தி.மு.க,அ.தி.மு.க,தே.மு.தி.க,ம.தி.மு.க,பா.ம.க,ல.தி.மு.க,இ.க,இ.ம.க, பா.ஜ.க என்று பல “க” கள் நடிக்கும் “தேர்தல் 2009” வெள்ளோட்டம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
8 கோடி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கையிலெடுப்பதை விடுத்து அவர்கள் சிந்தனைகளை எதைக்கொண்டாவது திசை திருப்பி நாற்காலியில் இன்னொரு நாலு வருடம் இருக்காமல் ஓய்வதில்லை என்ற பொது உடன்பாடு அனைத்துக் கட்சிகளிடமும் இருக்கிறது.
ஒன்றுமே இல்லாவிட்டால் ரஜினி காந்தின் பன்ச் டயலாக் ஒன்றை வைத்தாவது தம் அரசியல் பலப் பரீட்சையில் மக்களை மடையர்களாக்கிவிடலாம், எதற்குமே பஞ்சமில்லை எனவே இந்தத் தடவை ஈழ பலூனை ஊதிப் பார்த்த கணக்கும் அரசியல் கணக்கில் செலவு வைக்கப்படுகிறது.
எத்தனை தடவை இவர்கள் என்னதான் செய்தாலும் பாவம் அந்த அப்பாவி மக்கள் வேறு வழியே இல்லாமல் ஏதாவது ஒரு “க” வை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நடைமுறைக்கு ஒவ்வாத அறிக்கைகள்,எட்டாக் கனி பற்றிய வீராவேசங்கள்,சாத்தியமே இல்லாத சாதனைப் பட்டியல்கள் என்று மக்கள் நலனை புறந்தள்ளி எப்போதுமே தம் நாற்காலி நலனைப் பற்றி அக்கறையாய் அலையும் தமிழக அரசியலை மாற்றிப்போடுவதை விட தம்மை மாற்றிக்கொண்டு அதில் வாழப்பழகிவிட்டார்கள் தமிழக மக்கள்.
தனித்து நின்றால் வாங்கும் அடி பலமாக இருந்துவிடும் என்று நினைக்காவிட்டாலும், கூடி நின்று கும்பலோடு மக்கள் அபிப்பிராய பேதங்களை சமப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு பெரிய கட்சியும் கூட்டணி அமைத்துக்கொள்கிறது.
கூட்டணி அமைப்பதிலும்,உடைப்பதிலும் எந்தவொரு கட்சியும் இன்னொரு கட்சிக்கு சளைத்தவர்கள் இல்லை.
இப்படி இவர்கள் எந்தக் கூட்டணி அமைத்தாலும் இந்தத் தடவை க.கோ.ச கூட்டணிக்கே நிரந்தர வெற்றி !
தமிழ்நாடு சந்தித்த பல தேர்தல்களிலிருந்து இந்தத் தேர்தல் கொஞ்சம் மாறுபட்ட கோணத்தை அடைகிறது,அதற்குக் காரணம் இன்றைய இலங்கையின் போர்ச்சூழல்.
கிட்டத்தட்ட ஒரு சென்டிமென்ட் தேர்தலாகவும் இதைப் பார்க்கலாம், தேர்தலை முடிவு செய்யும் முன்னோடிக் காரணியாக இது இருக்கப்போவதில்லை என்றாலும் அனுதாப மாற்றங்களில் இதன் பங்கு பலமாக இருக்கலாம் என்கின்ற பயம் அத்தனை கட்சிகளுக்கும் இருக்கிறது.
“இலங்கையில் ஈழம் அமைக்க உதவுவேன்” என்று ஜெயலலிதா ஒரு சிறு பல்டி அடித்துப்பார்த்தார், சொன்னதையே திரும்பத்திரும்ப அவர் சொல்வதும் அதையே ஒவ்வொரு தேர்தலிலும் வெளியிடுவதுமாக சலித்துப் போயிருந்த தமிழக ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி விட அம்மாவும் உஷாராகி “இராணுவத்தை அனுப்பியாவது ஈழத்தைப் பெற்றுத்தருவேன்” என்றார்.
தமிழக ஊடகங்களே திணறிக்கொண்டிருக்க, தவிக்கும் முயலை அலாக்காக தூக்குவதில் வல்லவர்களான விடுதலைப் புலிகள் தம் இளையோர்,முதியோர்,பருவமடைந்தோர்,பலான பேர்வழிகள் என்று எல்லோர் பெயரிலும் அம்மாவுக்கு “நன்றி” தெரிவித்து, நீங்கள் தான் “தமிழ்த் தாய்” என்று துதியும் பாட அம்மா இன்னும் உஷாராகி, தான் செய்த காமெடியை திடமாகப் பற்றிக்கொண்டார்.
யார் வேண்டுமானாலும் “தமிழ்த் தாயாக” இருக்கட்டும், ஆனால் “தமிழின் தகப்பனாக, தமிழர்களின் தலைவனாக” நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கு கலைஞர் அமைதியாக இருந்து இறுதி நேரத்தில் ” தமிழ் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்ததற்காகவே எனக்கு முதல்வராய் இருக்கத் தகுதியில்லை” என்று கூறிய இந்த கவர்ச்சி நடிகையா ஈழம் பெற்றுத்தரப்போகிறார் என்று மக்கள் சிந்திக்க ஒரு ஏவுகணையை ஏவி விட்டிருக்கிறார்.
இவர்கள் இருவரையும் புறந்தள்ளிவிட்டு, உண்மையிலேயே ஈழத் தமிழர்களின் மனதில் அரசியலுக்கு வர முன்னரும் ஒரு நல்லபிப்பிராயத்துடன்,நல்ல இடமும் பெற்றிருந்த விஜயகாந்தோ அதையும் விட அமைதியாகி இன்னும் சொல்லப்போனால் புலி சார்பு நிலையை முற்றாகத் தவிர்த்து மக்கள் நலனை மட்டும் பேசிக்கொள்கிறார்.
பெருங்கட்சிகள் ஈழ பலூனை ஊதியதைக் கண்டு பீதியடைந்த சரத்குமார் முதல் சிறு கட்சிகளும், ஈழ ஆதரவாளர்களின் சிறுத்தையாக இருந்து பின்னர் அவர்களிடமே பதுங்கிப் பாய்ந்த விடுதலை சிறுத்தை திருமாவளவன்,நம்ம முன்னாள் ராஜேந்தரும் கூட கட்டடங்கா தேர்தல் பீதியில் இசை வெளியீடும் அரங்கேற்றிய நாடகங்களை இனிதே கண்டு களித்துவிட்டோம்.
இருந்தாலும் க.கோ.ச கூட்டணிக்கே வெற்றி !
தமிழகத்தின் எதார்த்த சூழ்நிலையைப் பொறுத்த வரை ஈழ விடயம் பொது மக்களை குழப்பும் ஒரு விடயம் மாத்திரமே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதையாவது கூறி மக்களை குழப்புவதனால் ஈழப் பிரச்சினை அடுத்த நாட்டுப் பிரச்சினை என்று கை கழுவிச் செல்லும் நிலைதான் மேலோங்கி வருகிறது.
இவர்களுக்கு சற்றும் குறையாமல் அவ்வப்போது சில நக்கீரர்கள் விடுதலைப் புலிகளின் பிரச்சார சக்தியை கொளுத்தி விடுவதும் பின்னர் திடீரென “நடு நிலை” நாயகங்களாக மாறுவதும், ஆ.வி – ஜு.விக்கள் கனவுக் கட்டுரைகள் மூலம் “இந்தப் படை தோற்காது” என்று மறைமுகமான உளவியல் தாக்கங்களை நடத்துவதும், “மலர்கள்” எல்லாம் இராணுவ மந்திரம் ஓதுவதுமாக தமிழக மக்களை எல்லோருமாக சேர்ந்து அடியோடு குழப்பி வைத்திருக்கிறார்கள்.
அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான், மின்வெட்டு, வருமானப் பற்றாக்குறை, விலைவாசி என்று அத்தனை அடிப்படை ஆதார சிக்கல்களுக்கும் வெளியில் அனுதாபக் குழப்பத்தையும் மக்களுக்கு உண்டு பண்ணியதன் மூலம் ஈழ பலூனை ஊசி முனையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இனித் திடீர் என்று பிரபாகரனின் உல்லாச வாழ்க்கை ( உபயம்:http://defence.lk/new.asp?fname=20090506_10 ) சூரிய மீடியாக்களில் வலம் வந்து மக்கள் உள்ளங்களை வெட்டித் துண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் யார் எப்படி என்னதான் கூத்தாடினாலும் க.கோ.ச கூட்டணிக்கே வெற்றி !
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்குரிய உண்மையான பிரச்சினை மக்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது மாத்திரமே. உண்மை என்ன? தமிழ் மக்களின் உண்மையான நிலைமை என்ன என்பதெல்லாம் அவர்கள் நன்றாக அறிந்த விடயங்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நிலைமை அவ்வாறு இல்லை, அங்கே அதிகார அரசியலுக்கும் ஆயுத வெறியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு போர் இருக்கிறது, அதை மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் உண்மையான ஆறு சோடிக் கண்கள் இருக்கிறது.
அந்தக் கண்களுக்கு அனைத்து திசையிலும் பார்க்கும் சக்தி இருக்கிறது, அதன் பின்னால் ஒரு அரச இயந்திரம் இருக்கிறது, பல்லாயிரக்கணக்கான மக்கள் துணை இருக்கிறது, நோக்கம் இருக்கிறது, திட்டம் இருக்கிறது, அனுபவம் இருக்கிறது, ஆளுமையும் இருக்கிறது.
எனவே, தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் ஈழப் போரின் இன்றைய நிலையில் கருணா, கோத்தபாயா,சரத் பொன்சேகாவின் கூட்டணி தான் வெல்லும் நிலை வெளிச்சமாக இருக்கிறது.