ஆயுத பலமும்,அதிகார பலமும் இருக்கும் காரணத்தால் அன்று விடுதலை காணப் புறப்பட்ட சக போராளிகள், கொள்கைக்கு முரணான அரசியல் தலைவர்களின் கொலைகளில் ஆரம்பித்த வேட்கை இன்று வரை தம் கொள்கைக்கு எதிரான ஒவ்வொருவரையும் ஆகக்குறைந்தது “துரோகி”ப் பட்டம் சூட்டியாவது அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆனாலும், அறிந்தும் அறியாமலும் அரசியல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் “ஏக பிரதிநிதித்துவ” கொள்கையானது ஆகக்குறைந்தது தமது பயங்கரவாத செயற்பாடுகளிலாவது ஒரு வரையறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
ஊடக பயங்கரவாதம்
விடுதலைப் புலிகளின் கொள்கைப்பரப்பில் முக்கியம் பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில், முதன்மை வாய்ந்தது ஊடக பயங்கரவாதம் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு ஈழத் தமிழரும் தம் வீட்டில், தொலைக்காட்சியில் எதைப் பார்க்க வேண்டும், செய்திகளில் எதைக் கேட்க வேண்டும், சினிமாக்களில் எதைப் பார்க்க வேண்டும், கலை நிகழ்ச்சிகளில் எந்த நிகழ்ச்சிக்கு சமூகமளிக்க வேண்டும், கலாச்சார நிகழ்வுகளில் எவ்வகையான நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டும், சமூக ஒன்று கூடல்களில் எந்த சமூகத்தில் யார் இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஆரம்பித்து, ஒருவர் எதைப்பற்றியாவது கருத்துக் கூற வேண்டும் என்றால் கூட என்ன கூற வேண்டும் என்று ஒவ்வொரு தமிழரையும் நிர்ப்பந்திக்கும் ஆளுமையை மிகவும் கண கச்சிதமாக கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதமே இவர்களின் மனித விரோத செயற்பாட்டின் ஆகக்குறைந்த நிலையாக இருந்தது.
இதையே தமிழகத்தில் எடுத்து நோக்கினால், எத்தனை தொலைக்காட்சிகள், தினசரி, வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், கருத்துக் கூறும் சுதந்திரம்,வாழும் சுதந்திரம்,தான் விரும்பிய நேரத்தில் தாம் விரும்பும் இடங்களுக்குச் செல்லும் அடிப்படை உரிமை என்று கடை நிலைக் குடிமகன் கூட மிகவும் சுதந்திரமாக ஒரு நாட்டின் தேசியக் குடிமகனாக இருப்பது புலிகளுக்கு பிடித்துக்கொள்ளாத ஒரு விடயமாகவே இன்றும் இருக்கிறது.
தமிழகத்தின் பெரும் ஊடகங்களுக்குள் தம் ஆளுமையை செலுத்த புலிகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் ராமதாஸின் “தமிழன்” தொலைக்காட்சி வரை தவிடு பொடியாகியே போனது.
சந்தர்ப்பவாத பின்னணியில் இந்திய ஊடகங்களை ஆட்டிப்படைக்க புலிகள் எடுத்த பெரும் முயற்சி தமிழ் சினிமாவின் ஊடாக இருந்தது என்பதை பிறிதொரு காலத்தில் அனைத்துத் தமிழ் ஊடகங்களும் அறிந்துகொள்ள விளைந்தபோதே சில ஊடகங்கள் தம் வியாபாரத்திற்காக ஈழத்தமிழர் பிரச்சினை என்ற விவகாரத்தை அச்சிட ஆரம்பித்தன, இன்னும் அச்சிட்டும் கொண்டிருக்கின்றன.
உணர்ச்சியூட்டலின் ஒரு பகுதியில் சுய இன்பம் காணும் புலிகள் அதை நிறைவேற்றிக்கொண்டிருக்க, அதையும் தாண்டி உசுப்பேத்தும் பொறுப்பை வியாபாரிகளாக இந்த வாரப் பத்திரிகைகள் ஆரம்பித்த போது அது புலிகளுக்கு முதலில் இலாபமாகப் பட்டாலும் மிக விரைவில் அதுவே தமக்கு தலைவலியாக அமைவதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
இருந்தாலும் சுய சிந்தனையற்ற புலிகளுக்கு கட்டவிழ்க்கும் பயங்கரவாதம் மாத்திரமே கை வந்த கலை என்பதால் அந்த ஊடகங்களுக்கு எதிராகவும் பரப்புரைப் போர் மேற்கொள்வதில் காட்டிய ஆர்வத்தை, தம்மைத்தாமே கேள்வி கேட்டு மக்கள் முன் மண்டியிடத் தயாராகவில்லை.
இந்த இடைவெளியை இன்றும் பயன்படுத்திக்கொள்ளும் சில வாரப் பத்திரிகைகள் கதை கதையாக அளந்து கொண்டிருக்க புலிகளின் பரப்புரை வீரர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
கள மாற்றம்
களங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்று அண்மையில் புலிகளின் நடேசன் ஒரு கருத்தைச் சொன்ன போது சிரிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் போனது துரதிஷ்டமே.
இவர் கூறும் கள மாற்றம் இதற்குப் பின்தான் நடக்கும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் புலிகளின் போரை திரும்பத் திரும்பப் படிக்கும் தேவையுடைய பாமரர்களாக மட்டுமே இருக்க முடியும்.
விடுதலை வீரர்களை சோம்பேறியாக்கி, அவர்களை நம்ப மறுத்த புலிகள் அதற்கு மாற்றீடாக விசைப்பலகை வீரர்களை நம்பி வளர்த்த காலத்திலேயே களமாற்றம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அறிக்கைகள்,இணைய எச்சரிக்கைகள்,கட்டுக் கதைகள்,பரப்புரைகள் என்று புலிகள் இதுவரை செய்த அத்தனையும் “சுய இன்பம்” என்ற வரையறைக்குள் மாத்திரமே அடங்குகிறது.
தாம் சார்ந்த சமூகத்தை அடக்கி,ஒடுக்கி மீண்டும் மீண்டும் அவர்களை பயமுறுத்தி,அவர்கள் நம்புவதற்கு இவர்கள் கூறும் கதைகளை மாத்திரமே விட்டு வைத்த கள மாற்றம் தான் இன்று பாதிப் புலி ஆதரவாளர்கள் இருந்த இடம் தெரியாமல் போனதற்கான முதற் காரணம்.
முறியடித்தோம் முறியடித்தோம் என்று இன்று வரை முறியடிப்பு அறிக்கைகளை புலி சார்பு இணையங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கும் விசைப்பலகைப் போரில் இறுதி வரை புலிகள் தோற்கற்போவதில்லை என்பது அடித்துக் கூறக்கூடிய உண்மை.
இதே பரப்புரையை தமிழக மக்கள் மீதும் திணிக்க எடுக்கும் புலிகளின் முயற்சிகள் தோற்றுப்போகும் போது தமிழக ஊடகங்கள் விமர்சிக்கப்படுகின்றன, அவை சார்பான அரசியல் நிலைகள் அலசப்படுகின்றன, அவை குறித்த பரப்புரைகள் எதார்த்தம் தெரியாத அப்பாவி “மந்தைகளுக்கு” சாதனைகளாகத் தெரிவிக்கப்படுகின்றன.
முகம் தெரியாமல் கருத்துரைக்கக்கூடிய இணைய வசதிகள் இருந்தும் கூட கடந்த சமாதான முயற்சிகள் வரை தைரியமாக இணையத்தில் புலிகளுக்கு எதிர்க் கருத்து கூறியோர் விரல் விட்டு எண்ணும் அளவினரே.
இது புலிகளின் மனித விரோத அடக்கு முறையையே எடுத்துக்காட்டுகிறது.
தமிழகத்திலோ தம் சுய கருத்தை உரக்கக்கூறும் துணிவும்,சுதந்திரமும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.
தான் சார்ந்த கட்சிக்காக,அரசியலுக்காக,கொள்கைகளுக்காக, இன்ன பிற காரணிகளுக்காக அவன் சுதந்திரமாக தன் குரலை உயர்த்தக்கூடிய அரசியல் நிலை இருக்கிறது.
இந்த சுதந்திரத்தை அடக்கி அவர்களைத் தொடர்ந்தும் “மந்தைகளாக” வைத்திருப்பதே ஆளக் கிடைத்த சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகள் செய்த முதற் காரியம்.
வெளியுலகம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடாது, பிரபாகரனைத் தவிர வேறு ஒரு கடவுள் கூட இருக்கக்கூடாது எனும் அளவில் அந்த மக்கள் அங்கே அல்லல் பட்டார்கள் என்றால், அதை ஊக்குவித்து அதில் “சுய இன்பம்” கண்டவர்கள் வெளிநாடு வாழ் புலி ஆதரவு வட ஈழத் தமிழர்களே.
இப்படிப்பட்டவர்கள் இன்று அங்கே தம் உறவுகள் மடிவதாக கூக்குரலிட்டால் அதை உலகமே கேட்க வேண்டும்,குறிப்பாக தமிழக மக்கள் இந்தக் கண்ணீர்க் கதையைக் கண்டு வீறு கொண்டு எழுந்து இன்று ஐரோப்பிய நகரங்களில் கடையுடைப்பு,கண்ணாடியுடைப்பு என்று இவர்களில் மிகச்சிலர் செய்யும் அதே கண்மூடித்தனத்தை செய்ய வேண்டும் என்பது எத்தனை முட்டாள்தனம் என்பது கூட அறியாமல் “ஐயோ எங்கள் குரல் யாருக்கும் கேட்கவில்லையா ” என்று இவர்கள் கேட்கும் போது தமிழனாய்ப் பிறந்ததை நினைத்து நொந்து கொள்ள மாத்திரமே முடிகிறது.
அனுதாபம்
களமாற்றங்கள் பல இடம் மாறி, இன்று இறுதியாக அனுதாபக் களமும் மூடப்பட்டிருப்பது புலிகளின் அரசியல் வங்குரோத்துக்குக் கிடைத்த இன்னும் ஒரு பரிசு.
மேலை நாடுகளை எதிர்க்கும் இலங்கை என்ற தற்காலிக அரசியல் சூழ்நிலைக்காக காலாவதியான விடுதலைப்புலிகள் ஒளிப்படங்களை இணைத்துக்கொள்ளும் சர்வதேசம், மிகக் கவனமாக இறுதியிலோ ஆரம்பத்திலோ ” இவை எப்போது எடுக்கப்பட்டன என்பது பற்றி ஆதாரங்கள் எதுவும் இல்லை ” என்று தெளிவாகக் கூறிவிடுகின்றன.
இதைப் புலி ஆதரவாளர்கள் கவனத்திற்கொள்வதில்லை, சர்வதேச ஊடகங்களில் வந்த “சுய இன்பம்” போதும் என்று மீண்டும் தம் பரப்புரைகளை கவனிக்கச் சென்றுவிடுகிறார்கள்.
“பிரபாகரன் எதிரியல்ல என் நண்பன்” என்று கலைஞர் சொன்னபோது அவரை அரை மனதுடன் மெச்சவும் செய்த புலி ஆதரவாளர்கள், ” அவருக்கும் எனக்குமான முரண்பாடானது , உங்கள் ஆட்சி மலர்ந்தால் அங்கே ஜனநாய ஆட்சி இருக்குமா என்று கேட்டபோது, இல்லை சர்வா திகார ஆட்சிதான் என்று பிரபாகரன் பதிலளித்தார் ” என்று கலைஞர் அடுத்து சொன்ன விடயத்தைக் கை விட்டு விட்டார்கள்.
ஆனால் அதில்தான் கலைஞரின் உண்மையான நோக்கமும் இருந்தது, இதை இவர்கள் புரிந்து கொள்ளும் நேரத்தில் அந்த விடயம் ஏற்கனவே ஆறிப் போய் விட்டது.
தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்தால் கூட அது திரித்துக்கூறப்பட்டு விட்டது என்று ஒப்புவிக்கும் அரசியல் திறமைக்கு முன்னால் இந்த விசைப்பலகை வீரர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போன போதாவது தமிழக அரசியலில் எதைச் செய்யலாம் எதைச் செய்து கொள்ள முடியாது என்ற ஒரு தெளிவுக்கு வரமுடியாமலே உள்ளது.
தற்போது தூக்கியெறியப்பட்ட திருமாவளவன் முதல், வைகோ, ராமதாஸ், நெடுமாறன், சுப வீரபாண்டியன், ஜெகத் கஸ்பார் போன்றவர்களால் தமிழக அரசியலில் எதைச் சாதிக்க முடியும் எதைச் சாதிக்க முடியாது என்ற அளவு கோலை அறிந்தாலும் கூட அளந்து “படி” அளப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த புலிகளின் வங்குரோத்து அரசியல் சித்தார்ந்தம் தான் இன்று தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியாமல், எதிரியாக இருந்த ஜெயலலிதாவின் திடீர்ப் புராணத்தில் மயங்கி விழச் செய்திருக்கிறது.
நோக்கம்
அன்று முதல் இன்று வரை அத்தனையும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் புலிகளை இன்று வரை ஒப்பாரி வைக்க வைத்துள்ளது.
அனைத்திலுமே அளந்தளந்து கொடுத்து, பெரும் பகுதியை தமக்கென ஒதுக்கிக்கொள்ளும் புலிக்குணத்தால் ஆகக்குறைந்தது பணம் வீசியாவது தமிழக அரசியல் வாதிகளை உருப்படியாக எதையும் செய்ய வைக்க முடியாது போனது அவர்களின் “சுய இன்பப்” போராட்டத்தின் இன்னொரு மைல் கல்.
வணங்கா மண், அடங்கா மண் என்று உணர்ச்சியூட்டும் பெயர்களும், தோல்வியின் விளிம்பை அடைந்ததும் அவன் ஏழு நாடுகளோடு சேர்ந்து போர் புரிகிறான் என்கின்ற மழுப்பல் வாதமும், ஒன்றும் முடியாது போனதும் சோனியாவின் பழிவாங்கல் என்ற புனைக் கதைகளும் யாருக்கும் எதையும் சொல்லாமல் விட்டாலும், புலிகளுக்கு “சுய இன்பத்தை” நிறையவே அள்ளித்தருகிறது.
குறைந்து கொண்டு போகும் விசுவாசிகளில் ஒரு சிலர் இன்னும் இதை நம்புவதால் இறுதி மூச்சு வரை எதையாவது கூறி அதையே செய்வது புலியின் இறுதி வரலாறாகவும் இருக்கப் போகிறது.
விடிவு
அப்படியானால் தமிழருக்கு விடிவென்பதே இல்லையா ? இருக்கிறது.
தமிழகம் உண்மையாக விழித்தெழ வேண்டிய நேரம் இது, உங்கள் உடன் பிறப்புகளுக்கு நல்லதையும்,கெட்டதையும் நீங்கள் எடுத்துக்கூற வேண்டிய தேவையும்,வரலாற்றுக் கடமையும் உங்களிடம் தான் இருக்கிறது.
தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறது, சர்வதேசம் எங்கும் யாபித்திருக்கும் ஊடகத்திறன் இருக்கிறது, வல்லமை பொருந்திய சுய அரசாங்கம் இருக்கிறது.
புலியின் துப்பாக்கியை துச்சமாக நினைத்து எப்போது முதல் தமிழன் சிங்கள இராணுவத்திடம் சரணாகதி அடைந்தானோ அன்றே புலியின் தோல்வி வரலாற்றில் எழுதப்பட்டுவிட்டது.
அன்றைய நாளே புலியின் ஏக பிரதிநிதித்துவம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது.
கழுத்தில் தொங்கும் சயனைட்டை பிரபாகரன் கடிக்கும் நாள் வரை கூட இருக்கும் பொட்டம்மான் இருப்பதே நம்ப முடியாத நிலை.
இன்றைய நிலையில் அங்கிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படைத் தேவை ” உயிர் வாழும் ” சுதந்திரமாகும்.
நல்லதோ,கெட்டதோ இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் அந்த உரிமையாவது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
பரப்புரைகளில் உணர்ச்சிவசப்பட்டு கோடி கோடியாக கொட்டத் துணியும் நீங்கள், இனி உங்கள் உண்மையான உணர்வுகளைத் தட்டியெழுப்பி இன உணர்வோடு அம்மக்களை தத்தெடுக்க வேண்டும்.
புலிதான் அவர்களைத் தடுத்தது, அந்த மக்கள் அப்பாவிகளே ! அவர்கள் என்றும் உங்கள் சொந்தங்களே.
புலியின் தலைமையைக் காப்பாற்றுவதற்காக ஜெயலலிதாவின் கால்களை நக்கிக்கொள்ள புலி தயாராகிறதே தவிர, தாம் சார்ந்த மக்களுக்காக உங்கள் கால்களில் விழவேண்டாம், அறிக்கையளவிலாத தாம் இதுவரை என்ன செய்தோம், என்ற ஒரு சுய விமர்சனம் செய்து தவறுகளை ஒத்துக்கொள்ளலாம்.
இலங்கையில் தமிழர்கள் என்றால் அது வட ஈழத்தில் வாழும் தமிழர்கள் தான் என்ற உங்கள் மாயையை முதலில் உடைத்தெறிய வேண்டும்.
இலங்கை எங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள், சிங்கள குக்கிராமங்களில் கூட தமிழர்கள் வாழ்கிறார்கள், சுய சிந்தனையுடன் நீங்கள் தேட விளைந்தால் அத்தனையும் தானாகத் தெரியவரும்.
இன்னொருவரில் தங்கியிருக்கும் அதே தவறை மீண்டும் இழைத்தால் இந்த சமூகம் உலக வரைபடத்தில் ஒரு நாள் காணாமல் போகும்.
இப்போது உங்கள் உடனடித் தேவை அந்த மக்களின் நிவாரணம், அதன் பின் உங்கள் அடுத்த கட்டம் வரலாற்று ரீதியாக இந்த மக்களின் உரிமைகளுக்காக தோளோடு தோள் நிற்பது.
இந்தியாவின் துணையின்றி தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை, ஐக்கிய இலங்கையோ தனித் தமிழ் மாநிலமோ அதை சுய நிர்ணய உரிமையாக இந்த அப்பாவி மக்களுக்குப் பெற்றுக்கொடுங்கள்.
வரலாற்றை மீண்டும் தவறாக எழுத விடுதலைப் புலிகளுக்கு இடமளித்தால் மீண்டும் ஒரு 40 வருடம் தமிழன் என்ற இனம் முற்றாக அழியும் வரை இந்த இழிவு நிலை அழியப்போவதில்லை.
காலாவதியான பிரபாகரனின் ஆயுத மோகத்தின் பயனால் ஆயிரமாயிரம் வெளிநாடு வாழ் தமிழனின் உழைப்பு வெறும் இரும்புத் துண்டங்களாக அரச இராணுவத்தின் காலடியில் கிடப்பதைப் பார்த்த பின்னும் இந்த சமூகத்தை ஆயுத மோகத்தில் வாழ விட்டால் நீங்களும் உங்கள் கடமைகளை மீறியவர்களாவீர்கள்.
இன்று உலகெங்கும் இருக்கும் அரசியல் சூழலை சாதகமாக்கும் ஒரு புரட்சியை தமிழகம் செய்ய முடியும், தமிழக மக்களால் தான் அதைச் செய்யவும் முடியும்.
சூட்டோடு சூடாக, நீங்கள் களமிறங்கினாலன்றி அழிக்கப்பட்ட தமிழன் வரலாறு இலங்கைத் தீவில் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க இயலாது.
ஒவ்வொரு தமிழகக் குடிமகனும் உங்கள் குரலை உயர்த்துங்கள், இனியாவது இந்த அப்பாவிகளுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்.
இ.செல்வம்
மே7, 2009 at 8:31 பிப
சிறப்பாக துவங்கியுள்ளிர்கள். ஒரு மாறுபட்ட கோணத்தில் உள்ளது.
வாழ்த்துக்கள்.
புலிகள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் ஈழத்தமிழர்க்கு வேறு ஒரு மாற்று இல்லை.
இப்படி வேறு ஒரு நம்பிக்கை இல்லாமல் செய்ததே புலிகள் தான்.
arivudan
மே8, 2009 at 8:34 முப
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இ.செல்வம்