வண்டிச் சில்லில் அகப்பட்ட பழைய சேலைத் துண்டு போல துப்பாக்கி முனையில் அகப்பட்டுத் தத்தளித்து இழு இழு என இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளின் மரணத்திலும் இன்று “உலக அரசியல்” நடைபெறுவதைப் பார்க்கும் போது “மனிதம்” எனும் வார்த்தைக்கே அர்த்தமிருக்கிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
கோத்தபாயவின் கணக்குப்படி 80 ஆயிரம் , ஐ.நாவின் கணக்குப்படி 2.5 லட்சம், புலிகளின் கணக்குப்படி 5 லட்சம் என்று அவர்களின் கணக்கு விதம் விதமாக விவாதத்துக்குள்ளாகி தொக்கு நிற்கும் போதே, ஒரு பாரிய மண் அணையை உடைத்து 116 ஆயிரம் பேரை அரசாங்க பதிவுப் புத்தகம் பதிந்து கொண்டது.
வாருங்கள் தமிழீழம் வாங்கித்தருகிறோம் என்று அவாகளிடமிருந்த அத்தனையையும் வாங்கிக்கொண்ட பின்னும் கூட “உயிர் இருக்கிறதே” எனும் அளவில் இன்னும் இன்னும் அவர்கள் கண்ணீரைப் படம் பிடித்து அனுதாபம் தேடியாகினும் தம் இருப்பைக் காத்துக்கொள்ளத் துடிக்கும் புலித் தலைமையை சிந்திக்கத் தெரிந்த யாருமே மக்கள் போராட்டத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அதைப்பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை,இன்றைய தேதியில் அவர்கள் கணக்கெல்லாம் எப்படியாவது ஒரு சர்வதேச தலையீடு மூலம் போரை நிறுத்துவது, அதன் மூலம் ஒரு சிறு குரல் கொடுப்பது, அந்தக் குரல் மூலமாக இறுதியாக ஒரு தடவை “மக்களே உங்களுக்காகத்தான் நாம் போராடுகிறோம்” என்று ஒரு ஒப்பாரி வைப்பது, அதைக் கேட்டவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் என்ன ஏது என்று கேட்காமல் கண்ணீர் விட்டு, தெருக்களில் இறங்கி, அட்டகாசங்கள் புரிந்தாவது “மஹிந்தா கொஞ்சம் இறங்கி வா” என்று சர்வதேசத்தை அழுத்தப் பண்ணுவது மட்டுமே.
அது சரி, இதுதான் உங்கள் தேவை என்றால் எதற்காக நீங்கள் போருக்குப் போனீர்கள்? எதற்காக உங்களை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்கிறீர்கள்? உங்கள் இயலாமையை நீங்களாகவே ஒத்துக்கொண்டு மக்களையாவது வெளியேற விடலாமே?
கேள்விகள் எல்லாம் சுத்த அப்பாவித்தனமாக இருக்கிறது அல்லவா? ஆம் அப்பாவி மக்களுக்காக நாங்கள் இதைக்கூடவா கேட்கக்கூடாது?
அன்று கிளிநொச்சி பறிபோன தருவாயில் விடுதலைப் புலிகள் புரிந்த விசைப்பலகை யுத்தத்தில் ஒரு கண்கொள்ளா மனித நேயக் காட்சியைக் காணக்கிடைத்தது,இதுவெல்லாம் வரலாற்றில் பல லட்சம் வருடங்களுக்கு ஒரு முறைதான் நடக்கும்,அதைப் பார்க்கக் கிடைக்காதவர்கள் துரதிஷ்டசாலிகளே !?
தமிழனுக்கு வழிகாட்ட வந்த சிங்களத் தலைவர்களை அல்ல, தமிழ்த் தலைவர்களையே தம் துப்பாக்கிகளின் பசிக்குப் பலி கொடுத்த புலிகள்,எந்த ஒரு புத்திசாலித் தமிழனையும் உலக அரங்கில் வெளியேற விடாமல் தடுத்த அதே புலிகள்,தம் கொள்கைக்கு எதிராக யார்தான் கதைத்தாலும் அவரை ஈவிரக்கமின்றி கொலை செய்யும் புலிகள் இலங்கை இராணுவத்தின் ஷெல் அடிபட்டு “அப்பாவி” மாடுகள் செத்துப் போனதாய் நீலிக் கண்ணீர் வடித்தார்களே அந்தக் கதைதான் இது.
புலிகளின் இணையங்கள் எங்கும் மாடுகளின் புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எங்கும் இறந்து போன மாடுகளின் ஒளிப்படங்கள், வானொலிகள் எங்கும் ஒரே அஹிம்சாவழி இரங்கல்கள், ஐயோ இப்படியொரு கண்கொள்ளாக் காட்சியைக் காண இறந்து போன நம் முன்னோர்களுக்கும் கொடுத்திருக்கவில்லை, இனி வரும் பின்னோருக்கும் கொடுத்து வைத்திருக்கப் போவதில்லை, நாம் தான் அதிஷ்டசாலிகள்!
நீலச் சிலுவைக் காரர்கள் கூட உருகி வழியும் அளவுக்கு அன்று புலிகள் போட்ட அந்த நாடகத்தை இன்றும் எம்மால் மறக்க முடியவில்லை, அதில் மேலதிக இணைப்பாக ஒரு மாதா சிலையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இத்தனை காருண்ய மிக்க மகா கெட்டிக்கார புலிகளால் இன்றளவும், இத்தனை சிறு பகுதிக்குள் முடக்கப்பட்ட பின்னரும் தம் இனத்தின் எதிர்காலம் பற்றிய சிறு கவலை கூட இல்லாதது நாம் செய்த பாவமா? நம் முன்னோர் செய்த பாவமா? கடவுளுக்கே வெளிச்சம்.
இது மக்கள் போராட்டமாக இருந்தால் மக்கள் நலனுக்குப் பிறகே மாற்று நலன்.
ஆனால் இவர்களிடம் இந்த தத்துவங்கள் எல்லாம் எடுபடப் போவதில்லை, அவர்களைப் பொறுத்தவரை தம் நலனுக்கப்பாலே அடுத்தவர் நலன்.
சரி, புலிகள் தான் இப்படியென்றால் அவர்களுக்காக பந்தயங் கட்டிக்கொண்டு தெருக்களில் இறங்கி நின்று டமாரம் அடிக்கும் கூத்தாடிகள் அதைவிடவும் ஒரு படி மேலாக நடந்து கொள்கிறார்கள்.
கடந்த 30 வருட காலமாக பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பணத்தை வைத்துக்கொண்டு புதிதாக ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி,அங்கே இலவச விமானங்கள் மூலம் மக்களை அழைத்துச் சென்று, ஒரு புது நாட்டை உருவாக்கி, வளங்களை உருவாக்கி, பல தலை முறைகளை வாழச் செய்திருக்கலாம்.
நடைமுறையில் இது கூட மிகச் சாத்தியமான ஒன்றாக இருந்திருக்கும்.
அப்படியொன்று நடந்திருந்தால் ஆகக்குறைந்தது விலை மதிக்க முடியாத அப்பாவி மனித உயிர்களாவது மிஞ்சியிருக்கும். எத்தனை பேரைத்தானய்யா பலி கொடுப்பது? இன்னுமா நீங்கள் திருந்துவதில்லை.
பிரபாகரனுக்குப் பணங்கட்டிப் படம் பார்க்க முடியாமல் தவிக்கும் ஒரே காரணத்திற்காக நவீன கமராக்களை வன்னிக்கு அனுப்பி, கட்டாயமாக மக்களையும் பிடித்து வைத்து, ஆமிக்காரனை சீண்டி, அவன் அடிக்கும் ஷெல்லில் நூற்றுக்கணக்கில் மக்களை பலி கொடுத்து, அதன் பின் அதைப் படம் பிடித்து “தேசிய” தொலைக்காட்சிகளில் படங்காட்டி மக்கள் உணர்வுகளைக் கிளறி, கண் முன்னால் இரத்த ஆறு ஓடும் போது கூட அந்த வேதனையில் இருக்கும் மக்களை “பேட்டி” கண்டு நீங்களே சொல்லிக் கொடுக்கும் “உலகத் தகவல்களை” பேசவும் வைத்து, அதையே தலைப்புச் செய்தியும் ஆக்கி, பின்னர் சர்வதேசத்திடம் கூப்பாடு போட்டு, அதுவும் சரி வராமல் போனதும் “சோனியா நாசமாப் போக” என்று சாபம் போட்டு நீங்கள் போடும் காமெடி தர்பாரில் நீங்கள் வேண்டுமானால் ” சுய இன்பம் ” காணலம்.
ஒரு கணம், ஒரே ஒரு கணம் அங்கே இருக்கும் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு, ஒரு புலி ஆதரவாளனேனும் குரல் கொடுக்க முன் வருவதில்லையே அதை யோசித்துப் பார்த்தீர்களா?
யுத்த நிறுத்தம் வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கும் அதே வேளையில் புலிகளுக்கும் – இராணுவத்துக்குமான யுத்தம் முடியும் வரை அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தற்காலிக இடமாற்றமாவது வேண்டும் என்று இரு தரப்பையும் பார்த்து மக்கள் நலன் சார்ந்த ஒரு கருத்தைத் தானும் நீங்கள் முன் வைப்பதில்லையே அதையாவது சிந்தித்தீர்களா?
இப்போது அங்கே 15 – 20 ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள், அவர்கள் தவிர இதுவரை வெளியேறிய மக்கள் லட்சக் கணக்கைத் தாண்டிவிட்டார்கள், இம்மக்கள் எல்லாம் இந்த வறிய தேசத்தில் வரையறுத்த வசதிகளுடன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அரை குறை வாழ்க்கை வாழ்கிறார்களே அதைப்பற்றி ஒரு குரல் கொடுக்கிறீர்களா?
ஏதாவது ஒரு முகாமுக்குள் அது நடந்தது,இது நடந்தது என்று கசாமுசா கிசுகிசுக்களை எழுதித்தள்ளும் நீங்கள், முழங்கித் தள்ளும் உங்கள் குரல்கள், இன்று வரை உலகில் எந்த மூலையிலாவது இடம் பெயர்ந்து வந்திருக்கும் மக்களுக்காக ஒரு உதவிக் கரம் கொடுக்க வென ஒரு சிறு அறைகூவலாவது விடுகின்றனவா?
உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்களை நீங்கள் முற்றாகத் துண்டித்து விட்டீர்கள், வளையமாக உங்கள் தலைவனைக் காப்பாற்றப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் நீங்கள் உண்மையில் அழவில்லை, நாளை அவர்களும் தப்பிச் செல்லும் போது அல்லது விடுவிக்கப்படும் போது துண்டிக்கப்பட்ட சமுதாயமாக மாறிவிடப்போகிறார்கள்,இப்படியே இறுதியில் நீங்களும் களைத்துப்போய் புலிகளைத் துண்டித்து விடுவீர்கள், இல்லை புலிகள் உங்களையும் துண்டித்து விடுவார்கள்.
நேற்றைய ஷெல்லில் இறந்து துடித்தது உங்கள் உறவென்றால், சில கிலோ மீற்றர் தொலைவில் அந்த முகாம்களில் தவித்துக்கொண்டிருப்பதும் உங்கள் உறவுகள் தான், நீங்கள் குரல் கொடுப்பதென்றால் எல்லோருக்கும் பொதுவாகக் குரல் எழுப்ப வேண்டும், ஆனால் அவ்வாறு நீங்கள் செய்வதில்லை.
எனவே, உங்கள் குரல்களும் மக்கள் நலன் சார்ந்த குரல்களாக சர்வதேச அரங்கில் எடுபடுவதில்லை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று உங்கள் பாணியிலேயே உங்களுக்கு சில வாக்குறுதிகளைத் தந்து விட்டு மஹிந்தவின் சிந்தனை வெற்றி பெறும் வரை தான் சர்வதேசமும் காத்திருக்கிறது.
கூட்டிக் கழித்துப்பார்த்தால், நீங்கள் யாரையும் யாருடைய உறவையும் து்ண்டிக்கவில்லை, நீங்கள் தான் மக்கள் மனதுகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தொப்புள் கொடி உறவுகள் என்ற பதம் நீங்கி, நீங்கள் தொலை தூர அனாதைகளாக மாறியிருக்கிறீர்கள்.
தப்பி வந்து சரணாகதியடைந்த தம் உறவினர்களை கவனிக்க அலை மோதித் திரியும் எத்தனை பேர் உங்கள் தெருக்களியாட்டங்களில் இணைந்து கொள்கிறார்கள்? அவர்களுக்கு இப்போதாவது “எல்லாம்” புரிகிறது,உங்களுக்குப் புரியும் வரை காத்திருக்கும் தேவை அவர்களுக்கு இல்லை.
மக்கள் மீது அக்கறை கொண்ட அமைப்புகள் உடனடியாகக் காரியத்தில் இறங்கியிருக்கின்ற எதார்த்தையும் கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, அவர்களைப் பற்றியும் குறை கூறுகிறீர்கள்.
சிங்களத்தின் அரசாங்கம் சாப்பாடு அனுப்பவில்லை என்று மடிப்பிச்சை கேட்டு அலறும் உங்களை விட தாமாக வலிந்து சென்று தம் உறவுகளுக்கு உதவும் ஒவ்வொரு மனிதனும் மேலானவன்,மிக மிக உயர்வான மனம் படைத்தவன்.
எதிராக ஒருவன் கதைத்துவிட்டாலே அவனைத் “துரோகி” என்று பட்டம் சூட்டி அழகு பார்க்கும் உங்களுக்கு, எந்த சந்தர்ப்பத்தில் மனிதனை மனிதனாகக் காண்பது, மனித உயிர்களுக்கு எவ்வாறு மதிப்பளிப்பது என்ற அடிப்படையே தெரிவதில்லை, அதற்குள் உங்கள் தெருக் கூத்துக்களை மேலை நாட்டவர் ஏற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் விலையுயர்ந்த கமராக்களினால் காட்டப்படும் ஒளிப்படங்களைக் கண்டு தமிழகமே தலை கீழாக வேண்டும், ஐ.நா. அலற வேண்டும், யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், உங்கள் தலைவன் இரு விரல் உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்ட வேண்டும், புலிக்கொடி மேல் புலியின் உலங்கு வானூர்திகள் மலர் தூவ வேண்டும், முதற் பெண்மணி மதிவதனியின் கரங்களால் பாற்சோறு உண்ண வேண்டும், இதை இந்தியா பக்கத்தில் இருந்து பார்த்து சிரித்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், தப்பித் தவறியேனும் நீங்கள் எந்த ஒரு மனிதனையும் மனிதனாக மதிக்கக் கூடாது, மந்தைகள் போன்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உங்கள் கோரத் துப்பாக்கியின் தோட்டாவிலிருந்து தப்பிய அந்த மக்கள் நலனைப் பற்றி நினைக்கவே கூடாது, அப்படியெல்லாம் நீங்கள் செய்து விட்டால் உங்கள் தலைவனுக்கும், அவன் சித்தார்ந்தத்துக்கும் துரோகமிழைத்ததாகிவிடும்.
உங்களைப் பொறுத்தவரையில் படங்காட்டிப் பிச்சை கேட்கும் உங்கள் கோரப்பிடிகளை விட்டு இவர்கள் விலகி விட்டார்கள், எனவே உங்கள் பார்வையில் அவர்கள் மக்களும் இல்லை மாக்களும் இல்லை!
rajani
மே12, 2009 at 11:55 பிப
மடைதிறந்த வெள்ளம் போல் கொட்டுகிறீர்களே!
இந்த அறிவு எங்கே மறைந்திருந்தது இவ்வளவு நாளும்?
மடமைதனையழிப்பதற்காய் மானிடத்தில் மறுபடியும்
பிறந்து வந்தீரோ!
அறிவுடையார் அனைவரும் உங்கள் பின்னால்
அணிதிரண்டு வருவார்கள் உங்கள்
அறிவை அறிந்துகொள்வதற்காய்…
அனைத்துங்கள் ஆக்கங்களும் அதிவுயர்வானவை
ஆச்சரியம்! ஆச்சரியம்!
ஆகட்டும், ஆகட்டும் உங்கள் ஆக்கங்கள் இன்னும், இன்னும் அதிவுயர்வானவையாகட்டும்.
நன்றி. றயனி
swiss.
arivudan
மே13, 2009 at 7:40 முப
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி றயனி, நாங்கள்,நீங்கள் உட்பட அனைவரும் சுயமாக சிநதித்து நியாயங்களை,உண்மைகளைப் புரிந்து, அதன் மூலம் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் ஒரு நல் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா!
irai adimai
மே13, 2009 at 8:27 முப
valai thalangalil thinam thorum poi moottaiyai avizththu vidum poiyarkalukku sariyaana savukkadi