இன்னும் அடங்கவில்லை, அறிந்துகொள்ள அவர் துணியவும் இல்லை!
சந்தேகமே வேண்டாம் அதைப்பற்றித்தான் பேசப்போகிறேன், ஈழம் – இலங்கை என்று பதத்திற்கு இன்னுமொரு ஒத்த சொல்.
அதைத் தமிழ் ஈழம் என்று தனியாகப் பிரித்து.. ஆடி அடங்கி ..வியாபித்து.. விரிவடைந்து..விழலுக்கு வீணாக்கிய கனவாகிப் போன நிலையில் .. அவர்கள் இன்னும் தான் அறியவில்லை !
தமிழன் என்ற உணர்ச்சியூட்டல் ஆயுதத்தின் மேல் வைத்திருநு்த கடைசி நம்பிக்கையும் வீணாகிப் போன நிலையில் அடுத்து … ? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சூடான ஒப்பாரிகள் உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இது இறுதி நேர வான வேடிக்கை , ஒளிரும் வரை உயிருள்ள ஒரு அற்ப நம்பிக்கை மாத்திரமே.
அது கூடத் தெரியாமலா இந்த இனம் தெருவில் இறங்கியிருக்கிறது ? தெரியும் ஆனால் தெரிந்தது போன்று காட்டக்கூடாது, காட்டினால் நம் மானம், உணர்வுகள் என்னாவது? அவை உறங்கிப்போனால் கூட கெளரவம் என்னாவது? அடுத்தவன் போகிறான் நானும் போகிறேன் அவன் செய்கிறான் நானும் செய்கிறேன் வென்றாலும் தோற்றாலும் இறுதிக்கிரியைகளை நான் சரிவரச் செய்துவிட்டேன் என்று சுய இன்பம் காணத்தான் போகிறானா?
அறவழிப் போராட்டத்தின் மேல் நம் தமிழனுக்கு வந்திருக்கும் நம்பிக்கையைப் பாராட்டித்தான் ஆக வேண்டும், ஆனால் பானையில் இல்லாமல் அகப்பையில் எப்படி!??
எதற்காக ஒப்பாரி வைக்கிறோம் என்ற தெளிவு நமக்குத்தான் இல்லை என்பதற்காக அதைக் கேட்பவனுக்கும் இல்லை என்று நினைப்பது ஏகத்துவக் கொள்கை, அதை விசுவாசிகள் தொடர்வதில் தப்பில்லை ஆனால் அப்பாவிகளும் மாட்டிக்கொள்கிறார்கள், அவர்கள் இன்னும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.
“இந்த உலகத்தில் யாருக்குமே எங்களைப் பற்றிக் கவலை இல்லையா?” என்று கேட்கிறார்கள்.
இவர்கள் கேட்கும் “எங்கள்” அவன் இரத்த சம்பந்தங்களைப் பற்றியது,அவன் சமூகம் பசியால்,பட்டினியால் வாடி உயிரைக் கையில் பிடித்து வந்து சேர்ந்திருக்கும் நிலை பற்றியது ஆனால் அதை அவன் எதிர்பார்க்கும் இடம்தான் தவறானது.
நீ கலந்து கொண்ட ஒப்பாரிகள் எதுவும் உன் நோக்கத்திற்காக முன்வைக்கப்படவில்லை, அவை வைக்கப்படும் காரணங்களை நீ சார்ந்த அரச இயந்திரங்கள் நன்றாக அறிந்துகொண்டதனால் உன்னையும் கண்டு கொள்ளவில்லை, அப்பாவி நீ என்ன செய்வாய்? உன் உரிமையை,உணர்வுகளை உரக்கக்கூற இடமின்றி அல்லல் படுகிறாய், அதற்கு முழுக்காரணமும் உன் அறிவை நீ இதுவரை அறிவதற்காகப் பயன்படுத்தாததே.
உரசியதும் தீப்பிடிக்கும் உணர்ச்சிகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை உண்மைகளை அறிந்து அதன் நியாயங்களுக்காக குரல் கொடுக்கவும் இல்லை அநியாயத்திற்கு எதிராக அமைதிகாக்கவுமாவது நீ பாவித்திருந்தால் இன்று பல லட்சம் இன்னுயிர்கள் இழக்கப்பட்டிருக்கப் போவதும் இல்லை இனிமேல் இழக்கவும் தேவையில்லை.
அப்பாவியாகிப்போன ஒவ்வொரு ஒப்பாரிக்காரருக்காகவும் சில பின் நோக்கிய அலசல்கள்… இவை இருப்பவற்றை குறை கூறும் நோக்கில் இல்லை, இனி வரும் போராட்டத்தை நீயும் சேர்ந்து முன்னெடுத்துச் செல்லவே.
உரிமைப் போராட்டம்
இப்படியொன்று இலங்கையில் இல்லை என்று தமிழால் எழுதிக்கொண்டு, ஏன் சிங்களத்தால் எழுதிக்கூட எவராவது சொல்வாராயின் அவர் அந்த மொழியை எழுதக்கூடத் தகுதியற்றவராவார்.
இதுதான் இலங்கை வாழ் உண்மையான நிலை என்று கூறினால் உனக்கு ஏற்றுக்கொள்வது கடினமாகத்தான் இருக்கும், ஆனாலும் அதுவே கசப்பான உண்மையும்.
ஆளும் வர்க்கத்துடன் உரிமைக்காக போராடுவதே ஒவ்வொரு அடிமட்ட குடிமகனின் துயரம் சார்ந்த வாழ்க்கையாக இருப்பது நீ அறிந்திருக்காத ஆனால் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒவ்வொரு தடவையும் ஆள ஒரு வாய்ப்பு வந்துவிட்டால் அவன் இவன் என்ன செய்வான் என்பதை வரலாறு உனக்கும் காட்டித்தந்திருக்கிறது.
பெரும்பான்மையில் காணப்படும் சிறுபான்மை நாங்கள் என்று கூறிக்கொண்டு, உரிமைக்காக போராடுகிறோம் என்று அலறிக்கொண்டு, ஒரு சிறு வாய்ப்பு கிடைத்ததும், நமக்கே அதிகாரம் இருந்த போது நமக்குள் இருந்த ஒரு சிறுபான்மையினத்தை இரவோடு இரவாக விரட்டியடித்தோமே, அதைவிட வேறு என்ன வேண்டும் நமக்கிருக்கும் போராட்டம் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது என்பதை எடுத்துக் கூற?
காரணம் கேட்டால் எத்தனையோ மழுப்பல் அறிக்கைகள் நம்மாளும் விட முடிகிறது, அதையே அவனும் செய்து நமக்கு மேல் ஆதிக்கம் செலுத்த முடிகிறது, இதை சிந்திக்கத் தவறும் ஒவ்வொரு கணமும் உன் அறிவில் நீ எதையும் அறிந்து கொள்ளப் போவதில்லை.
ஆயுத மோகம்
இதுதான் விடிவைப் பெற்றுத்தரும் என்று இனியும் நம்பத் துணிந்தால் கடந்த 30 வருடங்கள் நீயும் உன் சந்ததியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்து உலகமே சிரிக்கும்.
விடிவு
அது தானாகக் கிடைக்கும் என்று நினைத்தால் இப்போது நீ உறங்கிக்கொள் அது வரும் காலத்தில் சமூகம் உன்னை எழுப்பிவிடும்.
போராட்டம்
இது இல்லாமல் விடிவு இல்லை , ஆனால் இது உன் உரிமைக்காக உன் சுய அறிவு கலந்த போராட்டமாக இருக்காத வரை உன் போராட்டமும் வெற்றி பெறப்போவதில்லை.
கடந்த கால ஈழ வரலாறுகள் இதைத்தான் தெளிவாக்கியிருக்கின்றன.
கண்மூடித்தனமான நம்பிக்கை, உணர்ச்சியூட்டலில் சுய இன்பம், சரி பிழை அறிய முடியாத அப்பாவித்தனம், வா என்றவுடன் வீறு கொண்டெழ நீ வழங்கும் ஒத்துழைப்பு எதற்காக என்ற கேள்வியையும் கேட்டுவிட்டுச் செல்லத் துணிந்தால் அடுத்து வரும் காலமாவது நல்லதைத் தர முயலும்.
ஈழ வரலாற்றில் நீ அடைந்த வெற்றியையும்,தோல்வியையும் பல கேள்விகளை உனக்கு நீயே கேட்பதன் மூலம் நீயாகவே தெரிந்துகொள்ளலாம்.
அறிநதுகொள்ளத் துணிவிருந்தால் உன்னை நீயே கேட்டுப்பார்.
அடிப்படையில் இன்று உயிர் பிழைத்தால் போதும் என்று அல்லலுறும்,அவதியுறும் உன் உடன்பிறப்புகளுக்கு எதிர்காலம் என்று ஒன்றை நீ காட்ட முடியும் என்றால் அதை எப்படிக் காட்ட முடியும் என்று சிந்தித்துப்பார்.
கடந்தவை விடு இனிவரும் காலம் ஒரு புது உதயம் என்று உன் மனமும் அவர்களைப் போலவே நினைக்கும் என்றால் இப்போதிருந்தே அவர்கள் உரிமைக்காக எவ்வழியில் நீ போராடலாம்? எதைக்கொண்டு வழிநடத்தலாம்? அவர் உடனடித் தேவைகளை எந்த வகையில், உன்னால் முடிந்த எவ்வழிகளில் நிவர்த்தி செய்யலாம் இல்லை அதில் பங்கெடுக்கலாம் என்று சிந்தித்துப் பார்.
இனிவரும் ஒரு சமூகம் ஆகக்குறைந்தது உயிரோடு இருந்தால், இன்று நீ நான் போன்று உலகில் எங்கு வேண்டுமானாலும் “உயிரோடு” வாழலாம் அந்த உரிமைக்காக அவருக்கு எந்த வகை அறிவை வழங்கலாம் என்று சிந்தித்துப்பார்.
இதைவிட்டு இன்று வரை நீயும் நானும் நம் எல்லை தாண்டி நம்மை நாமே ஏமாற்றி, அடுத்தவர் மீதே பழி சுமத்தி நம் குற்றங்களை மறைத்து, கட்டிலடங்கா துயரங்களை அரவணைத்துக்கொண்டது ஏன் என்று ஒரு கணம் சிந்தித்தால் கூட நம் நாளைய வரலாறு பல வெற்றிப்படிகளை தாண்டி நிற்கும்.
இலங்கை அரசிற்கு சமமமான அந்தஸ்து வழங்கி பேச்சுவார்த்தை மேடையில் “ஏக பிரதிநிதிகள்” சர்வதேசத்தால் அலங்கரிக்கப்பட்ட கால கட்டத்தில் தப்பித் தவறியும் ஒரு மனிதன் தன்னைத் தமிழனாக, இலங்கைத் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவனாக காட்ட முயன்றாலோ அல்லது கருத்துத் தெரிவிக்க முன் வந்தாலோ அந்த மனிதனைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக துருவி,முதலில் அவனைத் துரோகியாக்கி அழகு பார்த்து, களிப்படைந்த “ஏக அறிவாளிகளின்” அன்றைய நிலை இன்று அடியோடு மாறி..
உலகின் எந்த மூலையில் யாராலும் அறியப்படாத ஏதாவது ஒரு தமிழ்ப்பெயர் கொண்ட யாராவது எதைக் கதைத்தாலும் அவற்றை தலைப்புச் செய்தியாக்கி அதைத்தாங்கி ஒப்பாரி வைக்கும் இன்றைய ” நிலை ” யை தூய்மையான மனதுடன் சிந்தித்தால் இந்த ஒப்பாரிப் போராட்டத்திற்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.