நாயும் இவர்களை திரும்பிபார்க்காததற்கான காரணம்.

  எப்போது சிங்களபேரினவாதத்துடன் இணையாமல் ஒரு சக்தி அரசியல் ரீதியாக போராட ஆரம்பிக்கிறதோ அப்பவே விடியலின் ஒளிக்கதிர்கள் நம்மை தீண்டும்.

   
  • arivudan

   மே13, 2009 at 7:37 முப

   நண்பரே, எதை இங்கே முன்வைக்கிறோமோ அதை உள்வாங்கும் தைரியம் உங்களிடம் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.

   நீங்களே குறிப்பிட்டது போன்று, உங்கள் பிறப்புக்கு முன்னரான சில விடயங்கள் தொடர்பான ஆழமான வேர்களை அலசிப்பார்த்தால் பல கொடூரங்கள் வெளிவரும்.

   ஒரு புள்ளியிலிருந்தே அத்தனையும் ஆரம்பிக்கிறது, அந்த வகையில் “அவர்கள்” மட்டும் பலமான அமைப்பு போன்ற மாயையை ஏற்படுத்தியதும். மற்றவரை அடக்கியதும் அவர்களின் வெற்றி.

   “அவர்களை” எதிர்ப்பவர்கள் என்னதான் மக்கள் பக்கம் சென்றாலும் அவவர்களின் பலம் இவர்களின் அரசியலை மழுங்கடித்து விடுவது எதார்த்தம்.

   இதன் ஆரம்பித்திருலிருந்தே இங்கே மேலோங்கி நிற்பது சர்வாதிகாரம், எதேச்சைப் போக்கு, மக்கள் நலனற்ற, அரசியல் சிந்தனையற்ற ஒரு போராட்டம் என்பதே கசப்பான உண்மை.

   அதற்குப் பழியானவர்கள்? அப்பாவி மக்கள்.

   “அவர்கள்” இருந்தார்கள் என்று இவர்கள் “அவர்களை” எதிர்ப்பதும், அவர்கள் “இவர்களை” அழிப்பதும் இனியாவது நிறுத்தப்பட்டு, அப்பாவி மக்கள் நலனும் அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான உண்மையான போராட்டமும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எம்முடைய வேண்டுகோளும்.

   ஆனால், இதற்காக மீண்டும் கூட்டம் சேர்க்கும் அதே வரலாற்றுத் தவறு ஏற்கனவே பிரிந்து கிடக்கும் இந்த சமூகத்துக்கு தேவையற்றது, மக்களை மக்களாக வாழ விடுவதும், உண்மைகளை, நியாயங்களை, அவரவர் தரப்பு சாட்சியங்களை, கொள்கைகளை மக்கள் முன்னால் முன்வைத்து, அவர்களை சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

   அனைவரும், ஆயுத மோகத்தைக் கைவிட்டு, முதலில் மக்களை சுதந்திரமாக வாழ விடவேண்டும், பின்னர் அந்த மக்கள் தமக்கு யார் வேண்டும்? யார் வேண்டாம்? எது வேண்டும்? எது வேண்டாம்? என்று சுதந்திரமாக முடிவெடுக்கட்டும்.

   “பேரினவாதம்” என்று குறிப்பிடப்படும் இலங்கை அரசாங்கம் இதில் தவறினால், அன்று போல் இல்லாது இன்று உலகெல்லாம் வியாபித்திருக்கும் நம் குரல்கள் இருக்கின்றன.

   எதற்கெல்லாமோ தெருவில் இறங்கி, ஆடிப்பாடி, உண்ணாவிரதம் இருந்து, டென்ட் அடித்துக் குடும்பமும் நடத்தும் நம் வெளிநாடு வாழ் மக்கள், நாளை உண்மையான சுதந்திரத்தின் தேவை வரும் போது வீட்டிற்குள் உட்கார்ந்து “மானாட மயிலாடவா” பார்க்கப் போகிறார்கள்?

   மக்களை மக்களாக வாழ விடும் மாற்றம் முதலில் நம்மிடம் வேண்டும், முப்பது வருடங்களுக்கு முன் போன்றில்லை, இப்போது இந்த மக்கள் சக்தியின் பலமே வேறு!

   அதை ஒன்றிணைத்து உலகின் முன் செல்லும் போது, “எது” தடையாக இருக்கிறதோ அதை விலக்கி, நியாயமாக நாங்கள் குரல் எழுப்பினால், நல்லது தானாக நடக்கும்.

   “அதற்கு முதலில் நீங்களும் நாங்களும் தயாராவோம், மற்றவர்கள் தானாகத் தயாராவார்கள் “

    
 2. anniyan

  மே13, 2009 at 1:18 முப

  மகிந்தவை அரியாசனத்தில் ஏற்றியதே புலிகள்தானே ! கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்ட புலிகள் வன்னி மக்களின் வாக்குரிமையை தடுத்து மகிந்தவின் வெற்றிக்கு வழிசமைத்து கொடுத்ததை இன்று எல்லோரும் மறந்து விட்டது தான் வேடிக்கை. புலிகளின் சார்பில் எமில்காந்தன் என்பவர் முல்லைத்தீவில் சுனாமி வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தை பெற்று புலிகளிடம் ஒப்படைத்ததாக தெற்கின் பத்திரிகைகள் ஆதாரத்துடன் எழுதித் தள்ளின. இன்று தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வடக்கின் எந்த பத்திரிக்கையாவது இந்த பணம் கைமாறப்பட்ட விவகாரத்தை தொட்டுப்பெசியதா ? மகிந்தவின் இந்த நகர்விற்கு யார் காரணம்?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: