RSS

ஈழக்குதிரையும் .. இறுதிப்பந்தயமும்

08 மே

உங்கள் பேரக்குழந்தைகள் தற்செயலாக “தாத்தா, உலகிலேயே தம் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களை மனித வெடிகுண்டு வைத்து கொன்றவர்கள் இருக்கிறார்களா” என்று கேட்டால், தாமதமே இல்லாமல் உங்கள் உதடுகள் சொல்லாவிட்டாலும் மனது சொல்லும் பதில் என்ன? “ஆம், விடுதலைப்புலிகள் என்று ஒரு அமைப்பினர் இருந்தார்கள்” என்பது தானே.

ஆம், அப்படியே ஆகட்டும், அவர்கள் இருந்தார்கள் என்று மாத்திரமே சரித்திரம் சொல்லட்டும், அப்போதும் அவர்கள் இருந்தால் கேள்வி கேட்க உங்கள் பேரக்குழந்தைகளும் மிஞ்சப்போவதில்லை.

ஆரம்பமே புலிகள் மீது வெறித்தனமாக இருக்கிறதே என்று உணர்ச்சிவசப்படாதீர்கள், உண்மைகள் எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்.

குதிரைப் பந்தயங்களை ஆகக்குறைந்தது தொலைக்காட்சியிலாவது பார்த்திருப்பீர்கள், பல குதிரைகள் ஓடும், அந்தக் குதிரைகள் தான் வெல்லும் என்று அதன் மேல் பணத்தைக் கட்டியவர்கள் உணர்ச்சி ததும்ப அதன் ஓட்டத்தைப் பார்ப்பதும், குதிரையின் கால் சறுக்கினால் தன் காலே சறுக்கியது போன்று பாவனை செய்வதுமாக அதில் ஒன்றிப் போய்விடுவான்.

குதிரைப் பந்தயத்தை நடத்தும் பிரபுக்களோ இந்த அப்பாவிகள் பணங்கட்டிப் பரிதாபப் படுவதை பார்த்து மகிழ்ந்தபடி விஸ்கியோ,பிராண்டியோ விழுங்கிவிட்டு வருமானத்தை எண்ணச் சென்றுவிடுவார்கள்.

அதே ஏழாம் இலக்கக் குதிரைக்கு ஒருவன் பத்து ரூபாய் கட்டியிருப்பான், அருகில் இருப்பவன் ஆயிரம் கூட பந்தயம் கட்டியிருப்பான், இது அவர்கள் அந்தக் குதிரையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அவரவர் உணர்வுகள் வழங்கும் தகவல்களின் தாக்கங்களுமாகும்.

ஆனால் அத்தனை குதிரைப் பந்தயக்காரர்களிடமும் ஒரு பொதுக் குணம் இருக்கும், அதுதான் வென்றாலும் தோற்றாலும் அன்று அந்த வேளை கவலைப்படுவதோடு சரி, மீண்டும் நாளை அதே உற்சாகத்தில் எப்படியாவது பணம் பிரட்டி பந்தயம் கட்டுவதுதான் இறுதி நோக்கமாக இருக்கும்.

பந்தயம் கட்டுவதுதான் அவன் நோக்கமாக இருந்தாலும், அவனுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மைகளை அவன் அறிய முற்படுவதில்லை.

பந்தயப்பணத்துக்காக அவன் என்னவெல்லாம் செய்தான், அல்லது எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான் என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை, மாறாக அந்த “உண்மைகளை” மறைத்து தன் நோக்கத்திற்காக “இழப்பை”க் கூட மழுப்பிக்கொண்டே வாழப் பழகிவிட்டான்.

இந்த நிலைதான் ஈழத்தில் வாழும் தமிழர் வலியை உணர்ந்து கொள்ள மறுக்கும் வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் நிலையும்.

தமிழ் ஈழம் எனும் குதிரை ஒவ்வொரு தமிழனதும், தமிழ் மொழியைப் பேசியவனதும் கனவாக,உணர்வாக இருந்த காலத்திலேயே இந்தப் பந்தயப் பிரபுக்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

அப்பாவி மக்கள் அதை அறிந்து கொள்ள, ஆகக்குறைந்தது இலங்கை-இந்திய ஒப்பந்தம் வரையாவது காத்திருக்க வேண்டியிருந்த கசப்பான உண்மையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது.

உரிமை வேண்டிப்புறப்பட்ட ஒவ்வொரு இயக்கமும் தம் பெயரில் தமிழீழத்தை வைத்திருந்தது, அவ்வாறு புறப்பட்ட ஒவ்வொரு இயக்கத்திற்கும் அதே கொள்கை இருந்தது, ஒரு சில இயக்கங்களின் தலைமைகள் துரதிஷ்டவசமாக சிந்தனைத் தெளிவும் கல்வியறிவும் கொண்டிருந்தன.

மொத்தத்தில் அன்று ஆயுதம் ஏந்திய ஒவ்வொரு போராளியும் மக்கள் வீரனாகவே இருந்தான்.

அப்படிப்பட்ட ஒரு வரலாற்றை அழித்தொழித்துவிட்டு, தான் மட்டுமே தனியாக இருக்க வேண்டும் என்று புலி புறப்பட்ட போது அப்பாவி மக்கள் குழம்பிப் போனார்கள், குழம்பிப் போன மக்கள் சுதாரித்துக்கொள்ள முன்பாக அடக்குமுறை ஆயுதத்தை கன கச்சிதமாகப் பாவித்த புலிகள், ஆயுத முனையில் அபிலாஷைகளையும் சேர்த்தே அடக்கி வைத்தார்கள் என்ற உண்மையும் கசக்கத்தான் போகிறது.

ஆயுதம் தூக்கிய ஒவ்வொரு போராளியும் யாராவது ஒரு குடும்பத்தின் உறுப்பினரே, அவனுக்கும குடும்பம் இருந்தது, உற்றார் உறவினர்கள் இருந்தார்கள், அயலவர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தூரத்து உறவினர்கள் என்று நம் கலாச்சார உறவுச் சங்கிலி அவனுக்கும் இருந்தது.

ஆனால் அவன் புலியால் “போட்டுத்தள்ளப்பட்ட” ஒரே காரணத்திற்காக அவன் உறவுச் சங்கிலி வேறு விதமான ஆளுகைக்கு மாற்றப்பட்டது. “போட்டுத் தள்ளியதும்” அவன் துரோகியாக்கப்பட்டான், அவன் துரோகியென்றால் அவன் சார்ந்த குடும்பமும் துரோகிகளானார்கள், ஆகக்குறைந்தது யாராவது புலியிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள் என்று பயந்தாவது அவன் குடும்பத்தை , அதே கலாச்சார சங்கிலி துண்டித்துக்கொள்கிறது.

எங்கே அவர்களுடன் தொடர்பிருந்தால் நம் உயிருக்கும் ஆபத்தோ என்று பயந்து, அந்தப் பயத்தை இவர்களுக்கு வழங்கிய அந்த ஆயுத மோகனர்களுக்கு அடிபணிந்து, வீறு கொண்டு எழ முடியாமல் முடங்கிப் போய், தன் அபிலாஷைகளையும் தொலைத்த ஒரு அடிமை வாழ்க்கையைப் பழகிக்கொள்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மக்கள் அடிமை நிலையில் தான் புலிகளின் ஈழக்குதிரை சர்வதேச பந்தயத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தது.

உண்மைகளைப் பேசவே பயம் கொண்ட ஒரு சமுதாயம் வெளிநாடுகளின் உருவாக முன்னராகவே அங்கே புலிகள் நிலையாக இருந்து இவர்களை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்தந்த நாட்டில் அவர்கள் காலடி வைக்க முதல் அவர் குடும்ப உறுப்பினர்கள் விபரங்கள் சகிதம் காத்திருந்த புலிகள் வந்ததும், வராததும் முதல் வேலையாக அவர்கள் உழைப்பில் ஒரு பங்கைக் கேட்டு விண்ணப்பித்து விடுவார்கள், அது நாளடைவில் அவன் ஈழக்குதிரை மீது கட்டும் பந்தயமாக மாறிவிடுகிறது.

நாட்டில் இருக்கும் குடும்பத்தாரை நினைத்து அழாமல் கொடுத்தவன் நாளடைவில் தன் சொந்த பந்தங்களை வெளியேற்றிக் கொண்டதும் கிள்ளிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறான்.

ஆனாலும்,  இவன்தான் பழைய பந்தயக் காரனே, இவன் கையும் குரலும் ஓங்கித்தான் போகிறது, தான் இதுவரை கட்டிய பந்தயத்திற்கு பிரபாகரனின் ஈழக்குதிரை எப்படி ஓடுகிறது என்று பார்க்க ஆசை ஆசையாக இருக்கிறான்.

இதை நன்றாக தெரிந்த புலிகளும் இவனை குஷிப்படுத்த அடிக்கடி வைகோவை பேச வைப்பார்கள், இறக்கும் வரை பாலசிங்கத்தை வரையறையில்லாமல் உளற வைப்பார்கள், சினிமா ரசிகர்கள் போல இவர்களும் தம் உணர்வுகளை இழந்து, இப்போது வேடிக்கை பார்க்க வரும் பந்தயக்காரர்களாக மட்டுமே வர ஆரம்பிக்கிறார்கள்.

விடுதலைப் போருக்காகப் புறப்பட்ட ஒவ்வொரு போராளிக்கும் சோறும்,நீரும் கொடுத்த அதே கைகளை நாளடைவில் பாலசிங்கத்தின் கட்டுக்கடங்கா கெட்ட வார்த்தைகளுக்கு விசிலடிக்கப் பழக்கினார்கள். இளைஞர்களின் உணர்வுகளை வேறு திசைகளில் மாற்றி அவர்களை கொடூரமான ரவுடிகளாக்கி அழகு பார்த்தார்கள்.

எந்தத் தமிழன் வர்த்தகத்தில் முன்னேறினாலும் அதிலும் பங்கைக் கேட்டார்கள், மறுப்பவர்களை ஈழக்குதிரை மேல் பந்தயம் கட்ட நிர்ப்பந்தித்தார்கள்.

இப்படி ஈழக்குதிரை மேல் பந்தயங் கட்டி வான வேடிக்கை பார்த்து மகிழ்ந்த இந்த பந்தயக்காரர்களுக்குத்தான் பொறுமை,உணர்வெல்லாம் செத்துப் போய் மிருகத்தனம், மனித விரோதம் தலையெடுக்க ஆரம்பித்தது, இன்று அது மேலை நாடுகளில் பிற நாட்டுத் தூதரகங்கள் மீது கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.

லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் இடங்களில் எல்லாம் புலிகளின் இந்த இறுதிக்கிரியைகளுக்கு வெறும் நூற்றுக்கணக்கில்தான் ஆள் சேர்க்க முடிகிறது என்பதே உணர்வாளர்களுக்கும் பந்தயக்காரர்களுக்கும் இடையில் அதிகரித்திருக்கும் இடைவெளியை தெளிவாகக் காட்டுகிறது.

இருந்தாலும் இவர்கள் ஓயப்போவதில்லை, எனவே இப்போது ஈழக்குதிரை மீதான இறுதிப் பந்தயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தத் தடவை வரலாறு மாற்றியெழுதப்படுகிறது, வழக்கத்திற்கு மாறாக அது இம்முறை ஜெயலலிதாவின் முதுகில் சவாரிக்கு விடப்பட்டிருக்கிறது.

தி.மு.க – அ.தி.மு.க இடையிலான அரசியல் போராட்டத்தில் இந்தக் குதிரை எப்போதுமே வரையறுக்கப்பட்ட பாவனையில் இருந்தாலும், இந்தத் தடவை “அம்மா” தமிழர்களின் உணர்ச்சி நரம்பை கிள்ளிப் பார்க்கிறார்.

இறுதி மூச்சுக்காக தத்தளிக்கும் புலிக்கூட்டமும் இதுதான் சந்தர்ப்பம் என்று பாய்ந்து இதைப் பற்றிக்கொண்டுள்ளது.

40 தொகுதிகளையும் எனக்கே தாருங்கள், இராணுவத்தை அனுப்பி ஈழத்தை அமைப்பேன் என்று “அம்மா” சொல்கிறார்.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளோ “அம்மா” வெல்லா விடின் உலகத் தமிழர்கள் தனி ஈழக் கோரிக்கையை நிராகரித்ததாகிவிடும், எனவே “அம்மாவை” ஆதரியுங்கள் என்று இந்தியாவில் வாக்குரிமை இல்லாத மக்களிடம் “புரட்சிகரமான” பரப்புரைகளை செய்கிறார்கள்.

ஜெயா டிவி இந்த நிலைக்கு இறங்குமா? என்று தெரியவில்லை, ஆனால் இதுதான் சந்தர்ப்பம், உங்கள் சந்தா அட்டைகளை இப்போது விற்றுப்பாருங்கள், கொஞ்சம் அதிக இலாபம் பார்க்கலாம்.

தமிழ் ஈழம் என்பது ஈழத் தமிழருக்காக என்ற நிலை மாறி, அது தமிழகத் தமிழருக்காக என்பது போன்ற இந்த போலிப் பிரச்சாரம் எதை அடையுமோ இல்லையோ, மறுபடியும் புலியின் அரசியல் வங்குரோத்தை நிச்சயம் நிரூபிக்கும்.

ரணிலை தோற்கடிப்பதற்காக வாக்காளர்களை ஆயுத முனையில் தேர்தலை புறக்கணிக்க வைத்து, மகிந்தவை அரசாள வைத்து அழகு பார்த்த புலிகளின் அதே அரசியல் வங்குரோத்து அத்தியாயம், கலைஞரை தோற்கடித்து தம் வெளிப்படை எதிரியான ஜெயலலிதாவின் கால்களை நக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த அரசியல் விளையாட்டில், புலிகள் மீண்டும் ஒரு விடயத்தை பந்தயக்காரர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். ” எங்கள் இருப்புதான் இங்கே முக்கியம் , மக்கள் எப்போதுமே இரண்டாம் பட்சம் ” என்பதுதான் அது.

இந்த நேரமளவில் பந்தயக்காரர்களின் வணங்கா மண் பணமெல்லாம் தமிழகத்தை அடைந்திருக்கும், ஜெயலலிதாவின் தேர்தல் வேலைகளுக்கெல்லாம் அதிக நிதி உருள ஆரம்பித்திருக்கும், 40 தொகுதியிலும் அ.தி.மு.க வெல்ல வேண்டும் என்று புலிகள் பாடாய் படப்போகிறார்கள்.

நாற்பதில் ஒரு தொகுதியில் அவர் தோற்றாலும், பழைய படி “அம்மா” அறிக்கை அரசியாக மாறிவிட, கலைஞர் அதைப்பிடித்து ஐந்து வருடம் திரைக் கதை எழுதவும் ஆரம்பிப்பார்.

திரும்பவும் இந்த நொண்டிக்குதிரை பந்தயக்காரர்களின் கால்களில் விழும் தேவை வரும்.

ஆனால், அது வரை எஞ்சியிருக்கும் 4 கி.மீற்றர்கள் தாக்குப்பிடிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தேர்தல் நாள் இலங்கைக் களங்களில் பல மாற்றங்கள் நடக்கப்போவதும் எதிர்பார்க்கப்படுகிறது, தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வரும் வேளை ஈழத்திலிருந்தும் சில செய்திகள் அனல் பறக்க வரலாம்.

அப்போது இந்த ஈழக்குதிரை மாயமாகிப் போயிருந்தால் ஜெயலலிதாவுக்கே அத்தனையும் இலாபம், இல்லாவிட்டாலும் எதார்த்த அரசியலில் மீண்டும் “அம்மாவுக்கே” இலாபம்.

யாரை நண்பன் என்பது? யாரை எதிரியென்பது? என்று கூட அளவிட முடியாமல் தவிக்கும் இந்த ஈழக்குதிரையின் இறுதிப் பந்தயத்தில் உருளப்போகும் பவுண்கள்,டாலர்கள்,யுரோக்கள் மீண்டும் ஒரு “சாட்டையடி” யை சந்திக்கும் நாளில், இப்போது நூறிலாவது சேர்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்கள, பத்தில் குறைந்து போவார்கள், எதிர்வரும் காலங்களில் அது புலிப்பணத்தில் குளிர்காயும் “அறிவாளிகளின்” கனவோடு மாத்திரம் வரையறுக்கப்பட்டும் விடும்.

புலியின் பிடியிலிருந்து தப்பி வந்து, அரசின் மிகக்குறைந்த வசதிகளுடனான முகாம்களில் தங்கியிருக்கும் மக்களே கேட்காத இந்த தனித் தமிழ் ஈழத்தை, நடிகை ஜெயலலிதா பெற்றுத்தரப் போகிறார் எனவே அவர் சொல்லும் “அந்த” ஈழக்குதிரைக்கு “இவர்கள்” சொல்லும் இறதிப்பந்தயத்தைக் கட்ட ஓடிச்செல்லுங்கள்.

ஓட முன்னர், இதை விட ” எம் மக்களிடமே, அவர்கள் காலடியிலேயே நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு, நாளைய உதயத்தில் நம் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்கலாம்” என்று அறிவுரை கேட்பதும், அதன்படி செயற்படுவதும் நல்லதா,கெட்டதா என்றும் சிந்தித்துவிட்டு ஓடுங்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: