RSS

தமிழகமும் தமிழ் ஈழமும்

07 மே

தமிழ் என்ற மொழியின் பிணைப்பைத் தவிர, தமிழன் என்ற அடையாளம் தர உலகத்தில் எங்காவது ஒரு இடம் நமக்கென்று இருக்கும் என்று நினைத்தால் அது தமிழகம்! இந்தியாவின் தென் மாநிலம் என்பது பல ஈழத்தமிழர்களின் இன்றைய புதுக் கனவு!?

ஏன் இது புதுக்கனவு? 

இனங்களுக்கிடையில் இழுபறி இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பும் வரை சுதந்திரத்தை எங்களுக்காக வழங்கவில்லை, அன்று நம்பினார்கள் அதன் பேரில் போகிற போக்கில் துணைக்கண்டத்துடன் சேர்த்து இந்தக் குட்டித் தீவுக்கும் சுதந்திரம் என்று அறிவித்து விட்டு போய்விட்டார்கள்.

தம் இனத்தை தாமே அழித்துக்கொள்ள வைப்பதன் மூலம் பொருளாதார கொள்ளையை அவர்கள் இலகுவாக, இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் தொலைதூர செயற்பாட்டிற்கு அவர்கள் சுதந்திரம் என்று பெயர் வைத்தார்கள், அன்று அவர்கள் விட்டுச் சென்றது முதல் இன்றுவரை நாம் ஒரு வரையொருவர் அழித்துக்கொள்கிறோம்.

இதில் கசப்பான உண்மை என்னவென்றால் எதிரி என்று நாம் அடையாளம் காட்டுபவர் நம்மை அழித்ததை விட நம்மை நாமே அழித்ததுவே அதிகம்.

ஏன் இந்த நிலை ?

இது சாதாரண மனித இயல்பு, யாராக இருந்தாலும் நாம் சரி என்று நினைப்பதை அவன் பிழை என்று கூறுவானேயானால் அவனை நம் “எதிரி” என்றும், நம் கொள்கைக்கு எதிரானவர்களை நாம் சொல்வது மாத்திரம் எடுபட வேண்டும் என்பதற்காகவே “துரோகி” என்பதும், இந்த நிலைகளையும் மீறி நம்மிடம் ஆயுதமும்,அதிகாரமும் இருக்கும் போது தண்டிக்கத் துணிவதும் சாதாரண மனித இயல்பு.

கடந்த கால உலகின் அனைத்து வரலாறுகளிலும் இது மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு விடயம்.

பாவம், அப்பாவித் தமிழர்கள் நாமும் என்ன செய்ய முடியும்? இதையே அடிக்கடி இதுவரை நிரூபித்து வந்திருக்கிறோம்.

போராட்டம்

தமிழினம் அழிகிறது என்னும் ஒப்பாரிக்குப் பின்னால் தமிழகம் செவிடாகிவிட்டது என்கிற குற்றச்சாட்டும் பின்னிப் பிணைந்து விட்ட கருத்தாக இன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இது தற்காலிகக் கதறல் தான் என்பதில் யாருக்குத் தெளிவு இருக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு சந்தேகமே இல்லாத தெளிவு இருக்கிறது.

மேடைக்கு மேடை முழங்கும் பேச்சுக்கள் திரும்பத் திரும்ப இதையே எடுத்துக்கூறுகிறது.

இது அவர்கள் பிழையில்லை, அரசியல் தெளிவில்லாத உரிமைப்போராட்டத்தின் விளைவுதான் இது என்றால் புலி ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனவே வரலாற்றை முன் கொண்டுவரும் தேவையும் நிர்ப்பந்திக்கப்படுகிறது.

முதற்கண் நாம் மன்னர் காலத்தில் வாழவில்லை என்பதை தமிழினம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து,வெற்றி வாகை சூடி மன்னர் கையில் அத்தனையையும் ஒப்படைத்துவிடும் “அன்றைய ” பண்டைய காலமில்லை இது.

வெள்ளைக்காரன் காலணித்துவத்தை எதிர்த்த போது, அதை எதிர்ப்பதற்கும்,போராடுவதற்கும்,உரிமை என்று ஏதோ ஒன்றை உரக்கச்சொல்வதற்கும் நம்மைத்தூண்டிய ஒரு விடயம் இருக்கிறதல்லவா? அந்த விடயம் இங்கு மறக்கப்பட்டது தான் இன்றைய விளைவின் அடிப்படைக் காரணம்.

மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் இலாபம் காணும் கலாச்சாரத்தை தெற்காசியாவில் “அரசியல்” எனும் போர்வையில் இன்னும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் தன்நிகரற்ற நிலையைப் பெற்ற ஒரே சமூகம் “தமிழ்” சமூகம் தான்.

தமிழகத்திலும், வட ஈழத்திலும் இதன் ஒற்றுமையை வரலாறு எடுத்தியம்பியிருக்கிறது.

எனினும், தமிழகம் வட ஈழம் அளவுக்கு ஒரு நாளும் மலிந்து போனதில்லை, கீழிறங்கிப் போகப்போவதும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது.

அதுதான் தமிழகத்தில், “தமிழர்கள்” என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் இருக்கும் “தமிழன்” என்ற தேச உணர்வாகும்.

மொழியால் அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த இன அடையாளத்தை மதங்களால் தமிழகம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்பதே தமிழகத்தின் “தமிழர்” உணர்வுக்கு இருக்கும் மரியாதை.

அது மதத்தால் வேறுபடுத்தப்படும் நாள் வருமாயின் அன்றைய நாள் வட ஈழ முன்னோடிகளின் வரலாற்றைப் பின்பற்றி, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை அழித்த இழிவு நிலைக்கு தமிழகமும் தள்ளப்படும்.

வட ஈழ மக்கள் அவற்றை விரும்பாவிட்டாலும்,தடுக்கவும் இல்லை வீறு கொண்டு எழவும் இல்லை.

அவர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக ஆயுத முனையில் வழிகாட்டியவர்கள் இந்த இழிவான வரலாற்றை ஏற்கனவே பதிய வைத்திருக்கிறார்கள்.

எனவே இவர்கள் தமிழர் மரபில் இருந்து பிரித்துப்பார்க்கப்பட வேண்டிய ஒரு நிலையில் இருக்கும் ஒரு “அமைப்பாக ” அறியப்படுவதே சாலச்சிறந்தது.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக வீறு கொண்டு பல அமைப்புகள் எழுந்த போது அத்தனை அமைப்புகளையும் கட்டியரவணைத்து வளர்த்தெடுத்த அன்னைத் தமிழகம் ” ஏக பிரதிநிதித்துவ ” கொள்கையை என்றைக்குமே அங்கீகரித்ததில்லை.

இந்தியாவின் பிரதமரின் படத்தைக் காட்டி இவர் யார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வினவப்படும் போது அவர்தான் அமிதாப் பச்சானோ என்று அப்பாவியாக பதிலளிக்கும் கடை நிலை அப்பாவிக் குடிமகனையும் சென்றடையக்கூடிய உணர்ச்சியூட்டலை ஆயுதமாகக் கொண்டிருந்ததானால் இவர்கள் நியாய,அநியாயங்களைப் பற்றியோ அல்லது உண்மைகளைப் பற்றியோ கவலைப்பட்டதோ இல்லை.

எது இருந்ததோ இல்லையோ,மகாத்மாவையே கொல்லத் துணிந்த இரு கைகளுக்கு இன்னொரு கருத்திருந்ததே ? அது போன்று தம் ஆயுத உலகத்தில் எதிர்க்கேள்வி கேட்கக்கூட ஆளிருக்கக்கூடாது என்ற பாசிசம் நிறையவே இருந்தது.

அதிலும் தமிழக அரசியலில் கலந்துகொண்டு ஆளும் கட்சிக்கும்,எதிர்க்கட்சிக்கும் இடை நடுவில் இருக்கும் இடைவெளியை தமக்கு சாதகமான அரசியலாக மாற்றிக்கொள்ளவும் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்கள் போட்ட அரசியல் கணக்குகளிலும் காட்டிய “புத்திக் கூர்மையை” ஒரு காலத்திலும் தாம் சார்ந்த மக்களின் எதிர்கால நலன்களுக்கான ஒரு அரசியல் திட்டத்தை உருவாக்குவதில் இதுவரை காட்டியதே இல்லை.

தொங்கு நிலையில் எவர் மீதாவது பழிபோட்டு காலந்தள்ளும் வங்குரோத்து நிலையையே பெருமையாக இவர்கள் கருதியதால் இவர்களிடத்தில் ஒரு அரசியல் தெளிவு இருக்கவில்லை.

எனவே, இன்று உணர்ச்சிவசப்படுதலின் உச்சமாக ஜெயலலிதாவின் கால்களில் விழ ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் சர்வதேசம் இன்று சொல்வதை என்றோ சொன்னவர்,சொல்பவர்,சொல்லிக்கொண்டிருப்பவர் ஜெயலலிதா, அவர் கூறும் தனித்தமிழீழ் ஒரு தமிழ் மாநிலம், இலங்கைத் தமிழில் தமிழ் மாகாணம்.

இது அன்று 1987ல் இந்தியா இலங்கையை ஒத்துக்கொள்ள வைத்த உடன்பாடு, அதை மீறி, உதறி, அதில் அடங்கியவர்களையும் கொன்று குவித்து சமூக சீரழிவை உருவாக்கிய அதே “ஏக பிரதிநிதிகள்” மீண்டும் சென்று இதே கொள்கையை உரத்துக்கூறும் ஜெயலலிதாவை ஆதரிப்பது மக்கள் நலன் மீது அக்கறையற்ற இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக்காட்டுகிறது.

எது எப்படிப்போனாலும், ஜெயலலிதா முதல்வராக வந்தாவது இடமிழந்து,உடமையிழந்து தவிக்கும் “உயிர்வாழும்” ஆகக்குறைந்த உத்தரவாதத்துடன் அனாதைகளாகத் தவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு சொன்னபடி எதையாவது செய்து தொலைத்தால் அதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம், அது நடக்கும் போது ஒவ்வொரு “தமிழ”னும் ஆனந்தப்பட்டுக்கொள்ளலாம்.

நடக்காது போனால், ஜெயலலிதாவின் அரசியல் நாடகத்தை ரசித்த களிப்பில் அதை அத்தோடு விட்டுவிடலாம்.

கருணானிதி

ஜெயலலிதா உண்மையான தோழியில்லையென்றால் கருணானிதி உண்மையான தோழனா என்பது இன்று ஈழ மக்களிடம் தோன்றும் இன்னுமொரு புதுக் கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடை காண முதல் “மந்தை”களாக வளர்க்கப்பட்ட தம் நிலையை முதலில் வட ஈழத் தமிழர்களில் தற்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புரிந்து கொள்ளும் கட்டாயம் இருக்கிறது.

ஆயுதத்திற்கு முன்னால், அடங்கி ஒடுங்கி, விரும்பியும் விரும்பாமலும், தம் பட்டினியை மறந்து ” சமாதானம் வேண்டாம் போரிட ஆணையிடு தலைவா ” ஒன்று பதாகை பிடித்த அந்த அப்பாவி மக்களை ஒரு புறம் விடுங்கள்.

நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், எப்போதெல்லாம் கருணானிதியை நீங்கள் நம்பியிருக்கிறீர்கள்? எப்போதெல்லாம் அவர் தந்த உதவிகளை,ஆலோசனைகளைக் கொண்டு போர் நடத்தியிருக்கிறீர்கள்? எப்போதெல்லாம் அவரும் ஒரு தமிழினத் தலைவர் என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்? 

இது அத்தனைக்கும் ஒரே விடை, எப்போதெல்லாம் நீங்கள் ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினீர்களோ அப்போது மாத்திரமே.

M.G.R. காலத்தில்,  அவர் இருந்த தைரியத்தில் கருணானிதியை புறந்தள்ளினீர்கள், பின்னர் உங்கள் கை ஓங்கியிருந்த காரணத்தினால் அவரை எப்போதுமே ஒதுக்கி வைத்திருந்தீர்கள், இப்போது கிளிநொச்சி பறிபோனதும், கம்யுனிஸ்ட்டுகளுக்குப் போட்டியாக கருணானிதி ஒரு அரசியல் நாடகம் போட்ட அப்போதுதானே திடீர் என நீங்களும் அவர் மேல் நம்பிக்கையும்,பாசமும் வைத்தீர்கள்?

“தமிழன்” என்று கூறிக்கொண்டு உங்களால் இந்த அளவுக்கு சந்தர்ப்பவாதிகளால நடந்து கொள்ள முடியுமென்றால், அரசியலுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் வாதி உங்களை விட பல மடங்கு “தமிழ் தேசிய” அரசியல் பண்ணுவதில் எந்தத் தவறும் இல்லையே?

சர்வாதிகாரம்

வட இலங்கைத் தமிழன் சார்ந்த எதுவாக இருந்தாலும் அதன் சர்வ அதிகாரமும் உங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்ற ஆவலில் உங்கள் வாழ்க்கைகள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்காக அடகு வைக்கப்பட்ட போது நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்? அதை அறியாத தமிழக அப்பாவிக் குடிமக்கள் உங்களுக்கு என்னவெல்லாம் செய்தார்கள்?

அதிகாரம்,ஆளுமை “அவர்களிடம்” அதாவது விடுதலைப் புலிகளிடம் இருந்த போது அவர்கள் சார்ந்து நீங்களும் செய்ததெல்லாம் சொந்த இன மக்களை வதைத்ததுதான்.

சமூகத்தில் ஒருவனை முன்னேறவிடவில்லை, அவன் பொருளாதார விருத்தியை உங்களாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை, இன்று உலகமே கூறுகிறதே விடுதலைப்புலிகள் மக்களை கேடயமாக ( Human Shield ) பாவிக்கிறார்கள் என்று அதை அப்போதிருந்தே அவர்கள் செய்து வந்ததும், அதை நீங்கள் ஆதரித்ததும் தான் இதை இன்று உங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை.

வெளிநாட்டில் ஒருவன் நன்றாக வாழ்ந்தால் அவனிடம் பணம் கறக்க அங்கே இருக்கும் அவன் உறிவனர்கள்,குடும்பத்தவரை அன்றே இந்த “ஏக பிரதிநிதிகள்” கேடயமாக்கிப் பழக்கி வைத்தார்கள், அதில் நீங்களும் சுய இன்பம் கண்டு பழகி வந்தீர்கள்.

அவரவர்க்கு அந்த வலி தெரியும் வரை உங்களில் எவரேனும், ஒரு காலத்திலேனும் நியாயத்தை எடுத்துரைத்ததில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

சமகாலத்தில், தமிழக மக்களோ அப்பாவித் தனமாக ஒரு சில உணர்ச்சி ட்டும் அரசியல் வாதிகளின் புண்ணியத்தில் தம் சொந்த உயிரைப் பணயம் வைத்து ஐந்துக்கும்,பத்துக்கும் கடல் தாண்டினார்கள், இந்த உணர்வு தமிழகம் தாண்டி, கேரளாவையும் தொட்டது.

உங்களைப்பொறுத்தவரை அது வெறும் வியாபாரமாகப் பட்டது, ஆனால் உணர்வுக்காக உங்கள் சார்பாக “அவர்களுக்கு” உதவியவர்களை ஆகக்குறைந்தது “தமிழர்களாக” வாவது நீங்கள் மதிப்பிடவில்லை.

காரணம் ?

அதிகாரம்,ஆயுதம்,பணம்.

இது இருந்தால் அனைத்தையும் அடக்கிவிடலாம் எனும் உங்கள் மனித விரோத மோகம்.

 

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: